ஒரு தோழி பல முகம்
கோமதி அரசு
தியானப் பயிற்சியாளர் / இணைய எழுத்தாளர்
ஒரு மனுஷி… தாய்… தோழி..!
சமுதாயத்தில் நல்ல மனுஷி. பெற்ற குழந்தைகளுக்கு நல்ல தாய். கணவருக்கும், மகளுக்கும், மகனுக்கும், பேரன் பேத்திகளுக்கும் நல்ல தோழி.
பிறந்ததும் பெற்றதும்
நான் பிறந்த ஊர் திருவனந்தபுரம். சொந்த ஊர் பாளையங்கோட்டை. சொந்தங்கள் இப்போது பல ஊர்களில். அவ்வப்போது சென்று அவர்களைப் பார்த்து உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறோம். இன்றும் மண் வாசனை மாறாமல் சொந்த ஊர் பழக்கவழக்கங்களை பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதை இளையதலைமுறைகளுக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
ஊரும் பேரும்
இப்போது வசிப்பது மயிலாடுதுறை. இங்கு பலவருடங்களாக வாழ்வதால் இங்குள்ளவர்கள் குடும்ப அங்கத்தினர் போல் பாசத்தோடும் நட்புடனும் பழகுகிறார்கள். மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது. பராம்பரிய உணவையே இங்கு விரும்புகிறார்கள். இப்போது கொஞ்சம் வடநாட்டுக்கடைகள் தெருஓரங்களில் காணப்படுகின்றன. பெரியவர்கள் சிறியவர்களுக்கு போதிக்காமல் வாழ்ந்து காட்டி அதைப் பின்பற்றச் செய்கிறார்கள், கோயில்களில் கூட்டு வழிபாடு, தத்துவ ஆராய்ச்சி நடந்து வருகின்றன.
குடும்பம்
எனது குடும்பம் சிறிய குடும்பம். ஒரு மகள், ஒரு மகன். கணவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்வார். மகள், மகனுக்கு திருமணமாகிவிட்டது அன்பான இரு பேரன்கள், ஒரு பேத்தி!
பள்ளி…
அப்பாவுக்கு வேலை நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகும். அதனால் என் பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் விரும்பும் செல்லக் குழந்தை நான். பள்ளியில் ஆறாவது வகுப்பு ஆசிரியர் ரோஜா, ஒன்பதாவது தமிழ் ஆசிரியர் தாயம்மா… 10வது படிக்கும்போது விருப்பப் பாடம் வரலாறு… அதை மிக விரும்பச் செய்த ஆசிரியர் ஞானஒளிவு, 11வது படிக்கும் போது வகுப்பு ஆசிரியர் பிரேமாவதி, அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி அவர்களை மறக்க முடியாது. அவர்கள் போதித்தது பணிவு, கீழ்ப்படிதல், ஒழுக்கம். நான் படிக்கும் காலத்தில் நீதி போதனை வகுப்புகள் உண்டு. அவை இப்போது மீண்டும் பள்ளிகளில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
புத்தகங்கள்
சிறுவயது முதலே நூலகத்தில் இருந்து கதை புத்தகங்கள் வாங்கிப் படித்து வருகிறேன். லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், கல்கி, பாலகுமரன், ஜெயகாந்தன் நாவல்கள் படிப்பேன். சுஜாதா கதைகளை பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘தாயுமானவன்’, ‘மிதிலாவிலாஸ்’ ஆகியவை மிகவும் பிடித்தமானவை.
பொழுதுபோக்கு
புத்தகம் படித்தல், பாடல்கள் கேட்டல் , நல்ல திரைப்படங்களைப் பார்த்தல், இணையத்தில் எழுதுதல்.
இயற்கை
பசுமையான வயல்வெளி, அழகான மரம், செடி, கொடிகள் அவற்றில் கூடு கட்டி வாழும் விதவிதமான பறவைகள் என்று உலகத்தை அழகு படுத்துவது இயற்கை. அதை அழித்து செயற்கையாக எவ்வளவுதான் இந்த பூமியை அழகுபடுத்தினாலும் நிறைவு ஏற்படாது. இயற்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏழு தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை. இயற்கை வளத்தைக் காப்பாற்றி நம் சந்ததியினரிடம் கொடுக்க வேண்டும்.
‘இந்த உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.
பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.’
என்றார் நம் தேசியகவி பாரதி. பாரதி சொன்னது போல் இயற்கை நன்றாக இருந்தால்தான் நாமும் பாடிக் களித்து இருக்க முடியும்.
தண்ணீர் சிக்கனம்… பிளாஸ்டிக் பயன்பாடு!
தண்ணீர்ப் பற்றாகுறை எங்கும் இப்போது நிகழ்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகத்திலும் மழைநீர் சேமிப்பு செய்தால் நீர்வளத்தைப் பெருக்கலாம். வீட்டைச் சுற்றி சிமென்ட் நடை பாதை அமைக்காமல் மண் தரையாக விட்டால் மழை நீர் பூமிக்குள் இறங்கி மீண்டும் நமக்கு கிடைக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். குளம், குட்டை எங்கும் மக்கள் குப்பைகளை கொட்டி அதைத் தூர்த்து வருகிறார்கள் அதில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், மழை நீரை பூமிக்குள் இறங்க விடுவது இல்லை.
என் மகள், மகன் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது இல்லை. இளைய சமுதாயத்தினர் அதில் உறுதியாக இருந்தால் நல்லது. சிறிது காலமாக கடைகளில் ‘இங்கு பிளாஸ்டிக் பைகள் தருவது இல்லை, வரும் போது துணிப்பை கொண்டு வாருங்கள்’ என்று போர்டு வைத்தார்கள். பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளித்து விட்டு, மக்களிடம் உபயோகப்படுத்தாதீர்கள் என்றால் எப்படி? உபயோகப்படுத்தினால் கடுமையான தண்டனை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். அது எதிர்காலம் நீர்வளத்துடன் இருக்க உதவும்.
சமூகம்
பொது இடங்களில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதிலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிலர் பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயல்களை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்கிறார்கள். நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், பொது இடங்களில் அமைதி காப்பதும் நன்மை தரும். தனிமனிதக் கோபம் பொது சொத்தை நாசப்படுத்துகிறது, பெண்கள் மீது அமிலவீச்சு நடத்துகிறது (அமிலம் தடை செய்யபட்டுள்ளது என்றாலும் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? விற்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்) இவை எல்லாம் கவலை தருவதாக உள்ளன. இவை சமூகத்திலிருந்து களையப்படவேண்டும். சமூகம் என்பது கூட்டுறவு. எல்லோரும் சேர்ந்துதான் சமூக அக்கறையுடன் நடக்க வேண்டும்.
மனிதர்கள்
மனிதர்கள் பலதரப்பட்ட குணநலன்களுடன் இருக்கிறார்கள். மனதை இதமாக வைத்துக் கொள்பவனே மனிதன் என்று ஞானிகள் சொல்கிறார்கள். மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழவேண்டும்.
நேர நிர்வாகம்
நேர நிர்வாகம் என்பது எல்லோருக்கும் மிகத் தேவையான ஒன்று. எந்த செயலை செய்யும்போதும் அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு அதைக் கவனமாகச் செய்யவேண்டும். அலுவலக வேலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் (அலுவலக வேலையை வீட்டிலும் பார்ப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது) குடும்பத்தினர், உறவுகள், நட்புகள், சமுதாயம் என்று எல்லோருக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அப்போது எல்லா உறவுகளும் விரிசல் இல்லாமல் நலமாக இருக்கும். நேரம் நம் கையில். அதை நிர்வாகம் செய்வதில் இருக்கிறது நம் திறமை.
சமையல்
சமையல் செய்யும் முன் என்ன செய்யப் போகிறோம் என்று மனதில் குறித்துக் கொண்டு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால் ஒருமணி நேரத்தில் எல்லாம் தயார் ஆகிவிடும். இப்போது அத்தனை வசதியான சமையல் சாதனங்களுடன் சமைக்கிறோம். சிறுவயதில் வித விதமாக அம்மா, அத்தை, உறவினர்கள், பக்கத்து வீட்டினர் சொல்லும் புதுவகை உணவுகளைச் செய்து பார்ப்பேன். இப்போது வயிற்றுக்குத் தீமை தராத உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவுகளை மட்டும் செய்கிறேன். உறவினர், நண்பர்கள், குழந்தைகள் வரும்போது அவர்களுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுக்கிறேன்.
உடலும் மனமும்
உடல் நலத்தில் 40 வயதிலிருந்தே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். தூசுகளால் ஒவ்வாமை ஏற்பட்டு தும்மல் அடிக்கடி இருக்கும். அதற்கு மூச்சுப்பயிற்சி (பிரணாயாமம்) கற்றுக் கொள்ளவேண்டும் என்று என்று எங்கள் உறவினரம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவர் வழி காட்டினார். வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக் கொடுத்த எளியமுறை உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தபின் என் ஒவ்வாமை நோய் போனது. அப்படியே எளியமுறை தியானப்பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் கற்றுக்கொண்டு ஆழியார் சென்று ஆசிரியர் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இப்போது உடல் நலம், மனநலம் இரண்டும் நன்றாக இருக்கிறது.
எழுதியதில் பிடித்தது?
* இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாள்தோறும் ஏதாவது புதிதாக கற்க வேண்டும்… அல்லது கேட்க வேண்டும். அது வாழ்கையை நல்லபடியாக நடத்தி செல்ல உதவும். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அலைகளை பரப்பிவரும் பெண்களே எல்லோராலும் விரும்பபடுகிறார்கள். இந்தக்காலத்தில் பொன்நகை அணிந்து போகாமல் புன்னகை அணிந்து போவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பெண்கள்.
* நவராத்திரி போன்ற பண்டிகையின் நோக்கம் பெண்களின் சிறப்பைப் பெண்கள் உணர வேண்டும் என்பதே. தேவி, கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்டுகிறாள். அது போல் நாம் கெட்ட எண்ணங்களை களைந்து, நல்ல எண்ணங்களை நம்மைச் சுற்றிப் பரவவிட வேண்டும். மனதிடம் உடையவர்களாக இருக்க வேண்டும், எப்போதும் நல்லதையே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும். ஆண்களுக்கு உடல்பலம் என்றால் பெண்களுக்கு மனபலம். சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல் தன்னைக் காத்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.
இசை
இசை சகல ஜீவராசிகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது. தாவரங்கள்கூட இசையில் தழைக்கின்றன. கல்லும் கரையும், இசையால். மனித வாழ்வில் இசை பல அற்புதங்களை செய்கிறது. இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் இல்லை. உடலின், மனதின் வலிகளை போக்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிக்கிறது. செவிக்கு விருந்தாக, உடலுக்கு மருந்தாக இருக்கிறது. நீலாம்பரி ராகம் நல்ல தூக்கம் தரும். ஸ்ரீராகம் நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி நரம்புதளர்ச்சியைப் போக்கும். சாமா ராகம் மன உளைச்சல் போக்கும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சனி கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம் எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள். மாத்திரை மருந்துகளை வேளாவேளைக்கு மசாப்பிடுவது போல் உணவுக்குப் பின் இசை கேட்பது நல்லது.
அழகென்பது…
அழகென்பது பார்ப்பவர் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஒருவருக்கு அழகாகத் தெரிவது வேறு ஒருவருக்கு இது என்ன பெரிய அழகு என்று தோன்றக் கூடும். வேதாத்திரி மகரிஷி சொல்வார்…
‘அழகு மாறிக் கொண்டே இருக்கும்…
அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்.’
வீடு
எந்த ஊருக்குச் சென்றாலும் கலைப்பொருட்களை வாங்கி வருவேன். வீட்டின் வரவேற்பு அறையில் கணவரின் எழுதும் மேஜை இப்போது நித்திய கொலுவாக இடம் பிடித்துக் கொண்டது. அவர் கணிப்பொறியில் எழுதுவதால் இப்போது மேஜை தேவைப்படுவதில்லை. ஷோகேஸில் சில கலைப்பொருட்கள், மகன் செய்த சாக்பீஸ் கோயில் இவற்றை வைத்து அலங்கரித்து இருக்கிறேன். மகன், மருமகள், வரைந்த ஓவியங்கள் சுவரை அலங்கரிக்கின்றன. மகள், பேரன்கள், பேத்தி செய்த கைவேலைகளும் எங்கள் கொலுவில் இடம்பெறும். முன்பு எல்லாம் திரைச்சீலைகளை நானே தைத்துப் போடுவேன். இப்போது கடைகளில் விற்பதை வாங்கி வேலையை எளிதாக்கி விட்டேன். ஊர்களுக்குப் போய் வந்தபின் கலைப்பொருட்களில் படிந்து இருக்கும் தூசிகளைத் துடைப்பது பெரிய வேலை. அதனால் நிறைய பொருட்கள் பெட்டிக்குள் தஞ்சம் புகுந்து விட்டன. அவை கொலுவில் மட்டும் இடம்பெறும். சுவாமி அலமாரியில், சுவாமி படங்கள் அழகாக கொலுவீற்றிருக்கின்றன. வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளும் கூடுதல் அழகு தரும். முன்பு வைத்து இருந்தேன். ஊர்களுக்கு அடிக்கடி போவதால் வீட்டுக்குள் உள்ள செடிகளைக் கவனிக்க முடியவில்லை.
வாழ்க்கை
இறைவன் அருளால் ஓடிக் கொண்டு இருக்கிறது… நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். துன்பம், இன்பம் எல்லாம் கலந்து இருக்கிறது வாழ்க்கை. இருளும் ஒளியும் போல் மாறி வருவதை ஏற்று வாழ வாழ்க்கை நாள் தோறும் அனுபவப் பாடம் ஆகிறது.
மறுசுழற்சி
மனிதன் தனக்குச் சாதகமாக தான் துய்க்கும் பொருள்களை மாற்றி அமைத்துக் கொள்கிறான். பின்விளைவுகள் ஏற்படாத மாதிரி மறுசுழற்சி செய்வதில் தவறு இல்லை. நாட்டுக்கு, வீட்டுக்கு சமுதாயத்துக்கு இப்போது மறுசுழற்சி அவசியம். பிளாஸ்டிக் பைகளை கூழாக்கித் தார்ச் சாலை அமைக்கிறார்கள். அது மழையால் பாதிப்படையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மூலம் டீசலுக்கு சமமான எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள். காலி தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானக் குடுவைகளில் மணல் அடைத்து சுற்றுச்சுவர் எடுக்கிறார்கள். குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு வேண்டிய உரங்கள் கிடைக்கின்றன. மனிதக்கழிவை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். சாக்கடை நீரில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கப்படுகின்றன. வீட்டுக்காய்கறி குப்பைகளைச் சேகரித்து மண்புழு உரம் தயாரித்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி குப்பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயனுள்ளதாகச் செய்வது அதிகமாக நடைபெற வேண்டும். மரம் செடிகளின் குப்பைகள் மீண்டும் அந்த மரம் செடிகளுக்கே உரமாகின்றன. அதுபோல் உலோகங்களையும் உருக்கி மறுசுழற்சி செய்கிறார்கள். அலுமினியம், தாமிரம், இரும்பு போன்றவற்றையும் மறுசுழற்சி செய்து புதுவகை கருவிகள் படைக்கிறார்கள்.
இயற்கையில் மறுசுழற்சி முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடல் நீர் ஆவியாகி மேகமாகி, மழையாக பொழிகிறது. மீண்டும் அது நீர் நிலைகளாகி மறுபடியும் மேகமாகி மழை பொழிகிறது. இந்த மறுசுழற்சி ஏற்பட நாம் உதவி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மழை நீரை சேமித்தால்தான் இந்த சுழற்சி சரியாக நடக்கும். வாழ்க்கை ஒரு வட்டம் போல, வாழும் உயிரினங்களுக்கு தேவையான நீரும் சுழற்சி முறையிலேயே உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது!
நல்ல மண் இருந்தால்தான் மரம் வளர்க்க முடியும். மரங்கள் இருந்தால்தான் மழை பொழியும். மழை பொழிந்தால்தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.
பிடித்த ஆளுமைகள்
பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்… சிறந்த சமூகசேவகி. முதுமையிலும் பிறருக்கு உழைத்துக் கொண்டு இருக்கும் தன்னலமற்ற செயல் வீராங்கனை. கணவர் இறந்த பின்னும் மனம் தளராமல் பொதுத் தொண்டு ஆற்றி வருகிறார். அவரது எளிமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மட்டில்லா மகிழ்ச்சி.
தென்கச்சி சுவாமிநாதன்… அவர் மறைந்தாலும் இன்றும் அவரது பேச்சைக் காலையிலும் இரவிலும் (காரை பண்பலையில்) கேட்டு மகிழ்கிறேன். அவர் ஒருமுறை கும்பகோணம் அறிவுத் திருக்கோயிலுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் நகைச்சுவைப் பேச்சை நேரில் கேட்டேன். அவர் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்… சிந்திக்கவும் வைப்பார்.
தியானக்கலை
செயலும் மனமும் ஒரே நேர் கோட்டில் இணைவது தியானம். எந்தச் செயலைச் செய்தாலும் அதில் மனம் ஒன்றும் போதுதான் அந்த காரியத்தை முழுமையாகச் செய்ய முடிகிறது. பெண்களுக்குத் தெரியுமே… கோலம் போடும் போது மனம் கோலத்துடன் இணையவில்லை என்றால் புள்ளிகளைச் சரியாக இணைக்க முடியாது. கோலம் சரியாக வராது. சமையலில் மனம் ஒன்றவில்லை என்றால் ‘உப்பு போடவில்லை’… ‘இல்லை போட்டோம்’ என்று குளறுபடியாகும். பிள்ளைகளுக்கு இது பிடிக்கும், கணவருக்கு இது பிடிக்கும் என்று மனம் முழுவதும் ஒன்றி சமைக்கும்போதுதானே அது அமிர்தம் ஆகிறது? பிள்ளைகளுக்குப் படிப்பில் கவனம் இல்லையென்றால் விளையாட்டில் ஈடுபாடு இருக்கும். விளையாடும் நேரம் விளையாட்டு, படிக்கும் போது படிப்பில் கவனம் என்று இருந்தால்தானே வெற்றி? இவை எல்லாமே தியானம் தான்.
சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் சொல்லும் வார்த்தை மனஅழுத்தம், மூட் அவுட் என்பவையே. ஏன்? என்ன காரணம்? அவசர உலகம்… நின்று நிதானித்து செயல்படமுடியவில்லை. நிதானிக்கும் போது இன்னொருவர் அவரை முந்திச் சென்று விடுகிறார். போட்டி, பொறாமை எங்கும், எதிலும், எப்போதும்… முதலிடம் பெறுவதுதான் தாரக மந்திரமாக இருக்கிறது இப்போது. குழந்தைகளிடம் முதலிடம் பெறுவது மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைச் சொல்லி பணிவு, கனிவு, ஒழுக்கம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைரியம் ஆகியவற்றோடு வாழக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்போது சில பள்ளி, கல்லூரிகளில் ‘யோகமும் மனித மாண்பும்’ என்று உடல், உயிர், மனம், அறிவு மற்றும் சமூக நலக்கல்வியாக இது கற்றுக் கொடுக்கப்படுகிறது.
தேவைகள் அதிகமாக அதிகமாக, பொறுப்புகள், கடமைகள் அதிகமாகின்றன. தேவைகள் மீது ஆசை, அது நிறைவேறவில்லை என்றால் சினம், கவலை என்று ஏற்படுகிறது. அவை அதிகமாகும் போது உடலில் நோய் ஏற்படுகிறது. தியானம் செய்யச் செய்ய தேவைகள் குறைகின்றன. மனம் அமைதி அடைகிறது. சினம், கவலை குறைகிறது. எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு என்ற நியதி புரிகிறது. நம் மனதில் அமைதி நிலவினால் நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவும்.
படிக்க…
Image courtesy:
mayiladuthurai.6te.ne
குங்குமம் தோழியாக ஜொலிப்பதற்கு வாழ்த்துகள், கோமதி அரசு!
படித்து முடித்ததும் திகைப்பாக இருந்தது. எழுத்து நடையும்,விவரங்களும், வெகு கோர்வையாக எழுதி அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள். ஆசிகள் கோமதி அரசு. அன்புடன்
Nandri 🙂