மழை போலவே வாழ்க்கையும்!
பல துளிகள் நிறைந்த
மழை போலவே வாழ்க்கையும்…
கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக
மாறிய மழையை போலவே …
யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..
இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும் தருணம் போலவே..
நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே..
ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும் தருணம் போலவே..
வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….
மழை பற்றிய நினைவுகள் சற்று சின்னதாக இருந்தாலும் மனதைவிட்டு
நீங்காதவை.. எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது..
மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?
ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.
ப்ரியா குட்டி மழைல நனையாத .. சளிப்பிடிச்சுக்கும்னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு… நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, ஆலங்கட்டி மழை பேஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சு போய்ருக்கு னு எங்க ஆத்தா சொன்னப்ப என் தலைல விழுந்தா என்ன ஆகும்..?னு யோசிச்சிருக்கேன்..
கடவுளின் தேசத்தில் தான் என்னோட பால்ய பள்ளி வாழ்க்கை தொடங்கியது .. விழித்திருக்கும் நேரம் முழுதும் மழையும் மழை சாரலும் மட்டுமே காணும் தேசம் என்பதால் இப்போ வரை என்னால மறக்க முடியாது என் பாட்டி எனக்கு முதல் முதலில் வாங்கி தந்த சின்ன குடை ..
இப்போதும் என் கைபையில் எப்போதுமே ஒரு சிறு குடை இருக்கும் ,, அதை விரிக்கும் போதெல்லாம் கேரளா மழை சாரல் நினைவில் விரிவதும் தவிர்க்க முடியாது.
பருவ மழையை விட வசந்தகாலத்தின் தொடக்கத்தில் பெய்யும் கோடை மழைக்கு தனி விஷேசம் உண்டு. வெய்யிலின் தாக்கத்தை குறைக்க பெய்யும் மழை அது.
கோடை காலத்தில் பொதுவாக மாலை அல்லது இரவில்தான் மழை, இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்..
சில நேரங்களில் ஆலங்கட்டி மழை கூட பெய்யும்.. அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான். மழையில் நனைய வேண்டாம் காய்சல் வரும் என்பவர்கள் கூட கூட கோடை மழையில் நனைய சம்மதம் சொல்லிவிடுவார்கள்.
மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் தும்பி, எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க,தோட்டத்தில் சுற்றி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.
காளான் எல்லாரு கண்ணுக்கும் தெரியாதுனு சொல்லுவாங்க எங்க ஆத்தா.. அதைப் பிடிங்கும் பொழுது வரும் மண் வாசனைக்கு எதுவும் ஈடாகாது.
எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் தும்பிக்கும்,ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. தும்பியின் வாலைப் பிடித்து விளையாட பிடிக்கும்..
சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் தும்பியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
மனசு வளர வளர மழை மீதான காதல் அதிகம் ஆகிடுச்சு.
ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ
இந்த பாடல் வெளியான நாளில் இருந்து இப்போ வரைக்கும் மழை வரப்ப ஒரு குடை எடுத்து போயிட்டு ரேவதி ஆடியது போல
மழையில் ஆட மனசு துள்ளுவது எனக்கு மட்டுமல்ல .. இதை வாசிக்கும் எல்லோருக்குமே என்பது உண்மையே ..
எங்கள் ஊரில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். வருடத்தில் பாதி நாட்கள் மழை நாட்களே பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈரக்காற்று மட்டுமே வரும்.. விசுவிசுவென வீசும் ஈரக்காற்றில் வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்திலும் சுற்றி திரிந்த நாட்களை நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது…
ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?
அது ஒரு அற்புதமான அனுபவம். ஆற்றின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும். எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது. அது தான் இயற்கையின் வரம்.
கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் கோவை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..
மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது. காலையில் பள்ளிக்கு செல்லும் பொழுது, மழைக்காலத்தில் மழையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.
சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் கூட பரவாயில்லை தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல? இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?
வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு கோவையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?
யார் காரணம்?
நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?
நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் எப்போதும் மழை காலத்தில் நிகழ்வது தான் ..
ஒன்று மட்டும் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ..
மூன்றாம் உலக போர் என்று ஒன்று உருவானால் அது நிச்சயம் தண்ணிர்க்காக மட்டுமே என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள் …
நமக்கு கடவுள் தரும் தண்ணிரை சேமிக்காமல் வீணாகி விடுவது நாம் கடவுளுக்கு செய்யும் துரோகம் என்பதில் யாருக்காவது மாற்று கருத்து இருக்கா ?
ஆறு ..குளம் ,, ஏரி .. இப்படி எல்லா நீர்நிலை தேக்கமும் கான்கிரட் கட்டிடமா மாறி போனால் நம்மோட எதிர்காலம் .. நம்ம சந்ததிகள் எதிர்காலம் என்னவாகும் ??
சென்ற மாதம் காரைக்குடி செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா போனப்ப எங்க குடும்ப நண்பர் மூலமா செட்டிநாடு நகரத்தார் வீடுகளை காண சென்றோம் ..
நாம எல்லோரும் அவங்க வீடுகளின் பிரமாண்டம் ,, கலைநயம் மட்டுமே பார்க்கிறோம் .. ஆனா அவங்க எவ்வளவு தொலைநோக்கு பார்வையோட ஒவ்வொரு விசயமும் பார்த்து பார்த்து கட்டி இருக்காங்க என்று நண்பர் விளக்கி சொல்லும் போது தான் புரிந்தது ..
பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.
இப்போ மழைநீர் சேகரிப்புக்கு சில வழிமுறைகளை காண்போம் ..
2 முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்.. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..
வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயிர்த்துதல் என்பது புதிய முறையாகும்.
நிலத்தடி நீர்வளம் குறித்த சில உண்மைகள்..
ஒரு கிணறு என்பது தண்ணீரை சேமிக்கும் இடமல்ல. கிணறுகள், நிலத்தின் மேல் பகுதியை, நிலங்களுக்கடியிலுள்ள நீருற்றுகளுடன் இணைக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை பொறுத்து, மழைகாலங்களில், கிணறுகளில் நீர் மட்டம் உயரும் அல்லது தாழும்.
மழை பெய்வது நின்று விட்டால், கிணற்றுக்கு நிலத்தடியில் உள்ள நீரூற்றுகளிலிருந்து ஓரளவிற்கு நீர் கிடைக்கும்.
வற்றிவிட்ட ஆழ்குழாய் கிணறுகளை, நிலத்தடி நீர் ஊற பயன்படுத்தலாம். வற்றிவிட்ட கிணற்றின் மேல் பகுதியில், ஆழ்குழாய் வடிநீர் குளங்களை அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உண்டு.
மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள்
மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள் பார்க்க, http://in.youtube.com/profile_play_list?user=indiawaterportal என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்/பாருங்கள்.
மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:-
நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்
கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.
அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.
இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு..
மழை நீரை சேகரிப்போம்
மண்ணில் வாழும்
உயிரினம்
மரித்து போகாமலிருக்க
ஒவ்வொரு மழைத்துளிக்குள்ளும்
ஓர் உயிர் ஒளிந்திருக்கிறது
அது
நீங்கள் நேசிக்கும்
உயிராகவும் இருக்கலாம்…
பல துளிகள் நிறைந்த
மழை போலவே வாழ்க்கையும் ..
கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக
மாறிய மழையை போலவே …
யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..
இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும் தருணம் போலவே..
நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே..
ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும் தருணம் போலவே..
வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….
-ப்ரியா கங்கா தரன்
Excellent write up priya !! மழையைப்பற்றிய முழுமையான அலசல் வாழ்த்துகள் !! சுமிதா ரமேஷ்..
நன்றி சுமிதா…