தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்
மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்க்றது.
தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.
தை முதல் தேதிதான் பொங்கல் என்றாலும் மார்கழி முதல் தேதியிலேயே எல்லோரும் பொங்கலுக்குத் தயாராகிவிடுவார்கள்.
இவர்கள் ‘சேற்றில் ‘ கை வைத்தால்தான் நாம் ‘சோற்றில் ‘ கை வைக்க முடியும். யார் இவர்கள் ?
‘செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே ‘என்றுரைத்த கம்பர், ‘உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ‘ என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான் இவர்கள்!
உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற
திருநாள்தான்… பொங்கல் திருநாள்.
பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும் விழாவா ? அல்லது மதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா ? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது.
மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய
நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல…
எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப் பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும் ? எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. ‘மேழிச் செல்வம் கோழைபடாது ‘ என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…
பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.
இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்
பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!
போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே
பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது..
போகி பண்டிகை
மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடபடுகிறது. இந்தநாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் போக்கும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றும் சொல்லுவர் கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை தீயிலிட்டு கொழுத்துவார்கள்..
மாட்டுப் பொங்கல்
இதுவும் உழவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு விழா தான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது. மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து, வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு தொழுவத்திலேயே பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும். மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர்.
மஞ்சளும் மலர்களும் மணம் சேர்க்க..
பொங்கலும் கரும்பும் சுவை சேர்க்க..
அனைவர்க்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
– ப்ரியா கங்காதரன்