ஒரு தோழி பல முகம்
ஃப்ரீலான்சர் மாடல்
நான்
வித்யா… நெருங்கியவர்களுக்கு ‘விதூ’. பேச்சு வெல்லக் கட்டி… வேலைல சமத்துக் குட்டி… மனசு பாலாடைக் கட்டி. எதைச் செய்தாலும் அதுல ஒரு ‘வித்யா’சம் காண்பிக்கணும், நேர்த்தியா முடிக்கணும் என்ற முனைப்பு ரொம்பவே உண்டு. ‘லைஃப் இஸ் ஷார்ட், மேக் இட் ஸ்வீட்’ என்பது என் ஃபேவரைட் கோட். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றும் எதையும் செய்யும் பேராவல் கொண்டவள்.
வசிப்பது
அவனவன் வெயிலில் புழுங்கி தவிக்கும்போது, மெனக்கெட்டு எஸ்.டி.டி. கால் போட்டு, ‘கார்த்தால 8 மணிக்கி கூட என்னா குளிரு. .. போர்வையை விட்டு வெளியே வரவே மூட் இல்லை போ’ என்று பீற்றிக் கொள்ளும் அற்புதப் பருவநிலை கொண்டபெங்களூரு. கன்னட மக்களின் ‘ஏந்ரீ சென்னாகிதீரா’ என்ற ஒரு விசாரிப்பு போதும்… உங்கள் முகத்தில் ஓர் உடனடி புன்னகையை வருவிக்க. பெங்களூரின் எவர் கிரீன் ஸ்பெஷல்: ராகி முத்தே (கேப்பையில் செய்த உணவு), சிரோட்டி, அக்கி ரொட்டி போன்ற சத்தான மற்றும் சுவையான உணவு வகைகள் , எப்போதும் மேனியைத் தாலாட்டும் இதமான தென்றல் காற்று, வருடம் முழுவதும் கிடைக்கும் வண்ணமயமான ரோஜாப் பூக்கள்… சான்ஸே இல்லை… நம்ம பெங்களூரு ராக்ஸ் .
படிப்பு
கடைசி பெஞ்ச்ல உக்காந்து கொண்டு, ‘நாங்கள்லாம் நினைச்சா ஃபர்ஸ்ட் பெஞ்ச்சுக்கு ஈஸியா வரலாம். ஆனால், நீங்கள் எல்லாம் நினைச்சால் கூட இங்க வர முடியாது’ என்று உதார் விட்டே, முதல் வரிசை மாணவிகளை கலாய்க்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தி. எப்படியோ பள்ளி இறுதி தாண்டினேன். டிகிரி, வணிக மேலாண்மை இளங்கலை – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்வியில். பயிற்சி வகுப்பு திருச்சியில் . பாதி நாட்கள் வகுப்பை கட் அடித்து விட்டு தோழியுடன் முக்கொம்பு, ஸ்ரீரங்கம் , சின்னக் கடைத் தெரு என்று சுற்றியதே அதிகம். பின்ன, இப்போ சுத்தாம வேற எப்போ சுத்தி பார்ப்பதாம்? வாழ்க்கை வாழ்வதற்கே!! நான் அரியர் இல்லாமல் டிகிரி பாஸ் செய்தது 8வது அதிசயம். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்வியில் மார்க்கெட்டிங் முதுநிலை பட்டம்… கணவரின் சப்போர்ட் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.
குடும்பம்
என்னவர் என்னை கரம் பிடித்த தருணம், அனைத்து தேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. 12 வருட மண வாழ்க்கை. நாளுக்கு நாள் இறுகும் பந்தம். பெருகும் காதல். கண் நிறைந்த கணவர். (அட நிஜமாத்தான்பா… எங்க ஆளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள்) ‘ போண்டா கண்ணா’ என்று ரொமான்ட்டிக்காகவும், சில நேரத்தில் கோவத்திலும் வம்பு இழுப்பது என் வாடிக்கை. கண்ணின் கரு மணியாய் 2 குழந்தைகள். பெரியவன் விஷ்வா. சின்னவன் விமர்ஷ். கவிதையாக ஒரு குடும்பம். ‘ஹேப்பிலி மேரிட்’ என்ற சொற்றொடர் எனக்காகவே உருவானதோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.
பொழுதுபோக்கு
கோலம், சமையல், புத்தகம், முகநூல், ஏரோபிக்ஸ், நண்பர்களுடன் அவுட்டிங். ஒன்றா இரண்டா… என் பொழுதுபோக்கு லிஸ்ட் ரொம்ப பெரிசு. எனினும் நான் நாள் தவறாமல் கடைப்பிடிக்கும் சில…
கோலம்: பொழுது புலராத அதிகாலையில் கணக்காக புள்ளி வைத்து, பாங்காக இழைகளை இணைத்து பொருத்தமாக நிறங்களை நிரப்பி, கோலத்தை முடித்து தூரத்தில் நின்று ஒரு முறை நான் போட்ட கோலத்தை ரசிக்கையில் மனதில் பூக்கும் அந்த சந்தோஷம்… அழகிய உணர்வு அது.
ஏரோபிக்ஸ்: இது என் பேரார்வத்தில் ஒன்று. சீரான தாள கதியில் நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி. அழகிய உடல் – உயர்ந்த உள்ளம் இவை இரண்டுமே ஆரோக்கிய வாழ்க்கையின் அடித்தளம் என்று நினைப்பவள் நான். 4 வருடமாகச் செய்யும் ஏரோபிக்ஸ் என் உடலை கட்டு கோப்பாக, அளவாக, அழகாக வைத்திருக்க உதவுகிறது. ஹை பிட்ச் மியூஸிக், உயர்த்தி போட்ட போனி, கால்களில் ஷூ , தாளம் தவறாத சீரான ஆட்டம்… என் ஹெவன்லி தருணங்களில் ஏரோபிக்ஸ் முக்கியமானது.
சமையல்: ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு… ‘Way to win a Man’s heart is through his stomach’ அதாவது ஒருவரின் மனதை வெல்ல, அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைச்சு போட்டு, வயிற்றை நிரப்புனு அர்த்தம். நன்றாக சமைக்க தெரியும் என்பது பெருமைக்குரிய விஷயமே! அது ஆண் ஆனாலும் சரி… பெண் ஆனாலும் சரி.
திருமணமான புதிதில் எனக்கு எதுவும் சமைக்க தெரியாது. ஜஸ்ட் ஜீரோ. முதல் 6-7 மாசத்துக்கு தடுக்கி விழுந்தா எங்க வீட்டுல நூடுல்ஸ் மேலத்தான் விழணும். இல்லை ஒரு சாதம் வடிப்பேன். அவ்ளோதான். (ஆனாலும் எங்க வீட்டுக்காரர் ரொம்ப பொறுமைசாலிப்பா). பிறகு கொஞ்சம் கொஞ்சமா என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். புத்தகங்கள், டி.வி. ஷோ மூலம் புதிதாக கற்றுக் கொண்டதை வைத்து நானே எக்ஸ்ட்ராவாக சில விஷயங்களை கூட்டி குறைத்துப் போட்டு வித்யாசமாக சுவையாக செய்து பார்ப்பேன். இப்போதெல்லாம் சமையல் சம்பந்தமான வலைப் பூ பார்த்து புதுப் புது ரெசிபி சமைக்கிறேன். நாங்களும் அப்கிரேட் ஆயிட்டோம்ல!
இன்று ‘சரவண பவன் கூட நீ செய்யும் வெண் பொங்கல் முன்னாடி தோத்து போயிடும்’ என்று கணவர் சொல்லும்போதும், ‘கடையை விட நீ வீட்டுல செய்யுற ஃபுல்காதான்மா பெஸ்ட்’ என்று பையன் சொல்லும்போதும், குக்கரி குவீன் விருது பெற்ற பெருமைதான் போங்க!
என்னை கவர்ந்த பெண்கள்:
அம்மா: எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையிலும் தன்னை பற்றி சிறிதும் நினைக்காது எங்கள் நால்வரையும் மிக நல்ல முறையில் வளர்த்து வாழ்க்கை அமைத்து தந்த எங்கள் அம்மா. உடல் நலமில்லாத தந்தையை இன்முகத்துடன் அயராமல் பார்த்து பார்த்து அவர் தேவைகளை நிறைவேற்றியவர். என் பெரிய அக்கா (இப்போது தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் ) +2 எழுதும்போது, என் அம்மாவும்அவளோடு சேர்ந்து பள்ளி இறுதி எழுதி பாஸ் செய்தார். சிறந்த தையல் ஆசிரியையாக தனக்கென ஒரு கேரியரை அமைத்துகொண்டார். எவ்வளவோ பெண்களை அரசு தேர்வுக்கு அனுப்பி வேலை கிடைக்க காரணமாகி இருந்திருக்கிறார், இந்த உதாரண மனுஷி.
அன்னை தெரெஸா: அல்பேனியாவில் பிறந்தவர். ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ என்று இந்தியாவில் ஓர் அமைப்பை நிறுவி, இங்குள்ள ஏழை எளிய மற்றும் நோய் வாய்ப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு என தன்னை அர்ப்ணித்து கொண்ட தாயுள்ளம். அவரின் பொன் மொழிகளில் எனக்கு பிடித்தது மற்றும் நான் கடைப்பிடிப்பது ‘கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவிடும் கைகள் உயர்ந்தவை.’
முகநூல் அலப்பறை
‘எனக்கு முகநூல் ஐடி இல்லை’ என்று யாராவது சொன்னால், நிச்சயம் அவரை வேற்றுக் கிரகவாசி போல பார்க்கும் காலம் இது. முகநூலை நாம் எந்த அளவு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. நான் ஏதோ இருக்கட்டும் என்று ஆரம்பித்த முகநூல், இன்று என்னுடைய முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று. நண்பர்களோ, உறவினர்களோ உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை விரல் நுனியின் அருகில் சேர்த்து வைக்கும், உறவுப் பாலத்தை உறுதி ஆக்கும் முக நூலுக்கு ஒரு ஜே! நம்முடைய சந்தோஷ தருணங்களை புகைப்படங்களாக முகநூலில் பகிர்வது, மனதில் தோன்றும் எண்ணக் குவியல்களை பதிவிடும் சுதந்திரம், ஒத்த எண்ணங்களுடைய நண்பர்களின் கமென்ட்ஸ் மற்றும் ஜாலி கலாய்ப்புகள், நெடுநாள் தொடர்பு அற்றுப் போன பால்ய தோழியின் திடீர் சர்ப்ரைஸ் மெஸேஜ் இவை எல்லாம் முக நூலில் கிடைக்கும் சந்தோஷங்கள்.
நேர நிர்வாகம்
என்னுடைய நாள் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும். கோலம், உடற்பயிற்சி வகுப்பு, சமையல், லஞ்ச் பேக், குழந்தையை கிளப்பி காப்பகத்தில் விட்டு விட்டு பிறகு ஆபீஸ் போவது என்று 9:30 மணி வரை சுற்றி சுழன்று வேலையை முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும்.
காலை வேளை அவசர டென்ஷன் தவிர்க்க முதல் நாள் இரவே சில விஷயங்களை ஒரு ரஃப் ப்ளான் போட்டு விடுவேன்.
அழகு மயக்கம்
‘அழகென்பது பார்ப்பவர் கண்களை (மனசை) பொறுத்தது’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. (Beauty is in the eyes of beholder). இயற்கையின் படைப்பில் எல்லாமே அழகுதான். விடியல் சூரியன், குழந்தையின் மழலை, யானைக்குட்டி, இளம் தளிரின் பசுமை, தீப ஆராதனையில் ஜொலிக்கும் இறைவனின் முகம், பால்கனியில் இருந்து பார்க்கும்போது சற்று தூரத்தில் அந்தரத்தில் போவது போல தோற்றம் அளிக்கும் மெட்ரோ ரயில், நெருக்கமாக கட்டப்பட்ட ரோஜாச் செண்டு – நான் ரசிக்கும் ஒவ்வொரு விஷயமும் அழகு.
ஜாதி மல்லி மணம், வைரமுத்து கவிதை, சுதா ரகுநாதனின் குரலில் ‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…’, என் குட்டிக் குழந்தையின் ‘வித்தாம்மா’ என்ற அழைப்பு – இவை எல்லாமே என் மயக்கக் காரணிகள்.
புத்தகங்கள்
நம்பொழுதுகளை உயிர்ப்புடன் ஆக்க வல்லவை… நம்மை யாரென நமக்கு உணர்த்தும் கையடக்க போதி மரங்கள். சுஜாதா, கல்கி, சேத்தன் பகத் , கண்ணதாசன், கோபிநாத், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மசாரியார், தபூ ஷங்கர் என எல்லா தரப்பு எழுத்துகளும் என் லைப்ரரியில் உண்டு. எனினும் எழுத்து சித்தர் பாலகுமாரனின் படைப்புகளுக்கு நான் தீவிர ரசிகை. என் புத்தக அலமாரியில் அதிகம் இருப்பதும் அவர் படைப்புகளே. மனித மனத்தில் தோன்றும் உணர்வுகளின் பரிமாணங்களை புட்டு புட்டு வைக்கும் வலிமையான எழுத்துகளின் சொந்தக்காரர் அவர். பாலகுமாரன் படைப்புகளில் மிகவும் பிடித்தவை… ‘புருஷ வதம்’, ‘என் கண்மணி தாமரை’, ‘அப்பம் வடை தயிர் சாதம்’, ‘இதய கோவில்’, ‘தங்கக்கை’. ‘உடையார்’ எழுதியது அவரது வாழ்நாள் சாதனை எனில் அது படிக்கக் கிடைத்தது நாம் பெற்ற வாழ்நாள் பேறு.
குட்டி குட்டி சந்தோஷங்கள்
- பால்கனி தோட்டத்தில் மலரும் அடுக்கு மல்லி.
- அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாகி சோர்வாக வீட்டுக்கு வரும்போது, கணவரின் கை வண்ணத்தில் தயாராகி சூடாக டேபிளில் காத்திருக்கும் டிபன்.
- நான் சொல்லாமலே தானாகவே வீட்டுப் பாடம் செய்யும் என் மகன்
- எதிர்பாராத வேளையில் கிடைக்கும் மாமியாரின் பாராட்டு (ஹி ஹி… இது கொஞ்சம் இல்லை ரொம்பவே ரேர் தான்! ).
- திடீரென ஒரு மூடு வந்து மாற்றிக்கொள்ளும் புது ஹேர் ஸ்டைல், என் முகத்துக்கு கச்சிதமாக அமைந்து போவது…
- அவ்வப்போது கிறுக்குத்தனமான போஸ்களில் நான் எடுக்கும் ஸெல்ஃபி.
படிக்க…
Image courtesy:
http://www.bangalorecaterers.com