ஷாப்பிங்
சினிமா நடிகைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ‘காஜல் கண்ணு எவ்ளோ அழகு தெரியுமா?’, ‘சமந்தா செம க்யூட் இல்ல!’ இப்படி நடிகைகளை வர்ணித்து சிலிர்ப்பதும் ஆச்சரியப்படுவதும் எப்போதும் முடியாத தொடர்கதை. நிஜத்தில் மேக்கப் இல்லாமல் நடிகைகளைப் பார்த்தால் ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என்று தோன்றலாம்… ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம், மேக்கப் இல்லாமல் அழகோடு இருக்கும் நடிகைகள் மிக மிகக் குறைவு.
‘‘நான் ரொம்ப சுமாரான பொண்ணுதான். எல்லாம் மேக்கப் மேன், ஹேர் டிரெஸ்ஸர், ஒளிப்பதிவாளரோட வேலை’’ என்று நடிகை சமந்தா தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சமீபத்தில் சொன்னது சிலருக்கு நினைவிருக்கலாம். சமந்தாவின் ஸ்டேட்மென்ட்டை தன்னடக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்; உண்மையாகவும் எடுத்துக் கொள்ளலாம்…
நடிகைகளின் அழகுக்கு முக்கியக் காரணமாவது ‘சினிமா சீக்ரெட் என்ற மேக்கப் செட்.’ இது கோடம்பாக்கத்தில் ரொம்பவும் பிரபலம். ஒரு மேக்கப் செட்டில் என்னென்ன இருக்கும்? பார்க்கலாமா?
ப்ரீ மேக்கப் பேஸ்
வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரம் போடுகிற மாதிரி, மேக்கப்புக்கு முன் போடுகிற மேக்கப் இது. விலை ரூ.500லிருந்து ரூ.3,200 வரை.
ஃபவுண்டேஷன் மேக்கப்
இது மேக்கப் போடுவதற்கு முகத்தைத் தயார்ப்படுத்தும் ப்ராசஸ். ரூ.1,500லிருந்து ரூ.2,600 வரை. இது முடிந்ததும் க்ரீம் ஃபவுண்டேஷன் போட்டுக் கொண்டால் முதல் கட்டம் ஓவர்.
காம்பாக்ட் மேக்அப் பவுடர்
ஃபவுண்டேஷன் மேக்கப்புக்குப் பிறகு போட்டுக் கொள்கிற பவுடர் இது. ரூ.3,500.
லூஸ் பவுடர்
வழக்கமாக நாம் பவுடர் அடித்துக் கொள்வது போல் பயன்படுத்தும் பவுடர் இது. ரூ.1,900.
இதற்கு அடுத்து ப்ளஷர் போட்டுக் கொண்டால் ஆப்பிள் கன்னம் போல வழுவழுவென்று ஆகிவிடும். ரூ.1,200.
ஐ லேஷ்
நடிகைகள் பட்டாம்பூச்சிபோல் கண்களை இமைக்கிறார்களா? அதற்கு இந்த ஐலேஷ்தான் காரணம். இதை கண் இமையில் ஒட்டிக் கொண்டால் நீங்களும் கண்ணழகிதான். விலை. க்ரூ. 190லிருந்து ரூ. 250 வரை.
இந்த ஐலேஷுக்கும் ஒரு மேக்கப் உண்டு. அது மஸ்கரா. இதை ஐ லேஷில் போட்டுக் கொள்ள வேண்டும்.
வழக்கமாக நாம் புருவத்துக்குப் பயன்படுத்தும் ஐ லைனர் ரூ.125க்கும், இமைகளுக்கு மேல் பயன்படுத்தும் ஐ ஷேடோ ரூ.900க்கும் கிடைக்கிறது.
லிப்ஸ்டிக் ப்ளேட் வித் பிரஷ்
நாம் ஸ்டிக் டைப்பில் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக் ப்ளேட் வடிவத்தில் கிடைக்கிறது. உதடுகளில் போட்டுக் கொள்ள ஸ்பெஷல் பிரஷ் இதனுடன் உண்டு. இந்த ப்ளேட் ரூ.2,200க்கும், பிரஷ் ரூ.450க்கும் கிடைக்கிறது.
ஷார்ட் விக்
பாப் கட்டிங் வேண்டும் என்றால் ஷார்ட் விக் அணிந்து கொள்ளலாம். கொஞ்சம் நீளமான அலைபாய்கிற கூந்தல் வேண்டும் என்றால் லாங் விக் அணிந்து கொள்ளலாம். இந்த இரண்டு விக்குகளின் விலைகளிலும் பெரிய வித்தியாசமில்லை. ரூ.1,500லிருந்து கிடைக்கிறது.
மேக்கப் கிட்
இதெல்லாம் தனித்தனியாக வேண்டாம், காஸ்ட்லியாகவும் வேண்டாம்… சீப் அண்ட் பெஸ்ட்டாக வேண்டும் என்று கேட்பவர்களுக்காக அடிப்படையான பொருட்கள் கொண்ட மேக்கப் கிட் இது. ரூ.600.
கண்ணாடி
ஓ.கே. மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டாகிவிட்டதா? இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே முதலில் ரசிக்க வேண்டாமா? அதற்குத்தான் இந்தக் கண்ணாடி. சினிமா வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்துகிற பொருட்களில் இதுவும் ஒன்று. ரூ.300 மட்டும்.
என்ன… மேக்கப்புக்கு ரெடியாகிட்டீங்களா..?
– ஞானதேசிகன்
பொருட்கள்: கிளாமர் சினி வேர்ல்ட், சாலிகிராமம், சென்னை
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்