எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி!

Rajam

தமிழில் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்… சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்… நாவலைக் கூட கள ஆய்வு செய்து எழுதியவர்… வாழ்நாள் முழுக்க பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்… விளிம்புநிலை மக்களோடு வாழ்ந்து அவர்கள் பிரச்னைகளை அவர்களின் குரலாகவே எழுத்தில் பிரதிபலித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். உடல் நலக் குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அக்டோபர் 20ம் தேதி இரவு காலமானார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி அவருக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அது தொடர்பான கட்டுரை மார்ச் 1-15, 2014 ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானது. அதை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.

***

வேருக்கு நீர்!

ராஜம் கிருஷ்ணனுக்கு 90 வயது. நடமாட்டமில்லை. படுக்கையிலேயே வாசம். தலையை மட்டுமே அசைக்க முடிகிறது. அந்த நிலையில் இருப்பவரை ஸ்ட்ரெச்சரிலேயே வைத்து மேடைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள் பேராசிரியர் கே.பாரதி, கல்பனா, கே.எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட நண்பர்கள். கூடவே அவரை பராமரித்து வரும் சென்னை, ராமசந்திரா மருத்துவமனை மருத்துவர், ஊழியர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

IMG_1314

ராஜம் கிருஷ்ணனுக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் கிருஷ்ணன் இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் நண்பர்களும் சில எழுத்தாளர்களும் அவரை விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு, கடந்த 5 வருடங்களாக அவரைப் பராமரித்து வருகிறது ராமசந்திரா மருத்துவமனை.

இந்த நிகழ்ச்சியில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் இருந்து ஒரு பகுதியை சில பெண்கள் வாசித்துக் காட்டினார்கள். ‘மணலூர் மணியம்மாள்’ குறித்த இந்த நாவலின் சில பகுதிகளைப் படிக்கும் போது அரங்கில் கரவொலி! அதைக் கேட்டு, புரிந்தும் புரியாமலும் தேம்பித் தேம்பி அழுதார் ராஜம் கிருஷ்ணன்.

விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான கே.பாரதி அறிமுக உரையில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘ராஜம் கிருஷ்ணனை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வரவே எங்களுக்கு தைரியமில்லை. ராமசந்திரா மருத்துவமனை உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் அழைத்து வந்தோம். அவரை மேடை ஏற்றவும் ஒரு காரணம் உண்டு. அவரை தோல்வி அடைந்த ஒரு மனுஷியாக சில ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. அவர் ஒரு வெற்றி பெற்ற மனுஷி, சாதனையாளர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதற்காகவே மேடைக்கு அழைத்து வந்தோம். மிக சுத்தமான சூழலில், சத்தான உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமனை ஊழியர்களையும் பாராட்ட நினைத்தோம். அதனால்தான் இந்த விழாவை ஏற்பாடு செய்தோம்’’.

IMG_1302

பேராசிரியர் வசந்திதேவி, 1982ல் ராஜம் கிருஷ்ணன் அறிமுகமான காலத்திலிருந்து இருவருக்கும் இடையில் தொடர்ந்த நட்பு அனுபவங்களை நினைவு கூர்ந்தார். ‘‘அப்போது நான் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். என் துறை மாணவிகள் ஒரு கண்காட்சி வைத்திருந்தார்கள். ‘வரலாற்றுப் பார்வையில் பெண்ணின் நிலை’ என்பதுதான் கண்காட்சியின் உள்ளடக்கம். மார்ச் 8, பெண்கள் தினத்தன்று தொடங்க இருந்தது. அதைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று யோசித்தோம். ராஜம் கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். ஒருபுறம் தயக்கமாக இருந்தது. அது ஒரு சிறிய விழா. ஒரு துறை சம்பந்தப்பட்ட சிறிய நிகழ்வு. அதற்கு அவர் வருவாரா என்பது சந்தேகம்… ஆனால், விஷயத்தைச் சொன்னதுமே வர ஒப்புக் கொண்டார். அவரை அழைக்க ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன். மலர்ந்த முகம், துறுதுறுப்பு, கம்பீரம்… பார்த்ததுமே அவர் பால் அன்பும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. காரில் ஏறியவர், நிறுத்தாமல் பேசித் தள்ளிவிட்டார். பெண் நிலை, எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் என்று பேச்சு எங்கெங்கோ போனது. வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் அம்மாவை அறிமுகப்படுத்தினேன். அம்மா, மதம் மாறித் திருமணம் செய்தவர் என்று கேள்விப்பட்டதுமே அவர் முகம் பரவசப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய புரட்சி. கண்காட்சியில் ஏங்கெல்ஸ் தியரி, 8 மணி நேர வேலைக்கான போராட்டம் உட்பட பல அரிய வரலாற்றுத் தகவல்களை விளக்கங்களும் படங்களுமாக வைத்திருந்தோம். அவர் ஒவ்வொன்றாக உன்னிப்பாகப் பார்த்தார். மாணவிகளிடம் குழந்தை போன்ற ஆர்வத்துடன் சந்தேகங்கள் கேட்டார். அவருக்காக நாங்கள் நிகழ்ச்சி நேரத்தையே மாற்ற வேண்டி வந்தது. காலை பத்தரை மணிக்கு நடக்க இருந்த நிகழ்ச்சியை மதியம் 2:30க்கு மாற்றினோம். பேசும் போது, ‘இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அதே கண்காட்சியை சென்னையில் வைத்திருந்தோம். அங்கே எங்களுக்கு சிறிய இடம்தான் கொடுத்திருந்தார்கள். முழுமையாக எல்லாவற்றையும் வைக்க முடியவில்லை. அங்கும் வந்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். முழுவதுமாக இல்லையே என்று வருத்தப்பட்டார், கோபப்பட்டார். நான் பணி செய்த எல்லா இடங்களுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பாதி நாளாவது பேசாமல் வந்தது கிடையாது. என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை’’.

‘‘வாழும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு நாம் செய்கிற மரியாதை’’ என்று பாராட்டினார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தே.முத்து.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன், ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ராஜம் கிருஷ்ணனின் ‘காலம்தோறும் பெண்மை’, ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’ உள்ளிட்ட பல படைப்புகளை முன் வைத்துப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜம் கிருஷ்ணன் குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்… ‘‘அவரை மருத்துவமனையில் போய் இருமுறை பார்த்தேன். அவருக்கு நினைவு மறந்துவிட்டது. ஆளை உற்றுப் பார்த்து புரிந்து கொள்கிறார். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தைரியமும் வீரமும் கொண்டவர். கொடுமைகளைக் கண்டால் தட்டிக் கேட்கும் மன உறுதி படைத்தவர். ஏழை, உழைக்கும் மக்களின் மேல் அக்கறை கொண்டவர். பெண்களிடம் புரட்சிகரமான மாற்றம் வர வேண்டும் என்று பாடுபட்டார். தன் படைப்புக்காக அவர் கள ஆய்வு செய்வதை நான் நேரில் பார்த்தவன். தன்மானம் மிக்க ஒரு பெண்மணி. மரியாதைக் குறைவு ஏற்பட்டால் அவருக்குக் கோபம் வரும். அவர் எழுதிய ‘அலைவாய்க்கரையில்’தான் மீனவர்களைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்’’.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் ராஜம் கிருஷ்ணனின் கேவலும் அழுகையும் காதில் ஒலித்தபடியே இருந்தன.

***

ராஜம் கிருஷ்ணனை பல வருடங்களாக நன்கு அறிந்தவர் கவிஞர் க்ருஷாங்கினி. விஸ்ராந்தியில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து ராமசந்திராவுக்கு இடம் பெயர்ந்த பிறகும் தொடர்ந்து அவரைப் போய் பார்த்து வருபவர். அவர் சொல்கிறார்… ‘‘ஆண் எழுத்தாளர்கள் வீட்டுக்கு யாராவது போனா அவருடைய மனைவியோ, மகளோ வந்தவங்களை உபசரிப்பாங்க. பெண் எழுத்தாளர் வீட்டுக்குப் போனா அந்த எழுத்தாளரேதான் எல்லாத்தையும் செய்ய வேண்டி இருக்கும். ராஜம் கிருஷ்ணன் வீட்டுக்கு யார் போனாலும் வந்தவங்களுக்குப் பிடிச்சதா பார்த்து பார்த்து சமைச்சுப் போடுவாங்க. ‘மணல்வீடு’ இதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் இன்னிக்கும் அவங்க கையால சாப்பிட்ட ரசத்தை புகழ்ந்து சொல்வார். தாம்பரத்தில் இருந்த போது, ராஜம் கிருஷ்ணன் வீட்டைச் சுத்தி மரம் வளர்த்தாங்க. ஒவ்வொரு மரத்துலயும் என்ன காய்க்கும், ருசி எப்படி, எங்கேருந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு எல்லாத்தையும் விரிவா சொல்வாங்க. அப்படிப்பட்ட வீட்டை விக்கற நிலைமை வந்தது. அவங்ககிட்ட முனியம்மாள்னு ஒருத்தங்க வேலை பார்த்தாங்க. வீட்டை வித்த பணம் வந்ததும் ராஜம் கிருஷ்ணன் அந்தப் பெண்மணியைக் கூப்பிட்டாங்க. ‘என்கிட்ட 20 வருசத்துக்கும் மேல வேலை பார்த்துட்டே. உனக்குன்னு ஒரு வீடு வேணாமா?’ன்னு சொல்லி சில லட்சங்கள் செலவழிச்சு ஒரு வீடே வாங்கிக் குடுத்துட்டாங்க. இந்த மனசு யாருக்கு வரும்?’’

பாலு சத்யா

படங்கள்: சதீஷ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s