ஒரே ஒரு பூமி!

ரஞ்சனி நாராயணன்

image

உலகச் சுற்றுச்சூழல் தினம்

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

என்ன அருமையாகக் கவிஞர் மனிதனுக்கே பூமியின் வளங்கள் எல்லாம் என்று சொல்லுகிறார்! மனிதன் ஆண்டு அனுபவிக்க என்று இறைவன் படைத்ததையெல்லாம் மனிதன் தனது பேராசையினால் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விழைந்ததன் விளைவே இப்போது உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு தினத்தை ஒதுக்கி எல்லோருக்கும் நமது சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி அதைச் சரிப்படுத்துவதும் நம் கடமையே என்று நமக்கு நினைவு மூட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது!

‘ஒரே ஒரு பூமி’ என்ற கோஷத்துடன் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான பசுமையான சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்  பற்றியும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வரும் கேடுகள் பற்றியும் உலக மக்களிடையே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கொண்டாட்டம். சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. யாரோ காப்பாற்றுவார்கள் அல்லது அரசு பார்த்துக்கொள்ளும் என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான வழிகளை பற்றிப் பேசுவதும் கூட இந்த நாளை நாம் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையால் மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப்படும் இந்த உலகச்சுற்றுச்சூழல் தினம் உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் சுற்றுச்சூழலைக் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசுவதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஒரு நாள்.

image

அப்படி என்ன நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது?

மனிதன் எப்போதெல்லாம் பேராசை கொண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறானோ அப்போதெல்லாம் இயற்கை சீறுகிறது. மனிதா நீ உன் எல்லையை மீறுகிறாய் என்று எச்சரிக்கை செய்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கொண்டே வருகிறோம். விளைவு திடீர் மழை, தொடர்ந்து வரும் வெள்ளம். விவசாய நிலங்களிலும் நீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.

மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாமல் போவதால் ஏற்படும் வறட்சியால் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவது, உணவுப் பொருட்கள் வீணாவது, உலக வெப்பமயமாதல், அழிந்து போகும் அல்லது மனிதனின் பேராசையினால் அழிக்கப்படும் காடுகள்; காடுகள் அருகி வருவதால் விலங்குகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இதன் காரணமாக மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் மோதல்கள், உயிரிழப்புகள் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

image

ஒவ்வொரு வருடமும் இந்த உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருட மையக்கருத்து ‘GO WILD FOR LIFE’ – வனவிலங்குகளை, வனங்களைப் பாதுகாப்பது, வனவளத்தை அநியாயமாக திருடி வர்த்தகம் செய்வதை எதிர்ப்பது

வனவளம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

நம்மைப் போலவே இந்த பூமியில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு நம்முடன் இயைந்து வாழப் பிறந்தவை வனவிலங்குகளும், செடி கொடி, மரங்களும். அவற்றை வாழ வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு நடப்பதென்ன?

சட்டவிரோதமாக வனவிலங்குகள் அவற்றின் இறைச்சி, தோல், உரோமம், மற்றும் தந்தம் போன்றவற்றிற்காக வேட்டையாடப்பட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சில விலங்குகள் அவற்றின் இரத்தத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் கொல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த வியாபாரத்தால் நமது பூமியின் பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. இயற்கை வளங்கள் திருடப்படுகின்றன. பல விலங்கினங்கள் முற்றிலும் அழிந்தே போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்தே விட்டன. காட்டுவிலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு, கடத்தப்படுவதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திட்டமிட்டக் குற்றங்கள், லஞ்ச லாவண்யங்களுக்கும் இவை வழிவகுக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மை உணரப்படுகிறது.

வனக்குற்றங்கள் பெருகுவதால், நாடுகளின் தனித்த அடையாளங்களான யானை, காண்டாமிருகம், புலி, கொரில்லா கடல் ஆமைகள் ஆகிய உயிரினங்கள் அருகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. காண்டமிருங்கங்களில் ஒருவகையான ஜாவன் ரைனோ இனம் 2011 ஆம் வருடம் வியட்நாமில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே வருடம் கேமரூனில் கருப்பு காண்டாமிருகங்கள் அழிந்துவிட்டன. காம்பியா, பர்கினோ ஃபாஸோ, பெனின் டோகோ முதலிய நாடுகளிலிருந்து ஏப் எனப்படும் பெரிய மனிதக் குரங்குகள் மறைந்துவிட்டன. கூடிய சீக்கிரமே மற்ற நாடுகளிலிருந்தும் இந்த விலங்கினம் மறையக்கூடும். வெறும் விலங்கினங்கள் மட்டுமல்ல, மூங்கில் மற்றும் பூக்கள் கூட வன உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. ஆர்சிட் பூக்கள், ரோஸ்வுட் எனப்படும் மரங்களும் மறைந்து வருகின்றன. அதிகம் அறியப்படாத பல பறவையினங்களும் இதில் அடங்கும். கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சிக்காகவும் அவற்றின் மேல் கூடுகள் செயற்கை நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்வதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

இந்தவகைக் குற்றங்களைத் தடுக்க மிகக்கடுமையான கொள்கைகளை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது தவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமுதாய பாதுகாப்பிற்கான முதலீடுகள், சட்ட அமலாக்கம் என்று பலவிதங்களிலும் நடவடிக்கை எடுத்ததில் சில சில வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் காட்டு விலங்கினங்களை காப்பதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். நமது தொடர்ந்த முயற்சிகள் பல உயரினங்களை வாழவைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

image

செய்யவேண்டியவை:
தந்தத்தினாலும், விலங்குகளின் உரோமம் மற்றும் தோல் இவைகளினால் செய்த பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவைகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு இதற்காக காட்டு விலங்குகளை நெஞ்சில் இரக்கமின்றிக் கொல்லும் கயவர் கூட்டம் இருக்கிறது. நமது தேவை குறையும்போது விலங்குகளும் அநியாயமாகக் கொல்லப்பட மாட்டா.
காடுகளை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.
வீடுகளை அழகுபடுத்தவும் காகிதங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நகரத்தின் விரிவாக்கத்திற்காக சாலைகள் அமைக்கப்படும்போது அங்கு பல வருடங்களாக வளர்ந்து கிளை பரப்பி, நிழல் கொடுக்கும் பழைய, பெரிய மரம் தான் முதல் பலி ஆகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களை அமைக்கவேண்டும். அரசு இயந்திரமே எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.

இலவசமாக நமக்கு கிடைக்கும் சூரியசக்தியை வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மாசுபடாத நதி நீர், சுத்தமான கடற்கரைகள், பனிமூடிய மலைகள், இயற்கை வளம் நிறைந்த காடுகள் இவை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது நம் கடமை.

image

பூமி கீதம் – இந்தியக் கவிஞர் திரு அபய் குமார் இந்த பூமி கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான அரபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு இந்த நாளை முன்னிலையில் நின்று தனிச்சிறப்புடன்  கொண்டாடுகிறது. இந்த நாடு தனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அங்கோலா நாடு இந்த விழாவை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் காடுகளில் வாழ்ந்து வரும் ஜயன்ட் சாபெல் ஆண்டிலோப் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இந்த மானினத்தையும் மற்ற காடு வாழ் பிராணிகளையும் காக்க  அங்கோலா அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.

அரசு எத்தனைதான் சட்டதிட்டம் போட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதகமாக எடுத்துக் கொண்டு மனிதம் குற்றம் புரிகிறான். மனிதனின் இந்த குணம் மாற வேண்டும். மனிதனும், விலங்குகளும் இணைந்து, இயைந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. இத்தனை வருடங்கள் இதை மறந்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது நமது பேராசைக்கு சற்று ஓய்வு கொடுத்து நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ எல்லாவகையிலும் தகுதி உள்ள உயிரினங்களை வாழ விடுவோம்.

இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை நாம் எல்லோரும் எடுப்போம்.

image

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

http://isaipaa.wordpress.com/

ப்ரியங்களுடன் ப்ரியா–20

குளிர்

winter2..

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய 

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை, பெருமழை

எதுவும் குளிரை  மட்டும் 

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்…

குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும்   சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும்  இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…

.

என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க  வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று  அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

கடவுளின் தேசத்தில்  நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும்  அந்த  மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா  மரத்தடியில்   உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை  முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் ..   அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..

குளிர் அதிகமாக இருக்கும்  நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு  எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?

நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.

winter1

குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..

.

பனிக்கால பராமரிப்பு:-

இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள

பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பாதாம்

பாதாம் பருப்பு  பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தேன்

இந்த குளிர்காலங்களில்  தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஒமேகா 3

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

இஞ்சி

அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலை

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

winter4

குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்

எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.

வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.

தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.

தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.

இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.

குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..

winter5

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை , பெருமழை

எதுவும் குளிரை  மட்டும்

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்

– ப்ரியா கங்காதரன்

IMG_20151029_123940

பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

ப்ரியங்களுடன் ப்ரியா – 12

என் வீட்டுத் தோட்டத்தில்…
garden8 garden7 garden6 garden5 garden4 garden3 garden1 garden
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி என்னை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார் ..
இயற்கை… நம்ம எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் .. நாகரிக வாழ்கையில் நவீன கோமாளியாக நாம் மாற ஆரம்பித்த பின்னர் இயற்கை மீதான காதல் நம்ம எல்லோருக்கும் ரொம்ப குறைஞ்சு இருக்கு… ஒரு வினாடி நின்றால் கூட நம்மை 100 பேர் வென்றுவிடுவார்கள் என்று காலத்தின் பின்னே நாம் ஓடினாலும் நமக்கு என்று நம்மை சற்று இளைப்பாற நமது தினசரி வாழ்வில் ஒரு அங்கம் எல்லோருக்கும் வேண்டும். அது நம் மனதில் மகிழ்ச்சி விதைப்பதாக  இருக்க வேண்டும் என்பதே எனது இந்த பதிவின் நோக்கம்…
தோட்டம்… இன்றைய வேதியியல் கலந்த வேளாண் உலகில் எந்த கலப்பும் இல்லாமல் நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடுவதும் ஒரு வரம்தானே ? தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே…ஆர்வம் இல்லையென்றாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம்.. ‘மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய திட்டம்  நமக்கு சரி வராது’னு சொல்றவங்க முதலில் இதை  படிங்க…ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே…. நமக்காகவே ..
நம்ம   எல்லோர் வீட்டிலும்  எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ‘டென்ஷன்’ இருக்குது .  யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை…காரணம் இன்றைய பரபரப்பான சூழல்…!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிட்டே இருந்தா நம்மளை  யார் கவனிக்கிறது…உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்…காய்கறிகள், பூக்களை பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்…!!
ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை…நன்கு கழுவி சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயம் இல்லாம சாப்பிட முடியுமா ?
நீங்க  சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லையே  என சாமார்த்தியமா தப்பிக்க முடியாது …தூங்க, சமைக்க, FB  பார்க்க, வாட்ஸ் அப் அரட்டை அடிக்க எல்லாம் நேரமும் இடமும்  இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குவோம் …மொட்டை மாடி, பால்கனி ,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே..
வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்…அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்…! நீங்க மனசு வச்சு வேலைய ஆரம்பிங்க , அப்புறம் பாருங்க இவ்வளவு  இடம் நம்ம வீட்ல தானா என்று ஆச்சரியமா இருக்கும்…
அப்பாடி..   ஒருவழியா இடத்தை தயார்  செஞ்சுவிடலாம் தானே ? அப்புறம்…  விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை…நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க… கலக்கிடலாம்..
வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்வதை பாப்போம் ..
ஆரம்பத்துல தோட்ட கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்…ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்தி பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில் இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க… உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல…
தேவையான பொருள்கள்…
* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)
20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்)
ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது…)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க.
செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கல், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால்  கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.
காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணை போட்டு நிரப்புங்கள்…இலைகள்  மக்கி உரமாகி விடும்…அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்…வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !
தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.
புதினா, கீரை
புதினா இலைகளை பறித்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்…வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.
தினமும் தேவையான எளிய முறையில் பயிர் செய்யும் காய்கறிகள் …
கொத்தமல்லி
கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் வெட்டி  சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்…மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்…
சின்ன வெங்காயம்
வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்…மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது…வளர வளர பார்க்க அழகாக இருக்கும்…வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்..
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்கலாம் ..
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால்  வீட்டில் வளர்த்து பயன் பெறலாம் ..
தக்காளி, மிளகாய், கத்தரி
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்….விதைகள் தனியே பிரியும்…பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்…
நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்…காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்…செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்.
தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும்.
பந்தல் அமைத்தல்
தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி ஒரு ஆறு  அடி  விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்…கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 16  இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்…இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், .
கயிறுக்குப்  பதிலாக  கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம்.
மற்றொரு முறையிலும்  பந்தல் அமைக்கலாம்
சிமென்ட் பையில்  மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்…இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்…மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.
நம்ம தோட்டத்துக்கு நாமே உருவாக்கும் உரங்கள்…
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.
வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும்.
இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
பிற  கழிவுகள்…
மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும்.
அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.
ஆக்சிஜன் அவசியம்
கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது… இவை மட்டுமே மிக சிறந்த இயற்கை உரங்கள்.
நீர் பற்றாக்குறையை சமாளிக்க சில முறைகள்…
நாம் பயன்படுத்திய கழிவு நீரையே சுத்தம் செய்து செடிகளுக்கு விடலாம் ,
கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கும் …இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல… எனவே இதை  சுத்திகரிக்கலாம்…
சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்…விரைவில் வளர்ந்து  விடும்…கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்…நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்… கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்…சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்…
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி மேலே கூறிய அதே மெத்தட்தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.
தோட்டம் நன்கு உருவாக சில சிறப்பு முறைகளை காண்போம் ..
தரையில் கனமான  பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் உருவாக்கலாம் … தரையில் நீர் இறங்கி  விடும் என்ற பயம் இல்லை , ஒன்றும் ஆகாது…இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சியும்  கிடைக்கும் ..
* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் நம்மை போல ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்…
* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்…சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.
* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறலாம்
நம் மீது அக்கறையும் கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்து  நாமே  பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில சங்கடங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.
இயற்கையோடு இணைந்து புதுயுகம் படைப்போம். நம்மை நாமே செதுக்கி கொள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பாக தோட்டம் கருதுவோம் …
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி எனை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார்!
– ப்ரியா கங்காதரன்
p4

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

sunlight3

அது ஒரு வெயில் காலம்…

ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது…

கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்

தொடர்ந்து வரும் பெரும்புழுதி
பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருகிறது…

கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் முன்பு கொஞ்சம் வெயிலின் நன்மைகளையும்  பார்போம்…

சூரியக் கதிர்  நம்மை பொறுத்த வரை. தலைமுடி காய வைக்க, துணி காய வைக்க, பெயின்ட் காய வைக்க, மின்சாரம் கிடைக்க, தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க, நெல் மற்றும் தானியங்களை காய வைக்க, உலர்த்த, அதிகமாக உள்ள தண்ணீர் வற்ற, உப்பளத்தில் உப்பு தயாரிக்க, பூக்கள் மலர மற்றும் நேரத்தைக் கணக்கிட இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் என்று நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

daylight 1

நமது  உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் 90 சதவிகித `வைட்டமின் டி’ சத்து சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதால்தான் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. நாம் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இதனால்தான் சுமார் 12 கோடி மக்கள் உலகம் முழுவதும் `வைட்டமின் டி’ சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பூமியில் அனைத்து இயக்கமும்  சூரிய ஒளி மூலமே! சூரிய ஒளி மட்டும் பூமிக்குக் கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை.

சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பலவிதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேஷன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவற்றின் வீரியத்துக்கேற்ப அவற்றின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.

sunlight 2

அதிக வெயிலை,  ‘சுட்டெரிக்கும் சூரியன்’ என்றுதான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள்

1). எக்ஸ்ரே கதிர்கள்

2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள்

3). இன்ஃபிராரெட் கதிர்கள்

இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும்(4) சூரிய ஒளிக்கதிரே!

ஆக சூரியக்கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்புச் சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும்.

இதைத்தான் நாம் `சன் பர்ன்’ அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதே போல மனிதர்களின் தோலிலுள்ள பிக்மென்ட்ஸை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றிவிடும். நான் ஏற்கனவே சொன்னபடி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள்தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதே கதிர்கள்தான் உடலில் `வைட்டமின் டி’ உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கின்றன. பத்து சதவிகிதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு `வைட்டமின் டி’ கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு `வைட்டமின் டி’ ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.

உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு `வைட்டமின் டி’ அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது.

வெயிலும் நல்லதே!

கோடைக் காலம் என்பது இயற்கையின் பரிசு. கோடையில்தான்  மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் பயிர்  நிலங்களில் விளையும்  பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன.

கோடை வெயில் நம் வீட்டு செல்லங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் அற்புதப் பருவம் அல்லவா அது.

உடல், இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்துவிடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாடு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும் வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில் கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

sunlitht

இந்த தருணத்தில் தான் நமக்கு  உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வரும்போது உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

கோடைக் காலத்தில் அதிகாலை  எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது.

உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. நாம் உடுத்தும் துணிகளும் நம் மனநிலையை தீர்மானம் செய்யும் காலமே கோடை காலம்.

வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். அதிக நீர் அருந்த வேண்டும். விட்டு  விட்டு நீர் அருந்துவது நல்லது.

– ப்ரியா கங்காதரன் 

IMG-20150610-WA0017

 

 

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

Image Courtesy:

https://nationaldaycalendar.files.wordpress.com

http://inhabitat.com/i

http://data.hdwallpapers.im/

http://berniesiegelmd.com

சாத்திரங்கள் சொல்வாரடி…

_70484707_haleemabegumwifeofmushtaqahbhat_001(4)

ஜோடிப் பாம்புகள் போல் சடங்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்வோடு பிணைந்தே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமான சடங்குகளை தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. எனக்கு இது வேண்டாம் என ஒதுங்கிக்கொள்ள அசாத்திய துணிச்சல் தேவைப்படுகிறது. அது சடங்கோ, சம்பிரதாயமோ சந்தோஷமாக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் நஷ்டமில்லை. ஆனால், மன உளைச்சல் தரும் சடங்குகளை காலத்துக்கும் சபித்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அது, அவரின் இறுதி நிகழ்வுதானே ஒழிய அவரின் மனைவியின் இறுதி நிகழ்வல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

ஒரு வருட காலமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட கணவரோடு சேர்ந்து போராடியேபடி இருந்தவர்… அந்த மனிதர் நோயோடு போராடிக்கொண்டிருந்தார் என்றால் இவர் வாழ்வியலோடு! கணவரின் வருமானம் நின்றுவிட்ட நிலையில் மகனின் தயவோடு கணவரின் ஹாஸ்பிட்டல் செலவை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. இரவும் பகலும் வலியோடு அவஸ்தைப்படும் கணவனின் துயரத்தை துடைப்பதோடு, அவரது மலஜலத்தையும் துடைக்க வேண்டிய நிலை. 50 வயதுக்குள் அத்தனை வேதனைகளையும் அனுபவித்துவிட்டார் அந்தப் பெண். மருத்துவமனை, மருத்துவமனையாக அலைச்சல், மருந்து, மாத்திரை, வந்து பார்க்கிறவர்களின் கேள்விகளுக்கு பதில் என அந்த வருடத்தில் கணவரோடு சேர்ந்து இவரும் வற்றிப் போயிருந்தார்.

கடைசி இரண்டு மூன்று இரவுகள் இவர் கண்ணுறங்கவில்லை. உண்மையில் கணவர் இறுதி மூச்சை விட்டபோதுதான் இவருக்கு கொஞ்சம் ஆசுவாசமே!

கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் அவர் முகம் பார்த்தபடி  நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தார் அந்தப் பெண். காலையில் இருந்து உட்கர்ந்து உட்கார்ந்து கால்கள் வலிக்க, சற்று கீழே இறங்கி உட்காரப் போனவரை தடுத்து நிறுத்தினார் ஓர் உறவுக்காரப் பெண். “சொந்தக்காரங்க வர்ற நேரம்… இங்கேயே உட்காருங்க” என்றார். காபித்தண்ணிக்கூட குடிக்காமல் காலையில் இருந்து கால் வலிக்க வலிக்க உட்காந்திருந்தவரை  வருகிறவர்களின் ஆறுதல் சுமை வேறு அழுத்தியது.

அது முடிந்ததும் ஆரம்பித்தது அடுத்த பிரச்னை. இறந்து போனவரைக் குளிப்பாட்டும் போது அந்தத் தண்ணீர், மனைவியின் மீது விழ வேண்டும் என்பது சம்பிரதாயமாம். இதற்கு பெண் குடும்பத்தார் மறுப்புத் தெரிவித்தனர். “அவர் கேன்சருக்கு ஆளானவர். அதனால் தலையை மட்டும் கசக்கிவிட்டு சும்மா கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க. கிருமி எதாவது பாதிச்சிடப் போகுது அதுக்கும் சின்ன வயசுதானே! அதுவும் வாழ வேண்டி இருக்குல்ல?” என்றார் அந்த பெண்ணின் அண்ணி.

“அதெப்படி? இதுதான் முக்கியமான சம்பிரதாயம்” என்பது சம்பந்தி வீட்டாரின் வாதம். நீண்டு கொண்டே இருந்த வாதத்தில் வெற்றி பெற்றவர்கள் சம்பந்தம் பண்ணியவர்கள்தான்.

கேன்சர் தொற்று நோயல்ல என்றாலும் பல காலமாக  குளிக்காமல், படுக்கையில் இயற்கை உபாதைகளை வெளியேற்றியவர் என்ற அருவெறுப்போ, அவர் அனுபவித்த துன்பத்தை தன் மகளும் அனுபவிக்க வேண்டாம் என்ற பயமோ அவர்களை அப்படி வாதாட வைத்தது. அப்படி குளிப்பாட்டும் வேளையில் அந்தப் பெண்ணின் மனதில் என்னவெல்லாம் தோன்றி இருக்கும். அந்த மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

இந்த மாதிரியான எத்தனையோ சம்பிரதாயங்களுக்கு பெண்கள் உட்படுத்தப்படுத்தப்படுகிறார்கள். இதைப் பெண்களும் ஒத்துக்கொள்கிறார்க்ள். ஆனால், இப்படி விதிவிலக்கான சில சம்பவங்களின் போதாவது அவர்களின் உணர்வுகளுக்கு அந்த சம்பந்தி வீட்டார் மதிப்புக் கொடுத்திருக்கலாம்தானே. இப்படி ஒன்று இரண்டல்ல…

து ஒரு நள்ளிரவு. முக்காடிடப்பட்டு, குத்தியக் கண்ணாடி வளையல்களால் கைகளில் ரத்தப்பூ பூக்க, விசும்பலோடு உட்கார்ந்திருந்தார் என் பெரியம்மா. என் பெரியப்பா இறந்ததற்கான நடப்புச் சடங்கு அது. சுற்றியிருந்த பெண்கள் என் பெரியம்மாவின் தாலியை அறுத்து, பாலில் எறிந்த அந்த நொடியில் என் பெரியம்மாவின் “ஓ”வென்ற அலறல் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது. அது கொடுத்த மனவலி என் பெரியப்பா இறந்த போதிருந்த துக்கத்தைவிட அதிகமாக இருந்தது எனக்கு.

எப்பேர்பட்ட மனிதர்களின் இறப்பிற்கு பின்னும் இயல்பாகத்தான் சுழன்று கொண்டிருக்கிறது பூமி.  நகமும் சதையுமாக வாழ்ந்தவர்களின் இழப்பு, வலி கொடுக்கக்கூடியதுதான். அதை விட சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அவமானங்கள், மனவலிகள்தான் அதைவிட மோசமானவை.

இன்று, பல பெண்கள் கணவரை இழந்த பிறகும் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டாலும் கட்டாயம் அந்தச் சடங்கை தாண்டித்தான் வந்திருப்பார்கள். அவர்களைக் கேட்டால் புரியும் அந்த வலி. இது மாதிரியான எந்தவித சம்பிரதாயமும் ஆண்களுக்கு இல்லை. தன் மனைவி இறந்து கிடக்கும்போது வெளியே தன் துன்பத்தை மனதினுள் அலசி ஆராய்ந்தபடி உட்கார்ந்திருப்பார்கள் ஆண்கள். தன் துயரக் குளத்தில் தானே முங்கி எழும் இடைவெளி அந்தச் சமயத்தில் பெண்களுக்குக் கிடைக்காது.

இதில் சொல்ல முடியாத ஓர் அவஸ்தை என்னவென்றால் இந்த மாதிரியான சம்பிரதாயங்களுக்கு செயலாளர், பொறுப்பாளர் எல்லாமே பெண்கள்தான். இது மாதிரியான ஒரு சடங்கு என் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த போது அதை எதிர்த்தவர் அந்த அம்மாவின் மகள் அல்ல… அந்த வீட்டின் ஆண்… அதாவது அவரது மகன்.

இறுக்கமான முகத்தோடு தன் வீட்டு பெண்களிடம் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தார் அந்த அண்ணன். இறுதியில் பூவை பிய்த்தெறியாமல், கண்ணாடி வளையலை உடைக்காமல், வெறும் தாலி கழட்டும் சம்பவத்தை மட்டும் செய்தார்கள் அந்தப் பெண்கள். சிலரைத் தவிர பல பெண்களின் முகத்தில் அன்று ஏதோ ஒரு நிம்மதியைப் பார்க்க முடிந்த்து. அதில் பரவியிருந்த வெளிச்சம் அங்கிருந்த இருட்டைக் கிழிப்பது போல் இருந்தது. மகள் இதே விஷயத்தை வற்புறுத்தியிருந்தாலும் அவர் சொல் எடுபட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆணின் சொல்லுக்கு கட்டுப்படும் மனப்பான்மையோடு வளர்ந்த சமூகம் அல்லவா இது. பெரும்பாலும் இத்தகைய விஷயங்களை எதிர்த்து நிற்பது ஆண்கள்தான் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. ஊரையே பகைத்துக் கொண்டு, தன் வீட்டு கிரகப்பிரவேசத்தை தன் விதவைத் தாயை முன்னிறுத்தி நடத்திய அந்த உறவினரின் மேல் விழுந்த மதிப்பின் நிழல் என்றென்றும் மறக்கவியலாததது.

இது போல் ஒவ்வொரு வீட்டு ஆணும் இதற்காக எடுக்கும் சிறு சிறு முயற்சிகள், வெள்ளமாக இந்த சடங்குகளை அழித்துச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

– ஸ்ரீதேவி மோகன்

Woman-crying

Image courtesy:

http://news.bbcimg.co.uk/media/images

http://mybrowneggs.files.wordpress.com

நூல் அறிமுகம் – 3

ஹிமாலயம்

book544

ந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ, இல்லாதவராகவோ இருந்தாலும் ‘ஹிமாலயக் கனவு’ எத்தனையோ பேருக்கு உண்டு. அந்தத் தூய பனிமலைப் பிரதேசத்தில் ஒரு முறையேனும் கால் பதித்துவிட மாட்டோமா என ஏக்கம் கொள்கிற அனேகம் பேர் உலகமெங்கும் இருக்கிறார்கள். மனிதர்களுக்குள் வாழ்க்கை குறித்த சரியான புரிதலை, ஓர் உள்ளெழுச்சியை, சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை, சிலரின் அறியாமையை, சிலரின் அபார அறிவை என எத்தனையோ அனுபவங்களை விதைத்துவிடும் வலிமை ஹிமாலய பயணத்துக்கு உண்டு. ஹிமாலயத்தின் பேரெழிலின் முன், அபாயங்களை உள்ளடக்கிய அமைதியின் முன் மனித வாழ்க்கை ஒன்றுமேயில்லை என்பதை உணர முடியும். அதன் பல பகுதிகளுக்கு தன் தோழி காயத்ரியுடன் சென்று வந்திருக்கிறார் இந்நூலாசிரியர் ஷௌக்கத். அந்த அனுபவங்களை விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த உணர்வுகளும் பாதிப்பும் துளிக்கூடக் குறைந்துவிடாமல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

‘மந்திரங்கள் ஒலிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் மூழ்கி எழுகிறார்கள். அங்கே நீராடினால், பாவங்களெல்லாம் கரைந்து முக்தியடைவோம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எங்களுடைய பாவங்களைக் கரைப்பதற்கான ஆசீர்வாதம் எதனாலோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் கங்கை அவ்வளவு அழுக்காக ஓடிக் கொண்டிருந்தாள்.’

ஒரு படைப்பு கொண்டாடப்பட மொழி ஆளுமை, உத்தி, எழுத்து நடை போன்றவை மட்டும் போதுமானவை அல்ல. எழுத்தாளரின் அனுபவம் எழுத்தின் வழியாக வாசகனுக்குக் கடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் ‘ஹிமாலயம்’ கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு! சுற்றுலாவுக்குப் போய்விட்டு வந்த ஒரு பதிவை இயந்திரத்தனமாக வாசித்துக் கடந்துவிடுவதைப் போல் அல்லாமல், ஹிமாலயத்தின் உள் பொதிந்திருக்கும் அர்த்தத்தை, அனர்த்தத்தை, அங்கே வாழும் மனிதர்களை, அவர்களின் வாழ்வியலை, போராட்டத்தை, குதூகலத்தை, இயற்கை அன்னையின் எழில் வதனத்தை, அது உணர்த்தும் மறை பொருளை… என பல அம்சங்களை அங்குலம் அங்குலமாக அலசியிருக்கிறது ஷௌக்கத்தின் பயணம்.

‘சாதுக்களின், ஆன்ம தேடல் உள்ளவர்களின் (சோம்பேறிகளின்) வாழ்விடமாக இருந்ததனாலோ என்னவோ ஆசிரமங்களும், தர்ம சாலைகளும், கோயில்களும் நிறைந்ததாக இருக்கிறது ரிஷிகேஷ்.’

ஹரித்வார், ரிஷிகேஷ், யமுனோத்ரி, உத்தரகாசி, கங்கோத்ரி, கோமுகம், கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத்… ஹிமாலயத்தின் முக்கியமான அனைத்து இடங்களையும், அங்கே பார்த்ததையும், நடந்ததையும், சந்தித்த மனிதர்களையும், அவர்களின் குண இயல்புகளையும், மன விசாரங்களையும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் வார்த்தைகளில் விவரிக்கிறார் ஷௌக்கத். ஒவ்வோர் இடத்துக்கும் நம்மையும் கையைப் பிடித்து அழைத்துப் போகிறது கே.வி.ஜெயஸ்ரீயின் தேர்ந்த மொழிபெயர்ப்பு. ஷௌக்கத்தின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன. உதாரணமாக, யமுனோத்ரி பயணத்தில், யமுனைக் கரையில் ஒரு பாறையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, எதற்கென்றே தெரியாமல் ஷௌக்கத் கண்ணீர் வடிக்கும் போது நமக்கும் உள்ளூர ஏதோ ஒரு சோகம் வந்து உட்கார்ந்து கொள்கிறது.

‘மரணம் சகஜமானதுதான் என்றும், அது எப்படியும் நிகழக் கூடியதுதான் என்றும், பயப்படக் கூடியதாக அதில் ஒன்றுமேயில்லையென்றும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருந்த நான் வார்த்தைகளின் அர்த்தமின்மையை அப்போது உணர்ந்தேன்.’

மனித நாகரிகம் வளர்ச்சியடைய வித்திட்டவை பயணங்களே! மனதை ஆற்றுப்படுத்தும், லகுவாக்கும் தன்மை இயல்பாகவே பயணங்களுக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் மோட்டார் வாகனங்களிலும், விமானத்திலும், ரயிலிலும், கப்பலிலும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றபடிதான் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக, சோகமாக, புது வாழ்க்கையைத் தேடி, வாழ்க்கையைத் தொலைத்து என மனிதர்களின் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தங்களின் பயணத்தை எழுத்துப் பூர்வமாக ஆவணப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. வெளி வந்த பயணங்கள் தொடர்பான படைப்புகளிலும் வாசகனின் தேடலைப் பூர்த்தி செய்தவை வெகு குறைவு. இந்நூல் பயண இலக்கிய வரிசையில் கவனம் பெற வேண்டிய ஒன்று. ஹிமாலயம், அதன் எழில், ஆகிருதி, உயிர்ப்பு, முக்கியத்துவம் அத்தனையையும் நூலாசிரியர் ஷௌக்கத் தன் எழுத்தின் மூலமாக நம் முன் வைத்திருக்கிறார். ஹிமாலயத்துக்குப் பல முறை சென்று வந்தவர்களே கூட இந்நூலைப் படித்தால் ஒரு புதிய தரிசனத்தைப் பெறுவார்கள் என்று தோன்றுகிறது. அங்கே இதுவரை செல்லாதவர்கள், ஹிமாலயம் குறித்தான தங்கள் கற்பனை எப்படி வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை அனுபவிப்பார்கள். இந்நூல் குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்க்க்கூடிய பிரதி இது’. மறுக்க முடியாத உண்மை.

– பாலு சத்யா

himalayas

நூல்: ஹிமாலயம்

மலையாள மூலம்: ஷௌக்கத்

தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ

வெளியீடு: வம்சி புக்ஸ்,

19, டி.எம்.சாரோன்,

திருவண்ணாமலை – 606 601.

செல்: 9445870995, 04175-251468.

விலை: ரூ.300/-

மின்னஞ்சல்: vamsibooks@yahoo.coms

வாசிக்க…

நூல் அறிமுகம் – 1

நூல் அறிமுகம் – 2

 

கொசுக்களைக் கலங்கடிக்கும் கற்பூர வில்லை

உஷா ராமானுஜம்

Image

 

 

லேரியா மற்றும்  டெங்கு நோய்கள் வேண்டாத  விருந்தாளிகளாக வராத ஊர்களே இல்லை எனலாம். முக்கிய காரணம் கொசுக்கள்!

கொசுக்களைக் கட்டுப்படுத்த லிக்விட் வெபரைசர் அல்லது நீல நிற வில்லைகளை ஒரு பேடில் சொருகி, கரன்டில் இணைத்துப் உபயோகப்படுத்துவோம். பலவித க்ரீம்களை உடம்பில் தேய்த்துக் கொள்வோம். ஆனால், மாண்புமிகு கொசுவாரோ இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு  நம் காதுகளில் ரீங்காரம்  பாடுவார். மேலும் இவற்றை நாள் முழுவதும் உபயோகப்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் ‘அலர்ஜி’ தவிர்க்க  முடியாத ஒரு  வேதனை… 

Image

இதற்க்கு தீர்வுதான் என்ன? 

கற்பூரம்… ஒரு கண்கண்ட கிருமி நாசினி. வீடுகளில் தினமும்  பூஜை செய்யும்  போது  கற்பூரத்தை கொளுத்தி ஆரத்தி எடுப்போம். இதைச் செய்யும்போது அறையில் உள்ள காற்றின் மாசுக்கள், பேக்டீரியா, வைரஸ், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி  அடிக்கின்றன கற்பூரப் புகையும் மணமும். சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக்கும் சக்தி கற்பூரத்துக்கு உண்டு. நிரூபிக்கப்பட்ட பல மருத்துவ  குணங்கள் இதில்  

அடங்கியிருக்கின்றன. மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு கற்பூரத் தைலம் கண்கண்ட மருந்து. பல வலி  நிவாரண மசாஜ்  க்ரீம்களுக்கு கற்பூரம்  ஒரு இன்றியமையாத பொருள். 

Image

நம்மில் பலருக்கு கற்பூரம் ஒரு சிறந்த கொசு நிவாரணி என்கிற உண்மையே தெரியாது.  பக்க விளைவுகள் இல்லாத, 24   மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு அரு மருந்து. இதற்காக கற்பூரத்தை நாள் முழுவதும் எரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை . அதற்கு சுலபமான மூன்று வழிகள் இருக்கின்றன.  

1. கொசுவர்த்தி பேடில் வழக்கமாக வைக்கும் நீல நிற வில்லைக்கு  பதில் கற்பூரத்தை தினமும் ஒரு மணி நேரம் – காலையிலும் மாலையிலும் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2. இரண்டு வில்லை கற்பூரத்தை அறையின் மூலை முடுக்குகளில் – எங்கு கொசுக்கள்  அதிகமாக இருக்கிறதோ – அங்கு வைத்து  விடவும். அந்த வில்லைகள் தாமாகக் கரையும். காற்றும் சுத்தமாகும். கொசுவும் இருக்காது.  

3. இரவில் படுக்கை அறையில் ஒரு வாய் அகன்ற கப்பில் தண்ணீருடன் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு ஒரு மூலையில் வைத்து விடவும். கற்பூரம் தண்ணீரில் கரைந்து காற்றுடன் கலக்கும். கற்பூர மணத்துடன்  கொசு இல்லா நிலையை அனுபவிக்கலாம்.

ஹேப்பி ஸ்லீப்பிங் தோழிகளே! 

தோழி நியூஸ் ரூம்

வாசிக்க… யோசிக்க…

21ம் நூற்றாண்டு? 

Image

மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’

சட்டம்… உயிர்… குழந்தை! 

Image

ந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சூப்பர் 50! 

Image

‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!

கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்! 

Image

மெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.

பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.

மலாலாவின் மனம்! 

Image

‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

கண் என்ப வாழும் உயிர்க்கு! 

Image

‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.

 தொகுப்பு: பாலு சத்யா

வீட்டில், மாடியில் தோட்டம் வளர்க்க சிறப்பு பயிற்சி முகாம்!

யற்கை முறையில் வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்பது எத்தனையோ பேரின் தீராக் கனவு. வீட்டில் அதற்கு வசதி இல்லாதவர்கள், மொட்டை மாடியில் கூட தோட்டம் அமைக்கலாம். இது குறித்துக் கேள்விப்பட்டிருந்தாலும், பார்த்திருந்தாலும்கூட அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவுவதற்காகவே கோவையில் நடக்கிறது ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்! ‘குங்குமம் தோழி’ இதழின் ‘ஹோம் கார்டன்’ பகுதியில், ஆலோசனைகளை வழங்கி வரும் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட் பல அரிய தகவல்களையும் பயிற்சிகளையும் வழங்க இருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

விவரங்கள்… 

Image