காதல் குளிர்
ஓர் எலியைப் போல
முதுகு மடங்கி உட்கார விருப்பம்
எனக்கும்
உன் உள்ளங்கைப் போர்வைக்குள்
இத்தனை பாந்தமாய்
‘மவுஸ்’.
புள்ளி இல்லாத கோடுகள்
என்னால் உன்னை
வாசித்தறிய முடியவில்லை
புத்தகத்தின் பின்புறமுள்ள
கணிப்பொறி விலைக்கோடு
நீ.
வழுக்கு ஏணி
ஒருமுறை
ஏணி எடுத்து வந்து
ஏறச் சொன்னாய்
மெல்ல மெல்ல
இறங்கிக் கொண்டிருந்தேன்
உன் இதயத்திற்குள்.
காதல் பயணம்
ஒரு டிக்கெட்தான்
எடுத்துச் சென்றேன்
பாவம்
கடைசி வரையிலும்
நீ என் பக்கத்திலேயே
பயணம் செய்ததை
பார்க்கவேயில்லை
பரிசோதகரும் கண்டக்டரும்…
காதல் வெடிகுண்டு
அவசரமாய் நீ திரும்புகையில்
குவிகிற அழகை
என் செல்போன் கேமராவில்
சேமித்திருக்கிறேன்
விம்மிப் புடைக்கும் அது
எப்போது வெடிக்குமோ?
உரிமை ஆசிரியருக்கு
உன் செல்போனுக்கு அனுப்பிய
குறுஞ்செய்திகளையெல்லாம்
தொகுப்பாய் வெளியிட எனக்கு
விருப்பம்தான்
உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?
பொய்யாய் பழங்கதையாய்…
சங்க காலத்தில்
நம் தாத்தா பாட்டிகள்
வெயிலில் மரநிழலில்
இரவில் நிலவடியில்
காதலித்தார்களாமே
நமக்கு
கணிப்பொறி சாட்டிங்
காதல் போதுமா?
பிரளயம்
நீ
குளம் சென்று வந்த பிறகு
அலை அடங்கவேயில்லை.
– நா.வே.அருள்
Image courtesy:
http://www.afloralaffairpa.com
http://www.hdwallpapersfree.eu