மழைக்காலத்தில் காரை பராமரிக்க எளிய வழிகள்…

ford rain

குண்டும் குழியும் நிறைந்த நம் ஊர்ச் சாலைகளில் சாதாரண நாட்களிலேயே கார் ஓட்டுவது அசாதாரணமான காரியம். மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். கார் எந்த நேரத்தில், எப்படி நின்று போகும் என்பதை கணிக்கவே முடியாது. கார் பழுதாவது ஒருபுறம் இருக்கட்டும்… விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக வெளியே போய்வரவும் கூட முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது. கார் ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் மழைக்காலத்தில் காரை பராமரிக்கவும் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வதற்கும் ‘ஃபோர்டு இந்தியா’ கார் நிறுவனம் சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறது. அவை…

கார் கண்டிஷனை சரியாக வைத்திருங்கள்… 

பிரேக்குகள், ஸ்டீயரிங், டயரில் உள்ள காற்றின் அளவு, ஈரத்தை உலர்த்த பயன்படும் ‘டிஃபிராஸ்டர் ஆபரேஷன்’ என கார் இயக்கத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் அவ்வப்போது பரிசோதித்து, முறையாக பராமரித்து வைத்துக்கொண்டால் மழைக் காலத்தை எதிர்கொள்வது எளிது!

அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய பை (Emergency Kit) அவசியம்… 

மழைக்காலத்தில் கார் அடிக்கடி பிரேக் டவுன் ஆவது சகஜம்… மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அவஸ்தை அது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உங்கள் நேரத்தையும் அவசரத்துக்கு காரை சர்வீஸ் விடும் போது ஆகும் செலவையும் மிச்சப்படுத்தலாம்… தேவையற்ற தலைவலியைத் தடுக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் கைகொடுக்கக்கூடிய ஒரு ‘எமெர்ஜன்சி கிட்’டை காரிலேயே வைத்திருக்கவும். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு உதவும், கார் பழுதானால் சரி செய்யவும் உதவும் பொருட்களை அந்த ‘கிட்’டில் வைத்திருக்கலாம். காருக்கு அவசியமான மாற்று உதிரி பாகங்கள், மாற்று டயர்கள், டார்ச் லைட்டுகள் , டயர் இன்ஃபிளேடர்கள் (டயரில் காற்று செலுத்தும் கருவி), ஃப்யூஸ்கள் மற்றும் அவசியம் என நினைக்கும் அத்தனை பொருட்களையும் அந்த கிட்டில் வைத்திருக்கவும்.

முன்கண்ணாடி துடைப்பான்கள் (Wipers) நல்ல கண்டிஷனில் இருப்பதையும் சரியாக வேலை செய்கிறது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்… 

வைப்பர்களில் இருக்கும் பிளேடு பழுதாகியிருந்தாலோ, மழுங்கிப் போயிருந்தாலோ மழைக்காலம் வருவதற்கு முன்னால் மாற்றிவிடவும். வைப்பர்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக முன்புறக் கண்ணாடியில் போதுமான அளவு ஈரம் இருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லையென்றால் வைப்பரை பயன்படுத்தும் போது கண்ணாடியில் ஸ்க்ராட்ச் விழும் வாய்ப்பு இருக்கிறது.

கண்ணாடியை சுத்தப்படுத்த…

காரை தயாரித்த கம்பெனி பரிந்துரைத்த திரவத்தைக் (windshield washer fluid) கொண்டுதான் கண்ணாடியை சுத்தப்படுத்த வேண்டும். சாதாரண தண்ணீரைக் கொண்டு கண்ணாடியை சுத்தப்படுத்துவதைவிட, தண்ணீரும் வாஷர் ஃப்ளூய்டும் கலந்து சுத்தப்படுத்துவது மிகுந்த பலன் தரும்.

டயரும் காற்றும்…

காரில் வெவ்வேறு எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றும் போது, எடைக்கேற்ப, ‘உரிமையாளர் கையேட்டில்’ (Owner’s manual) குறிப்பிடப்பட்டிருக்கும் அளவில் டயரில் காற்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மழைக்காலத்தில் அதிக அளவு பராமரிப்பு டயர்களுக்கு தேவைப்படும். மாற்று டயர் காரில் வைத்திருத்தல் அவசர காலத்தில் பயன்படும்.

முன்கண்ணாடியில் ஈரப்பதத்தை உலரச் செய்தல் (Fogging)…

காரிலுள்ள  ஏசியை ஆன் செய்யும் போது டி-ஃப்ராஸ்ட் செய்து அவ்வப்போது கண்ணாடியில் உள்ள ஈரப்பதத்தை வடியச் செய்து உலரச் செய்தால் தெளிவான பார்வை கார் ஓட்டுவதற்கு கிடைக்கும்.

கவனமாக ஓட்டவும்! வேகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும்…

மழைக்காலத்தில் சாலையில் சகதியும் தண்ணீரும் தேங்கி கிடக்கும்… அதன் காரணமாக டயர்களுக்கு கிடைக்கும் உராய்வுத்தன்மை குறையும். இது போன்ற நேரத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்றால் ஓட்டுபவர் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம்… அது விபத்துக்கு வழி வகுக்கலாம். பிரேக்கை அழுத்தினாலும்கூட வேகமாக ஓடும் காரை நிறுத்துவது கடினம். எனவே மழைக்காலத்தில் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நவீன வகை டயர்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் வேகத்தை குறைத்து காரை ஓட்டுவதே விவேகமான செயல்.

முன்விளக்குகளை எரிய விடவும் (Headlights on)…

மழையில் காரை ஓட்டும் போது, முன்விளக்குகளை லோ-பீமில் எரியவிட வேண்டும். அதனால், தூரத்தில் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும். உங்கள் கார் வருவதை மற்ற வாகன ஓட்டிகளும் தூரத்தில் இருந்தே தெரிந்துகொள்வார்கள்.

திடீர் பிரேக்… கூடவே கூடாது!

எப்போதுமே பிரேக்கை ஸ்மூத்தாக கையாள வேண்டும். சட்டென பிரேக் போடுவதாலோ, பிரேக் பெடலை அதன் அளவைத் தாண்டி அழுத்துவதாலோ டயர்கள் மழை நீரில் வழுக்கி கார் கவிழும் அபாயம்  இருக்கிறது. காரின் வேகத்தை குறைத்து மெதுவாக பிரேக்கை  அழுத்துவது பாதுகாப்பானது.

எச்சரிக்கையாக ஓட்டுதல்… முன்னால் போகும் வாகனத்துக்கும் காருக்கும் இடையில் போதுமான இடைவெளி விடுதல்…

லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்களைப் பின் தொடராதீர்கள். அப்படியே பெரிய வாகனங்களின் பின்னால் போக நேர்ந்தால், தகுந்த இடைவெளி விட்டுச்செல்ல வேண்டும். முன்னால் போகும் பஸ், லாரி போன்றவை மழைநீர் மற்றும் சகதியை காரின் முன்கண்ணாடியில் வாரி இறைக்கலாம். இதனால் எதிரே வரும் வாகனங்களைப் பார்க்க முடியாமல் விபத்துக்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

நீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் கவனம்… 

மழை நேரத்தில், ரோட்டில் தேங்கிக் கிடக்கும் தண்ணீருக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. பெரிய பள்ளமோ, குழியோ கூட இருக்கலாம். வேகமாக ஓட்டுகையில், பள்ளத்தில் சக்கரங்கள் ஏறி, இறங்கும்போது காரின் பம்பர், ரேடியட்டர் போன்ற பாகங்கள் பழுதாக வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றையும் விட, குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீர் இன்ஜினுக்குள் புகுந்தால் கார் நின்றுவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, நீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் காரை மிக மெதுவாக ஓட்ட வேண்டும்.

சாலையில் மழை நீர் ஓடுகிறது… உங்களால் சாலையைப் பார்க்க முடியவில்லை. இது போன்ற நேரத்தில் காரை ஓட்டக் கூடாது. வெள்ளம் போல நீர் ஓடும் பகுதி என்றால் காரை நிறுத்திவிட வேண்டும். நீரின் அளவை தெரிந்து கொண்டு, அதில் ஓட்ட முடியும் என்றால்தான் காரை ஓட்டிச் செல்ல வேண்டும். சாலையில் ஓடும் நீர் கார் கதவின் அடிப்பகுதியைத் தொட்டுக் கொண்டு ஓடும் சந்தர்ப்பங்களில் காரை ஓட்டாமல் தவிர்ப்பது நல்லது.

சகதியில் கார் மாட்டிக்கொண்டால்…

சகதி  அல்லது சேறில் காரின் சக்கரங்கள் சிக்கிக் கொண்டால் முதல் கியர் அல்லது இரண்டாவது கியருக்கு மாற்றி மெதுவாக  வண்டியை முடுக்க வேண்டும். சக்கரங்களை வேகமாக சுழலவிடக் கூடாது…. சகதியில் அழுத்தமாக மாட்டிக்கொண்டுவிடும். மெதுவாக ஆக்ஸிலேட்டரை ‘Rise’ செய்தால் எளிதாக வெளியே எடுத்து விடலாம்.

எச்சரிக்கை போர்டுகளை கவனமாகப் பார்த்தல்…

மழையின் போது பழுதடைந்த மற்றும் தடைசெய்யப்பட்ட சாலைகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கி போர்டும் எச்சரிக்கை செய்யும் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை சரியாக கவனிக்க வேண்டும். கவனித்து, மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். வெள்ளம் சூழ்ந்த, முன்பின் அறிமுகமில்லாத பகுதிகளில் கார் ஓட்டிச் செல்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.

தொகுப்பு: விஜய் மகேந்திரன்

Image courtesy: http://www.wallpaperfly.com

tw_26_01_17.tif

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s