அன்னையர் தின சிறப்புச் சிறுகதை!

ஒரு நாளுக்கான வேலை! 

பால் சக்காரியா

தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ

பால் சக்காரியா 

paul zacharia

கேரளா, கோட்டயம் மாவட்டத்திலுள்ள உருளிக்குன்னத்தில் 1945ல் பிறந்தவர். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழ் உள்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘ஓரிடத்து’ என்ற சிறுகதைக்காக ‘கேரள சாகித்ய அகாடமி விருதை’ 1979ல் பெற்றவர். 2004ல் தன் ‘சக்காரியோடே கதைகள்’ படைப்புக்காக ‘சாகித்ய அகாடமி’ விருதைப் பெற்றார். இவை தவிர, ‘முட்டத்து வர்க்கி விருது’, ‘பத்மராஜன் விருது’, ‘ஓ.வி.விஜயன் இலக்கிய விருது’ ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். படைப்புகளுக்காக பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றாலும் தொடர்ந்து எழுதி வருபவர். தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

கே.வி.ஜெயஸ்ரீ 

Jayashri

மொழிபெயர்ப்பில் தீராத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர். மூல மொழியின் அனைத்துத் தரவுகளோடு முழுமையாக, அதே நேரத்தில் வாசிப்பு சலித்துவிடாதபடியும் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்ற முனைப்புள்ளவர். எழுத்தாளர் பால் சக்காரியாவின் ‘இதுதான் என் பெயர்’, ‘இரண்டாம் குடியேற்றம்’, ‘அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’, ‘யேசு கதைகள்’, ‘பால் சக்காரியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ (சாகித்ய அகாடமி வெளியீடு) ஆகிய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த மலையாள கவிஞர் ஷ்யாமளா சசிகுமாரின் ‘நிசப்தம்’ தொகுதிக்கு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்திருக்கிறது. மேலும், அந்த நூல் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பில் பாட நூலாகவும் உள்ளது. இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான ஏ.அய்யப்பனின் ‘வார்த்தைகள் கிடைக்காத தீவில்’ கவிதைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்திருக்கிறது. இவர் மொழிபெயர்ப்பில் சந்தோஷ் ஏச்சிகானத்தின் சிறுகதைகள் ‘ஒற்றைக்கதவு’ என்ற மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி, நல்லி திசையெட்டும் விருதைப் பெற்றிருக்கிறது. ஷௌக்கத் எழுதிய பயணக்கட்டுரை தொகுப்பை ‘இமாலயம்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு சிறந்த பெண் எழுத்தாளருக்கான ‘அங்கம்மாள் முத்துசாமி நினைவு இலக்கிய விருது’ கிடைத்திருக்கிறது. தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

****

ஒரு நாளுக்கான வேலை!

செல்வி ஆனி வர்க்கி, 

ஹோம் நர்ஸ், 

மைலாடும் குன்று வீடு,

குருவாயூர் (அஞ்சல்).

அன்பான ஆனி,

என் விளம்பரம் தொடர்பாகத் தாங்கள் தகவல் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு நன்றி. வேலையைப் பொறுத்து கீழ்க்காணும் விவரங்களைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

SONY DSC

 1. எர்ணாகுளம் வைட்டிலயில் ‘ஹெவன்ஸ் கிஃப்ட்’ அபார்ட்மென்டின் 702ம் எண் பிளாட்டில்தான் நாங்கள் (இப்போது எங்களுடைய அம்மா மட்டும்) வசிக்கிறோம். நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக டெஹ்ரானில் இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நிஷா… ஒன்பது வயது. நிக்கி… ஆறு வயது. என் மனைவியின் பெயரும் ஆனிதான்.
 1. நாங்கள் இருண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவுக்கு வருவோம். இந்தமுறை ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 14 வரைதான் எங்களுக்கு விடுமுறை உள்ளது. திரும்பப் போவதற்குள்அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்களின் விருப்பம்.
 1. பிளாட்டின் வசதிகள்: நான்கு படுக்கையறைகளும் எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட பிளாட் இது. ஒவ்வொரு படுக்கையறையிலும் டி.வி. செட் இருப்பதோடு அம்மாவுக்காகத் தனியாக டிஜிடல் ஹோம் தியேட்டரும் உள்ளது. அம்மாவின் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. காண்டஸ் காரும் டிரைவரும் உண்டு. சமையல் செய்ய ஒரு பெண்மணியும் (அம்மு அம்மாள்) மற்ற வீட்டுத் தேவைகளுக்கு இரண்டு வேலைக்காரர்களும் இருக்கிறார்கள் (தங்கம்மா, மணியன்), அம்மாவுக்கு உதவுவதற்காக ஒரு பெண் (சோசாம்மா) இருக்கிறாள். அம்மாவின் அறைக்கு அடுத்திருக்கும் படுக்கையறை ஹோம் நர்ஸுக்கானது.
 1. ஹோம் நர்ஸின் சம்பளமும் சலுகைகளும்:

சம்பளம்: மாதம் ரூ. 300/-. உணவும் தங்கமிடமும் இலவசம். வருடத்துக்கு ஒருமுறை 2 வார விடுமுறை. ஆனால், பதிலுக்கு ஒரு நர்ஸை எங்களுடைய அனுமதியுடன் ஏற்பாடு செய்த பிறகுதான் விடுப்பில் போக முடியும். வேலை நேரம் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும். ஆனால், சோசாம்மாவிடம் முன்னரே சொல்லிவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆறுமணி நேரமும் வேறு ஏதாவது ஒரு நாள் மூன்று மணி நேரமும் வெளியே போகலாம். ஹோம் நர்ஸுக்குப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது. டெலிபோன் வசதி அம்மாவின் தேவைகளுக்கு மட்டுமேயானது. கார் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

 1. அம்மாவின் பெயர்: எலிசபெத் கோரா பிலிப். ‘ஏலிக்குட்டி’ என்றும் அழைப்பார்கள். ‘அம்மம்மா’ என்றோ ‘அம்மச்சி’ என்றோ ஹோம் நர்ஸ் அழைக்கலாம்.
 1. அம்மாவின் வயது 86. உயரம் 5’4. எடை 47 கிலோ கிராம்.
 1. உடல்நிலை: நடக்க முடியாவிட்டாலும் கேள்வித் திறனிலோ, பார்வைத் திறனிலோ குறை ஒன்றும் இல்லை. குறிப்பிடும்படியான வியாதியொன்றும் இல்லை. வியாதி ஒன்றும் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் ஹோம் நர்ஸின் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
 1. ஞாபகம்: பல நேரங்களில் குறைவது.
 1. அம்மாவுக்கும் எனக்குமான உறவுநிலை: அம்மாவின் ஆறு குழந்தைகளில் கடைக்குட்டி நான். என்னுடைய ஒரு சகோதரி திருமணம் முடித்து அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வாழ்கிறாள். இன்னோரு சகோதரி கன்னியாஸ்தீரியாகவும், இமாலயத்தின் தேஹ்ரி கத்வார் பிரதேசத்தில் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியையுமாக இருக்கிறாள். எல்லோருக்கும் பெரிய அண்ணன் எகிப்தில் அலெக்ஸாண்ரியாவில் இன்ஜினியர். இரண்டாவது அண்ணன் ஆப்பிரிக்காவின் எரிட்ரியாவில் ஊழியும் செய்யும் பாதிரியார். மூன்றாமவர் சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உயர்பதவியில் இருக்கிறார். எங்கள் அப்பா இறந்து 11 வருடங்களாகின்றன. எனக்கு அம்மாவிடமும் அம்மாவுக்கு என்னிடமும் அளவற்ற நேசமுண்டு. கடைக்குட்டியான என்னை அம்மா மிகவும் செல்லமாக வளர்த்தாள். எங்களின் மதிப்பிட முடியாத சொத்து அவளே. எல்லோருக்குமாக நான்தான் அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
 1. இனி, அம்மாவைப் பராமரிக்கும் முறை பற்றிச் சில விளக்கங்கள்:

காலை 9 மணி: அம்மாவை மென்மையான குரலில் அழைத்து எழுப்ப வேண்டும். உலுக்கி எழுப்பக் கூடாது. அதற்கு பதிலாக உள்ளங்கையிலோ, நெற்றியிலோ மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். விழித்த பிறகு அம்மா நர்ஸைப் புரிந்து கொள்ளும்போது புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளத் தாமதித்தால் புன்னகையுடனேயே சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டிலின் தலைப்பக்கத்தை சோசாம்மாவின் உதவியுடன் உயர்த்தி, அம்மாவைத் தலையணையில் சாய்த்து உட்கார வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் உள்ள பாகத்தை மெதுவாக முன்னால் கொண்டுவந்து தோளையும் முதுகையும் மென்மையாகத் தடவிவிட வேண்டும். அதற்குள் சோசாம்மா கம்மோடு கொண்டு வந்திருப்பாள். நர்ஸ் தனியாகவோ சோசாம்மாவின் உதவியுடனோ அம்மாவை எடுத்துக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் நர்ஸ் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், விழித்தவுடன் அம்மாவுக்கு அன்பான ஒரு தழுவல் கிடைப்பது என்பது அம்மாவின் தளர்ச்சியுற்ற மனதும் உடலும் புத்துணர்வு பெற அவசியமானது. அம்மா கம்மோடில் உட்கார்ந்திருக்கும்போது  நர்ஸ் அம்மாவின் இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்து மிருதுவாகத் தடவுவதையோ, முதுகில் கைவைத்துத் தாங்கிக் கொண்டிருப்பதையோ செய்யலாம்.

9.20: அம்மாவைத் துடைக்க வேண்டும். இதைச் செய்யும்போது அம்மாவோடு பேசிக் கொண்டிருக்க மறக்கக் கூடாது. பேசுவதற்குத் தகுந்த சில விஷயங்கள்: நர்ஸின் வாழ்க்கையின் சில நல்ல அனுபவங்கள்; சகோதர, சகோதரிகளுண்டென்றால் அவர்களைப் பற்றிய விஷயங்கள்; முதல்நாள் வாசித்த பத்திரிகையின் மகிழ்ச்சியான செய்திகள்; மனதுக்கு ஆனந்தம் தரும் கிறித்தவ ஆன்மீகக் கதைகள் ஏதாவது தெரியுமென்றால் அவை; பிள்ளைகளான எங்களைப் பற்றியும் எங்களுடைய குழந்தைகள் பற்றியுமான அன்பான உரைகள்.

9.35: அம்மாவின் முகத்தை, அதற்காகத் தனியாக வைக்கப்பட்டுள்ள துண்டினால் மெதுவாக ஒற்றியெடுத்துப் பவுடர் போட வேண்டும். கழுத்து, கக்கங்கள், முலைகளுக்கடியில், முதுகு, பிருஷ்டம், அந்தரங்க பாகங்கள், கால் பாதங்கள் என்று எல்லா இடங்களிலும் பவுடர் போட வேண்டும். இந்நேரத்தில் நர்ஸ் ஹம்மிங் செய்வதையோ, சின்னக் குரலில் வாய் திறந்து பாடுவதையோ செய்யலாம். பழமையான ஆன்மிகக்  கீதங்களாயிருந்தால் மிகவும் நல்லது. இது ஏதும் தெரியாதெனில் நர்ஸுக்கு விருப்பமான, ஆனால் இனிமையான ஏதாவது பாடல்களைப் பாடலாம். பிறகு துவைத்தெடுத்து வைத்திருக்கும் கவுனை அம்மாவுக்கு அணிவிக்க வேண்டும்.

9.45: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்ற வேண்டும். சோசாம்மா கம்மோடை உருட்டி நகர்த்தி அதன் வாளியைக் காலி பண்ணிக் கழுவிச் சுத்தமாக்கி வைக்க வேண்டும். அவிழ்த்தெடுத்த கவுனையும், நனைந்த துண்டுகளையும் அழுக்குக் கூடையில் போட வேண்டும். நர்ஸ் சக்கர நாற்காலியை அம்மாவின் மேசைக்குப் பக்கத்தில் தள்ளிக் கொண்டு போக வேண்டும்.

9.48: அம்மா மேசைக்கருகில்: அம்மா நாற்பது வருடங்கள் ஆசிரியையாயிருந்ததால் இந்த வாசிப்பு மேசைக்கு அருகில் வந்தமர்வது அவர்களுக்கு மிக விருப்பமான ஒன்று. மேசை மீது பைபிள், நிகண்டு, அம்மாவின் டைரி, இங்க் பாட்டில், பேனா, பூதக்கண்ணாடி, அம்மாவின் திருமணத்தின்போது கிடைத்த சிலுவை உருவம் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி பிள்ளைகளான எங்களை உயர்ப் படிப்பு படிக்க வைப்பதற்காக அம்மா டியூஷன் எடுத்த வருடங்களில் பயன்படுத்தியிருந்த மெலிதான பிரம்பும் மேசையின்மீது அம்மாவின் இடதுபுறமாக இருக்க வேண்டும். இந்த மேசையின் முன் அமர்ந்துதான் அம்மா உணவு உட்கொள்வார்கள். நாப்கின்கள் விரித்து அதன் மீது மேலே சொன்ன பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

9.49: சாப்பிடும் நேரம்: கட்ட வேண்டிய துவாலையை அம்மாவின் கழுத்தில் கட்ட வேண்டும். பல்செட்டை எடுத்து சுத்தமான நீரில் கழுவி வாயில் திரும்பவும் பொருத்திவிட வேண்டும். அம்மாவின் இடது கையை ஹேண்ட் வாஷ் பயன்படுத்திக் கழுவிவிட வேண்டும். அம்மா இடது கைப்பழக்கம் உள்ளவர். அவர் தன் கையாலேயே உணவு எடுத்து சாப்பிட முடியுமென்றால் அதற்கு அனுமதிக்கலாம். இல்லையென்றால் நர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம். மென்று விழுங்கிவிட்டார்கள் என்பதைத் தெரிந்த கொண்ட பிறகுதான் அடுத்த ஸ்பூன் ஊட்ட வேண்டும். முக்கியமான உணவு வகைகள்: ஓட்ஸ் கஞ்சி… நன்றாக வேகவைத்துக் குழைத்தது. நன்றாக பழுத்தப் பப்பாளிப் பழத்தின் நான்கில் ஒரு பகுதி சிறு துண்டுகளாக்கியது. மூன்று ஆரஞ்சுகளின் பிழிந்தெடுக்கப்பட்ட சாறில், மலம் இளகுவதற்கான இஸபகோல் பொடி ஒரு ஸ்பூன் மட்டும் போட்டுக் கலந்தது. ஓட்ஸ் கஞ்சியில் கொஞ்சம் வெண்ணெயும், மேப்பிள் சிரப்பும், கொஞ்சம் கல் உப்பு கலந்த தண்ணீரும் சேர்க்கலாம். இவற்றை அம்மு அம்மாள் சரியாகத் தயாரிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மா சுயமாமாகவே உணவு உட்கொள்வதானால் அந்த நேரத்தில் நர்ஸ் பைபிளிலிருந்து இப்போது வாசிக்கலாம் என்று தோன்றும் ஏதாவது ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். உணவை ஊட்டி விடுவதானால் நர்ஸ் புன்னகையுடன் அம்மாவிடம் பள்ளி, கல்லூரி கால மகிழ்ச்சியான அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அம்மா புன்முறுவல் பூக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூப்பதாக தெரிந்தால் அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே வாஞ்சையுடன் கன்னத்தில் தடவிக் கொடுக்க வேண்டும்.

10.15: அம்மாவின் உதடுகளையும் தாடையையும் துடைத்துச் சுத்தமாக்கி மேல்துண்டை எடுத்துவிட்டு, இடது கையைக் கழுவித் துடைத்துச் சக்கர நாற்காலியைக் கட்டிலுக்கருகில் தள்ளிச் செல்ல வேண்டும். அதற்குள் சோசாம்மா கட்டிலைத் தாழ்த்தி படுக்கையிலும், தலையணைகளிலும் சலவை செய்த பெட்ஷீட்டும், உறைகளும் போட்டிருப்பார்கள். போர்வைக்கடியிலுள்ள ரப்பர் ஷீட்டில் எறும்புகளோ, துர்நாற்றமோ இல்லையென்று நர்ஸ் சுயமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மாவைச் சக்கர நாற்காலியிலிருந்து கட்டிலுக்கு மாற்றிப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்திவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே மேலும் ஒருமுறை புன்முறுவல் பூப்பதும், கன்னத்தில் தடவுவதும் அவசியம்.

10.20: அம்மாவின் துணிகளும் போர்வைகளும் மற்றவையும் சோசாம்மா வாஷிங் மெஷினில் போட்டு மெஷின் ஸ்டார்ட் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

11.10: வாஷிங் மெஷினிலுள்ள துணிகளை வெளியே எடுத்துக் கொடியில் காயப்போட வேண்டும் – இதைச் சோசாம்மா செய்வார்கள்.

12.30: அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அதில் உட்கார்ந்திருக்கும்போது செய்ய வேண்டியவற்றை முன்பே சொல்லியிருக்கிறேன்.

12.40: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்றி நாற்காலியைப் பால்கனிக்குக் கொண்டு போகவேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டு முகத்தில் பொருத்த வேண்டும். பால்கனியிலிருந்து பார்க்கும்போது தெரியும் நகர பாகங்களைப் பற்றி இந்த நேரத்தில் அம்மாவோடு பேசலாம். அங்கேயிருந்து பார்த்தால் மலயாட்டூர் தேவாலயம் பார்க்கலாம் என்று எப்போதாவது சொல்லலாம். மலயாட்டூர் மலை ஏற வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. இந்நேரத்தில் கல்உப்பு கலக்கிய ஒரு ஸ்பூன் தண்ணீரை மாதுளம்பழச் சாற்றில் கலந்து, அதை அம்மாவுக்கு ஊட்டி விடலாம்.

13.30: அம்மாவை மத்தியான உறக்கத்துக்காகக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். மத்தியானத் தூக்கம் என்று அம்மாவின் காதில் சொல்ல வேண்டும்.

15.00: அம்மு அம்மாள் அம்மாவின் இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரவு உணவின் வகைகள்: குழையக் குழைய வேகவைத்த கோதுமைக் கஞ்சி, சிறிது பால் சக்கரை சேர்த்தது; தெளிவான கோழியிறைச்சி சூப்; ஒரு சிறு பழம் (முடியுமானால் பூவன் பழம் மட்டும்) மெல்லிய வட்டங்களாக அரிந்து அதில் கல்லுப்பு கரைத்துத் தண்ணீர் தெளித்தது.

16.00: அம்மாவைத் தூக்கத்தினின்று எழுப்ப வேண்டும். இந்நேரத்தில் காலையில் எழுப்பும்போது செய்ய வேண்டியது எனக் குறிப்பிட்ட காரியங்களை மீண்டும் செய்ய வேண்டும். மீண்டும் கம்மோடில், பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி மேஜைக்கருகில்.

16.20: மேல்துண்டைக் கட்டவும். இடது கையைக் கழுவவும். பல்செட்டைக் கழுவி வாயில் பொருத்த வேண்டும். இரவு உணவு அளிக்க வேண்டும்.

16.50: உணவு உண்ட அம்மாவைச் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்குச் சௌகரியமுள்ள மேற்குப் பக்க பால்கனிக்குத் தள்ளிச் செல்லவும், சக்கர நாற்காலியின் சக்கரங்களைப் பூட்டிவிட்டு அம்மா முன்பக்கமாகச் சாய்ந்து விடாமலிருப்பதற்கான கம்பியை அதனிடத்தில் பொருத்திவிட்டு அவர்களைத் தனிமையில் விடவும் வேண்டும்.

18.15: காய்ந்த துணிகளைச் சோசாம்மா மடித்து வைத்தாயிற்று என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அம்மாவை மீண்டும் உட்கார வைக்க வேண்டும். திரும்பவும் சக்கர நாற்காலிக்கு.

18.30: அம்மாவின் சக்கர நாற்காலி டிஜிட்டல் ஹோம் தியேட்டர் ஸ்கிரீனுக்கு முன்னர் இருக்க வேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டுப் பொருத்தவும். ஹியரிங் எய்டைக் காதில் பொருத்தவும். இதன் பிறகு அம்மாவுக்காகக் படம் போடலாம். அது நர்ஸும் பார்க்க விருப்பமுள்ள படமாகலாம்.

19.30: படத்தை நிறுத்த வேண்டும். ஹியரிங் எய்டையும் மூக்குக் கண்ணாடியையும் மாற்றி விடவும். அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அந்நேரத்தில் அம்மாவோடு பேச வேண்டும். வெறுப்பு உண்டாக்காத விதத்திலும் ஆவலைத் தூண்டும்படியாகவும் விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மறுநாள் பார்க்கப்போகும் திரைப்படத்தை பற்றிப் பேசலாம். இல்லையென்றால் மக்கள் பயன்படுத்தும்படி கடைத்தெருவில் புதிதாக, விற்பனைக்கு வந்துள்ள ஏதேனும் பொருட்களைப் பற்றிப் பேசலாம். (குறிப்பு: நிறுத்தி வைத்திருக்கும் திரைப்படத்தின் மீதி பாகத்தை அம்மா படுத்தபிறகு நர்ஸ் சன்னமான ஒலியில் பார்க்கலாம்).

Nurse

19.40: அம்மாவின் சக்கர நாற்காலி கட்டிலுக்கருகில் அம்மா பிரார்த்தனை செய்யும்போது, நர்ஸும் பிரார்த்திக்க வேண்டும். இந்த நேரத்தில் நர்ஸ், மண்டியிடுவதோ, அம்மாவின் அருகில் நாற்காலியில்  அமர்வதோ எனத் தன் விருப்பம்போல் செய்து கொள்ளலாம். நாங்கள் சிரியன் ரோமன் கத்தோலிக்கர் என்பதால் ஐம்பத்து மூன்று மணி ஜபம்தான், இரவு பிரார்த்தனைக்கு. நர்ஸும் இதே பிரிவைச் சார்ந்தவரெனில் பிரார்த்தனையைத் தாங்களே உரக்கச் சொல்லலாம். இல்லையென்றால் சோசாம்மாவும், தங்கம்மாவும் பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட பிரார்த்தனை முறையைவிடப் பழைய பிரார்த்தனை முறைதான் அம்மாவின் விருப்பம். பிரார்த்தனை முடிந்ததும் அம்மாவின் மேஜையில் இருக்கும் சின்னச் சிலுவை உருவத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவின் உதடுகளில் ஒற்றிவிட்டுத் திரும்பக் கொண்டுபோய் வைக்க வேண்டும்.

20.15: அம்மா படுப்பதற்கான ஏற்பாடுகள்: கடைசியாக ஒருமுறை கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். பல்செட்டை நீக்க வேண்டும். கிளீனிங் லிக்விட் உள்ள பாத்திரத்தில் அவற்றைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு ஹேர்பலாக்ஸ் மாத்திரையின் பாதியை ஒரு டம்ளர் தண்ணீருடன் அம்மாவுக்குக் கொடுக்கவும். படுக்கையையும் ரப்பர் ஷீட்டையும் மறுபடியும் பரிசோதிக்கவும். சுருக்கங்களை நீக்கவும்.

20.30: அம்மாவைப் படுக்கையில் படுக்க வைத்துப் போர்வையால் மூடிவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே புன்முறுவல் செய்ய வேண்டும். “குட்நைட். ஸ்வீட் டிரீம்ஸ்” என்று சொல்ல வேண்டும். அம்மா புன்முறுவல் கொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூத்தாலும் இல்லையென்றாலும் அம்மாவின் நெற்றியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் ‘என் பிரியமான அம்மச்சீ’ என்று சொல்லிக்கொண்டே எங்கள் ஆறு பேருக்காகவும் ஒவ்வொரு இனிமையான முத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவும் செய்தால் நர்சின் அன்றைய நாளின் வேலை முடிவடைகிறது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதானால் நேர்காணலுக்கு வருவதற்குச் சௌகரியமான ஒரு தேதியைக் குறிப்பிட்டு உடனே பதில் அனுப்புங்கள்.

நன்றியுடன்

பிரியமான

கோராபிலிப் ஜான்.

Image courtesy:

http://images.elephantjournal.com

https://jparadisirn.files.wordpress.com

நூல் அறிமுகம் – 10 – கவர்னரின் ஹெலிகாப்டர்

kavarnarin helicopter

து உரையாடலோ, எழுத்தோ… சுற்றி வளைத்து, நீட்டி முழக்கிச் சொல்லாமல் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்வதில் முக்கியமான சிரமம் ஒன்று இருக்கிறது. கேட்பவருக்கோ, படிப்பவருக்கோ அந்த நேரடித் தன்மை அல்லது எளிமை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவை கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும், இலக்கியத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் ஒரு படைப்பு எளிமையாக, அதி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் போதுதான் மக்களைச் சென்றடைகிறது… எழுதிய படைப்பாளனும் மக்களால் கொண்டாடப்படுகிறான். அந்தக் கலை இந்நூலாசிரியர் எஸ்.கே.பி. கருணாவுக்கு இயல்பாகக் கை வந்திருக்கிறது.

‘ஒரு கர்பிணிக்கு பேருந்தில் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தது’, ‘விவசாயியின் விளைந்த நிலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பிரம்மாண்ட பைப் விழுந்தது’, ‘படிக்கிற காலத்தில் சைக்கிள் தொலைந்து போனது’, ‘ஆஸ்திரேலியாவுக்குப் போய் திமிங்கிலத்தைக் கடலில் பார்த்தது’… இப்படி இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளையுமே ஒற்றை வரி கருக்களுக்குள் சுருக்கிவிடலாம். அதையும் தாண்டி அந்தச் சம்பவங்கள் தரும் தரிசனம், நாம் அருகில் இருந்து பார்ப்பது போல, நமக்கே நடந்தது போல உணர வைக்கும் சொல்லாடல் தன்மை, நிகழ்வுகள் ஆகியவையே இத் தொகுப்பை மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கின்றன.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளும் கடினமான கட்டுரைத்தன்மையைக் கொண்டிராமல், புனைவுக்கான வடிவத்தைக் கொண்டிருப்பது இதன் மற்றொரு சிறப்பு. உண்மைச் சம்பவங்களை அவற்றுக்கான அழுத்தம் குறையாமல் ஆசிரியர் தன் மனவோட்டத்தோடு கூடிய அழகு தமிழில், வாசகனை வெகு எளிதாக ஈர்த்துவிடும் மொழியில் முன் வைக்கிறார். படிக்கப் படிக்க பக்கங்கள் வேக வேகமாகப் புரள்கின்றன. சிலோனிலிருந்து (இலங்கை) திருவண்ணாமலைக்கு வந்த ‘சண்டைக்காரர்கள்’, ‘சைக்கிள் டாக்டர்’, ‘பிரியாணிக்காக பின்னால் சுற்றும் ஹெட்கான்ஸ்டபிள்’, ‘எழுத்தாளர் சுஜாதா’, ‘கவர்னரின் பைலட்’, ‘புரொபசர் பசவராஜ்’, ‘கையில் கசங்கிய பத்து ரூபாய் நோட்டை அழுத்திவிட்டுப் போன மூதாட்டி’… என நூலைப் படித்து முடித்த பிறகும் ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். உச்சக்கட்டமாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்று இரு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள்… ஒரு சாமானியனுக்கும் அரசு இயந்திரத்துக்கும் இடையிலான இடைவெளியை அப்பட்டமாகாச் சொல்லிச் செல்கின்றன.

எளிமைதான் தன் எழுத்தின் அடிநாதம் என்றாலும், எஸ்.கே.பி.கருணா, வாழ்க்கையின் யதார்த்தமான பக்கங்களைச் சொல்லும் போது வெகு அநாயசமாக சில வரிகளைக் கையாள்கிறார். உதாரணமாக, ‘ஆகிஸிடெண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், எனக்கு நெஞ்சமெல்லாம் பரவசம் வந்து நிறைத்தது’. இந்த வரியைப் படிக்கும் போது அதிர்வைக் கொடுத்தாலும், ‘மதுரை வீரன்’ என்கிற ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது அதற்கான நிறைவு நமக்குக் கிடைத்து விடுகிறது. ‘அது எப்படி மனைவியும், மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே நம்முடைய வீடுகள் வாழுமிடம் என்பதிலிருந்து வெறுமனே வசிப்பிடமாக மாறி விடுகிறது?’ என்ற வரி குடும்பஸ்தர்கள் அனைவருக்குமாக எழுதப்பட்ட பொது வரியாக உருக்கொள்கிறது.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நம்மை நாமே சுயமாக சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள, அவற்றுக்கான விடைகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அலசி ஆராய, ஒரு புதிய யதார்த்தத்தை அறிந்துகொள்ளத் தூண்டுபவை. யாரோ ஒருவர், தன் மன ஓட்டத்தை தன் பார்வையில் முன் வைத்த கட்டுரைகள் என ஒதுக்கித் தள்ள முடியாதவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புதிய படிப்பினை, அனுபவம் வாசகருக்குக் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கும் தொகுப்பு இந்நூல். சரளமான, சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்ற இந்நூல் எஸ்.கே.பி. கருணாவுக்கு பரந்த இலக்கியப் பரப்பில் அவர் எடுத்து வைத்த முதல் அடி என்றே தோன்றுகிறது. அவர் புனைவும் கட்டுரைகளுமாக நிறைய எழுத வேண்டும்… அவற்றை எதிர்பார்த்து, வாசித்துத் தீர்க்கும் பேரார்வத்துடன் நிறைய வாசகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம்.

 • பாலு சத்யா

நூல்: கவர்னரின் ஹெலிகாப்டர்

ஆசிரியர்: எஸ்.கே.பி.கருணா

வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை – 606 601.

தொலைபேசி: 9445870995, 04175-251468.

விலை: ரூ.200/-.

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

நூல் அறிமுகம் – 9

நூல் அறிமுகம் – 9

இலைகள் பழுக்காத உலகம் 

Wrapper

ராமலக்ஷ்மி

ளைத்தளத்தில் பிரபலமான கவிஞர் ராமலக்ஷ்மி 1987ல் இருந்து தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வருபவர். ‘முத்துச்சரம்’ என்ற வலைப்பூவை உருவாக்கி, தொடர்ந்து பதிவுகள் இடுபவர். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளியானவை.

‘‘அன்பையும், பாசத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்துகிற எந்தக் கவிதையிலும் வலிந்து திணிக்கப்பட்ட பாசாங்கோ, வார்த்தைகளின் ஆர்ப்பாட்டமோ இல்லை. இயல்பாக, உண்மையின் மையப் புள்ளியிலிருந்து இதைப் பதிவு செய்கிறார். அதனால்தான் இந்தக் கவிதைகள் மென்மையையும் முரண்பாட்டையும் ஒருங்கிணைத்துச் செல்கின்றன.

கவிதையை உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதில் முதன்மையானது ரசனை சார்ந்த அனுபவம். ரசனைக்குக் கூர்மையான கவனிப்பு அவசியம். யாரும் நுழையாத கவிதைப் பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிற போது, வாசகன் காணும் உலகம் ஆச்சரியங்கள் விரியும் வண்ண உலகமாகிறது. ‘அரும்புகள்’ கவிதையில் ராமலக்ஷ்மியின் கவிதைப் பார்வை நேர்த்தியும் அழகும் மிக்கதாக இருக்கிறது. நாம் கவனிக்கத் தவறி விட்டோமே என்று வியக்கத் தோன்றுகிறது…’’ என்று இந்நூல் மதிப்புரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் க. அம்சப்ரியா. ராமலக்ஷ்மியின் ‘அரும்புகள்’ கவிதை மட்டுமல்ல… பல கவிதைகள் ரசனை சார்ந்த அனுபவத்துக்கு நம்மை உட்படுத்துபவை.

எளிமையான வரிகளில், மிரட்டாத சொல்லாட்சியில் மிளிர்கின்றன இத் தொகுப்பில் உள்ள கவிதைகள். உதாரணத்துக்கு சில கவிதைகள்…

அரும்புகள் 

moon

என்றைக்கு

எப்போது வருமென

எப்படியோ தெரிந்து

வைத்திருக்கின்றன

அத்தனைக் குஞ்சு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்

நடுநிசியில் நழுவிக்

குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட

மெல்ல மிதந்து

உள்ளே வருகிறது

பிள்ளைப் பிறை நிலா.

***

எல்லாம் புரிந்தவள் 

mother and daughter

மகளின் மழலைக்கு

மனைவியே அகராதி

அர்த்தங்கள் பல

முயன்று தோற்று

‘அப்பா அம்மாவாகவே முடியாதோ…’

திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்

அருகே வந்தணைத்து

ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு

அம்மாவாகி விடுகிறாள்

அன்பு மகள்.

***

கடன் அன்பை வளர்க்கும் 

coin

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை’

புதுக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இட்த்தில்

வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான்

முந்தைய கடன்களை

காலத்தே அடைத்த்தற்கான

நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன்வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி

‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’

அறிவித்தாள் அன்பு மகள்

முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க

சில்லறை இல்லாதபோது

தன்குட்டிப் பையைக் குலுக்கித் தேடி

எடுத்துத் தந்த இரு ஐந்து ரூபாய்

நாணயங்களை நினைவூட்டி.

***

நூல்: இலைகள் பழுக்காத உலகம்

ஆசிரியர்: ராமலக்ஷ்மி

வெளியீடு: அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306.

தொலைபேசி: 9994541010.

விலை: ரூ.80/-

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

Image courtesy:  

ww.chinese.cn

http://api.ning.com/

http://www.circlevillegifts.com/

நூல் அறிமுகம் – 5

திருவண்ணாமலை கிரிவலம்

ஒரு தரிசன வழிகாட்டி

wrapper374

‘திருவாரூர்ல பிறந்தா முக்தி; காசியில இறந்தா முக்தி; திருவண்ணாமலையை நினைச்சாலே முக்தி’… இது பல காலமாக தமிழகத்தில் உலாவரும் ஒரு பழைய பழமொழி. அந்த அளவுக்கு கீர்த்தியும் மகிமையும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு உண்டு. வெல்லத்தை நாடி வரும் எறும்புக் கூட்டம் போல இந்தப் புண்ணிய தலத்தை ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தப் புனிதத் தலத்துக்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.

இந்த கையடக்க நூல், திருவண்ணாமலையின் பெருமையை எளிய முறையில் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, ‘இப்படிப்பட்ட ஆன்மிகப் பொக்கிஷம் வேறெங்கும் இல்லை. அதற்குக் காரணம் திருவண்ணாமலையில் இருக்கும் மலை. இந்த மலையே சிவலிங்கம். இந்த மலைச்சாரலிலும், அதன் குகைகளிலும் இன்னும் பல்வேறு சித்தர்களும் ஞானிகளும் உலகறியாமல் தங்களை ஒளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.’… இப்படி திருவண்ணாமலை பற்றிய பல முக்கிய, பெருமைக்குரிய உதாரணங்களை எளிமையாகத் தருகிறார்கள் இந்நூலை எழுதிய சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்.

இந்தக் கையடக்கப் புத்தகத்தில் அக்னி ஜோதியான சிவன் கல் மலையானது எப்படி, திருவண்ணாமலை கிரிவல முறைகள், மலையைச் சுற்றியுள்ள லிங்கங்கள், புண்ணிய ஸ்தலங்கள் அவற்றின் வரலாறு, திருவண்ணாமலையில் தங்கும் இடங்கள், கட்டணம், சுற்றியுள்ள முக்கிய இடங்கள் அத்தனையும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் திருவண்ணாமலை செல்ல விரும்புகிறவர்களுக்கு உற்ற வழிகாட்டி இந்தப் புத்தகம்.

நூல்: திருவண்ணாமலை கிரிவலம் – ஒரு தரிசன வழிகாட்டி

ஆசிரியர்கள்: சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்

விலை: ரூ.25/-

வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரைச் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020.

தொலைபேசி: +91 73057 76099 / 044-2441 4441/ mail2ttp@gmail.com

நூல் அறிமுகம் – 4

கெடை காடு

 Kedai_Kaadu_Wrapper_very_Final (1)

 • ‘கெடை காடு’… வெளியான சூட்டோடு எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவாக வழங்கப்படும் சிறந்த நாவலுக்கான ‘செந்தமிழ் அறக்கட்டளை’ விருதை பெற்றிருக்கும் நாவல்.
 • ‘இந்த நாவலின் கதைக் களம் தமிழுக்கு மிகவும் புதியது’ என்று புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
 • ‘காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், மேய்ச்சல், காதல், காமம் என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் ‘கெடை காடு’க்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது…’ என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுந்தர புத்தன்.

இந்த நூல் குறித்த அறிமுகத்துக்கு இவையெல்லாம் அவசியமாக இருக்கின்றன. எழுத்தில் கொங்கு வட்டார வழக்கை முன்னிறுத்திய ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி கரிசல் பூமி வட்டார வழக்கை வெகு லாவகமாகக் கையாண்ட கி.ராஜநாராயணன் வரை தமிழகத்தின் கிராமங்களும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ படைப்புகளில் மிளிர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘கெடை காடு’ நாவலுக்கு மிக முக்கியமான, அதே நேரத்தில் தனித்துவமான இடமுண்டு. வழக்கம் போல ஒரு கிராமம், அதில் ஏதோ ஓர் ஆண் அல்லது பெண்ணை மையப்படுத்தி, ஏதோ ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்தியபடி நகரும் நாவலாக ‘கெடை காடு’ இல்லை. ஒவ்வொரு மலருக்கும் ஓர் வடிவம், மணம் என்று தனித்தன்மை இருப்பது போல இந்நாவலில் காட்சிப்படுத்தப்படும் மனிதர்களும் அவரவர்களுக்கான இயல்புகளுடனும் குணங்களுடனும் வலம் வருகிறார்கள்.

கணவன், இன்னொருத்தியின் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து, ‘‘ஆம்பள யோக்கியம் தெரியாண்டாமா? அதான். இன்னையோட முடிஞ்சாச்சு. இனி ஒட்டும் இல்ல. உறவும் இல்ல’’ என்று உதறிவிட்டுப் போகிற புண்ணியத்தாயி…

‘‘இவங்க நினைச்சா சேர்க்கதுக்கும் நீக்கதுக்கும் நான் என்ன இவ்வோ வீட்டு மாடா, ஆடா? எனக்கு சங்கமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’’ என படபடக்கிற தனித்து வாழும் கல்யாணி…

எதிர்ப்பாலினத்தின் மேல் எழும் வேட்கையும் பார்க்கிற பெண்ணின் மேலேல்லாம் காதல் வயப்படத் தூண்டுகிற பருவத்திலிருக்கும் உச்சிமகாளி என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் நேரில் சந்தித்துப் பேசும் எத்தனையோபேரின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரப் படைப்புகளின் யதார்த்த தன்மை நாவலின் போக்குக்கு பெரும் பலம்.

குள்ராட்டிக்கு மேய்ச்சலுக்குப் போன இடத்தில் அட்டளையில் தொங்கும் பாம்புச் சட்டைகள்… அநாமதேயமாக நடு வழியில் நிற்கும் பட்றையன் கோயில்… அமைதி சூழ் மலைப் பகுதியில் அவ்வப்போது கேட்கும் ஓநாய்களின் இரைச்சல்… இவற்றுக்கு மத்தியில் மாடுகளையும் காபந்து பண்ணி, தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மேய்ச்சலுக்கு வந்த மனிதர்களின் வாழ்க்கை… என இந்த நாவல் பதிவு செய்யும் விஷயங்கள் ஏராளம். மனித வாழ்வின் வசீகரத்தையும் அவலத்தையும் வலிந்து திணிக்காமல், போகிற போக்கில் யதார்த்தமாக கோடிட்டுக் காட்டுகிறது ஏக்நாத்தின் எழுத்து நடை. கால்நடை மேய்த்தல் தொடர்பாக தமிழில் பூமணியின் ‘ரீதி’ சிறுகதை போல வெகு சில படைப்புகளே வெளியாகியுள்ளன. அதையே முக்கியக் களமாகக் கொண்டு வெளியான முதல் நாவல் ‘கெடை காடு’ என்று தோன்றுகிறது. தங்கு தடை இல்லாத எழுத்து நடை, திடீர் திருப்பங்கள் என்று சலிப்பூட்டாத இயல்பான நிகழ்வுகள், இது வரை பார்த்தும் கேட்டும் அறியாத புதிய அனுபவத்தை தரும் கதைக் களம் என விரிகிற இந்நாவல் ஒரு வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறது. அது ஒவ்வொருவரும் படித்து, அனுபவிக்க வேண்டிய வாழ்வியல்!

கெடை காடு

ஆசிரியர்: ஏக்நாத்

விலை: 170

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

முகவரி: எண் 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முதல்தளம்,

முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,

சென்னை – 600078.

(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்).

போன்: 04465157525. செல்: 9940446650.

காலத்தை வென்ற கதைகள் – 35

லஷ்மி கண்ணன் (காவேரி)

Lakshmi Kannan2

கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். தன் படைப்புகளை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும் வல்லமை படைத்தவர். தமிழில் ‘காவேரி’ என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இதுவரை 21 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் ஆங்கிலத்தில் வெளியான நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளும் அடக்கம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த இவருடைய நாவல், ‘ஆத்துக்குப் போகணும்’ மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. இவருடைய மொத்த சிறுகதைகளையும் ‘காவேரி கதைகள்’ என்ற பெயரில் தொகுத்து, இரண்டு பாகங்களாக ‘மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ்’ வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய சிறுகதைகளை இவரே ஆங்கிலத்தில் ‘Nandanvan & Other Stories’ மற்றும் ‘Genesis: Select Stories’ என்ற தலைப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு நூல்களும் டெல்லி, ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் சாகித்ய அகாடமியிலும் ஆய்வு நல்கை (Resident Fellowship) பெற்றவர். இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்கா-கலிபோர்னியாவில் இருக்கும் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சேன் ஜோஸ் மாகாண பல்கலைக்கழகம், லண்டனின் ‘தி இன்ஸ்டிடியூட் ஆஃப் காமன்வெல்த் ஸ்டடீஸ்’ ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளிலும் மாண்ட்ரியல், டொரண்டோ, ஹாலந்து, ஆகிய இடங்களில் நடந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகளிலும் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்; பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்திருக்கிறார். ஆங்கிலத்தில் பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.

ஓசைகள்

brush-painting-water-lily

கல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி வீசியது. மூதுரை வழியாய் வந்த மாலை மயக்கம், உஷ்ண தேசமான இந்தியாவில்தான் சூரியன் முழுகினவுடன் வரும் இந்த நேரம். எப்படி விசேஷமான ஒரு நேரமாக மனதுக்கு ரகசியமாக, திருடிக் கொண்டு வரது. பிறகு எவ்வளவுதான் அதைப் பிடித்து வைத்துக் கொள்ள முற்பட்டாலும் இந்த நேரம் விரைவாக கையிலிருந்து வழுக்கிக் கொண்டு இரவின் இருட்டுடன் சேர்ந்து மறைந்து விடுகிறது. கண்களை மெத்தென்று ஆக்கி, சருமத்தைக் குளுமைப்படுத்தி, கோபத்தை அகற்றி…

கபாலீச்வரர் கோயில் மூன்றாம் ஜாமப் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கோயிலை நெருங்கும்போதே தூரத்தில் ஒலிக்கும் மணியோசை காதில் விழுந்தது. அதனுடன் கலந்துகொண்ட வேறு சில ஓசைகள். வெளியே ரிக்‌ஷா வண்டிகளின் மணியோசைகள். ஏன், நடந்து வரும் வழியெல்லாம் இப்படித்தான் மாலைக்கே பிரத்தியேகமான சில ஓசைகள். சென்னைக்கும் வெளியே பொதுவாக இட்டுச் செல்லும் மாலையின் முழக்கம் மனதினுள் நினைவுகளைத் தட்டியெழுப்பும் நேரம். இன்னும் சில இடங்களில் மாலை என்ற இந்த பிரார்த்தனை நேரம்.

சங்கு ஊதி அதனால் கிளம்பிய நீண்ட, ஆழமான ஒலி, ஊதுவோரின் அடிவயிற்றிலிருந்து வரும் பிரயாசமும் ஆயாசமும் மூன்று மடங்கு பெரிதாக்கப்பட்டு வெளிவரும். ‘நமாஸ்’ செய்து, குனிந்த தலையை நிமிர்ந்து சொல்லும் முஸ்லீமின் ரீங்காரமிடும் த்வனி அலை அலையாய் பரவும். அதற்குள் நுழையும் பாட்டு, தம்பூரா மீட்டலுடன் இழைந்து வரும். காலை, பகல் முழுக்க வெவ்வேறு போராட்டங்களுடன் வேலை செய்து உரம் ஏறிய உடம்பையும் இறுகிய மனதையும் நெகிழ வைக்கும் ஓசைகள் அடங்கிய மாலையின் ஒருமிப்பு… மற்ற எல்லாப் புலன்களையும் அடக்கி, காதை மட்டும் தீட்டிக்கொண்டு சப்தங்களைக் கேட்கத் தூண்டியது.

Mylapore_Kapaleeshwarar_temple_facade

கபாலீசுவரர் கோயிலுக்கு அண்மையில் இருந்த ஒரு அரசமரத்தின் இலைகளைக் காற்று அளைந்து, கோதிவிட்டு எழும்பியது, ஒரு ஐம்பது பேர் சேர்ந்தாற்போல கை தட்டினாற் போல், வந்த ‘படபட’வென்ற ஓசைகள். கோயிலுக்கு வெளியே செருப்பைக் கழட்டி தேங்காய் புஷ்பங்களை வாங்கும்போது இந்தப் பொதுவான ஓசைகளுடன் சேர்ந்து வந்தது. திருப்பி, திருப்பி பாடப்பட்ட வரிகள். சுற்றிலும் குழந்தைகளின் ஆரவாரிக்கும் குரல்கள். பெண்களின் கீச்சுமூச்சு சப்தங்கள். பூக்காரர்களின் கூக்குரல்கள்.

கோயிலுக்குள் நுழைந்து முதல் புஷ்ப பொட்டலத்தைப் பிள்ளையாருக்கு அர்ப்பணித்து, வணங்கி நிமிர்ந்தபோது, மண்டபத்தின் மேலேயிருந்த இரண்டு குரங்குகளின் சர்ச்சை பலமாக முற்றியது. ஒரு குரங்கு வலது கன்னம் உப்பி, கொய்யாவையோ, மாங்காயையோ அடைத்து வைத்துக் கொண்டு அந்த நிலையிலும் இன்னொரு குரங்கைப் பார்த்து உறுமியது. குருக்களின் தீபாராதனை மணி கணீரென்று ஒலிக்க, கோபமாக இருந்த குரங்கும் ஒரு கணம் சட்டென்று கீழே பார்வையை வீசியது. சண்டை, உறுமல், அதன் சீறல் பாதியில் நிற்க, அந்த வெண்பாவின் ஒலிகள் மறுபடியும் அயராமல் தூரத்திலிருந்து தேய்வுடன் வந்தன. ஒரே மாதிரி பிசிரில்லாத தாள கட்டுடன் மேலே, மேலே எழும்பி ஓய்ந்தன. அந்த ஒலிகளை ஸ்வரமாக வடிகட்டினால், பத நீஸ…. பத நீ…. பத நீஸ…. என்று வெண்பாவின் ஒவ்வொரு வரியையும் முடிக்கலாம்.

குங்குமம், விபூதியை வாங்கிக் கொண்டு முருகன் சன்னதி அடைந்தேன். திரும்பத் திரும்ப வரும் அர்ச்சனை ஆர்டர்களை ஏற்றுக் கொண்ட சலிப்பை அடக்கி மறைத்துக் கொண்ட அர்ச்சகரின் முகம், கை, கால்களில் ஓர் இயந்திரத்தின் இயக்கம் தெரிந்தது. அர்ச்சகரின் வேகமான உச்சாடனத்தின் நடுவே பளீரிட்ட, மெல்லிய ‘உஸ்’, ‘உஸ்’ ஒலி கிளப்பும் ஸ்லோங்களைச் சின்ன பாம்பு சீறல்கள், ஒலி மாறிய இரும்புகள் மோதும் சப்தங்களில் லேசான கொடூரம் இழைந்தோடியது. அந்த அவசர அர்ச்சனை முடிந்து, தீபாராதனையின் தட்டு முருகனின் முகத்தை சுற்றிச் சுற்றி வந்து, பக்கவாட்டில் ஏந்தியிருந்த வேலின்மீது விளக்கு பட்டு பிரகாசப்படுத்தியது. கணகணவென்று மணியோசை, அதற்கும் பின்னால் தொலைவிலிருந்து மிதந்து வரும் அந்த அயராத பத நீஸ… பத நீ… அப்பா, என்ன பொறுமையான உச்சரிப்பு!

மீதி இரண்டு புஷ்பப் பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு சிவலிங்க சன்னதியில் நின்றேன். இங்கே நல்ல கும்பல். விதவைக் கோலம் பூண்ட பிச்சைக்காரிகள் – ஏண்டியம்மா, கொழந்தே, அறுபத்து மூவரைப் பற்றித் தெரியுமோ? இந்த நவகிரகங்களைப் பற்றித் தெரியுமோ? அதனால் என்ன? இப்படி வா. நா சொல்லித் தரேன்… ஏதோ கொஞ்சம் கையிருப்பாக இரண்டு ரூபாயா தரயா? பஸ் பிடிச்சு மாம்பலம் வரை போகணும்…

நெரிசலை நீக்கி, ஓரமாக நின்று, எட்டிப் பார்த்ததும் சிவலிங்க தரிசனம் கிடைத்தது. பளபளவென்று இந்த கறுப்புக்குத்தான் என்ன வழவழப்பு! மனிதர்களின் நெருக்கம் அழுத்தியது. வியர்வையின் நாற்றம் முகத்தில் சுளிப்பை வரவழைத்தது. சே! கோயிலுக்குக் கும்பலாக வரும் மனிதர்களைப் பார்த்து வெறுக்கக்கூடாது. அது பாவம். இது என்ன பிரமாத கும்பல், திருப்பதியை விடவா? திருப்பதி! மலையடியிலிருந்து திருமலை வரை வெறும் காலை பதித்து, பதித்து, ஊர்ந்து வரும் கோடிக்கணக்கான பெருமக்கள். ஏதோ ஒரு சக்தி அவர்கள் கீழிருந்து இழுக்க, மேலே இந்த பிரம்மாண்டமான மனித நம்பிக்கையின் சுமையைப் பயப்படாமல் தாங்கி நின்ற ஏழுமலை ஆண்டவன். அவர் ரொம்பப் பெரியவரா? அல்லது இந்த ஜனத்திரள் அவருக்குச் சக்தியளித்து, பெரியவராக்கியதா? கோழிக்குஞ்சா, முட்டையா எது முதலில் வந்தது? இங்கேயும் இந்தக் கும்பல், வியர்வை நாற்றம். பக்கத்தில் யாரோ கொண்டு வந்திருந்த பச்சை துளசி மாலையின் மணம். வியர்வை நாற்றத்தைத் துல்லியமாக விரட்டியது. பூவுடன் நாரும் சேர்ந்தால்..? அண்மையில் கிசுகிசுத்த பேச்சுக் குரல்கள். நசுங்கிய ஒரு குழந்தையின் அழுகை. பிறகு திருப்பி, திருப்பி ஒரு லயத்துடன் வரும் ஒலி, பிதற்றல் மாதிரி, என்ன? பிதற்றலா?

250px-தீரசங்கராபரணம்.svg

சூடம் காட்டி, தீர்த்தம் உள்ளங்கையில் வாங்கி, வாயில் விட்டுக் கொண்டதும், அதன் கற்பூர – துளசி வாசனை அம்பாக உள்ளுக்குள் பாய்ந்தது. அடைந்த காதுகள் தெளிவாகின. தாளக்கட்டுடன் ஒலிக்கும் இந்த ஓ. ஆ. ஔ. ஓ. அண்மையிலேயே இப்பொழுது கேட்டது. வெண்பா இல்லை. ஏதோ விகாரமான ஒலிகள், அப்போ, அந்த பத நீ ஸ… பத நீ ஸ? அது என்னவாயிற்று? இரண்டிற்கும் ஒரே தாளம். ஆனால், இது மட்டும் அபஸ்வரமாக ஒலிக்கிறதே?

கடைசியான புஷ்பப் பொட்டலத்துடன் தேவி சன்னதிக்கு வருவதற்குள் அந்த அபஸ்வர ஒலிகள் பயங்கரமாக நெருங்கின. சன்னதியின் இடது புறத்தில், கண்களை மூடியபடி, உடம்பைத் தலையை ஆட்டியபடி, ஔ… ஓ… அ… என்று எழுத்துகளை வக்கிரமாக, ஒழுங்கற்ற வரிசையில் போட்டபடி அவன் நின்றான். முப்பத்தைந்து – நாற்பது வயதிருக்கலாம். நிகுநிகுவென்ற தாம்பர கலர்மேனி. மேல் சட்டையில்லாமல் இடுப்பைச் சுற்றி ஈர ஜரிகை வேஷ்டி அணிந்திருந்தான். அதையும் சுற்றி கட்டிய சிவப்பு பட்டு. பாரிச வாயுவால் ஒரு பக்கம் முகமும் வாயும் கோணிப் போயிருந்தன.

ஒரு பக்கத்தில் கண், புருவம், மூக்கு நுனி எல்லாமே இழுத்துக் கொண்டிருந்தது. அதே பக்கம் கை உசிரேயில்லாமல் ஊசலாடியபடி தொங்கியது. அந்தப் பக்கத்து கால் சூம்பி தொளதொளவென்று பாதம் பதியாமல் தொங்க, ஒரு தூணில் ஒருக்களித்து, நல்ல கால் மேல் ஊன்றியபடி அவன் ஆடிக்கொண்டே இருந்தான். கண்கள் இரண்டும் இறுக மூடியிருக்க, நல்ல கையால் ஒவ்வொர முறையும் ஆள் காட்டி விரலால் உள்ளே இருக்கும் அம்பாளின் திசையைக் காட்டி ஒ… ஔ… ஆ…. என்றான். உருமாறிப்போன பத நீ ஸ… பத நீ, இந்த அரைமணியாய், ஏன் இதற்கும் முன்னதாகவே இவன் பாடிய வெண்பா! நாக்கு குழறி, வார்த்தைகள் இசைகேடாக சிதறி விழுந்தன.

l9800699

”பொட்டலத்தைக் குடுங்கோ. கோத்திரம் என்னவென்று சொன்னேள்?”

”ஊ…. ஔ…. ஆ….”

”உங்களைத்தான் கேட்டேன். கோத்திரம்?”

”ஆ… பாரத்வாஜம்.”

பொட்டலத்தை வாங்கிண்டு என் கண் பார்வையைக் கவனித்த அர்ச்சகர் சொன்னார்… ”நல்ல பெரிய வீட்டு பையன்தான். வீடே பாட்டு ஞானத்தில் தோய்ந்திருக்கும். பாவம். பாரிச வாயு இவர் வாயை அடித்து, முடமாக்கி வைத்திருக்கு. தினமும் வீட்டில் இவரை இப்படி அனுப்பி வைக்கிறாங்க. ஒரு நம்பிக்கையில்…. எல்லாமே நம்பிக்கைதானே?”

அர்ச்சகரின் ஸ்தோத்திரங்கள் அந்த ஓலமிடும் ஒலிகளுடன் சேர இரண்டும் மோதிக் கொண்டன. வயிற்றினுள் சின்னதொரு குளிர் நடுங்கி, என் உடம்பை ஒருமுறை ஆட்டியது. கண்களை அவன் ஒரு கணமாவது திறப்பானே என்று திரும்பிப் பார்த்தேன். இறுகப் போர்வை போலப் போர்த்திய கண் இமைகளுக்குள் வியாபித்திருக்கும் இருட்டில் நம்பிக்கை விதைக்குமா? அவன் உடம்பு பிடிப்பில்லாமல் ஆட்டம் கண்டிருந்தது.

பிரதட்சணமாய் வலம் வந்து, வணங்கி, எழுந்தபின் கடைசியாக அவனை ஒரு முறை பார்த்தேன். வெளியே வரும் வழியெல்லாம் இந்த ஒ… ஔ… ஆ… துருத்திக் கொண்டு வந்து ஆக்கிரமித்தது. அம்பாளிடம் முறையிடும் அவன் பிரார்த்தனை ஒரு நிந்தா ஸ்தோத்திரமாய், கோபமும், ஏமாற்றமும் ஆவேசமுமாய்த் தாளம் போட்டு ஒலித்தன. குழறும் நாக்கிற்குத்தான் இப்படி கூசாமல் வசவுகளை வாரி இறைக்க இறைக்க உரிமை உண்டோ?

ஏன் இப்படி பண்ணே நீ

உனக்கு கண் இல்லே?

நான் இப்படி கத்தறேனே

உனக்குக் காது இல்லே?

மாலையின் மென்மையான அமைதியைக் கந்தல் துணியாகக் கிழித்தெறிந்த ஓசைகள். தூங்கும் கடவுளின் பள்ளியெழுச்சி!

(‘ஓசைகள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து… காவ்யா வெளியீடு, பெங்களூரு, 1984)

spore-musical-notes-2019

***

Image Courtesy:

http://flowerpics.net

http://www.tamilvu.org

http://www.freestockphotos.name

http://upload.wikimedia.org/

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

சரஸ்வதி ராம்நாத்

எம்.ஏ.சுசீலா

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 34

சரஸ்வதி ராம்நாத்

S.ramnath

தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கோவை மாவட்டம் தாராபுரம் சொந்த ஊர். 1925, செப்டெம்பர் 7ம் தேதி பிறந்தார். இந்தியில் வித்வான் பட்டம் பெற்றவர். ‘கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது’, ‘இந்திய சன்ஸ்தான் விருது’, ‘பாரதீய அனுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார் விருது’ ஆகியவற்றைப் பெற்றவர். தி.ஜானகிராமன், தொ.மு.சி.ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்ற பல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் நாவலையும் இந்தியில் மொழிபெயர்த்தவர். 1990ல் ‘சர்வதேச பெண்கள் ஆண்டு’ கொண்டாடப்பட்டபோது, ‘இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 19 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1999, ஆகஸ்ட் 2ம் தேதி காலமானார். ஆரம்ப காலத்தில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பிறகு முழு மூச்சாக மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது.

இதுதான் வாழ்க்கை

 mother-and-child-mustafa-zumruttas

ஜானுவின் அலறல் இரவின் நிசப்தத்தின் நடுவே பயங்கரமாக ஒலித்தது. பரிதாபமான அதன் ஓலம் சங்கரனின் காடாந்திர நித்திரையைக் கூடக் கலைத்து விட்டது போலும். அவன் புரண்டு படுத்தான். ஆனால் எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அலறல் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை அடைந்த பிறகுதான் கண்ணைத் திறந்தான்.

தூளியிலிருந்து, தலை கீழே தொங்க, அலறிக் கொண்டு இருந்தாள் ஜானு. தூக்க மயக்கம் தெளியாத சங்கரனின் விழிகள் அறையின் நாற்புறமும் துழாவின.

‘காமாக்ஷி எங்கே?’ என்றது மனது. ஆனால் அதைப்பற்றி சிந்தனையை மேலே ஓடவிடாது காதுகளை நாராசமாய்த் துளைத்தது அழுகுரல். போர்வையை உதறிவிட்டு எழுந்து முணுமுணுத்தவாறே தூளி அருகில் சென்றான்.

குனிந்து அதை எடுக்கக் கை நீட்டியவன், அருவெறுப்புடன் பின் வாங்கியவாறே, ”ஏ காமாக்ஷி!” எனக் குரல் கொடுத்தான் பலமாக. கரப்பான் சிரங்கால் மேல் எல்லாம் அழுகிச் சொட்டும் குழந்தையை அவன் எடுப்பானா என்ன? அவன் குரலுக்குப் பதில் வரவில்லை. ஆத்திரத்துடன் தூளிக் கயிற்றைப் பிடித்து வீசி ஆட்டினான் சங்கரன். டணார் என்ற சப்தத்துடன் குழந்தை சுவரில் மோதியது. ரோதனம் இன்னும் பலமாகியது. ஜானு நெஞ்சே பிளந்து போகும்படி வீறிட்டாள்.

மறுவினாடி நிலைப்படி அருகே நிழலாடியது. சங்கரன் தலை நிமிர்ந்து பார்த்தான். காமாக்ஷி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள். தலைமயிர் கலைந்து அலங்கோலமாய்க் கிடந்தது. புடவைத் தலைப்பு அவிழ்ந்து தரையில் புரள மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்து வந்து கொண்டு இருந்தாள். ரத்தப் பசையற்று வெளுத்துக் கிடந்த அவள் முகத்தில் தோன்றிய பாவம், கண்ணில் மிளிர்ந்த கோபத்தின் சாயை, சங்கரனைக் குற்றவாளியைப் போல் தலை குனியச் செய்தன. அவன் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. சங்கரன் தன் தவறை மறைக்க விரும்பியவன் போல், ”சனியன், பிடிவாதத்தைப் பாரு; ஒரு நாள் கூட நிம்மதியாய்த் தூங்க விடுவதில்லை” என்றான். அவள் வாயே திறக்காமல் கதறும் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு ஆசுவாசப் படுத்தலானாள்.

”பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது கொடேன்.” அவள் தலை நிமிரவில்லை. சுவரோடு சாய்ந்து கொண்டாள். மெல்லப் பஞ்சினால் புண்களை ஒற்றியவாறே, ”மாவு நேற்றே தீர்ந்து விட்டது” என்றாள் மெல்லிய குரலில். தாயின் ஆதரவான அணைப்பில் குழந்தை விசும்பிக் கொண்டு இருந்தது.

சங்கரன் பழையபடி படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

”என்னிடமும் பால் இல்லை. மாதம் ஆகி விட்டதோ இல்லையோ.” காதில் விழாதவன் போல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

சில வினாடி மௌனம் நிலவியது.

”காலமேயிருந்து எனக்குக்கூட உடம்பு சரியில்லை. இடுப்பை ரொம்ப வலிக்கிறது.”

அவளுடைய வார்த்தைக்குப் பதில் அளிப்பது போல் லேசான குறட்டைச் சப்தம் கேட்டது.

காமாக்ஷி நீண்ட பெருமூச்செறிந்தாள். அவள் இதய வேதனை காற்றோடு கலந்தது.

குழந்தை, தாயின் வறண்ட மார்பைச் சுவைத்தவாறே தூங்கி விட்டது. காமாக்ஷியால் உட்கார முடியவில்லை. நெளிந்து கொடுத்தாள். சுற்றும் ஒரே காடாந்திர மௌனம் பரவி நின்றது. கைவிளக்கின் மங்கலான ஒளியிலே கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 12. சங்கரன் லேசாகக் குறட்டை விட்டுக் கொண்டு இருந்தான். சுற்றிலும் கால்மாடு தலைமாடாக, அவர்களைப் ‘புத்’ என்ற நரகத்தில் விழாமல் காப்பாற்ற வந்த செல்வங்கள் படுத்துக் கிடந்தனர்.

கோபு, லஷ்மி, கிருஷ்ணன், பஞ்சு, இதோ மடியில் ஜானு… இவர்கள்தான் அவர்களுடைய 10 வருஷ தாம்பத்திய வாழ்வின் சின்னங்கள். கால் மரத்துப் போகவே குழந்தையை மெல்லக் கீழே விட்டு விட்டுக் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள் காமாக்ஷி.

அவளால் உட்கார முடியவில்லை. புழுக்கமோ என்னவோ வியர்வை வெள்ளமாகப் பெருகிற்று. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். முற்றத்துக் கம்பத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே வானத்தை அன்னாந்து பார்த்தாள்.

பௌர்ணமி கழிந்து-ஐந்தாறு நாட்கள் இருக்கும். கீழ் வானில் சந்திரிகை தன் பால் ஒளியைப் பரப்பியவாறே ஊர்ந்து கொண்டு இருந்தது. ஆங்காங்கே வாரி இறைத்தாற் போல் நட்சத்திரங்கள் மினுமினுத்தன. கிணற்றங்கரை அருகிலிருந்த வேப்ப மரம் ஜிலுஜிலுவென்ற காற்றை வீசியது. பறவைகளின் சரசரவென்ற சப்தம்கூட இல்லை. அந்நிசி வேளையில் காமாக்ஷி கண்களை மூடியவாறு சிந்தனையில் லயித்துப் போனாள்.

கவிழ்ந்திருந்த இமைகளிலிருந்து கண்ணீர் முத்து முத்தாய் உருண்டோடலாயிற்று.

இன்னும் மாதம் கூடப் பூர்த்தியாகவில்லை. அதற்குள் ஏன் இப்படி… ஒரு வேளை… ஏதோ ஒரு விதமான திகில் அவள் மனதில் கவிழ்ந்து கொண்டது. பளீர் என இடுப்பை ஓர் வெட்டு வெட்டியது. வேதனை ஒவ்வொரு நரம்பையும் சுண்டி இழுத்தது. யாரையாவது ஆதரவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். சங்கரன் அயர்ந்த நித்திரையில் இருந்தான். ஓர் வினாடி அவள் உள்ளத்தில் கோபம் குமுறி எழுந்தது. ”காலையிலிருந்து துடிக்கிறேன். ஏன் என்றாவது கேட்டாரா? அவருக்கென்ன வந்தது? தன் சுகம், சௌகரியம் குறையாமல் நடந்தால் சரிதான். குழந்தைகளோடு அதுவும் வியாதிக்காரக் கைக் குழந்தையோடு அல்லல் படுகிறேனே ராவும் பகலும். துளியேனும் இரக்கம் உண்டா… இந்தப் புருஷர்களே…”

மறுவினாடியே அவள் உள்ளத்தில் பச்சாதாபம் மேலிட்டு நின்றது. ‘பாவம்!’ என் கஷ்டத்திற்கு அவர் என்ன செய்வார்! என்னைக் கல்யாணம் செய்து கொண்டுதான் என்ன சுகம்! நாய் மாதிரி காலையிலிருந்து இருட்டும்வரை ஓடியாடி உழைத்து ஓடாய்ப் போகிறார். என்ன சுகம்? தினமும் இதே பல்லவி, உடம்பு சரியாயில்லை. குழந்தைக்கு ஜுரம்… பிரசவம்… செலவு… வைத்தியம்… அவரைப் போலப் பொறுமைசாலியை அளித்த பகவான்…

மறுபடியும் பளீர் என ஒரு வலி. இம்முறை காமாக்ஷியால் தாங்க முடியவில்லை. வாய் விட்டு அரற்றினாள். மெல்ல எழுந்திருக்க முயன்றாள், கால்கள் நடுங்கின. கண் இருட்டியது. எங்கோ ஆகாயத்தில் லேசாகப் பறப்பது போல் ஓர் உணர்ச்சி.

மறுவினாடி தடால் என காமாக்ஷி நிலைப் படி அருகில் தலைகுப்புற வீழ்ந்தாள். போட்ட கூக்குரல் அவனை ஓர் உலுக்கு உலுக்கியது. போர்வையை உதறிவிட்டு எழுந்து ஓடி வந்தான். ”காமாக்ஷி, காமாக்ஷி.” காமாக்ஷி நினைவிழந்து கண்களைச் செருகியவாறே கிடந்தாள். கையும் காலும் சில்லிட்டு… சங்கரனால் அவளைத் தூக்க முடியவில்லை. மிக்க சிரமப்பட்டுப் படுக்கையில் கொண்டு விட்டான். அவன் தூக்கம் பறந்தோடிவிட்டது. முகத்தில் ஜலம் தெளித்து விசிறலானான்.

பத்து நிமிடம் கழிந்துதான் கண் திறந்தாள். அவனை எதிரே கண்டதும் கைகளைப் பிடித்துக் கொண்டு விசும்பலானாள். அவள் மெலிந்த கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் சங்கரன்.

அவளை என்ன கேட்பது? என்ன செய்ய வேண்டும்? ஏன் இப்படி? ஒன்றுமே புரியவில்லை. ஜந்து குழந்தைகளுக்குத் தந்தையாகியும் கூச்சம் அவனைப் பேச விடவில்லை. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,

”லேடி டாக்டரைக் கூட்டி வரட்டுமா?” என்றான்.

”பணத்திற்கு எங்கே போவது?”

அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?”

காமாக்ஷி பலமாகச் சத்தமிட்டாள். ”எனக்குப் பயமா இருக்கே.” அவள் விழிகள் பயங்கரமாகச் கழன்றன.

”சீச்சீ! அசடு! பயப்படாதே…” சங்கரன் பரபரப்புடன் எழுந்து நின்றான்.

விளக்கைத் தூண்டிவிட்டு, பர்ஸைக் கவிழ்த்தான். சில்லரை நாணயங்கள் நாற்புறமும் சிதறி ஓடின. அவற்றைத் திரட்டி ஜேபியில் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளியே நடந்தான்.

***

”கேஸ் ரொம்ப சீரியஸாக இருக்கிறது. இங்கே வீட்டில் வைத்துக் கொள்ள சவுகரியப் படாது, மிஸ்டர். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும். தெரிகிறதா? குழந்தை உயிருடன்தான் இருக்கிறது… ஆனால் தாயை ரொம்பக் கவனிக்க வேண்டும். ஒரு வேளை நாளையே குழந்தையை எடுத்துவிட வேண்டும். எதற்கும் காலையில் 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று தடதடவெனப் பொழிந்தாள் லேடி டாக்டர் லட்சுமி.

கைதிக் கூண்டிலிருந்து, ஜட்ஜின் வாயிலிருந்து என்ன தீர்ப்பு வருமோ எனப் பதைபதைக்கும் உள்ளத்துடன் அவரைப் பார்க்கும் மனிதனைப் போன்ற நிலையில் இருந்தான் சங்கரன். குழந்தைகள் மூலைக்கு ஒருவராய் மலர மலர விழித்துக் கொண்டு நின்றனர்.

”அப்பா, அம்மா ஏம்பா பேச மாட்டேன் என்கிறா?” என மழலையைக் கொட்டியவாறே கால்களைப் பிடித்துக் கொண்டாள் பஞ்சு. சற்றே பெரியவனான கிருஷ்ணனோ அரைத் தூக்கத்தில் விழித்துக் கொண்டதால் மூலையில் ராகம் இழுத்துக் கொண்டே இருந்தான். கோபுவும் லக்ஷ்மியும் வாய் திறவாது உட்கார்ந்து விட்டார்கள்.

டாக்டர் ஒர் இன்ஜக்‌ஷன் செய்தாள். காமாக்ஷியின் சலனமற்றுக் கிடந்த உடலில் சிறிது அசைவு ஏற்பட்டது. வலியால் புருவத்தைச் சுளித்துக் கொண்டாள்.

”இப்போ ரெஸ்டாய் தூங்குவதற்கு மருந்து கொடுத்து இருக்கிறேன். இந்த நர்ஸு இங்கே இருப்பாள். காலையில் சரியாக 8 மணிக்கு வந்து விடுங்கள்…” என்று கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் டாக்டர்.

”டாக்டர்…” என ஆரம்பித்தான்.

”பயப்படாதீங்க. நான் இருக்கேன்!” என தன் வெண்ணிறப் பற்களைக் காட்டினாள் நர்ஸ்.

”நமஸ்காரம். வரட்டுமா?” என்றாள் டாக்டர்.

சங்கரன் அவசரமாக ஜேபியில் இருந்த சில்லரை நாணயங்களை எடுத்து நீட்டினான்.

***

மணி 8 அடித்து விட்டது. சங்கரன் நடையின் வேகத்தை துரிதமாக்கினான். அவன் கையிலிருந்த பையின் கனம் வேகத்தை சற்றுத் தளர்த்தினாலும், சங்கரனின் மனமும் நினைவும் ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தன.

காமாக்ஷியை முன்னதாகவே டாக்ஸியில் பாட்டியுடன் அனுப்பி விட்டான். வீட்டில் குழந்தைகளைக் கவனித்து விட்டு, பிறகு மருந்துக்கும் பணத்திற்குமாக அலைந்து அலைந்து சுற்றிவரவே நேரமாகி விட்டது. அவள் எப்படி இருக்கிறாளோ?

பத்தாம் நம்பர் பஸ்ஸுக்காகத் தவம் நின்றான் சங்கரன். இரவெல்லாம் தூக்கமின்மையும் கவலையும் அவனைப் பத்து வருஷங்கள் வயது அதிகமானவன் போல் தோற்றுவித்தன.

களுக் எனச் சிரிக்கும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

இரு சிறு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டு நின்று இருந்தார்கள். குதூகலம், இளமையின் எக்களிப்பு, நாகரிகத்தின் உச்சத்திலே திளைத்துக் கொண்டிருந்த அந்த யுவதிகளைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. நகத்தைக் கடிப்பதும், மையிட்ட விழிகளைச் சுழற்றுவதும், கலகலவென நகைப்பதுமாய் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர்.

சங்கரன் ஓரக் கண்ணால் அவர்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான்.

மஞ்சள் வாயிலில் சிவப்புப் பூக்கள் அச்சிடப்பட்ட புடவையை ஸ்டைலாக உடுத்தி தலைப்பை நீளமாக விட்டிருந்தாள். புதிய மோஸ்தர் பாடியும் சோளி ரவிக்கையும் அவளுடைய அங்க சௌந்தர்யத்தை எடுத்துக் காட்டின. விழி நிறைய மை. பவுடர் வாசனை ஸ்டாண்டில் நிற்பவர்கள் மூக்கைத் துளைத்தது. இன்னொரு பெண் பச்சை நிறக் கரைப்புடவையைத் தலைப்பை மடித்துக் கட்டி இருந்தாள். ஒன்று இரண்டு ஆபரணங்களும், நாகரிக அலங்காரமும், இருவரையும் அழகிகளாக எடுத்துக் காட்டின.

பெண்… சங்கரனின் மனத் திரையில் காமாக்ஷியின் உருவம் தோன்றிற்று.

காமாக்ஷி நல்ல உயரம். வாளிப்பான தேகம். நல்ல சூழ்நிலையில் வளர்ந்ததினால் வியாதி, பலஹீனம் இல்லாமல் மதமதவென்று வளர்ந்திருந்தாள்.

”மதமதவென்று வளர்த்தியைப் பாரு! தீட்டு தீட்டு என்ற நடையையும் பலத்தையும் பார்த்தாலே பயமாயிருக்குடா” என்று அவன் விவாகத்தின் போது யாரோகூடச் சொன்னார்கள்.

பட்டணத்தின் நோஞ்சலான, இளைத்துக் கன்னம் ஒட்டிய பெண்களை அலங்காரப் பொம்மைகளாக நினைத்து வெறுத்ததால்தான், காமாக்ஷியை விவாகம் செய்து கொண்டான்.

மாநிறமானாலும் களையான முகம்; பாவம் நிறைந்த குறுகுறுத்த விழிகள். எப்பொழுதும் சோர்வே தட்டாத முறுவல் நெளிந்தோடும் முக விலாசம். எந்த உழைப்பிற்கும் பின்வாங்காத சுறுசுறுப்புடன், அவள், வாழ்வில் கரும்பைப் போன்ற இனிய சுவையுடன், தென்றலைப் போன்ற சலசலக்கும் இனிமையுடன், அவனுக்கு மலர்ச்சியூட்ட, அவன் வாழவிலே விளக்கேற்றி வைத்தொளி பரப்ப 12 வருஷங்களுக்கு முன் அவன் கைப் பிடித்தாள்.

ஆனால்… இன்று… காமாக்ஷி… இளைத்து உலர்ந்து எலும்பெடுத்து, ரத்தமற்ற சோகையால் வெளுத்து… ஏன்? எதனால்?…

அவளை விவாகம் செய்து கொண்டு அவன் வாழ்க்கை இன்பத்தை அனுபவித்து விட்டான். அவனுக்காகத் தன்னையே தியாகம் செய்து உழைத்து ஓடாகிப் போன அவள் இன்று சக்கையாகி விட்டாள். அவனைக் கைப் பிடித்த அவள் என்ன சுகம் கண்டாள்? குறைந்த வருமானம், போஷாக்கு இல்லாமல், இரண்டு வருடத்திற்கு ஓர் குழந்தை… இடையிலே இரண்டு குறை பிரசவம்… வியாதி பிடித்த குழந்தைகளைப் பராமரிக்கும் சக்திக்கு மீறிய வறுமை.

இள வயதில் வறுமையில் அவள் உழன்ற நாட்களில் வாய் திறந்து ஏதாவது கேட்டிருக்கிறாளா? இளமையின் முறுக்குடன் வாழ்வில் பிரவேசித்தவள். தாய்மைச் சுமை பிரதி வருஷமும் ஏற, சொல்லொணா வேதனை விழிகளில் சுடர்விட, இதயத்தின் எண்ணங்கள் குமுற, களைத்து… துவண்டு துடிக்கும் இன்றும்தான் அவள் வாய் திறந்து ஏதாவது கேட்கிறாளா!

சங்கரன் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. வெடித்துக் கொண்டு வரும் துயரத்தை ‘‘பகவானே!…” என்ற பெருமூச்சுடன் வெளியிட்டவாறே பஸ்ஸுக்காக முண்டி அடித்துக் கொண்டு ஓடினான்.

***

டாக்டர் லஷ்மி தயாராக ஆபரேஷன் கவுனை அணிந்து கொண்டு ஸ்டவ் எதிரே நின்றாள். நர்ஸ் பாக்கியம் ஆயுதங்களை கொதிக்க வைத்துப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். டாக்டர் லஷ்மி அறையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாய் உலாவாலானாள். அவளுடைய நிச்சலனமான முகத்தில் சிந்தனை பரவி நின்றது.

”ஏ பாக்கியம்! உனக்கு என்ன தோணுது?”

பாக்கியம் ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் காமாக்ஷியை அவநம்பிக்கையோடு ஏற இறங்கப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினாள்.

டாக்டர், காமாக்ஷியின் நாடியைப் பிடித்துப் பார்த்தாள். விழிப்பும் தூக்கமும் அற்ற நிலையில் காமாக்ஷி புரண்டு கொடுத்தாள். டாக்டரைக் கண்டதும் உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றாள்.

அவள் அருகில் குனிந்து, ”உனக்கு என்னம்மா வேணும்?” என்றாள் டாக்டர்.

”ஒரு முறை அவரை…”

”யாரை அம்மா? பாட்டியைக் கூப்பிடட்டுமா?”

காமாக்ஷி வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

”உன் புருஷரையா?” டாக்டர் நர்ஸிடம் ஜாடை காட்டினாள்.

”ஊம். குழந்தைகளை ஒரு தரம்…” மேலே அவளால் பேச முடியவில்லை. பலமான வலி அழுத்தியது. சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். டாக்டர் லட்சுமி அன்புடன் அவள் தலையைக் கோதியவாறே, ”பயப்படாதே, அம்மா. எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். இதோ கை நீட்டு, பார்க்கலாம்” என்றாள்.

ரத்தமற்ற எலும்பெடுத்த கையிலே ஊசியை ஏற்றினாள் டாக்டர். உடல் முழுமையும் ஏதோ விறுவிறுவென ஏறுவது போல் இருந்தது காமுவுக்கு. அவள் விழிகள் வாயிற்படியை வட்டமிட்டன.

நர்ஸுடன் உள்ளே நுழைந்த சங்கரனைக் கண்டதும், அவள் முகம் மலர்ந்ததையும், உதடுகளில் முறுவல் நெளிந்தோடியதையும் கண்ட டாக்டர் லட்சுமி மனதிற்குள் வியந்து கொண்டாள்.

‘அடி அசட்டுப் பெண்ணே, உனக்குத்தான் உன்னை இந்தப்பாடு படுத்தி வைக்கும் புருஷன் பேரில் எத்தனை பிரியம்! எவ்வளவு அன்பு!’

”பயப்படாதே காமு… நான் இருக்கிறேன்!” என்றான் சங்கரன். அவன் குரல் நடுங்கியது. கை கால்கள் உதறலெடுத்தன.

”குழந்தைகள்… ஜானு… அவளை என்ன பண்ணி…” மேலே பேச முடியாது குளோரபாரத்தின் நெடி மெல்ல ஏறியது. காமாக்ஷிக்குத் தன்னை யாரோ அணு அணுவாக அந்தகாரத்தில் இழுத்துச் செல்லுவது போல் தோன்றியது. ஒரே இருட்டு. கண்களை விழிக்க முயன்றாள்… இயலவில்லை. கை காலை அசைக்க முடியவில்லை. மனதில் திகில் சூழ்ந்து கொண்டது குழுந்தைகள் ஒவ்வொருவராக அவள் நினைவில் தோன்றினர்.

”பாவம்! குழந்தைகள் என்ன திண்டாடுகிறார்களோ! கோபு எச்சுவாவது பரவாயில்லை… ஜானு… பால் மனம் மாறாத குழந்தை… என்ன செய்வாள்? சிரங்கு அரிக்கத் துடித்தும் போவாளே!… இவருக்கு ஒன்றுமே பழக்கமில்லையே?…. பகவானே! குழந்தை… வீறிட்டால்…”

எல்லாம் மறைந்துவிட்டது. உடலை, விரலைக் கூட அசைக்க முடியவில்லை. காமாக்ஷி நினைவிழந்து விட்டாள்.

சங்கரன் வெளியே வந்தான். கதவு தாழிடப்பட்டது. வெளி ஹாலில் நிசப்தம் பரவி நின்றது. அவனைப் போன்று ஒரிருவர் மோட்டு வளையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர். சங்கரன் பெஞ்சில் சாய்ந்து கொண்டான். குறுக்கும் நெடுக்கும் டக்டக் என பூட்ஸ் ஒலி எழுப்ப நடை போடும் நர்ஸுகளையும், பரபரப்புடன் அலையும் வார்ட் பையன்களையும் பார்த்து அலுத்த சங்கரன் கண்களை மூடிக் கொண்டான். மருந்து வாசனை நெடி அவன் வயிற்றைக் கலக்கியது.

உள்ளே ஒலிக்கும் சிறு சப்தம் கூட அவன் சிந்தனையை கலைத்தது. ஆயுதங்கள் வைக்கப்படும் ஓசை, தடதடவென்று பைப் தண்ணீர் கொட்டும் சப்தத்தைக்கூடக் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். ஒவ்வொரு வினாடியும் மெள்ள மெள்ள ஊர்வது போலத் தோன்றியது மனதிற்கு.

மிகுந்த அயர்வால் சங்கரன் இமைகளைத் தூக்கம் அழுத்தியது. பெஞ்சில் சாய்ந்தவாறே கண் அயர்ந்து விட்டான்.

விழிப்பிலே, மனம் விவரமறிந்திருக்கும் நிலையிலே ஓடிய சிந்தனைகள் தொடர்ந்து எழுந்தன. பஸ் ஸ்டாண்டில் கண்ட பெண்களின் யௌவனப் படபடப்பும் குதூகலமும் உற்சாகமும் காமாட்சியிடமும் நிறைந்திருந்ததே, அதெல்லாம் எங்கே? அதற்குத்தான் முன்பே பதில் சொல்லியாகி விட்டதே. அவன் சேவையில் அவ்வளவையும் செலவழித்து விட்டாள். அவன் அதையெல்லாம் அனுபவித்துத் தீர்த்து விட்டான். சீ! நீ என்ன மனிதன். அவளைப் பற்றி, பலாபலன்களைப் பற்றி நினைவேயில்லாமல் நிலை கண் குருடனாக வாழ்ந்தாய்! உனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பத்திரப்படுத்தி, அளவோடு பயன்படுத்தி, நீடித்து நிலைத்து நிற்கச் செய்து கொள்ள வேண்டு மென்ற நினைவே இல்லாமல் பாழாக்கிவிட்டாய்… கரும்பை வேருடன் பிடுங்கி விட்டாய்…

இல்லை… இல்லை… இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்… அவள் இந்தப் பூட்டுக்குத் தப்பி வந்து விடுவாள். அவள் உடலில் ரத்தம் ஊற, பலம் ஏற, டானிக்குகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். குடும்ப வேலையில் அவள் சக்தி விரயமாகி விடாமல் பாதுகாக்க வழிகோல வேண்டும்…

திடீர் எனக் குழந்தை வீறிட்டது. சங்கரன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். காமாக்ஷியிருந்த அறைக்குள் கசமுசவென்று பேச்சு. கதவருகில் சென்று நின்றான்.

women and child

குழந்தை மறுபடியும் வீறிட்டது. ”ஆம்புளைப் பிள்ளை!” என்று நர்ஸ் கூறியது காதில் விழுந்தது. சங்கரன் முகம் விரிந்தது. ‘‘அப்பாடா!” என்று பெருமூச்செறிந்தான். நிச்சயம் பிள்ளையாருக்குப் பத்துக் காய் சூறை போட வேண்டும். இந்தக் கண்டத்திற்குத் தப்பி விட்டாள்! இனிமேல்… இனிமேல் அவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா! நான் பெரிய முட்டாள்! பாவம்!.. அவளை ரொம்பக் கஷ்டப்படுத்தி விட்டேன்.

மறுவினாடி கதவு திறக்கப்பட்டது. அவனைத் தள்ளிக் கொண்டு நர்ஸ் வெளியே ஓடினாள். அவள் முகத்தில் ஏன் அத்தனை பரபரப்பும் கலவரமும்!

குழப்பத்துடன் அறைக்குள் எட்டிப் பார்த்தான். ஆபரேஷன் மேஜைமேல் காமாக்ஷி முகம் வெளிறி, கண்மூடிக்கிடந்தாள். லேடி டாக்டர் மும்முரமாக ஏதா இஞ்சக்‌ஷன் ஏற்றிக் கொண்டிருந்தாள். குழந்தை வீறிட்டு அலறிக் கொண்டேயிருக்கிறது.

அவனுக்குக் காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு பெரிய பயம் அவனைப் பிடித்து நெருக்கி அழுத்தியது. மூச்சு முட்டுவது போலிருந்தது. நர்ஸ் அவனைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் நாலைந்து டாக்டர்கள் வந்து உள்ளே போனார்கள்.

சங்கரன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். ” டாக்டர்… இதைக் கொஞ்சம் பாருங்கள்…” என்று உள்ளே வந்த ஒரு டாக்டரிடம் சொன்னாள் டாக்டர் லஷ்மி. ”ஹோப்லஸ்கேஸ். சீரியஸ் ஹெமரேஜ் (ரத்த நஷ்டம்). நாம் என் செய்ய முடியும்?” என்றாள் தொடர்ந்து.

புதிய டாக்டர் நாடியைப் பார்த்து விட்டு, ” நம்முடைய உதவிக்கும் சக்திக்கும் மீறிவிட்டது!” என்று காமாட்சியின் கையை விட்டாள். கை தொப்பென்று கீழே விழுந்தது.

சங்கரனை யாரோ மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. ”ஐயையோ, டாக்டர்!” என்று வீறிட்டான்.

குழந்தையும் வீறிட்டது. ”என்னையும்தான் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய் விட்டாள்!” என்று சொல்லி அலறியது போல இருந்தது அதன் வீறிடல்.

(1950)

(‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ பாகம் மூன்று புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை).

Image courtesy:

http://www.thoguppukal.in

http://www.sweet-sprout.com

http://fineartamerica.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

எம்.ஏ.சுசீலா

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 33

எம்.ஏ.சுசீலா 

M A SUSILA-CBE-13

சிறுகதை, பெண்ணிய ஆய்வு எனும் இருதளங்களிலும் இயங்கி வரும் இவர் 1949ல் காரைக்குடியில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அதே பாத்திமா கல்லூரியில் இடையே இரண்டாண்டு காலம் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் 1979ல் எழுதிய முதல் சிறுகதையே ‘கல்கி’ வார இதழில் முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் இவருடைய 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய சில கதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ‘கண் திறந்திட வேண்டும்’ என்ற சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளிவடிவம் பெற்றிருக்கிறது. சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டவர். 150க்கும் மேற்பட்ட வானொலி சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகும் எழுத்தாளுமை இவருடையது. தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஊர்மிளை 

sita-raji-chacko

ருள் பிரியாத புலர் காலைப் பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன்அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்று கொண்டிருந்தது. சீதையின் வரவைஎதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு லட்சுமணன்.

“அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்!இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை. நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும்வேலைப் பளுவோடுமே இருந்தார்…’’

‘‘அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடைசொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன…அவர்தான் நேற்று மாலையேவிடை கொடுத்துவிட்டாரே…நாம் கிளம்பலாம் வா…” என்றபடி கலகலப்பான உற்சாகமானமனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.

அந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும்நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித்தளும்பிக் கொண்டிருக்கிறது. அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித்தடுமாறும் லட்சுமணன்,“பார்த்து ஏறுங்கள் அண்ணி” என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.

மீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒருதருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பானபாவனைகளுடன் ஏதோ ஏற்கனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறி,சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத லட்சுமணன், லேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட லேசான ஓர் ஆறுதலின் நிழல்அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டேதனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை..!ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோஅவள்? நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடுஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.

“அட…ஊர்மிளையா? பார்த்தாயா…உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்றுஎனக்குத் தோன்றவே இல்லை! இந்த லட்சுமணனுக்கும் கூடத்தான் அதுதோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? அது இருக்கட்டும்… நீ இப்போதுவந்திருப்பது எனக்காகவோ…இல்லையென்றால் இனிமேலும் லட்சுமணனை விட்டுப்பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா? உண்மையைச் சொல்…”

குறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.

ஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன்இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போதுஉணர்வாகியிருக்கவில்லை.

“ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை…அதில் தவழும் அலையின் வீச்சுக்களைஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால்,நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாகசாத்தியமாகிவிடுமா என்ன? கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது.அவர்கள் பெற்ற அந்த வரம்..! ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது.அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரச கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும்.ராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும்இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்குவாய்த்திருக்குமா என்ன?”

வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன்பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள்.இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம்அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.

“ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் லட்சுமணா! அண்ணன் மீது என்னதான் பாசம்என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது? அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெறவேண்டும் என்று கூட உனக்குத் தோன்றவில்லை இல்லையா? வன வாசத்தில்இதைப் பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்?” என்று செல்லமாக அவனைக்கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.

“பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும்இரவுகளும்..! எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை..? அசோகவனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன..! ஆனால், அத்தனை நாளும் இவன்தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக்கொள்கிறார்களாம்..! பேசுபவர்களுக்கு என்ன? தங்களுக்கென்று வந்தால்தானே எந்தநோவின் வலியும் தெரியும்!”

“ஊர்…ஊர்…ஊர்… எப்போதும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப் பற்றியகவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக்காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா..! நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவேஇல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்…”

வறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.

“சரி விடு ஊர்மிளை…அதற்காக நீ லட்சுமணனை வெறுத்துவிடாதே.அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன்மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன.பர்ணசாலை வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்தஅந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன்நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன்தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடிஅவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்தஉண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான்.சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன்மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே…”

Lakshmana 2அந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. “போதும்…போதும்…இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச்சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும்காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாகஅவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோஎனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை.”

அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்துக்கொண்டிருந்த சீதை, “சஞ்சலமானசூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும்அனுபவங்களும் பின்னாளில்அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப்பார்த்தாயா ஊர்மிளா…” என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்தஆரம்பித்துவிடுகிறாள்.

ராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள்கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வரவேண்டும் என்பதே அவளது கனவாக இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும்மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதேஇடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது ராமனிடம் அவள்பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூடமகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமானவிருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனைஎண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.

அந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு லட்சுமணனின் உள்ளச்சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும்தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின்வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒருபுதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சைஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவேஅவனுக்குப்படுகிறது.

நேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.

***

நினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல்இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று…அந்தக் கணம்…ராமன் தந்தஅதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை.நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள்வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாளஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மௌனச் சிலை போல அண்ணனின் முன்புபாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.

lakshmana 1“இந்தக் காரியத்தை நான் என் உள் நெஞ்சின் ஒப்புதலோடு செய்துகொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி” தழுதழுத்துத்தள்ளாடும் ராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல்வெடித்துச் சிதறுகிறான் லட்சுமணன்.

“மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள்நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லைலட்சுமணா! ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள்அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன்ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும்வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்.”

மறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சிலவார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட, ‘‘தங்களின் ஆணையை நாளைகட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா…” என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டுச் ‘சட்’டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்துச்சேர்கிறான் லட்சுமணன்.

உணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின்நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறுகேட்கிறாள், “இன்று உங்கள் அண்ணா…என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றிவைத்திருக்கிறார்?”

இந்தக் கேள்வி லட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும்அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்கமுடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறுமகிழ்ச்சியும்கூட! திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப் பிரிந்துபோய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும்தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்குலேசான ஆறுதலை அளிக்கிறது.

ஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக்கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின்ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக்கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.

ஒரே கணம் அதிர்ந்து போகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.

“அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப்போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள்அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..?”

“அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப்பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்.”

“போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன? அதை மட்டும்விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை..? என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின்மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத்துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன? சரி… அதெல்லாம்போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டுமுறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது?”

“இதைப் பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளைஅண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது? அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படிஎதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது.”

“அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்…”

“வேறு வழி?”

“வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொருநெருக்குதல் நேரும்போது…சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களேமாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்..?”

‘‘அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை…” ஏதோ அவசர வேலையிருப்பது போலஅவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளேநகர்ந்து போகிறாள் ஊர்மிளை.

***

தேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலைஅடுக்குகளும்குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய்மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள்தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின்கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்து போன்ற லாகவத்துடன் கால் தூக்கிஅநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்…

“இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா லட்சுமணா?”

சீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி தொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் லட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க…“அப்படியே செய்யலாம் அண்ணி” என்று மட்டுமே விடையளிக்கிறான்.

ஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல்பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்றுபோய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த லட்சுமணன்அவர்களின் அருகே செல்கிறான்.

sita“அந்த மானைப் பார்த்தாயா தம்பி..? முன்பு வந்த பொன்மானைப் போலவேஇருக்கிறதல்லவா? பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும்உன்னை அனுப்பிவிட மாட்டேன்.”

“அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கேஅருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ளமான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்.”

“என்ன…வால்மீகி மாமுனியா? ஊர்மிளை! நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன?”

“தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்…இது…அண்ணனின் விருப்பம்…”

எந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத்தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச்சொல்லி முடித்தபோது லட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.

நச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போலவினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமேநிதானத்துடன் நிமிர்கிறாள்.

“இது…இப்படி…நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான்ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம்இப்போது புரிகிறது! உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின்அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா லட்சுமணா?”

நடைப்பிணமாய் தளர்ந்து துவண்டபடி…முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் லட்சுமணன்.

குடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்…

“இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக் கொள்ளலாம்…” என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.

கழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்டபரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத்தொடங்கிய லட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளைஉடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கிவருகிறாள்.

“நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாகஇங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவனது எந்தமறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடிவால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.

தேர்த்தட்டில் லட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்தமாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ளமுயன்று கொண்டிருந்தான்.

***

Image Courtesy:

http://www.krishnasmercy.org/

http://imagination-chariot.blogspot.in/

http://solusipse.edublogs.org/

http://images.fineartamerica.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 32

கீதா பென்னட் 

Image

சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் மகள். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவர். அமெரிக்காவில் வசிக்கிறார். உலகின் பல பாகங்களில் இசை நிகழ்ச்சிகளும் இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிடமிருந்து தன் இசைக்காக விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல பிரபல பத்திரிகைகளில் இவருடைய நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘வேலைக்குப் போகும் மருமகள்’ என்ற இவருடைய சிறுகதை இலக்கிய சிந்தனை விருது பெற்றிருக்கிறது. இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய ‘ஆதார சுருதி’ சிறுகதைத் தொகுப்பு கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 

***

அதையும் தாண்டி புனிதமானது

பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டுக்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள்.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அம்பயர் கைகள் இரண்டையுமே மேலே தூக்கி, ‘அவுட்’ கொடுக்க, ரசிகர்களின் கூச்சல் காதைப் பிளந்தது. கேமரா மெல்ல நகர்ந்து சில சந்தோஷ முகங்களைக் காட்டிவிட்டு, இரண்டு அரை நிஜார் பெண்களின் வெள்ளை வெளேர் ஆஸ்திரேலியக் கால்களில் போய்த் தயங்கி நின்றது.

ஜானகியை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு, ‘ம்…’ என்று கனைத்தாள்.

‘‘தாங்க் காட்! அம்பயர் இப்பவாவது அவுட் கொடுத்தானே!’’ என்ற சீதாதான் முதலில் அவளைப் பார்த்தாள். ‘‘அம்மா யார் வந்திருக் கான்னு வந்து பாரேன்…’’

சீதாவின் குரல் கேட்டு அம்மா அடுக்களையிலிருந்து வெளியே வர, ஈஸிசேரில் சாய்ந்திருந்த அப்பாவும் ஜானகியை வியப்புடன் பார்த்தார். ‘‘வா கொழந்தே’’என்றார்.

‘‘அட ஜானகியா? வா, வா. என்ன இப்படித் திடுதிப்புனு லெட்டர் கூடப் போடாம வந்து நிக்கறே? மாப்பிள்ளை கூட வரலையா?’’ அம்மாவின் முகத்தில் இப்போது தெரியும் அப்பட்டமான மகிழ்ச்சி, இன்னும் சில விநாடிகளில் அழிந்துவிடப் போகிறது. ‘‘என்னடி, மொகமே சொரத்தாயில்லை? குளிச்சிட்டு இருக்கியோன்னோ? சாதாரணமாக இப்படி வர மாட்டியே? சண்டை போட்டுட்டு வந்திருக்கியா?’’ அம்மா மறுபடி கேட்டாள்.

‘‘எனக்குத் தெரியும், நீ ஏன் இங்கே வந்துட்டேன்னு. அத்திம்பேர் மேட்ச் பார்த்திட்டு உட்கார்ந்திருப்பார். நீ உன்னைக் கவனிக்கலைன்னு கோச்சிட்டு ஓடி வந்திருப்பே. மேட்ச் முடியற வரைக்கும் இங்கதானே டேரா’’சீதா சீண்டினாள்.

‘‘மேட்ச் முடியற வரைக்கும் மட்டும் இல்லை. இனிமே என்னிக்குமே இங்கதான் டேரா.’’

Image

ஜானகி, சீதாவுக்கு பதில் சொல்ல, அம்மா திகைத்து நிற்க, அப்பாதான்  ‘‘மொதல்லே அவளை உள்ளே அழைச்சிட்டுப் போய் வயத்துக்கு ஏதாவது ஆகாரம் கொடு. கொழந்தை பசியாயிருப்பாள்’’ என்று அம்மாவிடம் சொன்னார்.

அம்மா தளிகை உள்ளுக்கு ஜானகியை அழைத்துப் போய் தோசை வார்த்துப் போட்டாள். காப்பியைக் கலந்து கொடுக்கும் போது மறுபடி கேட்டாள்.

‘‘அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கியா என்ன? இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைக்கணும்னு ஊரே அவரைக் கொண்டாடறது. அப்படி இருக்கும்போது நீ நிரந்தரமா இங்க வந்துட்டேன்னு சொல்லித் தலையிலே கல்லைத் தூக்கிப் போடறியேடி? நாலெழுத்துப் படிச்சுட்டா இப்படித்தான் திமிரெடுத்து அலையணுமா?’’

‘‘அம்மா ப்ளீஸ்… கொஞ்சம் தொண தொணக்காதேயேன். நான் உன் வயித்தில பொறந்த பொண்ணு. எது செஞ்சாலும் யோசிக்காத செய்யமாட்டேன்னு உனக்குத் தெரியாதா? நான் விவரமா எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன். இப்ப கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.’’

அம்மா ஒன்றும் பேசாமல் புடவைத் தலைப்பால் கண்களை மட்டும் துடைத்துக் கொண்டாள். ஜானகி மாடிக்குப் போய் அறைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

ஊரே மெச்சுகிற மாப்பிள்ளை! அம்மா பாராட்டுகிறாள். உண்மைதான். அப்பாவின் மீது அவளுக்கிருக்கும் பக்தியும் அன்பும் ராகவனுக்கும் இருக்கிறது என்றுதான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது.

அப்பா தஞ்சாவூர் அருகே இருக்கும் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். பண வரவு எதிர்பார்க்காது தமிழுக்குத் தொண்டு செய்பவர் என்றால் அவர்தான் முன்னணியில் நிற்பார். இவர் பாடம் சொல்லித் தரும் நேர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு ராகவன் வார இறுதிகளில் மதுரைக்கு அவரை வரவழைத்தான்.

ராகவன், மீனாட்சி சுந்தரம் என்று இரண்டு பேரோடு ஆரம்பித்த தமிழ் வகுப்பு, சில மாதங்களிலேயே குபுகுபுவென முப்பது பேராக வளர்ந்துவிட்டது. கம்பராமாயணம், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருப்புகழ், காவடிச்சிந்து என்று வகுப்பு எடுத்து, பல மதுரை இளைஞர்களிடையே தமிழ் வெறியை வளர்த்தார். ரயில் செலவுக்கு மட்டும் ராகவன் பணம் கொடுத்துவிடுவான். அதற்கு மேல் ஒரு பைசா வரவு இல்லை.

அப்பாவோடு அடிக்கடி ஜானகியும் மதுரை போய் வந்ததில் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அதை அப்பாவும் நோக்கினார். பைசா குறைச்சலில்லாமல் வரதட்சணை கொடுத்து அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

Image

ஆனால், ஏனோ தெரியவில்லை. அவர்கள் திருமணம் ஆகி ஒருமுறைதான் அப்பா வகுப்பு எடுக்க மதுரை வந்தார். ஜானகி மட்டும் அடிக்கடி தஞ்சாவூர் போவாள். ராகவன் எப்போதாவது கூட வருவான். கல்யாணம் ஆன பின் மாமனார் மாப்பிள்ளை உறவால் அவர்கள் நட்பு இன்னும் விரியும் என்று நினைத்தவளுக்கு இருவரிடையும் ஒரு திரை விழுந்துவிட்டது புரிந்தது.

‘‘ஒருவேளை மாப்பிளையானதுக்கு அப்புறம் முன் மாதிரி ஃப்ரீயாப் பழக முடியாமத் தவிக்கிறார் போல. எப்படியிருந்தாலும் மொதல்லே எனக்கு அவர் ஆசான். அப்புறம்தான் மாமனார்’’என்றான்.

அதற்கப்புறம் இரண்டு வருடங்களில் அப்பா ரிடையராகிச் சென்னை வந்துவிட்டார். வருடத்துக்கு ஒருமுறை ஜானகி அவரை வந்து பார்ப்பாள். நான்கு நாட்கள் தங்குவாள். அவ்வளவுதான்.
ஆனால், இந்த முறை?

அன்றிரவு எல்லோரும் படுத்துக் கொண்டாகி விட்டது. ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை. ஊரடங்கிவிட்டது. அம்மாவின் குரல் அவள் தலைமாட்டருகே ஒலித்தது. ‘‘ஜானகி, அப்பா உன்னை மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறார்’’.

அவளும் சத்தம் போடாமல் எழுந்து மேலே போனாள்.

அங்கே ஓரிரு நிமிடங்கள் ஏதும் பேச்சு இல்லை. அம்மாதான் முதலில் திருவாய் மலர்ந்தாள்.

‘‘பெர்மனென்டா இங்கியே வந்துட்டேன்னு இப்படித் திடீர்னு தலையிலே கல்லைத் தூக்கிப் போடறேயேடி ஜானகி…’’

‘‘ச்… அழாதே. ஜானகியைப் பேச விடு’’சொன்ன அப்பாவின் முகத்தையே ஓரிரு கணங்கள் உற்று நோக்கினாள் ஜானகி.

அவருக்குத் தெரியாதா நடந்தது என்ன என்று? இருந்தாலும் அவர் முகத்திலிருந்து என்றைக்குத்தான் அவர் உணர்ச்சிகளை அறிய முடிந்திருக்கிறது?

‘‘அம்மா, காரணம் ரொம்ப சிம்பிள்.ஊரே மெச்சற உன் மாப்பிள்ளை ஒரு ஃப்ராட். அப்படிப்பட்டவரோடு என்னால குடித்தனம் பண்ண முடியாது.’’

‘‘ஏன்? அப்படி என்ன ஃப்ராட் பண்ணிட்டாராம்?’’ அம்மா அவசரப்பட்டாள்.

‘‘அப்பாகிட்டே மதுரையிலே படிச்சாரே மீனாட்சி சுந்தரம்னு, ஞாபகம் இருக்கா?’’

‘‘ஆமாம். செக்கச் செவேல்னு, வக்கீல் புதுத்தெருவிலே இருந்தாரே? சமீபத்திலே கான்ஸர்லே போய்ட்டார் இல்லியோ?’’

‘‘ஆமாம். அவர்தாம்மா. போறதுக்கு ரெண்டு நாள் முன்னாலே என்னைப் பார்க்கணும்னு சொல்லியனுப்பினார். ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் ‘ஓ’ன்னு அழுதுட்டார்.’’

‘‘என்னடி ஜானகி? இந்தக் கதையெல்லாம் எதுக்கு?’’ அம்மா கேட்க, ஜானகி அவளைக் கையமர்த்தினாள்.

ஆஸ்பத்திரியில் உயிருக்குப் பேராடிக் கொண்டிருக்கும் ஒருவரது வாக்குமூலம்தான் ஜானகியை ராகவனைவிட்டு வரச் செய்தது, மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.

‘‘உங்கப்பா எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி ஜானகி. அவர் பத்து வருஷமா வெய்யில், மழை, பனி பார்க்காமே ரயில் பயணம் பண்ணி எங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார்.

ஒருநாள் க்ளாஸ் முடிஞ்சு எங்கிட்டே வந்து தனியாப் பேசணும்னு சொன்னார். ‘உங்ககிட்ட கேட்கிறதுக்கு வெட்கமா இருக்கு மீனாட்சி சுந்தரம். ராகவன் ஏதோ அவசரம்னு போயிட்டார். அதனாலே வழக்கம் போல ரயில் சார்ஜ் கொடுக்கலை. என்கிட்டே சில்லறை பத்தாது. அடுத்த முறை கொடுத்திடறேன்’என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். ‘ஏன் சார்? ராகவன் உங்களுக்கு ரயில் சார்ஜ் மட்டும்தான் கொடுப்பாரா?’ என்று கேட்டேன்.

‘ஆமாம். பத்து வருஷமா ஒருமுறை கூடத் தவறியதில்லை. இன்னிக்கு என்ன அவசரமோ’என்றார்.

‘என்ன சார் இது அநியாயம்? நாங்க இருபத்து அஞ்சுபேரும் இத்தனை வருஷமா க்ளாஸுக்கு முப்பது ரூபாய்னு ராகவன்கிட்டே கொடுத்திட்டு வரோமே, உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டேன்.

உன் அப்பா அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டார். ‘அப்படியா?’ என்றார். அவ்வளவுதான்.

என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘வாரம் எழுநூத்து அம்பது ரூபாய்னா, மாசம் மூவாயிரம் ரூபாய். பத்து வருஷத்துக்கு எவ்வளவு ஆச்சு? அம்மாடியோவ்! அத்தனையையும் ராகவன் தன் பையிலே போட்டுக்கிட்டு, ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி தன் பாக்கெட்டிலிருந்து ரயில் சத்தம் கொடுக்கிற மாதிரி பாவனை பண்ணிக்கிட்டு இத்தனை வருஷம் உங்களை மட்டும் இல்லை சார். எங்களையும் இல்லே ஏமாத்திக்கிட்டிருக்கான்? அவனை மொதல்லே போலீஸிலே சொல்லணும்.’

துடித்த என்னைத் தடுத்தார் உன் அப்பா. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அப்புறம் இது பத்தி யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு என்கிட்டே கேட்டுக்கிட்டார். அவனைத் திட்டலை. இப்படி நல்லவனா நடிச்சு முதுகிலே குத்திட்டியேடான்னு இன்னிவரைக்கும் அவனைக் கேட்கலை. அவர் என்ன மனுஷரா, இல்லை மகானா? அது மாதிரி மன்னிக்கிற குணம் எவ்வளவு உசத்தி? அவருக்கு மகளாப் பொறக்க நீ எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்? நான் சாகறதுக்குள்ளே நடந்ததை உனக்குச் சொல்லணும்னு துடிச்சேன்.”

சமீபத்தில் இறந்து போன மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை ஜானகி மூச்சு விடாமல் ஒப்பித்தாள்.

‘‘இப்ப சொல்லும்மா. நான் தெய்வமா நினைக்கிற அப்பாவை ஏமாத்தினவரோடு என்னாலே எப்படிம்மா வாழ முடியும்?’’

அம்மா அதற்குப் பதில் சொல்லவில்லை. அப்பா இப்போது நிதானமாகப் பேசினார்.

‘‘உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போது இந்த விஷயம் எனக்குத் தெரியாதும்மா. நான் ஏதோ இலவசமாத் தமிழ் சேவை செய்யறேன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, உண்மை தெரிஞ்சப்போ கதிகலங்கிட்டுது. சரி. ராகவனைக் கேட்கிறதாலே என்ன நடக்கும்னு யோசிச்சேன். இன்னிக்குக் கிரிக்கெட் மேட்சிலே பார்த்தோமே, அம்பயர் கொடுக்கும் தீர்ப்பைத்தானே நாம் ஏத்துக்க வேண்டியிருக்கு? அது மாதிரி நமக்கும் மேலே ஒரு அம்பயர் இருக்கான். அவன் தீர்ப்புக்கு விட்டுட்டேன்.”

‘‘அப்பா, நீங்க அவருக்கு தண்டனை தராம இருந்திருக்கலாம். ஆனா, என்னாலே அது முடியாது. ராகவனைப் பிரியறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதுதான் நான் அவருக்குத் தரக்கூடிய தண்டனை’’இப்போது அப்பாவின் மடியில் முகம் புதைத்து அழுதாள் ஜானகி.

அப்பா, அவள் முடியைக் கோதிவிட்டார். வெகு நேரம் பேசாமல் இருந்தார். அவள் அழுது முடித்த பிறகு நிதானமாக, ஆனால், அழுத்தமாகப் பேசினார்.

‘‘ஒவ்வொரு ப்ராப்ளத்துக்கும் ஒண்ணுக்கும் மேற்பட்ட தீர்வு உண்டு ஜானகி. உனக்கு எது சரியோ அதைத்தான் செய்யணும். என் நிலையிலே யாருமே கோபத்தில் ராகவனோடு சண்டைதான் போட்டுருப்பாங்க. ஆனா, நான் எதுவும் கேட்கலை. நடந்தது எனக்குத் தெரிஞ்சு போச்சுன்னு அவனுக்குத் தெரியும். சண்டை போட்டிருந்தா ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்தோடு அவன் அதை மறந்திருப்பான். ஆனா, இப்போ அவனோட குற்றமுள்ள மனம் ஒரு நிமிஷமாவது அவனைச் சும்மா விடுமா? அதுவே தண்டனைதானே. யோசிச்சுப் பார்.’’

Image

அவள் பதில் பேசாமல் இருக்க, அப்பா தொடர்ந்தார்.

‘‘எப்பவுமே எல்லாருக்கும் எது நல்லதோ அதைத்தான் செய்யணும். சுயநலமா உன்னை மட்டும் நினைச்சுப் பார்க்கக் கூடாது ஜானகி.’’அப்பாவின் பார்வை இப்போது அம்மாவிடம் இருந்தது.

அப்பா சொன்ன வார்த்தைகளையே அங்கே தங்கியிருந்த நான்கு நாட்களும் அசை போட்டு விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய் மதுரை திரும்பினாள் ஜானகி.

‘‘ஏன் திடீர்னு கிளம்பிப் போயிட்டே? என் மேலே ஏதாவது கோபமாடா? நான் என்ன தப்பு செஞ்சேன்னு சடுதியிலே என்னை விட்டுட்டுப் போயிட்டே?’’ முகத்தில் நாலு நாளைய தாடியும், சரியான சாப்பாடில்லாமல் வற்றிப் போன முகமுமாய் ராகவன் கேட்டான்.

அவள் நேரடியாக அதற்குப் பதில் சொல்லவில்லை. ‘‘இனிமே அப்பாவுக்கு மாசா மாசம் எழுநூத்தம்பது ரூபாய் அணுப்பணும். அதற்கான ஏற்பாடு செய்யுங்க’’என்றாள்.

‘‘ஏன், ஏன்? எதுக்கு மாசம் அவருக்கு அவ்வளவு பணம்? நம்ம வீட்டுத் தோட்டத்தில் காய்ச்சு வீணாறதா?’’

ஜானகி ஓரிரு கணம் அவன் முகத்தையே ஏறிட்டாள். பின் மெதுவான குரலில் சொன்னாள். ‘‘உங்களுக்கு மனைவி என்கிற உறவை விட அவருக்கு மகள் என்கிற ஸ்தானத்தைத்தான் நான் புனிதமாக நினைக்கிறேன். ராகவன் நான் விரும்பினா, கோர்ட்டிலே மனு போட்டால் போதும். உங்களுடைய மனைவிங்கிற பட்டத்தை ரொம்பச் சீக்கிரம் இழந்துடுவேன். அதுக்கான தைரியமும் எனக்கிருக்கு. இவ்வளவு விளக்கம் உங்களுக்குச் சொன்னா போறும்னு நினைக்கிறேன்.’’

ராகவன் அதற்கு மேல் பதில் சொல்லவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

அவன் போகுமிடம் தபால் ஆபீஸ்தான் என்று ஜானகிக்குத் தெரியும்.

– ஜூன் 2001

Image courtesy:

http://wallpapers-mobilewallpapers.blogspot.in/

http://www.geethabennett.net/

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 31

ருக்மிணி பார்த்தசாரதி

1957ம் ஆண்டு முதல் நாவல்கள், குறுநாவல்கள், கதைகள் எழுதி வந்தவர். நூல்களின் எண்ணிக்கை 8. மனித நேயம், பெண்ணியம், உயர்ந்த சிந்தனை போன்ற கருத்துகளை படைப்பின் களனாகக்கொண்டு எளிமையான நடையில் கதைகளை எழுதியவர்.

சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை பரிசு, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி முதல் பரிசு, கலைமகள் பரிசு உள்ளிட்ட பரிசுகளை பெற்றுள்ளவர்.

‘விபுவா’ தெலுங்கு இதழ் நடத்திய அனைத்திந்திய பன்மொழிச் சிறுகதைகளுக்கான போட்டியில் தமிழ்ப் பிரிவில் பரிசு வென்றவர். இவர், எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சகோதரி.

கோகிலா நைட்டிங்கேல் 

Image

மையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது. நேற்று மாலை கோகிலாவை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்களே! ஏதாவது நற்செய்தி இருக்குமோ? விசாரித்துப் பார்க்கலாமே!

இரண்டு வீடுகளுக்குமிடையே ஒரு தாழ்வான சுவர். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நின்றுகொண்டால் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்.

கமலம் சுவரருகே வந்து நின்றுகொண்டாள்… அவளைக் கண்டதும் கோகிலா தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டுத் தானும் சுவரருகே வந்தாள். ஒரு கண மௌனத்துக்குப் பிறகு ”எனக்குக் கோபம் கோபமாக வருது!” என்றாள்.

”ஏன்?” என்றாள் கமலம், மிருதுவாக.

”பின்னே என்ன, மாமி? நேற்று மறுபடியும் பெண் பார்க்கும் கேலிக் கூத்து நடந்தது. இந்தத் தடவை வந்தவர்கள் மூன்று பேர்தான். அப்பா, அம்மா, மகன்… நான் பட்டுப் புடவையும், நகைகளும், பின்னலும் பூவும் மையும் பொட்டுமாக அலங்காரம் பண்ணிண்டு வந்தேன்… எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணினேன். அந்தக் காலத்தில் அடிமைகளை வாங்குவது போல ஏற இறங்கப் பார்த்தார்கள். வாயைத் திறக்கச் சொல்லிப் பல்லைப் பார்ப்பதற்குப் பதில் பாடச் சொன்னார்கள். நானும் பாடினேன். ரவா கேசரி, பஜ்ஜி இரண்டும் வழக்கம் போல் ஸ்வாஹா… மாமி, பெண் பாக்கும் படலம் நடக்கும் ஒவ்வொரு தடவையும் இந்த ரெண்டு ஜடமும் காணாமல் போகும் வேகத்தைப் பார்த்தால், ‘இவர்கள் பகாசுரன் பரம்பரையோ’னு தோணும். அத்தனை ஸ்வீட்…பின் காபி குடிக்கும் கட்டம்… வழக்கம் போல், ”டிபன் காபி ஏ.ஒன்.” என்கிற சர்டிஃபிகேட். அதற்கு அப்பா, ”எல்லாம் எங்க கோகிலா பண்ணதாக்கும்!” என்று வாய் கூசாமல் பொய்… பின், ”போய் டிஸ்கஸ் பண்ணி கடிதம் எழுதறோம்!” என்ற ரொடீன் வார்த்தைகள். கோபம் எப்படி வராமலிருக்கும், சொல்லுங்கள்!

”பையனுக்கு உன்னைப் பிடிச்சிருந்ததா?”

”தெரியாது!”

”உனக்குப் பையனை?”

”பிடிக்கலை… எனக்கு யாரையுமே பிடிக்கலை… இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் அவமானப்படறது கட்டோடு பிடிக்கலை. உங்களுக்குத் தெரியுமா மாமி? நேற்று வந்த ‘பார்ட்டி’ என்னைப் பெண் பார்க்க வந்த பத்தாவது ‘பார்ட்டி’. நேற்று நான் பத்தாவது தடவையாக அதே பாட்டைப் பாடினேன். பத்தாவது தடவையாக அம்மா பஜ்ஜி, கேசரி பண்ணி அதை நான் பண்ணதாக அப்பா பொய் சொன்னார். எனக்குக் கோபம் கோபமாய் வருது மாமி… கூடவே துக்கம் துக்கமாக வருது…”

உறவு எதுவுமில்லை, வெறும் பக்கத்து வீட்டுக்காரிதான் என்றாலும் கமலத்துக்குக் கோகிலாவிடம் அன்பும் பரிவும் பெருமளவுக்கு இருந்தன. கமலத்துக்கு ஐம்பத்தைந்து வயது… ஒரே மகனும் அவன் மனைவியும் வேலைக்குப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுச் சமையலறையிலிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டுச் சமையலறை தெரியும்.

கோகிலாவும் தன் பெற்றோருக்கு ஒரே குழந்தைதான். வயது இப்போது பத்தொன்பதுதான் என்றால் நம்பத்தான் முடியவில்லை. அதற்குள் எவ்வளவு கோபம், அலுப்பு! ”அவள் இடத்தில் யார் இருந்தாலும் அவளத்தனை, இல்லாவிட்டால் அவளுக்கு மேலேயே, அலுத்துக்கொள்வார்கள்!” என்று நினைத்துக்கொள்வாள் கமலம்.

கோகிலா பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவள் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோசியர் அவள் தந்தையிடம் கூறினாராம், ”உங்கள் பெண்ணுக்குப் பதினெட்டு வயதுக்குள் கல்யாணமாகிவிடும்!” என்று. ”பதினெட்டு வயசுக்குள் கல்யாணம் என்றால் மாப்பிள்ளை தானே வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டி, ”எங்கே என் வருங்கால மனைவி?”ன்னு கேட்பானா என்ன? நாம் இப்போதிலிருந்தே வரன் பார்த்தால்தான் நல்லது. ஜாதகம் ஒரு பக்கம் ”காரண்டி” தந்தாலும், நாமும் ஓடி ஆடி மாப்பிள்ளை தேடறதுதான் புத்திசாலித்தனம்” என்றாராம் கோகிலாவின் தந்தை. பலன் – பள்ளிப் படிப்போடு கோகிலாவின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெண் பார்க்கும் படலம் தொடங்கிற்று, தொடர்ந்து வந்து போனவர்கள் எல்லாருமே ஒரே மாதிரி பதில் சொன்னார்கள். ”பெண் பளிச்சென்று இல்லை. பையனுக்கு விருப்பமில்லை!”

”பளிச்சென்று இல்லை” என்பதற்கு என்ன அர்த்தம்? கோகிலா பேரழகி என்னவோ இல்லைதான். மாநிறத்துக்குச் சற்றுக் குறைவான நிறம். கண்கள், மூக்கு, வாய் உடல்வாகு, எல்லாமே மிகமிகச் சாதாரணம். கோகிலாவே ஒரு நாள் கமலத்திடம் கேட்டாள். ”ஏன் மாமி, நான் பார்க்க நன்றாயில்லையா? கதையில் வருமே ‘அக்லி டக்லிங்’ அந்த ரகமா நான்?” இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? கோகிலாவின் கண்களில் கருணை இருக்கிறதே! அவள் முறுவலில் இதம் இருக்கிறதே! நிறத்திலும் உருவத்திலும் கவர்ச்சி இல்லை என்றால் அழகே இல்லை என்று அர்த்தமா?

பதினெட்டு வயதுக்குள் கட்டாயம் மணமகளாவாள் என்று ஜோசியர் ‘காரண்டி’ கொடுத்தும், பத்தொன்பது வயதில் கோகிலா கன்னியாகத்தான் இருந்தாள். பள்ளிப் படிப்போடு கல்வி நின்று போனதுதான் கைமேல் பலன்.

கடைசியாகப் பெண் பார்க்க வந்தவர்களும் ”பையனுக்கு விருப்பமில்லை!” என்று எழுதினபோது அவள் தந்தை, ”கோகிலாவுக்காக ஒருவன் இனிமேலா பிறக்கப் போறான்? அவன் எங்கேயோ இருக்கத்தானே இருக்கான்?” என்று பதிலளிக்க முடியாத கேள்விகளாகக் கேட்டார். கோகிலாவுக்குக் கோபமும் அலுப்பும் மட்டுமல்லாமல் சிரிப்புக்கூட வந்தது.

Image

ன்று காலை பத்தரை பணியிருக்கும். கோகிலா வழக்கம்போல் அழுக்குத் துணிகளும் வாளியுமாகக் குழாயடிக்கு வந்தபோது பக்கத்துவீட்டு வேலைக்காரி ஓடி வந்தாள். ”பெரியம்மா பாத்ரூமில் விழுந்துட்டாங்க. அழுதுகிட்டே உட்கார்ந்திருக்காங்க!”

”அம்மா! கமலம் மாமி விழுந்துட்டாளாம்! நான் போய்ப் பார்க்கிறேன்!” என்று கூவியவாறே பக்கத்து வீட்டுக்கு விரைந்தாள் கோகிலா. குளியலறை தரையில் கமலம் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள். ”எழுந்திருக்க முடியலை, கோகிலா! வலது காலைக் கீழே வைக்க முடியலை!” என்றவள் பச்சைக் குழந்தையைப் போல் வாய்விட்டு அழுதாள்.

வேலைக்காரியின் உதவியோடு அவளைத் தூக்கி நிறுத்தி, இடது காலை மட்டும் ஊன்றச் சொல்லித் தாங்கிப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்தாள் கோகிலா. ஒரு வலி நிவாரிணி மாத்திரையைக் கொடுத்துவிட்டுத் தொலைபேசி மூலம் மாமியின் மகனுக்கும், பின் மருமகளுக்கும் விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் வரும்வரை கமலத்தின் அருகே அமர்ந்திருந்தாள்.

டாக்சியில் உட்கார்ந்து ஆஸ்பத்திரிக்குச் சென்ற கமலம் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி ஆஸ்பத்திரி வேனில் திரும்பினாள். வலது காலைச் சுற்றி கனமான இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருந்தது. ”ஐந்து கிலோவாவது இருக்குமே! இதை எதற்கு மாமியின் காலோடு இணைத்திருக்கிறார்கள்? இதோடு எப்படி நடக்க முடியும்?” என்று கோகிலா யோசித்தபோது மாமியின் மகன் நிலைமையை விளக்கிச் சொன்னார்.

கமலத்தின் வலது கால் இடுப்போடு சேரும் இடத்தில் எலும்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக முறிவு இல்லாமல் விரிசலோடு தப்பித்துவிட்டாள். அதனால் ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில வாரங்களில் விரிசல் கூடிவிடும். அதுவரை காலை அசைக்கக் கூடாதாகையால் அசைக்க முடியாதபடி இரும்பு ஃப்ரேம் ஒன்றைக் காலைச் சுற்றிப் பொருத்தியிருக்கிறார்கள். இனி சில வாரங்கள் படுக்கையோடு படுக்கையாக இருக்கவேண்டும்.

கமலம் அழுதுகொண்டே இருந்தாள். ”என்ன பாவம் பண்ணினேனோ! இப்படி படுக்கையிலேயே சகலமும்…”

”பொறுத்துக்கோ அம்மா… உனக்குன்னு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணறேன்… நாங்கள் ஆபீஸ் போறதுக்கு முன் வர மாதிரி, திரும்பி வரும்வரை இருக்கிற மாதிரி” என்றான் மகன்.

”நடக்கிற காரியமா இது? வீட்டையும் என்னையும் முன்பின் தெரியாதவள் தயவில் ஒப்படைச்சால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்…”

”நான் ரெண்டு மாசம் லீவுக்கு அப்ளை பண்ணறேன். கவலைப்படாமல் இருங்கள், அம்மா!” என்றாள் மருமகள்.

”என்னால் எல்லாருக்கும் எத்தனை கஷ்டம்!” என்று கமலம் ஓயாமல் அழுதாள். கோகிலாவால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை…

”நான் உங்களோடு இருக்கேன் மாமி… உங்கள் பிள்ளையும் மாட்டுப் பொண்ணும் கவலையில்லாமல் ஆபீஸ் போகட்டும். இருவருமே வீட்டிலில்லாத நேரங்களில் நான் உங்களோடு இருக்கேன். நான் பழகினவள் என்கிறதால் உங்களுக்குக் கூச்சமாக இருக்காது!”

”நிஜமாகத்தான் சொல்கிறாயா?” என்று கமலமும் அவள் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட, கோகிலாவின் பெற்றோர் திகைத்தார்கள். மகளைத் தனியே அழைத்துச் சொன்னாள் கோகிலாவின் தாய். ”நீ புத்தி சுவாதீனத்தோடுதான் பேசறியா? ஒரு கிழவிக்கு நர்ஸ் வேலை பார்க்கிறது சுலபம்னு நினைச்சியா?”

”இதில் என்ன கஷ்டம், அம்மா? நான்கூட இருந்தால் மாமி நிம்மதியாயிருப்பார்… கால் நன்றாகக் குணமாகும்.”

”மாமியின் சகல தேவைகளையும் கவனிக்கணும். அசிங்கம் பார்க்கக் கூடாது… அவருடைய முணுமுணுப்பையும் புலம்பல்களையும் சகிச்சுக்கணும்!”

”நான் முகம் சுளிக்காமலிருந்தால் மாமி ஏன் முணுமுணுக்கவோ புலம்பவோ போகிறார்?”

”நீ ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி, ‘நான் உதவறேன்’னு உளறிக் கொட்டினாய்?”

”ஏன்னா, மாமிக்கு இப்போது உதவி தேவை. அந்த உதவியை என்னால் தர முடியும்!”

”நீ ஒரு அரைப் பைத்தியம், கோகிலா!”

”அப்படியா?”

வாக்குக் கொடுத்தபடியே கமலத்தின் மகனும் மருமகளும் அலுவலகம் சென்ற பிறகு அவளைக் கவனித்துக்கொள்ள கோகிலா ஆஜரானாள். மாமியின் தேவைகளை உணர்ந்து அவற்றைப் பூர்த்தி செய்வதில் அவள் எந்தவித அருவருப்பையும் அடையவில்லை. துயரப்படும் ஒரு மனிதப் பிறவியின் துயர் களையும்போது, அந்த முகத்தில் நிம்மதியும் மலர்ச்சியும் தோன்றுகின்றனவே, இந்தக் காட்சிக்கு ஈடாக ஒரு காட்சி இருக்க முடியுமா? பொறுமைக்கும் சேவைக்கும் இதைவிட சிறந்த பரிசு கிடைக்க முடியுமா?

நாள் மேல் நாளாக நழுவிற்று… கமலம் இப்போதெல்லாம் அழுவதில்லை… கோகிலாவின் சேவையில் மென்மையும் இதமும் இருந்ததை உணர்ந்தவள், தான் சிரித்த முகமாக இருப்பதுதான் நன்றி கூறும் ஒரே வழி என்று உணர்ந்தாள். தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும், தன் சிறுமிப் பருவத்தின் சிறுசிறு சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் அழகழகான கதைகள் சொன்னாள். ஹாஸ்யமும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்தன.

எதிர்பார்த்தபடியே எலும்பிலிருந்த விரிசல் சில வாரங்களில் மறைந்து விட்டது. காலில் இரும்பு வளையத்தோடு ஆஸ்பத்திரி சென்ற கமலம் அது இல்லாமல் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினாள். இனி அவள் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பிக்கலாம். தன்னம்பிக்கை வரும்வரை கோகிலா உடனிருப்பாள் என்பதால் பிரச்சனையே இல்லை…

ஒரு நாள், நண்பகல் பொழுதில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கமலம் சொன்னாள். ”கோகிலா, நீ ஏதோ ஒரு ஜன்மத்தில் யாராகப் பிறந்திருக்க வேண்டும், தெரியுமா?”

”யாராக, மாமி?”

”ஃப்ளாரென்ஸ் நைட்டிகேல் என்ற நிகரற்ற நர்சாக!”

”இது என்ன திடீர் ஞானோதயம், மாமி?” என்றாள் கோகிலா, முறுவலித்தவாறு.

”உன் கண்களைப் பார்த்தால் மனம் அமைதி அடையறது… உன் புன்னகையைப் பார்த்தால் மனசில் தைரியம் பிறக்கிறது. உன் ஸ்பரிசத்தில் துயர் களையும் ஏதோ தன்மை இருக்கு… உடல் வலி குறைஞ்சு போறது… இதையெல்லாம் தவிர, உன் பெயரையே எடுத்துக்கொள்… கோகிலா… கோகிலம் என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘நைட்டிங்கேல்’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் பறவை… பொருத்தமாக இல்லையா?”

கோகிலா வாய்விட்டுச் சிரித்தாள்.  ”பொருத்தமோ இல்லையோ, எத்தனை அன்போடு சொல்கிறீர்கள்! அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி மாமி!”

Image

மாதங்கள் மறைந்தன.

”உங்கள் ரெண்டு பேருக்கும் தெரியுமா? கோகிலாவின் ஜாதகத்தைப் போன தடவை பார்த்து ஜோசியம் சொன்னானே, அவன் மகா மடையன்!” என்றார் கோகிலாவின் தந்தை, மனைவி மகளிடம்.

”எப்படி?” என்றாள் கோகிலாவின் தாய்.

”வேறொருவனிடம் அவள் ஜாதகத்தைக் காட்டினேன். இவன் கெட்டிக்காரன். பார்த்த உடனேயே ‘இந்தப் பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல்தான் கல்யாணமாகும்’னு சொன்னான்!”

”இருபது வயசுக்கு மேல் எத்தனை வருஷம்?” என்றாள் கோகிலா.

”என்னது?”

”இருபத்தொண்ணு, இருபத்தாறு, முப்பது, நாற்பது எல்லாமே இருபதுக்கு மேல்தானே அப்பா!”

“வாயை மூடு, அதிகப் பிரசங்கி… என்ன தெரியறதோ, இல்லையோ, எதிர்த்துப் பேச தெரியறது!”

“பேசாமல் என்னை காலேஜில் சேர்த்துவிடுங்கள் அப்பா!”

”ஏன்? இன்னும் ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசவா?.. இப்போ நான் சொல்றதைக் கவனமாய்க் கேள். ஞாயிற்றுக்கிழமை உன்னைப் பெண் பார்க்க ஒரு ‘பார்ட்டி வரது… அடக்க ஒடுக்கமாய் நடந்துகொள்! புரியறதா?”

”அப்பா! இன்னுமா உங்களுக்கு இந்தக் கேலிக்கூத்து அலுக்கலே?”

”எது கேலிக் கூத்து? பெண் பார்க்கிறது நம் ஊர் சம்பிரதாயம்… இது கேலிக் கூத்துன்னா காதல் கல்யாணம்தான் சிறப்போ? ஏன்தான் உன் புத்தி இப்படிக் கோணல்மாணலாய் வேலை செய்யறதோ?”

கோகிலா பதில் சொல்லவில்லை. மற்றுமொரு பிள்ளை வீட்டார் விஜயம். மற்றுமொரு முறை ”விருப்பமில்லை” என்ற நிராகரிப்பு… தெய்வமே!

வெள்ளிக்கிழமை காலை கோகிலாவின் தாய் அவளிடம் ஒரு பெரிய பையையும் பணத்தையும் கொடுத்தாள். கூடவே நிறைய உபதேசமும் செய்தாள்.

”நேரே பஸ் ஸ்டாண்டுக்குப் போ… வழியில் யாரோடும் பேசாதே… பஸ் வரும்வரை பொறுமையாய்க் காத்திரு… பஸ்ஸில் எந்தத் தடியனாவது பல்லை இளித்தால், வேறு பக்கம் பார்… சாமான் வாங்கும், லிஸ்ட்டும் பணமும் பத்திரம்!”

”லிஸ்ட் என்ன… பிரமாத லிஸ்ட்? கேசரிக்கு ரவை, நெய், முந்திரி, திராட்சை, பஜ்ஜிக்குக் கடலை மாவு… இதெல்லாம்தானே?”

”ஆமாம்… இதெல்லாம்தான்!” அம்மாவின் குரலிலும் எரிச்சல், அப்பாவின் குரலைப் போல்.

பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் காத்திருக்க வேண்டாதபடி உடனேயே பஸ் வந்துவிட்டது. கோகிலா ஏறிக்கொண்டாள்.

கூட்டமான கூட்டம. உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரு கையால் பையையும் மறு கையால் எதிர் சீட்டையும் பிடித்தபடி நின்றுகொண்டாள்… பஸ், கிளம்பிற்று… பஸ்ஸில் நாலைந்து இளைஞர்கள் பார்வையைப் பெண்கள் பக்கம் படர விட்டதைக் கவனித்தாள். தன் மேல் பட்ட பார்வை, சகஜமாக அகல்வதைக் கவனித்தாள். மற்ற பெண்கள் மேல் பார்வை பட்டு, அசிங்கமாகக் குத்தி நிற்பதையும் கவனித்தாள். அம்மாவின் உபதேசம் நினைவுக்கு வந்தது. ”எந்தத் தடியனாவது பல்லை இளிச்சால் வேறு பக்கம் பார்!”

சட்டென்று அவளுக்கு ஒர் உண்மை உணர்வாயிற்று… எத்தனையோ முறை அவள் பஸ்ஸில் பயணித்திருக்கிறாள், கூட்டத்தில் நின்று சாமான் வாங்கியிருக்கிறாள். யாருமே அவளைப் பார்த்துப் பல்லை இளித்ததில்லை. ”நான் அத்தனை குரூபியா?” என்று ஒரு கணம் எண்ணி மனம் நொந்தாள். ஆனால் சற்று யோசித்ததும் அந்த எண்ணம் அகன்றது. குரூபியான ஒருத்தியைக் கண்டால் காண்பவர்களின் முகத்தில், கண்களில், கொஞ்சமாவது அதிர்ச்சி தோன்றும். அவளைக் காண்பவர்களிடம் அந்த அதிர்ச்சி இல்லை. அவள்மேல் சாதாரணமாகப் படிந்த பார்வை, சாதாரணமாக அவளை ஆராய்ந்து, சாதாரணமாகவே விலகிற்று… அதில் அதிர்ச்சியுமில்லை, சுவாரஸ்யமும் இல்லை.

”என் தோற்றம் யாரையும் சலனப்படுத்தவில்லை, யாரையும் ஈர்க்கவில்லை. எந்தவிதமான விருப்பையோ வெறுப்பையோ தோற்றுவிக்கவில்லை!” என்று தெளிந்தபோது அடி மனத்தில் சட்டென்று ஒரு நிம்மதி படர்ந்தது.

ரோட்டில் யாரோ குறுக்கே பாயவே, பஸ் ஓட்டுனர் பிரேக்கை அழுத்தினார். பஸ் எதிர்பாராமல் குலுங்கி நின்றது. கோகிலா ஒரு கணம் தடுமாறினாள். ஆனால், விழாமல் சமாளித்தாள். கையிலிருந்த பை மட்டும் நழுவி விழுந்தது.

அவளருகே நின்றிருந்த ஒரு வாலிபன் குனிந்து அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

”ஓ… தாங்ஸ்!” என்று அதைப் பெற்றுக்கொண்டாள் கோகிலா.

”வெல்கம் ஸிஸ்டர்!” என்று அவன் மென்மையாய் முறுவலித்தான்.

மின்சாரம் பாய்ந்தாற்போல ஒரு கணம் சிலையாகிப் போனாள் கோகிலா. ஸிஸ்டர்! எத்தனை அழகான வார்த்தை இது!

அவள் பார்க்கப் பளிச்சென்று இல்லை.

வேண்டாம்… அவசியமே இல்லை.

அவளுடைய தோற்றம் காண்பவர்களின் மனத்தில் விருப்பு வெறுப்பைத் தோற்றுவிக்கவில்லை. கமலம் மாமி சொல்வது உண்மையென்றால், அவள் கண்களும் முறுவலும் ஒரு நோயாளிக்கு அமைதியையும் தைரியத்தையும் தருகின்றன. அவளுடைய ஸ்பரிசம் நோயுற்றவரின் துயர் களைகிறது, வலி மாற்றுகிறது.

இது ஒரு வரப்பிரசாதம். இதுவே பெரும் பாக்கியம்!

கோகிலா பஸ்ஸிலிருந்து இறங்கினாள். மற்றொரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தாள், காலி பையோடு.

”சாமானெல்லாம் எங்கே?” என்றாள் அவள் தாய்.

”நான் வாங்கலே…”

”ஞாயிற்றுக்கிழமை பிள்ளை வீட்டார் வரும்போது மானம் போகணுமா?”

”ஞாயிற்றுக்கிழமை யாரும் வரப் போறதில்லை.”

”உளறாதே, கோகிலா…”

”உனக்குத் தெரியுமா அம்மா? நான் நர்ஸாகப் போகிறேன். சந்தோஷமாயிருக்கப் போகிறேன்!”

”பைத்தியமா உனக்கு? உன் அப்பா இதைக் கேட்டால் ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதிப்பார். வளர்ந்த பெண்ணுன்னு பார்க்காமல் கை நீட்டி அடிப்பார்.”

அவள் தாய் சொல்லிக்கொண்டே போனாள். ஆனால், கோகிலாவின் காதில் எதுவுமே விழவில்லை.

கற்பனை சிறகடித்துப் பறந்தது.

நர்ஸ் கோகிலா.

ஸிஸ்டர் கோகிலா.

கோகிலா நைட்டிங்கேல்!

***

Image Courtesy:

http://freeimagescollection.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி