சித்தார்த்தன் போல் என்னதான் கூண்டுக்கிளியாய் அடைக்கப்பட்டாலும் நம் வாழ்வை கடந்து செல்லும் சில மரணங்களை நம்மால் தவிர்க்கவே முடிவதில்லை.
சட்டென தூக்கியெறியப்பட்ட பந்தினை போல நம் வாழ்வை மாற்றி அமைக்கும் மரணங்கள், ஆழ்கடல் போல் அமைதியாய் எந்த சலனமுமில்லாமல் நம்மை நகர்த்திச் செல்லும் மரணங்கள், அலைகள் போல் சிறுசிறு சஞ்சலங்களை நம்முள் தந்து செல்லும் மரணங்கள் என பல மரணங்களை தாண்டித்தான் நம் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் புத்தனாக மாறுகிறோமா என்றால் இல்லவே இல்லை.
“மயான வைராக்கியத்தை மீற உப்பு, காரம் எல்லாம் இப்போது தேவைப்படுவதில்லை. சீரியல்களும் சினிமாக்களும் போதும் நம் துக்கத்தை மறக்க…” நம்மைக் கடந்து செல்லும் மரணம் ஒவ்வொன்றும் உணர்த்திச் செல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். ‘மாற்றம் என்பது மாறாதது போல உனக்கும் உண்டு மரணம்’ என்னும் நிலையாமை விதியைத்தான்.
இருந்தும் மனிதாபிமானம் என்ற ஒன்றை இந்தச் சமுதாயம் இழந்து கொண்டே வருகிறதோ என்ற கேள்வி என் மனதை ஓயாது தாக்கிக்கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் நாய் ஒன்று மின்சாரம் பாய்ந்திருக்கும் தண்ணீரில் மனிதர்களைக் கால் வைக்கவிடாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது. கால் வைக்கப்போனால் விடாமல் குரைத்திருக்கிறது. அதனால் பலர் வேறு வழியில் சென்று விட்டிருக்கினறனர். ஆனால், அதன் குரைப்பையும் மீறி ஓர் இளைஞர் அந்த தண்ணீரில் கால் வைக்கப்போக அதைத் தடுக்க அந்தத் தண்ணீரில் தான் குதித்து தன் உயிரைவிட்டு புரிய வைத்திருக்கிறது அந்த நாய்.
இத்தகைய மனோபாவம் மனிதர்களிடம் இல்லாமல் இல்லை. ஆனால், முன்பைவிட சதவிகிதம் குறைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
வீண் பொறாமையும் வெட்டி பிடிவாதமும், பகையையும் ரத்த அழுத்தத்தையும் மட்டுமே கொண்டு வரும். அன்பு மட்டுமே அள்ள அள்ளக் குறையாத ஆற்றலைக் கொண்டு வரும். அன்பு இருக்கும் இடத்தில் ஆனந்தம் கட்டாயம் இருக்கும். அன்பிருந்தால் மனிதாபிமானம் பழகிய நாய்க்குட்டி போல ஒட்டிக்கொண்டு கூடவே வந்து விடும்.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் சாவு என்றால் அந்தத் தெரு முழுவதும் சமைக்கமாட்டார்கள். மற்ற வீடுகளிலும் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் இருக்கும் எதையாவதுதான் சாப்பிடக் கொடுப்பார்கள். சாவு வீட்டுக் குழந்தைகளையும் கூட்டி வந்து எதையாவது சாப்பிடக் கொடுப்பார்கள். சாவு எடுத்த பின்தான் சமைத்து சாப்பிடுவார்கள். அப்போது கூட இழவு விழுந்த வீட்டில் அனைவரும் துக்கத்தோடு இருப்பார்கள் என்பதால் அக்கம் பக்கத்து வீடுகளில்தான் சமைத்துக்கொடுப்பார்கள்.
ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு தெரிந்தவரின் மரணத்தின் போது வெளியில் வைத்து அவருக்கான சடங்குகள் செய்து கொண்டிருக்கும் போது அவர் வீட்டிலிருந்து இரண்டாவது வீட்டில் கறிக்குழம்பு வாசனை வந்து கொண்டிருந்தது. என்னதான் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் நடுத்தர வயது குடும்பத் தலைவனை இழந்து வாடும் ஒரே தெருவைச் சேர்ந்த அந்த மனிதர்களின் முகத்துக்காக அந்த ஒரு நாள் ருசியை விட்டுக்கொடுத்திருக்கலாம். அந்த வீட்டில் மனிதர் இறந்துவிட்டார். இந்த வீட்டில் மனிதாபிமானம் இறந்துவிட்டது.
இன்று பெண்கள் வேலைக்குச் செல்லும் வீடுகளில் மாலை நேரத்தில் அந்த வீட்டுப் பிள்ளைகளே தங்களுக்கான மாலை சிற்றுண்டியை செய்து கொள்கிறார்கள். பாட்டி, தாத்தா இல்லாத பல பிள்ளைகளின் நிலை இதுதான். எல்லா வீடுகளிலும் உள்ள பிள்ளைகளும் தனித்தனி தீவுகளே. டோராவும் டோரிமானும்தான் அவர்களுக்கு உறவினர்கள். ஆனால், முன்பெல்லாம் அப்படி இருக்காது. அக்கம் பக்க வீடுகளில் இருப்பவர்கள்தான் அத்தை, மாமி, பெரியம்மா எல்லாம். தாய், தந்தை இல்லாத நேரத்தில் அவர்கள்தான் அடைக்கலம். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஏதோ ஓர் உணவை அந்தக் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். எங்கே போச்சு இந்த அன்பெல்லாம்? கற்பூரம் போல கரைந்து வருகிறதா நாளுக்கு நாள்?
இன்றும் சில கிராமத்து வீடுகளில் பார்க்கலாம், யாராவது இறந்து விட்டால் தினமும் அந்த ஊர்க்காரர்கள் காலை, மாலை இரு வேளைகள் வந்து, கூட இருந்து சில மணித்துளிகள் ஒப்பாரி வைத்துவிட்டுப் போவார்கள். அந்த வீட்டு மனிதர்களின் துக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துப் போவார்கள்.
ஆனால், நகரங்களில் இறப்புச் செய்தி கேட்ட போது மாலை வாங்கி வந்து போட்டு, சுடுகாடு போய் திரும்பி வந்து, குளிப்பதோடு அந்தப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டார்கள். அவரவர் வேலையில் மூழ்கிப் போவார்கள். அந்த வீட்டு மனிதர்களும் அந்த இறுக்கத்தைக் குறைக்க முடியாமல் திரிவார்கள். அதனால்தான் அடிக்கடி ஒரே தெரு மனிதர்கள் கூட வெட்டி மாள்கிறார்கள். ‘என் வீட்டு துக்கத்தின் போது நீ சந்தோஷமா இருந்தேல்ல, இப்ப நீ அனுபவி’ என்ற மனோபாவம் வந்துவிடுகிறது. மனிதாபிமானம் குறைந்ததன் அடையாளம்தான் இந்த மனோபாவம்.
எங்கே யாருக்கு அடிபட்டாலும் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் கொடுக்காமல் 108 வரவழைக்கலாம் என்ற பிறகுதான் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன இப்போது. ஓரிரு வருடங்களுக்கு முன் யாராவது அடிபட்டுக் கிடந்தால் கூட ‘எதுக்கு வம்பு அப்புறம் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு அலையணும்’ என்று பேசாமல் கடந்து போனவர்கள் உண்டு.
ஆனால், நம் முந்தைய தலைமுறையின் போது அடுத்தத் தெருவில் இருப்பவரை பாம்பு கடித்துவிட்டால் கூட தின்கிற சோத்தை அப்படியே போட்டுவிட்டு பாம்பு கடித்தவரை தோளில் தூக்கி போட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடிய நல்ல மனிதர்கள் வாழ்ந்த பூமிதான் இது.
மக்களின் இன்றைய இந்த மனநிலைக்கு கூடி வாழும் முறைமை போய் அவரவருக்கான உலகம் ஒன்று உருவாகிப்போனது ஒரு காரணமாக இருக்கலாம். பொருளாதாரத் தேவைகள் மறு காரணமாக இருக்கலாம். கல்வி வளர்த்த பகுத்தறிவு, அன்பை போதிக்காமல் போனதனாலும் இருக்கலாம். எது எப்படியோ, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அருகில் இருப்பவரை தூரவும், தூர இருப்பவரை அருகிலும் கொண்டு வந்துவிடுகிறது. முகம் தெரியாத மனிதர்களிடம் வைக்கும் போலி அன்பு, அருகில் இருக்கும் நெருக்கமானவர்களிடம் பேச நேரமில்லாமல் உறவுகளை உடைத்துவிடுகிறது.
நம் உலகம் சுருங்கிவிட்டது நல்லதுதான். ஆனால், நம் மனிதாபிமானம் சுருங்காமல் இருக்கட்டும். அறிவு வளர வளர ஆன்மா குறுகிப்போகாமல் இருக்கட்டும். அறிவியல் புதுமைகள் பெருகப் பெருக அன்பு நொறுங்கிப் போகாமல் இருக்கவேண்டும்.
தொழில் நுட்பம் உலகை வளர வைக்கலாம். அன்புதான் உலகை வாழ வைக்கும். தெலுங்கில் ஒரு படம் உண்டு… ’அ நலுகுறு’ என்று. அந்தப் படத்தின் ஹீரோ ஒரு வயதான வாத்தியார். சிறந்த குடும்பத் தலைவரான அவர் நேர்மை, அன்பு என்றே வாழ்ந்தவர். தன் இறப்புக்கு பின் தன்னை தூக்க நாலு பேராவது வருகிறார்களா என்று பார்க்க ஆவியாக அவ்விடத்தைச் சுற்றி வருவார். ஆனால், ஒரு கிராமமே அவருக்காகத் திரண்டு வரும். ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்க்கும் கஞ்சனான அவரது வீட்டு ஓனரே அவரது இறுதிச் சடங்குக்கான செலவை செய்ய முன் வருவார். இறுதியில் வென்றது அவரது அன்புதான் என உணர்த்தும் படம் அது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் அது.
நமக்கும் நாலு பேர் வரவேண்டுமானால் அன்பெனும் விதை தூவுங்கள். மனிதாபிமானம் என்னும் மலர்களை மலர விடுங்கள். இந்த உலகின் இன்றைய தேவையெல்லாம் அது ஒன்றுதான். அது ஒன்றேதான்.
– ஸ்ரீதேவி மோகன்
Image courtesy: