ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
எஸ்.ஆர்.செந்தில்குமார்
’இரை தேடுவதோடு இறையும் தேடு’ என்பது பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம். அதை உலகுக்கே உரத்துச் சொல்ல பிறவி எடுத்து வந்த மகான் ‘ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.’ இந்து மரபில் கடவுளர்க்குக் கொடுக்கப்படும் மரியாதையும் பக்தியும் அடியார்க்கும் உண்டு. இறைவனை விட அவன் அடியார்களை ஒரு படி மேலே போய் துதித்தவர்களும் உண்டு. ‘அடியார்க்கு அடியேன் ஆவேனே’ என்பதுதான் இறைச்சான்றோரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது என்பதற்கு நம் பக்தி இலக்கியங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. காரணம், இறைவன் எளியோர்க்கு உணர்த்த விரும்பியதை எடுத்துச் சொல்பவர்கள், வழிகாட்டுபவர்கள் மகான்கள். அப்படிப்பட்ட பெரியவர்களில் இன்றைக்கு உலகம் முழுக்க பிரபலமாகியிருக்கும் பாம்பன் சுவாமிகளின் சரிதத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
எந்தப் பிறவியாயினும் அதற்கோர் காரணம் இருக்க வேண்டும் என்பது துறவிகளுக்கு முழுக்கப் பொருந்தும். அப்படி ஒரு காரணத்தோடு பிறவி எடுத்தவர் பாம்பன் சுவாமிகள். எல்லா சாதாரண மனிதர்களைப் போலவே மூப்பையும் பிணியையும் உடலில் தாங்கிக் கொண்டவர். பல கஷ்டங்களுக்கு நடுவேயும் தமிழுக்கும் சைவநெறியான குகப்பிரம்ம நெறிக்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். இவர் இயற்றிய ‘சண்முகக்கவசம்’ ஒன்றே இவர் புகழ் சொல்லப் போதுமானது. ஆனாலும் அவர் நம்பிய முருகன் அவரைக் கைவிடவில்லை. அவர் இன்னலைப் பொறுக்க மாட்டாமல் ஓடோடி வருகிறான். உதவுகிறான். நோய் நீக்குகிறான். தெரியாத ஊரில் யார் மூலமாகவோ வந்து வழிகாட்டுகிறான். தாக்குவதற்கு அடியாட்கள் வந்தால் காவல்துறையினர் வேடத்தில் பதிலடி கொடுக்கிறான்… இந்நூல் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.
ஒரு துறவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீமத் பாம்பன் குமருகுருதாச சுவாமிகள் சிறந்த உதாரணம். அதற்கான இரண்டு சம்பவங்கள் நூலிலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
***
ஒன்று
ஒருநாள் மதிய வேளை.
பாம்பன் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே ஒரு மூட்டைப் பூச்சி ஓடியது. அப்போது அங்கிருந்த ஒரு சிறுவனிடம், ‘அந்தப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய் வேறிடத்தில் விடு குழந்தாய்’ என்று சொன்னார் பாம்பன் சுவாமிகள்.
அந்தச் சிறுவனோ இதற்கு முன்பெல்லாம் மூட்டைப் பூச்சியை நசுக்கியே பழக்கப்பட்டவன். சுவாமிகள் மூட்டைப் பூச்சியை அப்புறப்படுத்தச் சொன்னதைக் கேட்டவுடன் தன் விரலால் நசுக்கிக் கொன்றான்.
பாம்பன் சுவாமிகள் துடித்துப் போனார். ‘அடடா… என்ன காரியம் செய்துவிட்டாய்? ஒரு உயிரைக் கொன்றுவிட்டாயே’ என்று வருந்தினார்.
அன்றைய உணவைத் தவிர்த்தார். மௌனமானார்.
‘சுவாமி! சின்னப் பையன் தெரியாமல் செய்த பிழைய மன்னிக்க வேணும். சிறு பூச்சிதானே… தயவுசெய்து சாப்பிடுங்கள்’ எனக் கோரினார்கள், நயினார் பிள்ளை குடும்பத்தார்.
‘உங்கள் மீது தவறேதும் இல்லை. ஆனால், அதுவும் ஒரு உயிர் அல்லவா? என்னால் அந்த உயிரின் துயரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் முன்னே ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது. ஆகவே, என்னால் நிம்மதியாக உணவெடுத்துக் கொள்ள இயலாது…. இந்த மூட்டைப் பூச்சிக்காக உணவு துறக்கிறேன். ஜபம் செய்யப் போகிறேன். என்னைத் தனியாக விடுங்கள்’ என்றார் சுவாமிகள்.
***
இரண்டு
ஒருநாள் இரவு 8 மணியளவில் சுவாமி வீட்டின் மாடியில் இருந்தார். வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணிய முதலியார் மாடிக்கு வந்து, ‘சுவாமி!’ என்று அழைத்தார்.
தீப வெளிச்சமில்லை. ஆகவே, ‘யாரது?’ எனக் கேட்டார் சுவாமிகள்.
‘நான் தான் பாலசுப்ரமணியன். தங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது சுவாமி’ என்று பதில் சொன்னார்.
‘அது என் மூத்த மகன் இறந்த செய்தியே… படித்துப் பார்’ என்றார் சுவாமிகள். அதோடு தனக்கு செய்தி சொன்னவரிடம் ‘செய்ய வேண்டிய காரியங்களை செய்க’ என ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.
நிலவொளியில் அமர்ந்து தியானத்தில் கரையத் தொடங்கினார் சுவாமிகள்.
***
இந்த இரண்டு நிகழ்வுகளும் எளியவர்களுக்கு முரணாகத் தெரியலாம். அதென்ன மூட்டைப்பூச்சிக்கு இரங்குகிறவர், சொந்த மகனின் மரணத்துக்கு கலங்காமல் இருக்கிறாரே எனக் கேள்வி எழலாம். உலக ஜீவராசிகள் அனைத்தையும் நேசிப்பதும் தனக்கென சொந்ந்த பந்தங்களோ, பற்றோ இல்லாமல் வாழ்வதுதான் துறவு நிலை. அதை சீராகப் பின்பற்றியவர் பாம்பன் சுவாமிகள். இதை இந் நூலின் ஆசிரியர் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
பாம்பன் சுவாமிகளின் சரிதத்தோடு நூல் முழுக்க அவர் இயற்றிய, படித்தால் பலன் தரும் பாக்களும், அவர் மகிமையால் எத்தனையோ இன்னல்களிலிருந்து விடுபட்ட பக்தர்களின் அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியில் திளைக்க, உன்னதமான ஓர் ஆன்மிகப் பெரியவரின் முழு வரலாறை தெரிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்.
***
நூல்: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
ஆசிரியர்: எஸ்.ஆர்.செந்தில்குமார்
வெளியீடு: சூரியன் பதிப்பகம்
விலை: ரூ.125/-
முகவரி: சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
தொ.பேசி: 044 – 4220 9191 Extn: 21125
மொபைல்: 72990 27361.
இ-மெயில்: kalbooks@dinakaran.com