ஒரு தோழி பல முகம்
ஆர்.கே.லக்ஷ்மி – பிஸியோதெரபிஸ்ட் / புகைப்படக் கலைஞர்
நான்:
திருச்சியில் இயன்முறை மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வருகிறேன். இயன்முறை உடற்பயிற்சி சிகிச்சை பிரிவில் இளங்கலை பட்டமும், கவுன்சலிங் மற்றும் கைடன்ஸ் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றேன்.
பள்ளி:
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி… ஓர் அழகிய இயற்கைச் சூழலில் அமைந்திருக்கிறது. ‘யாம் பெறாத இன்பத்தையும் பெறுக இவ்வையகம்’ என்பது எங்கள் பள்ளியின் மோட்டோ. A Sound mind in a sound body, man making education – இந்தக் கல்வியையே எங்கள் பள்ளி போதித்தது. பிற கலைகளிலும் ஆர்வத்தையும் ஆற்றலையும் உருவாக்கும் விதத்தில் வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தந்தது.
ஊர் உணவு கலாசாரம்:
திருச்சிக்கே உரிய நகரம் மற்றும் கிராமம் கலந்த ஒரு சுற்றுச்சூழல் மிகவும் ரசிக்கக் கூடியது. கோயில்கள், புராதன அம்சங்கள், சுறுசுறுப்பான மக்கள், பேருந்துப் பயணம், கலாசாரம் இன்றளவும் குறையாமல் இருப்பது போன்றவை மகிழ்ச்சியைத் தருகிறது. தென்னிந்திய உணவு அதன் பழமை மாறாமல் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு திருச்சியும் சுற்றியுள்ள ஊர்களும் ஒரு புதையல் என்றே கூறலாம். கடின உழைப்புக்கான பாடம் இந்த ஊர் எனக்கு போதித்தது.
புத்தகங்கள்:
ஜெ.கிருஷ்ணமூர்த்தி, வெ.இறையன்பு, சுகி சிவம், எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் உற்சாகம் ஊட்டுகின்றன. கவிதை நூல்கள் மனதுக்கு நெருக்கமான ஓர் உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
குடும்பம்:
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்றாற்போல என்னை வழிநடத்திச் செல்கிறது என் குடும்பம். தந்தையின் காலத்துக்குப் பின் பொறுப்புகள் கூடுதலாகி, சில பணிகள் முடங்கினாலும், எனக்கும் எனது அன்னைக்கும் அது ஓர் எதிர்நீச்சலாகவே அமைந்தது.
பொழுதுப்போக்கு:
ஓவியம், போட்டோகிராபி, வாசிப்பு. வாசிப்பது… கவிதை, பொது அறிவு, வரலாற்று கோயில்கள் பற்றிய தகவல்கள்.
இயற்கை:
இயற்கைதான் முதன்முதலில் நமக்கு வண்ணங்களை அறியச் செய்தது. மரங்களின் அசைவை வைத்தே ஆடற்கலை தோன்றியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பசுமை நிறைந்த வயல்கள், அருவியின் சலசலக்கும் ஓசை, அந்தி சாயும் மாலைப்பொழுது, மேகங்கள் ஊடுருவிச் செல்லும் சூரியக் கதிர்கள், வானவில்லின் வண்ணம், பூக்களின் வாசம் மற்றும் வர்ணங்கள், வெயிலும் மழையும் கலந்த ஓர் புதுமையான வான்நிலை, பறவைகளின் ஒலி, எப்போதோ ஒருமுறை வரும் கிரகணங்கள், இயற்கை நெய்த புல் படுக்கைகள், மலையை மோதிச் செல்லும் மேகங்கள்… இப்படி எத்தனையோ இயற்கை விஷயங்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
‘எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு’ என்பது உலகப்புகழ் விஞ்ஞானி நியூட்டனின் 3ம் விதி. இன்று மனிதன் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கை வளத்தை அதிக அளவில் அழித்து வருகிறான் என்பது கவலையடையச் செய்கிறது.
தண்ணீர் சிக்கனம்:
பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் தண்ணீர், நம் கண்முன்னாலேயே மாசுபடுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே செல்கிறது என்று பல ஆய்வு அறிக்கைகள் வந்தபடி உள்ளன. ஆனாலும் சில கிராமங்களில் சில வீடுகளில் மழைநீரை சேமித்து வைத்து, சுத்தப்படுத்தி சமையலுக்கு பயன்படுத்துவதும் நடக்கத்தான் செய்கிறது. தண்ணீர் சிக்கனம் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். மழைநீர்….. உயிர்நீர் ஆக கருதப்படும். அரசாங்கம் ஏற்படுத்திய மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தலை செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்தை உறிஞ்சி உபயோகபடுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்க நேரும் போது தண்ணீர் சிக்கனத்துக்கான வழிமுறைகள் போதவில்லை என்றே தோன்றுகிறது. தண்ணீர் பயன்பாடு, சேமிப்பு குறித்து சிந்தித்து கூட்டாக செயல்பட வேண்டிய அவசரமான காலகட்டம் இது.
பிளாஸ்டிக் பயன்பாடு:
பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்வின் ஒன்றாகி வருவது வருத்தம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் பேராபத்து நிறைய! பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எளிய பத்து வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவை…
- பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டு வரும் பொருட்களை உபயோகிப்பதை தவிர்த்தல்.
- பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பேப்பர் அல்லது பருத்தியினால் ஆன பைகளை பயன்படுத்துதல்.
- சமையல் பொருட்களைப் பதப்படுத்த சில்வர், கண்ணாடி, மூங்கில் மற்றும் மரங்களால் ஆன சாமான்களைப் பயன்படுத்துதல்.
- சோப்பு மற்றும் க்ளீனர்ரை மீண்டும் பயன்படுத்தக் கூடிய கொள்கலன் கொண்டு உபயோகித்தல்.
- குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து பயன்படுத்தச் செய்தல்.
- ஸ்ட்ரா உபயோகிப்பதைத் தடுத்தல், பேப்பர் அல்லது ஃபாயில் பேப்பரைப் பயன்படுத்தி உணவை பேக்கிங் செய்தல்.
- உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி பயன்படுத்துதல்.
- Diapers Mopa அழிய 550 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என பத்திரிக்கையில் படித்தேன். எனவே, அதற்கு பதிலாக பருத்தி துணியை பயன்படுத்துதல்.
- 9. பிளாஸ்டிக்கில் மறுசுழற்சி முறையை பின்பற்றுதல்.
- 10. தெருக்களில் பிளாஸ்டிக் பைகளை எறிகிறவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கலாம். பிளாஸ்டிக்கில் பெரிய பைகளை உபயோகிப்பதை தடை செய்யலாம். விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளலாம். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்கமுடியாது. சிறிது சிறிதாக உரிய நடவடிக்கைகளை எடுத்தோமானால் பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை படைத்துவிடலாம்.
சமூகம்:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சுத்தம், இயற்கை, கல்வி, வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதாரம், சமூகம் மற்றும் தனிமனித உயர்வு போன்றவையே. ஆனால், முகம் சுளிக்கக்கூடிய அசுத்தச் செயல்கள் இன்றளவும் காணப்படுகின்றன. புராதன, வரலாற்றுச் சின்னங்கள் விஷயத்தில் சரியான பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு குறைந்தே காணப்படுகிறது. மனநலம் குன்றியவர்கள் தெருக்களில் அலங்கோலமாக செல்வதை காணும்போது, ‘மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?’ என்ற மகாகவியின் வரிகளே தோன்றுகின்றன. இவற்றைத் தடுக்க நம் முயற்சிகள் போதவில்லையோ? அவர்கள் மீது நாம் காட்ட வேண்டியது அனுதாபம் அல்ல… அக்கறையும் போதிய உதவிகளுமே!
பிறந்த ஊர் சொந்தங்கள் கற்றுக்கொண்டவை:
பிறந்த ஊர் திருச்சிராப்பள்ளியாக இருந்தாலும் கல்வி தந்து என்னை உருவாக்கியது கோயில் நகரமான கும்பகோணம். பெரம்பலூரில் உயர்கல்வியைத் தொடர்ந்தேன். சுற்றங்கள் தந்த பாடங்கள் என்னை மேன்மேலும் மெருகூட்டக் கூடியதாகவே அமைந்தன. குடும்பம் மற்றும் சொந்தங்களில் உள்ளவர்களின் அனுபவங்கள் பாடங்களாயின.
நேர நிர்வாகம்
வேலை பளுவின் காரணமாக சில நல்ல விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போனது. அதனால் சில மாற்றங்களைச் செய்ததில், நிறைய நேரம் கிடைத்தது. ஓய்வு நேரங்களில் மனதுக்கு இசைவான மற்ற செயல்களைச் செய்கிறபோது உறங்குவதில் கிடைத்த மலர்ச்சியைக் காட்டிலும் அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கிறது. நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது புரிகிறது. பள்ளிக் காலத்தில் கால அட்டவணை என குறித்துக் கொடுத்து அவற்றை முறையாக பின்பற்றச் செய்தார்கள். ஏனோ நாம் அவற்றை அக்காலங்களில் மட்டுமே செய்துள்ளோம். அவற்றை நம் வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்தால் “நேரம் போதவில்லை” என்ற வார்த்தை வராமல் போகும்.
சமையல்:
அன்போடு பரிமாறும் எந்த உணவும் அறுசுவையோடு மேலும் ஒரு சுவையை கூட்டுகிறது. அம்மாவின் சமையலுக்கு நிகர் ஈடு இணை இல்லை என்பதே உலக உண்மை!
முக்கிய வேலை:
நேரம் கிடைக்கும் போது கோயில் சார்ந்த விஷயங்கள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்தல். புகைப்படத்துடன் அதற்கான முழுத்தகவலுடன் சேர்த்து இணையத்தளத்தில் பகிர்கிறேன்.
கடந்து வந்த பாதை:
சந்தித்தவை அனைத்தும் பக்குவத்தையும் பாடங்களையும் அளித்திருக்கின்றன. சொந்த அனுபவங்களைத் தாண்டி சக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் மனதை பலப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
இசை:
கர்நாடக புல்லாங்குழல் இசை மற்றும் சாக்ஸஃபோன் இசை ஆழ்மனதை மயக்கச் செய்கிறது. என்றென்றும் இனிமையான இசைஞானியின் இசை சேகரித்துக் கேட்பது வழக்கம்.
பிடித்த ஆளுமைகள்:
ஜான்சி ராணி லட்சுமிபாய், அன்னை தெரசா.
பேஸ்புக் கற்றதும் பெற்றதும்:
தொலைதூர முகம் அறியா
முகப்புத்தகத்தில்
அழகிய தோழமைகள்
அறிய வைத்த படிப்பினைகள
ஏராளம்!
சில நேரங்களில் சமூக வலைதளங்கள் இல்லாத நொடிகளில் என்னைச் சுற்றியுள்ள உலகம் சுருங்கியது போல் ஓர் உணர்வு. தீமைகள் பல வந்தாலும் இணையத்தைக் கையாளும் விதம் கற்றுக் கொண்டால் அது வரம்.
அழகென்பது:
காணும் காட்சிகள் யாவிலும் அழகைக் காண்பது… முகம் மலர்ந்த புன்னகை மிகச் சிறந்த அழகு!
வீடு:
பழைமை மாறாத மனை என்பதால் அழகிய வேலைப்பாடான மரக்கதவு வரவேற்றுக் கொண்டிருக்கும். கலை வேலைப்பாடான அழகிய பொருட்கள் அனைத்தும் பண்டிகைக் காலங்களில் அலங்கரிக்கும். இப்படி அம்மாவின் பூஜை அறை எங்கள் இல்லம் வரும் விருந்தினர்களுக்கு ஒரு தியான மண்டபம்.
வாழ்க்கை:
‘வாழ்க்கை என்பது உயிரோடு இருக்கும் போது திருத்தப்பட்டு, மரணத்துக்கு பிறகு படிக்கப்படுகிற மாபெரும் கவிதை’ என்பது வலம்புரிஜானின் தத்துவமொழி. உயர்வும் தாழ்வும் மாறிமாறி வரும் சுழற்சி சக்கரமே வாழ்வு. வீழ்ச்சியிலிருந்து மீண்டும் எழ எடுத்துக் கொள்ளும் காலம் மட்டும் வேறுபடலாம். எழுந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே என்னை வழி நடத்துகிறது.
புகைப்படக்கலை:
கோயில் சிற்பங்களை வரைவதற்காகவே புகைப்படக்கலையை 4 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுத்தேன். கோயில் மற்றும் சிற்பங்களின் வரலாற்றுத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறேன். கோயில் அருகே இருக்கக்கூடிய மனிதர்கள் மற்றும் குழந்தைகளின் யதார்த்த சூழ்நிலையும் என் கவனத்தை ஈர்க்கின்றன.
படிக்க…
ஸ்டார் தோழி – 7
Image courtesy: