ஸ்டார் தோழி – 18

ஒரு தோழி பல முகம் 

Star Thozhi 2

ஷர்மிளா ராஜசேகர்

நான்…

தாயாக என்பதைக் காட்டிலும் நல்ல தோழியாக வாழ்வதே வசதியாக இருக்கிறது. அதிகபட்ச நேரங்களில் தாயாக, தோழியாக என்பதைக் காட்டிலும், நல்ல ‘மனுஷி’யாக இருப்பதையே விரும்புகிறேன். பிள்ளைகளின் படிப்பு, ஹெல்த் தவிர வேறெந்த விஷயங்களிலும் கட்டுப்பாடே கிடையாது.  அம்மா என்பதற்கு நம் சமூகத்தில் வைத்திருக்கும் அளவுகோலில் சேர்ந்து கொள்வதில்லை!

தோழியாக இருக்கையில் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘பெஸ்ட் தோழி’ என்று சொன்னால் அது நானாகத்தான் இருப்பேன். மனது என்ன நினைக்குமோ அது மட்டும்தான் வார்த்தையில் வரும். மனஸ்தாபம் வந்தால் விலகி நிற்பேனே தவிர, குறை பேசுதல் பிடிக்காது.

கஷ்டம் என்று சொல்லும் போதோ, உதவி என்று நம்பி வந்துவிட்டாலோ எப்படியும் உதவி செய்து விடுவேன். இதனால் இன்றளவும் குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. குடும்பம் என்பதை தாண்டி, வீட்டில் உள்ள முகங்களை தாண்டி, மற்ற மனிதர்களும் கூட உயிர்தான், சக மனிதர்கள்தான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தோ உதவி செய்ய, யாரோ ஒருவர் முன்னிற்பார். உதவி செய்தலில், சாப்பாட்டில் எதிர் பாராமல் கூடிய காரம் போல சிலநேரங்களில் தவறு நேரலாம்.  எப்பொழுதுமே தவறாக இருந்து விடாது.

பள்ளி

திருச்சி, ராமகிருஷ்ணா மிடில் ஸ்கூல், BHEL கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல். கோயில் என்றால் என் பள்ளிதான். சிறு வயதிலேயே எனக்கு கோபம் வர வைக்க, என் அண்ணன் என் பள்ளியைத் திட்டுவான். அடக்க முடியாத கோபம் அப்போதுதான் வரும். ‘படி படி படி’ என்பதைத் தாண்டி எங்கள் பள்ளியில் போதித்தது சுத்தம், உதவி செய்தல், நட்பு, பணிவு, கடவுள் பக்தி, நாட்டுப்பற்று, பெரியவர்களுக்குத் தலை வணங்குதல்… இந்த குணங்கள் எல்லாம் வந்துவிட்டாலே படிப்பு தானாக வந்து விடும்.

ஆசிரியர்

சுவாமிநாதன் (ஹெச்.எம்.)… சுகந்தா மிஸ் இருவரும் என்றும் நினைவில் நிற்பவர்கள். சிறு குழந்தையில் எங்கள் ஹெச்.எம்.முக்கு செல்லப்பிள்ளை நான். வகுப்பில் வரலாறு பாடம் எடுக்க வருவார். உள்ளே நுழைந்ததும் புன்னகைத்து, எழுந்து நின்று என்னை படிக்கச் சொல்வதே பெருமையான விஷயமாயக நினைத்து மனம் துள்ளிடும்.

சுகந்தா மிஸ்… அவரின் உடல்நிலை மோசமான நிலையிலும் ‘என் பிள்ளைகளின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடியாமல் ஆப்ரேஷனுக்குப் போகப் போவதில்லை’ என்று சிகிச்சையையே தள்ளிப்போட்டவர். சிறந்த ஆசிரியை. ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னுதாரணமாக என் மனதில் என்றும் இருப்பவர்.

ஊர் 

Trichy

திருச்சி. எனக்குத் தெரிந்தவரை அமைதியான ஊர், மரியாதை நிரம்பிய மக்கள், நல்ல உணவு, அதிக சாதி, மத வேறுபாடு பார்க்காத மக்கள். எந்தப் பிரச்னை நாட்டில் நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படாத நகரம். எந்தப் பகுதியில் இருந்தாலும் நினைத்த இடத்துக்கு 15 நிமிடங்களில் போய்விடலாம். சுத்தமான நகரம். இன்னும் கூட சுத்தம் இருந்தால் நன்றாக இருக்கும்.

புத்தகங்கள் 

Nenjukku needhi

suki Sivam

thabu shankar

கலைஞர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளும், இறையன்பு,லேனா தமிழ்வாணன், சுகி சிவம் அவர்களின் படைப்புகளும் என் வாசிப்பில் முக்கியமானவை. தபூ சங்கர் கவிதைகளில் சொக்கிப் போயிருக்கிறேன்.

குடும்ப அமைப்பு 

குடும்பம் என்பது அழகிய பூந்தோட்டம் போல. ஏனோ நம் குடும்ப அமைப்பில் மாற்றி, மாற்றி அடிமைத்தனம் செய்வதே முக்கியமான அம்சமாக ஆகிப் போனது. விட்டுக்கொடுத்தல், அனுசரித்து நடத்தல், ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டல் எல்லாமே யாரோ ஒருவரை அடக்கி வைத்தலிலேயே முடிந்து விடுகிறது. இது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுமே தவிர, வாழ்க்கை முழுமை அடையாது. முன்பிருந்த காலம் போல இல்லாமல் இனி வரும் தலைமுறை புரிந்து கொண்டு மாற்றிக்கொண்டால் மட்டுமே குடும்பம் முழுமையடையும்.

பொழுதுபோக்கு 

ஃபேஸ்புக் வருவதற்கு முன் புத்தகம் படிப்பதே பிடித்த விஷயம். இப்பொழுது ஃபேஸ்புக்கில் படித்துக்கொண்டிருக்கிறேன் இசை கேட்பதும் பிடிக்கும்.

இயற்கை 

Then sittu

குளிர்ந்த காற்று, மேகங்கள், ஊர்ந்து செல்லும் உயர்ந்த மலை… இப்படிப்பட்ட இயற்கை தினமும் கண்களுக்குக் கிடைத்துவிடாதே… அதனால் இயற்கையின் ஓர் அம்சமாக தினம் தினம் ரசிப்பது விடியற்காலையில் வீட்டின் முன்புற மரத்தில் வந்து அமர்ந்து தாவித்தாவி குதிக்கும் தேன்சிட்டு… இது எங்கிருந்தோ வந்து தினமும் சந்தோஷப்படுத்திச் செல்லும்.

தண்ணீர் சிக்கனம் 

water

ஒவ்வொரு மனிதரின் மிகப் பெரிய கடமை. முடிந்த வரை வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து தண்ணீர்.

இதில் மக்களாக 100 மடங்கு கவனம் தேவை என்றால், அரசாங்கம் கவனிக்க வேண்டியது 1,000 மடங்கு. மழை நேரத்தில் கிடைக்கும் அத்தனை தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி விட்டு, ‘தண்ணீரை சேமியுங்கள்…  சேமியுங்கள்’ என்பது சரியானதாயகப் படவில்லை. மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்க அரசும் முன்வர வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம் எல்லாம் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் 

ஏதோ ஒரு வகையில் ஒரு பெரிய தவறு மக்கள் பயன்பாட்டுக்குள் வந்து வாழ்க்கையின் மாற்ற முடியாத சக்தியாக ஆகியிருக்கிறது பேப்பர் கப், பேப்பர் பேக் என்று எவ்வளவு மாறினாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பது சிரமமே.

plastic-waste-road

ஒரே வழி இப்படி உபயோகத்தில் இருக்கும் பிளாஸ்டிக்கை ரீயூஸ் செய்வது. பிளாஸ்டிக் ரோடு போல வேறு என்னென்ன வகையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து, உபயோகப்படுத்திய ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் ஆக்கபூர்வமான வழிகளில் உபயோகப்படுத்தலாம்.

சமூக அக்கறை

சமீப காலங்களில் சமூகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பாக நான் உணர்வது டாஸ்மாக் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு. இவற்றை வளரும் பிள்ளைகளின் மனதை சிதறடிக்கும் விஷயங்களாகப் பார்க்கிறேன். சில இடங்களில் 9ம்  வகுப்பு, 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் வாட்டர் பாட்டிலில் மதுவை கலந்து வைத்துக்கொண்டு அருந்துவதை கேள்விப்படும் போது மனம் வேதனையடைகிறது.

மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது மனித குலத்தின் யோசிக்கும் தன்மைதான். ஒரு வருங்கால சந்ததியே போதையில் சிக்கி,  யோசிக்கும் திறனற்றுப் போய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

cellphone

இன்டெர்நெட் பயன்பாடு… பேச, சிரிக்க, அரட்டை அடிக்க என்று இருந்த காலம் மாறிப்போய்  ‘தானும் தன் போனும்’ என்று ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளப் பழகிவிட்டோம்.

மனிதர்கள்

விவசாயிகளும், நகரை சுத்தம் செயபவர்களுமே நாம் கண்ணால் காணும் தெய்வங்கள். இவர்கள் இருவரும் இல்லையென்றால் நாமெல்லாம் வாழவே முடியாத நிலையில் தள்ளப்படுவோம். எக்காரணம் கொண்டும் இவர்களை இழிவாகப் பார்ப்பதோ கிண்டலாகப் பேசுவதோ கூடாது என்பதை என்னிடம் பயிலும் பிள்ளைகளுக்கு மனதில் விதையாக ஊன்றியிருக்கிறேன்.

நாட்டில், சிறிதுசிறிதாக மனிதம் இறந்து போய்க்கொண்டிருப்பதற்குக் காரணம் நம்பிக்கை துரோகங்கள். மனித உருவில் இருக்கும் மிருகங்கள், கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனிதாபிமானத்தையும் இரக்க குணத்தையும் சாகடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியான சூழ்நிலையிலும், எவ்வளவோ விமர்சனங்கள் இருந்த போதும் மனிதாபிமானம் தவறில்லை, மனிதர்களாகவே இருப்போம் என்று நம்பிக்கை தரும் வண்ணம் நடக்கும் ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளால்தான் இன்னமும் மனிதம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

சொல்ல விரும்புவது… ரோட்டில் ஒரு பள்ளம் இருக்கிறதென்றால் உடனே ஒதுங்கி ஒதுங்கிப் போகாதீர்கள். சக மனிதன் உங்கள் பின்னாலேயே வந்து விழ வாய்ப்பிருக்கிறது. அரசாங்கம் சரி செய்யும் வரை அதில் ரெண்டு கல்லை எடுத்துப் போட்டு நாமே சரி செய்யலாம். மழைக்காலங்களில் இப்படிப்பட்ட உதவி தேவைப்படும்.

சமூக கோபம் 

ரோட்டில் போய்க்கொண்டு இருக்கும் போதே எச்சில் துப்புவது… எந்த கட்டிடமாக இருந்தாலும் எல்லா மூலையிலும் தவறாமல் எச்சில் துப்புவது…

பொதுக்கழிவறையை உபயோகப்படுத்தினால் அதை சரியாக சுத்தம் செய்யாமல், தண்ணீர் கூட ஊற்றாமல் வருவது… ‘நாம யூஸ் பண்றது தானே’ங்கிற எண்ணம் நிறைய பேருக்கு இல்லை… அப்போல்லாம் கோபம் வருது.

சொந்தங்கள் 

என்றோ ஒரு நாள் பார்க்கும் போது ஆசையாகப் பேசி, அன்பால் மனதை நிறைக்கும் சொந்தங்கள்… அதிக பட்சமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை என்றாகிப் போன நிலையில், இனி வரும் காலங்களில் நட்புகளே சொந்தங்கள்!

கற்றதும் பெற்றதும் 

எல்லா காலகட்டங்களிலும் எந்தச் சூழ்நிலையிலும் என்ன செய்தாலும் அதில் குறை சொல்லவும், குற்றம் காணவும் ஏதோ ஓர் உயிர் நம் உடனேயே பயணம் செய்து கொண்டே இருக்கும். கண்டு கொள்ளாமல் விடுவதுதான் ஒரே வழி. ஒவ்வொருவருக்காகவும் மாறினால், இறுதியில் நம் சுயத்தை இழந்து நாம் நம் தனித்தன்மையை இழந்துதான் நிற்க நேரிடும். எனக்கு எது பிடிக்குமோ, நான் எப்படியோ அப்படியே இருக்க விரும்புகிறேன்… எவ்வளவு சோதனைகள் வந்தாலும்!

நேரம்

ஸ்ரீ மனோஜ் ஹிந்தி வித்யாலயா… என்னுடைய கல்வி மையம். என் பிள்ளைகள், என் வகுப்பு எஅன என் நேரம் இனிதாக நிறைகிறது.

சமையல் 

cooking

காரசாரமாக, அதிக வெரைட்டியோடு வெஜிடேரியன் ஃபுட் மிகவும் பிடிக்கும். நான்கைந்து சைட்டிஷ்களோடு சமையலை சட்டென்று முடித்துவிடுவேன். ஜுரம், சளி, தலைவலி, வயிற்றுவலி என்று எதுவாயக இருந்தாலும் சமையிலிலேயே சரி செய்து விடுவேன். நம் ஆரோக்கியம், நம் குடும்ப ஆரோக்கியம் எல்லாம் நம் கையில்தான். சமையல் சரியாயக இருந்தால் ஆரோக்கியம் நம் வசம்!

பிறகலை 

டிராயிங், பூவேலை, தையல் என்று நிறைய தெரிந்தாலும் என்னவோ ஒன்றின் மேல் 10 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடிவதில்லை.

வீடும் நிர்வாகமும்

முழு வீட்டு நிர்வாகமும் நான்தான். முடிந்த வரை அதிகப் பொறுப்புகளை சேர்த்துக் கொள்வது என் பழக்கம்.

உடல்நலமும் மனநலமும்

உடல்நலம் நம்மைச் சார்ந்தது. மனநலம் நம்மைச் சார்ந்தவர்களைச் சார்ந்தது.  மனநலனை காத்தாலே உடல்நலத்தையும் சீராக வைத்துக் கொள்வது எளிதாகிவிடும்.

சினிமா

ஒரு மிகப் பெரிய சக்தி. சமுதாயத்தை சீர்ப்படுத்தவும் நாசமாக்கவும் அதனால் முடியும். ஆனாலும் சினிமா துறையினர் பல பொறுப்பில்லாமல் இருப்பது பெரிய ஆதங்கம். வயதானவர்கள் அதிகம் திரையரங்குக்குப் போவதில்லை. இப்பொழுதெல்லாம் அடிதடி, திருட்டு, டாஸ்மாக் போன்றவை அதிகம் சினிமாவில் இடம் பெறுகின்றன. ‘எவனையும் மிச்சம்வைக்காதே! போட்டுத் தள்ளு’ போன்ற வசனங்கள் இடம் பெறுவது சர்வ சாதாரணம். சினிமா  இளையதலைமுறையினரை நல்வழிப்படுத்த வேண்டாம்… அவர்களை வீணாக்காமல் இருந்தாலே போதும்.

கடந்து வந்த பாதை

அமைதியாக, நிம்மதியாக, சுலபமாக ஒரு வாழ்க்கை. எண்ணங்களும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். நிறைய நாடுகளுக்கு பயணப்பட, நிறைய எழுத, அரசியல் பக்கம் செல்ல என்று நிறைய ஆசைப்பட்டதுண்டு. ஆனாலும், நம் சமுதாயம், கட்டுப்பாடு, குடும்பம் என்று சிறு வட்டத்துக்குள் அமைந்த ஒரு வாழ்க்கை.

இசை 

music-symbols

இசை போல் மனதுக்கான இனிய மருந்து எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட வெறுமையையும் தனிமையையும் இனிமையாக்கும் இசை.

என் மரியாதைக்குரிய பெண்கள்

என் வாழ்வில் சந்தித்தவர்களில் என் அம்மாவும் தங்கையும்…

கட்சி, கட்சி என்று குடும்பத்தைப் பார்ப்பதில் அப்பா அதிக ஈடுபாடு காட்டாவிட்டாலும், இரும்பு மனுஷியாக பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர உழைத்தவர் அம்மா.

பிள்ளைகளிடம் ‘என்ன ஆக ஆசைப்படற?’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘டாக்டர் ஆகணும்’ என்பதே பொதுவான பதிலாக இருக்கும். அப்படிச் சொன்னதை செய்து காட்டி, நல்ல ‘மகப்பேறு’ மருத்துவராக வலம் வரும் என் தங்கை டாக்டர் கனிமொழி.

மகிழ்ச்சி தருணம் 

தினமும் மாலை என் ஹிந்தி வகுப்பில் என் குழந்தைகள் அத்தனை பேரும் செய்யும் சேட்டைகளும், பேசும் பேச்சுகளும், சந்தோஷக்கடலில் ஆழ்த்தும் மகிழ்ச்சியான தருணங்களே. பெற்றோரிடம் பேசறாங்களோ, இல்லையோ… எல்லா விஷயங்களையும் என்கிட்டேதான் சொல்லுவாங்க.

வீடு 

paint

வரைவதற்காக காஸ்ட்லி பெயின்ட்ஸ் வாங்கி, வீடு முழுவதும் அங்கங்கே வரைந்து, அரைகுறையாக விட்டுவிடும் மகனின் ஓவியங்கள்தான் சிறந்த இன்டீரியர்.

வாழ்க்கை 

வாழும் நாட்களைத் தள்ளுவது வாழ்க்கையில்லை. வாழ்வதே வாழ்க்கை.  ‘குடும்பம் இப்படித்தான் இருக்கணும்’, ‘இது சரி… இது தப்பு’ என்று ஒரு வட்டமிட்டு முடக்கிக்கொண்டு வாழாமல், கையில் கிடைத்த, கண்முன் இருக்கும் வாழ்க்கையில், பிடித்ததைப் பேசுங்கள்… பாருங்கள்… வாழுங்கள்!

அழகு

அழகு என்பது இன்னொருவரின் மனதில் இடம் பிடிக்க ஒரு ‘என்ட்ரி’ டிக்கெட் மட்டுமே. உங்களின் அன்புதான் பிறகு அழகாக மாறும். உங்களைச் சார்ந்தவர்களிடம் சரியோ, தவறோ ரசித்து வாழப் பழகுங்கள்… அவர்களின் உயிருக்கு உயிராக ஆவீர்கள். இல்லையென்றால், அவர்களின் நினைவின் மூலையில் கூட உங்களின் நினைவு இருக்காது.

ஃபேஸ்புக்

மறுஜென்மம் என்ற கூற்று உண்மையானால் நாம் ஒரு ஜென்மத்தில் சந்தித்த நபர்களை மறு ஜென்மத்தில் சந்திக்க நேரிடுமாம். அவ்வகையில் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்த களம் ஃபேஸ்புக்.  ஒவ்வொருவருக்கும் அன்பாக, நட்பாக, உயிராக நட்புகளைக் காட்டும் தளம்… அன்பான நட்பினை மனதின் நெருக்கத்துக்குக் கொண்டு வந்து வைக்கும் கடவுள் வசிக்கும் தளம்.

எதுவாக இருந்தாலும் மனதில் உள்ளதை கொட்டிவிடலாம். கேட்க, மதித்து பதில் சொல்ல என்று நட்புகள்… எந்தக் கவலை இருந்தாலும் மனதை உடனடியாக ரீசார்ஜ் செய்துவிடும்.

நல்ல மனிதர்கள் எவ்வளவோ அதைக்காட்டிலும் தவறானவர்கள் பலமடங்கு உலவும் இடம்… இருப்பினும், நாம் நண்பர்களை சரியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் நல்லதே நடக்கும்.

குடும்பம்

என் இரு மகன்கள் – அரவிந்த், மனோஜ்ராகுல். வீட்டின் பெண் பிள்ளையாக என்னைக் கொண்டாடும் கணவர்… பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ளும் பொறுப்பான குடும்பத்தலைவர்.

இன்னும் என்னை குழந்தையாகவே பாவிக்கும் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை (தங்கையாய் இருந்தாலும் அதுவும் அப்படித்தான்!)

போகும் வரும் இடத்திலெல்லாம் என்னைப் பற்றியே பேசி, கொண்டாடும் இன்னொரு அம்மா (மாமியார்), கணவரின் உடன்பிறப்பாக இருவர், அன்பான குடும்பம்!

எழுதியதில் பிடித்தது

முதன்முதலாக ‘குங்குமம் வலைப்பேச்சி’ல் வெளியானது…

‘தனியாக இருப்பதுதான் தனிமையா? பத்து பேர் நடுவுல நாம இருந்தாலும் நம்ம செல்போன் நம்ம கையில இல்லாம இருக்கும் போது வர்ற ஃபீலிங்தான் தனிமை.’

‘சளி பிடிச்சுருக்கு’, ‘பேய் பிடிச்சுருக்கு’ன்னு பிடிக்காததெல்லாம் பிடிச்சுருக்குன்னு சொல்றாங்களே… வேற என்னவெல்லாம் பிடிக்காதது பிடிச்சுருக்கு!!!

எனக்குப் பிடித்த என் எழுத்துகள்…

ஒரு வரிக்கதை…

சிறு ஊடல்

அவன் பேசட்டும் என அவள் காத்திருந்தாள். அவள் பேசட்டும் என அவன் காத்திருந்தான். இந்தக் காத்திருப்பில் தற்கொலை செய்து கொண்டது இருவருக்கிடையேயான நட்பு!

***

  • நட்புடன் இருப்பதாக நடிக்க கற்றுத் தர சிறந்த இடம் ஃபேஸ் புக்!
  • நட்பு என்னும் கோட்டினை தாண்டி சிறிது எட்டிப் பார்த்தாலும் அந்த நட்புக்கு அற்ப ஆயுள்தான்!
  • பொண்ண பெத்தவங்கல்லாம், பையன் போல வளர்க்கறேன்னு வளர்க்கறாங்க. இனி அமைதியான பையன் கிடைச்சாலும் கிடைப்பான்… அமைதியான பொண்ணு கிடைக்கறது ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டம்!
  • அன்பாக இருப்பதை தாய்மொழியிலும், கோபத்தை வேற்று மொழியிலும் வெளிப்படுத்துதல் உறவுகள் பிரியாமல் இருக்கும் ஒரு ராஜதந்திரம் தான்!
  • என் எல்லா மகிழ்ச்சியையும் ‘மகிழ்ச்சி என்பது யாதெனில்’ என்று மகிழ்வாக குங்குமம் தோழி வெளியிட்ட அனைத்தும் பாராட்டு வாங்கிக்கொடுத்தன.

Star Thozhi 1

Image courtesy:

http://fc03.deviantart.net

http://static.ibnlive.in.com

http://beta.slashdigi.com

http://www.rodalenews.com/

http://upload.wikimedia.org/

http://epikardia.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s