ஒரு தோழி பல முகம்
அமுதவல்லி நாராயணன்
கணினிப் பொறியாளர் / இணைய எழுத்தாளர்
நான்:
ஒரு மனுஷியாக, தாயாக, தோழியாக என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருக்கிறேன். என் தாயை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். ஒரு தோழியாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்… பிறர் துன்பத்தில் உழலும் பொழுது இதுவும் கடந்து போகுமென தோள் கொடுக்கிறேன்.
பள்ளியும் ஆசிரியர்களும்:
1-5 மெட்ரிகுலேஷன் பள்ளி, 6-10 மாநகராட்சி பள்ளி, 11, 12 கான்வென்ட் என்று பள்ளி படிப்பு. மாநகராட்சி பள்ளி படிப்பு மறக்க இயலாதது. கணிதத்துடனும் அறிவியலுடனும் வாழ்க்கையை போதித்த கங்கா மிஸ், லக்ஷ்மி மிஸ், தமிழை நேசிக்கக் கற்றுத் தந்த கல்யாணி மிஸ் மறக்க இயலாதவர்கள். இங்கிருந்து கான்வென்ட் போனால் எப்படி இருக்கும்? பட பட என ஆங்கிலம் பேசுபவர்களுக்கு நடுவில் தத்து பித்தென்று ஆங்கிலம் பேசி, தாழ்வு மனப்பான்மையுடன் குறுகிய பொழுது அதை விரட்டிய நாகலக்ஷ்மி மிஸ் போன்றவர்களால்தான் இன்று நல்லதொரு நிலைமையில் இருக்கிறேன். மனம் விட்டுப் பேசி தோழமையுடன் பழகிய ஆசிரியர்கள் கிடைத்ததால்தான் ஆர்வத்துடன் படிக்க முடிந்தது. தமிழ் மிஸ், ‘காபி குடிப்பது நல்ல பழக்கம் அல்ல’ என்று சொன்னதால் காபி குடிப்பதையே விட்டுவிட்டேன்.
வசிக்கும் ஊர்:
வாழ்வின் பரிமாணங்களை ரசிக்கும், சகிக்கும் பக்குவம் தந்திருக்கிறது சென்னை. 375ம் வருடம் கொண்டாடும் சென்னை பல்வேறு பரிணாமங்களைத் தன்னுள் கொண்டது. தொன்மை மிக்க கோயில்களாகட்டும், ஹைஃபை ஹோட்டல் ஆகட்டும், சென்னை எல்லாவிதத்திலும் தனித்தன்மை வாய்ந்தது. மீட்டரே போடாத ஆட்டோ டிரைவர் இருக்கும் இதே சென்னையில்தான் ‘உனக்கு எது சந்தோஷமோ அதைக் கொடு’ என்று கூறும் ஆட்டோ டிரைவரையும் பார்க்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கேற்ப எத்தனை விதமான மனிதர்கள், தொழில்கள், சமூக ஆர்வலர்கள்… அக்கம் பக்கம் முகம் பார்க்க மாட்டார்கள் என்று கூறும் சென்னையில் அக்கம் பக்கத்தினரின் உதவியை நிறையவே பெற்றிருக்கிறேன். சிக்னலில் ஆம்புலன்ஸ் தவிப்பதும், நிமிடங்களில் மைல்களைக் கடந்து உயிர்காக்கப்படுவதும் இங்குதான். டர்டில் வாக், ட்ரீ வாக் என்று இயற்கையின் விந்தைகளை இங்குதான் அறிந்தேன். பரபரப்பும் பன்முகமும் கொண்ட ஊர்.
புத்தகங்கள்:
புத்தகங்கள் என்றால் உயிர். இதில் பிடித்தது என்று எதைச் சொல்ல? மனதில் பதிந்தவை ‘தி ரூட்ஸ்’ ஆங்கில நாவல், அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, பாலகுமாரனின் ‘உடையார்’, ராஜம் கிருஷ்ணனின் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்.’
குடும்பம்:
அன்பும் பொறுமையும் உடைய கணவர், கல்லாலும் மண்ணாலும் கட்டிய வீட்டை அன்பால் கலகலப்பாக்கி உயிர்ப்போடு வைத்திருக்கும் இரு தேவதைகள்.
இயற்கை:
கடல் எட்டும் தூரம்தான். துள்ளி வரும் அலைகளைக் கண்டாலே அலைபாயும் மனமெல்லாம் அடங்கிவிடும். சமீபத்தில் சென்னையில் ‘நிழல்’ ஆர்வலர்கள் மாணவர்களுக்கு என்று ஏற்பாடு செய்திருந்த ‘ட்ரீ வாக்’ நிகழ்வுக்குச் சென்றபோது இயற்கை பற்றிய மற்றொரு கருத்து கவர்ந்தது. ‘மரங்களின் பெயரோடு ஊருக்கு நம் முன்னோர்கள் பெயர் வைத்தனர். எனவே, பிற்காலத்தில் எந்நேரத்திலும் அப்பெயரைக் கொண்டு அம்மண்ணின் தன்மை, தாவரங்கள், பூச்சிகள், பிராணிகள் என்று மீண்டும் அதன் இயற்கைத் தன்மையை நிலை நாட்டலாம்’ என்றார். எ.கா. ‘புரசைவாக்கம்’, ‘பெரம்பூர்.’ அப்படி அல்லாமல் நாம் இடங்களுக்கு ஏதோ ஒரு பெயரை வைத்தால், இந்த விஷயத்தையும் இழக்கிறோம். இன்றைய சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் தேவையான அளவு இருப்பதற்குக் காரணம் தாவரங்கள். நன்கு விளைந்த இரண்டு மரங்களால் நான்கு உறுப்பினர் கொண்ட குடும்பத்துக்கு ஓராண்டுக்குத் தேவையான ஆக்ஸிஜனை கொடுக்க முடியும். 26,000 மைல் ஓடிய கார் வெளித் தள்ளும் கார்பனை ஒரு மரத்தால் ஒரே வருடத்தில் உறிஞ்சிக்கொள்ள முடியும். ஒரு மரத்தையாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளையாவது தொட்டியில் வளருங்கள். மரம் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை, குப்பை விழுகிறது என்று மரத்தை வெட்டச் சொல்லாதீர்கள்.
தண்ணீர் சிக்கனம் / பிளாஸ்டிக் பயன்பாடு:
‘இவ்வுலகை நாம் அடுத்த தலைமுறையினருக்காகக் கடன் வாங்கி இருக்கிறோம்’ – எங்கோ படித்தது. அப்படி என்றால் அதை பத்திரமாக நம் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டாமா? காசு, பணத்தைவிட முக்கியம் அல்லவா சுத்தமான காற்றும் நீரும்? நம் முன்னோர்கள் நமக்கு உணவு பயிரிட நிலத்தையும், பயன் தரும் நல்ல மரங்களையும், நல்ல நீர்நிலைகளையும் விட்டுச் சென்றார்கள். நாமும் நம் குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இயன்ற வரை தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வையும் ஊட்டுவோம்.
பிளாஸ்டிக் என்ற அரக்கன் மெல்ல மெல்ல நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி விட்டான். உடனே தூக்கி எறிய இயலாவிட்டாலும் மெல்ல மெல்ல விலக்குவது சாத்தியமே! கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பையை கொண்டு சென்று, பிளாஸ்டிக் சேர்க்கையைத் தவிர்க்க முதலடி எடுத்து வைப்போம். தானாக அதை ஒதுக்கும் நேரம் நம் சிறு முயற்சிகளால் வந்து சேரும்.
சமூக அக்கறை:
நாள்தோறும் பெருகி வரும் வன்முறை, பெண்கள் மீதான கொடுமைகள், குழந்தைகள் மீதான வரம்பு மீறல்கள்… பார்க்கும் பொழுது மனம் பதைக்கிறது. என்ன செய்ய முடியும் என்ற கேள்வி மனதைத் துளைக்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று எண்ணுகிறேன். அது போக சொல்ல எண்ணும் மற்றொரு விஷயம் ‘சமூகத்துக்கு திருப்பி தருதல்’. நம்மால் இயலும் அளவு ஏதேனும் உதவிகளை நாமாகவோ அல்லது சமூக ஆர்வலர்கள் வழியாகவோ செய்வது நிச்சயம் யாருக்கோ உதவும்தானே? என் தோழி சொல்வார்… ‘எல்லோரும் அவரவரால் இயன்ற அளவு உதவத்தான் செய்கிறார்கள்’ என்று. அதற்கு அவர் கூறிய உதாரணம், பூக்காரம்மா ஒருவர் சிறுமிக்கு பிய்த்துக் கொடுத்த பூ.
மனிதர்கள்:
ஒரே உடம்பில் இருக்கும் கை/கால் விரல்கள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. மனிதர்களிடமும் இதுபோல பல குணங்களைக் காணலாம். எல்லோரும் ஏதோ ஒரு பாதையைக் கடந்து வந்திருப்பார்கள், முட்களும் வேதனையும் அவரவர்க்குத் தெரியும். புன்னகை இல்லை என்பதால் மனிதமற்றுப் போவதில்லை. முகம் கண்டு மதிப்பிடக்கூடாது. ஒத்துப் போனால் பழகி மகிழலாம். இல்லையென்றாலும் தவறில்லை, புன்னகையுடன் விடைபெற்று தன் வழி செல்லலாம்.
பிறந்த ஊர் / சொந்தங்கள் / கற்றுக் கொண்டவை:
சிவகாசி சொந்த ஊர். தண்ணீர் சிக்கனத்தை இங்குதான் கற்றுக் கொண்டேன். காலையிலும் மாலையிலும் குழாயில் தண்ணீர் அடித்து, எங்கோ சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து என்று எல்லா அனுபவமும் உண்டு. சுறுசுறுப்பான வேலையாகட்டும், கோலாகலமான திருவிழா ஆகட்டும் எல்லாமே இங்கு கொண்டாட்டம்தான். என் சிறு வயதில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கட்டு (தீப்பெட்டி) ஒட்டியே தங்கள் குடும்பத்தைக் கரை ஏற்றியுள்ளனர். ஊருக்குச் செல்லும் நாட்கள் வெகு குறைவே. என்றாலும் எங்கே பார்த்தாலும் அழைத்து நலம் விசாரிக்கும் சொந்தங்கள் கண்டு மனம் பூரித்துவிடும். ஊருக்குச் சென்று வந்தாலே புத்துணர்வு வருவது இந்த சொந்தங்களால்தான். சோதனைகள் வந்தாலும் விடாமல் போராடும் குணத்தை இங்கு நிறைய பேரிடம் காண்கிறேன்.
சமையல்:
அம்மா சமைக்கும் பொழுது, ‘இன்னிக்கு திங்களா..? பருப்பு ரசம்’ என்று கிண்டல் அடிப்போம். இப்பொழுது என் குழந்தைகள் அதை செய்கிறார்கள். தினப்படி சமையல் சத்தாகவும் குழந்தைகளுக்குப் பிடித்ததாகவும் இருப்பதும் ஒரு சவால்தான். இன்று இணைய உதவியால் குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் எதையும் சமைக்க முடிகிறது. சமையல் சத்தானதா இல்லையா என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.
பிற…
கைவேலைகளில் ஈடுபாடு எனக்கு! புதிதாகக் கற்றுக் கொள்வதில் எப்பொழுதும் ஆர்வம் உண்டு. இதையெல்லாம் செய்ய முடிகிறதே என்கிற மகிழ்ச்சியை புதியன கற்றல் ஏற்படுத்திவிடும். என் பெண்ணிடம் சொல்வேன்… ‘நிறைய கற்றுக்கொள்! போர் அடிக்கும் பொழுது இவற்றை நீ ரசித்துச் செய்யலாம்’ என்று.
சிறு வயதில் அம்மாவிடம் கற்றுக் கொண்டது பூ கட்டுதல், கோலம், வயர்க் கூடை பின்னுதல், தையல், பாசி பொம்மைகள்… அம்மா புதிதாக்க் கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள நானும் கற்றுக் கொள்வேன். பின்னர் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர், சாக்ஸ், ஷால் பின்னுவதற்காக க்ரோஷா கற்றுக் கொண்டேன். இப்பொழுது குழந்தைகளுக்கு என்று ஏதேதோ கலைகள் கிட்களாக வருகின்றன. அவர்களுடன் சேர்ந்து ‘ஸ்கூபி டூ’, ‘லூம் பேண்ட்ஸ்’ என்று எதையாவது கற்றுக் கொள்கிறேன்.
வீட்டையும் அலுவலகத்தையும் சமாளித்தல்:
இரட்டை குதிரை சவாரி செய்ய நேர நிர்வாகம் மிக முக்கியமானது. வேலையின் முக்கியத்துவத்தைப் பொறுத்து கவனம் செலுத்துவது இன்றியமையாதது. வீட்டிலும் அலுவலகத்திலும் எதிர்பார்ப்புகளை சரியாக அமைத்து, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் வீட்டிலும் அலுவலகத்திலும் அவசியம். அது இருதரப்பிலும் நம்பிக்கையைப் பெற்றுத் தரும். எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் சிக்கல்களில் கலங்காமல் எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்தால், தீர்வு நிச்சயம் கிடைக்கும். வீடு, அலுவலகம் இரண்டையும் தெளிவாக சிந்தித்து இரண்டிலும் எதற்கு, எது முக்கியம், எந்த நேரம் முக்கியம் என்று வகுத்துக் கொண்டால்தான் இரண்டையும் சிறப்பாகக் கையாளலாம். என்னால் வீடு, வேலை இரண்டையும் சமாளிக்க முடிந்ததற்குக் காரணம் வீட்டின் பெரியவர்கள் மாற்றி மாற்றி தோள் கொடுத்ததால் மட்டுமே.
கடந்து வந்த பாதை:
முட்கள் நிறைந்த பாதையும் அல்ல, பூக்கள் தூவிய பாதையும் அல்ல. உண்மையில் நட்பு மற்றும் உறவுகளின் அன்பால்தான் அந்தப் பாதையைக் கடக்க முடிந்தது. இன்றும் நடக்க முடிகிறது. எங்கோ மாநகராட்சி பள்ளியில் படித்த நான் இன்று கணினி துறையில் சிறந்து இருக்க முடிவதற்கு முழுக் காரணம் கல்வி போதித்த ஆசிரியர்களும், அரவணைத்து சென்ற பெற்றோருமே. நான் சந்திக்கும் பலரும் இது போன்று எளிய நிலையில் இருந்து உயர்ந்தவர்களே!
உடலும் மனமும்:
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நல்ல வாழ்க்கைக்கு உடல் நலம், மன நலம் இரண்டுமே தேவை. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இரண்டுமே உடல் நலத்துக்கு நல்லது. பழங்கள், காய்கறிகள், சிறுதானிய வகை உணவுகள் இவற்றுக்கு என்றும் என் வீட்டில் இடம் உண்டு. பரபரப்பான வாழ்க்கையில் மன நலம் பேணுவது அவசியமானது. மனது இறுக்கமாகத் தோன்றினால் மனதுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட்டு மன இறுக்கத்தைக் குறைப்பது நல்லது. எனக்கு புத்தகமோ, மொட்டை மாடி வானமோ , குழந்தைகளுடனான பேச்சோ போதும்… மனதின் இறுக்கம் தளர்ந்து போகும்.
வருத்தம்:
சிறு வயதில் விளையாடிய விளையாடுகளும், பேச்சுகளும் இன்று குழந்தைகளுக்கு தொலைக்காட்சியிலும் வீடியோ கேம்ஸிலும் தொலைவது…
நான் எழுதியதில் எனக்குப் பிடித்தது:
மின்சாரமில்லா ஒருபொழுதில்…
மரங்களைத் தொலைத்துவிட்டு
சுவாசிக்க மட்டுமே காற்றுள்ள
இடமல்லாத ஓரிடத்தில்…
மின்சாரமில்லா ஒருபொழுதில்…
சுழன்று சுழன்று
வெளிக்காற்றைத் துரத்திய
மின்விசிறி நின்றது.
சன்னல்கள் திறந்ததால்
சுதந்திரமாக நுழைந்தன
காற்றும் வெளிச்சமும்…
சுட்டிகளைக் கட்டிபோட்ட
தொலைகாட்சியின் அமைதியில்
புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின.
வெகுநாளாகக் காத்திருந்த
பேச்சுகள் வீட்டுக்குள்
கலகலப்போடு கேட்டன.
அலமாரியில் தூங்கிய
புத்தகங்கள் எழுப்பப்பட்டு
வாசிக்கப்பட்டன.
அம்மி இருந்த வீட்டில்
கைமணத்துடன் அரைத்த
குழம்பின் வாசனை நுழைந்தது.
இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள்போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின.
இசை:
இசைக்கென்று நேரம் ஒதுக்குவது கிடையாது. என்றாலும் திடீரென்று காலையில் சுப்ரபாதமோ, கந்த சஷ்டி கவசமோ கேட்டால் ஒரு மகிழ்ச்சி. பழைய பாடல்களும் மெலடிகளும் சில வேளைகளில் கேட்பேன். திடீரெனெ பாரதியின் பாடல்கள்… அது போக பெரும்பாலும் பிள்ளைகளுக்குப் பிடிக்கும் பாடல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கும். சில வேளைகளில் மட்டுமே கவனிப்பேன்.
பிடித்த பெண்கள்:
அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தந்த அம்மா. சுறுசுறுப்பை அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன். அத்தையின் பொறுமை பிடிக்கும். போராட்டமே வாழ்வாக இருந்தாலும் தளராது உழைப்பதோடு அன்பால் அரவணைக்கும் வசந்தா அண்ணியைப் பிடிக்கும். வேலைக்கு செல்லும் காலத்தில் ஹாஸ்டலில் பெரும்பான்மையாகப் பார்த்தது 30-50 வயது வரை உள்ள தனித்துப் போராடிய பெண்கள். அவர்கள் இன்றும் மனதில் இருக்கின்றனர். வீட்டில் வேலை செய்யும் செல்வி அக்கா படிப்பறிவு அற்றவர்… 2 பையன்கள், ஒரு பெண்… பொறியியல் படிக்க வைத்துள்ளார். பதின்ம வயதிலேயே திருமணம் செய்யும் பெற்றோர் பற்றி நாம் காணும் செய்திகள் பல. ஆனால், இவர் தன் பெண்ணிடம் ‘நீ எவ்ளோ வேணா படி, உடம்புல தெம்பு இருக்கிறவரை நான் படிக்க வைக்கிறேன்’ என்று மேற்படிப்பு படிக்க வைத்தவர். சுட்டால்தான் பொன் சிவக்கும் என்பது போல், சோதனைகளின் பொழுதுதான் பெண்களின் உறுதி வெளிப்படுகிறது.
இது யதார்த்தம்…
குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். ‘அம்மா காலண்டர்ல தேதி தீர்ந்துட்டா உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்’ என்று ஒரே அழுகை. ‘வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய்…’ என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம்… திடீரென சற்றே யோசித்து, ‘செத்துப் போனால் மேலேயா போவோம்?’ என்றாள். ‘ஆமாம்’ என்றேன். ‘அங்கே டி.வி. இருக்குமா?’ என்றாள். ‘ம்’ என்றேன். ‘அப்ப சரி’ என்று சென்றுவிட்டாள். பாருங்கள் டி.வி. படுத்தும் பாட்டை!
அழகு:
அழகென்பது நல்ல மனம் மட்டுமே. மனம் உவந்து புன்னகைக்கும் எவருமே அழகு. உள்ளத்து அழகே எவர் மனதையும் தொட்டு புத்துணர்வு அளிக்கும்.
ஆசை:
சிறு வயதில் குழந்தைகளுக்கு வாங்கிய மென் பொம்மைகள் ஷோகேஸில் இருக்கின்றன. அவற்றை ஒரு தீமாக வைக்க வேண்டும் என்பது இன்று வரை நிறைவேறாத நெடுநாள் ஆசை.
வாழ்க்கை:
வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல… பிறர் வாழ்வதற்கும். வாழ்க்கையை அதன் போக்கிலேதான் வாழ்ந்திருக்கிறேன். பெரிதாக எதையும் தேடிச் சென்றதில்லை. ஆனால், வந்த வாய்ப்புகளை இயன்ற வரை பயன்படுத்தி உள்ளேன். ‘செய்வதைத் திருந்தச் செய்!’ என்பது அப்பா கற்றுத் தந்த பாடம். ‘எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் லேசாக எடுத்துக்கொள்! மனம் நிம்மதியாக இருக்கும்’ என்பது கணவர் சொல்லித் தந்த பாடம். முடிந்தவரை மனதை லேசாக வைத்துக்கொண்டால்தான் எந்த சிக்கலுக்கும் தடுமாறாமல் யோசிக்க இயலும்.
படிக்க…
Image courtesy:
http://learningenglish.voanews.com
http://louandliz.wordpress.com/
http://salimss.files.wordpress.com/
http://chennaifocus.files.wordpress.com/
http://deepavali.priscilliaseelan.com/
Super amutha. Super thozhi. Sorry for the late response