இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத் தளங்களை உபயோகிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லா கண்டுபிடிப்பிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். அது போலத்தான் முகநூலும். முன்பின் அறிமுகம் இல்லாத பலரை நட்பு என்ற குடையின் கீழ் ஒன்று சேர்க்கும் முகநூலில், விரும்பத் தகாத அம்சங்களும் நிறைய உள்ளன. சிறு சிறு உபாயங்களைக் கையாண்டாலே போதும்… நம் முகநூல் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.
- உங்கள் முகநூல் கணக்கின் கடவுச் சொல்லை (password) யூகிக்க கடினமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது சரியான கால இடைவெளியில் அதை மாற்றிக் கொண்டே இருக்கவும்
- நட்பில் இணைய அழைப்புகள் (friend requests) வரும்போது, மியூச்சுவல் நண்பர்களை மட்டும் பார்த்து, அக்செப்ட் செய்ய வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரின் முகநூல் பக்கத்துக்குச் சென்று, அவரின் சமீபத்திய பதிவுகளைப் பார்க்கவும். ஓர் அடிப்படையான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு முடிவு செய்யவும்.
- உங்கள் ப்ரொஃபைல் போட்டோ மாற்றும் பொழுது, எப்பொழுதுமே ‘நண்பர்களுக்கு மட்டும்’ என்று செட்டிங் செய்யவும்.
- புதிய நண்பர்கள் அல்லது அவ்வளவாகப் பழக்கம் இல்லாதவர்களிடம், இன்பாக்ஸில் பேச்சை ஊக்குவிக்க வேண்டாம். மிகவும் நன்றாகத் தெரிந்த நபருடன், அவசியமான விஷயத்துக்கு மட்டும் இன்பாக்ஸ்ஐ உபயோகிக்கவும். ஏனெனில், சிலர் வழக்கமாக ஹாய், ஹலோ, காலை வணக்கம், என்ன பண்றீங்க என்று ஆரம்பிப்பார்கள். இதற்கு பதில் சொல்லத் தொடங்கினால், பேச்சு வளரும்.
- முகநூல் மெஸஞ்சரில் உங்கள் மொபைல் எண் சரி பார்க்கும் ஆப்ஷன் (மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன்) ஒன்று உள்ளது. அதை நீங்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே தவிர்த்து விடவும்.
- அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் இடும்போது கவனமாக இருக்கவும். (நீங்கள் ஏதேனும் கட்சி சம்பந்தப்பட்ட ஆளாக இருந்தாலும் / ஏதேனும் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதாக இருந்தாலும்) அரசியல் பதிவுகள் போன்ற சென்சிடிவ் விஷயங்களில், கூடுதல் கவனம் நல்லது.
- ஒருவரை நட்பு வட்டத்தில் வைக்கலாம் என்றாலும், உங்களுக்கு அவர் பேரில் சந்தேகம் இருந்தால், ‘ரெஸ்ட்ரிக்டட்’ மோட்-ல் வைக்கவும். (இவ்வாறு வைப்பதால், அவர் பெயர் உங்கள் நட்பு பட்டியலில் காண்பிக்கும். ஆனால், உங்கள் பதிவுகள், புகைப்படம் எதையும் அவரால் பார்க்க இயலாது), பின்பு, நம்பிக்கை வந்தால், நட்புப் பட்டியலில் இணைக்கவும்
- என்னதான் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலும், வம்பு வளர்ப்பதற்கு என்றே சிலர் முகநூலுக்கு வருகின்றனர். அப்படி உங்கள் நட்புப் பட்டியலில் இருக்கும் நபரால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், முதலில் அவரை ‘பிளாக்’ செய்து விடவும். இதனால் உங்கள் பதிவு எதையும் அவரால் பார்க்க முடியாது. உங்களை மெசேஜ் வழியாக தொடர்பு கொள்ளவும் முடியாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், உங்களுக்கும் அவர் சம்பந்தப்பட்ட பதிவுகள் தெரியாது.
இவை எல்லாம் நடைமுறைக்கு ஏற்ற, சில டிப்ஸ். இவற்றைப் பின்பற்றி, உங்கள் முகநூல் நேரத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
- வித்யா குருமூர்த்தி
Image courtesy: http://www.pecsma.hu
Advertisements