ப்ரியங்களுடன் ப்ரியா – 4

பயணங்கள் முடிவதில்லை!

journey

பயணங்கள்

சுவாரஸ்யமானவை…

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்!

யாருமற்ற சாலை… கதிரவனைத் தன் கிளைக்குள் 

மறைக்கும் அடர் மரங்கள்… அடிவானத்திலிருந்து மெல்ல 

கசிவது போல வெளிச்சம்… தலை கோதிச்செல்லும் காற்று

காற்றும் மெல்லிய வெளிச்சமும் ஏகாந்தமான வெளியும்

மரங்களும் என்னுடன் பயணிக்க 

நானும் பயணிக்கிறேன்.

சின்ன வயதில் மிகவும் ஆசைப்படும் விஷயங்கள், கிடைத்த பிறகு வெறுத்துப் போய்விடுவதுண்டு. ஆனால், எப்போதுமே எனக்கு வெறுக்காத விஷயம் பயணங்கள்.  பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை  நிறைத்துக் கொண்டு திரும்பும் வாய்ப்புக் கிடைக்கிறது.  பயணம் என்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அது பேருந்தாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும் சரி. விமானமாக இருந்தாலும் சரி. ஆனாலும், பேருந்துப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் சந்திக்கும் விதவிதமான மனிதர்களையும், காணும் பல அற்புதக் காட்சிகளையும் விமானத்தில் செல்லும்போது நிச்சயம் காணமுடியாது.

Tamilnadu_Bus

பேருந்துப் பயணங்கள்

சிறு வயதில் பேருந்தில் செல்வதே அலாதியான இன்பம் தரும் அனுபவமாகத்தான் இருந்தது.  முதல்முறையாக தனியாகப் பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனையைச் செய்ததைப் போன்ற ஓர் ஆனந்தம். இத்தனைக்கும் அந்தப் பயணம் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 24 கி.மீ. மட்டுமே. ஆனால், அந்த 24 கி.மீ. தூரப் பயணத்தைப் பற்றி நாள் முழுக்கப் பேச விஷயங்கள் இருந்தன. கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தது முதல் தினமும் பேருந்துப் பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது.  அந்த அரை மணி நேரப் பயணத்தில் பார்க்கும் நிகழ்வுகளை தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.   ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தாலே எரிந்து விழும் நடத்துநர்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, நாலரை ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் சில்லரை கொடுத்த நடத்துநர்கள் ஆச்சரியமானவர்களாகத்தான் தெரிந்தார்கள்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து ‘‘எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க’’ என்று கமென்ட் அடித்த  மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டுவிட்டு, கண்களை மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில்தான்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும், நடத்துநரோ அல்லது ஒரு நடுவயதுப் பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் காண்பதும் பேருந்துப் பயணங்களில்தான்.  இன்று  பேருந்தில் ஏறியவுடன் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பக்கத்தில் இருப்பவர் யார், என்ன என்கிற அக்கறை இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் இந்த நினைவுகள் எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன.

train

ரயில் பயணங்கள்

காலம் பல கடந்தாலும் என்றும் சுகம் தரும் இனிமையான பயணம் ரயில் பயணமே.  எப்படித்தான் இந்த ரயிலுடன் சேர்ந்து மரங்களும் வேகமாக நகர்கின்றனவோ என வியந்த சிறுவயது பிராயத்தில்ஆரம்பித்தது  என் ரயில் சினேகம்.

ரயில் பயணத்தில் நள்ளிரவில் கண்  விழித்து,  இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ?

போட்டி  போட்டுக் கொண்டு ஜன்னலோர  இருக்கையில் அமர்ந்து வயல்வெளிகளையும் மலையையும் ரசிக்க ஆரம்பிக்கையில் தொடங்கியது இயற்கை மீதான காதல்.

காற்றை ரயில் பயணத்தின்  அருகாமையின்றி  உணர இயலாது. தலையைக் கோதிவிடும் காற்று. முகத்தில் விரல்களால் தடவிவிடும் காற்று. உடம்பின் மீது  பூ உரசுவது போல  உரசும்  காற்று. காது மடல்களில் கூச்சத்தை உண்டாக்கும் காற்று. நீருற்றுப் பீறிடுவது போல பொங்கி வழியும் காற்றின் அருகாமையில், ஒரு காகிதத்தைப்  போல நம்மைக்  காற்றிடம் ஒப்படைப்பது ரயில் பயணங்களில் மட்டுமே நிகழும் அற்புதம்.

சிறுவயது பயணம் ஒன்றில், பக்கத்து இருக்கை பயணி கொடுத்த நாவலை வரிவிடாமல் படித்ததில் தூவப்பட்டது வாசிக்கும் பழக்கத்துக்கான விதை. இப்படிப் பல வகைகளில் மனதுக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது ரயில் பயணம்.

நிசப்தமான நிசப்தம். வெளிச்சமற்ற விளக்கொளிகள். பறவைகள் இல்லாத முகில். யாரும் கடக்காத  பாதைகள். தனித்திருக்கும் பனைமரங்கள். மேகம் கவிழாத நீர்நிலைகள். பாறைகள். பரவிக் கிடக்கும் கற்கள். தெறித்த மண்பானையின் வயிற்றை நினைவுபடுத்தும் பாலத்தின் அடிப்பகுதி என இன்றும் நீள்கிறது ரயில் பயணங்களில்  குழந்தை போல் கும்மாளமிடும் மனது…

Plane landing by sunrise

விமான பயணங்கள்

விமானம்… எப்போதுமே எனக்கு ஓர் அதிசயம். அதிசயம் என்று சொல்வதைவிட பிரமிப்பு என்றுகூடச் சொல்லலாம். சிறு வயதில் எங்கள் ஊரில் விமானம் பறப்பதை எப்போதோ ஒருமுறை பார்த்ததால் வந்த பிரமிப்பா என்று தெரியவில்லை. விமானச் சத்தம் கேட்டாலே வீட்டுக்குள் இருந்து அவசரமாக வெளியில் ஓடி வந்து பார்த்த காலங்கள் இன்றும் மனதில் நினைவுகளாக  இனிக்கின்றன.

முதன்முதலில் எதைச் செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான். நான் முதன் முதலில் விமானத்தில் செல்லப் போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணாந்து பார்த்த ஒன்றில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன?

நான் கற்பனையில் நினைத்ததைவிட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர்கூட கூடவோ, குறையவோ இல்லை. ஐந்து நிமிடங்களில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையே கிடைத்தது.

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்லச் செல்ல, காதினுள் ‘கொய்ய்ய்’ என்று ஒரு சத்தம் மட்டுமே கேட்டது.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாக ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாக உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாக ஓடத் தொடங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாக சிட்டெனப் பறந்திட சிறகுகள் விரித்துப் பறக்கத் தொடங்கியது விமானம்.

‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது’ என்று சொல்வார்கள். ஆனால், இந்த இயந்திரப் பறவை உயரே போகப் போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தன. ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் பிறகு வெறும் மேகம் மட்டும்தான் தெரிந்தது.  என்ன இருந்தாலும் பகல் நேர விமானப் பயணம் போல ஓர் இனிமையான பயணம் வேறில்லை.

விமானம் வானில் ஏற ஏற, விதவிதமான  உணர்வலைகள். ஏதோ திடீரென வாய்க்கும் வயிற்றுக்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால் எழில் ஓவியமாகக் காட்சியளிக்கிறது. விடிகாலை மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவமாகக் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின் ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்புப் போலத் தெரிகிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை இன்பமாக  உணரச் செய்தது.

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு சிறு கடுகாக  மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  மனதைக் கொள்ளை கொள்கிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  மேகக் கூட்டங்களின் மீது மிதக்கையில் பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவுக்கு கொள்ளை அழகுடன் விளங்கின மேகக் கூட்டங்கள்.

பகலவன் துயில் கலைந்து தன் மேகப் போர்வையை விலக்கிச் சென்றானோ அல்லது தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றானோ மனசு அறியவில்லை. வான் வெளியில் மங்களகரமாக  பொன் மஞ்சள் வண்ணத்தில் அழகான பட்டுக் கம்பளம் விரித்து இருப்பதைக் காணும் பொழுது குழந்தையாக துள்ளிக் குதித்தது மனது.

பயணங்கள்

சுவாரஸ்யமானவை

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்…

பயணங்கள் முடிவதில்லை!

– ப்ரியா கங்காதரன்

pp1

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

Image courtesy:

http://cdn2.itpro.co.uk

https://upload.wikimedia.org

http://www.railpictures.net

http://www.righttobe.ca

1 thought on “ப்ரியங்களுடன் ப்ரியா – 4

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s