ஸ்டார் தோழி – 19

ஒரு தோழி பல முகம் 

4

ப்ரியா கங்காதரன் 

நான்…

கொங்கு திருநாட்டில் கொஞ்சும் தமிழோடு வெள்ளியங்கிரி, சந்திரா தம்பதிகளின் தலை மகளாகப் பிறந்தேன். மகளாகப் பிறந்தாலும் மகனைப் போல தன்னம்பிக்கையை மட்டும் தாய்ப்பாலாக பருகி வளர்ந்ததால் வெல்லும் தூரத்தில்தான் வானம் என சிறகு விரித்துப் பறந்தேன். உடன் பிறந்த தீபா திவ்யமான தோழி. என் கவிதைகளின் நாயகன் கங்காதரன்… கொண்டவளை அடக்கியோ/அடங்கியோ ஆள்வோர் மத்தியில் என் எண்ணங்களுக்கு வண்ணமும் பூச ஏங்குபவர். என் இறைவன் என்னிடமே தந்த என் செல்ல மகள் வைஷாலி… இதுதான் நான்… இவர்களும் நான்தான்… என்னுலகம் தமிழாலும் இவர்களாலும் மட்டுமே நிறைந்தது.

கற்றதும் பெற்றதும்

மருத்துவக் கல்வியை மனதில் எண்ணி பள்ளிக் கல்வியை படித்தாலும் கணினி துறையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். படித்தது அறிவியல் என்றாலும் ரசித்தது தமிழை மட்டுமே. எழுத்தில் இதயம் தொலைத்து, கவிதைகளில் வாசம் செய்து, என்னை நானே உணரும் நேரத்தில் கைப்பிடித்தேன் என்னவனை, மனதில் கொண்டவனை, என் மன்னவனை. இனிய இல்லறத்தில் நிலவாகப் பூத்து என்னை முழுமை செய்தவள் வைஷாலி. அவள் வளர, அவர் வியாபாரத்தில் வெற்றிநடை போட எனக்குக் கிடைத்த தனிமையில் மீண்டும் எழுத்தில் பயணம் செய்தேன். என் தமிழை துடுப்பாக்கி கற்பனை கடல்களில் நீந்த செய்தேன்.

பிடித்தவை 

flower

எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் பிடிக்காது என்பதே இருக்காதே! இருந்தாலும் மலை முகட்டில் ஒற்றை புல்லின் பனித்துளி ரசித்து கவிதை சொல்ல பிடிக்கும். இளையராஜாவின் இசையை இணைந்து பாடப் பிடிக்கும். வேகமாக கார் ஓட்டிச் செல்ல பிடிக்கும். என்னைப் பிடிக்கும்… எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். அப்பா மடியில் படுத்து அடம் பிடிக்க, அம்மாவிடம் செல்ல அடி வாங்க, தலை போகும் வேலையாயிருந்தாலும் என் தங்கத்துக்கு என் கையால் சமைத்துக் கொடுக்க, விட்டுக் கொடுக்க ரொம்பவே பிடிக்கும்… அதை அவர்கள் வெற்றியாக நினைத்து சிரிக்கும் அந்தச் சிரிப்புப் பிடிக்கும். பூ பிடிக்கும், புன்னகை பிடிக்கும். அம்புலி பிடிக்கும். அலை கடல் பிடிக்கும். காதல் பிடிக்கும். காவியும் பிடிக்கும். பிடிக்காத எல்லாவற்றையும் பிடித்ததாக மாற்ற முடியும் என்ற என் தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

வாசித்தலில் வருடியவர்கள் 

சில நேசிக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சில…

s.ramakirhsnan

1. எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி.’ வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணம் செய்கிற அனுபவம்… ஒவ்வொரு தேசமாக ஒவ்வொரு மனிதராக அவர் சந்தித்த பயணத்தின் சுகானுபவம் படிக்கும் பொழுதே நம்மையும் பற்றிக் கொண்டு விடுகிறது. இவரின் வரிகளை கடக்கையில் ‘அட… ஆமாம்! எப்படி இதை நாம் ரசிக்காமல் விட்டோம்… நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார்?’ என மனசு கேட்காமல் இருபதில்லை.  புத்தகத்தின் சில தேன் துளிகள்…

‘சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது…’

நிலமெங்கும் பூக்கள்…

‘பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்… எத்தனைவிதமான மலர்கள்..! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும்…’

உறங்கும் கடல்… 

‘தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன…’

balakumaran

2. எழுத்து சித்தர் பாலகுமாரன் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்… மனசோ உடம்போ சோர்வாக இருக்கும் பொழுது இவருடைய புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை.
இவருடைய வரிகளில் எனது அடி நாதம் வென்றவை…
மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.
‘அக்கறைக்குப் பெயர் காதல், காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல்.  காதல் என்பது மதித்தல்.
உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை.’ – ‘குன்றிமணி’யிலிருந்து…

‘விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல. சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.
ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன். தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.’- ‘சுழற்காற்று’ நூலிலிருந்து…

‘நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதைவிடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.’ – ‘உத்தமன்’ புத்தகத்திலிருந்து…

‘பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும் மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.’ – ‘என் கண்மணித்தாமரை’யிலிருந்து…

RAMANICHANDRAN

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர் ரமணிசந்திரன். அந்தப் பெயர் மனதில் பதிய, சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன். இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாகக் காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களைச் சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. சில நேரங்களில் அந்த கதாநாயகிகளாகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு. படிக்கும் போதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது.

vairamuthu

4. திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று நினைததுமுண்டு. ஆனால், ‘கருவாச்சி காவியம்’ என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
வைரமுத்துவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிவிட்டது. படிக்கும் போதே உயிர் ஒடுங்கி, ஒரு நடுக்கம் வருவதைத் தடுக்க முடியாது. கருவாச்சி, ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவன் அப்பா சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம்… இவர்கள் எல்லோருடனும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த அனுபவம் கிடைத்தது. காவியம் என்பது இதிகாசம் தொடர்பான ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணத்தை ‘கருவாச்சி காவியம்’ முற்றிலும் மாற்றிவிட்டது.

Pa Vijay

5. நிலவையும் தாளில் கொண்டு வந்தவர் வித்தக கவி பா.விஜய். சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இவருடைய ‘உடைந்த நிலாக்கள்.’ ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுகொண்டே போகும் சாதனை மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த பெரும் மாற்றங்களுக்கு பெண் மட்டுமே முக்கிய காரணம்.
‘பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன்… தவழ்ந்திருப்பேன். முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன். தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன். தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன். மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்.’

என்னை கவர்ந்த எனது வரிகள் 

Window

ஜன்னல்
ஜன்னல்களுக்கு நான்
நன்கு பரிச்யமானவள்…
இன்னும் சொல்லப்போனால்
ஜன்னல்கள் குடும்பத்தில்
நானொரு கம்பி போன்றவள்!

இந்த ஜன்னல் வழியே
நான் வீசி எறிந்த திண்பண்டத்தின்
மிச்சத்தை இழுத்து ஓடிய எலியை
பின்னாளில் ஒரு காக்கா கொத்திக்
கொண்டிருந்ததும் பிறகு ஒரு
நாளில் அந்த இறந்து கிடந்த
காக்கையை எறும்புகள் மொய்க்க…

ஒரு உணவு சுழற்சிமுறையை காணநேர்ந்தது இந்த ஜன்னல் வழியேதான்!

இந்த ஜன்னல் வழியே
வீசி எறிந்த மாங்கொட்டை ஓன்று
மரமாகி கூட போனது!
இயற்கைக்கு என்னால் செய்ய
முடிந்தது இந்த ஜன்னல் வழியேதான்!
மழையில் நனைவது அவ்வளவு
சுகமென்று கவிதை எழுதி
வைத்துவிட்டு மழையில் நனையாமல்
வேடிக்கை பார்ப்பதும் இந்த
ஜன்னல் வழியேதான்!
பக்கத்து வீட்டுகாரனும்
எதிர்த்த வீட்டுகாரனும்
தெரு சண்டைகளில் இறங்கி
சண்டையிடும்போது சமூகத்தை
பார்த்து முகம் சுளித்ததும்
இந்த ஜன்னல் வழியேதான்!
ஒரு வேடிக்கையாளனுக்கு
இந்த ஜன்னல்கள் எப்படியெல்லாம்
விசுவாசமாக இருக்கிறது!
எனக்குதான் ஜன்னல்களிடத்தில்
நன்றியுணர்ச்சி அறவே இல்லை…
நான் இல்லாத நேரத்தில் அதை மூடி வைத்து விடுவேன்!

ஆளுமை செய்பவர்கள்… 

என் பாட்டி… கடின உழைப்பும் சிக்கனமும் கொண்டவர். படிப்பறிவு இல்லாவிட்டாலும், எதை எப்படி செய்ய வேண்டுமென்று அழகாக யோசித்து செய்வார்கள். தள்ளாத வயதிலும் தனி ஆளாக தோட்டத்தில் துறு துறு என சுற்றித் திரிந்து வேலையாட்களிடம் விவேகமாக வேலை வாங்கும் பாட்டியிடம் 10 வயது வரை வளர்ந்ததால் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும்தான் இன்று நான் செய்யும் வியாபாரத்திலும் வெற்றிநடை போட உறுதுணையாக இருப்பதாக உறுதியிட்டுக் கூறலாம்.

லக்ஷ்மி டீச்சர்… ஆ’னா, ‘ஆ’வன்னா கைப்பிடித்து எழுத வைத்தவர். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் கூட இவர் பாடம் எடுத்தால் கற்கும் ஆர்வம் வந்துவிடும். பெயரிலேயே லக்ஷ்மியை வைத்து கொண்டு வாழும் சரஸ்வதியாக வலம் வந்தவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் கல்வி சேவை புரிந்தவர். ‘ஏன் டீச்சர் கல்யாணம் செய்யலை?’ என்று கேட்டால், ‘கல்யாணம் ஆனா ஒரு புள்ளை, ரெண்டு புள்ளைக்குத்தான் தாயா இருக்க முடியும். இப்போ பாரு… எம்புட்டு பிள்ளைக்கு தாயாக இருக்கேன்’ என்று சொல்லி கல்வி மீது காதல் வர வைத்தவர்.

வைஷாலி… குழந்தைத்தனத்தோடு  இருந்தவளைத் தாயாக மாற்றியவள். குழந்தையாக, ஆசிரியராக, தோழியாக, தாயாக, மகளாய் பன்முகம் காட்டுபவள்… என்னை முழுமை செய்த முழு நிலவு அவள். என் வாழ்வின் அர்த்தமே இவள்தான்.

அப்பா… அப்பா என்று சொன்னதும் எனக்கு ஆயிரம் எண்ணங்கள், பெண் குழந்தைக்கு அப்பாவையும், ஆண் குழந்தைக்கு அம்மாவையும்தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். எது எப்படியோ, என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு ஒரு படி மேல் என் அப்பாவைப் பிடிக்கும். எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோதான். எப்போவாவது வீட்டில் சின்னச் சின்ன சண்டை வந்தாலும்  நா அப்பா சைடுதான். சரியோ, தப்போ அப்பாவைதான் சப்போர்ட் பண்ணுவேன். எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோபக்காரர். அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். இதெல்லாம் சொல்லி வளர்த்ததனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பாவிடம் இருந்து வந்தது. அப்பாவிடம் ரொம்பப் பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம்… ‘எங்கே போய்ட்டு வந்த? ஏன் லேட்டு?’ போன்ற எந்தக் கேள்விகளையும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

என் சமையல் அறையில் 

kitchen

எனது சமையல் அறை எனது இரண்டாவது பூஜை அறை. ஒவ்வொரு முறை உள்ளே நுழையும் பொழுதும் கர்பககிருகத்தில் செல்லும் உணர்வு ஏற்படும். எப்பொழுதும் நாம் அன்பா சமைத்து, அதை எல்லோரும் ஆசையாக ரசித்து சாப்பிடும் அந்த உணர்வை, சந்தோஷத்தைப் பகிர வார்த்தைகளே இல்லை. என்னதான் வேலை, டென்ஷன் இருந்தாலும் வீட்டுக்குப் போனதும் ‘மாமாவுக்கு இதைச் செய்யணும்… அவருக்கு இது பிடிக்கும்… வைஷு இது வேணும்னு ஆசைப்பட்டாளே…’ என்று நினைக்கும் பொழுதே என்னோட டென்ஷன் எல்லாமே மறந்து போயிரும். என்னை அனுதினமும் புதுப்பிக்கும் மற்றொரு கோயில் எனது சமையல் அறை.

கோவையும் நானும் 

ooty

சிலிர்க்கும் சிறுவாணி (உலகின் சுவையான 2வது குடிநீர்), மனம் மயக்கும் மருதம் (மலை),  தீரனின் வீரம், கரிசல்காட்டில் நெரிசல் கட்டிய பஞ்சாலைகள், பல உன்னத கண்டுபிடிப்பை உலகுக்குத் தந்த ஜி .டி. நாயுடு, கல்விக்கு கண்திறக்கும் ஏராளமான கல்லூரிகள், கார் சாம்பியன் கார்த்திகேயன், தென் இந்தியாவின் மான்செஸ்டர், கலைவண்ணம் சிலைவண்ணம் கொண்ட பேரூர், கற்பகவிநாயகன், அன்னபூர்ணா இட்லி சாம்பார், பாலக்காட்டு கணவாயின் பசுமையான காற்று, வாழ முதுகெலும்பான விவசாயத்துக்கு முதல் கல்லூரி, மரியாதை அறிந்த மக்கள், இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தியாவின் ஒரே புகைவண்டி (ஊட்டி), எட்டும் தூரத்தில் ஏலகிரி, தொட்டுவிடும் தூரத்தில் தொட்டபேட்டா, பாரதி கண்ட சேரநன்னாட்டிளம் பெண்களுடன்… மார் தட்டி சொல்வேன் என்னை கொங்கு தமிழச்சி என்றே!

சமூக மாற்றம்

ஒரு சமூகம் மாற்றம் பெறுவது கல்வியால் மட்டுமே! ஒருவனுக்குக் கல்வியை அளித்து விட்டாலே போதும்… அவன் அவனையும் அவன் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வான். ஆனால், அதே நேரம் அதற்குத் தகுந்த பாடத் திட்டங்களில் நமக்கு மாற்றம் தேவை என்பதும் உண்மை. நமது பாடத் திட்டங்கள், இன்னும் மெக்காலேயின் எழுத்தர்களை உருவாக்கும் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒரு மிகச் சிறந்த அடிமையை எப்படி உருவாக்குவது என்பதுதான் மெக்காலே உருவாக்கி இந்திய சமூகத்துக்குப் பரிசளித்த கல்விமுறை. நாம் அந்த முரணை இன்னும் கடக்காமல் பயணிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடுமை. இப்போது சமச்சீர் கல்வி குறித்த விவாதத்தில் நாம் எல்லோரும் குதித்திருக்கிறோம், ஆனால், அடிப்படைக் கல்வி மற்றும் கல்விச் சூழல் குறித்த எந்த விவாதக் களங்களையும் மேடைகளையும் நாம் உருவாக்குவதே இல்லை. இப்போது நம்மில் பலர் உரையாடிக் கொண்டிருக்கிற சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் அரசியல் முடிவுகள் குறித்த விமர்சனங்களாகவும், நம்மையும் அறியாத ஒரு பக்கச் சார்பு உரையாடல்களாகவுமே இருப்பதை ஆழமாகக் கவனிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் காலம் காலமாக ஒரு வியப்பான, மிகக் கொடுமையான முரண் இருக்கிறது. அந்த முரணை நம்மில் பலர் கடந்து வந்திருக்கிறோம். கடக்க முடியாமல் தேங்கிப் போனவர்களாகவும் இருக்கிறோம். அந்த முரண், கல்வியை ஒரு நினைவாற்றல் தொடர்பான திறனாக மாற்றி வைத்திருப்பதில் இருந்து தொடங்குகிறது. நினைவாற்றல் கல்வியின் ஒரு மிக இன்றியமையாத பகுதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நினைவாற்றலே கல்வி என்கிற ஒரு முரணை நாம் விரைவில் கடந்தாக வேண்டும்.
கல்வி என்பதை பொருளீட்ட உதவும் கருவி அல்லது வாழ்க்கையின் பொருட் தேவைகளை எதிர்கொள்ள நாம் கண்டறிந்த ஒரு தகுதி என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை நமது அறிவுலகமும் அரசும் கட்டமைத்திருக்கின்றன. கல்வி உறுதியாகப் பொருளீட்ட உதவும் ஒரு கருவிதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், அடிப்படைக் கல்விக்குப் பொருளீட்டுவதை விட மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது. அதுதான் சமூக மாற்றம்.

சமுக மாற்றத்தில் எனது பங்கு 

bharathi

‘அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல்… அதனிலும் ஆங்கோர் ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்…’ என் பாரதி எங்கோ, என்றோ சொன்னது கனவிலாட… இன்று வரை அதை நனவாக்க
என்னால் முயன்ற முயற்சியை செய்து கொண்டு இருக்கிறேன்.
வருடம் ஒரு 12ம் வகுப்பு மாணவர்… படிக்கும் ஆர்வமுவும் வெல்லும்  எண்ணமும் கொண்ட, படிக்க வசதி இல்லாத ஒருவரைத் தேர்வு செய்து அவரின் இளங்கலைப் படிப்பு முழுவதும் எங்கள் குடும்பச் செலவில் எங்கள் நிறுவன முயற்சியில் செய்கிறோம்.
இறைவன் அருளில் அதைப் பன்மடங்காகச் செய்யணும்.

எழுத்தின் இலக்கு

எழுதும் எல்லோருக்கும் உள்ள ஆசைதான் எனக்கும்.
கருவில் இருக்கும் குழந்தையை ஈன்றெடுக்கும் அன்னையின் ஆவலில் நானும்… ஆம். என் கவிதைக் குழந்தையை புத்தகமாக  பிரசுரம் செய்து, ஆசை தீர அள்ளி முகர வேண்டும் என்பதே…

ஒவ்வோர் எழுத்தையும் அன்னையாக ஆராதனை செய்து, நான் பெற்றெடுக்கும் என் கவிதைக் குழந்தை அனைவரின் கையிலும்  தவழ வேண்டும். ஓர் அன்னையாக  அதனை நான் ரசிக்க வேண்டும். என் வரிகளின் வாயிலாக இந்த உலகை காண வேண்டும். ஒவ்வொரு வரிகளும் பெறும் கைதட்டலை உள் வாங்கி உணரவேண்டும். என் கவிதைக் குழந்தையை எல்லோரும் ரசிக்கும் பொழுது… பிணியில்லா உலகும், பசியில்லா வாழ்வும், குறைவில்லா கல்வியும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நன்றி சொல்கிறேன்.

Image courtesy:

http://www.thenewsminute.com/

http://imgkid.com/

http://wallpaperjpeg.com/

http://upload.wikimedia.org/

http://www.goodluckkitchen.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

13

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s