நூல் அறிமுகம் – 3

ஹிமாலயம்

book544

ந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ, இல்லாதவராகவோ இருந்தாலும் ‘ஹிமாலயக் கனவு’ எத்தனையோ பேருக்கு உண்டு. அந்தத் தூய பனிமலைப் பிரதேசத்தில் ஒரு முறையேனும் கால் பதித்துவிட மாட்டோமா என ஏக்கம் கொள்கிற அனேகம் பேர் உலகமெங்கும் இருக்கிறார்கள். மனிதர்களுக்குள் வாழ்க்கை குறித்த சரியான புரிதலை, ஓர் உள்ளெழுச்சியை, சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை, சிலரின் அறியாமையை, சிலரின் அபார அறிவை என எத்தனையோ அனுபவங்களை விதைத்துவிடும் வலிமை ஹிமாலய பயணத்துக்கு உண்டு. ஹிமாலயத்தின் பேரெழிலின் முன், அபாயங்களை உள்ளடக்கிய அமைதியின் முன் மனித வாழ்க்கை ஒன்றுமேயில்லை என்பதை உணர முடியும். அதன் பல பகுதிகளுக்கு தன் தோழி காயத்ரியுடன் சென்று வந்திருக்கிறார் இந்நூலாசிரியர் ஷௌக்கத். அந்த அனுபவங்களை விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த உணர்வுகளும் பாதிப்பும் துளிக்கூடக் குறைந்துவிடாமல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

‘மந்திரங்கள் ஒலிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் மூழ்கி எழுகிறார்கள். அங்கே நீராடினால், பாவங்களெல்லாம் கரைந்து முக்தியடைவோம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எங்களுடைய பாவங்களைக் கரைப்பதற்கான ஆசீர்வாதம் எதனாலோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் கங்கை அவ்வளவு அழுக்காக ஓடிக் கொண்டிருந்தாள்.’

ஒரு படைப்பு கொண்டாடப்பட மொழி ஆளுமை, உத்தி, எழுத்து நடை போன்றவை மட்டும் போதுமானவை அல்ல. எழுத்தாளரின் அனுபவம் எழுத்தின் வழியாக வாசகனுக்குக் கடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் ‘ஹிமாலயம்’ கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு! சுற்றுலாவுக்குப் போய்விட்டு வந்த ஒரு பதிவை இயந்திரத்தனமாக வாசித்துக் கடந்துவிடுவதைப் போல் அல்லாமல், ஹிமாலயத்தின் உள் பொதிந்திருக்கும் அர்த்தத்தை, அனர்த்தத்தை, அங்கே வாழும் மனிதர்களை, அவர்களின் வாழ்வியலை, போராட்டத்தை, குதூகலத்தை, இயற்கை அன்னையின் எழில் வதனத்தை, அது உணர்த்தும் மறை பொருளை… என பல அம்சங்களை அங்குலம் அங்குலமாக அலசியிருக்கிறது ஷௌக்கத்தின் பயணம்.

‘சாதுக்களின், ஆன்ம தேடல் உள்ளவர்களின் (சோம்பேறிகளின்) வாழ்விடமாக இருந்ததனாலோ என்னவோ ஆசிரமங்களும், தர்ம சாலைகளும், கோயில்களும் நிறைந்ததாக இருக்கிறது ரிஷிகேஷ்.’

ஹரித்வார், ரிஷிகேஷ், யமுனோத்ரி, உத்தரகாசி, கங்கோத்ரி, கோமுகம், கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத்… ஹிமாலயத்தின் முக்கியமான அனைத்து இடங்களையும், அங்கே பார்த்ததையும், நடந்ததையும், சந்தித்த மனிதர்களையும், அவர்களின் குண இயல்புகளையும், மன விசாரங்களையும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் வார்த்தைகளில் விவரிக்கிறார் ஷௌக்கத். ஒவ்வோர் இடத்துக்கும் நம்மையும் கையைப் பிடித்து அழைத்துப் போகிறது கே.வி.ஜெயஸ்ரீயின் தேர்ந்த மொழிபெயர்ப்பு. ஷௌக்கத்தின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன. உதாரணமாக, யமுனோத்ரி பயணத்தில், யமுனைக் கரையில் ஒரு பாறையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, எதற்கென்றே தெரியாமல் ஷௌக்கத் கண்ணீர் வடிக்கும் போது நமக்கும் உள்ளூர ஏதோ ஒரு சோகம் வந்து உட்கார்ந்து கொள்கிறது.

‘மரணம் சகஜமானதுதான் என்றும், அது எப்படியும் நிகழக் கூடியதுதான் என்றும், பயப்படக் கூடியதாக அதில் ஒன்றுமேயில்லையென்றும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருந்த நான் வார்த்தைகளின் அர்த்தமின்மையை அப்போது உணர்ந்தேன்.’

மனித நாகரிகம் வளர்ச்சியடைய வித்திட்டவை பயணங்களே! மனதை ஆற்றுப்படுத்தும், லகுவாக்கும் தன்மை இயல்பாகவே பயணங்களுக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் மோட்டார் வாகனங்களிலும், விமானத்திலும், ரயிலிலும், கப்பலிலும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றபடிதான் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக, சோகமாக, புது வாழ்க்கையைத் தேடி, வாழ்க்கையைத் தொலைத்து என மனிதர்களின் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தங்களின் பயணத்தை எழுத்துப் பூர்வமாக ஆவணப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. வெளி வந்த பயணங்கள் தொடர்பான படைப்புகளிலும் வாசகனின் தேடலைப் பூர்த்தி செய்தவை வெகு குறைவு. இந்நூல் பயண இலக்கிய வரிசையில் கவனம் பெற வேண்டிய ஒன்று. ஹிமாலயம், அதன் எழில், ஆகிருதி, உயிர்ப்பு, முக்கியத்துவம் அத்தனையையும் நூலாசிரியர் ஷௌக்கத் தன் எழுத்தின் மூலமாக நம் முன் வைத்திருக்கிறார். ஹிமாலயத்துக்குப் பல முறை சென்று வந்தவர்களே கூட இந்நூலைப் படித்தால் ஒரு புதிய தரிசனத்தைப் பெறுவார்கள் என்று தோன்றுகிறது. அங்கே இதுவரை செல்லாதவர்கள், ஹிமாலயம் குறித்தான தங்கள் கற்பனை எப்படி வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை அனுபவிப்பார்கள். இந்நூல் குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்க்க்கூடிய பிரதி இது’. மறுக்க முடியாத உண்மை.

– பாலு சத்யா

himalayas

நூல்: ஹிமாலயம்

மலையாள மூலம்: ஷௌக்கத்

தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ

வெளியீடு: வம்சி புக்ஸ்,

19, டி.எம்.சாரோன்,

திருவண்ணாமலை – 606 601.

செல்: 9445870995, 04175-251468.

விலை: ரூ.300/-

மின்னஞ்சல்: vamsibooks@yahoo.coms

வாசிக்க…

நூல் அறிமுகம் – 1

நூல் அறிமுகம் – 2

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s