நூல் அறிமுகம் – 11 – செல்லமே…

Chellamae_Wrapper

குழந்தை வளர்ப்பை ‘கலை’ என்று சொல்கிறார்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலத்தில் இது ‘The art of Parenting’ என்று அழைக்கப்படுகிறது. இதற்காகவே சிறப்பு வகுப்புகள், முகாம்கள் என்று பெற்றோருக்கு பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது இந்தியாவிலும் ‘குழந்தை வளர்ப்புக்கலை’க்கான அழுத்தமான தேவை ஏற்பட்டிருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்தியாவில் குழந்தை வளர்ப்பு குறித்து பெரும்பாலான பெற்றோர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. காரணம், அன்றையச் சூழலில் நிலவி வந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை! வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை வளர்ப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இருக்கிற குழந்தைகளோடு சேர்த்து புதிதாக பிறக்கிற குழந்தையையும் அனாயசமாக வளர்த்தார்கள். பார்த்துக் கொள்ள அத்தை, சித்தி, பாட்டி, பெரியம்மா என்று எத்தனையோ பேர் இருந்தார்கள். குழந்தைகள் தஞ்சமடைய பெற்ற தாய்மடி மட்டுமில்லாமல் இப்படி எத்தனையோ அம்மாக்களின் மடியும் காத்திருந்தன. இன்றைக்கு தனிக்குடித்தனம், தம்பதி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம், தடதடத்து ஓடும் இயந்திரத்தனமான வாழ்க்கை என்று மாறிவிட்ட சூழலில் குழந்தை வளர்ப்பை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் ஒவ்வொருவருமே இருக்கிறோம். அதற்கு வழி காட்டுகிறது ‘செல்லமே…’ என்கிற இந்நூல்.

பிரசவம் தொடங்கி குழந்தைக்கு விவரம் தெரியும் வயது வரை குழந்தைகளோடு பழகுவது, அவர்களைப் புரிந்து கொள்வது, வழிநடத்துவது, கற்றுக் கொடுப்பது… என எத்தனையோ அம்சங்களை நேர்த்தியாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இந்நூலாசிரியர் எஸ்.ஸ்ரீதேவி. ‘கூட்டுக் குடும்பங்கள் அருகி, தனிக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு என்பது மிக சிக்கலான விஷயமாகி வருகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்களது எதிர்பார்ப்பு அல்லது ஆசைக்கேற்ப குழந்தையை உருவாக்கும் முயற்சியில் களத்தில் இறங்குகின்றனர். இந்த வளர்ப்பு முறையில் குழந்தைகள் சந்திக்கும் இடர்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதனால், காலப் போக்கில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு மத்தியில் உருவாகும் புரிதல் இன்மை எனும் சுவர் இறுக்கமாகி இந்த உறவை கசப்பாக்குகிறது. அடிப்படை வளர்ப்பு முறையில் உண்டாகும் பிரச்னை அவர்களது கடைசி நாள் வரை துயரத்தை சுமந்து செல்கிறது. இந்தச் சுவர்களை உடைக்க விரும்பினோம்…’ என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் எஸ்.ஸ்ரீதேவி. அதைச் செய்வதற்காக ஒவ்வொரு அத்தியாயத்திலும் மெனக்கிடவும் செய்திருக்கிறார்.

‘குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது’, ‘குழந்தைகளுக்கு அப்பாவின் நேரம் தேவை’, ‘கவனக் குறைபாட்டை கவனியுங்கள்’ என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்களை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிடுகிறார் நூலாசிரியர். அதோடு, சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு டாக்டர், கல்வியாளர், உணவு ஆலோசகர், அழகுக்கலை நிபுணர், கல்வியாளர், இயறகையியலாளர் என பல்வேறு நிபுணர்களிடம் கருத்துகளையும் சேர்த்து தொகுத்திருக்கிறார். அத்தியாயங்கள் குழந்தைகள் தொடர்பாக குட்டிக் குட்டிக் கவிதைகளுடன் தொடங்குவது அழகு!

‘வீடு முழுவதும்

உடைந்த கண்ணாடிச் சில்லுகள்

சுவரில் அப்பாவின் தடித்த வார்த்தைகள்

கொடியில் அம்மாவின் உறைந்த கண்ணீர்

பாதித் தூக்கத்தின் இடையே

வெடித்து அழ வேண்டுமென தோன்றுகிறது…’ என்று தொடங்குகிற அத்தியாயம் எளிதாக அத்தியாயத்துக்குள் ஈர்த்துவிடுகிறது.

இந்நூலைப் படைத்திருக்கும் எஸ்.ஸ்ரீதேவி, பத்திரிகை உலகில் 12 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். ‘சங்கவை’ என்ற பெயரில் கவிதைகள் படைப்பவர். கல்வி, சுற்றுச்சூழல், குழந்தைகள் மற்றும் கிராமம் சார்ந்த விஷயங்களில் ஆர்வமுள்ளவர். இதுவே இவருடைய முதல் புத்தகம்.  ‘செல்லமே…‘ தொடராக குங்குமம் தோழியில் வந்தபோதே வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. ஒரு குழந்தையை உடலாலும் உள்ளத்தாலும் வளமாக வளர்த்து, கல்வியறிவு பெற வழிகாட்டி, ஆளாக்கி, சமூகத்தில் உயர்ந்த மனிதராக ஆக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு  பெற்றோருக்கு இருக்கிறது. அதற்கு உதவுகிறது இந்நூல். சுருக்கமாக, ‘முழுமையான குழந்தை வளர்ப்பு வழிகாட்டி.’

நூல்: செல்லமே…

ஆசிரியர்: எஸ்.ஸ்ரீதேவி

விலை: ரூ.125/-

வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004.

விற்பனைப் பிரிவு தொலைபேசி: 044-4220 9191 Extn.21125.

மொபைல்:7299027361.

இ-மெயில்: kalbooks@dinakaran.com

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

நூல் அறிமுகம் – 9

நூல் அறிமுகம் – 10

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s