விண்ணில்
தறி செய்து…
வானவில்லின்
வண்ணம் கொண்டு…
ஆதவன் சாயம்
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும்
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது
எனது சேலை!
அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…
கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!
ஆதிகால பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..
*பாத்து இல் புடைவை உடை இன்னா*
பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.
அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.
அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?
நாம் கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள் இருந்திருக்கின்றன.
புடவைகளின் வகைகள்
பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்ட்வேர் , டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப், ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..
புடவைகள் தேர்வு செய்யும் முறை
பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!
அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.
எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!
தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..
அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.
ஒரு புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..
‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!
பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.
சில புடவைகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.
புதுப் புடவை கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய உதவி செய்யும் ..
பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.
அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.
பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.
உயரம் குறைவான தோழிளுக்கு புடவை முறைகள்
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.
டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.
கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.
இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.
ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.
சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.
குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…
புடவைகளை எப்படி பாதுகாப்பது?
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…
விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.
டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.
ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.
உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில் கறை உண்டாக்கும்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.
ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.
நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.
சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.
புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்
தறி செய்து ..
வானவில்லின்
வண்ணம் கொண்டு…
ஆதவன் சாயம்
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும்
நெய்தெடுக்க…
எனது சேலை!
– ப்ரியா கங்காதரன்