அவர்கள் 2 பேருக்கும் 40 வயது. இருவரும் திறமைசாலிகள். அன்பானவர்கள். இன்றும் குடும்பத்தைக் காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்…சில இழப்புகளோடு.
அதில் ஒருவர் சிறுவயதில் துறுதுறுவென்றிருப்பார். நல்ல அன்பான அம்மா, கேட்ட போதெல்லாம் ஏன் எதற்கு என்று கேட்காமல் பணத்தை அள்ளித்தரும் அப்பா. இவரையும் சும்மா சொல்வதற்கில்லை. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம். அது மட்டுமின்றி ஸ்போர்ட்ஸ், என்எஸ்எஸ் என்று கலக்கியவர். அம்மாவுக்கு காய்கறி நறுக்கித்தருவதோடு வீட்டு கரண்ட் பில், போன் பில் என அப்பா சொல்லும் வேலைகளையும் செவ்வனே செய்வார். ஆனால் பணமும் சில நண்பர்களின் நட்பும் அவரை குடியின் பக்கம் திருப்பியது.
கல்யாணம், குழந்தை, சொந்த சம்பாத்தியம் என்று ஆன பிறகு குடி மேலும் பெருகியது. ஒரு கட்டத்தில் மனைவி கண்டு கொள்ளாமல் போக, இவர் குடித்தது போய், இவரை குடி குடிக்க ஆரம்பித்தது. வேலைக்குப் போவதில்லை. காலை எழுந்தவுடன் கடை. இரவு தூங்கும் போது கடை என டாஸ்மாக்கே கதியாகக் கிடந்தார். மனைவி கொஞ்சம் உஷார் என்பதால் அம்மாவிடம் எதாவது சொல்லி பணம் வாங்கி கொள்வார்.குடித்த பின் வேறென்ன வேலை? அக்கம்பக்கத்தினருடன் எந்நேரமும எதாவது சண்டை. அதில் ஒருநாள் பக்கத்து வீட்டாரின் பேச்சு அந்த அம்மா மனதை தாக்க ஐந்தே நிமிடங்களில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார் அந்த அம்மா. அவர் அம்மாவின் மேல் அதீத அன்பு வைத்திருந்ததால் துக்கத்தில் மேலும் குடி அதிகமாகியது.
அவர் வாங்கிய நகைகள் இந்தி படிக்க (அடகுக் கடை) ஆரம்பித்தன. வியாதிகள் வரிசை கட்டின. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் போக பித்தப்பையில் கற்கள் கணையத்தை தாக்கும் அபாயத்தில் இருந்ததால் உடனடி ஆபரேஷன் அப்பாவின் செலவில். இன்று ஒருவழியாக குடியின் பிடியிலிருந்து மீண்டாலும் மழை நின்ற பின் தொடரும் தூரல் போல, அதன் பாதிப்புகள் தொடர்கின்றன.
இனிமையாகக் கழிந்திருக்க வேண்டிய வாழ்க்கை மாறிப் போனது. குடியால் வலுவிழந்து போனது உடல், அன்பு அம்மாவை இழந்த துக்கத்தோடும் குற்றவுணர்வோடும் போன பெயரை மீட்க வேண்டும், பழையபடி சம்பாதிக்க வேண்டும் போன்ற கவலைகளோடும் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
இன்னொருவர் படிக்காதவர். கடுமையான தொழில் அவருடையது. குடியால் ஒரு கிட்னி பாழாகி எடுக்கப்பட்டுவிட்டது. திருந்தியாச்சு. ஆனால்… இந்த உடம்பை வைத்துக்கொண்டு இனி அவ்வளவு கடுமையான வேலைகள் செய்ய முடியமா என்பது தெரியவில்லை. ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இன்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். சின்னச் சின்ன வேலைகள் செய்து கொண்டு எந்நேரமும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை.
இப்படி ஒன்று இரண்டு அல்ல… எத்தனையோ பேர்! சமீபத்தில் தரமணியில் அந்த ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பு… ஏழையாக இருந்தாலும் அன்பான அம்மா, அப்பா என்றிருந்த ஒரு பாவமும் செய்திராத அந்தக் குழந்தை யாரோ ஒருவரின் குடியால் இன்று அனாதையாக…
என்றோ ஒருநாள் எங்களிடம் தீபாவளி அன்று பட்டாசுக்காக கையேந்திய குழந்தையின் முகம் ஞாபகம் வருகிறது. தந்தையின் குடிப் பழக்கத்தால் எதை எதையோ இழந்த குழந்தை. அன்றைக்கு அக்குழந்தையின் தேவையை என் அப்பா நிறைவேற்றினார். அதற்கு பிறகு?
இது போல எத்தனை எத்தனை குழந்தைகள் கையேந்தும் நிலையில்… பல குடும்பங்களின் வறுமைக்கு மட்டுமல்ல… தினமும் செய்திகளில் வரும் பெரும்பாலான கொலைகள் தற்கொலைகள்… (அதுவும் குடும்பம் குடும்பமாக) எல்லாம் குடியால்தான்.
குடியினால் மதி மயங்கி மச்சினியிடம் தவறாக நடக்க முயன்று கொலையுண்ட அந்த மனிதனை மறக்க முடியுமா? சின்ன வயதிலே அவன் ஆயுள் முடிந்தது அவன் தவறுக்குக் கிடைத்த தண்டனை எனலாம். ஆனால், சூழ்நிலைக்கைதி என்ற வார்த்தைக்கு நிஜ உதாரணமாக இன்று அந்தப் பெண் கொலைக் குற்றவாளியாக ஜெயிலில்… அவள் இளமையும் வாழ்ககையும் தொலைந்தன.
சபீத்தில் குடிகாரக் கணவன் தந்த வறுமை தாங்காமல் தாயே குழந்தையைக் கொன்ற கொடுமையைப் படித்திருப்பீர்கள்… தீபாவளிக்கு தாய் வீடு போக ஆசைப்பட்ட மனைவியைக் கொன்ற கொடூர கணவன் என இன்னும் இன்னும் கொலை, தற்கொலை, விபத்து, நோய் என எத்தனை எத்தனை உயிரிழப்புகளோ… விவாகரத்துகளோ… டாஸ்மாக்கில் நிற்கும் இளைஞர்களை பார்க்கும் போது எத்தனை எத்தனை தாய்மார்களின் வயிற்றெரிச்சலோ என் கண்முன் தீயாய்… எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பார்கள். இந்த பிரச்னைக்கு என்றோ?
– ஸ்ரீதேவி மோகன்