ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா – 8

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்! 

Lalithambal-500x500

டி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம்.

இந்த  மாத அம்மன் வழிபாடு என்பது நமது கலாசாரத்தில்  இணைந்த ஒன்று.  வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை  வழிபடலாம்.  என்றாலும் என்றாலும் சாஸ்திர உருவாக்கப்படி  12 மாதங்களை  இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்பெறும். சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கித் திருப்பிச் (தக்ஷ்ணம் அல்லது தட்சிணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே, இது ‘தட்சிணாயன புண்ணியகாலம்’  என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூரியன் வடக்கு (உத்தரம்) நோக்கிச் செல்வதால் ‘உத்தராயண புண்ணிய காலம்’ ஆகும்). உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும். தட்சிணாயனம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

surya god

தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்திரீகம் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  பிராண வாயு அதிகமாகக் கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான். இது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான நம் மக்களின் மனநிலை என்ன தெரியுமா ? ‘ஆடிமாதம்… எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்’ என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா என்று எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது இங்கே தொடர்கிறது. அதே நேரத்தில், கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம்தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, செடல் உற்சவம், பூச்சொரிவது, காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளிகளில் தெருவுக்குத் தெரு திருவிழாதான். ஆனால், ‘ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு? ஏன் இத்தனை திருவிழாக்கள்..?’ என்று ஆராயப் போனால், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ விளக்கமும் நமக்குப் புரிய வரும்.

karumariamman

பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே  அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. ‘அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்’ என்றும், ‘காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்’ என்றும் முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள்.

கொற்றவை வழிபாடு நம் தொன்மைக் காலத்தில் இருந்தே இருக்கிறது. எதிரியை அழிக்கப் புறப்படும் போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் பழந்தமிழர்கள். கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்க்கையாகவும் மாறினாள். இப்படி அனைத்துப் பலன்களும் கொண்ட ஆடி, கடந்த வெள்ளி அன்று பிறந்தது. ஆடி முதல் நாளே வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டதும் தனிச் சிறப்பு.

***

ஆடி வெள்ளியன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைக்கும் போதெல்லாம், உடம்பு ஆட்டம் கண்டு போய்விடும். பெரிய வேலை ஒன்றும் இல்லைதான். ஆனால், அந்த அடுப்பு இருக்கிறதே… அதுதான் பெரிய பிரச்னை.

எங்கள் வீட்டில் மூத்த மருமகள் நான். வருடா வருடம் ஆடிப் பெருக்கு முடிந்து குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அங்கு  கோயிலையும், மக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, சின்ன வேலை ஏதாவது இருந்தால் செய்து விட்டு, அக்கா, தங்கை குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டு இருந்தேன். எல்லோருக்கும் நான் ரொம்ப செல்லமாக  இருந்ததால் அவர்களும் என்னை எதுவும் செய்ய விட்டதில்லை. அதனாலேயே பொங்கல் வைப்பது, மாவிளக்கு செய்வது போன்றவற்றை தனியாக செய்ய வேண்டிய சூழ்நிலை வராமலே போய்விட்டது. கற்றுக் கொள்ளவும் இல்லை.

இப்போதெல்லாம் அவரவருக்கு அவரவர் வேலை பெரியதாகிவிட்டது, முன்பு போல் எல்லோரையும் அழைத்துச் செய்வதில்லை. நாமும் அப்படியே விட்டு விடலாம் என்று நினைத்தால் தெய்வக் குற்றம் ஆகி விடுமோ என்கிற பயம் சேர்ந்து கொள்ள, சென்ற வருடம் நானே ஆடி வெள்ளி பொங்கல் வைத்தேன்.

எனக்குத் தெரிந்தது குக்கர் பொங்கல். ஆனால், கோயிலுக்குப் போனால் அடுப்பு மூட்டி, அங்கிருக்கும் குச்சிகளை எடுத்து எரிய வைத்து பொங்கல் செய்து முடிப்பதற்குள் ஆட்டம் கண்டு விடுகிறது. எனக்கு மட்டும்தான் இந்த அடுப்பு இப்படி புகைந்து கஷ்டம் கொடுக்கிறதா? இல்லை எல்லோரும் அப்படியா என்று சுற்றும் முற்றும் பார்த்தால்… மற்றவர்கள் ரொம்ப சுலபமாக அடுப்பு எரிப்பதாகவே எனக்குத் தோன்றியது.

‘நிறைய வருஷம் மற்றவர்களை ஏமாற்றியே பழகிவிட்டதால் சாமி நம் அடுப்பை மட்டும் புகைய வைக்கிறது போல…‘ என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, நடுவே நடுவே, புகைச்சலில் கண்கள் சிவந்து, கண்ணீர் மல்கி, பொங்கல் இடுவதைப்  பார்த்து சிரிப்பது மட்டும் இல்லாமல் சுற்றி சுற்றி எல்லா போஸ்களிலும் போட்டோ எடுக்கும் என் கணவர் ஒரு பக்கம் என்னை டென்ஷன் படுத்தினார். இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று, டென்ஷனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ‘ஹி ஹி ஹி…‘ என்று சிரித்து நானும் போஸ் கொடுத்தேன்.

sakkaraipongal

எப்படியோ ஒவ்வொரு வருடமும் கூட்டாகவே செய்து, சென்ற வருடம் தனியாக  பொங்கல் வைத்தது  பெரிய உற்சாகம் தந்தது.  பூஜை முடிந்து பொங்கலை விநியோகம்  செய்துவிட்டு வந்த  என் கணவர், ‘நீ செய்தால் நல்லா இருக்கு ப்ரியா… பாரு! எல்லாம் தீர்ந்து போச்சு, வீட்டுக்கு எடுத்து வச்சிருக்கியா இல்லையா ?‘ என்று கேட்ட போது, அவரு கிண்டல் செய்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே , ரொம்பவே சந்தோஷத்தோடு ‘ம்… எனக்கு முன்னமே தெரியுமே… அம்மனுக்கு முழு மனசோட செய்யும் எந்த ஒரு விஷயமும் அம்மனுக்கு ரொம்பப் பிடிக்கும், நான் சந்தோஷமா செஞ்சேன்… நல்லா  வந்திருக்கு‘ என்று சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தோம்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்… 

ஆடியை ‘கற்கடக மாதம்’ என்றும் அழைக்கலாம்.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து, தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

amavasai

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கமும் உண்டு. ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந் நாட்களில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அன்று தாலி மாற்றி புதுத்தாலி அணிவார்கள். இம்மாதம் விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.  ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று நம் முன்னோர் காரணமில்லாமல் சொல்லவில்லை. அடுத்த போகத்துக்குத் தேவையான தானியங்களை விதைப்பதும் ஆடிமாதத்தில்தான்.

ஆடி வெள்ளியின்  சிறப்புகள், பூஜை முறைகள்…

இந்த வருடம், ஆடிப் பிறப்பே வெள்ளிக்கிழமையில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பு. ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, அம்மன் பாடல்களைப் பாடி, பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

SAMSUNG DIGIMAX A503

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடத்துக்கு முன் கோலமிட்டு, மாடத்துக்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டு பூஜிக்க வேண்டும்.  குளித்த பின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

ஆடி வெள்ளியில்  மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு, அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சிவனின் சக்தியைவிட அம்மனின்  சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது வழமை . இம்மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடலாம் . பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.

‘அருளோடு வரும் பொருள் தான் சிறப்பு‘ என்பது ஐதீகம். அந்தப் பொருள் வளம் தரும்  லட்சுமியை, ‘திருமகள்‘ என்றும் சொல்கிறோம். எட்டுவகை லட்சுமியின அருள் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது உண்மை. அந்த  வரம் தரும்  லட்சுமியை ‘வரலட்சுமி‘ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையாகும்.

ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களைக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். 3 நாட்கள் கழித்து கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை வரம் கிடைக்கும். ஆடி வளர்பிறை துவாதசியில் மகாவிஷ்ணுவை எண்ணி விரதமிருந்தால் செல்வ வளம் பெருகும்.

ஆடி வளர்பிறை தசமியில் திக்வேதா விரதம் ஏற்க வேண்டும் . திக்தேவதைகளை அந்தத்தத் திசைகளில் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் தீவினைகள் நீங்கும் என்பர்.

ஆடி அற்புதங்கள் நிறைந்த மாதம் மட்டும் அல்ல;
அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த அற்புதங்களை
அள்ளித்தரும் மாதமும் கூட!

  • ப்ரியா கங்காதரன் 

priya gangadharan

ப்ரியாவின்பிறபதிவுகள்

ப்ரியங்களுடன்ப்ரியா – 1

ப்ரியங்களுடன்ப்ரியா – 2

ப்ரியங்களுடன்ப்ரியா – 3

ப்ரியங்களுடன்ப்ரியா – 4

ப்ரியங்களுடன்ப்ரியா – 5

ப்ரியங்களுடன்ப்ரியா – 6

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

Image courtesy:

http://www.chayatanjore.com/

http://assets.astroved.com

http://www.harekrsna.de

http://www.tulsimadam10.in

http://4.bp.blogspot.com

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

Chocolate 1

சாக்லேட் 

இலக்கியம் இல்லா இன்னிசையாய் 

இலக்கணமற்ற தேன்மழையாய்

அறுந்தறுந்து விழும் அழகிய கவிதையாய் 

காற்றோடு சிறு நடனமாடி 

காணும் விழியை வருட செய்து 

ம்மா… சாக்லேட்… ம்மா… என அபிநயம் செய்கையில் 

சாக்லேட் ஆகவே மாறிவிடுகிறாள் வைஷு… 

தேவதைகளின் தேவதை

சாக்லேட் தேவதையாய்…

சாக்லேட்… இந்த வார்த்தையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள்  வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இதயத்தை புத்துணர்வு ஆக்கும். எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

gift-sets

உலகளவில் ‘சாக்லேட் தினம்’, வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 4ம் தேதி ‘உலக சாக்லேட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் ‘கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும், சாக்லேட், பல்வேறு இடுபொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  (அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்).

chocolate

கொலம்பியாவுக்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்லேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு வந்தது. பண்ட மாற்றுக்குக் கூட சாக்லேட் பயன்படுத்தப்பட்டதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. சாக்லேட், சோளக்கூழ் மற்றும் தேனுடன் சேர்த்து பானமாக பருகப்பட்ட வழக்கமும் பண்டைய காலத்தில் இருந்து வந்ததே. நாம் இப்போது அதிகம் விரும்பி உண்ணும் கன செவ்வக வடிவ சாக்லேட்டுகளுக்கு முன்னோடி ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர். இவர்தான் முதன் முதலில் 1847ம் ஆண்டு கன செவ்வக வடிவிலான சாக்லேட்டுகளை வார்த்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. ‘சாக்லேட், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்’ என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவை வெளியிட்டவர்கள் ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள். தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவிகிதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவிகிதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பைத் தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்பதும் தெரிந்தது. முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெஸர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், ‘சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை’ என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயாபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ‘கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயைத் தடுக்க உதவும்’ என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

Chocolate-City

தயாரிக்கும் முறை:

கோகோ (Cocoa) மரத்தின் கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவை, சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் என பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

சாக்லேட் என்பது கோகோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் சொல். இது, கோகோ கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவையுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் என்ற சொல் மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களிடமிருந்து தோன்றியது.

பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் மற்றும் குக்கீஸ்களிலும் மூலப்பொருளாக சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட்டுகள் பெரும்பாலும் அவற்றின் சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அவற்றில், இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், கூர்வெர்சர், பால் சாக்லேட் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இனிப்பு மட்டுமல்ல… கசப்பு சுவை கொண்ட சாக்லேட்டுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சாக்லேட்டின் சுவையை மேலும் மெருகூட்ட அவற்றில் ஆரஞ்சு, புதினா, ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.

Portfolio : http://fr.fotolia.com/p/201433930

இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

* ஒரு பவுண்டு (450 கிராம்) சாக்லேட் தயாரிக்க சுமார் 400 கிராம் கோகோ அவரைகள் தேவைபடுகின்றன.

* அமெரிக்காவின் மாபெரும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ‘ஹெர்ஷே சாக்லேட் நிறுவனம்’ ஒரு நாளைக்கு 80 மில்லியன் சாக்லேட்டுகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனரான Milton Hershey என்பவரின் சுவாரஸ்யமான தகவல் இது. இன்று வரை பேசப்படும் பெரிய விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணமாக இருந்தவர் இவர். ஆனால், கடைசி நிமிடத்தில் பணி நிமித்தமாக அப்பயணத்தை ரத்து செய்தாராம்.

20ம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் அமெரிக்க போர் வீரர்களின் ஒரு பிரதான உணவுப் பங்கீடாக கருதப்படுகிறது.

* ஒரு தனி சாக்லேட் சிப் உங்களுக்கு 150 அடி தூரம் நடப்பதற்கான ஆற்றலைத் தருகிறது.

* சாக்லேட்டுகள் கோகோ பழங்களின் உள்ளே இருக்கும் நெற்றுக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது முதன்மையாக மத்திய, தென் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலங்களில் வளருகின்றன.

*சாக்லேட்டில் உள்ள ஒருவகை பாக்டீரியாக்களை அழிக்கும் பண்பு பற்சிதைவை தடுக்க உதவுகிறது.

*ஐவரி கோஸ்ட் மற்றும் கானா நாடுகளில் உள்ள கோகோ பண்ணைகளில் 5-17 வயதுடைய சுமார் 1.8 மில்லியன் சிறார்கள்

கட்டாயப் பணிகளில் அமர்த்தப்பட்டனர் என 2010ம் ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், சிவப்பு வர்த்தக சான்றளிக்கப்பட்ட சாக்லேட் கட்டாய குழந்தை தொழிளார்களிடமிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.

* டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், சாக்லேட் உண்பது உடலுக்கு உகந்தது எனக் கூறுவது இந்த கரும் சாக்லேட்டுக்களைதான். ஏனென்றால் இதில் பால் மற்றும் வெள்ளை வகைகளை விட கோகோவின் அளவு கூடுவதுடன் குறைவான சக்கரையும் பயன்படுத்தப்படுகிறது.

* கி.மு 1900க்கு முன் சாக்லேட் : அஸ்டெக்குகள் கோகோ அவரைகள் கடவுள் அளித்த வரம் என நம்பப்பட்டு அவற்றை ஒரு நாணய வடிவத்திலும் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மேலும் முதலில் மசாலா வகைகள், மது அல்லது சோளக் கூழ் போன்றவற்றுடன் கோகோ சேர்க்கப்பட்டு ஒரு கசப்பான பானமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டில்தான் ஸ்பானியர்கள் கோகோவுடன் சர்க்கரை சேர்ப்பதை அறிமுகபடுத்தினார்கள்.

* பெரும்பாலான மக்களால் சாக்லேட் விரும்பப்படுவதற்கான காரணம் சாப்பிட்ட பின் சாக்லேட்டின் நறுமணம் மூளையின் ஒருவித திறன் அலைகளை அதிகரிக்கச்செய்வதுடன் ஓய்வுணர்வையும் அளிப்பதே…

நம்ம வீட்டு செல்லங்களுக்காக ஓர் எளிய ஹோம் மேட் சாக்லேட் முறையை பார்ப்போமா? 

home made chocolate

என்னென்ன தேவை? 

டார்க் சாக்லேட் பார் – 1, பிரவுன் சாக்லேட் பார் – 1, முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? 

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் இரண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் டிரை ஃப்ரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* அடுப்பை ஒரே சூட்டில் வைத்திருக்கவும். அப்போதுதான் சூடு, மேலே இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரேயை எடுத்து அதனுள் உருகிய சாக்லேட்டை ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் டிரை ஃப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவும்.

* இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மென்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழே வைக்கும் பாத்திரத்தை விட, மேலே வைத்திருக்கும் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக எளிதாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் கீழே உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் குறைந்தால் மறுபடியும் ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ஃப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரேவை உபயோகப்படுத்தலாம். ஹோம் மேட் சாக்லேட் குறைந்த செலவில், வீட்டிலேயே பண்ணலாம். டிரை ஃப்ரூட்ஸ்க்கு பதிலாக, நம் விருப்பத்துக்கு எதை வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ஃப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேஃபர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ஃப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கெட், போலோ.

– ப்ரியா கங்காதரன் 

20150403_090654

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

ப்ரியங்களுடன் ப்ரியா – 5

ப்ரியங்களுடன் ப்ரியா – 6

Image courtesy:

http://www.lulas.com

http://blogs.mcgill.ca

http://www.iloveportlandmaine.com

http://www.jorvik.co.uk

http://www.abc.es

http://cdn.instructables.com

அருணா செய்த தவறு என்ன?

Aruna-Shanbaug

கடந்த 42 ஆண்டுகளில் அருணா ஷன்பாக் என்ற பெயர் இந்திய ஊடகங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய பெயர். அருணாவுக்குப் பார்வை கிடையாது. பேச முடியாது. நடக்க இயலாது. எதையும் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும், மருத்துவமனையின் சின்னஞ்சிறு அறைக்குள் இருந்து கொண்டு இந்தியப் பெண்களின் நிலையையும் இந்திய நீதியின் ஓட்டைகளையும் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு, மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருந்தார். அருணாவின் போராட்டத்துக்கு நியாயம் கிடைத்ததா? 

ர்நாடகாவில் உள்ள ஹால்டிபூர் கிராமத்தில் பிறந்தவர் அருணா. ஏராளமான சகோதர, சகோதரிகள் கொண்ட ஏழ்மையான பெரிய குடும்பம். அருணாவுக்குப் படிப்பு மீது ஆர்வம் அதிகம். அந்தக் காலத்தில் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே படிக்க வந்தனர். பள்ளி இறுதி முடித்தபோது அவர் வயதுப் பெண்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அருணா மருத்துவம் படிக்க நினைத்தார். ஏழ்மை காரணமாக மருத்துவம் படிக்க வைக்க இயலாது என்று கூறிவிட்டார் அவரது சகோதரர். மருத்துவர் எண்ணத்தைக் கைவிட்டு செவிலியர் படிப்பில் சேர விரும்பினார். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு பெண் வெளியில் சென்று படிப்பதில் விருப்பம் இல்லை. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி படிக்கச் சென்றார் அருணா.

பள்ளியிலும் கல்லூரியிலும் தன்னுடைய ஏழ்மையை நினைத்து அவர் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. எப்பொழுதும் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். பெண் என்ற காரணத்தாலோ, ஏழ்மை என்ற காரணத்தாலோ தன்னுடைய திறமை முடங்கிப் போய்விடக்கூடாது என்று நினைத்தார். எளிய ஆடைகளில் அத்தனை வசீகரமாக இருப்பார் அருணா.

மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்தது. எந்த விஷயத்தையும் வேகமாகக் கற்றுக்கொள்வார் அருணா. நாய்களை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்யும் துறைக்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அந்தத் துறை பிடிக்காவிட்டாலும் வேறு துறையைக் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை. வேலையில் மிகவும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் செயல்படுவார். கெம் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவர்  அருணாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி, அவரது குடும்பத்தினர் மறுத்தனர். ஆனாலும் தன்னுடைய திருமணத்தில் உறுதியாக இருந்தார் அருணா.

அருணாவின் கண்காணிப்பில் இருந்த துறையில் சோஹன்லால் பர்தா வால்மிகி என்பவன் வார்டு பாயாக வேலை செய்து வந்தான். வேலையில் காட்டிய அசிரத்தை, திருடு போன்ற காரணங்களுக்காக அருணாவால் கண்டிக்கப்பட்டான். இறுதியில் அவன் செய்த ஒரு குற்றத்துக்காக அருணா மெமோ வழங்கினார். அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. ஒருநாள் இரவு உடை மாற்றும் அறையில் அருணாவை நாய்ச் சங்கிலியால் கழுத்தை நெரித்தான். பிறகு பாலியல் பலாத்காரம் செய்தான். மோதிரம், தோடு போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அருணா சுயநினைவிழந்தார். மறுநாள் காலைதான் அருணாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அருணாவின் திருமணம், எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் கொலை முயற்சி, திருடு போன்ற குற்றங்களை மட்டும் சோஹன்லால் மீது சுமத்தியது. இயல்பான முறையில் உடல் உறவு கொள்ளாததால் அவன் மீது பலாத்கார குற்றத்தை மருத்துவர்கள் சுமத்தவில்லை. இறுதியில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவனுக்குக் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்து டெல்லி சென்றவனைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அருணாவின் திருமணம் நின்று போனது. மருத்துவர் வேறு திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் அருணா பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை ஒருபோதும் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. காலப்போக்கில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டார் அருணா.

அருணாவுக்குப் பார்வை பறிபோயிருந்தது. பேசும் சக்தியை இழந்திருந்தார். நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. வலி என்ற ஓர் உணர்ச்சியை மட்டுமே அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. யாரையும் சார்ந்து வாழாமல், தன்னுடைய முயற்சியால் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்று கனவு கண்டு, லட்சியத்தை நிறைவேற்றி, பலனை அனுபவிக்க இருந்த வேளையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் பிறரின் உதவியை நாடும் பெண்ணாக மாறிப் போயிருந்தார் அருணா. உடலில் உயிர் இருந்ததே தவிர, அவர் உயிருள்ள ஒரு பெண்ணாக இருக்கவில்லை.

அடிக்கடி வலிப்பு வரும். பிற உபாதைகள் வாட்டும். முனகலும் கண்ணீரும் அவர் வலியால் துடிப்பதை வெளிப்படுத்தும். அருணாவின் கொடுமையான வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார் பிங்கி விரானி. அருணாவுக்குக் கட்டாயமாக உணவு கொடுப்பதை எதிர்த்து, கருணைக்கொலைக்கு அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2011ம் ஆண்டு கருணைக்கொலைக்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்.

அன்றைய அருணாவிலிருந்து இன்றைய நிர்பயா வரை பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள், நம் சமூகத்தில் நிலவும் பெண்களைப் பற்றிய பிற்போக்கான எண்ணங்களுக்கே பலியாகியிருக்கின்றனர். ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்யும் ஆண், தன்னுடைய தவறைக் கண்டிக்கும்போது ஆண் என்ற ஈகோவை உரசிப் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறான். அருணா செய்ததை ஓர் ஆண் செய்திருந்தால் அதிகப்பட்சம் மனத்துக்குள் திட்டியிருப்பான். இல்லை என்றால் வேலையை விட்டு ஓடியிருப்பான். வழி இல்லை என்றால் மன்னிப்புக் கேட்டிருப்பான். ஆணுக்குக் கீழ் பெண் என்று காலம் காலமாகச் சொல்லிலும் செயலிலும் பின்பற்றி வந்த ஒரு சமூகத்தில் சோஹன்லால் போன்றவர்கள் அலுவலக விஷயத்துக்குத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கத் துடிக்கின்றனர். திருமணம் நடக்க இருக்கும் ஒரு பெண்ணுக்கு பலாத்காரம் என்பது வாழ்நாள் தண்டனையாக இருக்கும் என்று எண்ணி வெறிச் செயலில் ஈடுபட்டிருக்கிறான். எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத, ஒரு பெண் அவள் நண்பனுடன் பேருந்தில் பயணம் செய்ததையே ஏற்றுக்கொள்ள இந்திய ஆண்களின் மனம் ஒப்புக்கொள்ளாதபோது, 42 வருடங்களுக்கு முன் சோஹன்லால் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டியதில் வியப்பில்லை.

Aruna 2

ஏழ்மை நிலையில் தன் சொந்தத் திறமையால் முன்னேறத் துடித்த ஒரு புத்திசாலிப் பெண், முட்டாள்தனமான இந்திய ஆண்களின் வக்கிர எண்ணத்துக்கு அநியாயமாகப் பலியாகிவிட்டார். சோஹன்லாலால் தண்டிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, நீதிமன்றத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் வலியால் துடித்து துடித்து உயிர் துறந்த அருணா செய்த தவறுதான் என்ன?

சஹானா

***

Image courtesy:

http://nasheman.in

http://www.hindustantimes.com/

நூல் அறிமுகம் – 8

pamban swamigal

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

எஸ்.ஆர்.செந்தில்குமார்

’இரை தேடுவதோடு இறையும் தேடு’ என்பது பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம். அதை உலகுக்கே உரத்துச் சொல்ல பிறவி எடுத்து வந்த மகான் ‘ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.’ இந்து மரபில் கடவுளர்க்குக் கொடுக்கப்படும் மரியாதையும் பக்தியும் அடியார்க்கும் உண்டு. இறைவனை விட அவன் அடியார்களை ஒரு படி மேலே போய் துதித்தவர்களும் உண்டு. ‘அடியார்க்கு அடியேன் ஆவேனே’ என்பதுதான் இறைச்சான்றோரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது என்பதற்கு நம் பக்தி இலக்கியங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. காரணம், இறைவன் எளியோர்க்கு உணர்த்த விரும்பியதை எடுத்துச் சொல்பவர்கள், வழிகாட்டுபவர்கள் மகான்கள். அப்படிப்பட்ட பெரியவர்களில் இன்றைக்கு உலகம் முழுக்க பிரபலமாகியிருக்கும் பாம்பன் சுவாமிகளின் சரிதத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நூல்.

எந்தப் பிறவியாயினும் அதற்கோர் காரணம் இருக்க வேண்டும் என்பது துறவிகளுக்கு முழுக்கப் பொருந்தும். அப்படி ஒரு காரணத்தோடு பிறவி எடுத்தவர் பாம்பன் சுவாமிகள். எல்லா சாதாரண மனிதர்களைப் போலவே மூப்பையும் பிணியையும் உடலில் தாங்கிக் கொண்டவர். பல கஷ்டங்களுக்கு நடுவேயும் தமிழுக்கும் சைவநெறியான குகப்பிரம்ம நெறிக்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். இவர் இயற்றிய ‘சண்முகக்கவசம்’ ஒன்றே இவர் புகழ் சொல்லப் போதுமானது. ஆனாலும் அவர் நம்பிய முருகன் அவரைக் கைவிடவில்லை. அவர் இன்னலைப் பொறுக்க மாட்டாமல் ஓடோடி வருகிறான். உதவுகிறான். நோய் நீக்குகிறான். தெரியாத ஊரில் யார் மூலமாகவோ வந்து வழிகாட்டுகிறான். தாக்குவதற்கு அடியாட்கள் வந்தால் காவல்துறையினர் வேடத்தில் பதிலடி கொடுக்கிறான்… இந்நூல் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.

ஒரு துறவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீமத் பாம்பன் குமருகுருதாச சுவாமிகள் சிறந்த உதாரணம். அதற்கான இரண்டு சம்பவங்கள் நூலிலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

***

ஒன்று

ஒருநாள் மதிய வேளை.

பாம்பன் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே ஒரு மூட்டைப் பூச்சி ஓடியது. அப்போது அங்கிருந்த ஒரு சிறுவனிடம், ‘அந்தப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய் வேறிடத்தில் விடு குழந்தாய்’ என்று சொன்னார் பாம்பன் சுவாமிகள்.

அந்தச் சிறுவனோ இதற்கு முன்பெல்லாம் மூட்டைப் பூச்சியை நசுக்கியே பழக்கப்பட்டவன். சுவாமிகள் மூட்டைப் பூச்சியை அப்புறப்படுத்தச் சொன்னதைக் கேட்டவுடன் தன் விரலால் நசுக்கிக் கொன்றான்.

பாம்பன் சுவாமிகள் துடித்துப் போனார். ‘அடடா… என்ன காரியம் செய்துவிட்டாய்? ஒரு உயிரைக் கொன்றுவிட்டாயே’ என்று வருந்தினார்.

அன்றைய உணவைத் தவிர்த்தார். மௌனமானார்.

‘சுவாமி! சின்னப் பையன் தெரியாமல் செய்த பிழைய மன்னிக்க வேணும். சிறு பூச்சிதானே… தயவுசெய்து சாப்பிடுங்கள்’ எனக் கோரினார்கள், நயினார் பிள்ளை குடும்பத்தார்.

‘உங்கள் மீது தவறேதும் இல்லை. ஆனால், அதுவும் ஒரு உயிர் அல்லவா? என்னால் அந்த உயிரின் துயரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் முன்னே ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது. ஆகவே, என்னால் நிம்மதியாக உணவெடுத்துக் கொள்ள இயலாது…. இந்த மூட்டைப் பூச்சிக்காக உணவு துறக்கிறேன். ஜபம் செய்யப் போகிறேன். என்னைத் தனியாக விடுங்கள்’ என்றார் சுவாமிகள்.

***

இரண்டு

ஒருநாள் இரவு 8 மணியளவில் சுவாமி வீட்டின் மாடியில் இருந்தார். வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணிய முதலியார் மாடிக்கு வந்து, ‘சுவாமி!’ என்று அழைத்தார்.

தீப வெளிச்சமில்லை. ஆகவே, ‘யாரது?’ எனக் கேட்டார் சுவாமிகள்.

‘நான் தான் பாலசுப்ரமணியன். தங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது சுவாமி’ என்று பதில் சொன்னார்.

‘அது என் மூத்த மகன் இறந்த செய்தியே… படித்துப் பார்’ என்றார் சுவாமிகள். அதோடு தனக்கு செய்தி சொன்னவரிடம் ‘செய்ய வேண்டிய காரியங்களை செய்க’ என ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.

நிலவொளியில் அமர்ந்து தியானத்தில் கரையத் தொடங்கினார் சுவாமிகள்.

***

இந்த இரண்டு நிகழ்வுகளும் எளியவர்களுக்கு முரணாகத் தெரியலாம். அதென்ன மூட்டைப்பூச்சிக்கு இரங்குகிறவர், சொந்த மகனின் மரணத்துக்கு கலங்காமல் இருக்கிறாரே எனக் கேள்வி எழலாம். உலக ஜீவராசிகள் அனைத்தையும் நேசிப்பதும் தனக்கென சொந்ந்த பந்தங்களோ, பற்றோ இல்லாமல் வாழ்வதுதான் துறவு நிலை. அதை சீராகப் பின்பற்றியவர் பாம்பன் சுவாமிகள். இதை இந் நூலின் ஆசிரியர் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

பாம்பன் சுவாமிகளின் சரிதத்தோடு நூல் முழுக்க அவர் இயற்றிய, படித்தால் பலன் தரும் பாக்களும், அவர் மகிமையால் எத்தனையோ இன்னல்களிலிருந்து விடுபட்ட பக்தர்களின் அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியில் திளைக்க, உன்னதமான ஓர் ஆன்மிகப் பெரியவரின் முழு வரலாறை தெரிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்.

***

நூல்: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஆசிரியர்: எஸ்.ஆர்.செந்தில்குமார்

வெளியீடு: சூரியன் பதிப்பகம்

விலை: ரூ.125/-

முகவரி: சூரியன் பதிப்பகம்,

229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,

சென்னை – 600 004.

தொ.பேசி: 044 – 4220 9191 Extn: 21125

மொபைல்: 72990 27361.

இ-மெயில்: kalbooks@dinakaran.com

சேவைக்குக் கிடைத்த விருது!

Anbu 1
உலக மகளிர் தினத்தை ஒட்டி, மத்திய அரசு ஆண்டு தோறும் ஆறு தேசிய விருதுகளை பெண்களுக்கு வழங்கி வருகிறது. ’ஸ்ரீ சக்தி புரஸ்கார்’ எனப்படும் இந்த விருது பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படுவது. இந்த ஆண்டு பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மேலும் எட்டு விருதுகளை பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அரசு. அந்த விருதின் பெயர் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது.’ இந்த விருது பெற்ற மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்… கௌசல்யா, சாய்லட்சுமி பலிஜப்பள்ளி, நந்திதா கிருஷ்ணா! மூவரையும் மனமாரப் பாராட்டுவோம்! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றிய சேவைக்காக கௌசல்யாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர் குறித்த கட்டுரை, ‘குங்குமம் டாக்டர்’ டிசம்பர் 1-15, 2015 இதழில் வெளியானது. உங்கள் பார்வைக்காக அந்தக் கட்டுரை இங்கே…
தேவை கொஞ்சம் அன்பு!
‘ஹெ ச்.ஐ.வி. பாதித்த மனிதர்கள் அபாயகரமானவர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கைகளைக் குலுக்கலாம்… ஓர் அன்பான அணைப்பைத் தரலாம். அது அவர்களுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’. –  இளவரசி டயானாவே இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தாலும், இந்த உண்மைக்குக் காது கொடுப்பவர்கள் நம்மில் வெகு குறைவு. எய்ட்ஸ் நோயாளிகளும் ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்களும் சமூகத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகத்தான் இன்றைய தேதி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கௌசல்யா.
ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுகிற கௌசல்யா தொடங்கிய அமைப்புதான் ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’. ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் ஹெச்.ஐ.வி. தன்னை பாதித்த வலி மிகுந்த கதையை மெல்லிய குரலில் விவரிக்கிறார் கௌசல்யா…
‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். சொந்த கிராமம் நாமக்கல் போடிநாயக்கன்பட்டி… வளர்ந்ததெல்லாம் நாமக்கல். அம்மா 2 வயசுலயே இறந்துட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டார். அதனால பாட்டி வீட்டுல வளர்ந்தேன். ஒரு அக்கா, அண்ணன்… அக்காவுக்கு கல்யாணம் ஆகி, ஒரு பையன். அக்கா இப்போ உயிரோட இல்லை. நீரிழிவுப் பிரச்னை இருந்துச்சு. அது தீவிரமாகி ஹார்ட் ப்ராப்ளம் வந்து, பிரெயின்ல கட்டி வந்து இறந்துட்டாங்க…’’ – சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார்…

‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தப்பவே எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. கணவருக்கு தொட்டிரெட்டிபட்டின்னு ஒரு கிராமம். லாரி ஓட்டுவார். விவசாயத்துல ஒத்தாசையா இருப்பார். அவருக்கு ஏற்கனவே ஹெச்.ஐ.வி. இருந்திருக்கு. அது அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் தெரியும். மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க. 1995 மார்ச்ல எனக்கு கல்யாணம்… அப்புறம் அவர் மூலம் எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிச்சுச்சு. ஏதோ ஒரு காரணத்துக்காக டெஸ்ட் பண்ணினப்பதான் அது தெரிஞ்சுது.
கல்யாணத்துக்கு 10 நாளுக்கு முன்னாடி என் கணவரை ஒரு டாக்டர் டெஸ்ட் பண்ணியிருக்கார்… ஹெச்.ஐ.வி. இருக்கறது தெரிஞ்சிருக்கு. அந்த டாக்டர்தான் என் கணவருக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதை ஒரு மீட்டிங்ல என்கிட்ட சொன்னார். ‘இப்படி ஒரு கொடுமையான உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்களே’ங்கிற ஆதங்கத்துல, நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிட்டேன். அதுக்கப்புறம் கணவர் வீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாம போயிடுச்சு.
கல்யாணம் முடிஞ்சு, சரியா ஏழாவது மாசம் என் கணவர் தற்கொலை செஞ்சுகிட்டார். அந்தத் தகவலைக் கூட என் மாமனார் வீட்ல இருந்து யாரும் சொல்லலை. ‘விஷம் குடிச்சி செத்துப் போயிட்டாரு’ன்னு யாரோ மூணாவது மனுஷர் சொல்லித்தான் நான் தெரிஞ்சுகிட்டேன். என் கணவர் ஹெச்.ஐ.வி.க்கான மருந்தை முறையா எடுத்துக்கலை. யாரோ ஒரு போலி மருத்துவர்கிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டிருக்கார். அதுக்கு ஒவ்வொரு முறையும் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்னு பணம் வேற குடுத்திருக்கார். வீட்ல குடுத்த பிரஷர் தாங்காமதான் தற்கொலை வரை போயிருக்கார். கணவரோட மரணத்துல சந்தேகம் இருக்குன்னு நான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். ஆனா, அந்த கேஸை என் மாமனார் வீட்ல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டாங்க.
இடையில என் மாமனார் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போனார். அந்தக் குடும்பத்துக்கு முறையான வாரிசு நான்தான்கிற சர்டிஃபிகேட், அவரோட டெத் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கினேன். ஆனா, ஒண்ணும் நடக்கலை. என் மாமனார் உயில் எழுதி வச்சிட்டுப் போயிருக்கறதா சொன்னாங்க. எனக்கு அந்தச் சொத்து பெருசில்லை. அதை வச்சு ஹெச்.ஐ.வி. பாதிப்படைஞ்ச பெண்களுக்கு ஏதாவது உபயோகமா செய்யணும்னு நினைச்சேன்.
கேஸ் நடத்தறது சாதாரண விஷயமில்லை… வக்கீல் மூலமா நோட்டீஸ் அனுப்பணும்… வழக்கு நடத்தணும்… தீர்ப்பு வர வருஷக் கணக்கா ஆகும். அப்படியே நடத்தினாலும், நான் இறந்து போனதுக்கு அப்புறம் கூட நீதி கிடைக்குமான்னு தெரியலை. என்னை மாதிரி எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பொண்ணு ஒண்ணு இதே மாதிரி வழக்குப் போட்டுச்சு. அந்தப் பொண்ணுக்கு தீர்ப்பும் சாதகமாத்தான் வந்தது. ஆனா, யார் அந்தப் பொண்ணுக்கான உரிமைகளையும் சொத்தையும் புகுந்த வீட்ல போய் மீட்கறது? தீர்ப்பு வர்றதுக்கு அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னாலயே, அந்தப் பொண்ணு இறந்துட்டா…
ஹெச்.ஐ.வி. பாதிப்போட ஒரு பெண் வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவால். இந்த மாதிரி பெண்களுக்காகத்தான், நான், வரலட்சுமி, ஹேமா, ஜோன்ஸுனு நாலு பேரும் சேர்ந்து ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’  ஆரம்பிச்சோம்.
ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க… ஆதரவற்ற தனிமை… பிறக்கிற குழந்தை ஹெச்.ஐ.வி. பாசிட்டிவா பிறந்தாலும் நெகட்டிவா பிறந்தாலும் பிரச்னை! பெண் குழந்தைன்னா கண்டுக்க மாட்டாங்க… ஆண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இல்லைன்னா தூக்கிட்டுப் போயிடுவாங்க. இந்த மாதிரி பாதிப்புக்கு ஆளான பெண்கள் அனாதை இல்லங்கள்லயோ, ஏதாவது ஆசிரமத்துலயோதான் இருந்தாகணும். வாடகைக்கு வீடு கிடைக்காது. கெடைச்சாலும் அநியாய வாடகை. அரசாங்கம் விதவை பென்ஷன்னு ஆயிரம் ரூபாய் குடுக்குது… அதுவும் 38-40 வயசுக்கு இடைப்பட்ட பெண்களுக்குத்தான். ஹெச்.ஐ.வி.க்கு மருந்து எடுத்துக்கறாங்கன்னா அதுக்கு ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. இதை வச்சுக்கிட்டு வாழ முடியுமா?
2002ல தமிழக அரசு ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யறதுக்காக ஒரு குழுவை அமைக்கணும்னு ஒரு ஆணை கொண்டு வந்தது. அது வெறும் எழுத்தளவுலதான் இருக்கு. இன்னும் செயல்படுத்தப்படலை. அந்த மாதிரி ஒரு குழு இருந்தா, ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களை சின்னச் சின்ன குழுக்களா இணைச்சு, தொழில் பயிற்சி கொடுக்க முடியும். அதன் மூலமா அவங்களோட வருமானத்தைப் பெருக்க முடியும். பேங்க்ல தொழில் தொடங்க கடன் வாங்கித் தர முடியும். அதுக்காகத்தான் நாங்க குரல் கொடுத்துகிட்டு இருக்கோம்.
சென்னைல ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ரேஷன் கார்டு வாங்கறதே கஷ்டம். மாவட்டங்கள்ல கொஞ்சம் சிரமப்பட்டாவது வாங்கிடலாம். ‘கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு? உனக்கு எதுக்கு பென்ஷன்’னு ஈசியா கேட்டுடுவாங்க. அந்த மாதிரி பாதிக்கப்படுற பெண்களுக்கெல்லாம் எங்க அமைப்பு மூலமா வழி காட்டுறோம். ஒரு பெண்ணுக்கு பிரசவம்னா யாராவது தன்னார்வலரை வச்சு உதவி செய்யறோம். பிரசவத்துக்கு அப்புறம் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் மருந்து குடுக்கறது, சிகிச்சைக்கு உதவறதுன்னு எங்களால முடிஞ்ச உதவியைச் செய்யறோம். பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருந்தா அதை வளர்க்க, படிப்புக்கு உதவ, பண்டிகை நாட்கள்ல பரிசுப் பொருட்கள் வழங்க யாராவது எம்.எல்.ஏ., எம்.பி.க்களோட உதவியை பெற்று செஞ்சு குடுக்கறோம். தெரிந்த நிறுவனங்கள்ல ஏதாவது வேலை வாங்கிக் குடுக்கறோம்.
ஹெச்.ஐ.வி. பாதிப்போட வர்ற பெண்களுக்கு நாங்க முதல்ல கொடுக்கறது கவுன்சலிங். அவங்களுக்கு டி.பி. இருக்கான்னு பார்ப்போம். டி.பி. இருக்கறவங்கள்ல சில பேருக்கு மூளையிலயும் பாதிப்பு இருக்கும். சி.டி. ஸ்கேன் செஞ்சு பார்த்தாதான் அது தெரியும். அதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். அதை இலவசமா செய்யறதுக்கும் வழி இருக்கு. அதுக்கான டாக்டர்கிட்ட அவங்களை அனுப்பி வைப்போம்.
ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் இருக்கற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க விரும்புவாங்க. அப்படிப்பட்ட ஆணையும் பெண்ணையும் பத்தின முழுத் தகவல்களையும் சேகரிச்சு சரி பார்ப்போம். எப்போல்லாம் அவங்க மருத்துவ பரிசோதனைக்குப் போகணும்… வாழ்க்கையை எப்படி நடத்தணும்… ஒருத்தருக்கொருத்தர் எப்படி உதவியா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுப்போம்…’’
சாதாரணமாகச் சொன்னாலும் கௌசல்யா, அவரைப் போன்ற பெண்களுக்குச் செய்வது மகத்தான சேவை. இவருடைய ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’ அமைப்பு 13 மாநிலங்களில், 83 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது. அவற்றில் இருக்கும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களில் ஜோன்ஸ் இப்போது உயிரோடு இல்லை,  ஹேமா தன்னுடன் செயல்படுவதில்லை என்கிற வருத்தம் அவர் வார்த்தைகளில் தெரிகிறது.
கௌசல்யா கடைசியாக இப்படிக் கூறுகிறார்… ‘‘எந்த சுகாதாரத் திட்டமாக இருந்தாலும், அதில் முதலில்     ஒதுக்கப்படுபவர்கள் பெண்கள்தான். கடைசியாகத்தான் அவங்க மேல திட்டத்தின் பார்வை விழுது. சத்தீஸ்கர் கருத்தடை சிகிச்சை முகாம்ல 13 பெண்கள் இறந்து போனாங்களே… எப்படி? கருத்தடை ஆண்களுக்கு எளிதானது. பெண்களுக்கு கடினமானது. அந்த சிகிச்சையை ஆண்கள் செஞ்சுகிட்டிருந்தாங்கன்னா, இந்த மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். இல்லையா?’’
மேகலா
படம்: ஆர்.கோபால்

நூல் அறிமுகம் – 7

wrapper375

மிச்சமென்ன சொல்லுங்கப்பா

கி.பி.அரவிந்தன்

‘ஈழத்தமிழரின் வாழ்விலும் இருப்பிலும் இன்று என்னதான் மிஞ்சியுள்ளது? அந்தக் குழந்தைக்குச் சொல்வதற்கு அப்பனிடமும் மிச்சம் மீதம் என்ன இருக்க முடியும்?

பொய்யையும் புனைகதையையுமா எடுத்துரைக்க முடியும்?

அறுபதாண்டுகளுக்கும் மேலாக அறவழியிலும் ஆயுத வழியிலும் தொடர்ந்த ஈழத்தமிழரின் அரசியல் கோரிக்கைக்கான போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் சிதைவுற்றது.

அறவழிப் போருக்கும் ஆயுதவழிப் போருக்கும் இடையேயான பிரரிப்பும் தொடுப்பும் 1970ம் ஆண்டில் முகிழ்ந்த ஓர் இளந்தலைமுறையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

70ம் ஆண்டு இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒரு போராளியாகவும் கவிஞனாகவும் அந்த்த் தலைமுறையினருடன் இணைந்து நான் கண்ட கனவுகளும் அவற்றின் மீதிகளும்தான் இக்கவிதைகள்…’

கவிஞர் கி.பி.அரவிந்தன், இந்நூலின் முன்னுரையில் சொல்லியிருக்கும் இந்தக் குறிப்புகளே இக்கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்யப் போதுமானவை. பெரும்பாலான கவிதைகளின் அடிநாதம் துயரம் தோய்ந்ததாக இருக்கிறது. கவிதை வரிகளோ அத்துயரத்தை ஏற்படுத்திய சூழலின் மீது நம்மை கோபம் கொள்ள வைக்கின்றன.

எழுத்தாளர்கள் வ.கீதா மற்றும் எஸ்.வி.ராஜதுரை கி.பி.அரவிந்தனின் கவிதைகளுக்கான அணிந்துரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்… ‘கி.பி.அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை: யாழ்ப்பாணத்து அனுபவங்கள்; தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்து அனுபவங்கள்; அகதி வாழ்வின் பாதிப்புகள் (மேற்கு ஐரோப்பிய அனுபவங்கள்). இக்கவிதைகள் வரலாற்றனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல. அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டுப் பண்படுத்தப்பட்டுக் கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. போராளியின் சோர்வு, அகதியின் மனத்தாங்கல்கள், சிந்திக்கும் எவருக்குமே உண்டாகும் ஐயப்படுகள், தர்ம சங்கடங்கள் – இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையை இக்கவிதைகளில் காணலாம்…’

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியோ, ‘ஒரு நாட்டில் வாழுகிற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகிற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளதென்றே கருதுகிறேன்’ என்று குறிப்பிடுகிறார்.

’தன் ஆன்ம நிறைவைத் தேடியும், தன் சகமனிதர்களுக்கு அது இல்லையே என ஏங்கியும் எழுகிற விசும்பலின், கண்ணீரின், அரற்றலின், சினத்தின் வார்த்தைகளாகவே அரவிந்தனின் அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன. தான் இழந்தவைதாம் ‘தான்’ என்று கண்டுகொண்ட தகிப்பில் சொற்களாக்க் குமைந்து வெடிக்கின்றன’ என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் பாரதிபுத்திரன்.

இந்தத் தொகுப்பில் ஏற்கனவே வெளிவந்த கி.பி.அரவிந்தனின் ‘இனி ஒரு வைகறை’, ‘முகம்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்ற கவிதைகளும், நூலாக்கம் பெறாத கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…

இருப்பு

குளிர் சிரிக்கும்

தோற்றுக் கொண்டிருப்பது

தெரியாமல்

மரங்கள் எதிர்கொள்ளும்

தயங்காமல்

தங்களை நட்டுக்கொள்ளும்

தலைகீழாய்

பட்டுப்போன பாவனையாய்

பனியாய்ப் படிந்து

நளின அழகில்

பரிசோதிக்கும் குளிர்

பின்வாங்கல் வேருக்குள்

சூரியன் வரும்வரை…

***

நெல்லியும் உதிரும் கனிகளும்

வேப்பமர நிழலில்

கொப்பெல்லாம்

காய்க்கொத்தாய்

சாய்ந்து நிற்குமே

பாரமதைத் தாங்காமல்

நெல்லி மரம்

நினைவுண்டா?

கனி உதிர்த்து நிற்குமந்த

நிறு நெல்லி மரத்தில்தான்

காய் சுவைத்தோம்.

சாட்சியமாய்

வாய் சுவைத்தோம்.

காய்த்திருந்தது பார்

தேனடையில் தேனீக்களாய்

கலையாத சுற்றம்போல்

குலைகள்

அப்போது

உன் வயிற்றில் நம் கனி.

இரும்புச் சிறகசைத்து

சாவரக்கன்

வானேறி வருகையிலும்

சின்னி விரலால்* அவனைப்

புறந்தள்ளி

அதனடியில்தானே

வெயில் காய்ந்திருக்க

வேப்பங்காற்றினால் நாம்

தோய்ந்திருந்தோம்.

வான்வெளியை அளந்தபடி

நம் கனவில்.

நெல்லி

இலைக்காம்புதனை

ஒன்றொன்றாய் நீ பொறுக்கி

மடக்கென்று மொக்கொடிக்கும்

மெல்லொலியிலும்

கேட்டது பார்

நம் சுற்றமெல்லாம்

உயிரொடியும் ஓசை

அறியாயா?

அறிந்தோமா நாம்

ஊரொடிந்து

ஊரோடிணைந்த

உறவொடிந்து

உறவின் ஊற்றான

குடும்ப அலகொடிந்து

உதிர்ந்த கனிகளாய்

வேறாகி வேற்றாளாகி

அந்நியமாகும் கதை

காலவெளிதனில் கரைந்த்து

ஒரு பத்தாண்டானாலும்

நெல்லி உண்ட அவ்வையின்

பழங்கதையைச்

சிதறி உருண்டோடும்

நம் வயிற்றுக் கனிகளுக்கு

ஒப்புவிக்கும் போதினிலே

உயிர் பின்னிக் கிடக்குமெம்

காதல்தனை இசைக்கிறது

கண் நிறைத்து வீற்றிருக்கும்

நெல்லி.

நூல்: மிச்சமென்ன சொல்லுங்கப்பா

ஆசிரியர்: கி.பி.அரவிந்தன்

விலை: ரூ.200/-

வெளியீடு: ஒளி, இராயப்பேட்டை, சென்னை-600 014. செல்: 9840231074.

விற்பனை உரிமை: அகல், 348-ஏ, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014. செல்: 9884322498.

***

தொகுப்பு: பாலு சத்யா

நூல் அறிமுகம் – 5

திருவண்ணாமலை கிரிவலம்

ஒரு தரிசன வழிகாட்டி

wrapper374

‘திருவாரூர்ல பிறந்தா முக்தி; காசியில இறந்தா முக்தி; திருவண்ணாமலையை நினைச்சாலே முக்தி’… இது பல காலமாக தமிழகத்தில் உலாவரும் ஒரு பழைய பழமொழி. அந்த அளவுக்கு கீர்த்தியும் மகிமையும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு உண்டு. வெல்லத்தை நாடி வரும் எறும்புக் கூட்டம் போல இந்தப் புண்ணிய தலத்தை ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தப் புனிதத் தலத்துக்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.

இந்த கையடக்க நூல், திருவண்ணாமலையின் பெருமையை எளிய முறையில் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, ‘இப்படிப்பட்ட ஆன்மிகப் பொக்கிஷம் வேறெங்கும் இல்லை. அதற்குக் காரணம் திருவண்ணாமலையில் இருக்கும் மலை. இந்த மலையே சிவலிங்கம். இந்த மலைச்சாரலிலும், அதன் குகைகளிலும் இன்னும் பல்வேறு சித்தர்களும் ஞானிகளும் உலகறியாமல் தங்களை ஒளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.’… இப்படி திருவண்ணாமலை பற்றிய பல முக்கிய, பெருமைக்குரிய உதாரணங்களை எளிமையாகத் தருகிறார்கள் இந்நூலை எழுதிய சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்.

இந்தக் கையடக்கப் புத்தகத்தில் அக்னி ஜோதியான சிவன் கல் மலையானது எப்படி, திருவண்ணாமலை கிரிவல முறைகள், மலையைச் சுற்றியுள்ள லிங்கங்கள், புண்ணிய ஸ்தலங்கள் அவற்றின் வரலாறு, திருவண்ணாமலையில் தங்கும் இடங்கள், கட்டணம், சுற்றியுள்ள முக்கிய இடங்கள் அத்தனையும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் திருவண்ணாமலை செல்ல விரும்புகிறவர்களுக்கு உற்ற வழிகாட்டி இந்தப் புத்தகம்.

நூல்: திருவண்ணாமலை கிரிவலம் – ஒரு தரிசன வழிகாட்டி

ஆசிரியர்கள்: சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்

விலை: ரூ.25/-

வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரைச் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020.

தொலைபேசி: +91 73057 76099 / 044-2441 4441/ mail2ttp@gmail.com

ஆண்களுக்கு ஒரு தினம் – ஏன்?

nature-looking-sea-man-wallpapers-105243இன்று  ‘சர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19).  எதற்கு ஆண்களுக்கு  என்று ஒரு தினம்? இந்த தினத்தின்முக்கியத்துவம் என்ன?

‘சர்வதேச பெண்கள் தினம்’ (மார்ச் 8) பிரபலம் அடைந்த அளவுக்கு, ஆண்கள் தினம் அவ்வளவு பிரபலமாகவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கான கொண்டாட்டங்கள், வருடா வருடம் அதிகரித்து வருகின்றன.

இதைப் பற்றிய ஒரு பார்வை…

IMD (International men’s Day) உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தினமாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் 1960களிலேயே  ‘ஆண்கள் தினம்’  தேவை என்ற அறை கூவல்கள் தொடங்கிவிட்டன. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால் முதன் முதலில் இதற்கான விதை விதைக்கப்பட்டது.  எனினும், சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது.

இந்தியாவில், முதன் முதலில் 2007ம் வருடம்  ‘ஆண்கள் உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது. 2009ம் வருடம் முதல், ஆண்களின் பிரத்யேக ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருகின்றன.

Happy-International-Mens-Day-Wallpaper

இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் யாதெனில் –

  • சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துவது.
  • சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தை – மகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க  விழையும் முயற்சி ஆகும்.

இப்படிப்பட்ட தினங்களை கடைப்பிடிப்பது ,

  • இனப் பாகுபாடுகளை கடந்து,
  • பாலின உறவுகளை மேம்படுத்தி,
  • ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து
  • பெண்கள் மற்றும் சக மனிதர்களை பரஸ்பரம் மதித்து பல முன் மாதிரியான ஆண்களை உருவாக்க ஏதுவாகும்.

இந்த கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் மற்றும் இணையம் தாண்டியும் வாழும் ஆண் குலத்துக்கும் ‘குங்குமம் தோழி’யின் இனிய ‘ஆண்கள் தின வாழ்த்துகள்.’ மேம்பட்ட மனித உறவுகளால் அமைந்த ஒரு சிறந்த சமுதாயமே நம் வருங்கால சந்த்தியினருக்கு நாம் அளிக்கும் கொடை. மனிதம் வளர்ப்போம்!

– வித்யா குருமூர்த்தி

IMHD-Flyer-front

Image courtesy:

http://wallpaper.krishoonetwork.com/

http://www.desktopwallpaperhd.net

http://happyimages.org/

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி!

Rajam

தமிழில் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்… சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்… நாவலைக் கூட கள ஆய்வு செய்து எழுதியவர்… வாழ்நாள் முழுக்க பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்… விளிம்புநிலை மக்களோடு வாழ்ந்து அவர்கள் பிரச்னைகளை அவர்களின் குரலாகவே எழுத்தில் பிரதிபலித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். உடல் நலக் குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அக்டோபர் 20ம் தேதி இரவு காலமானார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி அவருக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அது தொடர்பான கட்டுரை மார்ச் 1-15, 2014 ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானது. அதை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.

***

வேருக்கு நீர்!

ராஜம் கிருஷ்ணனுக்கு 90 வயது. நடமாட்டமில்லை. படுக்கையிலேயே வாசம். தலையை மட்டுமே அசைக்க முடிகிறது. அந்த நிலையில் இருப்பவரை ஸ்ட்ரெச்சரிலேயே வைத்து மேடைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள் பேராசிரியர் கே.பாரதி, கல்பனா, கே.எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட நண்பர்கள். கூடவே அவரை பராமரித்து வரும் சென்னை, ராமசந்திரா மருத்துவமனை மருத்துவர், ஊழியர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

IMG_1314

ராஜம் கிருஷ்ணனுக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் கிருஷ்ணன் இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் நண்பர்களும் சில எழுத்தாளர்களும் அவரை விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு, கடந்த 5 வருடங்களாக அவரைப் பராமரித்து வருகிறது ராமசந்திரா மருத்துவமனை.

இந்த நிகழ்ச்சியில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் இருந்து ஒரு பகுதியை சில பெண்கள் வாசித்துக் காட்டினார்கள். ‘மணலூர் மணியம்மாள்’ குறித்த இந்த நாவலின் சில பகுதிகளைப் படிக்கும் போது அரங்கில் கரவொலி! அதைக் கேட்டு, புரிந்தும் புரியாமலும் தேம்பித் தேம்பி அழுதார் ராஜம் கிருஷ்ணன்.

விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான கே.பாரதி அறிமுக உரையில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘ராஜம் கிருஷ்ணனை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வரவே எங்களுக்கு தைரியமில்லை. ராமசந்திரா மருத்துவமனை உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் அழைத்து வந்தோம். அவரை மேடை ஏற்றவும் ஒரு காரணம் உண்டு. அவரை தோல்வி அடைந்த ஒரு மனுஷியாக சில ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. அவர் ஒரு வெற்றி பெற்ற மனுஷி, சாதனையாளர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதற்காகவே மேடைக்கு அழைத்து வந்தோம். மிக சுத்தமான சூழலில், சத்தான உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமனை ஊழியர்களையும் பாராட்ட நினைத்தோம். அதனால்தான் இந்த விழாவை ஏற்பாடு செய்தோம்’’.

IMG_1302

பேராசிரியர் வசந்திதேவி, 1982ல் ராஜம் கிருஷ்ணன் அறிமுகமான காலத்திலிருந்து இருவருக்கும் இடையில் தொடர்ந்த நட்பு அனுபவங்களை நினைவு கூர்ந்தார். ‘‘அப்போது நான் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். என் துறை மாணவிகள் ஒரு கண்காட்சி வைத்திருந்தார்கள். ‘வரலாற்றுப் பார்வையில் பெண்ணின் நிலை’ என்பதுதான் கண்காட்சியின் உள்ளடக்கம். மார்ச் 8, பெண்கள் தினத்தன்று தொடங்க இருந்தது. அதைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று யோசித்தோம். ராஜம் கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். ஒருபுறம் தயக்கமாக இருந்தது. அது ஒரு சிறிய விழா. ஒரு துறை சம்பந்தப்பட்ட சிறிய நிகழ்வு. அதற்கு அவர் வருவாரா என்பது சந்தேகம்… ஆனால், விஷயத்தைச் சொன்னதுமே வர ஒப்புக் கொண்டார். அவரை அழைக்க ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன். மலர்ந்த முகம், துறுதுறுப்பு, கம்பீரம்… பார்த்ததுமே அவர் பால் அன்பும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. காரில் ஏறியவர், நிறுத்தாமல் பேசித் தள்ளிவிட்டார். பெண் நிலை, எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் என்று பேச்சு எங்கெங்கோ போனது. வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் அம்மாவை அறிமுகப்படுத்தினேன். அம்மா, மதம் மாறித் திருமணம் செய்தவர் என்று கேள்விப்பட்டதுமே அவர் முகம் பரவசப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய புரட்சி. கண்காட்சியில் ஏங்கெல்ஸ் தியரி, 8 மணி நேர வேலைக்கான போராட்டம் உட்பட பல அரிய வரலாற்றுத் தகவல்களை விளக்கங்களும் படங்களுமாக வைத்திருந்தோம். அவர் ஒவ்வொன்றாக உன்னிப்பாகப் பார்த்தார். மாணவிகளிடம் குழந்தை போன்ற ஆர்வத்துடன் சந்தேகங்கள் கேட்டார். அவருக்காக நாங்கள் நிகழ்ச்சி நேரத்தையே மாற்ற வேண்டி வந்தது. காலை பத்தரை மணிக்கு நடக்க இருந்த நிகழ்ச்சியை மதியம் 2:30க்கு மாற்றினோம். பேசும் போது, ‘இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அதே கண்காட்சியை சென்னையில் வைத்திருந்தோம். அங்கே எங்களுக்கு சிறிய இடம்தான் கொடுத்திருந்தார்கள். முழுமையாக எல்லாவற்றையும் வைக்க முடியவில்லை. அங்கும் வந்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். முழுவதுமாக இல்லையே என்று வருத்தப்பட்டார், கோபப்பட்டார். நான் பணி செய்த எல்லா இடங்களுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பாதி நாளாவது பேசாமல் வந்தது கிடையாது. என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை’’.

‘‘வாழும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு நாம் செய்கிற மரியாதை’’ என்று பாராட்டினார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தே.முத்து.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன், ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ராஜம் கிருஷ்ணனின் ‘காலம்தோறும் பெண்மை’, ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’ உள்ளிட்ட பல படைப்புகளை முன் வைத்துப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜம் கிருஷ்ணன் குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்… ‘‘அவரை மருத்துவமனையில் போய் இருமுறை பார்த்தேன். அவருக்கு நினைவு மறந்துவிட்டது. ஆளை உற்றுப் பார்த்து புரிந்து கொள்கிறார். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தைரியமும் வீரமும் கொண்டவர். கொடுமைகளைக் கண்டால் தட்டிக் கேட்கும் மன உறுதி படைத்தவர். ஏழை, உழைக்கும் மக்களின் மேல் அக்கறை கொண்டவர். பெண்களிடம் புரட்சிகரமான மாற்றம் வர வேண்டும் என்று பாடுபட்டார். தன் படைப்புக்காக அவர் கள ஆய்வு செய்வதை நான் நேரில் பார்த்தவன். தன்மானம் மிக்க ஒரு பெண்மணி. மரியாதைக் குறைவு ஏற்பட்டால் அவருக்குக் கோபம் வரும். அவர் எழுதிய ‘அலைவாய்க்கரையில்’தான் மீனவர்களைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்’’.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் ராஜம் கிருஷ்ணனின் கேவலும் அழுகையும் காதில் ஒலித்தபடியே இருந்தன.

***

ராஜம் கிருஷ்ணனை பல வருடங்களாக நன்கு அறிந்தவர் கவிஞர் க்ருஷாங்கினி. விஸ்ராந்தியில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து ராமசந்திராவுக்கு இடம் பெயர்ந்த பிறகும் தொடர்ந்து அவரைப் போய் பார்த்து வருபவர். அவர் சொல்கிறார்… ‘‘ஆண் எழுத்தாளர்கள் வீட்டுக்கு யாராவது போனா அவருடைய மனைவியோ, மகளோ வந்தவங்களை உபசரிப்பாங்க. பெண் எழுத்தாளர் வீட்டுக்குப் போனா அந்த எழுத்தாளரேதான் எல்லாத்தையும் செய்ய வேண்டி இருக்கும். ராஜம் கிருஷ்ணன் வீட்டுக்கு யார் போனாலும் வந்தவங்களுக்குப் பிடிச்சதா பார்த்து பார்த்து சமைச்சுப் போடுவாங்க. ‘மணல்வீடு’ இதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் இன்னிக்கும் அவங்க கையால சாப்பிட்ட ரசத்தை புகழ்ந்து சொல்வார். தாம்பரத்தில் இருந்த போது, ராஜம் கிருஷ்ணன் வீட்டைச் சுத்தி மரம் வளர்த்தாங்க. ஒவ்வொரு மரத்துலயும் என்ன காய்க்கும், ருசி எப்படி, எங்கேருந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு எல்லாத்தையும் விரிவா சொல்வாங்க. அப்படிப்பட்ட வீட்டை விக்கற நிலைமை வந்தது. அவங்ககிட்ட முனியம்மாள்னு ஒருத்தங்க வேலை பார்த்தாங்க. வீட்டை வித்த பணம் வந்ததும் ராஜம் கிருஷ்ணன் அந்தப் பெண்மணியைக் கூப்பிட்டாங்க. ‘என்கிட்ட 20 வருசத்துக்கும் மேல வேலை பார்த்துட்டே. உனக்குன்னு ஒரு வீடு வேணாமா?’ன்னு சொல்லி சில லட்சங்கள் செலவழிச்சு ஒரு வீடே வாங்கிக் குடுத்துட்டாங்க. இந்த மனசு யாருக்கு வரும்?’’

பாலு சத்யா

படங்கள்: சதீஷ்