சாத்திரங்கள் சொல்வாரடி…

_70484707_haleemabegumwifeofmushtaqahbhat_001(4)

ஜோடிப் பாம்புகள் போல் சடங்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்வோடு பிணைந்தே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமான சடங்குகளை தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. எனக்கு இது வேண்டாம் என ஒதுங்கிக்கொள்ள அசாத்திய துணிச்சல் தேவைப்படுகிறது. அது சடங்கோ, சம்பிரதாயமோ சந்தோஷமாக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் நஷ்டமில்லை. ஆனால், மன உளைச்சல் தரும் சடங்குகளை காலத்துக்கும் சபித்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அது, அவரின் இறுதி நிகழ்வுதானே ஒழிய அவரின் மனைவியின் இறுதி நிகழ்வல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

ஒரு வருட காலமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட கணவரோடு சேர்ந்து போராடியேபடி இருந்தவர்… அந்த மனிதர் நோயோடு போராடிக்கொண்டிருந்தார் என்றால் இவர் வாழ்வியலோடு! கணவரின் வருமானம் நின்றுவிட்ட நிலையில் மகனின் தயவோடு கணவரின் ஹாஸ்பிட்டல் செலவை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. இரவும் பகலும் வலியோடு அவஸ்தைப்படும் கணவனின் துயரத்தை துடைப்பதோடு, அவரது மலஜலத்தையும் துடைக்க வேண்டிய நிலை. 50 வயதுக்குள் அத்தனை வேதனைகளையும் அனுபவித்துவிட்டார் அந்தப் பெண். மருத்துவமனை, மருத்துவமனையாக அலைச்சல், மருந்து, மாத்திரை, வந்து பார்க்கிறவர்களின் கேள்விகளுக்கு பதில் என அந்த வருடத்தில் கணவரோடு சேர்ந்து இவரும் வற்றிப் போயிருந்தார்.

கடைசி இரண்டு மூன்று இரவுகள் இவர் கண்ணுறங்கவில்லை. உண்மையில் கணவர் இறுதி மூச்சை விட்டபோதுதான் இவருக்கு கொஞ்சம் ஆசுவாசமே!

கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் அவர் முகம் பார்த்தபடி  நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தார் அந்தப் பெண். காலையில் இருந்து உட்கர்ந்து உட்கார்ந்து கால்கள் வலிக்க, சற்று கீழே இறங்கி உட்காரப் போனவரை தடுத்து நிறுத்தினார் ஓர் உறவுக்காரப் பெண். “சொந்தக்காரங்க வர்ற நேரம்… இங்கேயே உட்காருங்க” என்றார். காபித்தண்ணிக்கூட குடிக்காமல் காலையில் இருந்து கால் வலிக்க வலிக்க உட்காந்திருந்தவரை  வருகிறவர்களின் ஆறுதல் சுமை வேறு அழுத்தியது.

அது முடிந்ததும் ஆரம்பித்தது அடுத்த பிரச்னை. இறந்து போனவரைக் குளிப்பாட்டும் போது அந்தத் தண்ணீர், மனைவியின் மீது விழ வேண்டும் என்பது சம்பிரதாயமாம். இதற்கு பெண் குடும்பத்தார் மறுப்புத் தெரிவித்தனர். “அவர் கேன்சருக்கு ஆளானவர். அதனால் தலையை மட்டும் கசக்கிவிட்டு சும்மா கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க. கிருமி எதாவது பாதிச்சிடப் போகுது அதுக்கும் சின்ன வயசுதானே! அதுவும் வாழ வேண்டி இருக்குல்ல?” என்றார் அந்த பெண்ணின் அண்ணி.

“அதெப்படி? இதுதான் முக்கியமான சம்பிரதாயம்” என்பது சம்பந்தி வீட்டாரின் வாதம். நீண்டு கொண்டே இருந்த வாதத்தில் வெற்றி பெற்றவர்கள் சம்பந்தம் பண்ணியவர்கள்தான்.

கேன்சர் தொற்று நோயல்ல என்றாலும் பல காலமாக  குளிக்காமல், படுக்கையில் இயற்கை உபாதைகளை வெளியேற்றியவர் என்ற அருவெறுப்போ, அவர் அனுபவித்த துன்பத்தை தன் மகளும் அனுபவிக்க வேண்டாம் என்ற பயமோ அவர்களை அப்படி வாதாட வைத்தது. அப்படி குளிப்பாட்டும் வேளையில் அந்தப் பெண்ணின் மனதில் என்னவெல்லாம் தோன்றி இருக்கும். அந்த மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

இந்த மாதிரியான எத்தனையோ சம்பிரதாயங்களுக்கு பெண்கள் உட்படுத்தப்படுத்தப்படுகிறார்கள். இதைப் பெண்களும் ஒத்துக்கொள்கிறார்க்ள். ஆனால், இப்படி விதிவிலக்கான சில சம்பவங்களின் போதாவது அவர்களின் உணர்வுகளுக்கு அந்த சம்பந்தி வீட்டார் மதிப்புக் கொடுத்திருக்கலாம்தானே. இப்படி ஒன்று இரண்டல்ல…

து ஒரு நள்ளிரவு. முக்காடிடப்பட்டு, குத்தியக் கண்ணாடி வளையல்களால் கைகளில் ரத்தப்பூ பூக்க, விசும்பலோடு உட்கார்ந்திருந்தார் என் பெரியம்மா. என் பெரியப்பா இறந்ததற்கான நடப்புச் சடங்கு அது. சுற்றியிருந்த பெண்கள் என் பெரியம்மாவின் தாலியை அறுத்து, பாலில் எறிந்த அந்த நொடியில் என் பெரியம்மாவின் “ஓ”வென்ற அலறல் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது. அது கொடுத்த மனவலி என் பெரியப்பா இறந்த போதிருந்த துக்கத்தைவிட அதிகமாக இருந்தது எனக்கு.

எப்பேர்பட்ட மனிதர்களின் இறப்பிற்கு பின்னும் இயல்பாகத்தான் சுழன்று கொண்டிருக்கிறது பூமி.  நகமும் சதையுமாக வாழ்ந்தவர்களின் இழப்பு, வலி கொடுக்கக்கூடியதுதான். அதை விட சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அவமானங்கள், மனவலிகள்தான் அதைவிட மோசமானவை.

இன்று, பல பெண்கள் கணவரை இழந்த பிறகும் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டாலும் கட்டாயம் அந்தச் சடங்கை தாண்டித்தான் வந்திருப்பார்கள். அவர்களைக் கேட்டால் புரியும் அந்த வலி. இது மாதிரியான எந்தவித சம்பிரதாயமும் ஆண்களுக்கு இல்லை. தன் மனைவி இறந்து கிடக்கும்போது வெளியே தன் துன்பத்தை மனதினுள் அலசி ஆராய்ந்தபடி உட்கார்ந்திருப்பார்கள் ஆண்கள். தன் துயரக் குளத்தில் தானே முங்கி எழும் இடைவெளி அந்தச் சமயத்தில் பெண்களுக்குக் கிடைக்காது.

இதில் சொல்ல முடியாத ஓர் அவஸ்தை என்னவென்றால் இந்த மாதிரியான சம்பிரதாயங்களுக்கு செயலாளர், பொறுப்பாளர் எல்லாமே பெண்கள்தான். இது மாதிரியான ஒரு சடங்கு என் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த போது அதை எதிர்த்தவர் அந்த அம்மாவின் மகள் அல்ல… அந்த வீட்டின் ஆண்… அதாவது அவரது மகன்.

இறுக்கமான முகத்தோடு தன் வீட்டு பெண்களிடம் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தார் அந்த அண்ணன். இறுதியில் பூவை பிய்த்தெறியாமல், கண்ணாடி வளையலை உடைக்காமல், வெறும் தாலி கழட்டும் சம்பவத்தை மட்டும் செய்தார்கள் அந்தப் பெண்கள். சிலரைத் தவிர பல பெண்களின் முகத்தில் அன்று ஏதோ ஒரு நிம்மதியைப் பார்க்க முடிந்த்து. அதில் பரவியிருந்த வெளிச்சம் அங்கிருந்த இருட்டைக் கிழிப்பது போல் இருந்தது. மகள் இதே விஷயத்தை வற்புறுத்தியிருந்தாலும் அவர் சொல் எடுபட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆணின் சொல்லுக்கு கட்டுப்படும் மனப்பான்மையோடு வளர்ந்த சமூகம் அல்லவா இது. பெரும்பாலும் இத்தகைய விஷயங்களை எதிர்த்து நிற்பது ஆண்கள்தான் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. ஊரையே பகைத்துக் கொண்டு, தன் வீட்டு கிரகப்பிரவேசத்தை தன் விதவைத் தாயை முன்னிறுத்தி நடத்திய அந்த உறவினரின் மேல் விழுந்த மதிப்பின் நிழல் என்றென்றும் மறக்கவியலாததது.

இது போல் ஒவ்வொரு வீட்டு ஆணும் இதற்காக எடுக்கும் சிறு சிறு முயற்சிகள், வெள்ளமாக இந்த சடங்குகளை அழித்துச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

– ஸ்ரீதேவி மோகன்

Woman-crying

Image courtesy:

http://news.bbcimg.co.uk/media/images

http://mybrowneggs.files.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s