அழகா ஆரோக்கியமா எது முக்கியம்?

health-and-beauty

6587_big

ழகா ஆரோக்கியமா? இப்படிக் கேட்பது பட்டிமன்றத் தலைப்பு மாதிரி தோன்றலாம். ஆனால், பெண்கள் கட்டாயம் யோசிக்க வேண்டிய விஷயம்.

எனக்கு உறவு முறையில் அண்ணி அவர். அடிப்படையில் பியூட்டிஷியன். மாமியார் அவர் வேலை பார்க்க ஒத்துக்கொள்ளாததால் பார்லர் எதுவும் வைக்காமல் ஹவுஸ் ஒயிஃபாக இருந்தார். ஆனால், தனக்குத்தானே ஃபேசியல், ப்ளீச்சிங் என்று செய்து கொண்டு எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருப்பார். வீட்டு விசேஷங்களின் போது அவரது டிரெஸ்ஸிங் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு நாள் அவரை சந்தித்தேன். இடது கை முழுக்க கட்டுப்போட்டு இருந்தார். விபத்தா? என்று விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

மூட்டு எலும்புகள் பலவீனமாக இருக்கின்றனவாம். கையில் இப்போது மிகுந்த வலி இருப்பதால் கை முட்டியில் ஊசிபோட்டு, கட்டுப்போட்டு வைத்திருந்தார்கள். அடுத்தபடியாக பல சிகிச்சைகள் காத்திருந்தன அவருக்கு. தன் அழகின் மேல் காட்டிய அக்கறையில் ஒரு துளியைக்கூட ஆரோக்கியத்தின் மீது அவர் காட்டாததை நினைத்து வருத்தமாக இருந்தது.

பல பெண்கள் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள். அதுவும் கல்லூரி படிக்கும் மாணவிகள், வேலைக்கு போகும் யுவதிகள் போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே விஷயம் அழகுதான்.

எந்த மாதிரி ஹீல்ஸ் வாங்கலாம், என்ன மாதிரி ஹேர்கட் செய்து கொள்ளலாம் போன்றவற்றில் காட்டும் அக்கறையை சாப்பாட்டு விஷயத்திலோ, உடற்பயிற்சி செய்வதிலோ அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை.

சினிமா, செல்போன், வலைத்தளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் உடல் ஆரோக்கியத்துக்கு தருவதில்லை.

உள்ளம் பெருஙகோயில் ஊனுடம்பு ஆலயமாம் என்கிறார் திருமூலர். இந்த உண்மை பலருக்கு தெரிவது இல்லை. ஏன் பெண்களை மட்டும் குறிப்பிடுகிறேன் என்றால் இளைஞர்கள் டீன் ஏஜை எட்டும் போது மைதானம், ஜிம் என்று தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுகிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் படிப்பு, வேலை என்ற விஷயத்தைத் தாண்டி பெரும்பாலும் அழகு குறித்தே யோசிக்கிறார்கள்.

அழகு என்பது லிப்ஸ்டிக்கிலோ, ஹேர் கலரிங்கிலோ இல்லை. உடற்பயிற்சி பெண்களுக்கு இயற்கையானதொரு வனப்பை அளிக்கிறது என்பது உண்மை. பயிற்சி செய்யும் போது உடல் ஓர் அழகிய கட்டமைப்புக்கு வரும். நரம்புகளும் தசைகளும் வலிமை பெறும். கண்கள் ஒளிபெறும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வராமல் காக்கும். அது மட்டுமின்றி வியர்வை வெளிப்படும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் முகப்பொலிவு கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு நல்ல விஷயங்கள் இதில் இருக்கின்றன என்று தெரிந்திருந்தும் பயிற்சி செய்ய விரும்பாத பெண்களுக்கு மேலும் ஒரு தகவல். கடுமையான மூளை உழைப்பை வலியுறுத்துகிற பணிச் சூழலால் மாரடைப்பு உள்பட பல வியாதிகள் பெண்களிடம் அதிகரித்து வருவதாக இந்தியாவின் பெருநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஹீல் ஃபவுண்டேஷன்’ எனும் இதய நோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுப்படி கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கான இதய நோய்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்க வழக்கமும் குறைந்து போன உடலுழைப்பும்தான் அதற்குக் காரணமென கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றம் இளமையிலே உடல் பருமனை ஏற்படுத்திவிடுகிறது.

சரிவிகித உணவு, தேவையான அளவு தூக்கம், முறையான உடற்பயிற்சி போன்ற மேம்பட்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அழகு தானே வரும்.

இன்றைய பெண்கள் ஆற்றலுடையவர்களாக, அறிவுடையவர்களாக வளர்கிறார்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், அதே நேரத்தில் ஆரோக்கியமானவர்களாகவும் வளர வேண்டியது மிகவும் அவசியம்.

– ஸ்ரீதேவி மோகன்

Image courtesy:

http://healthbeauty.indothanalarea.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s