ஒரு தோழி பல முகம்
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் – சென்னை தொலைபேசி
நான்
‘இது செய்யலாம்… இது செய்யவேண்டாம்… அதனால் பிரச்னைகள் வரும் என்று தெரிந்தும், நாம் செய்யும் செயலினால் மற்றவர்களுக்கு நல்லது நடப்பின், நினைத்ததை கூடிய மட்டும் செயல்படுத்தும் பெண். இப்படி இருப்பதற்குக் காரணம் பெற்றோரின் வளர்ப்பும், உடன்பிறந்தவர்களின் ஊக்குவிப்பும், என் கணவரின் துணையுமே!
பள்ளி
புத்திசாலியும் இல்லை… மக்கும் இல்லை… சராசரி மாணவி. முதல் பெஞ்சு. எதை வாசிப்பதென்றாலும், ஆசிரியர் சொல்லுமுன், ‘நான் வாசிக்கிறேன்’ என்று எழுந்து நின்று விடுவேன். களம் பல கடந்து வந்திருப்பினும் (பள்ளியில் படித்ததைத்தான் சொல்கிறேன்), போர் தளபதி போல என் மனதிலும் பதிந்து விட்ட ஆசிரியை – லில்லி ரெஜினா. அவர் இல்லையென்றால் நான் முழு மக்குதான். தமிழ் மீடியம் என்றாலும் ஆங்கிலத்தை வெகு எளிதாக மனதில் அச்சாணியை போல பதியவிட்டு விடுவார்கள். தமிழ் என்றால் நளினி ஆசிரியை மட்டுமே. அவர்கள் இல்லையெனில் என் தமிழும் எனக்கில்லை. என் ஆசிரியர்கள் எனக்காக அனுப்பப்பட்ட ஏஞ்சல்கள்!
ஆசைகள் ஆயிரம்
என் தந்தை கைப்பிடித்து வெகுதூரம் நடக்க வேண்டும், என் உடன் பிறந்தவர்களோடு இணைந்து.
சென்னையின் தட்பவெப்பநிலை எப்போதும் மார்கழி போலவே இருக்க வேண்டும்.
மொபைல் தொழில்நுட்பம் வரும்முன்னே எங்களையெல்லாம் விட்டுச் சென்றுவிட்ட என் தந்தையுடன், இன்றைய அறிவியல் வளர்ச்சி பற்றி பேசி, அதிநவீன கைபேசி கொடுத்து மகிழ வேண்டும்.
மீண்டும் அந்த ‘திருடன் போலீஸ்’ விளையாட்டும், நொண்டியும் விளையாடி அம்மாவிடம் அடி வாங்க வேண்டும்.
கணவர் மற்றும் பிள்ளையுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அம்மா செய்த தேங்காய் சாதமும் உருளைப் பொரியலும் சாப்பிட வேண்டும்.
பிடித்தவை
6ம் வகுப்பில், முதல் பரீட்சையில் கணக்கில் 2 மதிப்பெண் பெற்று, ‘போய் உன் அக்காவை அழைத்து வா’ என மதிய உணவு நேரத்தில் சொல்லிய ஆசிரியருக்குத் தெரியாமல், பேப்பரை கிழித்து குப்பை கூடையில் போட்டுவிட்டு, தோழிகளுடன் அடைந்த மகிழ்ச்சி… அது தவறென்று தெரியாமல்… இன்று அந்த நேரம் எனக்குப் பிடித்த நேரமாக!
கவிதை
ஒற்றைச் சொல் யார் சொல்லினும் அதை வார்த்தைகளாக கோர்த்துக் கொடுப்பதில் என்னையே எனக்குப் பிடிக்கும். அந்தச் சொல் வளத்தில் உலகையே சுற்றி வருவேன் சில நிமிட பொழுதுகளில். எந்த நிலையிலும் முடிந்த வரை உதவி செய்வது என்னை எனக்குள்ளே கடவுளை உணரச் செய்கிறது.
வாசிப்பு
ஆரம்பமே அமர்க்களம்தான்… எங்கள் வீட்டில் முரசொலியும் முத்தாரமும் குங்குமமும் மட்டுமே எனக்கு வாசிப்பின் சுவையை தந்தன. வாசிப்பினில் சுவைத்தது – ‘குறளோவியம்’ , ‘சங்கத்தமிழ்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘மருது சகோதரர்கள்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘சங்கத் தமிழ்’ என கலைஞர் எழுதிய புத்தகங்கள்தான். அதோடு, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ஜெயகாந்தன் நாவல்களை வாசிக்கும்போது மாறுபட்ட எழுத்துகளை அடையாளம் காண முடிந்தது.
இன்று நான் விரும்பிப் படிக்கும் ‘குங்குமம் தோழி’ மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
கோடுகள்… எழுத்துகள்
பென்சிலும் பேப்பரும் கிடைத்தால் போதும் வரைய ஆரம்பித்துவிடுவேன்… குங்குமத்தில் வரும் படங்களைப் பார்த்து – குறிப்பாக அரஸ் மற்றும் ம.செ. அவர்களின் ஓவியங்கள். இப்படி ஆரம்பித்த ஓவிய விருப்பம் ‘டச் மொபை’லில் இன்னும் மெருகேற்றப்பட்டது. அதில் நான் வரைந்த அன்னை தெரசா படம் இலங்கை எழுத்தாளர் புன்னியாமீனின் 100வது நூலில் வெளிவந்தது. இது எனக்கு ஃபேஸ்புக்கினால் கிடைத்த வரம் என்றே சொல்லுவேன். சிறு கவிதைகள், கதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. அதை துணைகொண்டு இப்போது சிறுகதைகள் எழுத ஆரம்பித்துள்ளேன்.
பிடித்த புத்தகம்
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் முக்கியமானது. அதைப் படிக்கும்போதே பெண்களின் வீரத்தையும், உலகமே அவர்களால்தான் என்பதையும் உணர முடிந்தது.
திரைப்படம்
‘திரைப்படமே வாழ்க்கை’ என சிறு வயதிலே நினைத்த காலங்கள் உண்டு. வளர வளர ‘வீடு’ படம் மிகவும் பாதித்தது. ‘தி காடம்மா’ படத்தில் ஒரு பெண் அரபு நாட்டில் வீட்டு வேலைக்குச் செல்கிறாள். அவள் படும் துயரத்தையும் அதிலிருந்து மீண்டு தாய் நாடு சேர்வதையும் சொல்கிறது அப்படம்.
வாழ்க்கை
வாழ்க்கையை களமாக எடுத்துக்கொண்டு, அந்தக் களத்தில் அன்பை நிறைத்துக் கொண்டோம் எனில் அது தேனின் சுவையையும் மிஞ்சக்கூடிய ஒன்றாகும். ‘பிழையாய் இருக்கிறேன்… பிழை திருத்தமாக நீ இருக்கிறாய்’ என ஒரு வரியை மனதில் கொண்டு, விட்டுக் கொடுத்தலில், புரிதலில், மீண்டும் மீண்டும் துளிர்க்கும் அன்பில், இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து வர அன்பு உங்களைச் சுற்றி ஆலவிருட்சமாக பெருகத் தொடங்கும்!
சமையல்
ரொம்பப் பிடித்த விஷயமான சமையல், வீட்டில் இருப்போர்க்குத் தகுந்தாற்போல செய்யப்பட்டாலும், அது மேலும் சுவை கொண்டு கூடுதலாக்குகிறது வாழ்வின் சுவையை.
ஓர் எளிய சமையல் குறிப்பு
ஒரு வெங்காயம், சிறு இஞ்சித் துண்டு, 2 பல் பூண்டு, 2 தேங்காய் துண்டு, ஒருகைப்பிடி கொத்தமல்லி, இரண்டு இணுக்கு கறிவேப்பிலை, சிறிது புளி, இதில் வெங்காயம் தவிர்த்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு மிகஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையலில் தாளிப்பு என்பது இல்லை. அதை அப்படியே சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும்.
குடும்பம்
நண்பர்களாக இருந்து காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்து குடும்பமானோம். எனக்கு ஒரே மகள். மகனாக எப்போதும் கணவர் என்னுடன்.
ஆரோக்கியம்
‘அன்பு சேர்த்து சமைப்பதை நிறுத்துங்கள்’ என்று சொல்லவில்லை. அன்புடன் ஆரோக்கியத்தை நினைவில் கொண்டு சமைத்தால் நீண்ட ஆயுளும் நிச்சயம். எவ்வளவோ பணிகள் நமக்கு இருக்கின்றன… வேலைக்குச் செல்லும்போதும்… ஓய்வு பெற்ற பின்பும். எந்த நிலையிலும் நமக்கென தனி நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா அவசியம். நம் தனித்தன்மையை வெளிப் படுத்தலும் அவசியம். மன நிறைவுடன் அமையட்டும் அனைத்தும்!
எண்ணம்
நல் எண்ணமே நல் செயல்களில் நம்மை ஈடுபடுத்தும். மனதும் எண்ணமும் சேர்ந்து இருப்பின் செயல்படுத்தும் அனைத்தும் வெற்றியே.
Image courtesy:
http://freerecipeszone.blogspot.in
படிக்க…