ஸ்டார் தோழி – 14

ஒரு தோழி பல முகம்

Star thozhi 03

பாரதி சுவாமிநாதன்

நான்…

என் பெயருக்கு ஏற்ப நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே! இப்போது பி.எல்.ஆர். குழும நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறேன். இந்த உலகிலுள்ளவர்களைப் போலவே வாழ்க்கையில் நானும் எத்தனையோ பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது ‘அம்மா’ ’ என்கிற பாத்திரம். நான் தாய்மையடைந்ததை அறிந்த தினம்… பிக்காஸோவின் அழகான ஓவியம், ஜான் கீட்ஸின் சிறந்த கவிதை, யானியின் மயக்கும் சிம்பொனியைப் போல அற்புதமான தினம். நிபந்தனையற்ற அன்பை வழங்கும் நிலைக்கு நான் வந்துவிட்டேன் என்பதை புரிந்து கொண்டேன் அன்று. என் வாழ்க்கையின் சாராம்சமே இக்கவிதை…

RGB 200x200

என்னுள்ளே

ஞானம் பெற வேண்டும் என்கிற ஆழமான விருப்பம்

என் குழந்தைப் பருவத்திலிருந்து…

வாழ்க்கை எனக்கு

இன்பமான அனுபவங்களைக்

கொடுத்திருந்தாலும்

அறியாமை இருட்டுக்குள்

உலக இயந்திரத்துக்குள்

என்னை நானே சிக்க வைத்தேன்.

உண்மையின் பாதையிலிருந்து

விலகி காணாமல் போனேன்.

அத்துடன் குடும்பத்துக்காக

சண்டையில் ஆழ்ந்தேன்.

வாழ்க்கையில் என்னென்னவோ

குழப்பங்கள் செய்தேன்.

இன்னும் எனக்கு கடவுளின்

ஆசீர்வாதம் இருக்கிறது…

நம்பிக்கையின் ஒரு துளி இருக்கிறது.

முயன்று வெற்றி பெற எனக்கு

ஒரு வழி கிடைத்ததைப் போல!

வசிப்பது…

‘சான்ஸே இல்ல… சான்ஸே இல்ல… நம்ம சென்னை போல வேற ஊரே இல்லை. இந்த பீச் காத்து மேல பட்டா போதும்டா… உனக்கு நல்ல ராசிடா… இனி நீ சென்னைவாசிடா…’’

யெஸ்… நான் இப்போது சென்னையில்தான் வசிக்கிறேன். குஜாரத்திலுள்ள பரோடாவில் பிறந்தேன். இருந்தாலும், இந்தியா முழுக்க உள்ள தேஜ்பூர்-அஸ்ஸாம், பாரக்பூர்-வங்காளம், ஆதாம்பூர், ஜலந்தர், அம்பாலா, சண்டிகர்-பஞ்சாப் போன்ற அழகான நகரங்களில் வளர்ந்தேன். அது, வெவ்வேறு கலாசாரங்களில் ஆழ்ந்த அறிவு பெறவும் சிறந்த மனுஷியாக நான் உருவாகவும் உதவியது.

படிப்பு

icecream

நம் நாட்டில், பல நகரங்களில் உள்ள ‘கேந்திரிய வித்யாலயா’’வில் என் பள்ளி வாழ்க்கை நடந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். ஆறாவது படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. அப்பா, சண்டிகர் ரோஸ் கார்டனில் நடந்த ‘ரோஜா திருவிழா’’வுக்கு அழைத்துப் போனார். எங்களுக்கெல்லாம் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தார்… எனக்குப் பிடித்த ஃப்ளேவரில். ஒரு ஏழைச் சிறுவன் எதிர்ப்பக்கம் நான் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்ததும் நான் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. அவனிடம் போய் என் ஐஸ்க்ரீமை கொடுத்துவிட்டேன். அந்தக் கணம் அவனிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி, இன்ப அதிர்ச்சியாக என்னையும் தொற்றிக் கொண்டது. நான் பரவசமடைந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெளிவாக நினைவில் இல்லை. ஆனால், புத்தரின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்… ‘எதையும் வைத்திருப்பதிலோ, பெறுவதிலோ அல்ல… கொடுப்பதில்தான் இருக்கிறது மகிழ்ச்சி.’

Angulimala

அதே வருடம், என் ஆசிரியர்களில் ஒருவர், ‘புத்தாவும் அங்குலிமாலா’வும்’ கதையை எங்களுக்குச் சொன்னார். அந்த தினத்திலிருந்து பயமற்ற, அமைதியே உருவான, உலகெங்கும் காண முடியாத கௌதம புத்தரைப் போல ஆக விரும்பினேன்… இப்பொழுதும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்… ஹா ஹா ஹா!

காலங்கள் கடக்க, நான் புத்தரை மறந்து போனேன். படிப்பு, மதிப்பெண்கள் பெறுதல், லட்சியங்களை அடைதல் என்ற வழக்கமான வாழ்க்கைக்குள் இழுக்கப்பட்டேன். சண்டிகர் கேந்திரிய வித்யாலயாவில் என் பள்ளிப் படிப்பை முடித்தேன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தேன். அதே நேரத்தில் நாங்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தோம். மதுரை என்னை முழுவதுமாக மாற்றியது. கிட்டத்தட்ட 360 டிகிரி கோணத்துக்கு என் வாழ்க்கை திரும்பியது. வாழ்க்கை தொடர்பான கேள்விகள் என்னை அலைக்கழித்தன. ‘நான் யார்?’, ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்?’ போன்ற கேள்விகள். தத்துவரீதியான அல்லது அறிவியல்ரீதியான பதில்களை நான் தேடவில்லை. ஆனால், என் எல்லா கேள்விகளுக்கும் தொழில்நுட்பரீதியான, என் இருப்புத் தொடர்பான பதில்களை தேடினேன். எல்லா பதில்களும் கிடைத்ததா என்று என்னைக் கேட்காதீர்கள். இன்னும் நான் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குடும்பம்

Star Thozhi 02

நான் திருமணமானவள். எனக்கு 13 வயதில் அபிஷேக் என்கிற மகன் இருக்கிறான். அவன் எனக்குக் கிடைத்த வரம். என் கணவர் ஒரு பிசினஸ்மேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டதே ஒரு வேடிக்கைக் கதை. திருமணத்துக்கு முன்பு வரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அந்த லொள்ளுக்காக நாங்கள் இருவருமே இந்த தினம் வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். என் தந்தை முன்னாள் ஐ.ஏ.எஃப். அதிகாரி. அம்மா வீட்டு நிர்வாகி. எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு

கவிதை எழுதுவது… கதைகள் சொல்வது… புத்தகங்கள் படிப்பது… மகனுடன் விளையாடுவது… இணையத்தில் உலாவுவது… திரைப்படங்கள் பார்ப்பது… இசை கேட்பது… வார இறுதி நாட்களில் சமைப்பது.

Processed by: Helicon Filter;

பல நகரங்களுக்குச் சென்று அவற்றின் கலாசாரத்தை ஆராய்வது எனக்குப் பிடிக்கும். முன்பின் அறிமுகமில்லாத பிரதேசங்களில் பயணம் செய்வது பிடிக்கும். அப்படிப்பட்ட என் பயணங்களில் சிறந்தது கைலாஷ் யாத்திரை. நிச்சயமாகச் சொல்கிறேன், அந்த வருடத்தில் அழகான மலைவாசஸ்தலம் ஒன்றுக்குச் சென்று இயற்கையோடு சில மணி நேரங்களைக் கழித்திருக்கிறேன். கோவையிலுள்ள ஈஷா யோகா மையமும் எனக்கு மிகவும் பிடித்த இடம்.

என்னைக் கவர்ந்த பெண்கள்…

எல்லோரையும் போலவே எனக்கு அம்மாவைத்தான் முதலில் பிடிக்கும். குழந்தைகளான எங்களுக்காகவே வாழ்ந்தவர் அவர். ஒரு பொருளாதார நிபுணர் ஆகும் அளவுக்கு அறிவு படைத்தவர்… சிறந்த பாடகியாகவும் கூட அவரால் ஆகியிருக்க முடியும். ஆனால், அந்த நாட்களில் பெண்களுக்கு அவற்றுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குடும்பம்தான் அவர்களின் முதல் முன்னுரிமை… அது சரி என்றுதான் நான் நினைக்கிறேன். நல்ல மனிதர்களாக நாங்கள் வளர்ந்து ஆளாக முடியும் என்றால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு என்ன இருக்கிறது? வீட்டிலேயே உழல்வதும், குழந்தைகளுக்காகவே வாழ்வதும் மிக முக்கியம்… குழந்தைகளின் உணர்வுபூர்வமான ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அது நல்லது.

ma1

அம்மாவைத் தவிர அரவிந்தர் அன்னையை எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு ஆன்மிகப் பாதையைப் பின்பற்றி ஞானம் பெறுகிற எல்லா பெண்களையும் பிடிக்கும். நம்மிடம் நிறைய பெண் ஆன்மிகவாதிகள் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

நேர நிர்வாகம்

என் வாழ்க்கையில் நேரமில்லை என்று எப்போதும் உணர்ந்ததில்லை. வேலைகளை அவ்வப்போது முடித்துவிடுகிறேன். ‘வாட் நெக்ஸ்ட்?’ என்பது என் கொள்கை, வாழ்க்கையின் நோக்கம். நடந்த நிகழ்வுகளை நினைத்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை, நடப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இயல்பாகவே நான் எதையும் திட்டமிட்டுச் செய்பவள். என்னைப் பொறுத்தவரை எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. நான் காற்று போகும் திசையிலேயே செல்ல விரும்புகிறவள், அதற்கு எதிராக அல்ல. அதனால் அதிகம் போராட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

புத்தகங்கள்

the fountainhead

Illusions_Richard_Bach

அதிக ஆர்வத்தோடு நான் படித்த ஒரு புத்தகம் அயன் ராண்ட் எழுதிய ‘தி ஃபவுண்டெய்ன்ஹெட்.’ நடக்கும் போதும் தூங்கும் போதும் உறக்கத்தில் இருந்து எழும் போதும் என எந்நேரமும் அந்த நாவல் என்னுடனேயே இருக்கும். அதற்கு அடுத்தபடியாக நான் விரும்பிப் படித்தது ரிச்சர்ட் பேச் எழுதிய ‘இல்லுஷன்ஸ்.’ டேனியல் ஸ்டீல், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் படித்திருக்கிறேன். டீன் ஏஜில் ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ படித்தேன். குழந்தைப் பருவத்தில் ஆர்ச்சீஸ், டிங்கிள், சாச்சா சௌத்ரி, முகமூடி, ஹார்டி பாய்ஸ், நான்ஸி டிரீவ் ஆகிய பாத்திரங்கள் என் மனதில் நிறைந்து போனவை. இப்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.

சமையல்

நான் என்ன சமைத்தாலும் ருசிமிகுந்ததாகிவிடுகிறது… கைராசி அப்படி! என் கணவரும் மகனும் என் சமையலுக்கு தீவிர ரசிகர்கள். பல பரிசோதனை முயற்சிகளை சமையலறையில் செய்கிறேன். பல சமையல் முறைகளை கலந்து என்னென்னவோ செய்கிறேன்… அதற்குப் பெயரும் உண்டு… ‘ஃப்யூஷன் குக்கிங் லொல்.’

சமூகத்துக்கான செய்தி…

இன்றைய உலகம்:

மக்கள்தொகை பெருக்கம் – சுருங்கிப் போன மனிதநேயம்,

குறைவான கையிருப்பில் உணவு – சமத்துவமற்ற பங்கீடும் ஒதுக்கீடும்,

செழித்தோங்கும் தனித்துவம் – அருகி வரும் இரக்க குணம்,

காணாமல் போகும் காடுகள் – வானளாவ உயர்ந்து கொண்டே போகும் கட்டிடங்கள்,

வளரும் நாடுகள் – வளர்ச்சியடையாத உடல்கள்,

ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் – வளர்ந்து கொண்டிருக்கும் கோபம், வன்முறை மற்றும் பொறுமையின்மை

இவை நான் மட்டுமல்ல… ஒவ்வொருவரும் கவலைப்படும் விஷயங்கள்…

மீள வழி இருக்கிறதா?

மனிதர்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக இந்த உலகை மாற்ற வழி இருக்கிறதா?

Star thozhi 02a

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

Image courtesy:

https://haejinsung.files.wordpress.com

http://upload.wikimedia.org

http://www.sriaurobindoashram.org

http://th01.deviantart.net/

http://wisdominspiredlife.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s