ப்ரியங்களுடன் ப்ரியா – 3

picture of happy mother with baby over white

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன… 

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம்.

baby sleep

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான தாய்க்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 850 மி.லி. அளவுக்கு பால் சுரக்கிறது. இதற்காக ஒரு தாய்க்கு 600 கலோரி அளவுக்கு சக்தி தேவைப்படுகிறது.  ஆக, சத்தும் சக்தியும் உள்ளத் தாய்க்குத்தான் முழுமையான தாய்ப்பால் சுரப்பு இருக்கும். பிரசவித்த முதல் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு தாயின் மார்பகத்தில் நல்லக் கொழுப்பு அதிகமுள்ள சீம்பால் (Colostrum) சுரக்கிறது. இந்தச் சீம்பால் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். இதைப் பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் போது, கருவறையில் சிசுவாக இருந்து குடித்த பனிக்குட நீர் அசுத்தங்களை வெளியேற்றி, வயிறு மற்றும் குடலைச் சுத்தமாக்கி, குழந்தைக்கு  நல்லப் பசியை உண்டாக்குகிறது. இதன் பின்னர் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு முழுமையான செரிமானம் மற்றும் முழுமையான சத்து கிரகிப்பு நிகழ்ந்து விரைவாக வளர்தல் நிகழ்கிறது. எனவே, பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6ம் மாதம் 

ஆப்பிளின் தோலை சீவி, குக்கரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்துக் கொடுக்கலாம். சத்து மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது… குழந்தைக்கு ஒரு புது உணவைக் கொடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு வேறு எந்தப் புது உணவையும் அறிமுகப்படுத்தக் கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிகவும் கொஞ்சமாகவும் அடுத்த நாள் அளவை சற்றுக் கூட்டியும் தர வேண்டும்.

Happy baby laying on belly

7, 8ம் மாதங்களில்…

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம், ஆப்பிள், வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கெட் ஊற வைத்துக் கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமாகக் கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுக்கவும். பருப்புடன் , கேரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். பசும்பாலை அறிமுகப்படுத்தவும்.

9 ,10ம் மாதங்களில்… 

இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை போன்றவற்றைத் தரலாம்.

11, 12ம் மாதங்களில்… 

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டை குழந்தைக்குப் பழக்கப்படுத்தவும். உணவைக் கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் ஜீரணம் ஆகாது. பதிலாக இந்த அட்டவணையை கடைப்பிடித்துப் பாருங்கள்.

அட்டவணை

காலை

7:00 மணிக்கு குழந்தை எழுந்தால், எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்.

8:00 மணி – குளிக்க வைக்கலாம். இந்தப் பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்கள் குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.

8:30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்.

10:30 – ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுக்கவும். அல்லது ஒரு பழம்.

மதியம்

12 :00 – திட உணவு.

4:00 மணிவரை எதுவும் தேவை இல்லை. பிறகு பால் கொடுக்கலாம். கூட இரண்டு பிஸ்கெட் அல்லது ஒரு ரொட்டித் துண்டு.

இரவு

7:30 மணிக்கு முழு திட உணவு கொடுக்கவும்.

9:00 மணிக்கு மீண்டும் பால்.

baby 3

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஈர்ப்பு குறையும். இந்தக் காலகட்டமும் இரண்டாம் உலகப் போரும் ஒன்று. (அம்புட்டு போராட்டம் நடக்கும்).

நாம்தான் பொறுமையாக குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலை அறிந்து பிடித்தவற்றை, பிடித்த சூழலில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போதே சாப்பாட்டின் அருமையையும் சேர்த்து ஊட்ட வேண்டும்.

உணவு விளையும் முறைகள்… சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் குழந்தைகள்.  எல்லாவற்றையும் சொல்லி உணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் உணவின் மீது ஒரு மரியாதையை குழந்தைகள் உணர்வார்கள். உணவை வீண் செய்யக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து வளரும்.

சிந்தாமல் சாப்பிடச் செய்வது ஒரு கலை 

வைஷு குழந்தையாக இருக்கும் போது ஒரு முறை சொன்னேன்… ‘சிந்தாமால் சாப்பிடு வைஷு’ என்று.

‘பாப்பான்னாலே சிந்திதான் சாப்பிடும். இது கூட தெரியாதா உனக்கு மக்கு அம்மா’ என்று ஒரு போடு போட்டாள். அதுதான் குழந்தைகள். அவர்கள் உலகம்  விசித்திரமானது. சாப்பாட்டில் விளையாடுவார்கள். விளையாட்டை சாப்பாடு ஆக்கிவிடுவாகள்.

இந்தக் காலத்தில் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.

முடிந்த வரை ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்கள் நேரங்களை குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள். அது அவர்களின் மனதுக்கும் நல்லது… உடல் நலனுக்கும் நல்லது.

குழந்தைகள் தானே சாப்பிட ஆரம்பித்த பிறகு ஏற்படும் மன மாறுதல்கள்…

  1. குழந்தையின் சக்தி உருவாக உணவு மாற்றப்படுகிறது: குழந்தை தன் கையால் அள்ளிச் சாப்பிடும் போது அதன் கை வழி சக்தியால் உணவை அதன் உடல் உள் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் உணவு சுலபமாக செரித்து கிரகிக்கப்படுகிறது.
  1. பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், மண்ணீரல் செரிமானம் சிறப்பாக நிகழ்கிறது.  மாவுச்சத்தின் உடனடி சக்தி குழந்தைக்கு கிடைத்து சுறுசுறுப்படைகிறது.
  1. பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை தன் இயல்புக்கு சாப்பிடுவதால் பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், முழுமையான செரிமானம் நிகழ்ந்து போதுமான  சக்தியும் தரமான சத்தும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறது.
  1. உணவு மட்டுமே வீணாகிறது: குழந்தையின் விளையாட்டால் உணவு சிந்தப்பட்டாலும், குழந்தை, பசிக்கு சாப்பிடுவதால், குழந்தையின் ஆரோக்கியம்  கெடுவதில்லை. உணவு வீணானால்  பரவாயில்லை. குழந்தை வீணாகக்கூடாது.  இது கொஞ்சம் வருத்தம்தான்… உணவு வீணாவதில். ஆனால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
  1. பசிக்கு சாப்பிடுகிறது: பசிக்கு சாப்பிடப் பழகுவதால், பசியைத் தீர்க்கும் உணவுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் நோய் வசம் சிக்காமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
  1. சுயமாகச் செயல்படக் கற்றுக் கொள்கிறது: தானே உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கமானது சுயமாக செயல்படுவதற்கு அற்புத வாய்ப்பாக அமைகிறது. இதனால், குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது.
  1. ஒழுக்கம் வளர்க்கப்படுகிறது: சுய ஒழுக்கம் வளர்க்கப்படுவதால் மேம்பாடு நிகழ்கிறது.

எதையும் சுயமாக செய்யப் பழக்கப்படுத்தப்படுவதால், அவரவர் பொறுப்பு உணர்த்தப்பட்டு, உறவு நிலை மேம்படுத்தபடுகிறது. இதனால், எதிர்பார்ப்பற்ற அன்பு நீடிக்கிறது.   ( நன்றி: டாக்டர் அனுராதா கிருஷ்ணன் – கோவை)  உங்கள் குழந்தை தானாக சாப்பிட வேண்டுமாயின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து  சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக எல்லா வகை உணவுகளையும்  ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவதை முன்னுதாரணமாக நம் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.  இவ்விதமாக நாம் கையாளும் போது நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். சிறுகச் சிறுகத்தான்  நம்  குழந்தைகள் மாறுவார்கள். நாம் நல்ல முன்னுதாரணமாக இருக்கும் வரை நம் குழந்தைகளும் கண்டிப்பாக  நல்ல வழிமுறைகளுக்கு வருவார்கள்.

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன … 

pri2

  • ப்ரியா கங்காதரன்

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s