ஒரே ஒரு பூமி!

ரஞ்சனி நாராயணன்

image

உலகச் சுற்றுச்சூழல் தினம்

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

என்ன அருமையாகக் கவிஞர் மனிதனுக்கே பூமியின் வளங்கள் எல்லாம் என்று சொல்லுகிறார்! மனிதன் ஆண்டு அனுபவிக்க என்று இறைவன் படைத்ததையெல்லாம் மனிதன் தனது பேராசையினால் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விழைந்ததன் விளைவே இப்போது உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு தினத்தை ஒதுக்கி எல்லோருக்கும் நமது சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி அதைச் சரிப்படுத்துவதும் நம் கடமையே என்று நமக்கு நினைவு மூட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது!

‘ஒரே ஒரு பூமி’ என்ற கோஷத்துடன் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான பசுமையான சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்  பற்றியும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வரும் கேடுகள் பற்றியும் உலக மக்களிடையே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கொண்டாட்டம். சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. யாரோ காப்பாற்றுவார்கள் அல்லது அரசு பார்த்துக்கொள்ளும் என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான வழிகளை பற்றிப் பேசுவதும் கூட இந்த நாளை நாம் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையால் மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப்படும் இந்த உலகச்சுற்றுச்சூழல் தினம் உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் சுற்றுச்சூழலைக் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசுவதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஒரு நாள்.

image

அப்படி என்ன நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது?

மனிதன் எப்போதெல்லாம் பேராசை கொண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறானோ அப்போதெல்லாம் இயற்கை சீறுகிறது. மனிதா நீ உன் எல்லையை மீறுகிறாய் என்று எச்சரிக்கை செய்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கொண்டே வருகிறோம். விளைவு திடீர் மழை, தொடர்ந்து வரும் வெள்ளம். விவசாய நிலங்களிலும் நீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.

மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாமல் போவதால் ஏற்படும் வறட்சியால் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவது, உணவுப் பொருட்கள் வீணாவது, உலக வெப்பமயமாதல், அழிந்து போகும் அல்லது மனிதனின் பேராசையினால் அழிக்கப்படும் காடுகள்; காடுகள் அருகி வருவதால் விலங்குகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இதன் காரணமாக மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் மோதல்கள், உயிரிழப்புகள் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

image

ஒவ்வொரு வருடமும் இந்த உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருட மையக்கருத்து ‘GO WILD FOR LIFE’ – வனவிலங்குகளை, வனங்களைப் பாதுகாப்பது, வனவளத்தை அநியாயமாக திருடி வர்த்தகம் செய்வதை எதிர்ப்பது

வனவளம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

நம்மைப் போலவே இந்த பூமியில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு நம்முடன் இயைந்து வாழப் பிறந்தவை வனவிலங்குகளும், செடி கொடி, மரங்களும். அவற்றை வாழ வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு நடப்பதென்ன?

சட்டவிரோதமாக வனவிலங்குகள் அவற்றின் இறைச்சி, தோல், உரோமம், மற்றும் தந்தம் போன்றவற்றிற்காக வேட்டையாடப்பட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சில விலங்குகள் அவற்றின் இரத்தத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் கொல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த வியாபாரத்தால் நமது பூமியின் பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. இயற்கை வளங்கள் திருடப்படுகின்றன. பல விலங்கினங்கள் முற்றிலும் அழிந்தே போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்தே விட்டன. காட்டுவிலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு, கடத்தப்படுவதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திட்டமிட்டக் குற்றங்கள், லஞ்ச லாவண்யங்களுக்கும் இவை வழிவகுக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மை உணரப்படுகிறது.

வனக்குற்றங்கள் பெருகுவதால், நாடுகளின் தனித்த அடையாளங்களான யானை, காண்டாமிருகம், புலி, கொரில்லா கடல் ஆமைகள் ஆகிய உயிரினங்கள் அருகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. காண்டமிருங்கங்களில் ஒருவகையான ஜாவன் ரைனோ இனம் 2011 ஆம் வருடம் வியட்நாமில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே வருடம் கேமரூனில் கருப்பு காண்டாமிருகங்கள் அழிந்துவிட்டன. காம்பியா, பர்கினோ ஃபாஸோ, பெனின் டோகோ முதலிய நாடுகளிலிருந்து ஏப் எனப்படும் பெரிய மனிதக் குரங்குகள் மறைந்துவிட்டன. கூடிய சீக்கிரமே மற்ற நாடுகளிலிருந்தும் இந்த விலங்கினம் மறையக்கூடும். வெறும் விலங்கினங்கள் மட்டுமல்ல, மூங்கில் மற்றும் பூக்கள் கூட வன உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. ஆர்சிட் பூக்கள், ரோஸ்வுட் எனப்படும் மரங்களும் மறைந்து வருகின்றன. அதிகம் அறியப்படாத பல பறவையினங்களும் இதில் அடங்கும். கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சிக்காகவும் அவற்றின் மேல் கூடுகள் செயற்கை நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்வதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

இந்தவகைக் குற்றங்களைத் தடுக்க மிகக்கடுமையான கொள்கைகளை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது தவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமுதாய பாதுகாப்பிற்கான முதலீடுகள், சட்ட அமலாக்கம் என்று பலவிதங்களிலும் நடவடிக்கை எடுத்ததில் சில சில வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் காட்டு விலங்கினங்களை காப்பதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். நமது தொடர்ந்த முயற்சிகள் பல உயரினங்களை வாழவைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

image

செய்யவேண்டியவை:
தந்தத்தினாலும், விலங்குகளின் உரோமம் மற்றும் தோல் இவைகளினால் செய்த பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவைகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு இதற்காக காட்டு விலங்குகளை நெஞ்சில் இரக்கமின்றிக் கொல்லும் கயவர் கூட்டம் இருக்கிறது. நமது தேவை குறையும்போது விலங்குகளும் அநியாயமாகக் கொல்லப்பட மாட்டா.
காடுகளை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.
வீடுகளை அழகுபடுத்தவும் காகிதங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நகரத்தின் விரிவாக்கத்திற்காக சாலைகள் அமைக்கப்படும்போது அங்கு பல வருடங்களாக வளர்ந்து கிளை பரப்பி, நிழல் கொடுக்கும் பழைய, பெரிய மரம் தான் முதல் பலி ஆகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களை அமைக்கவேண்டும். அரசு இயந்திரமே எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.

இலவசமாக நமக்கு கிடைக்கும் சூரியசக்தியை வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மாசுபடாத நதி நீர், சுத்தமான கடற்கரைகள், பனிமூடிய மலைகள், இயற்கை வளம் நிறைந்த காடுகள் இவை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது நம் கடமை.

image

பூமி கீதம் – இந்தியக் கவிஞர் திரு அபய் குமார் இந்த பூமி கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான அரபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு இந்த நாளை முன்னிலையில் நின்று தனிச்சிறப்புடன்  கொண்டாடுகிறது. இந்த நாடு தனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அங்கோலா நாடு இந்த விழாவை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் காடுகளில் வாழ்ந்து வரும் ஜயன்ட் சாபெல் ஆண்டிலோப் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இந்த மானினத்தையும் மற்ற காடு வாழ் பிராணிகளையும் காக்க  அங்கோலா அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.

அரசு எத்தனைதான் சட்டதிட்டம் போட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதகமாக எடுத்துக் கொண்டு மனிதம் குற்றம் புரிகிறான். மனிதனின் இந்த குணம் மாற வேண்டும். மனிதனும், விலங்குகளும் இணைந்து, இயைந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. இத்தனை வருடங்கள் இதை மறந்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது நமது பேராசைக்கு சற்று ஓய்வு கொடுத்து நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ எல்லாவகையிலும் தகுதி உள்ள உயிரினங்களை வாழ விடுவோம்.

இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை நாம் எல்லோரும் எடுப்போம்.

image

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

http://isaipaa.wordpress.com/

ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

இணையம் இணைத்த இதயங்களும் கரங்களும்

வெள்ளக் களத்தில் தோழிகள்

sumitha1

சுமிதா ரமேஷ் – துபாய்

முகம் பார்க்க மறந்தோம்… நலம் கேட்க மறந்தோம்… தனித்தீவுகளானோம்… தனியாய் சிரித்தோம்…உறவுகள் தொலைத்தோம்..ஸ்மார்ட் போனுக்குள் கூடு கட்டி வசித்தோம். பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீந்தினோம்…வாட்ஸ் அப்பில் வானம் அளந்தோம்…எல்லையற்றுப் பறந்தோம். ஏனோ அருகில் இருக்கும் மனிதர்களை சருகெனத் துறந்தோம்… கடல் கடந்த நண்பர்களிடம் கதைகள் கதைத்தோம்.

ஒரு வெள்ளம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டியது. சக மனிதர்களிடம் இருந்து நம்மைப் பிரித்த இணையம் உலகெங்கிலும் உள்ள தகவல்களை அள்ளி வந்து வெள்ளத்தில் சிக்கிய மனிதர்களை மீட்கும் வலையாக விரிந்தது. ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு… உதவும் கரங்களை அள்ளி வந்து ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என இணையமும் ஸ்மார்ட் போனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரணம் வழங்கும் பணியைத் துவங்கி இன்னும் விழிகளை மூடவில்லை. இணையத்தின் இமைகளாக மாறி, இதங்களாக உருவெடுத்து, கரங்களாக அணிவகுத்து… கண்ணீர் துடைக்கும் பணியில் துபாயில் இருந்து சுமிதா ரமேஷ் செய்திருக்கும் பணிகள் வியக்க வைக்கின்றன.

திருச்சியை சேர்ந்த சுமிதா திருமணத்துக்குப் பின்னர் கணவர் ரமேஷுடன் துபாயில் செட்டில் ஆனவர். ரமேஷ் சீமென்ஸ் நிறுவனத்தில் கமர்ஸியல் இயக்குனர். இரண்டு குழந்தைகள். கணிணி, கணித ஆசிரியையாக இருந்த சுமிதா, துபாயில் வெளியில் பணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாத நிலையில் தனி வகுப்புகள் எடுத்துள்ளார். பேச்சாற்றலில் வல்லவரான சுமிதா விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்று தன்னை பேச்சாளராகவும் அடையாளம் கண்டவர்.

‘தமிழ் குஷி’ இணைய வானொலியின் ஆர்ஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தற்பொழுது குழந்தைகளின் படிப்புக்காக வீட்டை கவனித்த படியே சுமிதா சென்னை, கடலூர் பகுதி வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க செய்திருக்கும் பணி அளவிட முடியாதது.

இனி சுமிதா…

‘‘சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடன் வெளி நாடுகளில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களின் விவரங்களைக் கொடுத்து அவர்களின் நிலை என்ன என்று ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெட்டிசன் என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தோம். ஃபேஸ்புக் பதிவுகளைத் தொடர்ந்து உதவ முடிவு செய்தோம். எங்களது குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தனர். உதவி கேட்டு வந்த தொலைபேசி எண்கள் உண்மைதானா என்பதை ஒரு குழு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தது. இன்னொரு புறம் தன்னார்வலர்களின் எண்களை தொடர்பு கொண்டு உதவி தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பும் பணியை செய்யத் துவங்கினோம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்டர் நெட்டை விட வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்தது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை ஜே.பி.ஜி. ஃபைலாக ஆக்கி, எந்த வழியிலும் படிக்கும் வகையில் மாற்றி பதிவு செய்தோம். 2ஜி சேவை மட்டுமே இருந்த இடங்களிலும் தகவல் பரிமாற்றம் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போல் தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றினோம். உதவி கேட்டு வந்த தகவல்களை உறுதி செய்து அதிகம் பேருக்கு ஸ்பிரெட் செய்தோம். உதவும் குழுக்களைப் பற்றிய டேட்டாக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். இதனால் உதவி கேட்ட சில நிமிடங்களில் தன்னார்வலர்களையும் படகுகளையும் அனுப்பி மீட்க முடிந்தது.

குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தோம் ! 250 குழந்தைகள் மீட்க, மீட்பு குழுவிற்கு தகவல் மற்றும் ஆர்மிக்கும் தகவல் தந்தோம்

குழந்தைகள் மீட்கப்பட்டதாக கிடைத்த முதல் உறுதிப்படுத்த ப் பட்ட தகவல் ஒரு தனி உத்வேகம் தந்து இன்னமும் வேகமாக இயங்க வைத்து , நிறைய மீட்புப்பணிக்கு உதவி செய்ய வைத்தது

மீட்புப் பணிகள் குறித்த அப்டேட்ஸ் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்து முடிந்த விஷயங்களை அதிகம் ஷேர் ஆகாதபடி டெலிட்ம் செய்தோம்.

ராமாபுரம் பகுதியில் தாய் இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இன்னொருவர் தன் தந்தைஇறந்துவிட்டதாகவும் அதற்கு ஃப்ரிசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இவை கிடைத்த நேரம் நள்ளிரவு… கொட்டும் மழையில் செய்வதறியாது தவித்த நொடிகள்… கண்களில் நீர் வரவழைத்தது… மனம் இறைவா என அரற்றியது.

வயதானவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டவர்கள், மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் பதிவுகள் வந்தன. இவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவும் வழி செய்தோம்.

போரூர் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் வட இந்தியப் பெண்கள் மாட்டிக் ெகாண்டு உதவி கேட்டனர். இது குறித்து கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தோம். ராணுவம் அவர்களை மீட்டது. வேளச்சேரியை சேர்ந்த சாருலதா, தானே படகில்சென்றுபலரையும்மீட்டதோடு, தன் மொபைல் நம்பரையும் தந்து, பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தப் பெண்களுக்கும், தன்னால் ஆன உதவியை செய்தபடி  இருந்தார் இந்தச் சின்னப் பெண்! அவரது பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஓ.எம்.ஆர். பகுதியில் ஐ.டி.ஐ. முதல்வர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து ெகாள்ள வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் தகவல் மீட்புப் பணிகளை விரைவு படுத்தினோம்.

துபாயில் இருந்து நானும், அமெரிக்காவில் கார்த்திக் ரங்கராஜன், வெங்கட்ராகவன் மூவரும் மிக வேகமாக நெட்டிசன் குரூப்பில் பணிகளை பிரித்துக் கொண்டு வேகமாக செயல்பட்டோம்.

தகவல்களை உறுதி செய்யும் பணியில் நண்பர்கள் குழு வேகமாக இயங்கியது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றி அதிகமாக ஷேர் செய்யும் பணி என்னுடையது. எந்த வாலண்டியர் அருகில் உள்ளார் , யாரால் இதனை செய்ய முடியும் என்று பார்த்து அவர்களிடம் உதவி கோருவதும் அதில் சேர்ந்திருந்தது.

பள்ளிக்கரணை, கோசாலை பசு, govt  doctors தான் அட்டெண்ட் செய்ய முடியும் என்ற நிலையால் , பெங்களூரு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பி விட்டோம்.

இன்னும் பலப்பல பணிகள், அடுத்தடுத்து எங்களை ஆக்டிவாக வைத்திருந்தன என்றால் மிகையாகாது.

இன்னமும் தொடந்தபடியே இருக்கிறது… மேற்சொன்னவை நினைவில்வந்துஎட்டிப்பார்த்த சில துளிகளே…

தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் உதவிப் பொருட்கள் உள்ள இடங்களையும் தேவைக்கான இடங்களையும் மிகச்சரியாக இணைக்க இணையமும் சில இதயங்களும் உதவின. மனிதம் இன்னும் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இது.

தமிழ்நாட்டை விட்டு வந்த பின்னர் நான் நண்பர்களுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முகம் தெரியாத தம்பிகள் நட்பிலும் இல்லாதவர்கள் என்னை அக்கா என அழைத்து பேசும்போது வெள்ளம் சேர்த்த உறவுகளாக எண்ணுகிறேன். சின்னச் சின்ன உதவிகளைக் கூட இணையத்தின் வழியாக செய்ய முடிகிறது. இணையம் இவ்வளவோ இதங்களையும் கரங்களையும் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளது. ஒருவேளை நான் சென்னையில் இருந்திருந்தால் கூட இவ்வளவு பேரை இணைத்திருக்க முடியாது. இணைய வசதி உள்ள இடத்தில் இருந்ததால் வேகமாக செயல்பட்டு பல உயிர்களை மீட்க முடிந்தது. பலவித உதவிகளையும் தேவையானவர்களுக்கு கிடைக்கச் செய்ய முடிந்தது. நாங்கள் செய்திருக்கும் வேலை சிறுதுளியே’’ என்கிறார் சுமிதா.

சுமிதாவின் பதிவுகளைப் படிக்க:

சுமியின் கிறுக்கல்கள்

ப்ரியங்களுடன் ப்ரியா–19

மழை போலவே வாழ்க்கையும்!

rain4

பல துளிகள் நிறைந்த

மழை போலவே வாழ்க்கையும்…

கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே..

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

rain3

மழை பற்றிய நினைவுகள் சற்று சின்னதாக இருந்தாலும் மனதைவிட்டு
நீங்காதவை.. எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது..

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

ப்ரியா குட்டி  மழைல நனையாத .. சளிப்பிடிச்சுக்கும்னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு… நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, ஆலங்கட்டி மழை பேஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சு போய்ருக்கு னு எங்க ஆத்தா சொன்னப்ப என் தலைல விழுந்தா என்ன ஆகும்..?னு யோசிச்சிருக்கேன்..

கடவுளின் தேசத்தில் தான் என்னோட பால்ய பள்ளி வாழ்க்கை தொடங்கியது .. விழித்திருக்கும் நேரம் முழுதும் மழையும் மழை சாரலும் மட்டுமே காணும் தேசம் என்பதால் இப்போ வரை என்னால மறக்க முடியாது என் பாட்டி எனக்கு முதல் முதலில் வாங்கி தந்த சின்ன குடை ..

இப்போதும் என் கைபையில் எப்போதுமே ஒரு சிறு குடை இருக்கும் ,, அதை விரிக்கும் போதெல்லாம் கேரளா மழை சாரல் நினைவில் விரிவதும் தவிர்க்க முடியாது.

rain1

பருவ மழையை விட வசந்தகாலத்தின் தொடக்கத்தில் பெய்யும் கோடை மழைக்கு  தனி விஷேசம் உண்டு. வெய்யிலின் தாக்கத்தை  குறைக்க பெய்யும் மழை அது.

கோடை காலத்தில் பொதுவாக மாலை அல்லது இரவில்தான் மழை, இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்..

சில நேரங்களில் ஆலங்கட்டி மழை கூட பெய்யும்.. அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான்.  மழையில் நனைய வேண்டாம் காய்சல் வரும் என்பவர்கள் கூட  கூட கோடை மழையில் நனைய சம்மதம் சொல்லிவிடுவார்கள்.

rain2

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் தும்பி, எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க,தோட்டத்தில் சுற்றி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

காளான் எல்லாரு கண்ணுக்கும் தெரியாதுனு சொல்லுவாங்க எங்க ஆத்தா.. அதைப் பிடிங்கும் பொழுது வரும் மண் வாசனைக்கு எதுவும் ஈடாகாது.

எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் தும்பிக்கும்,ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. தும்பியின் வாலைப் பிடித்து விளையாட பிடிக்கும்..

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் தும்பியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
rain6

மனசு வளர வளர மழை மீதான காதல் அதிகம் ஆகிடுச்சு.

ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

இந்த பாடல் வெளியான நாளில் இருந்து இப்போ வரைக்கும் மழை வரப்ப ஒரு குடை எடுத்து போயிட்டு ரேவதி ஆடியது போல

மழையில் ஆட மனசு துள்ளுவது எனக்கு மட்டுமல்ல .. இதை வாசிக்கும் எல்லோருக்குமே என்பது உண்மையே ..

எங்கள் ஊரில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். வருடத்தில் பாதி நாட்கள் மழை நாட்களே பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈரக்காற்று மட்டுமே வரும்.. விசுவிசுவென வீசும் ஈரக்காற்றில் வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்திலும் சுற்றி திரிந்த நாட்களை நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது…

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அது ஒரு அற்புதமான அனுபவம். ஆற்றின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும். எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது. அது தான் இயற்கையின் வரம்.

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் கோவை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது. காலையில் பள்ளிக்கு செல்லும் பொழுது, மழைக்காலத்தில் மழையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் கூட பரவாயில்லை தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல? இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு கோவையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் எப்போதும் மழை காலத்தில் நிகழ்வது தான் ..

ஒன்று மட்டும் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ..

மூன்றாம் உலக போர் என்று ஒன்று உருவானால் அது நிச்சயம் தண்ணிர்க்காக மட்டுமே என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள் …

நமக்கு கடவுள் தரும் தண்ணிரை சேமிக்காமல் வீணாகி விடுவது நாம் கடவுளுக்கு செய்யும் துரோகம் என்பதில் யாருக்காவது மாற்று கருத்து இருக்கா ?

ஆறு ..குளம் ,, ஏரி .. இப்படி எல்லா நீர்நிலை தேக்கமும் கான்கிரட் கட்டிடமா மாறி போனால் நம்மோட எதிர்காலம் .. நம்ம சந்ததிகள் எதிர்காலம் என்னவாகும் ??

சென்ற மாதம் காரைக்குடி செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா  போனப்ப எங்க குடும்ப நண்பர்  மூலமா செட்டிநாடு நகரத்தார் வீடுகளை காண சென்றோம் ..

நாம எல்லோரும் அவங்க வீடுகளின் பிரமாண்டம் ,, கலைநயம் மட்டுமே பார்க்கிறோம் .. ஆனா அவங்க எவ்வளவு தொலைநோக்கு பார்வையோட ஒவ்வொரு விசயமும் பார்த்து பார்த்து கட்டி இருக்காங்க என்று நண்பர் விளக்கி சொல்லும் போது தான் புரிந்தது ..

பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

இப்போ மழைநீர் சேகரிப்புக்கு சில வழிமுறைகளை காண்போம் ..

2 முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்.. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..

வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயிர்த்துதல் என்பது புதிய முறையாகும்.

நிலத்தடி நீர்வளம் குறித்த சில உண்மைகள்..
ஒரு கிணறு என்பது தண்ணீரை சேமிக்கும் இடமல்ல. கிணறுகள், நிலத்தின் மேல் பகுதியை,  நிலங்களுக்கடியிலுள்ள நீருற்றுகளுடன் இணைக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை பொறுத்து, மழைகாலங்களில், கிணறுகளில் நீர் மட்டம் உயரும் அல்லது தாழும்.

மழை பெய்வது நின்று விட்டால், கிணற்றுக்கு நிலத்தடியில் உள்ள நீரூற்றுகளிலிருந்து ஓரளவிற்கு நீர் கிடைக்கும்.

வற்றிவிட்ட ஆழ்குழாய் கிணறுகளை, நிலத்தடி நீர் ஊற பயன்படுத்தலாம். வற்றிவிட்ட கிணற்றின் மேல் பகுதியில், ஆழ்குழாய் வடிநீர் குளங்களை அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உண்டு.

மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள்

மழைநீர் சேகரிப்பு  குறித்த குறும்படம், வீடியோ படங்கள் பார்க்க, http://in.youtube.com/profile_play_list?user=indiawaterportal என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்/பாருங்கள்.

மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:-

நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்

கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.

அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.

இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு..

மழை நீரை சேகரிப்போம்
மண்ணில் வாழும்
உயிரினம்
மரித்து போகாமலிருக்க

IMG-20151107-WA0018

ஒவ்வொரு மழைத்துளிக்குள்ளும்
ஓர் உயிர் ஒளிந்திருக்கிறது

அது
நீங்கள் நேசிக்கும்
உயிராகவும் இருக்கலாம்…

பல துளிகள் நிறைந்த
மழை போலவே வாழ்க்கையும் ..
கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக 
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே.. 

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

-ப்ரியா கங்கா தரன்

உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1-7

breastfeed-benefits

தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து செட்டிநாடைச் சேர்ந்த டாக்டர். ஏ.முத்துசாமியும், ரோட்டேரியன் இந்திரலேகா முத்துசாமியும் இணைந்து BPNI அமைப்பின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை இது…

டந்த 1992ம் ஆண்டு முதல் நாங்கள் தீவிரமாக தாய்ப்பால் ஊக்குவிப்பில் பணியாற்றி வருகிறோம். அரசும் 6 மாதங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்துள்ளது. பல சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளது. ஆனாலும் 40.5% தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த முதல் 60 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள்தான் ஆறு மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள்.

இந்தப் பின்னடைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானவை…

  1. மருத்துவத்துறை அலுவலர்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு போதிய ஆதரவு தராததும், அக்கறை எடுக்காததும்.
  2. குழந்தை உணவு/பால்பாட்டில் தயாரிப்போரின் அதி தீவிர வியாபார/விளம்பர உத்திகள். மருத்துவமனையிலிருந்து வெளிவரும் தாய் தன் குழந்தையுடன் பால்பவுடர் டின் மற்றும் பால்புட்டியுடன் வரும்போது மருத்துவத்துறை சாராத நம்மால் எப்படி அந்தத் தாயை தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க முடியும்? ‘தாயின் மார்பை வற்றவைக்க ஒரு புட்டி, ஒரு நாள் போதும்’ என்கிறது மருத்துவ ஆய்வு.

ஆகவே, உங்கள் முழு அழுத்தமும் கவனமும் மருத்துவ சேவை தரும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளாமல் விருட்சமான பின் வெட்டுவதும், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதும் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. சிசுவின் தூய்மையான உணவுக்குழாயை (Virgin Intestine) முதல் உணவாக விலங்கின் பாலைக் கொடுத்து பாழ்படுத்திய பின்பு நாம் செய்யும் எந்தப் பணியும் பூரண பலனைத் தராது.

breast-feeding_0

தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை

அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு

உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.

இதில் மாற்றுக்கருத்து எங்கிருந்து வருகிறது?

பலர் இது நடைமுறை சாத்தியமற்றது என்பார்கள். அப்படியானால் இதை, பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருபவர்களும் நடைமுறைபடுத்தச் சொல்லும் அரசும், BPNI, WHO, UNICEF, IAP போன்ற அமைப்புகளும் பொய் சொல்கிறார்களா?

நீங்கள் செய்ய வேண்டியது சில செயல்பாடுகளே…

  1. மகப்பேறு/சிசு/சிறு குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று அங்கே, ‘சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை’ நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள். அங்கு எழுதப்பட்ட வழிகாட்டுதலை யாவரும் படிக்கும் இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
  2. எங்கெல்லாம் புகைப்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ‘பால்புட்டிகள், டின் உணவு வகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன’ என்ற அடையாளச் சின்னங்களை, வாசகங்களை ஒட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
  3. உங்கள் நகரை ‘பால்பாட்டில் இல்லா நகரமாக்க’ ஏற்பாடு செய்யுங்கள். பால்பாட்டில்களின் தீமையை விளக்கி அதை உபயோகிப்போரிடமிருந்து ஒரு சிறு தொகை/அன்பளிப்பு கொடுத்து வாங்கி பின் ஒரு விழா நடத்தி அவற்றை அழியுங்கள்.
  4. சினிமா/தொலைக்காட்சிகளில் பால்புட்டிகளைக் காண்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. அது பற்றி அவர்களுக்கு தெரிவியுங்கள்.
  5. விளம்பரம்.

பரிசுகள்: இவற்றை நடைமுறைப்படுத்த ஆகஸ்ட் 1 முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் அறிக்கையை மின் அஞ்சல் மூலம் 1.12.2015க்குள் எனக்கும், மாவட்ட தலைவருக்கும், பி.பி.என்.ஐக்கும் அனுப்புங்கள். சிறந்த முதல் மூன்று சங்கங்களுக்கு பரிசுகளும், பங்குபெறும் சங்கங்களுக்கு சான்றிதழ்களும் மாவட்ட மாநாட்டில் வழங்கப்படும்.

நல்வாழ்த்துகள்.

என்றும் சமூக சேவையில்,

பி.கு.: தயவு செய்து குழந்தை உணவு/பால்புட்டி நிறுவனங்களிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள். அப்படிப் பெற்றிருந்தால் உங்கள் அறிக்கை செல்லத்தக்கதாகாது.

Dr. அ. முத்துசாமி                Rtn. இந்திரலேகா முத்துசாமி

BPNI ஒருங்கிணைப்பாளர்         R.C. of கும்பகோணம் சக்தி

*** 

breast feeding 1

சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல் – 2010.

இந்த மருத்துவமனையில் தாய்ப்பாலே சிறந்த குழந்தை உணவு என்று உணர்ந்து, குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுக்கும் சுகாதாரமான பழக்கத்தை ஆரம்பித்து, பின் கீழ்க்கண்ட பத்து சிசுநேயக் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதைக் காப்பாற்ற, ஊக்குவிக்க மற்றும் உதவ துணைபுரிகிறோம்.

  1. இந்த மருத்துவமனைக்கு எழுத்துப்பூர்வமான தாய்ப்பால் கொள்கைகள் உள்ளன. இவை, இங்குள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனைத்துப் பணியாளர்களும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
  3. கருவுற்றிருக்கும் எல்லாத் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலூட்டும் நன்மைகளையும், எப்படி தாய்ப்பால் ஊட்டுவது என்றும் விவரமாகத் தெரிவிக்கிறோம்.
  4. சுகப்பிரவத்தில் பிறந்த குழந்தைக்கு அரை மணிக்குள்ளும், சிக்கலான பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு மணிக்குள்ளும் தாய்ப்பால் கொடுக்கிறோம்.
  5. தவிர்க்க முடியாத காரணங்களால் தாயும் சேயும் பிரிய நேரிட்டால், எப்படி தாய்ப்பால் கொடுப்பது, பின் எப்படி தொடர்ந்து தருவது என்று காண்பித்துத் தருகிறோம்.
  6. மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எந்த காரணத்துக்காகவும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவோ, தண்ணீரோ கொடுப்பதில்லை.
  7. தாயும் சேயும் ஒரே அறையில் 24 மணி நேரமும் ஒன்றாக இருக்க வாய்ப்பும் வசதியும் செய்து தருகிறோம்.
  8. குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் தர ஊக்குவிக்கிறோம்.
  9. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில், ரப்பர், நிப்பிள், சூப்பான் போன்றவை கொடுப்பதில்லை.
  10. தாய்ப்பால் ஊக்குவிப்போர் குழுக்களை அமைத்து தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது அக்குழுக்களின் ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கிறோம்.

தயவுசெய்து இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த உதவுங்கள். 6 மாதங்கள் முடிய தாய்ப்பால் மட்டுமே போதும். பின் இரண்டு வயது முடியும் வரையோ அல்லது அதற்குப் பிறகுமோ வீட்டு இணை உணவுடன் தாய்ப்பால் தரவேண்டும்.

பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் தரும் முறை

இது மிகவும் சுலபமானது. பணிக்குச் செல்ல மூன்று வாரங்கள் இருக்கும்போதே திட்டமிட வேண்டும். முதல் வாரத்தில் தானே எப்படி தாய்ப்பாலை பீச்சி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். கையால் பீச்சி 250 மி.லி. பாலை ஒரு தடவை சுலபமாக எடுக்கலாம். ஒரு மார்பில் குடிக்கும்பொழுது மறு மார்பில் பீச்சி எடுப்பது சுலபமானது. பீச்சியபால் அறை வெப்பத்தில் 8 மணி நேரமும், குளிர்சாதனப்பெட்டியில் 24 மணி நேரமும் கெடாமல் இருக்கும்.

இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் கீழே கண்ட அட்டவணைப்படி, பீச்சிய பாலை கப் அல்லது ஸ்பூன் மூலம் புகட்ட வேண்டும். இத்திட்டத்தை உங்கள் வேலை நேரத்துக்கேற்பவும், குழந்தையின் தேவைக்கேற்பவும் மாற்றிக் கொள்ளலாம். பணியிடத்தில் 4 மணிக்கு ஒரு முறை பாலை பீச்சி எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புகட்டலாம்.

பணிக்குச் செல்லும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்களில் எடுத்து, நேரத்தை குறித்து வைத்துச் செல்ல வேண்டும்.

(சித்திரம் மட்டுமல்ல, பால் எடுப்பதும் கைப்பழக்கம்தான்).

பால் புகட்டும் நேரம் நாள் 1-3 நாள் 4-6 நாள் 7-9 நாள் 10-12
7:30-9:30

காலை

பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
10:30-12:30
காலை
தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
1:30-3:30

மதியம்

தாய்ப்பால் தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
4:30-6:30

மாலை

தாய்ப்பால் தாய்ப்பால் தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், நலங்கெட்டு வாழ்வதும் தாய்ப்பால் கொடுப்பதிலே.’

மேலும் தொடர்புக்கு: Dr.A. முத்துசாமி

99, ரயில்நிலையம் சாலை, செட்டிநாடு – 630 102.

Email: a_muthuswami@yahoo.com.

தாய்ப்பால் அளிப்பது தொடர்பான தகவல்களுக்கு… www.bpni.org இணையதளத்தைப் பார்க்கவும்.

Image courtesy:

http://www.empowher.com

http://topnews.ae

http://www.nancymohrbacher.com

தலைக்கவசம்… நம் உயிர்க் கவசம்!

helmet

ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ வெளியிட்டிருக்கும் அறிக்கை இது…
நம் நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான அரசு நிர்வாகம் இவற்றை முறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றது. அவ்வப்போது மற்றொரு தூணாகிய நீதிமன்றங்களின் தலையீடு இதற்கு அவசியமாகிறது.

‘தலைக்கவசம்’ அணியும் சட்டம் இவற்றில் ஒன்று. இதனைக் கட்டாயப்படுத்தி அரசு ஆணைகள் பிறப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இதை நிர்வகிக்க வேண்டிய முறையைச் சுட்டிக் காட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணைகள் பிறப்பிக்க வேண்டியிருந்தது நமது துரதிருஷ்டமே. 

தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இதுபற்றிய வேண்டாத கருத்துகளைப் பரப்புவதற்கு ஒரு சாரார் முயற்சிப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

உலகிலேயே அதிக விபத்துகள் நடக்கும் இந்தியாவில், தமிழ்நாடு அதிலும் சென்னையில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சமயத்தில் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பதை ஆதாரத்துடன் பலர் நிரூபித்துள்ள நிலையில் சட்டத்தில் உள்ள ஒரு சில ஓட்டைகளை பெரிதுபடுத்தி ‘தலைக்கவசம்’ அணியும் வழக்கத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

தலைக்கவசம் அணியாதவர்கள் உடனே வாங்கி அதற்கான ரசீதையும் காட்ட வேண்டும்’ என்ற ஒருசில உத்தரவுகள் கண்டிப்பாக அமல்படுத்த முடியாத ஒன்றாகும். இவற்றைக் கண்டித்து எங்களைப் போன்ற இயக்கங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். 

‘தலைவலி ஏற்படும்’, ‘பெண்களுக்கு உபத்திரவம்’ என்பதெல்லாம் அபத்தமான வாதங்கள். விபத்தில் நமது மூளை பாதிக்கப்படும்போது மரணம் (மூளைச்சாவு) ஏற்படுகின்றது. தரமான தலைக்கவசம் (ஐ.எஸ்.ஐ) நமது மூளையையும் தலையையும் காப்பாற்றும். 

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள NHTSAயின் அறிக்கை இருசக்கர வாகன விபத்துகளில் 40% தலையில் ஏற்படும் காயத்தால் மட்டுமே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறுகிறது. 

பூனேயில் உள்ள லோகமான்ய மருத்துவமனைத் தகவல்களின்படி 57% இருசக்கர வாகன விபத்துகளில் மூளை பாதிக்கப்படுகிறது. இதிலும் 68% பேர் 19 முதல் 46 வயதுக்குட்பட்டோர். நெடுஞ்சாலைகளில் மட்டுமே தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அதிக வேகம் எங்கு இருந்தாலும் ‘தலைக்கவசம்’ கட்டாயம் அணிய வேண்டும். 

விபத்துக்குள்ளானவர்களின் மூளைப்பகுதியை Scan செய்யும்போது `Glasgowcama Scale’ என்னும் கருவி அளவு 8 ஆக இருந்தது இது 15 ஆக இருக்க வேண்டும் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இது 12 ஆக இருந்தது. 

தலைக்கவசம் ஒரு தேவையற்ற பாரம் என நினைப்போர், அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்தின் பாரத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

போக்குவரத்துக்காவல் புரிபவர்களுக்கு இந்தச் சட்டம் பணம் பறிக்க ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம். ஆனால், சட்டத்தை நாம் மதித்தால் இவர்களால் எதுவும் செய்ய முடியாதே! 

அண்மையில் தகவல் அறியும் உரிமைச்சட்ட பதிவின்படி, ஆவணங்களின்றி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளை `SPOT FINE’ செய்வது விதிகளை மீறிய செயல் என்றும், 15 நாட்களுக்குள் கொண்டுவந்து காட்டச் சொல்வதே முறை என்றும் அறிய வருகிறது. ஆகவே, நம்மை மிரட்டினால் நாம் மிரளக்கூடாது. சட்ட விதிகள் அவற்றைப் பின்பற்றுவோருக்குத்தான். அதனை அமல்படுத்துவோர் அதனைக் காசாக்க முயற்சித்தால் எதிர்த்துக் குரல் கொடுப்பதே நுகர்வோரின் கடமை/ பொறுப்பு!
Consumers Association of India  

3/242. Rajendra Garden, Vettuvankeni,
Chennai – 600 115
Tel: 24494573/24494574/24494575/77
E-mail cai.india 1@gmail.com
web:www.caiindia.org.

Image courtesy:

http://s1.cdn.autoevolution.com/

VITILIGO IS BEAUTIFUL – a photo documentary

Hello!

As a team of photographers, we bring out our maiden attempt at a photo documentary – VITILIGO IS BEAUTIFUL, for a social cause. Vitiligo is a chronic skin disease characterized by portions of the skin pigment. This documentary would tell more about their vision, thoughts, actions and goal.

We are very happy to present a photography exhibition in connection with the cause at SPACES, Besant Nagar on World Vitiligo Day (June 25) and it would be a great honor to have you for the inauguration. Kindly consider this as a personal invitation and grace the inauguration with your presence.

Team Discover

vitiligo

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் மாநில மாநாடு & இருநாள் கருத்தரங்கு!

Entrepreneurs

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT) 9வது மாநில மாநாட்டையொட்டி ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்’ குறித்த இருநாள் கருத்தரங்கை ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கில், ‘தொழில் தொடங்குவது எப்படி?’, ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான என்னென்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன?’, ‘தொழில் தொடங்க எங்கு பயிற்சி பெற வேண்டும்?’, ‘அதற்கான உதவி திட்டங்கள் என்னென்ன?’,  ‘தொழில் தொடங்கத் தேவையான நிதி, இடம், மூலப்பொருட்கள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்?’,  ‘மார்கெட்டிங் இணைக்கப்பட்ட தொழில்கள் யாவை?’, ‘வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி?’, ‘மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெற என்னென்ன வழிமுறைகள்?’, ‘தொழில் தொடங்கி தொடர்ந்து நீடித்திருப்பது எவ்வாறு?’… இவற்றோடு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தனியார்துறை தொழில் அதிபர்கள், வெற்றிகரமாக செயல்படும் மகளிர் தொழில் முனைவோர்கள், இயற்கை சுற்றுப்புறச் சூழல் வேளாண் சார்ந்த கிராம வளர்ச்சிக்கான தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள், பெண்கள்  வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள், நிதி கையாளும் முறை, தொழிலில் நிலைத்திருக்க ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் பெறலாம்.

தொழில் அதிபராகி நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனளிப்பீர்! இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய மாநாட்டு மலர், கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்ப்ப் படிவங்கள், தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். கருத்தரங்கில் இலவச தொழில் ஆலோசனைகளும் வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வாரீர் மாநில அளவில் நடக்கும் இக்கருத்தரங்குக்கு! பெறுவீர் பெரும் பயன்!

கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவேண்டிய முகவரி:

135-B, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ்,

பாரதியார் சாலை,

திருச்சிராப்பள்ளி – 1.

தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.

Image courtesy:

http://cpainerie.com/

===

செய்திக்குப் பின்னே… பிட்டுக்கு வேலை கிடைத்த கதை!

 

open-chitting-in-bihar

– ஷர்மிளா ராஜசேகர்

‘பீகாரில் பத்தாம் வகுப்புத் தேர்வின் போது பிள்ளைகளுக்கு பிட் கொடுத்த பெற்றோர்’… இச்செய்தியைப் படித்ததும் படம் பார்த்ததும் ஒரு ஜாலியான விஷயமாகவே முடிந்து போனது!

இதற்குப் பின் மறைந்துள்ள பாதிப்புகள்..?  

 

காலைல இருந்து நைட் வரைக்கும் நாள் முழுதும் ‘படி,படி,படி’ன்னு நம்ம ஊர் பிள்ளைங்க… இங்கே எக்ஸாம் எழுத எவ்வளவு ஸ்ட்ரிக்ட்…  படிக்கறதுக்காக எத்தன கோச்சிங் சென்டர் போய் நாள் முழுதும் புக் வச்சே காலத்தை தள்ளின எவ்வளவோ பேர்!

ஆனால், ஒண்ணுமே இல்லாம காப்பி அடிச்சு பாஸ் பண்ண வச்சு ஈசியா கவர்ன்மென்ட் ஜாப்ல செட் பண்ணி அனுப்பி வச்சுருக்கு அந்த கவர்ன்மென்ட்…

எவ்வளவோ படிச்சும் அறிவிருந்தும் சரியான வேலைக்கு போக முடியாம நிறைய பேரு பிரைவேட் கம்பனியிலேயும் வெளிநாட்டுக்கும் பிழைப்புக்காக ஓடிட்டு இருக்காங்க.

‘பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்ற செய்தி… வெளியில தெரிந்து போனதற்காக வந்த அறிக்கையே தவிர அவர்களுக்கு தெரியாத நிகழ்வு இல்லை. இதை சாதாரணமான விஷயமாக விட்டுவிட முடியுமா? முறையாக படித்தவர்களுக்கு வந்திருக்க வேண்டிய நிறைய வாய்ப்புகள்  களவாடப்பட்டிருக்கிறதுதானே?

இதைப் பற்றி முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்பு… ‘என் ஆட்சியாக இருந்திருந்தால் பிள்ளைகளுக்கு இவ்வளவு கடினமாக இருக்காது. புக் கொடுத்தே அனுப்பி இருப்பேன்.’ (அவர் காலத்தில் நடந்ததை வாக்குமூலமாக சொல்லியிருக்கிறார்!)

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது நிறைய பீகாரீஸ் ரயில்வே துறையில் வேலையில் அமர்த்தப்பட்டனர் என்பது நினைவு கூறத்தக்கது.

எவ்ளோ பாசமான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்… புக் கொடுத்து பாஸ் பண்ண வச்சு எல்லா கவர்ன்மென்ட் ஆபீஸுக்கும் வேலைக்கு அனுப்பி பார்த்துக்கிட்டு இருக்காங்க… அங்கே மக்களுக்காக அரசு.

இங்கே உள்ள சட்ட திட்டம் எவ்வளவுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ‘சரியாக எழுதலைன்னா மார்க் வரலைன்னா தற்கொலை பண்ணிட்டு செத்துடு’ன்னு சொல்லாமல் சொல்ற மாதிரியான மனநிலைக்கு பிள்ளைங்கள கொண்டு வந்து விட்டு வச்சுருக்காங்க… இங்கே அரசுக்காக மக்கள்!

மேம்போக்காகப் பார்த்தாலோ, ‘இதிலென்ன’ என்று கூட நினைக்க தோணும். ஆனால், இது அதுக்கும் மேலே…

இப்படி ஒரு செய்தி வெளியில் தெரிந்ததும், ஏமாற்றி வேலைக்கு வந்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். இனியாவது நம் அரசாங்கம் நம் மக்கள் நலனில் (முறையாக) அக்கறை செலுத்துமா?

ஷர்மிளா ராஜசேகர்

ஷர்மிளா ராஜசேகர்

***

நம்பிக்கை மனுஷிகள்!

i can

இது வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு தேவதைகள் பற்றிய உண்மைக்கதை.

ஊடகவியலார் கீதா இளங்கோவன் ‘மாதவிடாய்’’ ஆவணப்படத்துக்குப் பிறகு உருவாக்கியிருக்கும் படைப்பே இந்த ‘நம்பிக்கை மனுஷிகள்’ என்ற குறும்படம் .

‘மஸ்குலார் டிஸ்ட்ரோபி’ (தசைச்சிதைவு நோய்) என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் உற்சாகமான ஆளுமையை, ஆக்கப்பூர்வமான பணிகளை கோடிட்டு காட்டுவதே `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படத்தின் நோக்கம்.

அதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தெரியாதவர்களுக்கு சொல்லியாக வேண்டும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்து போவதைக் கண் முன்னே காணும் கொடுமை நேரும். தசை கட்டுப்பாட்டுக்கு தேவையான ஒரு புரதத்துக்கு அடிப்படையான ஒரு மரபணு குறைபாடே இந்நோய்க்கு காரணம். புரத குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது. இவை தசையை இறுகும் தன்மைக்கு கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம் பாதிப்பதோடு மட்டும் அல்லாது, மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தையும் பாதிக்கிறது. இந்த நோய், அசையும் தசைகளை முதலில் பாதிக்கிறது. இதன் விளைவாக நோய் தாக்கப்பட்டவர் அடிக்கடி கீழே விழுதல், அமர்ந்த நிலையிலிருந்து எழ சிரமப்படுதல், படி ஏற இயலாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டு, நாளடைவில் தன்னிச்சையாக இயங்கும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டு, கடைசி கட்டத்தில் நோயாளி மரணமடைகிறார்.

இந்நோயின் மூலக்காரணம் மரபணு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்நோய்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை என்பதே மிக வேதனை தரும் செய்தி.

தம்மைப் போல இந்நோயால் பாதிக்கப்பட்ட, வசதியற்ற நோயாளிகளுக்கு இந்த சகோதரிகள் மாற்று மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். இதற்கென சேலத்தில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பற்றிய `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். இவர்கள் நடத்தும் பொதுத்தொண்டுக்கு உதவவும் வாய்ப்பாகும்.

படத்தை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை விமர்சனமாக எழுதலாம்… இன்று உங்கள் பக்கத்தில் நிலைத்தகவலாக அந்த விமர்சனத்தைப் பதிவு செய்யலாம்!

படத்துக்கான லிங்க்:

Image courtesy:
http://www.wisdomtimes.com/