அவளுக்காக அவன் வைத்திருந்த இதய அறையில் வசிப்பதற்காக வந்தவள்தான்.
இருக்கட்டுமே என்று தாராள மனதுடன்
இன்னும் இரண்டு அறைகள் கொடுத்திருந்தான்
அவளுக்கே அவளுக்கானதாக ஒன்றும்…
அவளுடன் சேர்ந்து சந்தோஷம் கொள்ள மற்றொன்றும்…
பிரச்சினைகளைக் குறுக்கி ஒரு அளவீடாக
வைத்துக்கொண்டாலும்
ஒரு அறையில் வெங்காயம் உரிக்கும்போதும்
இன்னொரு அறையில் வேண்டாதபோது சீண்டும்போதும்
வருகிற கண்ணீரை வெளியுலகம் அறிவதில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டு அறைகளை விட்டு வெளியில் வர
அவளுக்கு நேரமே இல்லை
ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்…
–நா.வே.அருள்