மழையைப் போலத்தான் நீயும்…
பழைய நினைவுகளை, பரவசத்தை, நண்பர்களை, தோழிகளை, இயற்கையை என எத்தனையோ விஷயங்களை நினைவுகூரும் கவிதைகள். இந்தக் கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பல பாடுபொருள்கள் நாம் அனுபவித்தவையாக இருக்கும் என்பதுதான் இந்நூலின் சிறப்பு. வாசகனை அதிகம் கஷ்டப்படுத்தாத எளிய வரிகள்… உவமைகள். ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஓவியங்கள் தொகுப்புக்கு பலம் சேர்க்கின்றன.
தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…
சம்பந்தமில்லா
மனக்குழப்பம்.
சட்டென்று தொலைந்து போகிறது
தோளில்
கைவைத்து அழுத்தும்
நட்பில்.
***
தொலைபேசியில்
பேசும்
ஏனைய வாக்கியங்களுக்கிடையே
‘அப்புறம்’
என்ற வார்த்தைதான்
அதிகமாய் உபயோகித்திருக்கிறாய்…
பின்னொரு நாளில்
தெரிந்துகொண்டேன்
அவ்வார்த்தைக்கு
உன் அகராதியில்
காதலென்ற பொருளுண்டென்பதை!
***
வாழ்தலுக்கு
வழிமுறையென்று
ஏதேதோ
பேசினார்கள்…
எவருமே உணர்த்தவில்லை
இயல்பாக இருந்தாலே
போதுமென்பதை!
***
அதிகாலை
மார்கழிக் கோலம்.
அதை நீயே
போடுவது.
மழைத்தூறல் வந்து
மென்மையாய் கலைப்பது…
ஒரே நேரத்தில்
எப்படி மூன்று கவிதை..!
***
நூல்: மழையைப் போலத்தான் நீயும்…
விலை: ரூ.80/-
ஆசிரியர்: ஆர்.சத்தியன்
வெளியீடு: சித்ரகலா பதிப்பகம், அகரக்கடம்பனூர், கீழ்வேளூர் – 611 104. நாகப்பட்டினம் மாவட்டம்.
தொலைபேசி: 9443382614.