ஒரு தோழி பல முகம்
ராமலஷ்மி ராஜன் – எழுத்தாளர் / புகைப்படக்கலைஞர்
பள்ளியும் ஆசிரியர்களும்
திருநெல்வேலி செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவியரைச் செதுக்கியக் கோயில். சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் எனது பள்ளிக்காலம்… பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்து விட வருகிற பெற்றோர் ஆண்டுவிழா போன்ற நிகழ்வுகள் தவிர வேறெதற்கும் அழைக்கப்பட்டதில்லை. பெற்றவர்களும் எங்கள் பிள்ளைகளின் படிப்போடு ஒழுக்கத்துக்கும் நீங்களே உத்திரவாதம் என எதிலும் தலையிட்டதில்லை. Virtue is our strongest shield பள்ளியின் motto. அதைச் சொல்லிக் காட்டிக் கொண்டிராமல் நடைமுறையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் கடைப்பிடிக்கவைத்து, தவறும் போது தண்டித்து நெறிப்படுத்திய விதம் அன்றைய நாளில் கசப்பாக இருந்தது நிஜம். அப்படிக் கற்பிக்கப்பட்ட பண்புகள் இன்று எங்கள் இயல்பாக மாறி இருக்கிறதென்றால் அத்தனை ஆசிரியர்களுமே அதற்குக் காரணம். எத்தனைக் கண்டிப்பு காட்டினாலும் ஊக்கமும் உற்சாகமும் தரவேண்டிய நேரத்தில் தந்து உலகை எதிர் கொள்ள எங்களைத் தயார் செய்தார்கள். அதுமட்டுமின்றி எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் எல்லாத் தரப்பு மாணவியரும் சேர்ந்து படித்த அந்த நல்ல கல்வி முறை இப்போது அபூர்வமாகி விட்டது.
ஆரம்பப் பள்ளியான லொயோலாவில் மிக இயல்பாக எங்களுக்குத் தமிழை உச்சரிக்கவும் எழுதவும் பழக்கி விட்டார்கள். எழுதும் போதும் கூட சிலருக்கு ல-ள-ழ, ர-ற, ன-ண தடுமாற்றம் இருப்பதைக் கண்டு சரி செய்த போது, எங்கள் தமிழாசிரியர்களின் மதிப்பு மனதில் உயர்ந்து நிற்கிறது. இக்னேஷியஸில் தமிழை நேசிக்க வைத்தவர் இயேசுடையாள். சமூக விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டுமென்பதை மனதில் விதைத்தவர் கோதை ஆண்டாள். ஒன்பதாவது முதல் +2 வரை தொடர்ந்து நான்கு வருடங்கள் எனக்கு வகுப்பாசிரியையாக இருந்த ஃபாத்திமா முக்கிய பொறுப்புகள் தந்து, தடுமாறும் போது குட்டியும் நன்றாகச் செய்கையில் தட்டியும் தந்தவர். தலைமை ஆசிரியை சிஸ்டர் ரோஸ் ஆன் அவர்களின் கனிவையும் மறக்க முடியாது.
சில வருடங்களுக்கு முன் ஒரு நானும் தங்கைகளும் ஊருக்குப் போயிருக்கையில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியைப் பார்க்கச் சென்றிருந்தோம். வகுப்பறைகளையும் கட்டிடங்களையும் மைதானங்களையும் சுற்றி வந்த போது எங்களை உருவாக்கிய எல்லா ஆசிரியைகளும் நினைவுக்கு வந்தனர். அமர்ந்து கதை பேசிய மரத்தடிகள், மாடிப்படிகள், நடனம், நாடகம் என அசத்திய மேடை என எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. படங்களும் எடுத்தேன், எனக்காக மட்டுமின்றி அத்தனை பழைய மாணவிகளுக்காகவும். பார்க்கும் மற்றவருக்கு அவை வெறும் கல், கட்டிடம், மண், மைதானமே. அங்கு படித்த எங்களுக்கு அது தாய்வீடு!
வசிக்கும் ஊர்
பெங்களூரு. இயற்கையை ரசிக்க ஏராளமான ஏரிகளையும் பறவைகளையும் தோட்டங்களையும் மலர்களையும் தந்ததோடு என் ஒளிப்படக் கலை ஆர்வத்துக்குப் பயிற்சிக் களமாகவும் இருக்கிற ஊர். அதே நேரம் நூற்றாண்டு கால மரங்கள் நகர வளர்ச்சிக்காக வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தத்தையும் இயற்கையோடு எதற்காகவும் காம்ப்ரமைஸ் கூடாது என்கிற பாடத்தையும் தந்திருக்கிறது.
பன்மொழி பேசும், பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் கிடைத்த சில நல்ல தோழமைகள் பிரதிபலன் பாராமல் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முன்வந்து உதவிய விதம் மனதைத் தொட்ட ஒன்று. முடிந்தவரையில் நானும் கடைப்பிடிக்கும் ஒன்று.
இயற்கை
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு நம்மையும் புதுப்பிக்கும் அதிசயம். அந்தியிலும் அதிகாலையிலும் வானம் பூசிக்கொள்ளும் வண்ணங்கள், நீலவானில் மேகங்கள், நிலவு, நட்சத்திரங்கள் இவற்றோடு செடி, கொடி, மரம் மற்றும் குறிப்பாக மலர்கள். எனது ஃப்ளிக்கர் பக்கத்தில் பதிந்திருக்கும் 1,500க்கும் அதிகமான படங்களில் பூக்களின் எண்ணிக்கை கணிசமானவை. இயற்கை பல்லாயிரக்கணக்கான நிறங்களில், வடிவங்களில் அல்லவா மலர்களைப் படைத்து வைத்திருக்கிறது!
வீட்டுத் தோட்டம் தவிர்த்து வெளியிடங்களில் காண நேரும் பூக்களை ஓரிரு நொடிகளுக்கு மேல் நின்று ரசித்திட நேரமிருப்பதில்லை. படைப்பின் அழகிய நுட்பங்களை எவ்வளவு தவற விடுகிறோம் என அவற்றைத் தீவிரமாகப் படமாக்க ஆரம்பித்த பின்னரே உணர்ந்தேன். பாதையோரம் அரையடி உயரச் செடியில், பூத்து நிற்கும் ஓரங்குல மலரைக் கேமராக் கண்ணால் தெளிவாக ரசித்துக் காட்சிப்படுத்துவது தனி ஆனந்தம்தான். அது இரட்டிப்பாவது பகிரும் போது, படங்கள் மற்றவர் மனங்களையும் மலரச் செய்வதைப் பார்த்து. குறுகிய ஆயுளே கொண்ட பூக்கள், காலத்துக்கும் அழியாமல் நம் படங்களில் வாழும் என்பதிலும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.
தண்ணீர் சிக்கனம்
சுத்தமான குடிநீர் மட்டுமல்ல, பிற தேவைகளுக்கான நீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டுமென்கிற அவலம் வரும் எனக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டோம். எல்லையைக் கடந்து காடுகளை ஆக்ரமித்து விரியும் நகரங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்களாகிக் கொண்டிருக்கும் விளை நிலங்கள், சாலை விரிவாக்கத்துக்காகச் சரிக்கப்படும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம்… இயற்கையை மிதித்தபடி விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய, விளைவுகளின் தீவிரத்தை உணராமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படியே தொடர்ந்தால், எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயம் வெகு தொலைவில் இல்லை. அரசாங்கமானாலும் சரி, குடியிருப்பு அசோசியேஷன் ஆனாலும் சரி… வரிப்பணம் கொடுக்கிறோம், பராமரிப்புப் பணம் கொடுக்கிறோம், தண்ணீரைத் தங்குதடையின்றி தருவது அவர்கள் கடமை. நமக்கென்ன ஆயிற்று எனக் கருதாமல், நம் பங்குக்கும் சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பயன்பாடும் மறு சுழற்சியும்
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க, அவசியமானால் விலை கொடுத்தே வாங்க வேண்டுமென்கிற சட்டம் வந்த புதிது. என் தங்கை மகள் சம்யுக்தாவுக்கு அப்போது ஆறோ, ஏழோ வயதுதான். மால் ஒன்றின் கேஷ் கவுண்டரில் நடப்பதைக் கவனித்திருக்கிறாள். கேஷியரிடம் சென்று, ‘பிளாஸ்டிக் பைகளுக்கு 3 ரூபாய் , 5 ரூபாய் என விலையை ஃபிக்ஸ் செய்து மக்களை மேலும் உபயோகிக்கவே தூண்டுகிறீர்கள். நானும் பார்க்கிறேன். எவருக்குமே அதை காசு கொடுத்து வாங்குகிறோமென்கிற வருத்தம் கொஞ்சம் கூட இல்லை. விலையை 50, 100 என ஆக்கிப் பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறாள். அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா, அனைவராலும் அப்படிக் கொடுக்க முடியுமா என்பது ஒரு பக்கம். ஆனால், சிந்திக்க வேண்டிய விஷயம். பல்பொருள் அங்காடிகளுக்குத் திட்டமிட்டுப் போகும் போது மட்டுமின்றி, நிரந்தரமாகவே 2,3 பைகள் வண்டியில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. தங்கள் கடையின் பெயரை விளம்பரப்படுத்தித் தயாரிக்கும் பைகளும் பெங்களூருவில் குறைந்து வருகின்றன.
மறு சுழற்சிக்காகக் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை ஆரம்பத்தில் பெங்களூருவில் ஒருசில குடியிருப்புகளில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. மாநகராட்சி எடுத்த நடவடிக்கையில் இப்போது மொத்த நகரமும் இந்த முறையைப் பின்பற்றுகிறது. ஒவ்வொரு வீட்டு தினசரி குப்பைக்கும் ஒரு பிளாஸ்டிக் கவர் என இருந்த நிலை மாறிவிட்டிருப்பது வரவேற்கத்தக்க பெரிய மாற்றம். சமையல் கழிவுகள் மட்டுமே தினசரிக் குப்பையாக வெளியேறுகின்றன. பேப்பர் முதலிய டிரை வேஸ்ட் அனைத்தும் சாக்குப் பையில் சேமிக்கப்பட்டு வாரமிருமுறை வெளியேறுகின்றன. இவை வீட்டு வாசலில் தொட்டிகளில் வாங்கிக் கொள்ளப்படுகின்றன. இந்த முறையினால் மாநகராட்சியால் மறுசுழற்சிக்குப் பொருட்களை எளிதில் அனுப்ப முடிகிறது. இருந்தாலும் கூட பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றிலுமுள்ள கிராமங்களைப் பாதிக்காத வகையில் தேவையான நிலக்குழிகளை (landfill) ஏற்படுத்தும் சவாலை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இது சமூக அக்கறை
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண் சிசுக்கொலை, சட்டத்துக்குப் புறம்பாகக் கருவில் இருப்பது பெண் குழந்தையா என சோதித்து அறிந்து கலைப்பது, பதின்மத்தின் தொடக்கத்தில் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, மனிதநேயத்தை மறக்கின்ற மதப்பற்று, சுற்றுச்சூழல் மாசு ஆகியவை கவலை அளிக்கின்றன. குழந்தைகளைக் கடத்திக் கையேந்தவிடும் கொடுமைகள் தொடர்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இயன்றவரை நம்மைச் சுற்றியிருப்பவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த மெனக்கிட வேண்டும்.
மனிதர்கள்
குறையில்லாத மனிதர் இல்லை. நம்மிடமும் எத்தனையோ குறைகள். சிலரது நடவடிக்கைகள், பேச்சுகள் வருத்தம் அளித்தாலும் மனித இயல்புகளில் ஒன்றாக ஒதுக்கிக் கடந்து விடுகிறேன். வாழ்க்கை குறுகியது. நிறைகளை எடுத்துக் கொண்டு நேசிக்கப் பழகுவோம்.
பிறந்த ஊர்… கற்றுக் கொண்டவை
எங்கு வசித்தாலும் எத்தனை வருடங்களானாலும் என் ஆணி வேர் இருப்பது பிறந்த மண்ணான திருநெல்வேலியில்தான் என்கிற உணர்வு மாறாமல் அப்படியே இருக்கிறது. குடும்பத்துப் பெரியவர்கள் வாழ்ந்து காட்டிய விதம் நிறைய பக்குவத்தைத் தந்திருக்கிறது.
பொழுது போக்கு
போட்டோகிராபி, எழுத்து, வாசிப்பு.
நேர நிர்வாகம்
பல விஷயங்களில் பரிமளிக்க விரும்பினால், ஒரு நாளில் ஒவ்வொன்றுக்கும் நேரத்தைப் பிரித்து ஒதுக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்க விரும்புகிற ஒன்றாக, ஆனால் முழுமையாகப் பின்பற்ற முடியாததாக இருந்து வருகிறது.
கடந்து வந்த பாதை
பக்குவம் என்பது வாழ்க்கையின் இறுதி வரை மனிதன் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒன்று என்றுதான் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். மனிதர்களைப் புரிந்து கொள்வதில் ஆகட்டும், பிரச்னைகளை எதிர்கொள்வதில் ஆகட்டும், கவனித்துப் பார்த்தால் ஒவ்வோர் ஐந்து வருடங்களிலும் என்னுள் ஓர் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.
எழுதியதில் பிடித்தது
*தவிப்பு
அழகுச் சிப்பியொன்றைக்
கரையில் ஒதுக்கிய அலை
மெல்லத் தழுவிச் சென்ற
மணல் தளம் பளிங்கு போல.
அதில் தன் சின்னஞ்சிறு கால்களைப் பதித்து
சிப்பியைக் கைப்பற்றியக் குழந்தை
குதூகலமாய்க் குதித்தோடி
மணிகள் பல ஆன பின்னும்
பதிந்த பாதச் சுவடை
அழித்திட மனமின்றி
அழிந்திடுமோ எனப் பதறி
அலைக்கழிந்து கொண்டிருந்தது
பொழிந்த பால்நிலவில்
கலக்கத்துடன் கடல்!
* பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம். அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்… அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாக வாழ வரம் தருகிறேன்’ எனக் குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனைச் செருப்புகள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவு தூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்? கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, காற்றில் அங்குமிங்கும் அலைந்து, வேகவேகமாக வெள்ளை மேகங்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன வெட்கப்பட்டு.
ஃபேஸ்புக்
நலம் விழையும் நட்புகள்… ஊக்கம். உள்ளங்கையில் உலகம். சமூகம், அரசியல், இலக்கியம், சினிமா, எலெக்ட்ரானிக்ஸ் என இங்கு அலசப்படாத விஷயங்களே இல்லை. திறமைகளைப் பகிர… மகிழ்ச்சி, வருத்தம், கோபம், ஆதங்கம் என உணர்வுகளுக்கு வடிகாலாக… ஜஸ்ட் இருப்பைச் சொல்ல என ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாகப் பயனாகிறது. பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அதிலேயே அமிழ்ந்து போனால் மற்ற ஆக்கபூர்வமான வேலைகளுக்கு நேரமின்றிப் போய்விடுகிற அபாயமும் இருக்கிறது. நேரத்தை அளவோடு இங்கு செலவிடுவது நல்லது.
அழகென்பது
ஆரோக்கியம். மனதை லேசாக வைத்துக் கொள்வது.
வீடு
பெரிய வெண்கல விளக்குகள், பித்தளை மணிகள், தஞ்சாவூர் ஓவியம், ரவிவர்மா ஓவியம், மரச் சிற்பங்கள் எனப் பாரம்பரியமாகவே இருக்கும். நான் எடுத்த கோயில் கோபுரப் புகைப்படங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன. நவீனமோ, பாரம்பரியமோ எந்த வகை அலங்காரங்களானாலும் தொடர்ச்சியான பராமரிப்பும் சுத்தமுமே வீட்டுக்கு அழகு.
வாழ்க்கை
No regrets! அதன் போக்கில் வாழ்கிறேன். எதற்கும் தளர்ந்து விடக் கூடாதென்பது அம்மாவிடம் கற்றது.
எழுத்தும் வாசிப்பும்
இந்த வருடம் ‘அகநாழிகை பதிப்பகம்’ மூலமாக வெளியான எனது கவிதைத் தொகுப்பு “இலைகள் பழுக்காத உலகம்”, சிறுகதைத் தொகுப்பு “அடைமழை” ஆகியவை என் எழுத்துப் பயணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. எண்ணங்களை எழுத்துகளாக http://tamilamudam.blogspot.com ‘முத்துச்சரம்’ வலைப்பூவில் கோர்த்து வருகிறேன். சமூகத்தின் மறுபக்கங்களை, மனித உணர்வுகளை, எளிய மக்களின் வாழ்க்கைச் சூழலைப் பேசும் அன்றைய மற்றும் இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி விரும்பி வாசிக்கிறேன். மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன்.
புகைப்படக்கலை
எந்தக் கலையானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தோமானால் அதுவே ஒரு சிறந்த தியானம். ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். முடிந்தவரை ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒரு படம் என்பதைக் கடைப்பிடித்து வருகிறேன். போட்டோகிராபி தொடர்பான புத்தகங்களை வாசிக்கிறேன், இணையம் மூலமாகவும் நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது. Photography-in-tamil தளம் என் ஆர்வத்தை வளர்த்தது. இப்போது அதன் உறுப்பினர்களில் ஒருவராக, நான் பரிசோதிப்பதை மற்றவரோடு பகிரவும் செய்கிறேன். ஃப்ளிக்கரில் பிற கலைஞர்களின் ஒளிப்படங்களைத் தொடர்வதன் மூலமும் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. அவரவர் அறிந்ததை மற்றவருடன் பரிமாறிக் கொள்ளும் நட்பு வட்டம் அமைந்திருப்பது ஒரு பலம். சிறந்த ஒளிப்படக் கலைஞர்களையும், பெங்களூரு சித்ரகலா பரீஷத்தில் சந்திக்கும் பல ஓவியர்களின் கலைப்படைப்புகளையும் படமாக்கி அவர்களது திறனையும் அவ்வப்போது பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வருகிறேன்.
Image courtesy:
படிக்க…
இனிய தோழி ராமலக்ஷ்மியை இங்கு குங்குமம் ஸ்டார் தோழியாக சந்திப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், ராமலக்ஷ்மி!
தங்களை பற்றிய விஷயங்களை ஸ்டார் தோழியின் மூலமாக எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராமலக்ஷ்மி..
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
பள்ளிப் படங்கள் அருமை.
மறு சுழற்சியா? மறு ஓட்டமா?
@ ranjani135, நன்றி ரஞ்சனிம்மா.
@ vanilabalaji, நன்றி வனிலா.
@ அப்பாதுரை, நன்றி. மறு சுழற்சி (recycling) என்பதே வழக்கில் இருக்கும் சொல் இல்லையா?
மஞ்சள் கிளி குழாயில் தண்ணீர் அருந்துகிற படம் ச்சோ க்யூட் 🙂
@ கவிநயா,
ஆம் நல்ல படம். கட்டுரைக்காக இணையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தகவலுக்காக 🙂 .