நகைச்சுவை நாயகி!

மேபெல் நார்மண்ட் (Mabel Normand). இந்தப் பெயர் இன்றைக்கு ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் பலபேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. திரைத்துறையில் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் மாற்றம் என்கிற வெள்ளத்தில், புதுமை அலையில் அவர் பெயரும் அடித்துப் போகப்பட்டதில் ஆச்சரியமும் இல்லை. ஹாலிவுட்டில், பேசாப் படங்கள் காலத்தில் ‘நம்பர் ஒன்’ நாயகி அவர். திரைத்துறையில், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு பணியாற்றிய ஆரம்பகாலப் பெண்களில் அவரும் ஒருவர்.
கறை, துணிகளுக்கு ஆகாது. களங்கம், மனிதனுக்கு ஆகாது. அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபலமானவர்கள் வாழ்க்கையில் சின்னக் கரும்புள்ளி விழுந்தால்கூட, அது மெல்ல மெல்லப் பெரியதாகி, அவர்களை இருளில் மூழ்கடித்து, அட்ரஸ் இல்லாமல் செய்துவிடும். மேபெல்லுக்கு அதுதான் நடந்தது.
1892, நவம்பர் 9ம் தேதி நியூ யார்க்குக்கு அருகே இருக்கும் நியூ பிரைட்டோனில் பிறந்தார் மேபெல். அப்படி ஒன்றும் வசதியான குடும்பமும் அல்ல. அம்மா, ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அப்பா, கிளாட் நார்மண்ட் (Claud Normand) பிரெஞ்ச் கனடியன். சாதாரண தச்சுத் தொழிலாளி. சின்னச் சின்ன கேபினெட்டுகள் செய்வது, மேடை அலங்காரப் பணிகளைச் செய்வதுதான் வேலை. அவ்வப்போது, துறைமுகத்தில் கப்பல்களில் வேலை பார்ப்பதும் உண்டு.
மேபெல் நார்மண்ட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது 16. அதற்குக் காரணமாக இருந்தவர் மேக் சென்னட் (Mack Sennet) என்கிற பிரபல இயக்குநர். அவர், மேபெல்லை மற்ற நடிகைகளைப் போலத்தான் பார்த்தார். தன் முதல் படத்தில்கூட ஓர் அழகுப் பதுமையாகத்தான் சித்தரித்தார். ஆனால், ஒரு படைப்பாளியான அவருக்கு மேபெல்லிடம் இயல்பாகவே இருந்த துறுதுறுப்பும் நகைச்சுவை உணர்வும் யோசிக்க வைத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு இந்தப் பெண் பொருத்தமானவள் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. பின்னாளில், ‘கீ ஸ்டோன் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்த போது தன்னுடனேயே மேபெல்லை அழைத்துக் கொண்டார் மேக்.
ஹாலிவுட்டில் பேசாப் படங்கள் வெளி வந்த காலத்தில் பிரபலமாக இருந்த சார்லி சாப்ளின், ரோஸ்கோ ‘ஃபேட்டி’ ஆர்பக்கிள் (Roscoe ‘Fatty’ Arbuckle) போன்ற பிரபல நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு மேபெல்லுக்குக் கிடைத்தது. எல்லாமே குறும்படங்கள். ஆனால், பெரிய அளவுக்கு மேபெல்லை மக்களிடம் அடையாளப்படுத்தின. சார்லி சாப்ளின் தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவருடன் நிறைய படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் மேபெல். கூடவே, திரைக்கதை எழுதுவார், இணை இயக்குநராகப் பணியாற்றுவார், டைரக்ஷனும் செய்வார். பல சமயங்களில் இவர் செய்யும் இந்தக் காரியங்கள் சாப்ளினுக்கு தொந்தரவாக இருந்தன. அவருடைய நடிப்பாற்றலை வெளிக்காட்ட முடியாமல், நினைத்ததைச் செய்ய முடியாமல் தடை போட்டன என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

1914ல் சார்லி சாப்ளினின் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான ‘டில்லி’ஸ் பங்ச்சர்டு ரொமான்ஸ்’ (Tillie’s Puctured Romance) வெளியானது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேபெல். 1918ல் மேக் சென்னெட்டுக்கும் அவருக்கும் இருந்த உறவு முடிவுக்கு வந்தது. சாமுவேல் கோல்ட்வின் என்பவருடன் புதிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவருடன் பணியாற்றக் கிளம்பிவிட்டார் மேபெல். அப்போது, அவருடைய சம்பளம் வாரத்துக்கு 3,500 டாலர்.
***
வாழ்க்கை ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது. பல புதிய நடிகைகள் களமிறங்க, மேபெல்லுக்கு மவுசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு அறிமுகமானார் வில்லியம் டெஸ்மாண்ட் டெய்லர். நடிகர், இயக்குநர். ஹாலிவுட்டில் மிக முக்கியமான இயக்குநர். 59 பேசாப்படங்களை இயக்கியவர். புத்தகப் பரிமாற்றத்தில் ஆரம்பித்தது இருவருக்குமான நட்பு. டெய்லரிடம் பல அரிய புத்தகங்கள் இருந்தன. புத்தகத்தை இரவல் வாங்குவது, படித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது என்று தொடர்ந்தது இருவருக்குமான நட்பு. அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் கிரோக்ஸ் (Robert Giroux), ‘‘டெய்லர், மேபெல் நார்மண்டை உயிருக்கு உயிராக நேசித்தார். உண்மையில், மேபெல் ‘கோக்கெய்ன்’ என்ற போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து தன்னை விடுவிக்க ஏதாவது செய்யும்படி டெய்லரை அணுகியிருந்தார் மேபெல்’’ என்று தன் நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகைகளின் மன அழுத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதிர்ஷ்டக் காற்று வீசும்போது, உயரத்தில் பறப்பார்கள். திடீரென்று திரும்பிப் பார்க்க யாரும் இல்லாமல், காய்ந்த சருகாக தெருவில் விழுந்து கிடப்பார்கள். பல வருத்தங்களையும் துயரங்களையும் மென்று விழுங்க, அவர்களுக்கு ஏதாவது தேவைப்படத்தான் செய்கிறது. அந்தக் காரணத்துக்காகக் கூட மேபெல்லுக்கு கோகெய்ன் எடுத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்தப் பழக்கம் மிகப் பெரிய அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
***
பிப்ரவரி 1, 1922. இரவு 7:45 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ். ஆல்வரேடோ வீதியில் இருக்கும் டெய்லரின் பங்களா. டெய்லர் கொடுத்திருந்த ஒரு நல்ல புத்தகத்துடன், மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் மேபெல். இருவரும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். மேபெல்லை காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தார் டெய்லர். டெய்லரை உயிரோடு கடைசியாகப் பார்த்தது தான்தான் என்பது அப்போது மேபெல்லுக்குத் தெரியாது.
அடுத்த நாள் காலை. மணி 7:30. டெய்லரின் பக்கத்து வீட்டுக்காரர், ஏதோ காரியமாக வந்தவர் டெய்லர் கீழே கிடப்பதைப் பார்த்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். டெய்லரை சோதித்துப் பார்த்த ஒரு டாக்டர், அவர் வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உயிரிழந்துவிட்டதாகச் சொன்னார். நேற்று வரை நன்றாக இருந்த மனிதர், திடீரென்று இறந்தார் என்றால் எப்படி? பலபேரின் சந்தேகம், டெய்லரின் உடலை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தது. சோதித்த, தடய அறிவியல் நிபுணர்கள், டெய்லரை யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள், அது மிகச் சிறிய காலிபர் பிஸ்டலாக இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர் இருந்த பங்களாவிலோ, சுற்றுப்புறத்திலோ அந்த பிஸ்டல் கிடைக்கவில்லை.
டெய்லரின் இறுதிச் சடங்கில் கட்டுப்படுத்த முடியாத துயரத்தோடு, சடங்கு முடியும் வரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மேபெல். டெய்லரின் மரணம், வேறொரு பிரச்னையை மேபெல்லுக்குக் கொண்டு வந்தது. ஏற்கனவே சினிமா வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. புகழ் என்கிற வெளிச்சம் இருந்த இடம் தெரியாமல் மங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் ஆதரவாக இருந்தவர் டெய்லர் ஒருவர்தான். ஆனால், அவருடைய மரணமே மேபெல்லின் மேல் தீராத பழியைக் கொண்டு வந்து போட்டுவிட்டது. ஏனென்றால், டெய்லரை கடைசியாக உயிரோடு பார்த்திருந்தவர் மேபெல் ஒருவர்தான்.
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மென்ட், மேபெல்லை குடைந்து எடுத்தது. பல கேள்விகளைக் கேட்டது. வெடித்துக் கிளம்பும் அழுகையுடன் திரும்பத் திரும்ப தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதைத் தவிர மேபெல்லுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதாரங்கள், சாட்சிகள் எதுவும் இல்லாமல் பழி மட்டும் போட்டால் எப்படி? மேபெல்லை விடுவித்தது காவல்துறை.
டெய்லர், இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னால் மத்திய குற்றவியல் தடுப்புப் பிரிவை அணுகியிருந்தார். மேபெல்லுக்கு கோகெய்ன் சப்ளை செய்யும் சிலரை அடையாளம் காட்டி, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட கோகெய்ன் வியாபாரிகள், கூலிப்படையினரை அனுப்பி, டெய்லரின் கதையை முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றுவரை டெய்லரின் மரணத்துக்கான காரணம் தெளிவாகவில்லை. கொலையாளி என ஒருவரையும் குற்றம் சாட்டவும் முடியவில்லை. அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவே இல்லை.
***

‘பட்ட காலிலே படும்’. பழைய பழமொழி. ஆனால், அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போலத்தான் மேபெல்லின் வாழ்க்கை அமைந்தது. டெய்லரின் இழப்பு, பல சந்தேகங்களை மேபெல்லின் மேல் விதைத்துவிட்டுப் போயிருந்தது. அதோடு, சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பின்னடைவு. ஆனால், வாழ வேண்டுமே! பற்றிக் கொண்டு மேலேற அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை சினிமாதானே! சில வாய்ப்புகள் வருவது, சில கிடைக்காமல் போவது. கிடைத்தாலும் திறமையை வெளிப்படுத்தும்படியான கேரக்டர் அமைவதில்லை. இந்தப் போராட்டத்துக்கிடையில்தான் அது நடந்தது.
1924. மேபெல்லின் காரோட்டி ஜோ கெல்லி (Joe Kelly), ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சுடப்பட்டவர் கோர்ட்லாண்ட் எஸ். டைன்ஸ் என்கிற மிகப் பெரிய புள்ளி. கோடீஸ்வரர், எண்ணெய்த் தரகர், பொழுதுபோக்குக்காக கோல்ஃப் விளையாடுபவர். இதில் சிக்கல் என்னவென்றால் டைன்ஸ் சுடப்பட்டது மேபெல்லின் துப்பாக்கியால். இது மட்டும் பிரச்னை இல்லை. டைன்ஸுக்கும் எட்னா புர்வியான்ஸ் (Edna Purviance) என்ற நடிகைக்கும் பழக்கம் இருந்தது. எட்னா, மேபெல்லின் தோழி. மேபெல்லைப் போலவே சார்லி சாப்ளினுடன் பல படங்களில் நடித்திருப்பவர். முக்கியமாக, இறந்து போன டெய்லரின் பக்கத்துவீட்டுக்காரர். போதாதா? மறுபடியும் புரளி கிளம்பியது. டைன்ஸ் மரணத்தோடு மேபெல்லைத் தொடர்புபடுத்திப் பேசினார்கள். அவர் மனதைக் காகிதம் போலக் கசக்கி, கிழித்துப் போட்டார்கள். இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அவதூறுகளை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தார் மேபெல்.
அப்போது ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த ‘ஹால் ரோச் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். இயக்குநர் எஃப்.ரிச்சர்ட் ஜோன்ஸ் இயக்கிய ‘ரேஜடி ரோஸ்’ (Raggedy Rose) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் நான்கு படங்களில் நடித்தார்.
1926ல் லியூ கோடி (Lew Cody) என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். லியூ ஏற்கனவே மேபெல்லுக்கு அறிமுகமானவர்தான். 1918ல் வெளியான ‘மிக்கி’ என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அது என்னவோ மண வாழ்க்கை ருசிக்கவில்லை. கொஞ்ச நாள்தான் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிறகு, பீவர்லி ஹில்ஸில் அருகருகே இருந்த தனித்தனி வீடுகளில் வசித்தார்கள்.
60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மேபெல். பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவரின் வாழ்க்கை, சில அவதூறுகளாலும், வீண் பழியாலும் தடைபட்டது. உதவ ஆள் இல்லை. ஏற்றிவிட ஏணி இல்லை. ஆதரவாக இருக்க, பேச உண்மையான துணை இல்லை. உடலும் அவருக்கு ஒத்துழைக்க மறுத்தது. காசநோய் வாட்டி வதைத்தது. கலிபோர்னியாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல், 1930, பிப்ரவரி 23ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 37.
இலக்கியமாகட்டும்… திரைப்படமாகட்டும்… நகைச்சுவைதான் மிகக் கடினமான களம். அதை மௌனப்படக் காலத்திலேயே சாத்தியமாக்கியவர் மேபெல் நார்மண்ட். சொல்லப் போனால், இன்றைய நடிகைகளுக்கு ஓர் முன் மாதிரி. சார்லி சாப்ளின் என்ற மிகப் பெரிய மேதையுடன் இணைந்து நடித்த மேபெல், தன் இறுதி நாள் வரை நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர். ஆனால், அவருடைய நிஜ வாழ்க்கையில் நகைச்சுவைக்கு இடமே இல்லை என்பதுதான் குரூரமான உண்மை.
– பாலு சத்யா
***
திரைவானின் நட்சத்திரங்கள் பிற…
பேட்ரிஸியா நீல்
கோஸி ஆன்வுரா
ஆண்ட்ரியா ஆர்னால்ட்
சோஃபியா ஜாமா
ஷர்மீன் ஓபெய்ட் சினாய்
மெரில் ஸ்ட்ரீப்
சாபா சாஹர்
பெக் என்ட்விஸ்லே
மார்த்தா மெஸ்ஸாரோஸ்
ஹைஃபா அல்-மன்சூர்
தமீனே மிலானி
சமீரா மேக்மல்பாஃப்
Mabel Normand