காலத்தை வென்ற கதைகள் – 30

ஜி.கே.பொன்னம்மாள்

கேரளாவின் ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ் எழுத்தாளரானார் ஜி.கே.பொன்னம்மாள். ஆறு வயதிலேயே ஹார்மோனியம் வாசிக்கக் கற்றிருந்தார். பாடல்கள் இயற்றுவது, பாடுவது, நாடகம் தயாரிப்பது என பல்திறன் கொண்ட கலைஞர் இவர். பின்னணிப் பாடகியாக இருந்ததுடன், நிருத்தோதயா நடனப் பள்ளியில் நடனப் பயிற்றுனராகவும் இருந்தார். 350 சிறுகதைகளும், கட்டுரைகளும், நாவல்களும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைச் சகடம்’ இவரின் முக்கிய நாவல்களில் ஒன்று.

யாரை நம்பி வந்தாய்?

ந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளபளக்கும் தார் ரோடும், பளிச்சென்ற வெயிலும் அவன் கண்களைக் கூசச் செய்தன. அவனுடன் வந்த செல்லி பக்கத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு நாலு கை தண்ணீரையும் அள்ளிக் குடித்துவிட்டு, ”அப்பாடா! இந்தக் குழாய்த் தண்ணி கூடவா இப்படிக் கொதிக்கணும்?” என்றபடி அங்கிருந்த ஒரு கல்லில் உட்கார்ந்து புடவைத் தலைப்பால் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ”ஏன், குழாய்த் தண்ணி மட்டுமா கொதிக்குது? என் மனசு கூடத்தான் கொதிக்குது. ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு அவளைக் கலியாணமும் செய்து கொண்டு பட்டணத்துக்குப் பிழைக்க வந்து விட்டேன் பாரு. அந்த வயிற்றெரிச்சலை நினைச்சா என் மனசு கொதிக்குது. என் புத்தியைச் செருப்பாலடிக்கணும்” என்று வெறுப்புடன் பேசிக்கொண்டே மேல் துண்டை விரித்துச் சுடலைமுத்துவும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். செல்லி தன் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். என்ன கஷ்டம் வந்தாலும் மனத்துக்குப் பிடித்தவனை மணந்து கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியே அவள் இதயத்தில் நிறைந்திருந்தது.

”என்ன மச்சான் இப்படிக் கோவிச்சுக்கறே? ஏதோ பட்டணத்துக்கு வந்துட்டோம். இத்தனை ஜனங்கள் பிழைக்கும் இடத்தில் நமக்கு மட்டும் இடமில்லாமல் போய்விடுமா?” என்று அவனைச் சமாதானம் செய்ய முயன்றாள் அவள்.

”எதையும் பேசி விடுவது சுலபம். பட்டணத்து வாழ்க்கை இங்கு வந்த பிறகல்லவா தெரியுது! இரண்டு நாட்களாகப் பட்டினி. கையில் காலணா இல்லை. இங்கு யாரு நமக்கு வேலை வைச்சிக்கிட்டு இருக்கா?” என்று பொரிந்தான் சுடலைமுத்து.

”யாரு தம்பீ அப்படி வாழ்க்கையை நொந்து பேசறது?” என்றது ஒரு குரல். சுடலை முத்துவும் செல்லியும் நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். மரத்துக்கு அருகே ஒரு சிறு பிள்ளையார் கோயிலைத் தவிர வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. பிள்ளையார் கோயில் என்பதற்கு அறிகுறியாக எண்ணெய் இல்லாத ஒரு விளக்கும், ஒரு பிள்ளையார் விக்கிரகமும்தான் அங்கிருந்தன. தென்னை ஓலையால் சிறு குடிசை போல் வேயப்பட்டிருந்தது அந்தக் கோயில். அந்த விநாயகரைப் பார்த்ததுமே செல்லிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ”கவலைப்படாதிங்க மச்சான். இதோ இந்தப் பிள்ளையார் அப்பனே நமக்கு வழி காட்டுவாரு. ஏதோ தெய்வவாக்குப் போல, ‘ஏன் வாழ்க்கையை நொந்துக்கிறீங்க?’ என்று ஒரு குரல் கேட்டது பாருங்க அதுவே நல்ல சகுனம்” என்றாள் செல்லி.

”தெய்வ வாக்கு ஒண்ணுமில்லே அம்மா. எல்லாம் மனுசன் பேசற பேச்சுத்தான். இப்படி இந்த மரத்துக்குப் பின்னாலே வந்து பாருங்க. நான் நீங்க பேசிக்கிறதையெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்கு எழுந்து நடமாட முடியாது. வாங்க இப்படி” என்றது அந்தக் குரல்.

Image

மரத்துக்கு மறு பக்கம் சென்று பார்த்த செல்லியும் சுடலை முத்துவும் ஒரு கணம் திடுக்கிட்டுவிட்டார்கள். ஒரு கந்தல் கோணியில் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு ஓர் உருவம் படுத்திருந்தது. கை கால்கள் குறுகி, முறுக்கிக் கொண்டிருந்தன. எண்சாண் உடம்புக்குச் சிரசும் வயிறுமே பிரதானமாகக் காட்சியளித்தன. ஒரு தகரக் குவளையில் குடிக்கத் தண்ணீரும் விரித்திருந்த கந்தல் துணியில் நயா பைசா துட்டுகளும் கிடந்தன. ”ஏன் அப்படி மலைச்சுப் போயி நிக்கறீங்க? நானும் மனுசன்தான். உட்காருங்க அப்படி. நகர முடியாத நானே வாழ்ந்து கொண்டிருக்கும்போது உடல் பலம், இளமை இத்தனையும் இருக்க பிழைக்க மூக்கால் அழுகிறாயே தம்பீ!” என்றான். சுடலை முத்துவுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. கிழவன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். சுடலை முத்துவுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. செல்லிக்கும் களைப்பு மிகுதியும், ஆலமரத்துக் காற்றும் சேரவே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இருவரும் அந்த மரத்தடியில் அயர்ந்து போய்ப் படுத்து விட்டார்கள்.

அவர்கள் எத்தனை நேரம் தூங்கினார்களோ தெரியாது. ”டேய், யாரடா அது புது ஆள்? நம்ம இடத்திலே படுத்துத் தூங்கறது? எழுந்திருடா” என்று குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்ணை விழித்தாள் செல்லி. அப்பொழுது பொழுது நன்றாகச் சாய்ந்து இலேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. தெருவில் வண்டியும் காரும் ஓடிக்கொண்டிருந்தன. எங்கும் ஒரே சத்தம். தன்னைச் சுற்றித் தனக்குப் பழக்கமில்லாத யார் யாரோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது செல்லிக்குத் தெரிந்தது. மூன்று கல்லை வைத்து மூட்டிய அடுப்பில் ஒரு சட்டியில் கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. அடுப்பருகே உட்கார்ந்து பழைய காகிதம், குப்பை, இவைகளைப் போட்டு அடுப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளைச் சுற்றி நாலைந்து குழந்தைகள் அந்தக் கஞ்சிப் பானையைப் பார்த்தபடி இருந்தன. பீடியைப் புகைத்துக் கொண்டே வந்த பாம்பாட்டி ஒருவன் பாம்புக் கூடையைக் கீழே வைத்துவிட்டு, ”சனியன், இந்தப் பாம்பு என்ன கனம் கனக்கிறது? தோளில் போட்டுக் கொண்டு நாலு தெருவு சுத்தறதுக்குள்ளே தோள் வலி எடுத்து விடுகிறது. வரும்படியாவது கை நிறைய வருதா? இன்னிக்குக் கிடைத்தது நாலணாத்தான்” என்று கூறிச் சில்லறையை அடுப்பருகே இருந்த தன் மனைவியிடம் கொடுத்தான்.

”நீ என்னிக்கித்தான் என்னிடம் கை நிறையக் காசு குடுத்திருக்கே. எல்லாம் எனக்குத் தெரியும். மீதித் துட்டுக்கு அந்த ரௌடி நல்லகண்ணுகிட்டேயிருந்து திருட்டுச் சாராயம் வாங்கிக் குடிச்சிருப்பே” என்றாள் அவள் குரோதத்துடன்.

அப்பொழுது தள்ளாடியபடி அங்கு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ”அய்யே இது யாரு புது ஜோடி நம்ம இடத்துக்கு வந்திருக்கு? பார்த்தா கிராமத்து ஆளுங்க போல இருக்கு. வூட்டுக்குத் தெரியாமே இந்தப் பொண்ணு இவன் பின்னாலே ஓடிவந்திருக்கு போலிருக்கு” என்றாள் கேலிச் சிரிப்புடன்.

இந்தப் பேச்சைக் கேட்ட செல்லியின் மனம் துணுக்குற்றது. அவள் மான உணர்ச்சி பொங்கி எழுந்தது. துள்ளி எழுந்து உட்கார்ந்து கொண்டு, ”இந்தா பாரு, அப்படியெல்லாம் நாக்கிலே நரம்பில்லாம பேசாதே. இவரு என் புருஷன். தொட்டுத் தாலி கட்டியவர். சந்தேகமாயிருந்தால் பார்த்துக்க” என்று கழுத்திலிருந்த தாலிச் சரட்டைக் காட்டினாள்.

கபடு இல்லாமல் பேசும் அக்கிராமத்துப் பெண்ணை ஒரு கணம் முறைத்துப் பார்த்தாள் அந்தக் கர்ப்பிணி. பிறகு மெதுவாக வயிற்றில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த கந்தல் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டபடியே ”கோவிச்சுக்காதே தங்கச்சி. ஏதோ சந்தேகமாயிருந்தது கேட்டேன்” என்றாள். செல்லிக்கு அவள் செய்கை விநோதமாக இருந்தது. கர்ப்பிணி போல் வயிற்றில் கந்தல் துணிகளை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண். எதற்காக இப்படி ஒரு வேஷம்? அவள் நடந்து வரும்போது எப்படிக் களைத்து, முகம் வாடி, தள்ளாடியபடி ஒரு நிஜக் கர்ப்பிணிப் பெண் போல் நடந்து வந்தாள்? எல்லாம் நடிப்பா என்று நினைத்த செல்லியின் வியப்பைப் பார்த்துவிட்டு, படுத்திருந்த கிழவன், ”என்ன அம்மா இப்படி அதிசயப்படறே? இதெல்லாம் பிழைக்கும் வழி. இந்திராணி இப்படிக் கர்ப்பிணி வேஷம் போடுவதில் கெட்டிக்காரி. பஸ் ஸ்டாண்டு, சினிமாக் கொட்டகை என்று போய் நின்று பார்ப்பவர்கள் உள்ளம் உருகும்படி ”ஐயா, கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவுங்களேன். ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸுக்குக் காசில்லை” என்று கெஞ்சும்போது, எந்தக் கஞ்சனும் காலணா போடாமல் இருக்க மாட்டான். இந்திராணிக்கு அத்தனை திறமை. பார்க்கப் போனால் இந்த மரத்தடியிலே அதிகப் பணம் சம்பாதிப்பது இந்த இந்திராணிதான்” என்று கூறிக் கண்ணைச் சிமிட்டினான்.

வயிற்றில் இருந்து எடுத்த கந்தல் துணிகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு, ”ஏன் தாத்தா அப்படி வயித்தெரிச்சல் படறே? உனக்கு மட்டும் சம்பாத்தியம் வருவதில்லையா? உன் உருவமே உனக்குச் சாதகமாயிருககு. வாயாலே நீ பேசவே வேண்டாம். துட்டு தானாக உன்னைத் தேடி வருது. எனக்கு அப்படியா? பிழைப்புக்கு எத்தனையோ வேஷம் போட வேண்டியிருக்குது. அதோ பாரு ரோட்டிலே” என்று இந்திராணி செல்லியைத் தட்டிக் கூப்பிட்டு, ”அந்தக் காரைப் பார்த்தாயா? அதுதான் நீல நிறக் காரு! அதிலே ஒரு அம்மா போறாங்க பாரு. அவுங்க ஒரு பிரபல சினிமா நடிகை. ஒரு படத்துக்கு ஆயிரக் கணக்கா வாங்கறாங்க. அவுங்களும் வயிற்றுப் பிழைப்புக்குக் கர்ப்பிணி வேஷம் போடறாங்க” என்று கூறிச் சிரித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்கச் செல்லிக்கு விநோதமாக இருந்தது. இந்திராணி புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ”பசி வயிற்றைக் கிள்ளுகிறது. நாயர் கடைக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிப் போய் விட்டாள்.

பொழுது நன்றாக இருட்டி விட்டது. யாரோ ஒருவர் அந்தப் பிள்ளையார் கோயில் விளக்கில் சிறிது எண்ணெயை ஊற்றி ஏற்றி வைத்துவிட்டுப் போனார்.

”இந்தா பொண்ணு! எல்லாரும் சாப்பிடறாங்க. நீயும் உன் புருஷனும் மூணு நாளா பட்டினின்னு எனக்குத் தெரியும். இதோ கந்தல் துணியில் காசு கிடக்கு பாரு. எடுத்துப் போய் நாயர் கடையிலே ஏதாவது சாப்பிட்டுட்டு எனக்கு ஒரு தோசையும், ஒரு குவளை டீயும் வாங்கி வாங்க” என்றான் கிழவன். செல்லிக்கு எத்தனை பசி இருந்தாலும் அந்தக் கிழவனின் உதவியை நாட ஏனோ மனம் வரவில்லை. ”வேண்டாம் தாத்தா!” என்றாள் தயக்கத்துடன்.

கிழவன் மிகவும் வற்புறுத்தவே அவனிடமிருந்து எட்டணாவை எடுத்துக் கொண்டு இருவரும் நாயர் கடையை நோக்கி நடந்தார்கள். ஆளுக்கு இரண்டு தோசையும் டீயும் சாப்பிட்டுவிட்டு கிழவனுக்குப் பலகாரம் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

வாயில் வாசனைப் பாக்கை மென்று கொண்டே பக்கத்தில் வந்து உட்கார்ந்த இந்திராணி ”ஆமாம், பட்டணத்திலே எப்படிப் பிழைப்பதாக உத்தேசம்?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

”எங்காவது வீட்டு வேலை செய்வது, இல்லே வீடு கட்டும் இட்த்திலே கல்லு மண்ணு தூக்கிக் கையாள் வேலை செய்வது இப்படி ஏதாவது செய்துதான் பிழைக்க வேண்டும்’’ என்றாள் செல்லி.

இந்திராணி சற்று யோசித்துவிட்டு, ‘‘உங்களுக்கு இங்கே வீடு கட்டும் மேஸ்திரி யாரையாவது தெரியுமா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.

”அதெல்லாம் எங்களுக்கு யாரையும் தெரியாது. இந்தப் பிள்ளையாரப்பனைத் தவிர. இவர்தான் எங்களுக்கு வழிகாட்டி உதவி செய்யணும்” என்றாள். இந்திராணி சிரித்தாள். ”இந்தக் கல்லுப் பிள்ளையாரை நம்பி வந்து விட்டாயாக்கும்? இவரே பிறர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். யாராவது எண்ணெய் விட்டால்தான் விளக்கு எரியும். இந்தக் கோயில் முற்றத்தில் தண்ணீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கும் மனிதன்தான் வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு முழம் கதம்பம் வாங்கி இவர் கழுத்தில் போட்டால்தான் மாலை போட்டுக் கொள்ளுகிறார். இப்படி இந்தப் பிள்ளையாரே தம் வாழ்வுக்கு மனிதர்களை நம்பியிருக்கும்போது நீ அவரை நம்பி வந்திருப்பது வேடிக்கையாக இருக்கு” என்றாள் அவள். பேச்சு செல்லிக்குப் பிடிக்கவே இல்லை.

Image

மாதா கோயில் மணி எட்டு அடித்தது. இந்திராணி எழுந்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அந்த வளக்கிலிருந்து எண்ணெயை எடுத்துத் தன் தலையில் தடவிக் கொண்டாள்.

இதை பார்த்த செல்லிக்கு இதயம் பிளந்துவிடும் போலிருந்தது. கோபத்தை அடக்க முடியாமல் ”இந்தா அம்மா! இத்தனை நேரம் கடவுளைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு அந்தக் கோயில் விளக்கு எண்ணெயை எடுத்துத் தலையில் தேய்த்துக் கொள்ள உனக்கு வெட்கமாக இல்லை? நீதான் எதுவும் கோயிலுக்குச் செய்யவில்லை. யாரோ புண்ணியவான் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் அந்த எண்ணெயை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டாயே!” என்றாள்.

இந்திராணி கலகலவென்று சிரித்துவிட்டு ”நீதான் கடவுள் கொடுப்பார் என்று சொன்னியே. எனக்குக் கடவுள் இப்படித்தான் கொடுக்கிறாரு. அவரோ கல்லுப் பிள்ளையாரு ‘இந்தா இந்திராணி, தலைக்கு எண்ணெய்’ என்று என் கையிலே கொண்டு வந்து கொடுக்க முடியுமா? மரத்தில் இருக்கும் பழம் ‘இதோ நான் இருக்கிறேன், என்னைச் சாப்பிடு’ என்று கையில் வந்து விழுமா? நாமாகப் பறித்துச் சாப்பிட வேண்டியதுதான். இதே நியதிப்படி கடவுளிடமிருந்து நானே எடுத்துக் கொண்டேன். கவலைப்படாதே. போ, படுத்துத் தூங்கு. நான் செய்யும் காரியங்களில் தலையிடாதே!” என்று கூறினாள்.

சற்றுத் தூரத்திலிருந்து யாரோ மெதுவாகச் ‘சீட்டி’ அடிக்கும் சத்தம் கேட்கவே இந்திராணி சொகுசாக அன்ன நடை நடந்து அந்தப் பக்கம் போனாள்.

”இந்தா பொண்ணு! ஏனம்மா அந்த இந்திராணிகிட்டே வார்த்தையாடறே? அவ பேச்சுக்குப் போகாதே. இந்த மரத்தடியில் அவள் வச்சதுதான் சட்டம். அவளுக்கு ஆள் பலம் அதிகம். இந்தப் பேட்டை ரௌடி நல்லகண்ணு அவளுக்காக எதையும் செய்யக் காத்திருக்கான். இந்திராணியைப் பகைச்சுக்கிட்டா நீ இந்த இடத்திலே வாழ முடியாது!” என்றான் கிழவன்.

எப்பொழுது செல்லி கண்ணயர்ந்தாளோ, தெரியாது. அவள் பொழுது விடிந்து கண்ணை விழித்தபோது சுடலைமுத்து குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். பட்டணத்தில் பணம் இல்லாமல் கிடைக்கும் ஒரே பொருளான குழாய்த் தண்ணீரை அள்ளி அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த சுடலைமுத்துவைப் பார்க்கச் செல்லிக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. பாம்பாட்டியும் அவன் குடும்பமும் எழுந்து போய் விட்டிருந்தார்கள். இந்திராணி எப்பொழுது திரும்பி வந்தாளோ முகத்தில் வெய்யில் படுவதுகூடத் தெரியாமல் புரண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். செல்லி தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்தாள். பிறகு முகம் கழுவிக் கொண்டு கிழவனுக்குத் தேநீரும் இட்டிலியும் வாங்கிக் கொடுத்து விட்டுக் கணவனுடன் வேலை தேடக் கிளம்பிளாள்.

யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது. சுடலைமுத்துவும் பட்டணத்தில் வாழக் கற்றுக் கொண்டுவிட்டான். எப்படியோ கூலி வேலை செய்து தன் வயிற்றையும் தன் மனைவி வயிற்றையும் கழுவலானான். செல்லியும் சளைக்காமல் வேலை செய்தாள். ஒவ்வொரு நாள் இரவும் தன் கணவனுக்குக்கூடத் தெரியாமல் மீதம் வைக்கும் பணத்தைப் பத்திரமாக ஒரு தகர டப்பாவில் போட்டு மூடி, பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே மறைத்து வைத்து வந்தாள். இரவு எல்லோரும் தூங்கின பின் மெதுவாக தகர டப்பாவிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துத் திருப்தியடைந்து வந்தாள்.

பக்கத்துத் தெரு மாயாண்டி நூறு ரூபாய்க்குத் தன் ரிக்‌ஷாவை விற்று விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பணத்தைச் சேர்த்து அந்த ரிக்ஷாவை வாங்கிவிட்டால் தன் கணவனை அந்த மரத்தடியிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே போய்விடலாம் என்று நினைத்தாள் செல்லி.

அன்று வழக்கம்போல் பிள்ளையார் கோயில் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் செல்லி. யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அப்பொழுது நடந்தது. அங்கு வந்து நின்ற காரிலிருந்து ஒருவர் இறங்கி போலீஸ் துணையுடன் வந்தார். ”நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை விட்டு இன்னும் ஒரு வாரத்தில் போய்விட வேண்டும். இந்த நிலத்தை ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டார். இங்கு வீடு கட்டப்போகிறார். ஒரு வாரம் தந்திருக்கிறேன். அதற்குள் போகவில்லையென்றால் பலவந்தமாகப் பிடித்துத் தள்ளி விடுவோம்” என்று எச்சரித்து விட்டுப் போனார். அவர் போய் இரண்டு நிமிஷங்களுக்கு யாருமே எதையும் பேசவில்லை. கிழவன் மெதுவாக ”ஏன் கவலைப்படறீங்க? இது பிறர் இடம். அவுங்க ஏதோ கட்டிடம் கட்டப் போறாங்களாம். போகச் சொன்னால் நாம் போக வேண்டியதுதானே! நமக்கென்ன இதை விட்டால் இன்னும் எத்தனையோ மரத்தடி!” என்று சமாதானம் சொன்னான்.

”அதெல்லாம் நாம்ப ஒண்ணும் போக வேண்டியதில்லை. நம்மை யாரு விரட்டுறாங்க பார்க்கலாம். பிடித்துத் தள்ளி விடுவாராமில்லை; அதையும் பார்த்து விடறேன். நான் ரௌடி. நல்லகண்ணுவை அழைச்சிட்டு வர்றேன். நம்மைக் கிளப்ப வருகிறவங்களுக்கு அவன் பதில் சொல்லுவான்” என்றாள் இந்திராணி.

ன்று இரவு பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்ததும் இந்த எட்டு மாத காலத்தில் நூறு ரூபாய் சேர்ந்து விட்டதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள் செல்லி. சுடலைமுத்து புது ரிக்‌ஷாவைப் பார்த்ததும் எப்படி மனம் மகிழ்வான்? இந்த இனிய நினைவில் லயித்த செல்லி ‘பொழுது விடிந்ததும் பணத்தைக் கொடுத்து ரிக்‌ஷாவை வாங்கிவிட வேண்டும்’ என்ற முடிவுடன் படுத்தாள். தூக்கத்தில் கனவில்கூட ரிக்‌ஷாவைத்தான் கண்டாள். இரவு இரண்டு மணி இருக்கும். திடீர் என்று ‘ஐயோ பாம்பு… பாம்பு அடியுங்களேன்’ என்ற கூக்குரலைக் கேட்டு விழித்தாள் செல்லி. பிள்ளையார் விக்கிரகத்தருகே கையில், பணம் வைத்திருந்த டப்பாவுடன் ரௌடி நல்லகண்ணு நின்று கொண்டிருந்தான். அவன் காலைச் சுற்றி ஒரு பாம்பு இருந்தது. நல்லகண்ணு பதறியபடி டப்பாவைக் கீழேயே போட்டுவிட்டான். அந்த டப்பாவை ஒரு சிறு பூட்டினால் பூட்டியிருந்தாள் செல்லி. அதனால் அவனுக்கு அதைத் திறக்க முடியவில்லை. ”அய்யோ! என் பணம். பிள்ளையாரப்பா நீதான் பாம்பைக் காட்டி என் பணத்தைக் காப்பாற்றினாய். இல்லையேல், நான் சாப்பிடாமல் சேர்த்த பணம் திருட்டுப் போயிருக்கும்” என்றபடி டப்பாவைக் கையில் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்திராணிக்கு எப்படியோ விஷயம் தெரிந்திருக்கிறது. நல்லகண்ணுவை விட்டுத் திருடச் சொல்லியிருக்கிறாள். அதை நினைக்க அவள் மனம் கொதித்தது.

”பாம்பை அடியுங்களேன்” என்ற கூக்குரலைக் கேட்டு விழித்துக்கொண்ட பாம்பாட்டி, ”அடாடா பயப்படாதே, ஐயா! அது என் பாம்புதான். நேற்று அவசரத்தில் சரியாகக் கூடையை மூட மறந்துவிட்டேன் போலிருக்கிறது. அது வெளியே வந்திருக்கிறது. நல்லவேளை! கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால் என் பிழைப்பிலே மண் விழுந்திருக்கும்” என்றபடி பாம்பை எடுத்துக் கூடைக்குள் போட்டு மூடினான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இந்திராணி, ”அது சரி, அந்தப் பணத்தை இப்படிக் கொடு. அது என் பணம். நான் சேர்த்த பணம். பூனை மாதிரி இருந்துகிட்டுப் பணத்தை எடுத்துப் பிள்ளையார் விக்கிரகத்துக்கு அடியிலே மறைச்சு வசசிருக்கியே; உனக்கு எத்தனை தைரியம் இருக்கணும்? இதுக்குதான் பிள்ளையார் கோயிலைச் சுத்தம் பண்ணிக் கும்பிட்டுக்கிட்டிருந்தாயோ?” என்று கடிந்தாள். செல்லி நடுநடுங்கி விட்டாள். ”இப்படி ஒர் அபாண்டமா? கடவுளே, கை நோக, உடல் நோக, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி நான் சம்பாதித்த காசு என் புருஷனுக்குக் கூடத் தெரியாமல் சேர்த்து வைச்ச காசு” என்று பதறினாள் செல்லி.

சுடலைமுத்து நடப்பதை ஒன்றும் நம்ப முடியாமல் சிலையாக நின்றிருந்தான்.

”நன்றாகத்தான் கதை ஜோடிக்கிறாய்! பணத்தை கொடு அம்மே! இல்லைன்னா போலீசுக்காரனைக் கூப்பிட்டுடுவேன்” என்றாள் இந்திராணி மிடுக்குடன்.

நல்லகண்ணு பீடியைத் தூர எறிந்து விட்டு ”அம்மே டப்பாவைக் குடுத்திடு. நான் பொல்லாதவன். வீணா வம்புக்கு வராதே” என்று மிரட்டினான்.

இதுவரையில் பேசாமல் இருந்த சுடலைமுத்து, ”செல்லி! அந்த டப்பாவை அவள்கிட்டே குடுத்திடு. எனக்கு ரிக்‌ஷாவும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். கோர்ட்டு, போலீசு என்று போகாமே மானமாக வாழ்க்கை நடத்தினால் போதும்” என்றான்.

”எப்படிங்க கொடுப்பேன்? என் உயிரை விட்டுச் சம்பாதிச்ச பணம். என் வாழ்வே இந்தப் பணத்தை நம்பித்தானே இருக்கு? இந்தப் பணம் என்னுடையது என்பதற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி” என்று கதறினாள் செல்லி. அதிகப் பேச்சுக்கு இடம் வைக்காமல் நல்லகண்ணு செல்லியின் கையிலிருந்த டப்பாவைப் பறித்தான்.

”புருஷனுக்கு ரிக்‌ஷா வாங்கணும் என்கிற ஆசையிலே திருடவும் துணிஞ்சுட்டே!” என்றபடி வெற்றிலையைக் காரி உமிழ்ந்தாள் இந்திராணி. நல்லகண்ணு டப்பாவை இந்திராணியிடம் கொடுத்தான். செல்லி வயிற்றில் அடித்துக்கொண்டு ”கடவுளே! இந்த அநியாயம் எங்காவது நடக்குமா?” என்று புலம்பினாள். இந்திராணி ஒரு கல்லை எடுத்துத் தட்டி டப்பாவைத் திறந்தாள். அதை பார்த்ததும் ”அய்யோ!” என்று அலறினாள் இந்திராணி. டப்பாவில் காகிதத் துண்டும் ஓட்டாஞ்சல்லியும்தான் இருந்தன. இதைப் பார்த்த செல்லியும் திகைத்து நின்றுவிட்டாள். இந்திராணி ஒரு நிமிஷம் யோசித்தாள். ஏதோ விஷயம் புரிந்தது போல் நல்லகண்ணுவை நோக்கி ”என்ன மச்சான்! நாடகத்துக்குள்ளே நாடகமாடறியா? முதல்லே பணத்தை எடுத்துக்கிட்டு வேஷம் போட்டு என்னை ஏமாத்தறியா? எடு பணத்தை” என்று மிரட்டினாள். நல்லகண்ணுவுக்கும் கோபம் வந்துவிட்டது.

”நீதான் என்னை ஏமாற்றினாய். இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்றான் நல்லகண்ணு.

இந்திராணி பெண் புலியாக மாறினாள். ”அட சீ! நீயும் ஒரு மனுஷனா? நீ மட்டும் என் பணத்தைக் குடுக்கல்லே, உன்னைச் சும்மா விடமாட்டேன். உன் வண்டவாளங்களைப் போலீசுக்குச் சொல்லி விடுவேன். இந்த இந்திராணியை என்ன என்று நினைத்தாய்?” என்று சீறினாள்.

”எனக்கு அப்பவே தெரியும்… பணம் யாரு சேர்த்தாலும் அது பகையிலேதான் முடியும் என்று” என்றான் கிழவன்.

”ஏ கிழவா நீ பேசாமல் இருக்க மாட்டே! உன்னை யாரு கூப்பிட்டாங்க? நடுவே புகுந்து பேசினே, அடித்து நொறுக்கி விடுவேன்” என்றான நல்லகண்ணு. பிறகு இந்திராணியிடம் ”என்ன அம்மே, எங்கிட்ட படிச்ச வித்தையை என்கிட்டேயே காட்டறியா? போலீசுன்னா எனக்குப் பயமா? ஒண்ணு நினைச்சுக்க… நான் போலீசுக்குப் போனால் நீயும் என் பின்னாலே வரவேண்டியதுதான். உன் பணத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் கண்டிப்பாக.

”சரி, இந்த இந்திராணியை யாரும் ஏமாத்த முடியாது. உங்கிட்ட பேசிப் பிரயோசனமில்லே. நான் போலீசாரை விட்டு உன்னைக் கவனிக்கச் சொல்றேன்” என்றபடி வேகமாக நடந்தாள் இந்திராணி. கீழே கிடந்த தகர டப்பாவைக் காலால் உதைத்து தள்ளிவிட்டு நல்லகண்ணுவும் அவளைப் பின்தொடர்ந்தான்.

”தாத்தா! நான் என்ன செய்வேன்? நீயே சொல்லு. நான் இந்திராணி பணத்துக்கு ஆசைப்படுவேனா?” என்றாள் செல்லி கிழவனிடம். கிழவனுக்கு அவளை எந்த விதத்திலும் தேற்ற முடியவில்லை. அழுது அழுது செல்லியின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்து விட்டன. எத்தனை கட்டுப்படுத்தியும் அவளால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுடலைமுத்து பொறுமையாக, ”ஏம் புள்ளே இப்படி வருத்தப்படறே? உயிரா போயிடுச்சு? பணம்தானே; போனால் போகட்டும். இனிமேலும் சம்பாதிக்கலாம்” என்றான்.

”இனிமேல் எப்படிச் சம்பாதிப்பது? வேர்வை சொட்ட வேலை செய்த காசைக் காரணமில்லாமல் அநியாயமாக இழப்பதென்றால் அதை என்னால் தாள முடியாது” என்றாள் செல்லி.

நொண்டிப் பிச்சைக்காரன் ஒருவன் அந்த இடத்தை விட்டே போய்விட நினைத்துத் தன் சட்டிப் பானைகளை மூட்டை கட்டிக் கொண்டிருந்தான். கிழவன் எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டும், உடல் உபாதை தாளமுடியாமல் முக்கி, முனகிக் கொண்டும் படுத்திருந்தான்.

Image

தன் மூட்டை முடிச்சுக்களைப் புது இடத்துக்குப் பெயர்த்து எடுத்துச் சென்ற பாம்பாட்டி திரும்ப மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கச் செல்லியிடம் வந்து, ”நான் நெனச்சது சரியாய்ப் போச்சு. நல்லகண்ணுவும் இந்திராணியும் சண்டை போட்டுக்கிட்டாங்க. நல்லகண்ணு கோபத்தில் இந்திராணியை அடித்துவிட்டான். இந்திராணி, நல்லகண்ணு திருட்டுச் சாராயம் காய்ச்சும் இடத்தைப் போலீசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாள். இதை அறிந்த நல்லகண்ணு இந்திராணியை மேலும் உதைத்து அவள் வண்டவாளங்களையும் போலீசுக்குச் சொல்ல, போலீஸ் வண்டி வந்து, இந்திராணி நல்லகண்ணு சாராயம் காச்சும் பானை, துணை ஆட்கள், எல்லோரையும் ஏற்றிக்கொண்டு போய் விட்டது. இனிமேல் குறைந்தது ஆறு மாசம் அவுங்க சர்க்கார் விருந்தாளிதான்” என்றான். யாரும் எதையும் பேசவில்லை. வெகுநேர மௌனத்துக்குப் பிறகு, ‘யாரு ஜெயிலுக்குப் போனால் என்ன? என் பணம் போயிற்று’ என்றாள் செல்லி உடைந்த குரலில்.

கிழவன் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தான். ”செல்லி! இங்கே வா! இதோ பாரு, நீ உழைச்சுச் சம்பாதித்த பணம் எங்கும் போய்விடவில்லை. இதோ என் கந்தல் துணி மூட்டைக்குள் இருக்கிறது. எடுத்துக்கொள். நேற்று இரவு இந்திராணி நல்லகண்ணுவிடம் பணத்தைத் திருடும்படி சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டுவிட்டேன். உன் பணம் பறிபோவதை நான் விரும்பவில்லை. ஆகையால் அவர்களை முந்திக் கொண்டு பணத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டு, காகிதத் துண்டையும் ஒட்டாஞ்சல்லியையும் வைத்து விட்டேன்” என்றான் கிழவன்.

பணத்தைப் பார்த்ததும் செல்லிக்கு மகிழ்ச்சியால் கண்ணீர் வந்துவிட்டது. ”தாத்தா! கடைசியாக நான் பாடுபட்டுச் சேர்த்த பணம் கிடைத்துவிட்டது. நான் நம்பி வந்த பிள்ளையார் என்னைக் கைவிடாமல் உன் உருவத்தில் வந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறது. கடவுள் எங்கே என்று தேட வேண்டாம். அவர் நல்லவர்கள் உள்ளத்திலும் இருப்பார் என்று தெரிந்து விட்டது” என்று கூறிய செல்லி, பிள்ளையாரை நோக்கி நன்றிப் பெருக்குடன் கரம் குவித்தாள். அந்த மரத்தடிப் பிள்ளையார் அப்பொழுதும் கல்லாகவே இருந்தார்!

***

Image courtesy: http://www.dharsanam.com/

http://www.photogalaxy.com/

http://r2rapps.files.wordpress.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி 

காலத்தை வென்ற கதைகள் – 29

Image

கோமகள்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி. பாரம்பரிய கருத்துகளில் முரண்படாது தன் எழுத்தை அமைத்துக்கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொலைக்காட்சிக்காக நாடகங்களும் எழுதியிருக்கிறார். இவரின் ‘அன்னை பூமி’ நாவல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது. இவரின் படைப்புகள் கல்லூரி மற்றும் பள்ளி மேல்நிலைப் பாடப் புத்தகங்களில் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

பால் மனம்

டைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே ஜொலிக்கும் கட்டி வைரமாக எழில் சிந்தும் அந்தப் பருவம். மீட்டாமலேயே குரலிடும் மோகன வாத்தியமாக இசையிடும் நாதநயம் அதன் மழலை. லோகாயத லாப நஷ்டங்களை, சூதுவாதுகளைக் கற்ற பெரியவர்கள்கூட சின்னக் குழந்தையின் சிரிப்பில் சொக்கி நிற்கிறனர். பெருங்காற்றே தென்றலுக்குத் தலை சாய்ந்து நிற்பது போல்! எங்கள் வீட்டில் என் அண்ணாவின் முதல் குழந்தையாகக் கிருஷ்ணா பிறந்த போது நாங்கள் கடவுளின் கருணையை ஏற்று மகிழ்ந்தோம். எங்களிடையே கிருஷ்ணா வளர ஆரம்பித்தாள். இல்லை கிருஷ்ணாவை நாங்கள் வளர்க்க ஆரம்பித்தோம்!

”கிருஷ்ணா!” என்று குரல் கொடுத்தவாறே குழந்தையைத் தேடினாள் மன்னி.

பிஞ்சு விரல்களால் ஜன்னலைப் பிடித்தவாறே நின்று தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா தன் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். ஈரம் பிதுங்கும் வெள்ளரிப் பிஞ்சாக முகம். சிறகுகளாகப் படபடக்கும் இமைகள். கண்ணாடி மணிகளாக உருளும் விழிகள். பூ நயம் போல் உதடுகள். ஒளியரும்புகளான பற்கள். நுங்கு நீரின் குளிர்ச்சியாகக் குரல். தெய்வ வடிவைச் சின்ன உடலில் சிறைப்பிடித்த களை. முகத்தில் எந்த நேரமும் உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான ஒரு சிந்தனைச் சாயல்.

”என்னடி கண்ணு! தெருவிலே என்ன பார்க்கிறே?” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டாள் மன்னி.

”அம்மா! அதோ பாரம்மா, நாய்க்குட்டி!” அவள் பிஞ்சு விரல் சுட்டிய இடத்தில் குப்பைத் தொட்டியோரம் ஒரு சொறி நாய் படுத்திருந்தது.

”சீ! அது அசிங்கம்! நம்ம நாய்க்குட்டி ‘டாமி’யைப் பார். அழகாக சுத்தமாக…”

”அம்மா! அந்த நாய்க்கும் சோப்பு போட்டுக் குளிப்பாட்டினா என்னம்மா?”

”அது தெரு நாய். அதைத் தொடப்படாது.”

”ஏன், தொடப்படாது? நம்ம நாயை மட்டும் தொடலாமா?”

”அப்பா திட்டுவாங்க” என்று முத்தாய்ப்பு வைக்க முயன்றாள் மன்னி.

குழந்தையா விடுவாள்? ”அப்பா, திட்டாட்டா தொடலாமா அம்மா?” என்று தன் கேள்வியைத் தொடர்ந்ததும் நான் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்.

மன்னி என்னிடம் குறைப்பட்டுக் கொண்டாள். ”பாரேன் ராமு! இவள் கேள்விக்குப் பதில் சொல்லவே ஒரு தனி ஆள் போட வேண்டியதுதான்! உம்! நீ படி… இவள் இப்படிப் பேசினால் நீ படிக்கிறதெங்கே?.. வாம்மா, கிருஷ்ணா! உள்ளே போகலாம். சித்தப்பா படிக்கட்டும்.”

எனக்குப் படிக்க ஓடவில்லை. குழந்தைக்குத் தெரு நாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கா? அல்லது இத்தகு சந்தேகங்களின் மூலம் உலகை அறிய முயலும் ஆவலா?

Image

சதா ‘சலசல’வென்ற பேச்சு. சிலபோது அவசரத்துக்கு நினைத்தபடி பேச்சு வராமல் ஜாடைகள் காட்டும் அழகு கூடக் கூட எந்த வேலைக்கும் வந்துவிடும் சுறுசுறுப்பு. மன்னிக்குத் தெரியாமல் அரிவாள்மனையில் உட்கார்ந்து விரலைக் காயப்படுத்திக் கொண்டு அதை அம்மா பார்த்துவிட்டாளோ என்று ஓரக் கண்ணால் நோட்டமிட்டு அச்சத்தோடு தூர வந்துவிடும் குறும்பு. மூன்றே வயதை எட்டிய குழந்தை கிருஷ்ணா கேள்விகளின் சொரூபம்தான்! காலையில் அப்பாவிடம் பாடம் சொல்லிக் கொள்ளும்போது ஆரம்பிக்கும் கேள்வியை, இரவு அம்மாவிடம் படுக்கும் போதுதான் முடிப்பாள். இடையே அவள் சிரிப்பதைவிடச் சிந்திப்பதுதான் அதிகம் போல் தோன்றும்.

காலையில் கீரை கொண்டு வரும் பெண், ”குழந்தை!” என்றுதான் குரல் கொடுப்பாள். குழந்தை எங்கிருந்தாலும் ஓடிப்போகும்! கன்னத்தை வழித்து முத்தமிட்டு விட்டு அவள் தரும் கீரைக் கட்டை வாங்கி வருவதில் குழந்தைக்குத் தனி ஆசை. கீரைக்காரப் பெண் கல்யாணம் செய்து கொண்டு போய் விடவும், அவள் அம்மா கீரை சுமந்து வர ஆரம்பித்தாள். வயதானவள் அவள். நோய்க்காரி என்றும் தெரிந்தது. அவளைக் கண்டதும் கிருஷ்ணா உற்சாகத்துடன் ஓடினாள்.

”கிருஷ்ணா! கிழவியைப் போய்த் தொடாதே. உடம்பு சரியில்லாதவள்” என்று மன்னி கூவினாள்.

அவள் குரலிலிருந்த கண்டிப்பால் திகைப்படைந்த குழந்தை என்னைப் பார்த்தாள். ”அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடலியா சித்தப்பா?”

நான் கிருஷ்ணாவைத் தூக்கிக் கொண்டேன். ”சமர்த்தா அம்மா சொன்னபடி கேட்டா, சாயந்திரம் காந்தி மண்டபம் அழைச்சுக்கிட்டுப் போவேன்.”

”நிஜம்மாவா சித்தப்பா?”

”ஆமாம்!”

காந்தி மண்டபத்துக்குக் குழந்தையை அழைத்துப் போய்விட்டால், அவளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எவ்வளவு விடைகள்! புல் தரையில் ஓடுவதிலிருந்து, செயற்கைத் தாமரைக் குளத்தில் தன் நிழலுருவத்தைக் கண்டு கை கொட்டுவது வரை எதிலும் ஆச்சரியதந்தான்! நேரு பூங்காவின் மிருகங்களிடம்தான் எத்தனை ஆசை! பயபக்தியான நேசமான பார்வை! எப்பொழுதும் பார்த்திருக்கும் பஞ்சவர்ணக் கிளியிலிருந்து, புதிதாக வந்த புலிக்குட்டி வரை எதைக் கண்டாலும், நேற்றுப் பார்த்த நேசப்பார்வையில் இம்மி மதிப்பும் குறைந்திருக்காது. குட்டி ரயிலில் குதூகல உருவமாய், மகிழ்வின் பனித்துளியாய்க் கையசைத்தவாறே செல்லும்போது ஒரு தனி சிலிர்ப்பு அவளுக்கு. ஊஞ்சலில் ஆடும்போதும் சறுக்கி விளையாடும் போதும் ஓர் ஆவேசக் குதூகலம் அவள் முகத்தில் ஏற்படும். வீட்டுக்குத் திரும்பும்போது தெருவில் எப்போதோ தென்படும் குதிரை வண்டி, ஓரத்தில் மேயும் ஆட்டுக்குட்டி ஆகியவற்றைக் கண்கொட்டாமல் பாப்பாள். ”குதிரையும் ஆட்டுக்குட்டியும் ஏன் நேரு பூங்காவில் இல்லை சித்தப்பா?” என்ற கேள்வி வேறு!

***

ன்று மாலை சொன்னபடியே கிருஷ்ணாவை காந்தி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். கை வண்டியை நிறைந்த பாரத்துடன் நெரம்பி இழுத்தவாறே சென்றுகொண்டிருந்தான் கூலியாள் ஒருவன்.

”சித்தப்பா! பாவம் அவன்! காலிலே செருப்பே போடலை சித்தப்பா! கல்குத்துமே, வெய்யில் சுடுமே! என்னோட செருப்பு அவனுக்குச் சின்னது! உன் செருப்பைக் குடுத்துடு சித்தப்பா! நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே..!”

குழந்தையின் குரலிலிருந்த உருக்கத்தையும் துன்பம் கண்டு பொறாத மனத்தையும் கண்டு நான் நெகிழ்ந்தேன். அவளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டேன். குழந்தையா பேசுகிறாள்?

‘‘செருப்பைக் குடுத்துடு சித்தப்பா.”

”அவன் தூரப் போயிட்டான். இன்னொரு நாள் குடுத்துக்கலாம்” என்று அவளைச் சமாதானப்படுத்தி விட்டுப் பேச்சை மாற்றினேன். ”இன்னிக்கு நம் வீட்டில் அடைதானே? உனக்கு ரொம்பப் பிடிக்குமில்லே?”

”அடை மொறு மொறுன்னு இருக்கும். ரொம்பப் பிடிக்குமே!”

குழந்தை மறதி! அதை உபயோகித்துதானே அவர்களைத் தன் நினைவிலிருந்து மாற்றி நம் உணர்வுக்கு அடிமையாக்கி விடுகிறோம்?

அன்று கிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள்! விசேஷமாகச் சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்திருந்தாள் மன்னி. புதிய உடைகளைப் போட்டுக்கொண்டு குதித்தாள் குழந்தை. சாப்பிடத் தோன்றாத அளவு சந்தோஷம் அதில். அவள் பெயரில் தயாரான விருந்தை நாங்கள் எல்லாம் வயிறு புடைக்க உண்டோம்!

இரண்டு மூன்று தினங்களாக வராமல் இருந்த கீரைக்காரக் கிழவி அன்று வந்தாள்.

”சமையல் எல்லாம் காலையிலேயே ஆச்சு. இன்னிக்குக் கீரை வேண்டாம்” என்றாள் மன்னி.

”அம்மா!” வேண்டுகோளாக ஒலித்தது கிருஷ்ணாவின் குரல். ”அந்தக் கிழவிக்குச் சர்க்கரைப் பொங்கல் குடேன்.”

”அடி என் சமர்த்து! எனக்குக்கூட மறந்து போச்சே… டீ கிழவி! கொஞ்சமிரு, வரேன்…”

இலை நறுக்கில் உணவு வகைகளை வைத்துக் கிழவியின் கையில் இட்டாள் மன்னி. கிழவியின் நடுங்கும் கரங்கள் ஆவலோடு உணவை ஏந்தின.

”அம்மா! கிழவி கை ஏன் நடுங்கறது?”

”வயசானவள். பலமில்லை.”

”எனக்குப் பலம் வரணும்னுதானே டானிக் தரேம்மா. அந்த டானிக்கைக் கிழவிக்கும் குடும்மா!”

”இதோ பார், கண்ணு! எனக்கு எல்லாம் தெரியும். நீ பேசாமல் இருக்கணும்.”

கிழவி போகன்வில்லா கொடியருகே போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை தன் தாயருகே தயக்கத்தோடு போனாள்.

”அம்மா! பூச்செடிகிட்டே சொத சொதன்னு சேறாக கிடக்கும்மா!”

”அப்படித்தான் இருக்கும்.”

”கிழவி பாவம்மா! சேத்திலே உக்கார்ந்து சாப்பிடறாளே..!”

”அவளுக்கு அப்படித்தான் கண்ணு பழக்கம்.”

”அம்மா! கிழவிக்கும் மேஜையின் மேலே சாப்பாடு போடும்மா!”

”போடக்கூடாது. அப்பா வைவார்.”

”நம்ப மட்டும் ஏன் மேஜையின் மேலே சாப்பிடறோம்?”

”அப்படித்தான் சாப்பிடணும்.”

”போம்மா! கிழவி பாவம்!”

”உன்னைச் சீக்கிரமே கிண்டர் கார்டனிலே போட்டுடறேன், இரு, ஸ்கூலுக்கு போனாத்தான் நீ கேள்வி கேட்க மாட்டே!’’

‘‘ஓ! எனக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்குமே… ‘யூனிபார்ம்’ போட்டுட்டுப் பெட்டி எடுத்திட்டு, பெரியம்மா வீட்டு அக்கா போற மாதிரி, நானும் பஸ்லே போவேனே!”

அவள் ஞாபகத்தை திசை திருப்பிவிட்ட திருப்தி மன்னியின் முகத்தில் விரிந்தது. தனக்கென்று ஏற்படும் தனித்த உணர்ச்சிகளை ஓர் உருவமாக்கிச் சேமிக்க முடியாத குழந்தை மனம், லேசான பஞ்சு போல் நாம் ஊதும் திசைக்கெல்லாம் பறந்தோடுகிறது. நாளைக்கே அவள் பெரியவளானால் தன் உணர்ச்சிகளைக் கடைப்படிக்க மாட்டாளா என்ன?

***

”திருமுலைப்பால் உற்சவத்துக்கு வரும்படி அக்கா எழுதியிருக்கிறாள்” என்று மன்னி ஆரம்பித்தாள்.

”இப்போது இருக்கிற வேலையில் சீர்காழி போகிறதாவது” என்று அண்ணா எடுத்ததுமே மறுத்து விட்டார்.

”நான் மட்டுமாவது போயிட்டு வரேனே. போகல்லேன்னா எனக்கு ஒரு குறையாவே இருக்கும்.”

”அடுத்த வருஷம் பார்த்தால் போச்சு”.

”அடுத்த வருஷம் அக்கா மாற்றலாகிப் போயிடுவாள்.”

”நமக்கே அந்த ஊருக்கு மாற்றலானால் பார்த்துக்கறது. இங்கிருந்தே மனசாலே சேவிச்சுடு இப்போது!”

மன்னி பதில் பேசவில்லை. அவளுக்கு இந்த விஷயத்தில் மனத்தாங்கல்தான் என்று காட்டிக்கொள்ளும் விதமாக, அழாமலிருக்கும் போதே, தூளியில் கிடந்த கைக்குழந்தை ரவியை ஆட்டிவிட்டாள்!

***

கோடை மழை கொட்டிக்கொண்டிருந்தது. தெருவெல்லாம் ஈர நசநசப்பு. மரங்களும், செடிகளும், மண்ணும் குளிர்ந்து கிடந்தன. இரவின் அமைதியை மழையும், சில்வண்டுகளின் ரீங்காரமும், தவளைகளின் சத்தமும் அவ்வப்போது கலைத்த வண்ணம் இருந்தன.

தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் நடுக்கத்தைக் குரலில் பிரதிபலித்தவாறு இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நின்றிருந்தன. ”ம்மே, ம்மே!” என்ற அவைகளின் குரல்களைச் சங்கீதமாக அனுபவித்து ரசித்தாள் கிருஷ்ணா. அவைகளின் பட்டுப்போன்ற உடல்களைத் தடவிப் பார்த்தாள். கொஞ்ச நேரம் பயந்த ஆட்டுக் குட்டிகள் அச்சம் தெளிந்து அவளுடன் விளையாட ஆரம்பித்தன. தூக்கம் கண்ணைச் சொக்கும் போதுதான் அவள் உள்ளே வந்தாள்.

இரவெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று பெய்கிறது. தெரு வராந்தாவில் ஒதுங்கியிருந்த ஆட்டுக் குட்டிகள் அங்கேயேதான் இருக்கின்றன என்பதற்கு அடையாளமாக அவற்றின் ஈனசுரமான குரல்கள் நடுங்கும் குளிரூடே மந்தமாகக் காதில் விழுந்துகொண்டேயிருக்கின்றன.

விடிந்த பொழுதூடே கைக்குழந்தையின் பசிக்குரல் ஓலமிடுவதும், மன்னி ஃபிளாஸ்க் வெந்நீரை எடுத்துப் பாலைக் கரைத்துப் புட்டியில் நிரப்புவதும் தெரிகிறது. குழந்தை ரவி புட்டிப்பாலை மெல்ல உறிஞ்சுகிறான். அப்போது தெருவில் பால்காரன் குரல் கொடுக்கிறான். மன்னி பால் புட்டியை ரவியின் வாயிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டுப் பால் வாங்கப் போகிறாள். சிறிது வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் கைகால்களை உதைத்துக் கொண்டான் அவன்.

பாலை வாங்கி வந்த மன்னியிடம் அப்போதுதான் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா அதீத ஆவலோடு கேட்டாள். ”அம்மா! ஆட்டுக் குட்டி இருக்காம்மா?”

”இருக்கே. தெருவிலே போய்ப் பாரேன். ராத்திரியெல்லாம் மழையில் நனைஞ்சிருக்கும் போலிருக்கு பாவம்!”

கிருஷ்ணா ‘விருட்’டென்று எழுந்தோடினாள். தெருவில் அவள் மழலையுடன் ஆட்டுக் குட்டிகளின் நேச பாவமான குரல்களும் கலந்து ஒலித்தன.

சிறிது நேரத்தில் மன்னியின் குரல் பல் விளக்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பியது. ”எங்கே, கைக்குழந்தைகிட்டே இருந்த பால் புட்டியைக் காணோம்?”

”எங்கே போயிடும்?” என்ற அண்ணா தினசரியை விரித்தார்.

”எங்கேதான் போயிடும் பின்னே? பால் வாங்கணும்னு போனேன். இரண்டு வாய்ப் பால்தான் குழந்தை குடிச்சிருப்பான். புட்டியைக் கீழே வச்சிட்டுப் போயிருந்தேன். இங்கே காணோமே?”

எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வாய் கொப்புளித்து விட்டு, தெருக் கதவருகே ஓசையிடாது எட்டிப் பார்த்தேன். என் ஊகம் பொய்யாகவில்லை. என்ன விந்தை! உணர்ச்சியைக் கூறு போட்டுக்கொள்ள அண்ணாவையும், மன்னியையும் ஓசையிடாது வரவழைத்து வீட்டுக் கேமராவையும் எடுத்து வந்தேன்.

மழைச் சாரலில் ஒன்றி நின்றதால் உரோமங்கள் நனைந்து கரும் பட்டாகப் படிந்திருக்க, இளம் குழவிகளாக நின்ற அந்த இரு ஆட்டுக் குட்டிகளில் ஒன்றின் வாயில் பால் புட்டியின் குமிழை வைத்துக் குழந்தை கிருஷ்ணா அதற்குப் பாலை ஊட்டிக் கொண்டிருந்தாள். அதன் ஈனக்கூச்சல் அடங்கி சந்தோஷ முனகல்கள், ஆனந்த உறுமல்கள் சூழ்ந்திருக்கின்றன. முன்னங்கால்களை ஊன்றி ஆட்டுக்குட்டி பாலைப் பருகும் விதம் கண்ணைக் கவர்கிறது. மற்றொரு ஆட்டுக் குட்டி நேசபாவத்துடன் கிருஷ்ணாவின் காதை நக்குகிறது. கூச்சத்தோடும் ஆமோதிப்போடும் முகம் சுளித்துக்கொண்டு சிரிக்கிறாள் குழந்தை. அவன் கண்களில் அருள் வெள்ளம். முகத்தில் அன்பு நிழல். மனத்திலோ பொங்கிப் பெருகும் கருணைப்பரிவு. அந்த இரு சின்ன உயிர்களுக்கும் அவள் ஒரு தாயாகி விட்டாளா? அந்த உணர்ச்சிக்கு வேறு என்ன பெயர் சூட்டலாம்?  வியப்புடன் நிற்கிறோம் நாங்கள். தெய்வ சந்நிதானத்தில் அருள் சுடர் தெறிப்பில் கட்டுண்டாற்போல்!

என் ‘ஃபிளாஷ்’ அந்தக் காட்சிக்கு நிரந்தர உருவம் தருகிறது. அப்போதும் குழந்தையின் ஈடுபாடு சிதறவில்லை.

”பார்த்தியா, சாவித்திரி? திருமுலைப்பால் உத்ஸவம் இன்னிக்குத்தானே? உனக்குக் குறையாகாம வைக்கத்தான் அதே உத்ஸவம் இங்கே நடக்கிறது! இது தெய்வ சந்நிதிடி! அம்பிகை அருள் சுரந்து ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியது போலத்தான் இங்கேயும் ஞானப்பால் ஊட்டறாள் நம்ப பெண்! நீ கும்பிடற தெய்வம்தான் உன் எதிர்த்தாப்பலேயே உனக்கு இதை நடத்திக் காட்டறது!”

அண்ணாவின் குரலில் கூடியிருந்த பெருமையும் பாசமும் மன்னியையும் பற்றிக்கொண்டன.

”பாவம்மா, ஆட்டுக்குட்டி! அதுக்கு யாரம்மா பால் தருவா? ராத்திரி பூரா சாப்பிடாமே இந்த ஆட்டுக்குட்டிக்கு ரொம்பப் பசிம்மா!”

”நீதான் இருக்கியேடி!” என்று கிருஷ்ணாவை ஆரத் தழுவிக் கொண்ட மன்னி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள்.

குழந்தை கிருஷ்ணா தனக்கென்று பெற்றிருந்த இரக்க சுபாவம், கருணை மனம் இவற்றைக் கண்டு மன்னி ரொம்பவும் வருத்தப்பட ஆரம்பித்தாள். ஒரு நிமிட நேர நிகழ்ச்சியில் ஆட்பட்டு ஆட்டுக் குட்டிக்குப் பால் தந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். ‘‘இப்படியிருக்கிறாளே, தம்பிக்கு வைத்திருந்த பாலை வீணாக்குகிறோமே என்று தெரியவில்லையே, பாச உணர்வு வரவில்லையே… பிறத்தியார்கிட்டே மட்டும் கனிவா இருந்தால் போதுமா? எப்படி இந்த உலகத்திலே பேர் சொல்லப் போகிறாள்? ஓரொரு குழந்தை எத்தனை சமர்த்தாக இருக்கிறதுகள்!” என்று பேச ஆரம்பித்து விட்டாள்.

”ராமு! நீ ரொம்பச் செல்லம் தரே! தப்புன்னு படறதைக் கண்டிக்கணும். ‘பட்’னு ஒண்ணு குடுத்துடணும். போற போக்குக்கே விட்டு, அடிச்சு வளர்க்காத பிள்ளை உருப்படாது. அவளைப் புகழ்ந்து பேசிப் பேசி ரொம்பவும் ஏறி விட்டது. இனிமேல் அவளை மட்டம் தட்ட வேண்டியதுதான். ‘ஜீனியஸ்’ஸா வருவானள்னு கணக்கு வழக்கில்லாத புஸ்தகங்களையும் பொம்மைகளையும் வாங்கிப் போடறார் உன் அண்ணா. அவளும் அதைக் கொண்டா, இதைக் கொண்டா, அவனுக்குக் குடு, இவனுக்குக் குடுங்கிறாள். கொஞ்சம் கொஞ்சமா குழந்தை மனசை, பெரியவங்க கஷ்டத்தை உணரும்படி மாத்தணும். இல்லேன்னா பின்னாலே கஷ்டம். ரொம்ப வெகுளித்தனமா இல்லாமே, நம்ம வீடு, நம்ம அப்பா அம்மான்னு உணர வைக்கணும்… தன்னுடையது, தனக்கு வேணும்னு புரிய வைக்கணும்…”

”குழந்தைதானே அவள்! வளர்ந்தால் சரியாகிவிடும்” என்றேன் நான். மனத்துக்குள் மட்டும் அவளைப் பற்றிய பெருமிதம் ஓங்கியிருந்தது.

மனிதனின் ஆரம்பப் படைப்புருவம்தான் எத்தனை விநோதமானது! உள்ளதை உள்ளபடி உணர்வதுதானே குழந்தை மனம்! தன்னைப் போன்றே பிறரையும் எண்ணும் குழந்தை தனக்குத் தோன்றுவதையெல்லாம் செய்யும்படி கேட்கிறாள். என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னையை அது உணர்வதில்லை. அந்தக் கல்மிஷத்தை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றுவதைப்போல் அந்த மனத்தில் நாளாவட்டத்தில் கலந்து விடுகிறோம்.

அண்ணாவும் சிறிது சிறிதாய் மன்னிக்குத் தலை அசைக்க ஆரம்பித்தார். ” நீ சொல்றதும் சரிதான் சாவித்திரி! குழந்தையை இப்படியே விடப்படாது. சாமர்த்தியக்காரர்கள் நிறைந்த சந்தை மாதிரி இந்த உலகம் ரொம்பப் பொல்லாதது. அதிலே ஏமாளியா இருக்கிறவனை, இரக்க மனம் படைச்சவனை, அயோக்கியன் ஜெயிச்சுடறான். இப்போதைய வாழ்க்கை முறையிலே கிருஷ்ணாவைப் போன்ற வெள்ளை மனம் படைச்சிருந்தால் வாழறது ரொம்ப சிரமம். அவளை மெள்ள மெள்ள மாற்ற வேண்டியதுதான்!”

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். எந்தப் பெற்றோரும் தன் பிள்ளை நல்லவனாக இருப்பதால் ஏமாந்துவிடுமோ என்று கவலைப்பட்டு, சாமர்த்தியசாலியாக வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அதற்கு என் அண்ணாவும் மன்னியும் மட்டும் விதிவிலக்கா என்ன?

***

காலப் பூங்காவில் ஐந்து வசந்தங்கள் வண்ண ஜாலம் செய்து மறைந்தன. அண்ணா ஊரூராக மாறிக்கொண்டிருந்தார். நான் சென்னையிலேயே தங்கி என் படிப்பை முடித்தேன். அதன்பின் வாழ்க்கைக்கு நிலைத்த ஒரு வருமானம் தரும் உத்தியோகத்தையும் ஏற்றேன். என் முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட நான், அதை என் அண்ணாவின் கையில் தந்து ஆசீர்வாதம் பெறத் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

முதலில் என் நினைவுக்கு வந்தவள் குழந்தை கிருஷ்ணா. கல்லூரி விடுமுறையில் கூடத் தட்டெழுத்தும், சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதால் இடையிடையே எப்போதோ வெளியூரில் தங்கியிருக்கும் அண்ணாவைப் பார்க்கப் போனேன். கிருஷ்ணாவோடு பழகும் நேரமும் மிகக் குறைச்சலாக இருக்கும். இப்போது எட்டு வயதிருக்குமே… பள்ளியில் படிப்பாள். எப்படிப் பேசுவாள்! எப்படி நடப்பாள்? என்னுள் இனிய கற்பனையாக அவள் நடையுடை பாவனைகள் பொங்கிப் பிரவகித்தன. என் டயரியில் பத்திரப்படுத்தியிருந்த அவள் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். என்ன அழகான காட்சி! குழந்தை கிருஷ்ணா ஆட்டுக் குட்டிக்குப் பாலூட்டும் காட்சி நேற்றே நடந்தாற்போல் தோன்றுகிறது.

கிருஷ்ணா என்னிடம் உடனே ஓடி வராமல் வெட்கத்துடன் நின்றிருந்தாள். என்னுடைய அழைப்பின் தூண்டுதலும், நான் வாங்கிப் போயிருந்த தின்பண்டங்களும் அவளை மெல்ல மெல்ல என் அருகே இழுத்து வந்தன. அவளுக்குச் சிறியவன் ரவியும் என்னருகே வந்தான். சிறிது நேரத்திலேயே பிரிந்திருந்ததால் ஏற்பட்ட வெட்கம் நீங்கப் பெற்றவளாய் சகஜ பாவத்துடன் என்னுடன் பழகினாள் கிருஷ்ணா.

அன்று மாலை கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போனேன். தன் பள்ளியைப் பற்றி, கூடப் படிக்கும் மாணவிகளைப் பற்றி, அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்த உடைகளைப் பற்றி என்று அவள் கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தாள். அப்போது ஒரு கிழப் பிச்சைக்காரியை, ஒரு சிறுமி பற்றியவாறே என்னருகே வந்து, ”சாமி! இந்தக் கிழவி வயசானவ சாமி! ரெண்டு நாளப் பட்டினி! ஏதாவது தர்மம் குடு சாமி?” என்று நலிந்த குரலில் கேட்டாள். பிறகு கிருஷ்ணாவைப் பார்த்து அவள் கையிலிருந்த பிஸ்கெட்டைக் கேட்டாள். கிருஷ்ணா பிஸ்கட்டை மறைத்துக் கொண்டாள். நான் நடந்தவாறே சில்லறை இருக்கிறதா என்று துழாவினேன். இதற்குள் பிச்சைக்காரச் சிறுமி என்னைத் தொட்டு மறுபடியும் பிச்சை கேட்டாள்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில் கிருஷ்ணாவிடமிருந்து ஒரு சீறல் கிளம்பியது. ”சீ! எங்க சித்தப்பாவைத் தொடாதே, போ. உனக்குக் காசு தரமாட்டோம்! பிஸ்கெட்டும் தர மாட்டோம்!”

”கிருஷ்ணா! அவள் பாவம்! போனால் போகட்டும். பசிக்குமில்லையா? இந்த அஞ்சு பைசாவை நீயே அவள்கிட்டே போடு, பார்க்கலாம்!”

கிருஷ்ணா நாணயத்தை வாங்கி வெறுப்போடு முகம் சுளித்தவாறே சிறுமியின் மேல் தன் கை பட்டுவிடாமல் தூக்கிப் போட்டாள். பிறகு இதுவரையில் பேசி வந்த குரலிலேயே இப்போதும் பேசினாள். ”நிறையப் பிச்சைக்காரங்க இருக்காங்க சித்தப்பா! எல்லாருக்கும் போட்டா நம்ப காசெல்லாம் ஆயிடும்! அவங்க அப்படித்தான் இருக்கணும்! பிஸ்கெட் வேணுமாம் அவளுக்கு! இது என்னோட பிஸ்கட். என்னோடது எனக்குத்தான்! இதை யாருக்கும் தரமாட்டேன்!” என்ன அழுத்தம்! அவள் குரலில் இயற்கையான கனிவில்லை. என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னை எப்படி இந்தக் குழந்தை மனத்தில் புகுந்தது?

கிருஷ்ணா தொடர்ந்தாள். ”ரவியைப் பாரு, சித்தப்பா! பால் சாதத்தைத் தெரு நாய்க்குப் போடறான். நம்ப ‘டாமி’க்குத்தானே போடணும்?”

நான் குழந்தையைப் பார்த்தேன். அவள் வளர்ந்து விட்டாள். உலகைப் போலவே மற்றவர்களைப் பற்றி நினைக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால், என்னுள் மகிழ்ச்சி எழவில்லையே, ஏன்? நான் பெருமூச்செறிகிறேன். சிரிப்பதை விடச் சிந்திப்பதில் அதிகம் ஈடுபட்டிருந்த குழந்தை எப்படித்தான் மாறிவிட்டாள்? புதிய கருத்துகள் பழைய கனிவை வெள்ளமாக அழித்து விட்டனவா? பணத்தைச் சுயநல எண்ணத்தோடு இயக்கக் கற்றுத் தந்தாகி விட்டதே, இனி அந்தக் குழந்தை தெய்வமா என்ன? ஒரு குழந்தை சுயநலத்தை உணரும் சக்தி படைத்த பின்தான் அது மானிட ஜாதியைச் சேர்ந்ததாகி விடுகிறதே!

***

தெருவில் கிருஷணாவின் அட்டகாசச் சிரிப்பொலி கேட்கிறது. என்னவென்று எட்டிப் பார்த்தேன். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! கல்லடிபட்ட ஆட்டுக் குட்டி, ”ம்மே! ம்மே!’’ என்ற வேதனை முனகலோடு நொண்டியவாறே தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கைக்கொட்டி நகைக்கிறாள் கிருஷ்ணா.

”கிருஷ்ணா! இப்படித்தான் ஆட்டுக் குட்டியைக் கல்லால் அடிக்கிறதா? நொண்டுகிறது பார்! முட்டாள்! இங்கே வா, சொல்கிறேன். சின்னக் குழந்தையில் இரக்கத்துடன் நடப்பாய். வளர வளர எல்லாம் போய் விட்டதா? உள்ளே போ!”

இயல்புக்கு மாறான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டாற்போல் அவள் முகம் வாடியது. என்னுடன் கொண்ட சகஜ பாவத்தை முறித்துக்கொண்டு, அழுத்தமான விறைப்போடு உள்ளே போனாள். முன்பெல்லாம் அவள் ரசனையில் தெரிந்த இரக்கப் பண்பு எங்கே போயிற்று?

வாசலில் சாலை வேலை செய்யும் கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்கிறான். அவனைப் ‘போ போ’ வென்று விரட்டுகிறாள் கிருஷ்ணா. ”எப்பவும் இங்கேதான் கேட்பே, போ, நான் தரமாட்டேன்.”

நான் கண்டிக்கக் குரலெடுக்குமுன் மன்னியின் குரல் கேட்கிறது. ”நேத்திக்கு வந்தவன்தானே? தினமும் ஒரு ஆள் தண்ணீர் கொடுக்க நிற்க வேண்டியதுதான். வேறே வேலை இல்லை.”

”நான் விரட்டிட்டேன்மா!”

”அதுதான் சரி. சமர்த்து! உள்ளே வா!”

Image

குழந்தை தெய்வீக மனம் படைத்திருந்தபோது சலித்த தாயார், சாதாரண உணர்வை ஏந்தியதும் புகழ்கிறாள். மலையருவி இமயப் போர்வையிலிருந்து விடுபட்டு, பூமித் தூசியில் கலந்து விட்டதற்கு இத்தனை மகிழ்வா?

இப்பத்தான் சமர்த்தாமே! எம்மாதிரி பழக்குகிறோமோ அம்மாதிரிதான் பண்பு வளர்கிறது. இயற்கை உணர்வையே செயற்கை உணர்வாகத் திசை திருப்பிவிடும் நம் பழக்க வழக்கங்களுக்கு நாம்தான் பொறுப்பென்றால், நம்மை திசை மாற்றி அமைத்த நம் பெற்றோர், நம் சமூகம் எல்லாம் பொறுப்பேற்க வேண்டியதுதான். குழந்தைகள் குப்பைகள் கலவாத மாணிக்கங்கள்! அவற்றின் மனமொழி மெய்யைச் சூழலுக்கு ஏற்ப நாம்தான் திருத்தியமைக்கிறோம். பச்சை மெழுகாகக் கடவுள் தரும் குழந்தையை நமக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கிறோம். அதன் இயற்கை உணர்வுகளைக் கொன்று புதிய உள்ளத்தை பிரதிஷ்டை செய்கிறோம். அப்படி மாறாதவர்களை வெகுளி, அசடு என்கிறோம். மாறியவர்களைச் சமர்த்து என்கிறோம். இறைவன் சிருஷ்டியை நம் இஷ்டப்படி மாற்றிவிட்டு, சமர்த்து என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை பெருமைப்படுகிறோம்?

அன்று கீரைக் கிழவிக்குத் தன் பிறந்த நாள் உணவைப் படைக்கச் சொன்ன குழந்தை இன்று ஒரு பிச்சைக்காரச் சிறுமிக்கு ஐந்து பைசா போட வெறுக்கிறாள். ஆட்டுக்குட்டிக்குப் பசிக்குமே என்று பரிதாபப்பட்டு, தம்பிக்கு வைத்திருந்த பீடிங் பாட்டிலை எடுத்து ஊட்டிய குழந்தை இன்று அதைக் கல்லால் அடித்து அது நொண்டுவதைக் கண்டு கை கொட்டிச் சிரிக்கிறாள். தெரு நாயையும் குளிப்பாட்டலாம் என்றவள், அதற்கு ஏன் பால் சோறு, நம் நாய்க்கே போடலாம் என்கிறாள். செருப்பில்லாமல் வண்டி இழுக்கும் கூலியாளைக் கண்டு மனம் வெதும்பி என் செருப்பைத் தரும்படித் தூண்டியவள், சாலையில் வேலை செய்யும் தொழிலாளியின் தாகத்துக்குத் தண்ணீர் தராமல் விரட்டுகிறாள்.

அன்பில் விஷத்தை, அறிவில் ஆத்திரத்தை, பாசத்தில் பணத்தை, பண்பில் சுயநலத்தைக் கலந்து வைத்த உலக உணர்வுகள் ஒரு தெய்வீகமான குழந்தை உணர்வில் மனித உணர்வைக் கலந்து விட்டதை உணர்ந்து கொண்டேன். என்ன செய்வது? அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான், காற்றில் தூசுகள் பறப்பதைப் போல்! எனக்கு அது ஒரு பெரிய குறை. வறுமை, நோய், முதுமை ஆகியவற்றைக் கண்டு கலங்கிய குழந்தையா இன்று எல்லா உணர்வுகளையும் ஜீரணித்துக் கொண்டு உலக உணர்வுகளோடு ஒன்றிவிட்டாள்?

இனி, மன்னி பயப்பட வேண்டாம்! கிருஷ்ணா தனியே பஸ்ஸில் பள்ளிக்கூடம் சென்று படித்து வருகிறாள். சின்ன டிபன் பாத்திரத்தில் ஓர் உருண்டை தயிர்சாதம் மட்டும் எடுத்துப் போய்ச் சாப்பிட்டுப் பசியை அடக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். இயந்திரமயமாக நாம் நிர்ணயித்த சட்ட திட்டங்களுக்குள் எவ்வித எதிர்ப்பும் இன்றி லயித்துக் கலந்து பழகிய பசுவாகிவிட்டாள்!

”நீ பார்த்ததுக்குக் கிருஷ்ணா ரொம்ப வளர்ந்துடலை? கெட்டிக்காரியாகி விட்டாள்!” அண்ணா பெருமைப்படுகிறார்.

அவளுடைய வளர்ச்சி எந்த ரூபத்தில் ஏற்பட்டுள்ளது? அருள் வடிவானவள் வெறும் லோகாயத சேற்றில் முளைத்த பூண்டாகி விட்டாளே… அதை வளர்ச்சி என்று எப்படி ஏற்பது?

நான் என் கிருஷ்ணாவை, எனக்குப் பிடித்த உணர்வுகளை ஏந்தி நின்ற குழந்தையை காண வந்தேன். அவளைக் காணமுடியாத ஏமாற்றத்தோடு திரும்பிப் போகிறேன். அப்படிப்பட்டவளை இனி காண முடியாது என்ற உண்மை, என் கண்டத்துள் ஒரு ரகசிய வேதனையாக முட்டுகிறது.

கடவுளின் பிரதிநிதியாகக் குழந்தை பூமியில் ஜனிக்கிறது! ஆனால், மனிதனின் பிரதிநிதியாக உலகை விட்டு நீங்குகிறது!

***

Image Courtesy:

http://barbarafoxwatercolors.blogspot.in

http://fin6.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 28

Image

வசுமதி ராமசாமி

(1917  – 2003)

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர். கல்கி அவர்களின் எழுத்தின் வசீகரத்தில் கவரப்பட்டு எழுதத ஆரம்பித்தார். இந்திய – பாகிஸ்தான் காஷ்மீர்ப் போரைப் பின்னணியாகக் கொண்டு, இவர் எழுதிய நாவல் ‘காப்டன் கல்யாணம்’ குறிப்பிடத்தக்க ஒன்று.

‘பாரத தேவி’, ‘ராஜ்ய லஷ்மி’ போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதியவர்.

எழுத்துப் பணிக்குச் சமமாக சமூக சேவையிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மாதர் சங்கத்தை நடத்தி, பெண்களுக்கு உதவுவதில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்.

கண் திறந்தது 

Image

பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான் ஏதோ இரண்டொரு பாறைகள் கிடக்கின்றன. அவற்றின்மேல் புளியமரத்துப் பழுத்த இலையும், புளியும் ஓடும் உதிர்ந்து கிடக்கின்றன. கல்லைச் செதுக்கும் மங்கள ஒலி மறைந்து விட்டது. கல்லை உளி துளைக்கும் பொழுது பறக்கும் நெருப்புப் பொறிகள் அணைந்து விட்டன.

ஆட்கள் பாறைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து பாடிக்கொண்டே போவார்களே, அந்த ஒலி எங்கேயோ கேட்கிறது. பெரியசாமியின் வீட்டுக்கு அருகில் கேட்கக் காணோம். அவன் வீட்டிலிருந்து எத்தனை எத்தனை தெய்வங்கள் உயிர் பெற்றுக் கோயில்களில் குடிகொள்ளப் போயிருக்கின்றன! எத்தனை எத்தனை சிற்பங்கள் ஆலயங்களின் மேல் மண்டபத்தை அலங்கரித்திருக்கின்றன!

பெரிய பற்களைக் காட்டிக்கொண்டு வாய் திறந்து நிற்கும் சிங்கங்கள், யாளிகள், பின்னங்காலைச் சாய்த்து, முன்னங்காலை நீட்டிக்கொண்டு பாயும் குதிரைகள், அசைந்து வரும் யானைகள் இப்படி எத்தனையோ, பாருள்ள அளவும் விளங்கும் கற்கோயில்களாக இருக்கின்றன! பிரமனை வெற்றி  கொண்டவனல்லவா பெரியசாமி! பிரமனின் படைப்பிலாவது அழகும் உண்டு, அவலட்சணமும் உண்டு. பெரியசாமியோ எல்லையற்ற அழகுத் தெய்வங்களைப் படைத்து இருக்கிறான். எத்தனை லிங்கங்கள், அம்பிகை, நவக்கிரகம், கணபதி… எண்ணி முடியுமா? ஏட்டில் அடங்குமா? அவன் மற்றவர்களைப்போல் கோயில் பிரகாரத்தில் சிலை செய்யவில்லை. தொலைவில் உள்ள மற்ற ஊர்களுக்கும் கூடத் திருப்பணி வேலையை மேற்கொண்டிருந்ததால், அவன் வீட்டு வாயிலில் உள்ள புளிய மரத்தடியே அவனுக்குக் கல் பட்டறையாக இருந்தது.

இன்று சிற்பி பெரியசாமி மறைந்து விட்டானா? அப்படியிருந்தால் பரவாயில்லையே! அது இயற்கையின் நியதிதானே? அதே பெரியசாமி தளர்ந்த உடலுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான். ஊர், உலகமெல்லாம் ‘பெரியவர், பெரியவர்’ என்று மரியாதை செலுத்தும் பெரியசாமி இன்று சிறுயவனாகி விட்டான். அந்த நினைப்பைப் பெரியசாமியினால் தாங்க முடியவில்லை. ‘எனக்கும் இப்படிச் சிறுமையா?’

சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு வரையில் அவன் இருபத்தைந்து வயதுக் காளையின் பலத்தோடுதான் இருந்தான். கல்லைக் கடவுளாக வடித்து, வானளாவிய கோயில்களுக்குக் கொடுத்த மேதையாகத்தான் திகழ்ந்தான். தெய்வம் பெரியசாமியைப் படைத்தது. பெரியசாமியோ நூற்றுக்கணக்கான சாமிகளைப் படைத்தான்.

இறுகிப் போய்க் கல்லாக வந்ததைக் கருணை நிறைந்த, கனிந்த கடவுளாக அமைத்துக் கொடுத்த பெரியசாமியின் பெருமையெல்லாம் எங்கே? எழுபது வயதை எட்டிப் பார்க்கும் அவனுக்கு இத்தனை காலமும் உடல் தளர்ச்சி என்பதே இல்லை. ஆனால், மூன்றே மாதங்களுக்குள் கல்லைச் செதுக்கிய, அவனது உருண்டு திரண்ட தோள்கள் சரிந்து விட்டன. கல்லில் கடவுளைத் தேடிய கண்கள் குழி விழுந்து, நீல மணிகள்போல ஒளி இழந்து இருந்தன. தெய்வத்தை வடித்து, காய்த்துப் போன விரல்கள் முரமுரத்துப் போய்விட்டன. மூன்று மாதங்களுக்குள் முப்பது ஆண்டுகளின் முதுமையை அடைந்து விட்டான்!

இன்றையச் சிறுமையான நிலையை அவனால் சிந்திக்க முடியவில்லை. அடுத்துக் கலா காமேசுவரி ஆலயத் திருப்பணி கோலாகலமாக நடக்கவிருக்கிறது… ஆனால்… துயரம் நெஞ்சைப் பிளந்தது. கையால் தடவிக் கொண்டு நிமிர்ந்தான். மனம் எழும்பியது. ”நான் வருந்த மாட்டேன், ஏன் இன்பத்தை இழக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் என்னைப்போல் இன்பத்தில் லயித்திருக்கத் தெரியாது எனக்குச் சக்தியிருக்கிறது” என்று மற்ற உறுப்புகளைப் பார்த்து மார் தட்டியது மனம்.

மனவேகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்றது.

கைலாஸபுரத்தில் ஆலகால சுந்தரர் கோயில் திருப்பணி. செட்டியார் குடும்பத்துக் கைங்கரியம், பெரியசாமியின் கைராசி பிரசித்தமானவை. முதலில் பூசை செய்து, கற்பூரம் ஏற்றி, பூசணிக்காய் உடைத்து, பெரியசாமி தன் சகாக்களுடன் வேலையை ஆரம்பிப்பதைப் பார்த்தாலே புல்லரிக்கும். பெரியசாமியின் முன்னோர் தமிழ்நாட்டின் கோயில்களைக் கல்லில் செதுக்கிய மேதைகள். அவன் நரம்புகளில் பரம்பரையாக வந்த தொழில் துடித்துக் கொண்டிருந்தது.

ஆலகால சுந்தரர் கோயில் நிர்மாணம் பெரியது. ஐந்து ஆண்டுகள் இரவும் பகலுமாகக் கற்கள் சிலைகளாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன. கல்யாண வயதை அடைந்த ஒரே மகனுக்குக் கால் கட்டுக் கட்ட எண்ணிய பெரியசாமியின் பெற்றோர் பிடிவாதமாக அவன் மாமன் மகள் வள்ளியை மணம் முடித்து வைத்தார்கள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போக ஒன்று வேலை இருந்து கொண்டேயிருந்தது. தெய்வத்துடன் வாழ்ந்த பெரியசாமிக்குக் குடும்ப வாழ்க்கை நடத்த நேரம் இல்லை. வள்ளியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவனுக்குப் பொழுது இல்லை.

Image

வள்ளி அவன் பின்னால் ஆவல் ததும்ப வந்து நிற்பாள். இளம் உள்ளத்தில் எத்தனை எத்தனை இன்ப நினைவுகளோ?

”இதோ பாரு, வள்ளி! கல்லு நல்ல வாட்டமா இருக்குது. முருகப் பெருமானுடைய வள்ளி நாயகியை இதில் செதுக்கப் போகிறேன். அப்புறம், ஷண்முகநாதர், தெய்வயானை அம்மாள் இப்படி. போ, போ வள்ளி. வேலையைப் பாரு. உன்னோடு பேசினால் என் கை வேலை தடுமாறும்”. கல்லைப் பார்த்துப் பேசிய வண்ணமே பெரியசாமி வள்ளியைப் பாராமல் அனுப்பி விடுவான்.

இந்தக் காலத்துப் பெண் இல்லையே வள்ளி! கண்களில் நீர் முட்ட, தலைப்பை வருடிக்கொண்டு போய்விடுவாள். இப்படியே சில ஆண்டுகள் ஓடி விட்டன. திருநீலகண்டர் தாம்பத்தியம்தான்.

புது கண்டங்கிச் சேலை; அள்ளிச் செருகின கொண்டையில் பூ முடிந்திருந்தாள். காதிலே தண்டட்டி, காலிலே கொலுசு, கழுத்திலே கருகமணி.

”நான் எப்படி இருக்கேங்க?” இவ்வலங்காரத்துடன், பின்னால் வந்து நின்ற வள்ளி கேட்டாள்.

திரும்பினான் பெரியசாமி.

அப்பொழுதுதான் அவன் கண்களுக்கு வள்ளியின் அழகு தெரிந்தது. ஏற இறங்கப் பார்த்தான்.

”வள்ளி! தவத்தைக் கலைக்கிற மாதிரி நிக்கிறியே! ஓகோ! இன்னிக்கி தீபாவளி நாளா! ஆறாம் நாளு என்னப்பன் சூர சம்ஹாரம் செய்கிற நாள். அதுக்குள்ளார அவன் முழு உருவத்தையும் செதுக்கி விடணும். நீ இப்படித் தடங்கல் செய்யாதே வள்ளி!”

”இல்லீங்க!” வள்ளிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்த தைரியத்தையெல்லாம் எப்படியோ திரட்டிக்கொண்டு, ”என்னங்க, அந்தச் சிங்கார வேலனேகூட எப்பவும் இரண்டு பெண்சாதியுடன் இருக்கிறாரு. நீங்க என்னடான்னா இப்படி என் நெனப்பே இல்லாம இருக்கீங்களே!” என்றாள்.

பெரியசாமி திடுக்கிட்டான். வள்ளி சொல்வது உண்மைதானே? மனதில் ஒரு குழப்பம்.

அவனைப் புரிந்துகொண்ட வள்ளி ”எனக்கும் வயசு ஏறிக்கொண்டே போவுது. உங்க கையைப் பிடிச்சு மாமாங்கம் ஆச்சுது!” என்றாள்.

”இதோ பாரு, வள்ளி! குன்றக்குடி கோயில் முடிந்து வேலனை அற்புதமாகப் பிரதிஷ்டை செய்த பிறகுதான் எனக்குக் குடும்ப நெனப்பு…”

காய்ச்சி உருக்கிய இரும்பு, வார்த்த பிறகு இறுகுவது போல் பெரியசாமியின் இளகின மனம் மறுபடியும் இறுகுவதை உணர்ந்தாள் வள்ளி.

பெரியசாமி சொன்ன பிரகாரம் குன்றக்குடி வேலனும் கோயில் கொண்டான். பிரதிஷ்டை ஆகி விபூதி அபிஷேகம் ஆயிற்று. அர்ச்சகர் விபூதி அபிஷேகம் செய்து கண்களைக் கையால் துடைத்து விட்டார். கண்களில் கருணை வழிந்தது. திருவாயில் புன்னகை மலர்ந்தது.

பெரியசாமி மெய் மறந்தான். அவன் செதுக்கிய சிலை தெய்வ சாந்நித்தியம் பெற்றுத் திகழ்ந்தது.

கிணற்றில் விழுந்து மூழ்கின சாமானைத் தேடி எடுத்து வருபவன் தண்ணீர் மட்டத்துக்கு வந்ததும் ஒருமுறை தலையைச் சிலுப்பிக் கொள்வதுபோல் அவன் மனம் ஆழ மூழ்கி எழுந்தது. அவன் உடல் சிலிர்த்தது.

”குவா, குவா…”

கருங்கல்லும் இரும்பு உளியும் உராயும் ஒலியைத் தவிர வேறு ஒன்றையும் கேட்டறியாத அவன் செவிகளில் இந்த இனிய குரல் நிறைந்தது. உடம்பு புல்லரித்தது. வானை நோக்கிக் கரம் குவித்தான்.

வழக்கம்போல் சிலையை உருப்படுத்திக் கொண்டிருந்தான். பகல் நேரம். பக்கத்து வீட்டுப் பாட்டி, ”வள்ளிக்கு ஜன்னி கண்டுவிட்டது; வைத்தியரை அழைத்து வா” என்றாள். அவள் குரலில் ஒரே பதற்றம். பெரியசாமி பேந்தப் பேந்த விழித்தான். இவனைச் சொல்லிப் பயனில்லை என்று பாட்டி ஊர்க்காரர்களை ஏவி வைத்தியரை வரவழைத்தாள்.

மாலை மயங்கும் நேரம். கதிரவன் தன் சிவந்த மேனியை மறைக்கக் கடலும் வானமும் தொடுமிடத்தில் குதித்தான்.

பக்கத்து வீட்டுப் பாட்டி பரபரப்புடன் ஓடிவந்து, ”பெரியசாமி! உள்ளே வா, குடி முழுகிப் போச்சு! வள்ளி கல்லைப் புரட்டி விட்டாள்!” என்று கத்தினாள்.

‘‘கல்லைப் புரட்டினாளா? ஒவ்வொரு நாளும் நானல்லவா கல்லைப் புரட்டிப் போடுகிறேன்? உளியால் அடித்து உருவத்தைப் பொறிக்க, மாற்றி மாற்றிப் புரட்டுகிறேனே!’’ சிந்தனையுடன் பெரியசாமி உள்ளே நுழைந்தான்.

வெள்ளி போன்ற வள்ளி உடல்வாடிக் கிடந்தாள். பெரியசாமியின் கண்களால் அவளைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை. கண்களில் நீர் முட்டியது. அருகில் உட்கார்ந்து நெற்றியில் அலையும் அவள் தலை மயிரைக் கோதினான்.

”என்னங்க, குழந்தை நீங்க செய்கிற சிலை மாதிரியே அழகாக இல்லை?” அந்த நிலையிலும் இப்படிக் கேட்கும்போது வள்ளிக்கு வெட்கம்!

பெரியசாமி துக்கம் தொண்டையை அடைக்க, ”வள்ளி!” என்றான்.

”நான் வந்த வேலை முடிஞ்சு போச்சு, குழந்தையையாவது நல்லா கவனிச்சுக்குங்க” என்றாள் வள்ளி.

வந்த வேலை முடிஞ்சு போச்சா? இது என்ன தத்துவம்? பெரியசாமி ஒரு பக்கம் தூங்கும் குழந்தையை உற்றுப் பார்த்தான்.

கூடியிருந்தவர்கள் பெரிதாகக் கத்திய போதுதான் வள்ளி பறந்து விட்டாள் என்பதை அறிந்ததான். அன்று காலையில்தான் ஒரு பூ மலர்ந்தது. மாலையில் மற்றொன்று வாடிவிட்டது. ஒன்றைக் கொண்டுவர இன்னொன்று உயிரை இப்படித் தியாகம் செய்ய வேணுமா? இரண்டையும் சேர்த்து நினைக்கும்போது நினைவிழந்து விட்டான் பெரியசாமி.

இந்த நினைவிலிருந்து மனம் தாவியது. பிறகு எத்தனை எத்தனை கோயில்கள் நிர்மாணம் செய்தான்? ஆனால், ஒவ்வொரு தடவையும் வேலன் சிலை செய்யும்பொழுது மட்டும் வள்ளியின் உளியை விட்டெறிந்து விட்டு வெகுநேரம் வரையில் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்து விடுவான்.

குழந்தை வேலம்மாள் நடக்கும் பொற்சிலையாக இருந்தாள். நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பிறந்தவள், தாயில்லாக குழந்தை என்பதால் மட்டும் பெரியசாமி அவளைச் செல்லமாக வளர்க்கவில்லை. அவளது துறுதுறுத்த முகமும், மாணிக்கப் பரல்கள் உதிர்வது போன்ற மழலைப் பேச்சும், சிலை போன்ற அழுகும் பார்ப்பவர் மனத்தைப் பறிப்பவை. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போது, முழங்காலில் கையை ஊன்றிக் கொண்டு ஆர்வத்துடன் பார்ப்பாள்.

”தள்ளிப் போம்மா. கல்தூள் கண்ணி தெறித்துவிடும்.”

”உனக்கு மட்டும் தெறிக்காதாப்பா?” பெரியசாமி பதில் சொல்லமாட்டான். குழந்தையை வாரி அணைத்துக் கொள்வான். ஒவ்வொரு சிலையும் பூர்த்தியானதும் வேளை பார்த்து, நாழி பார்த்துப் பூஜை செய்து கண் திறப்பான்.

பெரியசாமியின் மனம் இன்னும் பின்னோக்கிச் சென்றது நினைத்ததையே நினைப்பது மனதுக்குப் பிடிக்காததுதானே? நாற்பது ஆண்டுகளுக்கு முன் அங்கயற்கண்ணி ஆலயத்தின் புனருத்தாரணப் பணி நடந்தது. அப்பொழுது கோபுரத்து பொம்மைகளையெல்லாம் புதுப்பித்தான். இலக்கியங்களையெல்லாம் நிறை போட்ட பொற்றாமரைப் படிகளைச் சீர்திருத்தினான். ஏன், மீனாட்சி – சொக்கநாதர் கோயில் நிர்மாணத்தையே தான் செய்யக் கொடுத்து வைத்தது போன்ற பெருமையில் மூழ்கினான். அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நிறைவேறியது. கோயில் நிர்வாகிகள் அவனுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினார்கள். ‘மயன் போல் செய்திருக்கிறாய்’ எனப் பாராட்டினார்கள். இன்று கூட அந்தப் பொன்னாடை பெட்டியில்தான் இருக்கிறது. மக்கி விடவில்லை. ஏன், அந்த எண்ணமும் பசுமையாகத்தான் இருக்கிறது!

சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் அங்கயற்கண்ணி ஆலயத் திருப்பணியில் பெரியசாமியின் பாட்டனார்தான் சிற்ப வேலைகளெல்லாம் செய்தார். எந்தக் காலத்திலோ, எப்பவோ முக்குறுணிப் பிள்ளையாரைக் கூடப் பெரியசாமியின் முன்னோர்களேதான் செய்தனர் என்று அவன் பெருமிதம் அடைந்திருக்கிறான்.

ஆனால், இன்று கலாகாமேசுவரி ஆலயம் செப்பனிடப்பட்டுச் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கின்றது. அறுபத்துநான்கு கலைகளும் களியாடும் கலாகாமேசுவரி ஆலயத்தில் தன் கையால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே! முடியவில்லையே? இரண்டு கைகளையும் ஆத்திரத்துடன் உதறிக் கொண்டான்.

”பெரியசாமி! உனக்கு வயதாகிவிட்டது. உன் கையினால் வழக்கம்போல் ஆரம்பம் செய்து விடு. சிற்பக் கலையை முறைப்படி கற்றுத் தேறின ஓர் இளைஞன் வந்திருக்கிறான். அவன் நம் கோயில் மூர்த்திகளை அழகாகச் செய்து விடுவான்” என்றார் கோயில் நிர்வாகி.

”சாமி! என் உடலில் வலு இருக்கிறது. இந்தத் தடவை என் கையாலேயே செய்துவிடுகிறேன்.”

”வேண்டாம்பா. உனக்கு எல்லாம் பூர்த்தியான பிறகு சன்மானம் கொடுத்து விடுகிறோம். நீ இனிமேல் இந்த வேலை செய்ய வேண்டாம். வயதாகிக் கை நடுக்கம் கண்ட பிறகு உளியைப் பிடித்து, வேலை செய்தால் உருவத்தில் குறை ஏற்பட்டு விடும். அது ஊருக்குக் கெடுதல். நீ இதுவரையில் செய்ததே போதும்” என்றார் கோயில் நிர்வாகி.

பெரியசாமியின் மார்பில் சுரீர் என்ற வலி. கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர் சுடுநீர்ச் சொட்டுகளாகக் கைகளில் உதிர்ந்தன.

வேண்டாம் என்று சொன்னதுகூட அவன் மனதில் உறுத்தவில்லை. ‘உனக்குச் சன்மானத்தைக் கொடுத்து விடுகிறோம்’, அதைவிட ‘நீ செய்தால் ஊருக்குக் கெடுதல்’ இவை என்ன வெறும் சொற்களா? பொங்கிப் பொங்கி அழுதான். ”ஐயனே! எத்தனை கோயில்களில் நீ குடிகொண்டிருக்கிறாய்? இந்தக் கையால் எவ்வளவு உருவங்களைச் செதுக்கி இருக்கிறேன்? ஊரை வாழ வைக்கும் தெய்வமாக இருக்கிறாயே, அம்பிகே!” என்றெல்லாம் பொருமினான்.

உச்சி காலம். கோயில் மணி ஒலித்தது. இவ்வளவு காலமாக ‘ஓம்’ ‘ஓம்’ என்று ஒலித்த ஒலி இன்று அவனுக்காக அழுதது.

”அப்பா! இந்நேரமும் உச்சி வெயில்லே உட்கார்ந்திருக்கிறியே சாப்பிட வாப்பா” வேலம்மாளின் குரல் கேட்டு உணர்வு பெற்றான் பெரியசாமி.

‘கல் கல்’ என் கல் உளிச் சத்தம் காதுகளில் ரம்மியமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. வண்டி வண்டியாகப் பெரும் பாறைக் கற்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. எங்கே! பெரியசாமியின் வீட்டு வாசலிலா? இல்லை, புதிய சிற்பி பாலசுந்தரத்தின் வீட்டு வாசலில்! கலாகாமேசுவரியின் ஆலயத் திருப்பணி மும்முரமாகத் தொடங்கிவிட்டது. பெரியசாமி புறக்கணிக்கப்பட்டு விட்டான்.

அந்த ஏக்கமே அவன் கை கால்களைச் சோர வைத்துவிட்டது, மனத்தைக் கலங்க அடித்து விட்டது.

இரவு பத்து மணியிருக்கும். பால் பொழிவது போன்ற முன்னிலவு. அந்த நேரம் கற்பாறையின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். ஆறுமுகம் சிலை முடிந்து விட்டது. கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

‘‘ஐயா..!’’ பாலசுந்தரம் திரும்பினான். வேலம்மா இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மிடுக்காக நின்றாள்.

பாலசுந்தரம் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்தான். அந்தப் பால் நிலவில் அவள் மோகினி போல் தோன்றினாள். கொஞ்ச தூரத்தில் போடப்பட்டிருந்த கல்லின் மேல் இரண்டு பேர் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

வேலம்மா இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக்கொண்டு ”ஏன் அப்படிப் பார்க்கிறே? தலைமுறை, தலைமுறையாய்ச் சிலை செய்த எங்க குடும்பம் இருக்கும்போது இங்கே ஏன்யா வந்தே? பெரியவர் மனசு நோக அடிச்ச பாவம் உன்னை விடுமா?” என்று கேட்டாள்.

”இதோ பாரு நான் இந்தத் தொழிலைக் கற்றுக்கிட்டேன். செய்யறேன். உங்கப்பாவின் மனதை நோகச் செய்யணும்கிற நோக்கம் எனக்கு இல்லை. அவர் ஓய்ந்த மனிதர். ஐம்பது வருஷமா தொழிலை நடத்திட்டாரு. இனிமேல் சின்னவங்க பிழைக்கணும்னு விட்டுக் கொடுக்கலாம் அல்லவா?” – பாலசுந்தரம் அமைதியாகக் கேட்டான்.

வேலம்மா சீறினாள்: ”என்ன எங்கப்பா தொழிலா நடத்தினாரு? கல்லையெல்லாம் கடவுளா ஆக்கினாரு. அவரா ஓய்ந்த மனிதர்? நீயும் சாமி செய்யறியே? எங்கப்பா செய்யறதுக்குக் காலிலே கட்டி அடிக்கணும்!” ஆத்திரத்தில் வேலம்மா சொற்களைக் கொட்டிவிட்டாளே தவிர, பாலசுந்தரம் செய்த சிலைக்குத்தான் என்ன குறைச்சல்? அழகு சொட்டுகிறது! அவள் மனத்தில் இப்படி ஓர் எண்ணமும் தலை தூக்கியது.

மறுநாள் முன்னிரவு. காற்று வீசியது. உயர்ந்த தென்னை மரங்கள் ஆட்டமாய் ஆடின. பாலசுந்தரத்தின் மனம் அலை பாய்ந்தது. அன்று ஷண்முகநாதன் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால், முகம் பயங்கரமாகிவிட்டது. ஏற்றத் தாழ்வான விழிகள்! கருணை பொங்க வேண்டிய கண்களில் கனல் வீசியது. சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணைப் போல் இருந்தது.

பாலசுந்தரத்தின் மனதில் இனம் தெரியாத சங்கடம். கோயில்காரர்கள் வந்து பார்த்தால் இந்தச் சிலையை ஒத்துக்கொள்ள மாட்டார்களே! நேற்று வரையில் எழில் பொங்கி வழிந்த சிலையில், இன்று இப்படிப்பட்ட அவலட்சணமா? உளியை வீசி எறிந்தான். கையைத் தேய்த்துக் கொண்டான். தன்னை மறந்து தனக்குத் தானே பேசினான்.

”முருகன் சிலையா, பத்ரகாளி உருவமா?” என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டான். வேலம்மாள் ஏளனச் சிரிப்புடன் அலட்சியமாக நின்றாள். பாலசுந்தரத்தின் உடல் அவமானத்தினால் குன்றியது.

”நேற்று வரையில் அழகாய்த்தான் இருந்தது. நீ கொடுத்த சாபந்தான் இப்படி ஆகிவிட்டது.”

அவன் பேச்சில் இருந்த வேதனையும் குறையும்… வேலம்மாளின் மனமே கரைந்தது. பாலசுந்தரத்தின் கவலையில் தனக்குப் பங்கு உண்டு என்ற உணர்வு முதன் முதலாக ஏற்பட்டது. ஒருவர் கஷ்டப்படும்போது குத்திக் காட்டலாகாது என்று நொண்டிச் சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் தன் மனம் மாறுகிறது என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. ”கோயிலில் சிலையைக் கொண்டு வைக்க இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?”

”இன்னும் ஒரு பொறையில் வைக்கணும். ஏன், நீ செய்து கொடுத்து விடுவியோ?” என்று சற்று ஏளனமாகவே கேட்டான் பாலசுந்தரம்.

”ஆமாம். நீங்க நல்லா செய்வதற்கு உதவியாக இருப்பேன்.”

”சாபம் கொடுக்கமாட்டேல்ல? அதுவே போதும்.”

”நடக்கிற வேலையைப் பாருங்க. அதோ ஒரு கல்லு தெரியுதே, அதை இப்பவே இந்த நிலவிலேயே செதுக்க ஆரம்பியுங்க.”

பாலசுந்தரம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது போல் உளியை எடுத்துக்கொண்டு போய்க் கல்லின் மேல் உட்கார்ந்தான்.

பன்னிரண்டு நாட்கள் ஓடின. பாலசுந்தரம் இரவு தூக்கத்தைத் துறந்தான். சாப்பாட்டை மறந்தான். கல் செதுக்கும் சத்தம்தான்.

வேலம்மா இரண்டு வேளையும் வந்து பாலசுந்தரம் வேலை செய்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். பாலசுந்தரத்துக்கு வேலம்மா நின்று பார்ப்பதே யானை பலமாக இருக்கும்.

பதினான்காம் நாள் இரவு. சிலை முடிந்து விட்டது. இரவு இருள் கவிந்து கொண்டிருந்தது. அதனிடையே கருங்கல்லை வெண்கல்லாக ஆக்கி, அதிலே முருகனின் திரு உருவம் அழகெல்லாம் உருவெடுத்து வந்ததுபோல் இருந்தது. ”வேலம்மா! நாளைக் காலையிலே கண் திறக்கப் போகிறேன். நீ வந்து பாரு.”

”ஆமா, நாளைக்கு நிறைஞ்ச நாளு அமாவாசை. தேங்காய் உடைச்சு, கற்பூரம் ஏற்றிப் பூசை செய்து சாமியின் கண்களைத் திறங்க! ‘உங்க அந்தக் கருணைக் கண்கள் உலகத்தையெல்லாம் காப்பாத்தணும்’னு வேண்டிக்குங்க.”

”வேலம்மா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கல் கொத்தர்கள் முன் காலத்தில் கண் திறக்கணும்னு ரூபாயை வாங்கிச் சாப்பிடுவார்கள்! இந்த மூடப் பழக்கமெல்லாம் எனக்குப் பிடிக்காது.”

”என்ன சொன்னீங்க அன்று பூசை செய்யாமல் கண் திறந்ததால்தான் சிலையே பாழாய்ப் போயிடுச்சு.”

பாலசுந்தரத்துக்கு ஒரு நிமிஷம் அது உண்மையாகத் தோன்றியது. ஆனால், அதை மீறி ஆணவம் தலை எடுத்து மறுத்தது. ‘‘நான் அவசரப்பட்டுச் செய்துட்டேன். சின்ன உளி வைத்து இலேசாகத் தட்டியிருக்கணும். இந்தத் தடவை பாரு, பூசையும் வேண்டாம். இப்ப அது கல்தானே? கோயில்லே வைத்தால்தானே தெய்வம்?” என்றான்.

வேலம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போதே எவ்வளவு பக்தியாகச் செய்வான்? அந்த சூழ்நிலையில் ஊறின அவளுக்குப் பாலசுந்தரத்தின் பேச்சு வேம்பாக இருந்தது. வேலம்மாவுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்தாள்.

மறுநாள் பகல் வேலம்மா ஆவலுடன் முருகன் சிலையைப் பார்க்கப் பாலசுந்தரத்தின் வீட்டுக்கு ஓடினாள்.

”வேலம்மா! எவ்வளவு அழகா இந்தச் சிலை அமைந்துவிட்டது?” என்று பெருமிதத்தோடு சொன்னான் பாலசுந்தரம்.

”ஆமாங்க, எல்லையற்ற அழகுதான். வேல் முருகன் வீரனல்லவா? கம்பீரமாக இருக்கிறான்.”

”வேலம்மா, எனக்கு ஓர் ஆசை. உங்கப்பாவை இன்று பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும். எவ்வளவு பெரியவங்க!”

”இத்தனை நாட்களும் இல்லாத திருநாளாக இன்றைக்கு அவர் உங்களுக்குப் பெரியவங்களாகத் தோன்றக் காரணம் என்ன?”

”அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.”

ஆணவம் ஒலிக்கப் பேசியவனுக்கு ஆண்டவன் நினைப்பா? வியந்தாள் வேலம்மா.

”வீட்டுக்கு வாங்க. அவரைப் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

”அப்பா, அவங்க வந்திருக்காங்க.”

”யாரம்மா?”

”அவங்கதான்.” – சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தாள் வேலம்மா.

”வா, அப்பா! நீதான் பாலசுந்தரமா? முருகன் சிலை முடிந்து விட்டதா?

பெரியவர் குரலில் இருந்த கனிவு அவன் மனதை உருக்கியது.

‘‘ஆமாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான். உங்க வீட்டிலே இருக்கிற உயிர்ச்சிலைதான் அந்தச் சிலையை வடிக்க உதவி செய்தது. சிலையின் கண் திறந்த நேரத்திலே என் கண்களும் திறந்து கொண்டன.’’

பெரியவர் சிரித்தார். வேலம்மா விழித்தாள்.

”கஷ்டப்பட்டுச் செய்த சிலை பாழாகிவிடப் போகிறதே என்று உங்கள் மகள் செய்த பூஜைதான்…”

”முருகன் கண்ணைத் திறந்ததாக்கும்!”

”ஆமாங்க, அவள் தவறாமல் என் வீட்டுக்கு வருவதைப் பின்னாலே தொடர்ந்து தொடர்ந்து வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த நீங்க எல்லாவற்றையும் புரிஞ்சுக்கிட்டீங்க.”

”அதனாலே என் கண் திறந்து கொண்டது! இதைத்தானே சொல்லப் போறே?”

”நீங்க எங்க இரண்டு பேருக்குமே தெரியாம உங்க ராசிக் கையால் உங்க ராசிக் கையாலே..” என்று சொன்னதையே சொல்லி வாக்கியத்தை முடிக்க முடியாமல் திண்டாடினான் பாலசுந்தரம்.

”போதும், தம்பி போதும்!” பேச்சை மடக்கி நிறுத்திய பெரியசாமியின் குரல் தழுதழுத்தது.

Image

சில நாட்களுக்குப் பிறகு கலா காமேசுவரி ஆலயத் திருப்பணி முடிந்து, மேள, தாளத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டிய அடுத்த நல்ல வேளையிலே வேலம்மா – பாலசுந்தரத்தின் திருமணமும் விமரிசையோடு நடந்தது. அன்று சிற்பிகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க வேண்டிய நேரத்திலே மாமனாருக்கும் மருமகனுக்கும் போட்டி. ”கண்ணைத் திறந்தவன் மருமகன். எனவே, அவனுக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்” என்றார் மாமனார். மருமகனோ, ”கண்ணைத் திறந்தவர் மாமனார்தான். அவருக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்!” என்றான்.

இருவர் கண்களையும் திறந்த கடவுள் கனிவு மலர்ந்த கண்களுடன், ”கலை முதுமை தட்டுவதில்லை, கலைச் சிற்பங்களைச் சமைப்பவனும் முதியவனாக முடியாது’ என்பது போல் முறுவலித்துக் கொண்டிருந்தார்.

***

Image Courtesy:

http://amudhasurabi-ithazh.blogspot.in

http://www.lotussculpture.com

http://southindianhandicrafts.co.in

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 27

கமலா விருத்தாச்சலம்

(1917 – 1995)

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பொதுப் பணித்துறையின் புகழ்பெற்ற ஒப்பந்ததாரர் பி.டி.சுப்ரமணிய பிள்ளையின் மகளான இவர், தன்னுடைய பதினைந்தாவது வயதில் புதுமைப்பித்தனைத் திருமணம் செய்துகொண்டார்.

1935க்குப்பின் எழுதத் தொடங்கிய இவர், குறிப்பிட்ட சின்னஞ்சிறு சம்பவங்களையொட்டிய கதையாக்கத்தில் தேர்ந்தவர். தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் இவரின் முக்கிய கதைகள் பிரசுரமாயின. 

திறந்த ஜன்னல்

Image

”சீ, மணி என்ன ஆச்சு இன்னமுமா தூக்கம், எருமை மாட்டு தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே வேணு எதிர் அறையில் இருந்து கதவை திறந்துகொண்டு, ராதை படுத்திருக்கும் அறையில் நுழைந்தான்.

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி, தலையில் ஓர் ஈரத்துணியை போட்டுக் கொண்டு அயர்ந்த தூக்கத்தில் இருந்த ராதை, தற்செயலாக அப்போதுதான் திரும்பி படுப்பதற்காக புரண்டாள். ”எருமை மாட்டு தூக்கம்” என்ற கடைசி வார்த்தையைக் கேட்டு சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். கலைந்து கிடக்கும் தலை மயிரை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிய வண்ணம், படபடவென்று எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியில் பார்த்தாள். வெயிலின் அடையாளத்தைப் பார்த்து மணி நாலு என்பதை அறிந்து கொண்டாள். குழாயடியில் போய் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைந்து விட்டாள். அடுப்பை பற்றவைத்து காப்பி போட்டாள். ‘ஐயோ! மணி நாலு ஆயிற்றே. அவர்கள் வெளியில் போக வேண்டுமே’ என்று விசிறியால் அடுப்பை வீசிக்கொண்டே அதன் முன் உட்கார்ந்தாள். ‘அவர் புறப்பட்டு விடுவாரோ’ என்று அடிக்கடி அவ்விடத்தில் இருந்தபடியே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவ்வளவு அவசரமாக வேலையில் கவனம் இருந்தும், வேணு சொல்லிக்கொண்டு வந்த ‘எருமை மாட்டு தூக்கம்’ என்ற வார்த்தையும் அடிக்கடி அவள் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. ”ஆமாம்! நிஜந்தான். எருமை மாட்டு தூக்கம், பாழுந் தூக்கம், என்றைக்குத்தான் என்னை விட்டுக் தொலையுமோ; அல்லது முழிப்பில்லா தூக்கம் என்றுதான் வருமோ” என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அடுப்பை வீசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் காப்பியும் தயாராகி விட்டது; காப்பியை வடிக்கட்டி, பால் சர்க்கரை சேர்க்க வேண்டியதுதான் பாக்கி. வேணு சட்டை போட்டுக்கொண்டு வெளியில் போக புறப்பட்டு விட்டான்.

”கொஞ்சம் இருங்கள், இதோ காப்பி ஆகிவிட்டது. கொண்டு வருகிறேன்” என்று காப்பியைச் சேர்க்கப் போனாள்.

அதற்குள் வேணு ”ஆமாம் மணி ஐந்து அடிக்கப் போகிறது. எனக்கு அவசரமாக இன்று வெளியில் போகவேண்டும் என்று எப்பவோ சொன்னது” என்று சொல்லிக்கொண்டே வாசற்படிவரை வந்து விட்டான்.

ராதை சட்டென்று சென்று அவன் முன் பாய்ந்து, கதவை மூடினாள். ”காப்பி ஆகிவிட்டது எடுத்து வருகிறேன். சூடு ஜாஸ்தியாக இருந்ததினால் ஆற்றிக்கொண்டு இருந்தேன். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றாள். அவள் குரலில் சிறிது கோபமும் வருத்தமும் கலந்திருந்தது. எப்போழுதாவது ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டால், கெஞ்சி மன்றாடி, அவன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கும் ராதைக்கு இன்று கோபம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது. ‘’எவ்வளவு நேரம் ஆனாலும் இன்று காப்பி சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’’ என்று மெதுவாக சொல்லிக் கொண்டே, காப்பி எடுத்து வருவதற்காக அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

அவள் அடுப்பங்கரைக்குள் சென்றதும், ‘சீ இந்தப் பிடிவாதம் ஆகாது. அதைத்தான் இன்று பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டு வெளியில் போக கதவைத் திறந்தான் வேணு.

”இதோ கொண்டு வந்துவிட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று சொல்லிக்கொண்டே, ராதை கையில் காப்பியோடு அவன் அருகில் வேகமாக வந்தாள்.

”உங்கள் உத்தரவுப்படிதான் நடக்க வேண்டுமோ, அதைத்தான் இன்று பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, வேணு வெளியில் சென்று விட்டான்.

ராதைக்கு கோபம், தூக்கம் இரண்டும் விஷக்கடி போல் உச்சஸ்தாயில் ஏறிவிட்டது. கதவை ‘படார்’ என்று அடைத்துத் தாழ்ப் போட்டாள். காப்பியை தானும் சாப்பிடாமல், தர்மாஸ் பிளாஸ்கில் விட்டு வைத்துவிட்டு, கூடத்தில் கிடந்த சாய்வு நாற்காலியில் வந்து படுத்துக்கொண்டாள். ”சரி, போய் வரட்டுமே, எனக்கென்ன வந்தது. என்னைக்கோ ஒருநாள் கொஞ்சம் தெரியாமல் தூங்கிவிட்டால், இந்த மாதிரி தண்டனை. சீ, என்ன பிழைப்பு. இதைவிட எங்கேயாவது போய் தொலைந்தால் நம் இஷ்டம் போல் இருக்கலாம். யாருக்காக பயப்பட வேண்டும். வருகிறது வரட்டும்; இன்று இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டியது. எத்தனை நாளைக்கு இப்படி மனசிலே வைத்துக்கொண்டு இருக்க முடியும்” என்று மனதை ஒருவிதம் சமாதானப்படுத்திக்கொண்டு, இரவு சாப்பாட்டுக்கு தயார் பண்ணுவதற்காக மறுபடியும் வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

இரவு சாதம்கூட சாப்பிடுவாரா என்பதே சந்தேகம் என்றாலும், நம் கடமையை நாம் சரியாகச் செய்து வைப்போம். பிறகு அவாள் அவாள் இஷ்டம்போல் செய்யட்டும்’ என்ற நினைப்பு.

அவள் பம்பரம் மாதிரி ஓடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மனசில் கசப்பிருந்தால் அது சோர்வுக்கும் சுறுசுறுப்புக்கும் தூண்டுதல்தானே. அவர்கள் வருவதற்குமுன், சமையலை முடித்துவிட வேண்டும் என்ற பல்லவி அவளது உள்ளத்தில் ஓயாது ஒலித்தது.

இரவு

ழு மணி ஆயிற்று. வேலைகள் எல்லாம் முடித்து, கை கால் கழுவிவிட்டு, கூடத்து தூணில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். வேணு வரும் சமயம் ஆயிற்று. நேரம் ஆக ஆக அவள் மனம் படபடவென்று அடித்துக்கொண்டே இருந்தது. ‘எதற்காக பயப்படுகிறோம்’ என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அறிந்து யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருந்தும், இந்தக் காரணமில்லா பயப்பிராந்தி எதற்காக ஏற்படுகிறது! – என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பது போல், அசைவற்று நாடியில் கை வைத்து மேல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மச்சுப் படியில் செருப்புச் சத்தம் கேட்டது. ”அவர்கள்தான் வந்து விட்டார்கள். வரும்போது அவர் எதிரிலேயே படக்கூடாது” என்று எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

வீட்டுக்குள் வந்த வேணு நேராக அறையில் சென்று உடைகளை மாற்றிவிட்டு, கை கால் கழுவிக்கொண்டு, எதிர் அறையில் சென்று ஜன்னல் அருகில் கிடந்த சாய்வு நாற்காலியில் படுத்தான். அவனுடைய செய்கைகளை மறைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ராதைக்கு சந்தேகம் அதிகரித்தது. பிளாஸ்கில் விட்டு வைத்த காப்பியை எடுத்துக் கொண்டு வேணு இருந்த அறையில் நுழைந்தாள். ராதையைக் கண்டதும் வேணு சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து ”என்னது காப்பியா? சரி இப்படி எடுத்து வா’ என்று வெளியில் வந்துவிடப் பார்த்தான். அவன் முகம் ஏதோ குற்றம் செய்து விட்டது போலுள்ள தோற்றத்தைக் காண்பித்தது. தலைமேல் மலையே இடிந்து விழுந்தால் கூட சற்றேனும் பயம் என்பது தோன்றாத அவனுடைய நெஞ்சு, இன்று ராதையைக் கண்டதும் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஜன்னல் அருகில் சென்ற ராதை எதிர் வீட்டு வெளி தளத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்தபின்பே ராதைக்குச் சந்தேகம் முற்றும் தெளிவுபட தொடங்கியது. பல நாட்களாக அவள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த சந்தேகம். இன்று அவள் நேரிலேயே பார்த்துவிட்டாள். ஆனால் வேணு இப்படிப்பட்டவனாவென்று அவளால் நம்ப முடியவில்லை. தன் கண்ணால் பார்த்த பிறகும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வாள்!

ஒரு நாளும் தனிமையை விரும்பாத வேணு, இப்போது கொஞ்ச நாட்களாக தனியாக அந்த அறையில் சென்று இருப்பதும், அவள் அருகில் சென்றால்கூட என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வேலை இருக்கிறது என்று ஏதாவது எழுதுவது போலவும், படித்துக்கொண்டிருப்பது போலவும் இருப்பான். ஆனால், அவன் மனம் எந்த மாதிரி இருந்தது என்ற உண்மை இப்போதுதான் அவளுக்கு அர்த்தமாயிற்று. ஓரோர் சமயம் வேணுவிடமே ‘அது உண்மைதானா?’ என்று விசாரித்துப் பார்க்கலாம் என்று நினைப்பாள். என்றாலும் ‘சமயம் வரும்போது கேட்கலாம்’ என்று மனதை அடக்குவாள். அன்று ஜன்னல் அருகில் சென்ற அவள் வேணுவிடம் கேட்பதற்காக நெருங்கினாள். ஒரு வேளை கோபப்பட்டு காப்பியோ, சாதமோ சாப்பிடாவிட்டால் என்ன செய்வது என்ற பயம். சாவகாசமாக கேட்டுக்கொள்ளலாம் என்று காப்பியை எடுத்துக்கொண்டு வேணு நின்றிருந்த கூடத்துக்கு வந்து விட்டாள்.

காப்பியை அவனிடம் கொடுத்தாள். வேணுவும் ஒரு தடையும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். சாயங்காலம் வீட்டை விட்டு அவன் சென்ற மாதிரியில், இப்போது காப்பி சாப்பிடுவான் என்று ராதை சற்றேனும் எதிர்பார்க்கவில்லை.

காப்பி சாப்பிட்டு விட்டு வேணு ராதையை பக்கத்தில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டு, ஏதேதோ ஆபீஸ் விஷயங்களும் அது, இது என்று பேசிக் கொண்டிருந்தான்.

ராதைக்கு அவன் பேச்சில் சற்றும் மன நிம்மதியோ, சந்தோஷமோ தோன்றவில்லை. எங்கே தன் செய்கையைக் கவனித்து விட்டாளோவென்று சந்தேகப்பட்டு, தன்னை அந்த மாதிரி நினைத்தது தப்பு என்று நினைக்கும்படி செய்வதற்காக, இந்தப் பாசாங்கு வார்த்தைகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். எப்போது பேச்சு முடியும், சாப்பாட்டு வேலைகளை முடித்துக் கொண்டு நிம்மதியாகப் படுக்கலாம் என்று சகித்திருந்தாள்.

”மணி ஆயிற்றே, சாப்பிடுவோமா” என்றான் வேணு சிறிது நேரம் கழித்து.

‘‘ஓகோ, சாப்பிடுவோமே’’ என்று ராதை எழுந்தாள். இரண்டு பேரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுத்துக் கொண்டார்கள். படுக்கையில் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் வேணு தூங்கி விட்டான்.

அதிகாலை

ராதைக்கு தூக்கமே வரவில்லை. அப்படியும், இப்படியுமாக புரண்டுகொண்டே கிடந்தாள். பிறகு எப்போதுதான் தூங்கினாளோ; அவளுக்கே தெரியாது. கண்ணைத் திறந்து பார்த்தாள். அறையின் ஜன்னல் இடுக்கு வழியாக சூரிய ஒளி தெரிவதைப் பார்த்து நேரம் விடிந்துவிட்டது என்று வெளியில் வந்து நித்திய வேலைகளைத் தொடங்கி விட்டாள்.

”நேற்றுத்தான் ஆபீஸில் லீவு எடுத்திருக்கிறேன் என்றார்கள். இன்று ஆபீஸிற்குப் போக வேண்டுமோ, வேண்டாமோ… எழுப்பலாமா” என்று நினைத்தாள். பிறகுதான் அவளுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைவுக்கு வந்தது. ”தூங்கட்டும். காப்பி எல்லாம் தயரான பிறகு எழுப்பலாம்” என்று அடுப்பங்கறைக்குச் சென்று விட்டாள். அப்பொழுதும் அவள் மனம் அவர் மேல் இருந்த சந்தேகத்தைப் பற்றி, ‘இன்றாவது சந்தர்ப்பம் வாய்த்த வேளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று துடித்துக் கொண்டிருந்தது.

காப்பி பலகாரங்களைச் செய்து வைத்துவிட்டு, வேணுவை எழுப்பப் போனாள். ஆனால், படுக்கையில் அவனைக் காணவில்லை; அவள் வந்து எழுப்புவதற்கு முன்னமே அவன் எழுந்து எதிர் அறையில் சென்று, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, நாற்காலியில் படுத்திருப்பதைப் பார்த்தாள்.

அன்று காலையில், படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது சிறிது தெளிவு ஏற்பட்டிருந்த அவள் மனது மறுபடியும் ஒரே குழப்பத்தில் சென்று விழுந்தது. ‘முந்திய இரவுதான் இதற்கு என்ன செய்வது’ என்று வெகு நாழிகைவரை நினைத்துப் பார்த்தும் ஒருவழியும் தெரியாமல் விதி போல நடக்கட்டும் என்று சமாதானப்பட்டாள். ஆனால் மறுபடியும் மறுபடியும், வேணு சந்தேகப்படும்படி நடந்துகொள்வதைப் பார்க்க அவளால் சகிக்க முடியவில்லை. சரி ‘காப்பி ஆச்சு’ என்றுகூட சொல்ல வேண்டாம், எப்போதான் வருகிறார்கள் பார்போமே’ என்று பேசாதிருந்து விட்டாள்.

சிறிது நேரம் சென்று அவனாகவே வெளியில் வந்தான். ”ராதை ராதை!” என்று அழைத்தான். ராதை பதில் பேசாமல் அவன் அருகில் வந்தாள். அவனுக்கு வேண்டிய சிற்றேவல்களை வழக்கம்போல் செய்தாள். அவனிடம் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவன் நோக்கம் அறிந்து, அவன் சொல்லாமலே அவள் அன்று வேலைகள் எல்லாம் செய்தாள்.

மத்தியானம்

த்தியானம் சாப்பாடு முடிந்ததும் வேணு அந்த அறையில் சென்று ஒரு பாயை எடுத்து விரித்துப் படுத்துக்கொண்டான். ராதை சாப்பாடு முடிந்து வேலைகள் எல்லாம் ஆனபிறகு, வேணு இருந்த அறையில் நுழைந்தாள். அவன் பார்வையில் படும்படி சிறிது தள்ளி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். வேணு எதோ ஒரு புஸ்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். ராதை அவ்வறையில் நுழைந்ததைக்கூட கவனியாததுபோல் இருந்தான். ராதை இன்று எப்படியும் தன் சந்தேகத்தைப்பற்றி வேணுவிடம் கேட்க வேண்டும் என்ற திட நம்பிக்கையோடு அவ்வறையில் நுழைந்தாள். வேணு திரும்பிக்கூட பார்க்காததைக் கண்டதும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ஆலோசித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

வேணுவுக்கு ராதை அவ்விடத்தில் இருப்பது பிடிக்கவில்லை. அவளை என்ன காரணத்தைச் சொல்லி வெளியேற்றுவது என்று வெகுநேரம் யோசனை செய்து பார்த்தான். சிறிது நேரம் சென்று அவன் கையில் இருந்த புஸ்தகத்தை மூடி வைத்துவிட்டு ராதையைப் பார்த்து,

”என்ன ராதை ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறாய், இங்கே என் பக்கத்தில் வந்து உட்காரேன்” என்று அருமையாக அழைத்தான்.

எதிர்பார்க்காவிதத்தில் வேணு அம்மாதிரி தன்னை அருமையாக அழைப்பதை பார்த்ததும் ராதைக்கு மனதில் சிறிது மகிழ்ச்சி தோன்றவே, தானாகவே அவள் கால்கள் எழுந்து வேணுவின் அருகில் சென்று உட்காரும்படி செய்துவிட்டது. அவன் அருகில் சென்று உட்கார்ந்த பிறகுதான் அவள் தன்னையும் மீறிச் சில சந்தர்ப்பத்தில் தன் மனம் சாய்ந்து செல்வதை உணர்ந்தாள். பெண்கள் மனதை எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சில சமயத்தில் அன்பு வார்த்தைகள் அவர்கள் மனதை தளர விட்டு விடுகிறதே” என்று பரிதாபப்பட்டுக் கொண்டாள்.

கூர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.

”என்ன ராதை, பேசாதிருக்கிறாயே, ஏன் தூக்கம் வருகிறதா? அப்படியானால் போய்ப் படுத்துக்கொள்ளேன்; ஏன் வீணாக இருந்து கஷ்டப்படுகிறாய்” என்று அவள் கன்னத்தை தடவிக்கொண்டு சொன்னான்.

”ஆமாம், தூக்கம்தான் குறைச்சல்! அன்று ஒரு நாள் பகல் தூங்கியதற்குக் கிடைத்த தண்டனை போதாதா?”

”ஏன் என்ன பிரமாத தண்டனை. தண்டனையுமில்லை, ஒன்றுமில்லை. எனக்கு அவசரமாக வெளியில் போகவேண்டி இருந்தது. போனேன். நான் இருந்து காப்பி சாப்பிட்டுவிட்டு போனால், நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆள் வெளியில் போய்விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் அவசரமாகப் போய்விட்டேன். அதற்கென்ன பிறகு வந்து சாப்பிடவில்லையா? அதுக்கா இவ்வளவு கோபம் உனக்கு! அதுதான் இரண்டு நாட்களாக ஒருமாதிரி இருக்கிறாய். ஓகோ இப்போதுதான் அர்த்தமாச்சு.”

”ஒரு நாளைக்கு என்னவோ கொஞ்சம் தெரியாமல் தூங்கி விட்டால், அதற்கு எவ்வளவு கோபம் வந்து விட்டது உங்களுக்கு. அப்பா! போதும்!”

”யாருக்கு, எனக்கா கோபம்! சீச்சீ! கோபமுமில்லை ஒன்றுமில்லை. யார் சொன்னது கோபமென்று? என்னவோ அவசரமாகத்தான் போனேன் என்று சொல்லுகிறேனே!”

”ஆமாம் கோபம் இல்லாமத்தான் எருமை மாட்டுத் தூக்கம் என்று சொல்லுவார்களாக்கும்.”

”அடே அப்பா, இதுதானா? மத்தியானம் சாப்பிடும்போதே இன்று சாயங்காலம் மூன்று மணிக்கே வெளியில் போக வெண்டுமென்று சொல்லி இருந்தேனே, வந்து பார்த்தபோது இன்றும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஏதோ தெரியாது வாயில் வந்துவிட்டது. மனிதன் என்றால் எல்லா சமயமும் ஒரே மாதிரி இருப்பானா, ஏதோ கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக நீயும் கோபப்பட்டால் முடியுமா? யாராவது ஒருத்தர் தாழ்ந்து போனால்தான் சமாதானம் ஏற்படும். சரி, அதை ஏன் இன்று பேச வேண்டும். வேறு ஏதாவது பேசு” என்று வெற்றிலை போடுவதற்காக பாயில் எழுந்து உட்கார்ந்து, ஜன்னலில் இருந்த வெற்றிலைத்தட்டை இழுத்தெடுத்தான்.

எதிர் தளத்தில் அந்தப் பெண் நின்றிருந்ததைப் பார்த்து விட்டான். சடடென்று அவன் மனம் மாறியது. இன்னும் ஒரு தடவை அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ‘ராதை பார்த்துவிட்டால் என்ன நினைப்பாள்’ என்று மனதில் எழுந்த ஒரு சிறு கேள்வி; – அவளை அவ்விடமிருந்து ஏதாவது சொல்லி வெளியேற்றுவதுதான் சரி என்று அவனுக்குப் பட்டது.

”என் கண்ணே… ஏன் ஒருவருக்கொருவர் இப்படி மௌனமாக பேசாது உட்கார்ந்திருக்க வேண்டும். எனக்கு ஆபீஸ் வேலை கொஞ்சம் எழுத வேண்டி இருக்கிறது. நீ வேண்டுமானால் போய்ப் படுத்துத் தூங்கேன். நீ இங்கிருந்தால் எனக்கும் எழுத முடிகிறதில்லை. உன்னோடு பேசவேண்டும் என்ற ஆசை எழுத முடியாமற் செய்கிறது” என்று ஜாடையாக அவளை அங்கிருந்து போகும்படி செய்ய வழி பண்ணினான்.

”சாரி” என்று ராதை எழுந்திருந்தாள். அவள் மனம் அன்றும் பெரிய ஏமாற்றமடைந்தது. எப்போதான் இதற்கு முடிவு என்று பார்ப்போமே, அதிகம் பேசினால் கோபம் வந்து விடுமோவென்ற பயம். படுக்கப் போவதற்காகத் திரும்பினாள். அவள் கண்கள் ஏமாற்றப் பார்வையில் ஜன்னல் வெளியே நோக்கிற்று. அதே பெண், அதே தளத்தில் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். கூர்ந்து அவளையே சற்று நேரம் நோக்கினாள்; தனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று அந்தச் சிறிது நேரத்தில் அறிந்துகொண்டாள். அவள் மனம் குமுறிக்கொண்டு புகைந்தது; திரும்பி வேணுவைப் பார்த்தாள். அவன் விரித்த புஸ்தகத்தை நெஞ்சில் வைத்தபடி எதிர்ச் சுவரை நோக்கி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டாள்.

”சீ, என்ன பொய்! என்னை எப்படியும் இந்த அறையை விட்டு போகவேண்டும் என்று சொன்ன பொய்! ஏன்? ‘நீ இங்கிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. என் முன்னிருந்து எழுந்து போ’ என்ற ஒரு வார்த்தை போதாதா? இத்தனை ஆசை வார்த்தை! சீ அல்ல, பாசாங்கு வார்த்தை சொல்லி, பொய் சொல்லி ஏமாற்றுவானேன். இங்கேயேதான் இருப்பேன். எப்படியும் இன்று இரண்டில் ஒன்று அறிந்தாலன்றி இவ்விடத்தை விட்டு நகரமாட்டேன்” என்று மனதில் எழுந்த கோபத்தோடு உறுதி பண்ணிக்கொண்டு மறுபடியும் அவன் அருகில் உட்கார்ந்தாள்.

”ஏன் நீ படுக்கப் போகவில்லை, போய் படுத்துக்கொள்ளேன். நான் எழுதப் போகிறேன்” என்று வேணு லெட்டர் பேடையும், பௌண்டன் பேனாவையும் கையில் எடுத்தான்.

ராதை மௌனமாக அவனையே நோக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

வேணு என்னமோ நாலு வரி எழுதுவதும் வெட்டுவதுமாக ஐந்து நிமிஷம் பொழுதை போக்கிப் பார்த்தான். ”பிடிவாதக்காரியிடம் அருமையாய்ச் சொன்னால் காரியம் நடக்காது,” என்று நினைத்து,

”ராதை, நீ போய் படுக்கணுமானால் படு; அல்லது ஏதாவது போய் படித்துக்கொண்டு இரு. நான் இதை எழுதி விட்டு வருகிறேன்.”

”ஆமாம்! எனக்குத் தூக்கம் வரவில்லை. ஏன் நான் இங்கு இருந்து விட்டால் என்ன? நான் என்ன உங்களை தொந்தரவு பண்ணுகிறேனா? என் பாட்டுக்குத்தானே உட்கார்ந்திருக்கிறேன்”.

”வீண் வார்த்தைகள் எதற்கு? நீ இங்கிருந்தால் எனக்கு எழுத முடிகிறதில்லை; போ என்றால், போயேன்” என்று சிறிது குரல் உயர்த்திச் சொன்னான் வேணு.

வேணுவினுடைய பிடிவாதத்தைப் பார்த்த ராதைக்கு கோபம் உச்சஸ்தாயில் ஏறிற்று. ”என்னதான் வருகிறது பார்ப்போம். இங்கிருந்து இப்போது எழுந்து போகக்கூடாது” என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு வேணுவைப் பார்த்து, ”முடியாது இவ்விடமிருந்து இன்று எழுந்து போகிறதில்லை” என்று அழுத்தமாக பதில் சொன்னாள்.

ராதையினுடைய இந்தப் பதிலைக் கேட்ட வேணுவுக்குக் கோபம் ஆவேசமாக வந்து பொங்கியது. ”எந்த விஷயத்திலும் பெண்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது. சீ கழுதே, எழுந்து போறயா இல்லையா, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவேன்!”

”அதைத்தான் இன்று பார்ப்போம். முடியவே முடியாது!”

”சீ அடம் பிடித்த கழுதை” என்று சட்டென்று வேணு எழுந்து, ராதையை இழுத்துக்கொண்டு வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

வெளியில் தள்ளப்பட்ட ராதைக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு நின்ற துக்கம், உடைபட்ட மதகு வெள்ளம் போல் கண்ணீராக அவள் புடவையை நனைத்தது. ‘இனி என்ன செய்வது?’ என்ற கேள்வியைக் கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சட்டென்று அவள் மனதில் பட்டது. ‘தற்கொலை ஒன்றுதான் இதற்கு ஆறுதல் அளிக்கும்’ என்று தோன்றிற்று.

அதற்கு வழி என்னவென்று நாலு பக்கமும் சுற்றி நோக்கினாள். அண்ணாந்து உயர நோக்கினாள். அவள் கண்ணில் ஒன்றும் படவில்லை. எப்படி தற்கொலை பண்ணிக்கொள்வது என்று ஒன்றன்பின் ஒன்றாக பல கேள்விகள் அவள் மனதில் எழ ஆரம்பித்தன. கயிறு கொண்டு உயிரைவிட வேண்டும் என்றால் ஒரு முழக் கயிறு கூட வீட்டில் இல்லை. மேலும் கயிறு தொங்கப் போடுவதற்கு ஒரு உத்திரமாவது சற்று சமீபத்தில் இருக்கிறதாவென்று பார்த்தாள். அதுவுமில்லை. விஷம், திராவகம் என்றால், நினைத்த உடனே எங்கிருந்து கிடைக்கும். என்ன செய்வது என்று அவள் மனம் எவ்வளவு போராடியும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. நேரம் ஆக ஆக அவள் தற்கொலை என்பது எளிதான காரியமல்லவென்பதை உணர்ந்தாள்.

ஆனால் துர்ப்பாக்கியவதியாக தான் இந்த உலகில் இருப்பதைவிட, சாவதே மேல் என்று பட்டது. இவ்விடத்தில் தற்கொலை செய்துகொண்டால் வேணு மேல் அந்த பழி விழுமே என்று நினைக்க அவளுக்கு தான் ‘ஒரு நீலி,’ என்று தோன்றியது. வேணுவுக்கு தன் மேல் அன்பு உண்டென்றால் அவன் வேறு ஒருத்தியை திரும்பிப் பார்ப்பானா? என்ற கேள்வி அவள் மனதில் எழும்போதுதான் அவளுக்கு சகிக்கமுடியாத துக்கம் மேலிடும். ஆனால், பல வருஷங்களாக அவனோடு இருந்து வாழ்க்கை நடத்தி வந்து கொண்டிருந்த ராதைக்கு, இப்போதுதான் அவன் பேரில் சந்தேகம் தோன்றியது. அதுவும் அவள் கண்ணால் நேரில் பார்த்தபிறகு! உலகத்திலேயே அவளுக்குப் பிரியமானது எது என்று கேட்டால் ‘வேணு’ என்ற உருவம்தான் அவள் அகக் கண்களில் சட்டென்று தோன்றும். ஐந்து நிமிஷம் வேணுவைக் காணாவிட்டால், அவள் உயிர் துடித்துக்கொண்டு இருக்கும். அவ்வளவு அபாரப்பட்ட அன்பு அவன் மேல் பதிந்து கிடந்தது. ஆனால், இந்த சந்தேகத்தில் கூட அவன் மேல் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டதே இல்லை. அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். ‘ஏன் என்னிடம் நேரில் சொல்லி, தன் விருப்பத்தை நிவர்த்தித்துக் கொள்ளக்கூடாது. என்னையேன் பொய் சொல்லித் துரத்த வேண்டும்?’ என்றுதான் பட்டது அவளுக்கு. தன் நினைப்புக்கு முடிவில்லாமல் போகிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம்; அன்பில்லாதவருடன் இருந்து எவ்வளவு நாட்கள் வாழ்க்கை நடத்துவது என்பது ஒரு பக்கம், ஒரு வழியும் தெரியாமல் வெளியில் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள். ”எவ்வளவு நேரம்தான் அழுது கொண்டிருப்பது. சீ, பெண்களுக்கு எதற்கெடுத்தாலும் அழுகைதான் முந்திவரும். அதனால் கண்ட பலன் என்ன?” என்று நினைத்து அவ்விடத்தை விட்டு எழுந்தாள். அவள் மனம் ‘வேணு அந்த அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான்’ என்று பார்க்க வேண்டும் என்று துடித்தது. கதவு இடுக்கு வழியாக நோக்கினாள். வேணு எழுந்து ஜன்னல் அருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளால் சகிக்க முடியவில்லை. ‘எங்காவது ஓடிப்போய் விடலாம், அவர் இஷ்டம் போல் இருக்கட்டும்’ என்று நினைத்தாள். ஒரு பேப்பர் எடுத்து வேணுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தாள். அவன் அறையில் இருந்து வெளி வந்ததும் அவன் கண்களில் படும்படியான ஒரு ஆணியில். அவள் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து மாட்டினாள். வெளியில் போவதற்குப் புறப்பட்டு விட்டாள். அவள் மனம் அலை மோதிக்கொண்டிருந்தது. கை கால் நடுக்கமெடுத்துக் கொண்டிருந்தது. தான் போகுமளவும், வேணு அறையை விட்டு வெளியில் வந்துவிடக்கூடாதே, என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள். வேணுவை ஒரு தடவை கடைசியாகப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மறுபடியும் அக் கதவு இடுக்கு வழியாக அவள் பார்வையை செலுத்தினாள். வெளியில் இறங்குவதற்கு அவளுக்குக் கூட கொஞ்சம் தைரியம் தோன்றும்படியாக, அவன் ஜன்னல் வழியாக அவன் மேல் விழும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். ‘இனி பொறுத்தக் கொண்டிருப்பது சரி இல்லை’ என்று பட்டது அவளுக்கு. வெளியில் போனால் தன் கதி என்னவாகும் என்பதை அவள் சற்றேனும் எண்ணிப் பார்க்கவில்லை. புறப்பட்டு விட்டாள். ஆனமட்டும் கலங்கி மறியும் தன் மனதை கட்டுப்படுத்திப் பார்த்தாள்; முடியவில்லை ”கடவுள் விட்ட வழி, கால்கள் எவ்வழி நோக்கிச் செல்லுகின்றதோ அதே பாதையில் நடப்போம், பசிக்கோ களைப்புக்கோ ஒன்றும் சாப்பிடக் கூடாது; எவ்வளவு தூரம் நடக்க முடிகிறதோ நடப்போம். பிறகு எந்தயிடத்திலாவது சுருண்டு விழுந்தால் உயிர்தானே போகும்; போகட்டும்.” என்று மனதில் உறுதி பண்ணி கொண்டாள். ”ஐயோ நான் ஒரு பெண், எனக்கு வழியில் வேறு ஏதாவது அபாயம் ஏற்பட்டால் என்னை காத்துக்கொள்ளுவதற்கு உள்ள சக்தி எனக்கு வேண்டும்; அதற்கு என்ன செய்வது” என்று அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அலமாரியைத் திறந்து ஒரு நல்ல கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டாள்.”அன்றும், இன்றும், இனிமேலும் உள்ளன்போடு நேசிக்க வேண்டியது இந்த கத்தியைத்தான்” என்று அதை ஒரு விசேஷ பொருளென மதித்து, இரண்டு கண்களிலும் ஒத்தி, மடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மச்சுப் படிகளை விட்டு இறங்கி வாசல்படிவரை வந்தாகிவிட்டது.

அவள் மனதில் ‘நீ செய்வது தவறு’ என்று சிறு குரல் போல ஓர் எண்ணம் எழுந்தது. ‘சீ மனமே, நீயும் என்னை அடிமைப்படுத்தவா பார்க்கிறாய். முடியாது, முடியாது; உடல்தான் ஒருவருக்கு அடிமை. உயிர் ஒருவருக்கும் அடிமை இல்லை. அது எனக்குச் சொந்தம். ஆனால், எனக்கு அடிமை இல்லை. அதற்கு தன்னை எப்படி எப்படி காப்பாற்ற வேணுமோ, அதற்கு நன்றாகத் தெரியும். தன்படி செய்வதற்கு அதற்கு பூரண சுதந்திரம் உண்டு,’ என்று பலவாறாக நினைத்துத் தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

வாசற்படியில் நின்று, தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்று நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். வலக் கோடி கடைசியிலிருந்து ஒர் ஆள் அப்பாதை வழியாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஆள் போன பிறகு போகலாம் என்று சிறிது வாசல் பக்கம் இருந்து நாலு அடி உள்ளே வந்து கதவு மறைவில் நின்றாள்.

மாடியில் வேணு கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று வெளியில் சென்றுவிடப் பார்த்தாள். அந்த ஆள் அப்போதுதான் அவள் வீட்டுக்கு சமீபத்தில் வந்து கொண்டிருந்தான். ‘இந்த நேரத்தில் பரபரத்த தோற்றத்தோடு வெளியில் தனியாக இறங்குவதை, அந்த ஆள் பார்த்து விட்டால் சந்தேகித்து விடுவானோவென்று பயம். மறுபடியும் உள்ளே வந்து, அந்த கதவு மறையில் நின்றாள்.

மாலை

அறைக் கதவை திறந்து வெளி வந்த வேணு, நேராக குழாயடியில் சென்று, கை கால் கழுவிட்டு தாகத்துக்குத் தண்ணீர் கேட்பதற்காக ராதை எங்கே என்று பார்த்தான். ‘அவள் ஒரு இடத்திலும் இல்லை’ என்று அறிந்ததும் அவன் மனம் சட்டென்று உயர்ந்து, தாழ்ந்து நின்றது. ஒருவேளை பின்புறம் போயிருப்பாளோவென்று சந்தேகம். உரக்க இரண்டு மூன்று தடவை கூப்பிட்டுப் பார்த்தான். பதில் இல்லை. ‘எங்கு சென்றாளோ, யாரிடம் போய் என்ன கேட்பது?”

அவன் மனம் என்ன என்னவோ நினைக்கச் செய்தது. தன் தவறை நினைத்து வருந்தினான். ”சீ வருந்தி என்ன பயன்? வெளியில் எங்காவது சென்று பார்ப்போம்; ஏன் அவள் போக வேண்டும்? என் மேல் சந்தேகப்பட்டு விட்டாளோ? அது உண்மையானால் அவளை நான் இனி உயிரோடு பார்க்க முடியுமா? ஒரு சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத அவள், என் தவறைப் பார்த்து விட்டிருந்தால் எப்படி சகித்திருப்பாள். இன்று நான் நடந்து கொண்டதிலிருந்துதான் அவளுக்கு உண்மை தெரிந்து வீட்டை விட்டு போயிருப்பாள். ஐயோ, இனி எங்கே போய் அவளைத் தேடுவது? வழியில் யாராவது என்னவென்று கேட்டால், என்ன பதில் சொல்வது! இனி கால தாமதம் பண்ணக் கூடாது’ என்று அவசர அவசரமாகக் கொடியில் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான். தற்செயலாக திரும்பிய அவன் பார்வையில், கூடத்து கவரில் உள்ள ஓர் ஆணியில், அவள் அணிந்திருந்த நகைகளும், அதோடு ஒரு கடிதம் சொருகி இருப்பதையும் பார்த்தான்.

கடிதத்தை எடுத்துப் பிரித்து படித்தான். ‘நாலைந்து நாட்களாக என் மனதில் கிடந்து வாட்டிக் கொண்டிருந்த சந்தேகத்தை நேரில் பார்த்து அறிந்து கொண்டேன். இனி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். எனக்காக வருத்தப்பட வேண்டி வந்தாலும், தாங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் நான்காம் நாளுக்கு முந்தியே நின்று விட்டது. தாங்கள் இனி மேலாவது நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். இன்னும் உலகில் இருந்து இவ்வித கண்றாவிகளைப் பார்க்க என் மனம் இடந்தராது. அதனால் நான் என் இஷ்டம் போல் நடந்துக்கொள்ளுகிறேன். நான் செய்வது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள். என் காலத்திற்குப் பிறகேனும் நீங்கள் நல்லபடியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கைக்காவது நான் இந்த முடிவை சந்தோஷமாக எதிர் ஏற்கிறேன்,’ என்று எழுதி இருந்ததை வாசித்ததும், அவன் மனம் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே அவன் சந்தேகித்தபடி முடிந்து விட்டதே என்று ரொம்ப வருத்தப்பட்டான். அவசர அவசரமாக மேல் வேஷ்டியை இழுத்து சரியாக தோளில் போட்டுக் கொண்டு, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘அவள் எங்கு அகப்பட்டாலும் அவள் காலில் விழுந்தேனும் மன்னிப்பு கேட்டு, அவளை வீட்டுக்கு அழைத்து வருவது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளிக் கிளம்பினான்.

கதவு மறையில் நின்றிருந்த ராதை, வேணுவின் வருகையை அவன் செருப்பு சத்தத்தில் இருந்து அறிந்துக் கொண்டாள். தான் அங்கு நின்றால் தன்னை வேணு பார்த்து விடுவான் என்று வெளியில் செல்வதற்காக மறுபடியும் தெருவை எட்டிப் பார்த்தாள். தெருவில் இன்னும் சில ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பதை பார்த்து, ‘சரி இப்போது சமயம் சரியாக இல்லை. இப்போது நான் வெளியில் சென்றால், அவரும் பின் தொடர்வார். பிறகு ஊர் அறிய இருவருக்கும் வீண் அவமானம். அவர் இப்போது நம்மை தேடித்தான் வெளியில் புறப்படுகிறார். அவர் வெளியில் சென்றபின் நாமும் வேறு பாதையாக அவர் கண்களில் படாமல் எங்காவது சென்று விடலாம்’ என்று நினைத்து கதவோடு ஒடுங்கி, அவர் பார்வையில் படாமல் மறைந்து நின்றாள்.

கீழே இறங்கி வந்த வேணு வாசலில் வந்து தெருவை இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தான். ஒன்று இரண்டு ஆட்களைத் தவிர அவன் தேடும் அல்லது தேடப் போகும் ஆளைத்தான் காணவில்லை. ஒரு தடவை வீட்டை திரும்பிப் பார்த்தான். வாசல் கதவு சிறு இடுக்கு வழியாக, ஒரு சிவப்புக் கலர் தெரிந்தது போல் இருந்தது. சட்டென்று அவன் மனதில் ‘ராதை இன்று என்ன கலர் புடவை கட்டி இருந்தாள்’ என்ற கேள்வி எழுந்தது. சிவப்புத்தான் என்ற முடிவுக்கு வந்தான். கதவண்டை போய் பார்த்தான். ராதை பயத்தினால் நடுங்கி ஒரு சிறு குழந்தை போல் உடம்பை எல்லாம் ஒடுக்கிப் புடவையை ஒதுக்கி கூட்டிப் பிடித்து கதவு மூலையோடு நெருங்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

பயந்து வெறுவிப் போய் நின்று கொண்டிருந்த ராதை வேணுவை பார்த்ததும், திடுக்கிட்டு அவன் முகத்தையே கூர்ந்து நோக்கி, அசைவற்று அப்படியே நின்று விட்டாள்.

வேணுவும் ஐந்து நிமிஷம் வரை அவளையே பார்த்து நின்றான்.

”என் ராதை இங்கு வந்து நிற்கிறாய்? வா, மேலே போவோம்’ என்று அழைத்தான் மெதுவாக. அவன் குரலில் பரிதாபம், மன்னிப்பு, இரண்டும் கலந்திருந்ததாக பட்டது ராதைக்கு. பதில் பேசாமல் அவன் பின் மாடிப் படிகளில் கால் வைத்து ஏறினாள்.

***   

Image Courtesy: http://images.nationalgeographic.com/ 

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

எழுத்தாளர் பூரணிக்கு ஓர் அஞ்சலி! – பூரணியின் படைப்புகள் சில…

Image

இதுதானே பூரணம்?

நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…

‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக்குறியான நிலையில் போராட்டமான வாழ்க்கை. ஒரு நாள் க்ரீம் பிஸ்கெட் சாப்பிட வேண்டுமென ஆசை. அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி, தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அதை எடுத்துப் பார்த்த அம்மா ரொம்பவும் நெகிழ்ந்து போனார். அதுதான் என்னுடைய முதல் எழுத்து.

அம்மாவின் வழிகாட்டுதல்தான் என்னையும் இலக்கியத்துக்குள் இழுத்தது. சிறு வயதிலேயே வாழ்க்கையை, அதன் யதார்த்தத்தைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது. அம்மாவின் எழுத்துப் பாணியும் எனது எழுத்து வகையும் வேறு வேறு. ஆனாலும், உள்ளது உள்ளபடி எழுதுவதென்பது அம்மாவின் பாடம்தான்.

Image

அம்மா மூன்றாம் தலைமுறையின் பிரச்னைகளைக்கூட எப்படி எடுத்துக் கொண்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். என் மகள் 3 வயது முதல் பரதக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தாள். அவள் திருமணமும் அதைத் துண்டிக்காததாக இருக்க வேண்டும் என எண்ணினோம். ‘பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல… நாட்டியம் தொடர வேண்டும்’ என்று ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம். நாட்டியம் ஆடுபவர் என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் வேறு வகையில் புரிந்து கொண்டவராக இருந்தனர் அந்த ஆணும், அவரைச் சார்ந்தவர்களும். மேலும், திருமணத்துக்கு ஏற்றவரல்லாத ஒரு ஆண் என்பதையும் நாங்கள் அறியாமல் திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து 10 நாட்களிலேயே இதில் ஏதோ சிக்கல் என்று எங்களுக்குப் புரிய வந்தது. அப்போது நாங்கள் அம்மாவின் எதிர்வீட்டில்தான் குடியிருந்தோம். 3 மாதங்கள் வரை இயல்பாகவே நடந்து கொண்டோம். எங்கள் மகளின் வேதனைகளுக்கு விவாகரத்து ஒன்றே வழியென தீர்மானம் செய்தோம். அம்மா, அண்ணன், அண்ணி என எல்லோரிடமும் சொன்னோம். அம்மா வயதானவர், எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயமும் பதற்றமும் இருந்தது. சொல்லி முடித்தவுடனேயே அம்மா, ‘எனக்கு முன்னமே சந்தேகம்தான். புதிதாக திருமணமான ஆணின் எந்தச் செயலும் அவனிடமில்லை. இந்த மாதிரி திருமணம் தேவையில்லை’ என்றார். அந்த ஆணைச் சேர்ந்தவர்களை தன் வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்கள், அம்மா வயதில் பெரியவர், அதனால் அவமானம் கருதி பேத்தியை தங்களுடன் அனுப்பி வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் பேசினார்கள். அம்மா அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ‘இப்படியொரு கல்யாணம் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது கல்யாணமும் இல்லை. என் பேத்திக்கு கையில் கலை இருக்கிறது. அதன் எதிர்காலம் பரந்து கிடக்கிறது. தயவுசெய்து எல்லோரும் எழுந்து வெளியே போங்கள். இது கனவு என்று நாங்கள் நினைக்கத் தொடங்கி வெகு காலம் ஆயாச்சு’ என்றார். அதிர்ந்து விட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர். ஆனாலும். சமுதாயமும் உறவுகளும் (அம்மாவைத் தவிர) எங்களுக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து என் மகளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததும், அதைப் பார்த்து அம்மா மகிழ்ந்து, நெகிழ்ந்ததும் தனிக்கதை. அப்போது அம்மாவுக்கு வயது 86!

என்ன சொன்னார்களோ, என்ன எழுதினார்களோ அப்படியே வாழ்ந்தவர் என் அம்மா. திருமணம் அவரவர் விருப்பம் சார்ந்தது என்பதில் மிகுந்த தெளிவு கொண்டவர். ‘பொருந்தாத போது கழட்டி எறிய வேண்டியதுதானே?’ என்பார். ‘காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி எறி… எப்பவோ மாட்டிண்டு கழட்டிப் போடற செருப்புக்கே இந்த சுதந்திரம்னா, எப்பவுமே கூட இருக்க வேண்டிய கல்யாணத்துல ஒட்டாம எப்படி இருக்கிறது?’ என்பார்.

100 வயது வரை என்னுடன் இருந்த என் அம்மா, இப்போதும் என்னுடனேயேதான் இருக்கிறார். இருப்பார். தன்னுடைய எழுத்துகள் அத்தனையையும் எனக்கு சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார். எழுத்துதான் எனக்கு அம்மா அன்றும் இன்றும் என்றும்…’’

தொகுப்பு: ஆர்.வைதேகி

பூரணியின் சில படைப்புகள்…

வயிறு  (சிறுகதை) 

அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையற்கார அம்மாள் பரிமாற வந்தாள். எனக்கு அவளை அங்கு பார்த்தும் ஒரு ‘ஷாக்’. அவள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் காமாட்சி… ‘காமு’ என எல்லோராலும் அறியப்பட்டவள். அவளும் என்னை அங்கு பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள். முகத்தில் சற்று வெட்கம் கலந்த சோகம். நான் என்னை சமாளித்துக் கொண்டு, “அடி காமு, நீ எப்படியடி இங்கு வந்தாய்?” என்று கேட்டேன். காமு, “வயிறு இருக்கிறதே!” என்று பதில் சொன்னாள். கமலம் மாமி, “இவரை உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். “தெரியும், எங்கள் கிராமம்தான். தூரத்துச் சொந்தம்கூட” என்றேன். காமுவின் முகம் மலர்ந்தது.

வீட்டுக்கு வந்த பிறகு, எனக்குக் காமுவின் நினைவாகவே இருந்தது. அவள் தகப்பனார் பஞ்சு சாஸ்திரிகள் வைதீகம். ஏதோ கொஞ்சம் நிலபுலம், இருக்க வீடு என்று இருந்தது. எங்கள் வீட்டில் என் தகப்பனார் செய்யும் சிரார்த்தத்தில் பஞ்சு சாஸ்திரிகளும் ராமசாமி ஐயரும்தான் பிராமணார்த்தம் சாப்பிட அழைக்கப்படுவார்கள். ஏனெனில், என் தகப்பனாருக்கு நன்கு தாங்கிச் சாப்பிடுபவர்களைத்தான் அழைக்கப் பிடிக்கும். (இவர்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள்.) கொறிப்பது போல் சாப்பிடுபவர்களை கூப்பிடமாட்டார். ரசித்து, ருசித்து திருப்தியாக அவர்கள் சாப்பிடுவதை என் தகப்பனார் பிரம்மானந்தமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.

Image

பஞ்சு சாஸ்திரிகளுக்கு காமு ஒரே மகள். பிள்ளைகள் மூவர். மூவரும் படித்து வேலை பார்த்துக் கொண்டு அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். சாஸ்திரிகள் அவர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. காமுவை நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று இப்படி சந்திக்க நேர்ந்தது.

சில நாட்கள் சென்றிருக்கும். காமு என் வீட்டுக்கு வந்தாள். ‘‘வா’’ என்றேன்.

“மாமி, அன்று உங்களைப் பார்த்ததும் எனக்கு மனதில் ‘திக்’கென்று ஆகி விட்டது. ஆனால், நீங்கள் மிக சகஜமாக என்னைத் தெரியுமென்றும், நான் உங்கள் உறவினள் என்றும் அந்த அம்மாளிடம் சொன்னது எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இவ்வளவு வசதி படைத்த நீங்கள் என்னை உறவினள் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது என்றால் உங்கள் மனசு எவ்வளவு விஸ்தாரமானதாக இருக்க வேண்டும்!”

“இதில் என்னம்மா அதிசயம்? இன்று நீ சமையற்காரியாக இருப்பதனாலேயே உறவு இல்லையென்று போய்விடுமா? சரி, அதை விடு. உன்னை நல்ல இடம் பார்த்துத்தானே உன் தந்தை மணம் செய்து கொடுத்தார், பின் ஏன் இந்த நிலை?”

“புக்ககம் இன்றும் வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் அங்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. பத்து வருடம் வாழ்ந்தேன். என்றாலும் ஒரு குழந்தைக்குத் தாயாகும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. கணவர் இறந்தபின் பிறந்தவீடு வரவேண்டியதாகி விட்டது. புக்ககத்தார் எனக்கு ருபாய் 25 ஜீவனாம்சமாகக் கொடுக்கிறார்கள். அப்பா உயிரோடு இருந்தவரை சிரமம் தெரியவில்லை. என் ஜீவனாம்சத் தொகையைக் கூட சேர்த்துத்தான் வைத்தார். அவர் உடல் நலம் கெட்டதும் அந்தப் பணம் வைத்தியச் செலவில் தீர்ந்துபோய் விட்டது. அப்பா சாகும்வரை எட்டிக்கூடப் பார்க்காத பிள்ளைகள் அவர் இறந்த பிறகு நிலத்தை பங்கிட்டுக் கொண்டு போய் விட்டார்கள். ஏதோ பெரிய மனது செய்து வீட்டை விற்காமல் நான் உயிருடன் இருக்கும் பரியந்தம் அதில் வசித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு என்னைப் பற்றி விசாரிப்பது கூடக் கிடையாது. என்ன செய்வது? பிரும்மா தோண்டின வயிற்றை தூர்க்க முடியுமா? சௌகர்யமானவர்களுக்கு சாண் வயிறு என்றால், எனக்கோ சர்வாங்கமும் வயிறாக இருக்கிறது.”

“கமலம் மாமி வீட்டில் உனக்கு வசதியாக இருக்கிறதா?”

“எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டில் எல்லாம் ரொம்பக் கணக்கு கச்சிதம். அவர்கள் எல்லோரும் சாப்பாட்டைக் கொறிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், ஹார்லிக்ஸ், பால், பழம் எல்லாம் அவர்களால் சாப்பிடமுடிகிறது. அவர்களெல்லாம் மூன்றே தோசையோடு எழுந்துவிடும்போது நான் மாத்திரம் அதிகம் சாப்பிட முடியுமா? தட்டின் முன் உட்கார்ந்தால் வயிறு நிறைய சாதம் பரிமாறிக் கொள்ள எனக்கே வெட்கமாக இருக்கு. பாடுபட்டும் வயிறார பசிதீர சாப்பிட முடிவதில்லை. ஊருக்கே போய்விடலாம் என்று இருக்கிறேன். வரும் ஜீவனாம்சத்தில் குருணைக் கஞ்சியானாலும் வயிறு நிறைய, சங்கோஜப்படாமல் குடித்துக் கொள்ளலாம் அல்லவா?”

***

பூரணியின் நினைவலைகள்…

முதுமை 

Image

‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர் களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப்பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.

உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பது தான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது.  பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

வாய்விட்டுச் சொல்ல மனித நாகரிகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமான பின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்திருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்து வந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப்பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதி போல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்புகிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, ‘கிரைண்டர்’ போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்ல முடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய்விடுகிறது. ஆணும் பெண்ணும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத்திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது. இது போன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகிவருகிறது.

***

கால மாற்றம் 

Image

ரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர்களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறுவிதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக்கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெறியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும் கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தார்கள்.

அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, “காதலுக்கு வழிவைத்து கர்ப்பத்துக்கு தடை வைத்து” என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது. ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்க முடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத்தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு. அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழு மனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.

இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக்குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுற வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல. முப்பது வயதுக்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.

***

கவிதைகள் (எழுதிய காலம் – 1930-45)

நலங்குப்பாடல் 

Image

து தருணம் வருவீரே நாதா

என்னரும் நேசரே

பொன்னெனும் மாலை

தன்னிலே நலங்கிடவே (இ)

மாலையில் மேற்கே மறைந்திடு ரவியுடன்

நீல நிறமுடைய வானில்

கோலமுடைய பக்ஷி ஜாலங்கள் பறந்து

கூட்டினின் அடையுது பாரீர் (இ)

பசிய புல்வெளியில் பசுக்களும் மேய்ந்து

பசி ஒழித்து கன்றை நினைந்து

விசையுடன் வீட்டை நோக்கியே வந்திடும்

வேளையிதே வருவீரே (இ)

பூஜைக்குகந்த நல்ல பூ பழம் தேங்காய்

பூவையர் கரமதில் ஏந்தி

ஆலயம் செல்லும் அற்புத வேளையில்

ஆனந்த நலங்கிடுவோமே (இ)

***

நாகரிக ஓடம் 

Image

ணபதியே கலைமகளே இந்தக் கப்பல் செல்ல அருள் புரிவீர்.  கடுகியே முன் காலமதில் பெண்கள் உடை நகையும் இக்கால மடமயிலார் புடவையுடன் நகை விரைந்துரைக்க வரம் தருவாய்.

முடுகு

சுட்டி பட்டம் ஜடை

சிங்காரம் போச்சு

இஷ்டமுடன் தலையிலே

சிலைடு ரிப்பன் ஆச்சு

புஷ்பங்கள் தலையிலே

தைப்பதும் போச்சு

பிச்சோடா மேல் வளைத்துப்

பூ வைக்கலாச்சு

கம்மலுடன் வாளிகளும்

குண்டலமும் போச்சு

கமலங்களால் செய்த

டோலக்குமாச்சு

புல்லாக்கு நத்து நகை

இல்லாது போச்சு

பேசரியுடன் கிளாவர்

ஆசை நகை ஆச்சு

பசு மஞ்சள் பூசுவது

பழமையாய் போச்சு

பவுடர் முகம் தன்னில்

பூசிடவும் ஆச்சு

உட்கழுத்து அட்டிகை

செயினெல்லாம் போச்சு

மிக்க நகை அணிவதே

மௌடீகமாச்சு

காப்புடன் கொலுசுகளும்

கனத்த நகை போச்சு

கையிலே கடிகாரம்

சன்ன வளையாச்சு

கொட்டடிச் சேலைகளைக்

கட்டுவது போச்சு

புட்டாக்களோடு சரிகை

புடவைகள் உண்டாச்சு

கட்டமொடு காலிறங்கு

சேலைகளும் போச்சு

மட்டமான கார்டு கரை

டிக்கட் கரை யாச்சு

பெரிய கரைப் புடவைகள்

பழமையாய் போச்சு

பார்டரில் பூ புதுச்சேரி சில்காச்சு

பாதசரம் பட்டாடைகள்

பீலிகளும் போச்சு

பாவையர்கள் பாதமதில்

சிலிப்பர் இடலாச்சு

தண்ணீர் குடம் தூக்கும்

தருணியர்கள் இப்போ

டென்னிஸ் விளையாட

கிளப்புகள் உண்டாச்சு

ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்போழுதும் மாறுதலே

இதையறியா பல பெரியோர் கண்டு இகழுவதும் அறியாமை.

***

போஜனப் பாட்டு 

Image

வித விதமான

விசித்திரப் பந்தலில்

இலை விரித்திருக்கு

போஜனம் செய்யவே

ராஜ ராஜாக்களே

நீர் வாரும்!

ஆசனங்களில் அமர்ந்து

ஆசையாய் உண்டிடும்

பளிங்கினால் பல மேஜை

பவளக்காலொடு குரிச்சி

பரிமாறுபவர் கனச் சுத்தம்

பரிசாரகரோ நளன் மட்டம்

பாதாம் கீர் பால் பாயாசம்

பிரமாதம் கேரளப் பிரதமன்

ஏதேதோ பல பரமான்னம்

எப்படிச் சொல்லுவ துபமானம்

சம்பா அன்னம் பூப்போல்

சுவை கூட்டும் பொன் பருப்பு

சாம்பாரும் தயிர்வடையும்

சாப்பிட உடனே வாரும்

கத்தரிக்காய் ரஸவாங்கி

காரமுள்ள கறிவகைகள்

கொத்தவரை அவரை காரட்

கோசுடன் பலபல காய்கள்

அவியல் பொரியல் துவையல்

வறுவல்களில் பல வகைகள்

புவியில் புகழ் படு துருவல்

பொங்கல் சட்னி கொத்சு

பொரிச்ச கூட்டில் ஆறுவகை

புளிச்ச கூட்டில் வேறுவகை

எரிசேரியுடன் புளிசேரி

எத்தனை கேரள வகைகள்

கர்னாடகா பிஸி பேளா பாத்

காரம்குறைந்த ஹுளி சொப்பு

ஆந்திர ஆயிட்டம் பல கண்டீர்

அதுவும் சாப்பிட உண்டு

கருவட வற்றல் குழம்பு

கண்கவர் கலரில் மோர் குழம்பு

கசக்கா பாவற்காய் பிட்டலை

கலந்திருக்கும் அதில் கடலை

பைனாப்பிள் பன்னீர் ரசங்கள்

சைனாக் கிண்ணியில் ஊற்றி

பருகிடுவீர் சுவைத்திடுவீர்

சுறுசுறுப்பாக்கிடும் மனதை

விளாமிச்சை கலந்த குளிர் நீர்

வெந்நீரும் குடித்திட உண்டு

வேண்டியதெதுவோ கேட்பீர்

விரைவாய் கிடைத்திடும் காண்பீர்

ஜிலேபி லட்டு பால் கோவா

குலாப் ஜாமூன் ஹல்வா

தில்லி பாதுஷா சுருள் பூரி

தித்திக்கும் மைசூர் பாகு

நாக்கில் போட்டால் கரையும்

கேக்குகள் எத்தனை வகைகள்

போக்கிட இனிப்பை பஜ்ஜி

பொங்கல் வடை வகை சொஜ்ஜி

மிக்சர் போண்டா சேவை

பிக்சர் பாப்கார்ன் பக்கோடா

சொச்சம் பலப் பல அயிட்டம்

சொல்வது மிகவும் கஷ்டம்

ஆடை தோய்த்த நல்ல தயிரும்

கூடை கூடையாய் பழவகையும்

ஐஸ்ஸுடனே வாசனை நீரும்

நைசாய் உண்டிட வாரும்

கைகளைக் கழுவவும் வெந்நீர்

ஹாங்கரில் கலர்கலர் டவல்கள்

காஷ்மீர் கம்பள விரிப்பு அதில்

சுவையாய் பீடா ட்ரே இருக்கு.

***

நடமாடும் நரகம்!

addicted-to-your-cellphone-you-re-not-alone-3a52e782b7

செல்பேசும் கருவியோடு

கையதுவோ காதினிலே

வாசலிது எனும் உணர்வை

மறந்த நிலை பரவசங்கள்…

யோசித்தல் எனும் செயலால்

எதிர்வருவோர் தெரிவதில்லை.

ஆக்ஸிடென்ட் அதிகரிப்பு,

அரிய உயிர் மதிப்பிழப்பு,

வேகப்பயணம் செய்

வண்டிகளால் உயிர்ச்சேதம்!

தாகத்தைத் தீர்க்கின்ற

குளிர் பானமதிலும் நச்சு!

மோகம் தருகின்ற

விளம்பரங்களில் மயக்கம்!

நாகரீக வாழ்வு தரும்

நாசமதோ கொஞ்சமல்ல!

(2009ல் எழுதப்பட்டது)

கவிதைகள்

ஆற்று வழி

Imageமராவதி பாயும் அழகியதோர் சிற்றூராம்
சிற்றூரின் ஆற்றுவழி சிந்தனைக்கு ஊற்றுவழி.
அடைத்திருக்கும் வேலியுள்ளே தழைத்திருக்கும் வெற்றிலையோ
மடைதிறக்க அருவியென வயல் நிறைந்து நீர் நிற்கும்
நீரோடு சேர்த்து சிறு மீன் வந்து துள்ளிவிழும்
துள்ளிவிழும் மீன் பிடிக்க தூரத்தே நாரை வரும்.
வெண்கழுத்துப் பொன் கருடன் வானத்தில் வட்டமிடும்.
சங்கெனவே வெண்கொக்கு தவமிருக்கும் நீர்த் தடத்தில்
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
படர்ந்த செடியினிலே பச்சரிசி போல் அரும்பு
அடர்ந்த இலைகளிலே அழகழகாய்ச் செம்புள்ளி
மூக்குத்தி போன்ற மலர் மலர்ந்து மணம்வீசும்
தூக்கத்திலே கனவாய்த் தோற்றம் அளித்திருக்கும்
தங்கரளிப் பூ சிதறி தரைமுழுதும் பாய் விரிக்கும்
செங்கரும்பு பூத்திருக்கும் சாமரம்போல் ஆடிநிற்கும்
தென்னை பிளந்தளிக்கும் தந்தத்தின் பூச்சரங்கள்
அன்னையின் அன்பெனவே அமுதூட்டும் செவ்விளநீர்
பாறையிடை நாணல் பச்சைக்கொடி காட்டும்
கூரை கவிந்ததெனக் கார்முகில்கள் கூடிவரும்
ஆடிப்பெருக்கெடுத்து அழகு நதி பாய்ந்து வரும்
ஓடிவரும் செங்குழம்பில் உருண்டு வரும் பெருமரங்கள்
ஆடிப்பெருக்கினிலே ஆற்றுவழிக் காட்சியிலே
மோடிக்குப் பாம்பெனவே மனம் நிறைந்து தனை மறக்கும்
(கணியூர் அமராவதி ஆறு பற்றிய இக்கவிதை எழுதிய காலம் 1970. அவர் 1960-64 களில் வசித்த கணியூர் என்னும் சிற்றூர் பழநிக்கு அருகில் அமைந்தது.)
***
எழுத்து

Image
ட்டிடத்தின் மாடியில்
கைப்பிடிச்சுவரை அண்டிய
கற்பாறைச் சந்தில்
விழுந்த ஒரு விதை
காலம் கடந்த நாளில்
செடியாக முளைத்துவிட்டது.
***
Image Courtesy:

http://uwalive.blogspot.in/

http://www.mdgfund.org

http://manakkalayyampet.blogspot.in

http://commons.wikimedia.org

http://media-cdn.tripadvisor.com

http://blog.gardenmediagroup.com

http://gorkhatimes.wordpress.com/

பூரணியின் காலத்தை வென்ற கதைகளை வாசிக்க…

பூரணி

காலத்தை வென்ற கதைகள் – 26

சரோஜா ராமமூர்த்தி

(1921  – 1991)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். அக்காலத்தின் பிரபல வெகுஜன எழுத்தாளர்களுள் ஒருவர். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தவர். பல எதிர்ப்புகளை மீறி துணிவாக பதிவுத் திருமணம் செய்துகொண்டவர். இவரின் ‘பனித் துளி’ நாவல் இவரை எழுத்துலகில் பிரபலமாக்கியது. ‘பனித்துளி சரோஜா’ என்றே அழைக்கப்பட்டார். ‘முத்துச்சிப்பி’,  ‘இருளும் ஒளியும்’, ‘நவராத்திரிப் பரிசு’, ‘மாளவிகா’ இவரின் பிற நாவல்கள்.

600 சிறுகதைகள், 10 நாவல்கள் வரை எழுதியுள்ளார். இவரின் குடும்பமே எழுத்துத்துறையில் இருப்பது ஆச்சரியமே. கணவர் து.ராமமூர்த்தி, மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி என நான்கு எழுத்தாளர்களைக் கொண்ட குடும்பம்.

முதல் கடிதம்

நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள்.

”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள்.

Image

ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் – மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டும் அலுப்பு இல்லை. வாழ்க்கைப் பாதையில் முதல் முதல் பிரவேசிக்கும் உற்சாகம் அல்லவா அவர்களுக்கு? நாலைந்து சிறிய பெண்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாகஸ்வரக்காரன் மத்தியமாவதி ராகத்தை வாசித்துக்கொண்டு நடந்தான். சீனிவாசன் ஜயலஷ்மியைக் கடைக்கண்ணால் கவனித்தான். இதற்குள் எத்தனையோ தடவைகள் அவள் கண்களை அவன் சந்திக்க முயன்றும் அவள் இவன் பக்கமே திரும்பாமல் உறுதியுடன் இருந்தது, அவள் பிடிவாதக்காரி என்பதை சீனிவாசனுக்குச் சொல்லாமலே விளக்கிவிட்டது. ஜயலஷ்மியும் அவனை அதே சமயத்தில் கடைக்கண்ணால் பார்த்தாள்.

”என்ன, என்னைப் பார்க்கக்கூட மாட்டாயோ?” என்று மெதுவாக, ஆனால் ஸ்பஷ்டமாகக் கேட்டான் சீனு அவளைப் பார்த்து.

அவள் பொன்னிறக் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. அழகாக ஆனால் சுருக்கமாக அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜயம்.

”உன்னைத்தானே?” என்று மறுபடியும் கேட்டான் சீனு.

”பேசினால் போயிற்று. கூட எல்லோரும் வருகிறார்கள்” பெண்மையின் நிதானத்தை அந்தச் சொற்கள் விளக்கின.

இதற்குள் கோவில் வந்துவிட்டது. கூட வந்த பெண்கள் குளக்கரையில் பாலிகைக் கிண்ணங்களை வைத்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றப் போய்விட்டார்கள். பாலிகைச் செடிகளைக் குளத்தில் அலம்பிக்கொண்டே தலை குனிந்து கொண்டிருந்தாள் ஜயலஷ்மி. அவளுடைய நிதானம் சீனுவுக்குப் பிடிக்கவில்லை.

”என்னவோ அந்தக் காலத்துக் கல்யாணப் பெண் மாதிரி தலையைக் குனிந்து கொள்கிறாயே! இரண்டு வார்த்தை பேசினால் வாய் முத்து உதிர்ந்து போய்விடுமா?” சீனுவின் வார்த்தைகள் கடுமையாகத் தோன்றவே ஜயம் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

”என்ன பேச வேண்டும்? ஏதாவது கதை கிதை சொல்ல வேண்டுமா?” இப்படிச் சொல்லிவிட்டு அவள் பரிகாசச் சிரிப்புச் சிரித்தாள்.

”இன்றைக்கு மத்தியானம் ஊருக்குப் போகிறேன் என்பது தெரியுமா உனக்கு?”

”வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்” என்றாள் ஜயலஷ்மி.

”மறுபடியும் தீபாவளியின்போதுதான் நாம் சந்திக்கப் போகிறோம்” என்றான் சீனு.

அவன் வார்த்தைகளில் பிரிவின் துயர் நிரம்பி இருந்தது ஜயலஷ்மியின் முகமும் வாடியது.

”அப்பொழுது என்னைக் கட்டாயம் உங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவீர்கள், இல்லையா?”

”இப்பொழுதுதேகூட அழைத்துப் போய்விடுவேன். உன் அப்பா தான் சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.”

இதற்குள் கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த பெண்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

”நான் ஊருக்குப் போனபிறகு கடிதம் போடுகிறாயா?” என்று கேட்டான் சீனு.

”ஓ”என்றாள் ஜயலஷ்மி.

சீனு அவசர அவசரமாகத் தன் விலாசத்தை அவளிடம் கூறி முடிப்பதற்குள், மற்றப் பெண்கள் வந்துவிட்டார்கள்.

2

Image

சீனு ஊருக்கு வந்த பிறகு இதுவரையில் தனிமை என்றால் என்ன என்று அறியாதிருந்தவனைத் தனிமை மிகவும் வருத்தியது. ஜயலஷ்மியின் பேச்சு, புன்னகை, பரிகாசம், ஒவ்வொன்றும் மாறி மாறி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் பெண் கடிதம் எழுதினாலும் புத்திசாலித்தனமாகத்தான் எழுதுவாள் என்று நினைத்துக் கொண்டான். தேனூறும் அவள் வார்த்தைகளைப்போலவே கடிதமும் தேனில் தோய்த்து எழுதப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துகொண்டான் சீனு. ஆனால், நாட்கள் ஒவ்வொன்றாகச் சென்று கொண்டிருந்தன. தினமும் தபால்காரன் இவன் எதிர்பார்க்கும் கடிதத்தைத் தவிர வேறு கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். சீனுவுக்கு மனத்தில் தெம்பு குறைந்து போயிற்று. இந்தச் சந்தர்ப்பத்தில் கல்யாணம் முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது ஜயலஷ்மி சீனுவின் தங்கையிடம் ரகசியமாக ஏதோ கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் தங்கையிடம் அந்த ரகசியத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.

”மதனியைக் கடிதம் போடச் சொல்லி இருக்கிறாயாம் அண்ணா. ஆனால், அவள் உனக்கு முதலில் எழுத மாட்டாளாம். நீதான் எழுத வேண்டுமாம்” என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே கூறினாள்.

சீனுவுக்கு இப்பொழுதுதான் புரிந்தது, ஜயத்தினிடமிருந்து கடிதம் வராத காரணம். கடைசியில் தன்னுடைய பிடிவாதத்தையும் போக்கிரித்தனத்தையும் விடவில்லையே என்று தோன்றியது அவனுக்கு. சீனுதான் கடிதம் முதலில் எழுத வேண்டும் என்பது தெரிந்து விட்டது. அப்பொழுதுதான் சீனுவுக்குத் தான் அவளிடம் அவள் விலாசம் கேட்டு வாங்காமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. கடைசியில் கல்யாணம் நடந்த வீட்டு விலாசத்தைப் போட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்த பிறகுதான் அவன் மனம் ஆறுதல் அடைந்தது.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதன் பிறகும் அவளிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரவில்லை!

கடைசியாக அவன் எதிர்பார்த்திருந்த தீபாவளிக்கு ஒரு வாரம் இருந்தது.

”ஊரிலேயிருந்து உன் வேட்டகத்தார் உன்னைத் தீபாவளிக்கு அழைப்பார்களே. நல்லதாகப் புடவை ஒன்று ஜயலஷ்மிக்கு வாங்க வேண்டும். என்னுடன் கடைக்கு வருகிறாயா?” என்று அவன் தாய் அவனைக் கூப்பிட்டாள்.

”நான் எதற்கு அம்மா? நீங்களே வாங்கி வந்துவிடுங்கள்” என்றான் சீனு.

”நான் கர்நாடக மனுஷி அப்பா. உன் மனசுக்கும் பிடிக்க வேண்டுமோ இல்லையோ?” என்று தாய் வற்புறுத்திக் கூப்பிட்ட பிறகு அவனும் கடைக்குப் புறப்பட்டாள்.

தாமரை வர்ணத்தில் இருந்த புடவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜயலஷ்மியின் சிவந்த மேனிக்கு இது நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அந்த ஜயலஷ்மிதான் ஒரு கடிதங்கூடப் போடாமல் இருக்கிறாளே என்பதை நினைத்தபோது அவளிடம் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஜயலஷ்மியின் வீட்டை அடைந்தான் சீனு. மாமனார் பரிந்து பரிந்து உபசரித்தார். மாமியாருக்கு மாப்பிள்ளை வந்திருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. மைத்துனன் மைத்துனிகளுக்குப் பரிசுகள் வாங்கி வந்திருப்பவற்றை அவர்களிடம் கொடுத்தான் சீனு.

ஜயலஷ்மியும் பின்னல் அசைய ஒய்யார நடை நடந்து அவன் எதிர்போய் வந்து கொண்டிருந்தாள். ஆனால் இவன் இருக்கும் பக்கங்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கலகலவென்று குழந்தைகளுடன் சிரித்துப் பேசினாள். அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டு இவன் உள்ளம் தேனைக் குடித்த வண்டுபோல் மயங்கியது.

‘ஒருவேளை ரொம்பவும் கர்வம் பிடித்தவளாக இருப்பாளோ?’ என்று தன் அறையில் உட்கார்ந்துகொண்டு எண்ணமிட்டான் சீனு. இரவு சாப்பிடக் கூப்பிட அவன் மாமனாரே வந்தார்.

”சீக்கிரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம். விடியற் காலம் எழுந்திருக்க வேண்டும்” என்று கூப்பிட்டார் அவர். கனவில் நடப்பதுபோல எழுந்து இலையில் முன்பு உட்கார்ந்து கொண்டான். ஜயலஷ்மிதான் பரிமாறினாள். ‘வேண்டாம் வேண்டாம்’ என்னும்போதே இலையில் பாயசத்தை ஊற்றினாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமனார் சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையின் அவஸ்தையை மிகவும் ரசித்தார். அந்தச் சந்தர்ப்பத்திலும் சீனு அவள் கண்களைச் சந்திக்க முயன்றான். அழகிய விழிகள் நிலத்தில் பதியக் குனிந்த தலை நிமிராமல் உள்ளே போய்விட்டாள் அவள்.

சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்று உட்கார்ந்தான் சீனு. தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு அவள் மைத்துனி உள்ளே வந்தாள். யாருக்காக ஆறு மாசமாக காத்திருந்து வந்திருக்கிறானோ அவள் தன்னை லட்சியம் பண்ணாமல் இருந்தது அவனுக்கு வேதனையை அளித்தது. எதிரில் தட்டில் இருந்த தளிர் வெற்றிலையும் வாசனைப் பாக்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

”இந்தா! இந்தப் புடவையை அம்மா அதுக்காக வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்று தாமரைவர்ணப் புடவையை எடுத்து மைத்துனியிடம் கொடுத்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் புடவையைப்பற்றி எல்லோரும் பேசுவது கேட்டது. ஜயலஷ்மி ஏதாவது பேசுகிறாளா என்று குறிப்பாகக் கவனித்தான் சீனு. அவளுடைய பேச்சுக் குரல் கேட்கவில்லை. கடைசியாக அவள் தாய் அந்தப் புடவையைப் பீரோவில் வைக்கச் சொல்லி இவளிடம் கொடுத்ததும் அவள் பேசாமல் அதை வாங்கிக்கொண்டு போனதும் சீனுவின் வேதனையை அதிகரிக்கச் செய்தன.

3

நாகஸ்வரக்காரன் பூபாள ராகத்துடன் பள்ளியெழுச்சியை ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து அப்பொழுதுதான் கண் அயர்ந்த சீனுவை அவன் மாமனார் வந்து எழுப்பினார். வேண்டா வெறுப்பாகப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் சீனு.

”ரெயிலில் வந்தது அலுப்பாக இருக்கிறது. வீட்டில் எல்லோரும் ஸ்நானம் செய்து ஆகட்டுமே” என்றான் சீனு.

”மத்தியானம் தூங்கலாம். எழுந்திருங்கள்” என்று கண்டிப்பாக உத்தரவிட்டார் அவர்.

மங்கள ஸ்நானம் ஆயிற்று. தாமரை வர்ணப் புடவை சல சலக்கக் கூடத்தில் தன் தகப்பனாருடன் உட்கார்ந்திருந்த கணவனுக்கு நமஸ்காரம் பண்ண வந்தாள் ஜயலஷ்மி. ஈரம் உலராத கூந்தலைப் பின்னிப் பாதியில் கட்டியிருந்தாள். அதன்மேல் செண்டாகக் கட்டி வைத்திருந்த ரோஜாவும், மை தீட்டிய விழிகளும், புன்னகை ததும்பும் முகமும் அவனைப் பரவசத்தில் ஆழ்த்தின.

Image

”மாப்பிள்ளை! வைர ஜிமிக்கி வேண்டுமென்று குழந்தை ஆசைப்பட்டாள். செய்து போட்டிருக்கிறேன். ஜயம்! எங்கே ஜிமிக்கியைக் காட்டம்மா” என்றார் அவர். ஜயம் காதுகளில் சுடர் விட்ட ஜிமிக்கிகளைக் கழற்ற ஆரம்பித்தாள்.

”வேண்டாம். பார்த்தாகிவிட்டதே!” என்று கூறிவிட்டுச் சீனு தன் அறைக்குப் போவதற்கு எழுந்தான்.

சமையல் அறையிலிருந்து வந்த சம்பாஷணை அவன் காதில் விழுந்தது. ”தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி இல்லையே உன் கணவர்! அவர் வந்ததிலேயிருந்து நீ அவர் இருக்கும் பக்கமாவது போனால்தானே? சமையல் அறையையே சுற்றிச் சுற்றி வருகிறாயே!” என்றாள் ஜயலஷ்மியின் தாய்.

”நீதான் பட்சணமும் காபியும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வேறே யாரும் போகக்கூடாது; தெரியுமா?” என்று வேறு மற்றவர்களுக்குத் தடை உத்தரவு போட்டாள் அந்த அம்மாள்.

ஜயலஷ்மி காபியையும் பட்சணத்தையும் கொண்டு வந்து மேஜைமேல் வைத்தாள். யாருடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தானோ அவள் பதுமைமாதிரி அவன் எதிரில் நின்றுகொண்டிருந்தாள். சீனு மெதுவாக எழுந்து கதவை ஓசைப் படாமல் தாழிட்டான். கைதியைச் சிறைபிடித்த அதிகாரியின் உற்சாகம் அவன் முகத்தில் இருந்தது.

”இந்தா! இங்கே எதற்காக வந்திருக்கிறேன், தெரியுமா?” என்று கேட்டான் அவன்.

”தெரியும்” என்று பதில் அளித்தாள் அவள்.

”என்ன தெரியும்? வந்தவனை மதிக்காமல் இருக்கத் தெரியும். போட்ட கடிதத்துக்குப் பதில் போடாமல் இருக்கத் தெரியும்.”

ஜயலஷ்மியின் முகம் கடிதம் என்றவுடன் கோபமடைந்து சுருங்கியது.

”யாருக்குக் கடிதம் எழுதினீர்கள்? யார் பதில் போட வேண்டும்?”

”சாக்ஷாத் உனக்குத்தான். நீதான் எனக்குப் பதில் போடவேண்டும். போட்டாயா?”

”எனக்கு ஒன்றும் நீங்கள் கடிதம் எழுதவில்லை.”

”பொய்யா சொல்லுகிறாய்?”

”ஐயோ! கடிதத்தைப் பற்றி உரக்க வெளியில் பேசாதீர்கள். எனக்கு அவமானமாக இருக்கிறது!”

சீனுவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

”என் மனைவிக்குக் கடிதம் எழுதி அவமானப்பட என்ன இருக்கிறது ஜயா.” ஜயலஷ்மியின் கண்களில் முத்துப்போல் நீர் வழிந்தது. ”நீங்கள் எனக்கு ஒன்றும் கடிதம் எழுதவில்லை. என் சிற்றப்பா பெண் ஜயத்துக்குத்தான் எழுதியிருக்கிறீர்கள். கூடப் பிறந்த சகோதரிகளைவிட நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் இந்த விஷயம் பெரியவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முடிந்தது. பாவம்! அவள் வேர்க்க விறுவிறுக்க அந்தக் கடிதாசியை என்னிடம் கொண்டுவந்து கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

சீனு அவள் கையில் இருந்த கவரை வாங்கிப் பார்த்தான். ஒன்றும் புரியாமல் விழித்தான்.

”ஜயம்! எனக்கு ஒன்றுமே புரியலையே! அந்தப் பெண்ணின் பெயரும் ஜயலஷ்மிதானா?”

”நமக்குக் கல்யாணம் என் சிற்றப்பா வீட்டில்தானே நடந்தது! அந்த விலாசத்தில் என் தங்கை ஜயலஷ்மி என்று ஒருத்திதானே இருக்கிறாள்?”

”ஆமாம், என் விலாசம் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு உன் விலாசம் கொடுக்காமல் இருந்துவிட்டாயே. அத்துடன் முதல் கடிதம் நான்தான் போடவேண்டும் என்று வேறு சொல்லி அனுப்பியிருந்தாய்!”

ஜயலஷ்மி கன்னம் குழியச் சிரித்தாள்.

”இந்தத் தடவையாவது சரியான விலாசம் கொடுக்கிறாயா ஜயம்?”

”போதும், போதும், முதல் கடிதம் போட்ட லட்சணம்! விலாசமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களுடன் என்னை அம்மாவும் அப்பாவும் ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம்.”

இப்படிக் கூறிவிட்டு ஜயலஷ்மி அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். வெளியில் குழந்தைகள் கொளுத்தும் மத்தாப்பின் ஒளி பட்டு அவள் மதிவதனம் சுடர்விட்டு பிரகாசித்தது. சீனு வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தான். இருவரும் ஒரே சமயத்தில் மேஜைமீது கிடந்த முதல் கடிதத்தைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தார்கள்.

Picture Courtesy: http://www.rabnebanadijodi.in

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 25

Image

கு.ப.சேது அம்மாள்

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலின் சகோதரியான இவர், தன் வீட்டில் நிலவிய இலக்கியச் சூழலின் உந்துதலால் எழுதத் தொடங்கியவர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதியவர். இவருடைய படைப்புகள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டன.

மங்கை, கலைமகள், கலா மோகினி ஆகிய இதழ்களில் இவர் தொடர்ந்து  எழுதியுள்ளார். 

புயல் ஓய்ந்தது

ப்பசி மாதத்து அமாவாசை. அந்தியில் பிடித்த மழை விடாமல் ஒரே மாதிரியாக அடித்துப் பெய்துகொண்டிருந்தது.

நல்ல நிசிவேளை. இடியும் மின்னலுமான அந்த அடை மழையிலும் சாரதா, தன் அறையின் ஜன்னல்களையும் கதவையும் திறந்துபோட்டு விட்டுத் தூக்கம் கொள்ளாமல் மறுகும் மனவேதனையை வெளியுலகத்து ஆர்பாட்டத்தோடு கலந்துகண்டு கொண்டு சாய்மானத்திலேயே கிடந்தாள். இன்னும் பலமான மழை வலுக்கவே அவள் மீது சாரலடித்தது. எழுந்தும் ஜன்னலை மூடும் சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

நின்று கேட்டாள். ஒரு தடவை, மறுதடவை, பிறகு தொடர்ந்து தட்டுவது கேட்டது. சரி நமது வீட்டுக் கதவுதான் என்று மாடியிலிருந்து இறங்கிவந்து கதவருகில் நின்று, கதவைத் திறக்காமலேயே ‘யாரது?’ என்று கேட்டாள்.

”நான்தான் சாரதா, திற”

குரலைக் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஒரு காலத்தில் அமுதச் சுவையாக இனித்த அந்தக் குரல். இன்று கர்ணகடூரமான த்வனியாகக் கேட்டது. உள்ளே இருந்து பதிலுமின்றி, கதவும் திறக்கப்படாதது கண்டு மறுபடியும், ”சாரதா, கதவைத் திற, நான்தான்” என்றது மறுபடி வெளியிலிருந்து குரல்.

தாழ்ப்பாளை நீக்கிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் சாரதா. கதவைத்திறந்து கொண்டு நடராஜன் அவள் பின்னாலேயே கூடத்திற்கு வந்து நின்றான். சாரதா திரும்பி நின்று வந்தவனைப் பார்த்து ”வாருங்கள் ராஜா, சௌக்யா?” என்று பதபாகமான தொனியில் கேட்டவுடனேயே நடராஜனின் நம்பிக்கையில் ஒரு பாதி செத்துவிட்டது.

அந்த அதிர்ச்சியினால் தூண்டப்பட்டவனாக மெய்மறந்து போய் அவளை நோக்கிப் பாய்ந்தான். சட்டென்று இரண்டடி பின்வாங்கி நின்று கொண்டாள் சாரதா. கூரிய சிரிப்பொன்று சிரித்துக் கொண்டு, ”இவ்வளவு பிரேமை உங்களுக்கு எப்போது உதித்தது?” என்று அவனைப் பார்த்து கொண்டே கேட்டாள். அவளுடைய அந்த தீஷண்ய வகசிதமான சிரிப்பு பாணம் போல நடராஜனின் உள்ளத்தில் தைத்தது. ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்று, பிறகு தெளிவடைந்து, ”சாரதா உன் தயாளத்தை நம்பி எனது தவறை உன் முகத்தின் முன் ஒப்புக்கொண்டு, உனது மன்னிப்பையும் உன்னையும் கேட்கிறேன். என்னை ஏமாற்…”

எட்டிக் கசப்பை விழுங்குவது போல அந்த வார்த்தைகளை வாங்கிக் கொண்ட சாரதாவின் தோற்றத்தைக் கண்ட நடராஜன் மேலே பேசத் தெரியாமல் திகைத்து நின்றான்.

நிலைமையைச் சமாளித்துக்கொண்டு சகஜ பாவத்துடன் சாரதா, ”உட்காருங்களேன். தீர்த்தம் வேண்டுமா?” என்றாள் உபசாரமாக, ”வேண்டும். கொண்டு வா” என்றான். வந்ததும் வாங்கிக் குடித்தான். உட்கார்ந்து கொண்டான், பேசாமல் எதிரே சிலை போல நிற்கும் மனைவியை உற்றுப் பார்த்தான் ஐந்து நிமிஷம். ஐந்து வருஷங்களுக்கு முன்பு எந்தக் கம்பீர ரூபத்தையும். ஞான சோபைபையும் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுத்தானோ… அதே கம்பீர ரூபமும் தேஜஸும் அவளுடைய தோற்றத்தை மறுமுறையாக அதுவும் ஸ்பஷ்டமாகக் கண்டான். மனம் படாதபாடு பட்டது. தத்தளித்து உருகினான். அதே அளவில் குரலும் கெஞ்ச, ”சாரதா. வா இப்படி உட்காரு என் பக்கத்தில். மாட்டாயா?” என்று விம்மினான்.

Image

ஒரு காலத்தில் மெழுகு போன்ற சுபாவமாக இருந்த சாரதா இன்று இரும்பு வன்மை பெற்ற தன்மையுடன் தீர்க்கமான குரலில், ”இருக்கட்டும். இந்திராவும் குழந்தையும் சௌக்யம்தானே?” என்று கேட்டுக்கொண்டே நின்ற இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

கேள்விக்கு செவிகொடாதவனாக இரு கைகளையும் ஒரு நெற்றியில் ஊன்றிக்கொண்டு பூமியை நோக்கினான். அவனுடைய இரு கண்களிலிருந்தும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

அப்படியாக அரை மணி நேரம் சென்றது. வேகம் தணிந்து அவன் தலை நிமிரும் வரையிலும் சாரதா கல் மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

பிறகு அவனாக ஓய்ந்து தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். நீர் வழியும் கண்களுடன் தேம்பிக்கொண்டு, ”சாரதா, போதும், இரங்கு எனக்கு” என்றான் பரிதாபமாக.

”நீங்கள் என்ன சிறு குழந்தையா? ஆண் பிள்ளைகளுக்குக் கண்களில் ஜலம் வரக்கூடாது. அது கோழைத்தனத்தின் அறிகுறியல்லவா? அந்த வகையில் நான் உங்களை மதிப்பிட மாட்டேன். முதலில் கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

”நானா துடைத்துக்கொள்ளவேண்டும், சாரதா? உன் மனதை எவ்வளவு இறுக்கிவிட்டேன் பாபி! என் கண்ணே! உனது அன்பு எங்கே! அதை என் மீது சொரி, இல்லாவிட்டால் உயிர் வாழ என்னால் சாத்தியமில்லை… சாரதா…”

”ராஜா! கொஞ்சம் பொறுங்கள். இருந்த அன்பையெல்லாம் அன்றே உங்களுக்கு அளித்துவிட்டேன். பாக்கி வைத்திருக்கவில்லை, இன்று கொடுக்க! ஆண்களின் அன்புக்கும் பெண்களுக்கும் இதுதான் வித்தியாசம். உங்களுக்குத் தெரியாத தத்துவமா இது?”

”ஆமாம், உண்மை, நிஜமான வார்த்தை, பிறந்து பிறந்து மாய்வதும் நிமிஷத்தில் மாறுதலடைந்து விடும் சபல சித்தமும்தான் ஆண்களின் அன்பு என்று சொல்லுகிறாய்! வாஸ்தவம். இதே வீட்டில் முதல் முதலாக உன்னைக் கண்டதுமே உனது கம்பீர உருவமும் நளினமான சுபாவமும் என்னை ஆட்கொண்டது. உன்னை எனது மனைவியாக்கிக் கொண்டேன். நான் புருஷன், நீ மனைவி, எனது கட்டளைப்படி நீ நடக்கவேண்டியது என்ற நினைப்பில் என் மனம்போன போக்கிலெல்லாம் உன்னை நடத்தினேன். எதனால்? மனைவி என்பவள் கணவனுடைய அடிமை என்ற ஆவேசத்தில். உனக்கும் ஒரு மனம், அபிலாஷைகள், உணர்ச்சி என்பதிருக்கிறது என்ற ஞாபகமே இன்றி உன்னை எனது இஷ்டப்படி ஆட்டுவித்தேன். அது மட்டுமல்ல, என்றாவது ஒருநாள் உனது உயர்வை நீ சூசகமாக நினைவூட்டுவதுகூட எனக்கு விஷயமாக இருந்தது. ரொம்ப சாதாரணமாக அதைச் சகித்துக்கொண்டு போனாய். எனது போதாத காலத்தின் விளைவாக உன்னை மாதக் கணக்காகத் தனிமையில் திணறவிட்டுவிட்டு, வாட்டி, வதக்கி, உன்னால் எனக்குச் சுகமே கிடையாது என்று நேருக்கு நேராக நின்று முகத்தைப் பார்த்துக் கேட்டேன். அதையும் பொறுத்துக்கொண்டாய். தவறு என்னுடையதாக இருக்க உன்னை மலடு என்று மனம் துணிந்து கூறி எனது உதாசீனத்தைக் காட்டி எனது திருப்திக்கு உன்னை இரையாக்கிக் கொண்டேன். அதையும் சகித்துக்கொண்டு வாய் திறவாமல் எனக்கு மறுமணம் செய்வித்து – அந்தச் சிறுமைப்படுத்தி – எனக்களித்துவிட்டு அப்போதும் உனது தன்மை மாறாது, என் வீட்டில் ஒரு வேலைக்காரியின் நிலைமையில் இருந்தாய்! சாரதா, ஆண்டவன் உன் பக்கத்தில் இருந்து அதே சமயத்தில் எனது கொடிய சித்தவிருத்தியை விளம்பரம் செய்ய உன்மூலம் எனக்கு ஒரு மகனையளித்தார். அதுவும் என் குழந்தை என்ற நினைவே எனக்கு இல்லாமல் போய் – அவளுக்குப் பிறந்த குழந்தையைக் குலாவி உனது குழந்தையை வெறுத்தேன். எனது வெறுப்பையும் வேண்டாமையையும் அங்கீகாரம் செய்து அந்த என் மாணிக்கத்தை மண்ணுக்கு இரையாக்கிவிட்டு அதன் பிறகும் மனோதிடத்துடன் என் வீட்டில் இருந்தாய்…”

”ராஜா, அதே மனதிடம் இன்னும் என் மனதிலிருக்கிறது, இருங்கள். பிற்பாதியை நான் முடித்து விடுகிறேன். நீங்கள் என்னை நடத்திய விதம் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. எனது லோகானுபத்தை விருத்தி செய்தது! அதையெல்லாம் பற்றி இப்போது என் மனதில் ஒருவித நினைவும் இல்லை! ஆமாம், இன்று கேட்கிறேன் சாவகாசமாக. குழந்தை இறந்த அன்று என்னை வந்து துக்கம் விசாரித்தீர்களே, அதன் அர்த்தம் என்ன?”

”ஒரு தரமல்ல, லட்சம் தரம் கேள். நான் அபராதி. அது நீ ஈன்ற குழந்தைதானே! அந்த நினைப்பில் கேட்டிருக்கிறேன். எனக்குப் பாத்தியம் என்ற நினைவு இருந்தாலன்றோ நான் துக்கப்பட! சாரதா, அந்தப் பாதகச்செயலுக்காக ஒவ்வொரு நிமிஷமும் என்னை நான் தண்டித்துக்கொண்டிருக்கிறேன். உனக்காக இதை நான் சொல்லவில்லை….”

”சரி, அது இருக்கட்டும், சந்துரு நன்றாகப் பேசுகிறானா?”

”வா சாரதா, வந்து பார் அவனை.”

”சௌக்யமாக இருக்கட்டும். எனது பாபக் கண்களால் அவனைப் பார்க்கவேண்டாம்.”

”யாருடையது பாபக் கண்கள்? சுகத்தையும் துக்கத்தையும் சமதிருஷ்டியுடன் பார்க்கும் உனது கண்களா பாபக்கண்கள்? சாரதா, உனது சுபாவத்தின் மேன்மையை முதலிலும் முடிவிலும் கண்ட நான், நடுவில் ஏன் காணவில்லை?”

”அதிசயமென்ன இருக்கிறது இதில்? விதியாகிய படுதா நம்மிருவருக்கும் நடுவில் இருந்தது.”

”இப்போது இல்லை. சாரதா. வா, என்னருகில்.”

”இனி அதற்குத் தேவை இல்லை.”

”எனக்கு இருக்கிறது. வா, நீ இல்லாமல் வீடு நன்றாக இல்லை.”

நடராஜன் இந்த வார்த்தையைச் சிந்தியதுதான் தாமதம். சாந்த ஸ்வரூபமாக நின்ற சாரதா வினாடியில் சீறியெழுந்தாள். அவளுடைய கண்கள் தணலாக ஜொலித்தன.

”என்ன சொன்னீர்கள்? நானின்றி வீடு நன்றாக இல்லையா?”

”ஆமாம், நன்றாக இல்லை. எல்லாம் மறந்துவிடு. நமது கஷ்ட காலம் நீங்கிவிட்டது.”

”என்றோ நீங்கிவிட்டது – இன்றல்ல!”

”எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லு. சாரதா, உன் வீட்டுக்கு நீ வர வேண்டாமா?”

”என் வீடா! அதெங்கிருக்கிறது? அந்த வீட்டில் உங்கள் குழந்தைக்கே அன்னமும் இடமும் இல்லை என்றால் எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? ஒரு காலத்தில் உங்களுக்கு இந்தக் கழிவிரக்கம் தோன்றாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பதிலாகத்தான் இந்திரா இருக்கிறாளே! நீங்கள் கருதியபடி மலடியாக நின்று விடாமல் காத்த கடவுள் கருணாநிதி! அது போதும் என்ற திருப்தியுடன் உங்களுக்குப் பாரமாக அங்கிருந்துகொண்டு என்ன பயன்? வந்துவிட்டேன்! எனது பர்த்தா சுகமடைய வேண்டி அதற்கானதைச் செய்து எனது ஆயத்தை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் அவளுக்குக் கற்றுக் கொடுத்த பதி சேவையை அவளே எனக்குப் போதிக்கும் அளவில் உயர்வடைந்து விட்டாள். என் வேலை சித்தியாகி விட்டது. எனது துயரமும் இன்றோடு நிவர்த்தி. உங்களையும் மறுமுறையாகக் கண்டுவிட்டேன். துயரம் தீர்த்த தங்களுடைய பாதங்களுக்கு நமஸ்காரம்!”

”நிஜம்தானா, சாரதா, இது?”

”எனது சுபாவம் என்றும் ஒரே மாதிரிதான், சுயநலமற்றது என்று நிமிர்ந்து சொல்ல இடம் வைத்துக்கொண்டுதான் நான் மனிதர்களுடன் பழகுகிறேன். எனது முடிவில் தவறுதல் ஏற்பட இடமே கிடையாது”

”மிஞ்சி விட்டாயா உன் கணவனை?”

”ராஜா, அது விதியின் கூற்று. என்னதல்ல. இந்த ஞானமில்லா விடில் நான் என்றோ தற்கொலை புரிந்துகொண்டிருப்பேன்” என்றாள் சாந்தமாக.

சாரதாவின் பதிலில் ஆழ்ந்தபடியே வெளியுலகைப் பார்த்தான் நடராஜன்.

வெளியே நிகழும் ஆர்ப்பாட்டம் அவனுடைய உள்ளப் போராட்டத்திற்கு எவ்விதத்திலும் குறைந்திருக்கவில்லை.

Picture Courtesy: http://bestmodernpaintings.blogspot.com

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 24

குகப்பிரியை

பழைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். பத்திரிகையாளர். ‘மங்கை’ என்னும் இதழை ஓராண்டிற்கும் மேலாகத் தனிக் கவனத்துடன் நடத்தியவர். பேச்சாளர்.

‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல், சிறுகதைகளுக்காக முதல் பரிசுப் பெற்றவர். காந்தியத்தின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் தன் வாழ்நாளின் இறுதிவரை கதராடையை அணிந்தார்.

நூல்கள்: சந்திரிகா, இருள், ஒலி, திப்பு சுல்தான், மார்த்தாண்டவர்மன், தேவகி முதலிய கதைகள், ஜீவகலை.                                                                                                                   

பச்சை மோதிரம் 

Image

”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு! என்ன இடி இடிக்கிறது! ஐப்பசி மாதம் அடை மழை என்பார்களே, சரியாய்த்தான் இருக்கிறது. குழந்தைகள் துணிமணி ஒன்றுகூட உலரவில்லை. புடவை ஒரே தெப்பல். இந்தப் புடவைகளே உலரமாட்டேனென்கின்றன. இன்னும் கதர் வேண்டுமாம். கதர்! தூலம் தூலமாய் இரட்டையும் ஜமக்காளத்தையும் வாங்கினால் யாரால் தூக்கி உடுத்த முடியும்? சொல்லப் போனால் பொல்லாப்பு. நான் கதர் உடுத்திக்கொள்ளவில்லையென்னுதான் ‘சுயராஜ்யம்’ வராமெ வழியிலே நின்றுகொண்டிருக்கிறதாக்கும்! இதைத் தவிர மீதியெல்லாம் பண்ணினால் போறலையாக்கும்! போன வருஷமாவது தேவலை. இவ்வளவு மழை இல்லை. இந்த வருஷம் ரொம்ப அக்கிரமம். இந்த மாதிரி சொட்டச் சொட்ட வந்தேன். தோழி, கதவைத்திறன்னு நாலு நாள் வேலை செய்தால்? அப்புறம், அப்புறந்தான். யாரால்தான் சாத்தியம், என்னால் முடியவே இல்லை” என்று நிறுத்தினாள் செல்லம்.

”ஆகிவிட்டதோ, இன்னும் பாக்கி உண்டோ?” என்றேன்.

”ஆமாம். உங்களுக்கென்ன; ஏதடா பாவம். ஒண்டியாய் குழந்தைகளுடன் அலைகிறாளே என்ற எண்ணம் இருந்தால் தானே? உக்கார்ந்தபடியே பரிகாசத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆகா! போருமே சவரணை!” என்று முகத்தைக் கோணிக் கொண்டாள்.

”ஏன் ஒண்டியாய்த் திண்டாடுவானேன்? எல்லாம் நீயாகப் பண்ணிக்கொண்ட விவகாரந்தானே? அம்மா இருந்தால் உன்னை இவ்வளவு அலையவிடுவாளா? மடி விழுப்பு என்று நன்றாய்த்தான் உன்னை உட்கார வைத்துச் சிசுருஷை செய்துகொண்டிருந்தாள். நீயாகத்தானே வீண்பழி சுமத்தினாய்? ஒன்றும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தவிக்கிறேன். நீ ஆனாலும் அநியாயம்! அம்மா காதிலும் படும்படிச் சொல்லிவிட்டாய். என்னதான் இருந்தாலும் பெரியவர்களை அப்படி மனம் நோகப் பேசலாமா?”

”ஆகா! நான் முதலில் சொன்னபொழுது என்னை வெருட்டினீர்கள். குட்டியம்மாளிடமிருந்து, ‘நீ அனுப்பிய ரூபாய் ஐம்பதும் வந்து சேர்ந்தது’ என்ற காகிதத்திற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களை அறியாமல் அம்மாவுக்குத் திடீரென்று ஐம்பது ரூபாய் ஏது? அதை யோசித்துப் பாருங்களேன். தவிர, நான் மோதிரத்தைப் பற்றி ஸந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், தைரியமாய்க் கேட்கிறதுதானே? துலா காவேரி ஸ்னானத்துக்குப் போகிறேனென்று சொல்லிக்கொண்டு பெண்ணகத்தில் போய் ஏறிக்கொள்வானேன்? நானும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தேன். மாதம் தவறாமல் அப்பளமும் வடாமும் அவலும் யார் போனாலும் டப்பி டப்பியாய்க் கொடுத்துக் கொடுத்து வசங்கண்டு போயிற்று. இங்கே இடுவதற்குக் கூலிக்காரி நான் ஒருத்தி இருக்கிறோனோ இல்லையோ? பெண் கை சளைத்துவிட்டால்தான் என்ன? இப்படி ஒரு அடியாய்ப் பிள்ளை வீட்டை மொட்டை அடிக்கிறதுண்டா? வீட்டில் ஒரு தகரம் பாக்கி கிடையாது. பொரி விளங்காய் வேணுமென்னு ஆசைப்பட்டாளாம். மாவை ஒரு டப்பி, திணியத் திணியக் கோடியாத்து அம்மாவிடம் கொடுத்தனுப்பினாள். ஏன், அந்தப் பொரிவிளங்காயை இங்கேயே உருண்டையாய்ப் பிடித்தால், நானும் என் குழந்தைகளும் தின்றால் உடம்புக்காகாதோ? உங்களுக்கு என்னமோ உலகத்தில் இல்லாத அதிசயமாய் அம்மாவைப் படைத்து விட்டதாக எண்ணம்! இந்தச் சின்ன ஸங்கதிகளிலேயே இவ்வளவு சூதும் வினையுமானால் மோதிரத்துக்கு நான் சொன்னது குற்றமாய் விட்டதோ? தலைவாரிக்கொள்ளும் பொழுது சுழற்றிப் பக்கத்தில் வைத்துக் கொண்டது. வேலைக்காரியா, குழந்தையா, ஒரு பிராணி வரவில்லை. எங்கே போய்விடும்? அதுதான் போகட்டும்! ஐம்பது ரூபாய் எப்படி முளைத்தது? அதுக்கேன் பதில் இல்லை?”

”சரி, சரி, இதென்ன தலைவேதனை? போதும். நிறுத்துன்னா நிறுத்து மற்ற ஸமாச்சரங்கள் ஏதோ பெண் என்ற சபலத்தினால் சொல்கிறாள் என்றால், அதற்காக ஒரேயடியாய் திருட்டுப் பட்டம் கட்டுகிறதோ? அதோடு விட்டாயா? நான் ‘கேம்ப்’ போய் வருவதற்குள் ஊரைவிட்டே ஓட்டியும் விட்டாயே! என்ன நீலியடி நீ! ஒண்டியாய் அலைகிறாளாம்! நன்றாய் அலையேன்; யாருக்கு என்ன?”

”ஆகா! குறைச்சல் இல்லை. வேணுமென்று நான் ஆசைப்பட்டுக் கேட்டேன் என்ற அப்பா எவ்வளவோ பொறுக்கிப் பொறுக்கி வாங்கினார் நடுப் பச்சையை. அருமையாய் இருந்தது மோதிரம். நிமிஷத்தில் தொலைந்தாயிற்று. நீங்கள் பணம் போட்டு வாங்கியிருந்தால் தெரியும். எப்பேர்ப்பட்ட ‘ப்ளூ ஜாகர்’ வைரம்! இரண்டு கல்லும் இரண்டு நட்சத்திரம் மாதிரி ஜொலிக்குமே.”

”சரி, சரி, நிறுத்தப் போகிறாயா இல்லையா? குழந்தைகளுக்குப் போர்த்து இருக்கிறதா பார்” என்றேன்.

”அம்மாடி! இப்பொழுதுதான் உக்கார்ந்தேன். உடனே எழுந்திரு என்கிறீர்கள். எப்பொழுதுமே நான் சற்றே உக்கார்ந்தால் மனலாகாது; நீங்க மட்டும் சுகமாய் நாள் முழுக்க வெற்றிலை மென்றுகொண்டே ‘ஈஸிசேரி’ல் படுத்திருக்கலாம். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஏதோ வீணாய் போய்விட்ட மாதிரிப் பறக்கிறேன். ஒன்றும் அகப்படாவிட்டால் ‘வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போய்ப் பார்’ என்பீர்கள். நீங்கள்தான் எஜமான் என்பதை என்னிடம் காட்டாமல் வேறே யாரிடம் காட்டுகிறது” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்தாள் செல்லம்.

இடியும் மின்னலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வந்தன. மழை சற்று நின்றது போல் தோன்றிற்று. காற்று ‘ஹோ’ என்று பலமாய் அடிக்கத் தொடங்கிற்று. காற்றுடன் கடலோசையும் கலந்து சமுத்திரமே அருகே நகர்ந்து வருவது போலவும், மரங்கள் ‘விர் விர்’ என்று சுழல்வது போலவும் ஓசை கேட்கலாயிற்று.

2

செல்லத்துக்கு இடி என்றால் ஒடுக்கம், இரவு முழுவதும் தானும் தூங்கமாட்டாள். பிறரையும் தூங்கவிடமாட்டாள். அதிலும் நாங்கள் குடியிருந்த வீடோ வெகு அற்புதம். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்து ஏலத்தில் எடுத்த பனங்கட்டைகளையும், ஓடுகளையும் வைத்துக் கட்டப்பெற்ற மாளிகை. வீட்டுக்காரர் பத்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் மராமத்துச் செய்வார். அது வரையில், குடியிருப்பவர் ஏதோ பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு மழைக்கும் வீடு ஓர் அடி கீழே இறங்கிவிடும். அவர்கள் பூகம்ப வெடிப்புகள் போல் வெடிக்கும். குடியிருப்பவர்களுடைய ஆசிர்வாதங்கள் நடக்கும். என்ன ஆனால்தான் என்ன? சொந்தக்காரருக்கு வாடகை வந்து விடும். அந்தச் சொந்தக்காரருக்கு இதே மாதிரிப் பலவீடுகள் உண்டு. ஓடு மாற்ற நேரிட்டால், இந்த வீட்டு ஓடுகளை அந்த வீட்டிற்கும், அந்த வீட்டு ஓடுகளை இந்த வீட்டிற்கும் மாற்றி விடுவார். ஓடு மாற்ற வேண்டியதுதானே!

கட கட மட மடவென்று ஒரு பெரிய இடி இடித்தது.

பாவம்! இடியோசை கேட்டுச் செல்லம் நடுநடுங்கி விட்டாள்.

”காற்றடிக்குது கால் குமுறுது கண்ணே

விழிப்பாயென் நாயகி,

தூற்றல் கதவு சாளர மெல்லாம்

தொளைத் துடிக்குது பள்ளியிலே”

என்று பாடலானேன்.

”போதுமே பாட்டு! என்னக் காற்று, என்னக் கண்ராவிப் புயலடிக்கிறதே என்னமோ!”

”புயல்தான். நேற்றே பேப்பரில் போட்டிருந்தது. சொன்னால் நீ நச்சு நச்சென்று கழுத்தை அறுத்துவிடுவாய் என்றுதான் சொல்லவில்லை. நாகப்பட்டினம் வழியாகத்தான் வருகிறதாம்”

”ஆமாம், பொய்யும் புளுகும்! நாகப்பட்டினம் வழியாய் ரெயிலில் வருகிறதோ, கட்டை வண்டியில் வருகிறதோ?”

”நிஜத்தைச் சொன்னால் பொய் என்கிறாய், மணிக்கு இத்தனை மைல் வீதமென்று கூடக் கணக்கிட்டிக்கிறார்கள், கதவைத் திறக்கிறேன் பார்”

”வேண்டாம், வேண்டாம்” என்று ஆத்திரத்துடன் கூவினாள் செல்லம். நான் ஜன்னலின் ஏழு கதவை மட்டும் திறந்தேன்.

‘அடாடா, என்ன வேகம்! தென்னை மரங்கள் பேயாடுவது போல் தலை சுற்றிப் பயங்கரமாய் ஆடிக் கொண்டிருந்தன. காற்றின் வேகத்தினால் திறந்த கதவு படீரென்று மோதிற்று. மறுபடியும் மூடினேன்.

செல்லம் தலையையும் சேர்த்துப் போர்வையால் மூடியவளாய், இரு கைகளாலும் காதுகளை இறுகப்பொத்திக் கொண்டு சுருண்டு உட்கார்ந்திருந்தாள். நான் எழுந்து குழந்தைகளின் போர்வைகளை ஒழுங்குபடுத்திவிட்டுப் படுத்தேன். ”என்ன? நீங்கள் தூங்கப்போகிறீர்களா?”

“எனக்குத் தூக்கம் தலையைச் சுற்றுகிறது. உன்னைப்போல் கொட்டு… கொட்டு… என்று உட்கார்ந்திருந்தால் நாளைக்கு வேலை போய்விடும்” என்று சொல்லிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

3

”என்ன! எனக்குக் கொஞ்சம் துணை வருகிறீர்களா?” என்று கெஞ்சினாள் செல்லம்.

”துணை என்ன? என்னால் முடியாது, போ!”

செல்லத்துக்கு இந்த நெருக்கடியான சமயத்தில்தான், ”அடடா, மாமியாரை வெரட்டி விட்டோமே” என்ற ஞானோதயம் ஏற்படலாயிற்று. ”என்னமோ நீங்கள் இல்லாத பிகு பண்ணுகிறீர்கள், அம்மா இருந்தால் உங்களை லட்சியம் செய்து யார் கூப்பிடக் காத்திருக்கிறார்கள்?” என்று முணுமுணுத்தாள் செல்லம்.

”அம்மாவை வெரட்டினது நீயோ, நானோ? காகிதம் வந்தால்தான் என்ன? உடனே படபடவென்று உளறணுமோ?”என்று சொல்கையில் ‘மள மள’ வென்று ஏதோ முறிவது போலவும் சாய்வது போலவும் பிரமாதமான ஓசை கேட்டது. நானும் நடுங்கிவிட்டேன். தெருவில் வீட்டிற்கு எதிர் வரிசையில் பெரிய கிழத் தூங்குமூஞ்சி மரம் ஒன்று உண்டு. அதுதான் முறிந்திருக்க வேண்டும். வீட்டின் மேல் விழுந்தால் வீடும் நாங்களும் ‘சட்னி’தான் என்று தோன்றவே சுருட்டி வாரிக்கொண்டு எழுந்தேன்.

என்னை அறியாமலே என் கரங்கள் குவிந்தன.

”தீனக்குழந்தைகள் துன்பங்கள் படாதிருக்க

தேவியருள் செய்ய வேண்டுகிறேன்”

என்ற தொடர் என் மனத்துள் எழுந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டேன் ”ஐயோ!” என்று அலறியவளாய் என்னைத் தழுவி நின்றாள் செல்லம்.

4

Image

”நல்ல வேளை. இந்த மட்டில் வீடு பிழைத்ததே” என்று ஆனந்தப்பட்டார் வீட்டுக்காரர். ‘மாப்பிள்ளை தலை போனாலும் போகட்டும், பழைய நாளைய உரல் மிஞ்சிற்றே’ என்று சொன்ன மாமியாரின் நினைவு வந்தது. செல்லத்துக்கு அசாத்தியக் கோபம். வீட்டுக்காரரை அப்படியே எரித்துவிடுபவள்போல் பார்த்து, ”சிரிக்கத்தான் வேண்டும்! இவ்வளவு பெரிய மரம் வீட்டில் சாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ வீடு தொட்டால் விழுந்துவிடும் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் வாடகைக்கு மாத்திரம் மாசம் முடிவதற்கு முந்தி இருபத்தேழாந்தேதியே ஆள் வந்து விடுகிறது. குடியிருப்பவர்கள் எப்படிச் செத்தாலென்ன? இந்தப் பாழும் ஊரில் ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் குடிவந்து விடுகிறார்கள். நல்ல வேளையாய் வீடு பிழைத்ததாம்! மனிதர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும், நம் வீட்டிற்குப் பழுது வராமல் இருந்தால் சரி. இந்த மாதம் வாடகையைச் செலவழித்தாவது ஏதாவது செய்யட்டுமே, இல்லாவிட்டால் வாடகையைக் கொடுக்கப் போகிறதில்லை. இவர் வாங்குகிறபடி வாங்கிக்கொள்ளட்டும் பார்க்கிறேன்” என்று உறுமிக்கொண்டே உள்ளே போனாள்.

வீட்டுக்காரர் சர்வ சாதாரணமான குரலில் மிகவும் மெதுவாய் நிறுத்தி நிறுத்தி, ”இல்லே ஸார், இல்லை என்ன! மற்றவர்களைப் போல் நான் பத்து வருஷங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்கிறேனே? வருஷா வருஷம் பொங்கலுக்கு முன்னாலேயே ஆள் விட்டு, போனது வந்தது பழுது பார்த்து, ஒட்டடை கூட என் செலவிலேயே அடித்துக் கொடுக்கவில்லையா? அம்மா, ஏதோ ரொம்பக் கோபப்படுகிறார்கள். நானும் ஸம்ஸாரிதானே? போன வருஷம் மராமத்துக்கு வந்தபோது நீங்கள்தான் ‘குழந்தைகளுக்கு இருமல்; இப்போ வேலை செய்ய முடியாது’ என்றீர்கள். எனக்கும் கையோடு கையாய்ச் செய்தால்தான் முடிகிறது. இல்லாவிட்டால் எங்கே முடிகிறது” என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னார். எனக்கோ கோபம் ஒரு பக்கம். சிரிப்பு ஒரு பக்கம். ஒன்றும் பதிலே சொல்ல முடியவில்லை.

”என்ன ஸார்! பதிலே சொல்லவில்லை. நானே இந்த மழைக்காலத்துக்கு முன்னே இந்தத் தூங்குமூஞ்சி மரத்தை வெட்டிவிட வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனாலும், அநியாயக் கூலி கேட்டான். தாம்புக்கயிறு ஒரு சுருள் வேணுமென்றான். ஏதோ வாயு பகவான் கிருபை அதுவும் லாபம். பாருங்கள்; விறகு நன்றாய் நின்று எரியும். தை பிறந்ததும் வெட்டித் துண்டு போடலாம்” என்று சொல்லியவராய் ”அட கோவிந்தா! முனியனை அழைத்துக் கொணர்ந்து சீக்கிரம் மரத்தை எடுங்கள். எலெக்ட்ரிக் கம்பி மேலே விழுந்து அது வேற போய் விட்டது. அந்த மட்டும் நம்ம வீட்டுக் கம்பிமேலே விழவில்லை. முனிஸிபாலிடி கம்பிதான்” என்றார்.

“இல்லேங்க, நம்ப கம்பிகூடப் பூட்டுதுங்க” என்றான் கோவிந்தன்.

”அடடா, சரியாய் பார். சீக்கிரம் மரத்தை அப்புறப்படுத்துங்கள். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் கிளை கிளையாய் ஒடித்துக் கொண்டு போய்விடுவார்கள். சீக்கிரம் சீக்கிரம்?” என்று அவசரப்படுத்தினார் வீட்டுக்காரர்.

5

”எப்போதும் இதே தொல்லைதான். வாசல் மரத்தை இன்னும் எடுத்தபாடில்லை. இந்தக் குட்டிகள் ஏறி இறங்கிக் கைகால்களை முறித்து தொலைத்துக்கொள்ளப் போகிறதுகள்! நான் வீட்டு வேலை செய்கிறதோ, குழந்தைகளை மேய்க்கிறதா? லீவுதானே. அந்த நாவலை இராத்திரி படித்தால் என்ன?” என்று சொல்லிக்கொண்டே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தாள் செல்லம்.

வாயிற்புறத்து ரேழியில் ஏக அமளி. ”ஐயோ! அப்பா! நான் மாட்டேன்; அடிக்கிறானே. எனக்குத்தான். நான்தானே முதலில் கண்டுபிடித்தேன்” என்று பற்பல ஸ்தாயிகளில் குரல்கள் கேட்டன. நான் படிப்பை நிறுத்தாமல், ”என்ன அமர்க்களம்! சண்டை இல்லாமல் பகிர்ந்துகொள்றதுதானே?” என்று சொல்லிவிட்டு ”செல்லம்! நீயாவது பார்த்துத் தொலைக்கப்படாதா? என்ன இரைச்சல்; சந்தைகூட கெட்டது! நல்ல குழந்தைகள்! தலைவேதனை; ச்சீ” என்று சீறினேன்.

செல்லத்துக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. ”அடுப்பில் ஒன்றும் துடுப்பில் ஒன்றுமாக இருக்கும்பொழுதே பகிர்ந்துக் கொடுக்க அவசரமா? நன்றாய்க் கிடந்து அலைகிறதுகள்! அவர்கள் இரைச்சலைவிட நீங்கள் இரைவதுதான் நன்றாய் இருக்கிறது! அதுகள் கூட இவ்வளவு அவசரப்படுத்தவில்லை. நீங்கள் எல்லோரையும் கூட பச்சைக் குழந்தை என்று சொல்லி மோவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

எனக்கும் கோபந்தான்; படித்துவிட்டுக் கோபித்துக் கொள்ளலாமென்று மேலும் படிக்க, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி வந்து என் கால் தடுக்கி ஒருவர் மேலொருவராய் விழுந்தார்கள். என் கணுக்கால் எலும்பிலும் அடிபட்டு விட்டது. என்ன யார் என்று கூடக் கவனியாமல் அகப்பட்ட முதுகில் ஒரு அறை அறைந்தேன்.

அழுத குரலுடன் ”நாந்தான் முதலில் பார்த்தேன்” என்றான் சீனு.

”என்னடா அது?”

”தூக்கணாங் குருவிக்கூடு” என்றான் சீனு.

”அண்ணா பொய் சொல்றான். அப்பா கூடு இல்லே;” நான் போட்டது, அதுக்குள்ள இருக்கிற குர்நாப் பட்டை.

”ஏதுடா கூடு” என்று அவன் கையில் இருந்த கூட்டை கையில் வாங்கினேன்.

”வாசல் மரத்திலே இருந்தது; கோவிந்தன் கொடுத்தான்”.

”சீ, சீ, ஆபாஸம்” என்று வீசி எறியப்போனேன்.

”அப்பா, அப்பா! எறியாதே, அதிலே நிறைய மின் மினாம் பூச்சி இருக்குமாம். இராத்திரியிலே நஷத்ரம் மாதிரி மினுங்குமாம்” என்று என் கைகளைப் பற்றிக் கொண்டாள் தங்கம்.

கூட்டை திருப்பினேன், பளிச்சென்று மின்னிற்று. ”அடியே! செல்லம், ஓடிவா, ஓடிவா” என்று ஆச்சிரிய மிகுதியில் கூவினேன்.

என்ன வந்துவிட்டது வேலை அதற்குள்?

“காரியம் இல்லாத மாமியார் கல்லையும் நெல்லையும் கலந்தானாம் என்கிற மாதிரி வந்து கேட்டால் ஒன்றும் இராது. தெரிந்த சங்கதிதானே?” என்று வெகு அலட்சியத்துடன் சொல்லிக் கொண்டே வந்தாள் செல்லம்.

”இன்னமும் மாமியாரைத்தானே கரிக்கிறாய் நீ? இந்தா உன் மோதிரம், எங்க அம்மாள்…” என்று சொல்லிக் கொண்டே மோதிரத்தை நீட்டினேன்.

செல்லம் இடைமறித்து, ”மோதிரமா! எங்கேயிருந்து அகப்பட்டது?” என்று கேட்டவள், என்னைச் சூழ்ந்து நின்ற குழந்தைகளையும் கையில் பாதியும் தரையில் பாதியுமாகச் சிதறிக் கிடந்த குருவிக் கூட்டையும் பார்த்துவிட்டு மௌனமாகி விட்டாள். இருந்தாலும், அவளுக்குத் தோல்வியை ஒப்புக்கொள்ள இஷ்டம் இல்லை.  “இதுதான் இப்படி இருக்கட்டும் அந்த ஐம்பது ரூபாய் உங்களை அறியாமல் எப்படி முளைத்…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவள்.

தேவகி முதலிய கதைகள் – சிறுகதைத் தொகுப்பு 1949லிருந்து… (இரண்டாம் பதிப்பு)

Photo Courtesy: digitaljournal.com

&

www.etsy.com

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 23

எம்.எஸ்.கமலா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் ரவிப்பிரியா லஷ்மிகுமாரி, மைத்ரேயா போன்ற புனைப் பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்புகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை.

சிறுகதை நூல்கள்:

  • கன்னித் தெய்வம்
  • காதற்கோயில்

கார்த்திகைச் சீர் 

Image

டி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த் தைத்து, கை வேலைப்பாட்டுடன் சோபிக்கும் படங்களுக்கு புஷ்ப ஹாரங்களையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகம் நிஷ்களங்கமாய்ப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. புக்ககம் வந்து இரண்டு மாதகாலமாகிறது. ஆடிக்கு அழைத்துச் சென்று அன்று காலைதான் அழைத்து வந்து விட்டான் அவள் சகோதரன். கணவன் ஆபீசிலிருந்து வருவதற்கு முன் தன் வேலைகளை எல்லாம் செய்துவிட்டுத் தயாராய் இருக்க எண்ணிச் சுறுசுறுப்பாய்த் தன் வேலைகளை முடித்துக் கொண்டாள். சகோதரன் வாங்கிக் கொடுத்த புஷ்பச் செண்டுகளைப் படங்களுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் உற்சாகத்துடன்,

”மங்கள மும்பெறுவார் – உலகினிலே

மங்கைய ரெல்லாம் உன்பெயர் சொன்னால்…”

என்று பரிபூரண ஆனந்தத்துடன் அற்புதமாய்ப் பாடிக்கொண்டு படங்களை அழகு பார்த்தாள். லஷ்மி படத்திற்கு முன் லஷ்மி கரங்குவித்து நின்றாள். காலை அவள் வீட்டிற்கு வரும் முன்பே அவள் கணவன ஆபீசுக்குச் சென்றுவிட்டான். மாலையை மாண்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மலைச் சிகரங்களில் தாவி மறையும் ரவியைக் கண்டதும் உற்சாகம் பிறந்தது. உற்சாக வேகத்தில் அவள் வாய் திறந்ததும் மதுரகீரம் மகிழ்வுடன் வெளிவந்தது.

அச்சமயம், ”ஜானகீ! குட்டிச்சுவருக்கு ஆனாப் போலே வயசாச்சு. எப்படி நடந்துக்கணும்னு இன்னும் தெரியலே. வெள்ளிக்கிழமையும் அதுவுமா முகத்தில் கையை வச்சுக் கொண்டு என்ன உக்காரல்?  எழுந்து மொறமொறக்க மூஞ்சியலம்பி நெத்திக்கிட்டுண்டு அம்பாள் படத்துக்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தினால் என்ன? பாவமா வரும்? அந்த மாமியாருக்கும் ஆம்படையானுக்கும் நல்ல புத்தி வந்து நம்மை அழைச்சிண்டு போகணுமேன்னு நமஸ்காரம் செய்யப்படாதா? நன்னா இருக்கு போ! பண்ணின பாவம் எங்கே போனாலும் தொலையாது” என்று ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒர் அம்மாள் இரைந்து கூச்சலிட்டாள்.

”ஆமாம் அம்பாளுக்கு விளக்கேத்திப் புஷ்பம் சாத்தி நமஸ்காரம் பண்ணிவிட்டால் என் மாமியார் அழைச்சிண்டு போயிடுவா இல்லே! அவா கேக்கும் அந்தக் கார்த்திகைச் சீரை செய்ய அப்பாவுக்கு மனசு வரல்லே. உனக்கும் அதுக்கு மேலே இருக்கு. மன்னியைப் பார்த்து அப்படியே மகிழ்ந்து போறே. என் வாழ்வும் இப்படியாச்சே! இதுக்கு ஒருவழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை. எனக்கெங்கே வெடியப் போறது? ‘வாழாப் பெண் தாயோடே’ என்பதைப் போல் இருந்து விட வேண்டியதுதான்” என்று கண்ணீர் வடியச் சொன்னாள் ஜானகி.

வெகு கனிவாய்ப் பாடிக்கொண்டிருந்த லஷ்மி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டதும் அப்படியே அயர்ந்து நின்றாள். அவள் உள்ளம் துடித்தது. அவளை அறியாமல் அவள் கண்களில் நீர் வடிந்தது. தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்லத் தன் படுக்கை அறையை விட்டு வெளிவந்தாள். ஜானகி இருக்குமிடம் சென்று அவள் கூந்தலிலே அழகாய்ப் புஷ்பத்தை வைத்து அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள். அவளைவிடச் சிறியவளாய் இருந்தும் அவள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளப் பார்த்தாள்.

மாலை லஷ்மியின் கணவன் கோபாலன், வெகு அவசரமாய் ஆபிசிலிருந்து வந்தான். உடைகளைக் கழற்றி விட்டுச் சயன அறையில் வெகு ஒய்யாரமாய் அமர்ந்து லஷ்மியின் வரவை எதிர்பார்த்துக்கெண்டிருந்தான். லஷ்மியின் காதுகளிலோ, ‘என் வாழ்வும் இப்படியாச்சே! இதற்கொரு வழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை’ என்ற ஜானகியின் வேதனைச் சொற்கள் வெண்கல மணியைப் போல் சதா ஒலித்துக் கொண்டே இருந்தன. தன்னைத் தான் சமாளித்துக் கொண்டு காபியை எடுத்துக்கொண்டு கணவனிடம் சென்றாள். சற்று முன் இருந்த பரிபூரண ஆனந்தம் இல்லை. மெல்லிய வேதனைத் திரை பளிங்கு போன்ற முகத்தில் படர்ந்து பிரகாசத்தை மறைத்தது. ஆசையுடன் மனைவியின் முகத்தை நோக்கினான் கோபாலன். மங்கிய முகம் பிரயாணத்தினால் ஏற்பட்ட சோர்வு என்று நினைத்தான். அவன் உள்ளத்துள் நடக்கும் போராட்டம் எத்தகையதென்பதை அவன் அறிந்தால் அல்லவோ தெரியும்?

நாட்கள் செல்லச் செல்ல ஜானகி புக்ககம் செல்லாமல் இருக்கும் காரணம் தெரியவந்தது. அவள் கணவனுடன் போய் வசிக்கக் குறுக்காய் நிற்பவை சில நூறு ரூபாய்கள் என்றறிந்தாள். ஜானகிக்கு ஒரு வேலையும் கொடாமல் மாமியாருக்குச் சகாயமாய் எல்லா வேலைகளையும் செய்வாள். தன்னாலான மட்டில் அவளை உற்சாகமூட்டிக் கொண்டிருப்பாள். தன் பிறந்த வீட்டிலிருந்து எது வந்தாலும் ஜானகி விரும்பினால் சந்தோஷமாய் அவளுக்குக் கொடுப்பாள். லஷ்மியின் குணங்கள் அவள் மாமனார் மாமியாரை வசீகரித்தன.

Image

ன்று கார்த்திகை. எல்லோர் வீட்டிலும் வெல்லப் பாகு வாசனை மணக்கிறது. பொரி வறுப்பவர்களும், விளக்குகளுக்கு எண்ணெய் நெய்விட்டுத் திரி போடுபவர்களுமாய் ஊர் முழுவதும் மங்களமாய்த் தீபாலங்காரங்களில் ஈடுபட்டு, யுவதிகள் கார்த்திகை மதியைக் காணும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். விண்ணில் விண்மீன்களில் கண் சிமிட்டல். மண்ணில் மங்கையர்கள் கைகளினால் ஏற்றப்பட்ட மண் விளக்குகளின் நடனம் சிறுவர்களின் ஆனந்தத் தாண்டவம். சந்நிதி வீதியில் மாலை மங்கள ஹாரத்தியின் மத்தியில் மங்கள ஒலி கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

மங்களம்மாள் கையில் பூச்செண்டுடன் கூடத்திற்கு வந்து அங்கிருக்கும் படங்களில் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி வைத்துவிட்டு, ”லஷ்மி! ஜானகி!” என்று கூப்பிட்டுக்கொண்டே புஷ்பத்தைக் கையில் சுருட்டிக்கொண்டு இருந்தாள். லஷ்மி சிரித்த முகத்துடன் எதிரில் வந்து நின்றாள். ”திரும்பு. அவள் எங்கே? ஜானகி! நீ மாத்திரம் கூப்பிட்டதும் வர்ற வழக்கந்தான் கிடையாதே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே லஷ்மியைவிட நான்கைந்து வயசு பெரியவளாகிய ஜானகி அவ்விடம் வந்தாள். லஷ்மியின் தலையில் புஷ்பத்தை வைத்துவிட்டு மங்களம்மாள் ஜானகிக்குப் பூவை வைக்க அவளைப் பார்த்தாள். அவள் இன்னும் முகத்தைத் துடைத்துப் பொட்டிட்டுக் கொள்ளாமல் இருப்பதைப் பார்த்துக் கோபமாய், ”ஏண்டி? உனக்கு ஏதாவது புத்திகித்தி இருக்கா இல்லையா? விளக்கேத்த வேண்டிய நாழியாயிடுத்து, என்ன செய்து கொண்டிருந்தாய்? எப்போ விளக்கேத்தி நாலு வீட்டுக்குப் பொரியும் அப்பமும் கொடுத்துவிட்டு வர்றது? ரொம்ப அழகு போ! அந்தச் சிறுபெண் என்ன செய்வாள்! அதுவும் தேமேன்னு எல்லா வேலைகளையும் செய்துவிட்டுச் சிரித்தபடி வளைந்து வருகிறது. ஒரு வேலையும் செய்யாவிட்டாலும் உன் மூஞ்சியை அலம்பி, நெத்திக்கிட்டுண்டு அழகா ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கக் கூடாதா?” என்று சொல்லிவிட்டுப் புஷ்பத்தைச் சூட்டினாள்.

ஜானகி பொங்கிவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டு, ”அம்மா! நான் யாராத்துக்கும் போகமாட்டேன். நீ வேணும்னா உன் நாட்டுப்பெண்ணை அழைத்துக் கொண்டு போயிட்டு வா” என்று மடமடவென்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றாள். மங்களம்மாள் பெருமூச்சுடன் கண்களில் வரும் நீரை, பல்லைக் கடித்துக்கொண்டு அடக்கப் பிரயத்தனப்பட்டாள். அதே சமயம் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து லஷ்மியின் சகோதரன், ‘கார்த்திகைச் சீர்’ எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் வைக்கக் கூடிய குத்துவிளக்குகள் இரண்டு, அப்பத்துடன் வெள்ளி பக்கெட், பொரி பணியாரத்துடன் வெள்ளித்தட்டு, டவரா எல்லாம் வைத்து, மஞ்சள் குங்குமம், பழங்கள் முதலியவற்றை நிறைய வைத்தான். லஷ்மிக்கு ஏற்றாற்போல் நீலநிறப் பட்டில் நட்சித்திரங்களைப் போல் ஜ்வலிக்கும் தங்கச் சரிகையால் மல்லிகை மொக்குகள் போட்ட அழகிய புடவையும் மேகக்கூட்டம் ஓடி விளையாடுவதைப் போல் ஜாக்கெட்டும் ஒரு தட்டில் வைத்தான்.

லஷ்மிக்குத் தந்தையில்லை. இரண்டுபேர் சகோதரர்கள்; மூத்தவன் பலராமன், இளையன் கிருஷ்ணமூர்த்தி. அவ்விரு சகோதரர்களுக்கு லஷ்மி என்றால் அன்பு மிக அதிகம். லஷ்மிக்கு மணமாகி இரண்டு வருஷமாயின. முதல் வருஷக் கார்த்திகை (தலைக் கார்த்திகை) அவள் பாட்டி இறந்ததால் நடக்கவில்லை. இரண்டாம் வருஷக் கார்த்திகைக்குள் மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டாள். கிருஷ்ணமூர்த்தி விசால மனப்போக்கு உள்ளவன். ஆசையுடையவன். அவர்கள் தந்தை பெரிய உத்தியோகத்திலிருந்து வேண்டிய பணம் சேர்த்து வைத்திருந்தார். பிள்ளைகளும் தந்தையில்லாக் குறையை வெளிப்படுத்தாமல் ஒவ்வொன்றையும் விமரிசையாய்ச் செய்துவந்தார்கள்.

லஷ்மியின் கணவன் கோபாலன் நல்ல அழகுடையவன். எம்.ஏ.பட்டதாரி. செக்ரிடேரியேட்டில் வேலையில் இருக்கிறான். மாதம் நூறு ரூபாய் சம்பளம். தந்தை கலெக்டரேட்டிலிருந்து பென்ஷன் பெற்றவர். ஐந்து பெண்கள், கோபாலன் ஒரு பிள்ளை. அவர் பொருள் ஒன்றும் சேர்க்கவில்லை. தம் சக்திக்கு மேற்பட்டுப் பெண்களுக்குச் செய்து ஓட்டாண்டியானார். சொற்பக் கடனும் உண்டு. அவர் நாற்பது ரூபாய் பென்ஷனும், கோபாலன் நூறு ரூபாயும் கடனுக்குச் செலுத்தியது போக மீதி வீட்டிற்குப் போதும் போதாததுமாய் இருந்தது.

Image

லஷ்மியின் பிறந்த வீட்டவர்கள் இதை எல்லாம் அறிந்திருந்தும், கோபாலனின் அழகு, கல்வி, நற்குணம் இவற்றை உத்தேசித்து லஷ்மியை அவ்வீட்டில் கொடுத்தார்கள். லஷ்மியும் கோபாலனும் அன்னியோன்னிய தம்பதிகள். மங்களம்மாள் தனக்கு நல்ல பணம் படைத்தவர் வீட்டுச் செல்லப் பெண் நாட்டுப் பெண்ணாய் வந்ததற்குப் பெருமை கொண்டாள். அதற்கு மேல் அவள் குணமும் எல்லோரையும் வசீகரித்தது.

அந்த அம்மாளின் கடைசிப் பெண்ணான ஜானகியை அவர்கள் அவ்வூரிலேயே தங்களுக்குத் தூர பந்துவின் வீட்டில் கொடுத்திருந்தார்கள். ஜானகியின் மாமியார் அதிக ஆசைக்காரி. வருஷந்தோறும் சீரும் செல்லமும் சரியாய் ஒவ்வொரு பண்டிகைக்கும் வரவேண்டும். இல்லாவிடில் உக்கிர சண்டியாகிவிடுவாள். ஜானகிக்கு விவாகமாகி ஐந்தாண்டுகள் வரை அவள் மாமியார் கேட்டதை எல்லாம் தங்கள் சக்திக்கு மீறி மங்களம்மாள் செய்துகொண்டு வந்தாள். ஆனால் கோபாலனுக்கு ரூ.5,000 ஜாமீனுடன் லஷ்மி வரவே, ஜானகியின் மாமியார் அவ்வருஷம் கார்த்திகைச் சீருக்கு ஒரு ஜோடி வெள்ளிக்குத்து விளக்கு, தன்பிள்ளைக்கு மூன்று வைரம் பதித்த மோதிரம், அப்பம் பொரி முதலியவற்றுக்கானத் தன் நாட்டுப் பெண்ணிற்கு நான்கு பவுனில் ‘ஸ்வஸ்திக்’ வளையல் என்று திட்டம் போட்டுச் சம்பந்திக்கு அனுப்பிவிட்டாள்.

கோபாலனின் தந்தை கஷ்டத்தில் நன்றாய்ப் பக்குவப் பட்டவராதலால் தம் நிலையையறிந்து கோபாலனின் ஜாமீன் தொகை இருந்தால் கடனுக்காக கட்டவேண்டிவரும் என்று நினைத்து, அத்தொகைக்கு அழகிய சிறு வீடொன்றைக் கட்டி அதை லஷ்மியின் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்துவிட்டார். அது லஷ்மியின் பிறந்த வீட்டு ஸ்ரீதனம் என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். ஜானகி மாமியாரின் துர் எண்ணத்தைக் கண்டதும் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. தம் சம்பாத்தியத்தில் கால் பங்கிற்குமேல் ஜானகிக்குச் செய்திருந்தும் தம்பிள்ளைக்கு வந்ததையும் பிடுங்கிக்கொள்ளப் பார்க்கும் சம்பந்தியின் கொடூர எண்ணத்தை அறிந்ததும், இனித் தம்மால் செப்பாலடித்த காசுகூடச் செய்ய இயலாதென்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். அதன் பலன், ஜானகி சுமார் இரண்டு வருஷ காலமாய்ப் பிறந்த வீடே கதி என்றிருக்கும்படியாகி விட்டது.

லஷ்மி தன் நாத்தனாரின் வாழ்க்கையை எப்படிச் சீர்திருத்துவதென்று யோசித்தாள். மாமியாரின் முன் சொல்லப் பயம். கணவனிடம் கேட்கவோ வெட்கம். ஆனால் தன்னைப்போல் சிறுபெண் கணவன் ஆலிங்கனத்தில் அன்பாய் இருக்கவேண்டிய காலத்தில் அவள் யௌவனம் காட்டில் காய்ந்த நிலவைப் போல் ஆவதைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பாள். லஷ்மி ஐந்தாவது பாரம் வரையில் படித்தவள். நன்றாய் ஆங்கிலம் படிப்பாள். ஜானகியின் வருத்தத்தைப் போக்க அவளுடன் மத்தியானங்களில் ஏதாவது ஆட்டம் போடுவாள். வீட்டு வேலைகளில் மங்களம்மாளுக்குச் சகாயமாய் எல்லாவற்றையும் செய்வாள்.

ஜானகியோவெனின் ஒவ்வொரு சமயம் தன் தந்தையின் வறுமை நிலைக்கும் மாமியாரின் துராசைக்கும் வருந்துவாள். சகோதரனும் அவன் மனைவியும் அன்னியோன்னியமாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமையுறுவாள். லஷ்மி வந்த பின் தாய் தந்தையருக்குத் தன்மேல் அன்பு குறைந்துவிட்டதென்று நினைப்பாள். அப்படி அன்பிருந்தால் கையில் பணம் இல்லாதபோது கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுச் செய்த தந்தை, இன்று ஐயாயிரம் ரூபாய் இருந்தும் தன் மாமியார் கேட்ட சுமார் ரூ.500 க்குப் பின்வாங்கினாரே என்று கடுகடுப்பாள். நாள் பொழுதென்றால் கண்களைக் கசக்கிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். லஷ்மி அவள் துக்கத்தில் எவ்வளவு பகிர்ந்து கொள்ளக்கூடுமோ அவ்வளவு பகிர்ந்து கொள்வாள். ஆனால் ஜானகி அதை வெறும் பாசாங்காய் நினைத்தாள்.

3

Image

கிருஷ்ணமூர்த்தி கார்த்திகைச் சீர் வைத்துவிட்டுத் தங்கை புதுப் புடவை உடுத்துக் கொண்டு வரும் அழகைப் பார்க்க கோபாலனின் தந்தையுடன் பேசிக்கொண்டு வீற்றிருந்தான். அச்சமயம் கோபாலனும் ஆபீஸிலிருந்து புன்சிரிப்புச் சிரித்தவாறே மைத்துனனைத் தலையசைப்பால் வரவேற்று மாடிக்குச் சென்றான். அவ்விடம் லஷ்மி நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் முன் மேஜைமேல் நாக ஒத்தும், வங்கியும் இருந்தன. கோபாலன் ஓசைப்படாமல் உடைகளைக் கழற்றிவிட்டு ‘இவள் இப்படி இருப்பதற்குக் காரணம், சில நாட்களாய் இவளிடம் ஏற்பட்ட மாறுதலா, அல்லது…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ”ஆம் அப்படித்தான் செய்யவேண்டும். அவள் பாவம் எப்படிச் சிரிப்பாள்? ஒரு நாளா, இரண்டு நாளா? இரண்டாண்டுகள்” என்று அவள் வாய் முணுமுணுத்தது. அதே சமயம் கீழே மங்களம்மாள், ”ஜானகி! உன்னால் எனக்கு எப்பொழுதும் கஷ்டந்தான். நீ அவளுக்கேற்ற நாட்டுப் பெண்தான்! அகங்காரம் பிடிச்சவள். எழுந்து போய்ப் புடவையை உடுத்திண்டு வந்து அவளுக்குச் சகாயமாய் விளக்கேத்தி நாலு சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து விட்டு வா; கோயிலுக்குப் போய் வரலாம். அவளும் சிறிசு. காத்தாலே இருந்து எனக்குச் சரியாய்ப் பம்பரமாய் வேலை செய்தாள். மசக்கைக்காரி; கொஞ்ச நேரம் காத்தாட இருந்துவிட்டு வரட்டும். அதுக்குள் நீ பூஜைக்கு எடுத்து வைச்சு விளக்கேத்தப் பிரயத்தனம் செய். ஏன்தானோ இப்படி இருக்கே! உன்னைவிடச் சிறிசுதானே! எத்தனை சமர்த்தாய் இருக்கா பார்!” என்று கூச்சலிட்டுச் சொல்வதைக் கேட்டதும் நாற்காலியை விட்டெழுந்து ஜன்னலருகில் ஓடி மாலைச் சூரியன் மறைந்து விட்டானா என்று மேற்கே பார்த்தாள் லஷ்மி. தன் பொலிவு மங்கி மறையும் தறுவாயிலிருக்கும் கதிரோனைப் பார்த்ததும் தடதடவென்று கீழிறங்கி ஓடினாள். ”ஏன் அவ்வளவு அவசரம்?” என்று கோபாலன் பின்புறமிருந்து அவள் இரண்டு தோள்களையும் பிடித்து நிறுத்தினான். திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். அதில் உற்சாகமோ, பெருமையோ ஒன்றும் இல்லை. மண்பாண்டம் போல் மங்கிப் பிரகாசமற்று இருந்தது.

‘‘உனக்கென்ன? ஏன் இப்படி இருக்கிறாய்? கீழே கிருஷ்ணமூர்த்தி காத்திருக்கிறான். இன்னும் அரைமணி நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். நீ ஏன் இன்னும் பூர்த்தியாய் அலங்கரித்துக் கொள்ளவில்லை?”

‘‘நானா… நா…ன் அலங்கரித்துக் கொண்டிருக்கேனே! பாருங்கள்” என்று பலவந்தமாய்ச் சிரிப்பை வருவித்துக்கொண்டு, அவனை உற்றுப்பார்த்தாள். அவள் நெற்றியில் குங்குமம் ஜிகினாப் பொடியுடன் பளபளப்பாய் மின்னிற்று. அவள் கம்பீர வாக்கும் நிஷ்களங்கமான பார்வையும் அவனைத் தலைகவிழச் செய்தன. மின்னலைப்போல் அவன் கையைவிட்டாள். பரபரவென்று கீழிறங்கிச் சமையலறைக்குச் சென்று ”அம்மா, உங்க பிள்ளை வந்துவிட்டார்” என்றாள். மங்களம்மாள் அவள் குரலைக் கேட்டு அவளிடம் ஒரு டம்ளர் காப்பியைக் கொடுத்து, ”நீயும் புதுப்புடவை உடுத்திக்கலையா? இத்தனை நேரம் என்ன செய்தாய் லஷ்மி!” என்றாள்.

”இதோ ஒரு நிமிஷத்தில்” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மாடி ஏறினாள். அவள் முன் வீற்றிருந்த நாற்காலியில் கோபாலன் உட்கார்ந்து அன்று அவள் அப்படி இருப்பதற்குக் காரணம் என்னவென்று அறியப் பிரயத்தனம் செய்துகொண்டிந்தான். லஷ்மி காப்பியை மேஜைமேல் வைத்துவிட்டு, இடது கரத்தை மேஜையின் மேல் ஊன்றிக்கொண்டு, சற்று ஒரு புறம் சாய்ந்தவாறு நின்று வலக்கரத்தால் அவன் நெற்றியில் கலைந்து படிந்திருக்கும் கிராப்பைக் கோதினாள்.

அவள் அழகிய ரூபத்தில் மயங்கினான் கோபாலன். அவள் ஒய்யாரம் ஒரு சித்திரக்காரனை அப்படியே மயங்கச் செய்திருக்கும். அவன் சிரித்தவாறே, ”எதற்காக இந்த ஒற்றைக்கால் தபஸ்? எவ்வளவு அஜாக்கிரதை? இப்படி நகைகளை எடுத்து மேஜை மேல் போட்டிருக்கிறாயே! அதிக நகைகள் இருந்தால் இப்படித்தான். அம்மாவைப் பாரு. எதையாகிலும் எடுத்து இப்படிப் போடுவாளா? போடுவதற்குத்தான் அதிகமாய் என்ன இருக்கிறது?” என்று கண் சிமிட்டியபடி அமுத்தலாய்ச் சொன்னான்.

”ஆம்” என்று சொல்லிக்கொண்டு எழுந்து நாற்காலியின் கைப்பிடியில் உட்கார்ந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்து, ”எனக்கு ஒன்றுவேண்டும். வாங்கித் தருகிறீர்களா?” என்று கொஞ்சியவாறு செஞ்சிய பார்வையுடன் கேட்டாள். அவள் இதுவரையில் அவனை ஒன்றும் கேட்டதில்லை. அவனுக்கே வியப்பாகி விட்டது. ஆச்சர்யப் பார்வையுடன் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவள் காபியை அவன் வாயருகில் கொண்டுபோய்ப் பருகச்செய்து, ”இந்த நகைகள் எனக்கு இப்பொழுது அவசியமில்லை. பெட்டியில் வெட்டிக்குத் தூங்குகின்றன. இவற்றைக் கொண்டுபோய் முதலில் எவ்வளவிற்குப் போகுமோ விற்றுக்கொண்டு வாருங்கள். எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும்” என்றாள்.

”லஷ்மீ! என்ன சொன்னே! பண்டிகையும் அதுவுமாய் வீட்டிலிருக்கும், அதிலும் உன் நகைகளை, உன் வீட்டவர்கள் செய்தவற்றை விற்கவா சொல்கிறாய்? ரொம்ப அழகு! நீ சமத்து என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அசட்டுப் பட்டம் கட்டி விட்டாயே! நல்லவேலை! எதற்கு உனக்கு இப்பொழுது அவ்வளவு பணம் வேண்டும்?” என்று கடிந்தபடி முகம் சிவக்க தன் உணர்ச்சியை அடக்கக் கூடாமல் கேட்டான்.

”எதற்கென்று கேட்காதீர்கள். எல்லாம் நல்லதுக்குத்தான். இதைத் தயவு செய்து உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லாமல் செய்யுங்கள். அப்புறம் சொல்கிறேன். தயவு செய்து இந்தச் சகாயம் செய்யமாட்டீர்களா? நான் வேறு யாரைப் போய் இதைச் செய்யும்படி சொல்லுவேன்? எங்கள் அண்ணாவிடம் சொன்னால் நன்றாக இராதே” என்றாள். அவள் கண்களில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது. ‘இதென்ன அவஸ்தை? இவள் காரணமில்லாமல் பெரும் தொகைக்காக ரகளை செய்கிறாளே!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘லஷ்மி! போதாயிடுத்தம்மா! வா சீக்கிரம்” என்று மாமியார் அழைக்கும் குரல் கேட்கவே, அவசர அவசரமாய்க் கீழிறங்கிச் சென்று கொண்டே, ”போதாயிடுத்து; சீக்கிரம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்லிச் சென்றாள்.

பூஜை அறையில் வைத்திருக்கும் கார்த்திகைச் சீரை பார்த்தாள். கண்களில் நீர் மல்கியது. விளக்குகள் ஏற்றி வரிசையாய் வைத்தாயிற்று. ஒவ்வொருவருக்கும் நமஸ்காரம் செய்துகொண்டு வந்தாள். ஆனால் அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. மாடியில் கோபாலனும் கிருஷ்ணமூர்த்தியும் ஆனந்தமாய்ப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி கோபாலனிடம் ரூ.500 கொடுத்து, ”நீங்கள் விரும்பிய மோட்டார் பைக்கை வாங்கிக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமானால் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். கோபாலன் வியப்புடன் இவ்வளவு சீக்கிரம் தன் அபிப்ராயத்தைத் தெரியப்படுத்தியது லஷ்மியின் வேலைதான் என்று நிச்சயித்து, சிரித்தவாறே சங்கோசத்துடன், ”இப்பொழுது வேண்டியதில்லை; வேண்டும்போது நானே கேட்கிறேன்” என்றான். கிருஷ்ணமூர்த்தி அதற்கு இடங்கொடாமல் அவன் பையில் அப்பணத்தைத் திணித்து விட்டு வேறு பேச்சுப் பேசலுற்றான்.

லஷ்மி கணவனும் சகோதரனும் பேசும் இடத்திற்குக் கால்கள் தளர வந்தாள். சகோதரனை நமஸ்கரித்தாள். கணவனருகில் போனாள். அவள் கண்கள் நீரினால் மறைக்கப்பட்டிருந்தன. அவள் முகத்தைப் பார்த்தான் கோபாலன். ”லஷ்மி, இங்கே வா; இந்தப் புடவை உனக்கு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா? வங்கி நாகொத்து எல்லாம் போட்டுக்கோ. இன்னும் அழகா இருக்கும்” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

”நீ வாங்குவதற்கு அப்பழுக்கு உண்டா அண்ணா? இப்போ எனக்கு இவை பிடிப்பாய் இருக்கு. போட முடியவில்லை; இத்தனை நேரம் போட்டுப் பாத்துட்டுத்தான் அப்படியே வெச்சூட்டுக் கீழே போனேன்” என்றாள். ”சரி, அப்படியானால் நான் சற்று வெளியில் சென்று விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து சென்றான்.

”எங்கே எவ்வளவு பெருத்திருக்கிறாய் பார்க்கலாம்?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அந்நகைகளை அவளுக்கு அணிவித்தான் கோபாலன். ஆனால் அவை தளர்ந்து கீழே விழத் தொடங்கின. லஷ்மி அவ்வளவு இளைத்தா போய்விட்டாள் என்று நினைத்து அவள் கண்களில் தேங்கும் நீரைத் துடைத்து, ”இந்தா! உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ எடுத்துக்கொள்” என்று தன் மைத்துனன் கொடுத்த ரூபாயைக் கண்டதும் மலர்ந்தது. கண்கள் பிரகாசத்துடன் ஜ்வலித்தன. ரூபாயை எண்ணினாள். ”இவ்வளவுதான் வேண்டும்” என்று சொல்லிச் சிரித்தவாறே அவனை ஒரு பார்வை பார்த்தாள். மனைவியின் பார்வைக்கு மயங்காதவர்கள் யார்? ”அடி கள்ளி!” என்று கன்னத்தில் அன்புடன் ஒரு தட்டுத் தட்டினான். அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அவன் முகம் ஆச்சரியத்துடன் திகழ்ந்தது.

Image

வள் கீழே சென்று தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு வண்டிக்காக எதிர்பார்த்தாள். ஜானகி தாயின் கோபத்திற்குப் பயந்தும், தன் தலை விதியை நினைத்து நொந்தும், மன்னியின் ஆனந்த வாழ்க்கைக்கு வியந்தும், அவள் சகோதரன் செய்த சீரைக் கண்டு பொறாமை கொண்டும், தந்தையின் கடின சித்தத்தைக் கடிந்துகொண்டும் தன் தாயுடன் விளக்குகளைச் சரிவரத் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள். காற்றில் விளக்குகளின் துடிதுடிப்பு; அவள் உள்ளத்தில் வாழ்க்கையின் கொந்தளிப்பு.

கோபாலன் வண்டியுடன் வந்தான். லஷ்மி மாமியாரை அணுகி, ”அம்மா, நீங்களும் எங்களுடன் வாருங்கள்; எனக்கு ஒருவரையும் தெரியாது” என்று வற்புறுத்தினாள். தன் பெண் ஒரு மாதிரி சுபாவம் படைத்தவளாதலால் மங்களம்மாள் நாட்டுப் பெண்ணுடன் புறப்பட்டாள். கிழவர், ”குழந்தைகளுக்கு மேல உனக்குத்தான் பால்யம் திரும்பி விட்டதென்று தோன்றுகிறது” என்று ஏசினார். லஷ்மி தன் சகோதரன் கொண்டுவந்தவற்றை அப்படியே வண்டியில் எடுத்து வைத்தாள். குத்துவிளக்குகள் மாத்திரம் சுவாமியருகில் எரிகின்றன. ஜானகியையும் வண்டியில் ஏறச் சொன்னாள். அவள் முணுமுணுத்தவாறே ஏறினாள். எல்லாரும் ஏறினதும் லஷ்மி கோபாலனை ஒரு பார்வை பார்த்தாள். அதற்கு அக்கண்களே விடையளித்தன.

அரை மணி நேரத்தில் எழுத்து மறையும் வெளிச்சத்தில் வண்டி ஒரு சிறிய வீட்டு வாயிலில் வந்து நின்றது. அவ்வீட்டு வாயிலில் ஒரு பாட்டியம்மாள் நின்றுகொண்டு ஒரு சிறிய பெண்ணின் கையால் விளக்குகளை ஏற்றுவித்துக் கொண்டு இருந்தாள். முதலில் கோபாலனும் லஷ்மியும் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் அந்த அம்மாள் உள்ளே சென்று விட்டாள்.

”இது யார் வீடுடா, கோபாலா?” என்றாள் தாய்.

வண்டியிலிருந்தவற்றை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். கூடத்தில் லஷ்மி படம் ஒன்று மாட்டப்பட்டு அதனருகில் அதற்கு முன் வெண்கல யானை விளக்கு ஒன்று சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது. எல்லாவற்றையும் அதன் முன் வைத்தார்கள். வெற்றிலைத் தட்டின் மேல் ஒரு கவர் வைக்கப்பட்டு இருந்தது.

கோபாலன் உள்ளே சென்று, ”மாமி, இதோ நீங்கள் கேட்ட கார்த்திகை சீர்” என்று சொல்லி அழைத்தான். அவன் சொன்னதைக் கேட்ட மங்களம்மாளும் ஜானகியும் திகைத்தனர். ஜானகியின் மாமியார், தட்டுத் தட்டாய் வைத்திருக்கும் சீரையும் வெள்ளிப் பாத்திரங்களையும் பார்த்து மகிழ்ந்தவளாய் எல்லோரையும் அன்புடன் வரவேற்றாள். லஷ்மியும் ஜானகியும் அந்த அம்மாளை நமஸ்கரித்தனர்.

சற்று நேரத்தில் தாயுடனும் மனைவியுடனும் வீட்டிற்கு வந்தான் கோபாலன். மங்களம்மாள் திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். தன் நாட்டுப் பெண்ணின் சீரை எல்லாம் கோபாலன் ஜானகிக்குக் கொடுத்து விட்டானே என்று கணவனிடம் நடந்ததைச் சொன்னாள். அவர் தம் பிள்ளையையும் நாட்டுப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார். மாலையில் கோபாலன் தான் ஆபீசிலிருந்து வந்தது முதல் நடந்தவற்றைச் சொன்னான். மங்களம்மாள் மௌனமாக இருந்தாள். ”லஷ்மி, நீ எங்கள் வீட்டை உத்தரிக்கவந்த லஷ்மிதான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் கிழவர். ”அதில் சந்தேகம் என்ன?” என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி உள் நுழைந்தான்.

எல்லோரும் அவரவர்கள் படுக்கையறையை அணுகினர். மாடியில் வெட்ட வெளியில் லஷ்மியும், கோபாலனும் கார்த்திகை மதியையும், அதைக் கவர வரும் மேகக் கூட்டங்களையும் கண்டு உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். ”லஷ்மி, நீ இன்று செய்த காரியம் மிகவும் வருந்தக்கூடியது. உனக்கென்று ஆசையாய் உன் சகோதரன் பண்ணிக்கொண்டுவந்த பாத்திரங்களையும், பட்சணங்களையும் அந்த ஆசை பிடித்த கிழத்திற்கு அர்ப்பித்ததன்றி, ரூபாய் ஐந்நூறையும் கொடுத்தாயே” என்றான்.

”வருந்தக்கூடியதென்று சொல்லாதீர்கள். ஆனந்திக்க வேண்டியது. என்னைப்போல் சிறிய வயசினள், ஆனந்தமாய் இருக்க வேண்டியவள், எப்பொழுதும் அழுது வடிந்துகொண்டு, உங்கள் தாய் தந்தையராலும் அருவெறுக்கப்பட்டு வந்தால் அவள் மனம் எவ்வளவு துடிக்கும்? அவள் துடிதுடித்து விடும் மூச்சு நமக்கு இன்பமூட்டுமா? இன்றுதான் என் மனம் பரிசுத்த ஆனந்தத்துடன் இருக்கிறது. ஜானகியும் அவள் கணவனுடன் ஆனந்தமாய் இருப்பாளன்றோ? எல்லோர் வீட்டிலும் இருளைப் போக்கிப் பிரகாசத்தை உண்டு பண்ணிய இக்கார்த்திகை உங்கள் தங்கையின் மன இருட்டைப் போக்கி ஆனந்த விளக்கை ஏற்றட்டும்!” என்றாள்.

மனைவியுடன் மாமியார் வீட்டவர்களை நமஸ்கரிக்க வந்த ஜானகியும் அவள் கணவனும் இவர்கள் பேசுவதை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டு நின்றனர். ஜானகி லஷ்மியைக் கட்டிக்கொண்டு, ”என் வாழ்க்கை விளக்கை ஏற்றிய லஷ்மீ” என்று நாத் தழுதழுக்கச் சொன்னாள். லஷ்மியின் முகத்தில் என்றுமில்லா ஆனந்தம். அவள் கண்களில் கருணை நீர் ஊற்று. உதடுகளில் இன்பப் புன்னகை. இவ்வளவும் சோபிக்க, ”ஜானகி, உன் வாழ்க்கை விளக்கை ஏற்றியது நான் அல்ல; கார்த்திகைச் சீர்” என்றாள்.

*** 

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 22

கௌரி அம்மாள்

(1913  – 1987)

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மத்தியதரக் குடும்பங்களைத் தன் கதைக்களனாகக் கொண்டு தொடர்ந்து எழுதியவர்.

1949ல் வெளியான இவரின் ‘கடிவாளம்’ நாவல், குறிப்பிடத்தக்க ஒன்று. இவரின் சிறுகதைத் தொகுதி ‘வீட்டுக்கு வீடு’ (1970).

தன் வாழ்நாளின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு கொண்டு, தனது எழுத்துகளின் போக்கை மாற்றிக் கொண்டவர்.

 நீர் ஊற்று

”தபால்!” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா.

கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம் கன்றிப்போயிருந்தது. கொஞ்சம் தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தவர், ”யார் எழுதியிருக்கிறார்கள்?” என்றார் கமலாவைப் பார்த்து.

கடிதத்தைப் படிக்கும்பொழுதே அவள் முகம் ஏனோ வேறுபட்டுக் கொண்டே வந்தது தெரிந்தது. தலையைத் தூக்காமலே, ”அவர் தாம்” என்றாள் தாழ்ந்த குரலில்.

”இரண்டு மாச காலமாச்சு. ஒரு வரி இல்லை! என்ன வரிந்து தள்ளி இருக்கிறான் இப்பொழுது?”

கமலா ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மடித்து உறையில் போட்டபடியே நின்றாள். தன் கணவன் மீது தகப்பனாருக்கு எவ்வளவு கோபம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? சொல்லத்தான் முடியும்?

”அவன் எழுதுவதை நீ சொல்லுவாயா? இப்படி மறைத்து மறைத்து வைத்துக் கொண்டுதானே என் பிராணனை வாங்குகிறாய்? அவன் ஒரு கடன். அவனுக்கு மேலே நீ ஒரு கடன்!”

”ஒன்றும் இல்லை. அப்பா!”

”ஆமாம். நாலு பக்கம் வரிந்து தள்ளியிருக்கிறான். ஒன்றும் இல்லையாம்! சொல்லாவிட்டால் போ. நீ வாயைத் திறந்து சொல்லவேண்டுமா? முகத்தில்தான் சொட்டுகிறதே!” என்று சொல்லிக் கொண்டே எழுந்துவிட்டார்.

கமலாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பேசவும் வாய் வரவில்லை. கடிதத்தை அவர் முன் நீட்டினாள். ஆனால் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. நீராடச் சென்று விட்டார்.

அன்றெல்லாம் ரங்கசாமிக்குப் பிரமாதக் கோபம்.

ரங்கசாமி சிறிய உத்தியோகஸ்தர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள்தான் கமலா. அவளுக்குக் கல்யாணமாகிப் புருஷனுடன் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்குப் பத்தொன்பது இருபது வயசு இருக்கும். உயரமாய் வெடவெடவென்று இருப்பாள். நல்ல நிறம். பால்போல் முகம் தெளிவாய் இருக்கும். நல்ல குணசாலி. பொறுமை உடையவள். அதுவும் சில சமயங்களில் ஆபத்தாக முடிகிறது வாழ்க்கையில்!

கமலாவின் கணவனும் இளைஞன்தான். வெளியூரில் வேலை பார்த்துவந்தான். ரங்கசாமி அதிகமாய் ஒன்றும் செய்து கொடுக்கமுடியாது என்றாலும் கமலாவின் அழகு அவனைக் கொள்ளை கொண்டுவிட்டது. தேடவில்லை, ஓடவில்லை. ரங்கசாமிக்கு ஒரு ஜோஸ்யர் சொன்னாராம். அதுபோலவே போன இடத்தில் திடீரென்று கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. ”அந்தப் பெண் அதிர்ஷ்டத்தைப் பாரடி! ராஜாபோல் அகமுடையான்! அப்படி அல்லவா இருக்க வேண்டும் பெண்ணாய்ப் பிறந்தாலும்?” என்றெல்லாம் எவ்வளவோ பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் நினைப்பதுபோல் முதலில் ரங்கசாமிக்கும் அவர் மனைவி ரங்கம்மாளுக்கும் பெருமையாகவே இருந்தது. ஆனால் நாட்களும் மாதங்களும் ஓடி இரண்டு வருஷம் கழிவதற்குள் சம்பந்தி, மாப்பிள்ளை, மாமனார் எல்லோருக்கும் இடையே ஏகப்பட்ட மனத்தாங்கல், அதிருப்தி, இடையிடையே பேச்சு வார்த்தை, வேப்பங்காயாய்க் கசந்து போய்விட்டது. முடிவில் ரங்கசாமி, ரங்கம்மாள், கமலா இவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை தடித்துப்போய் மூலைக்கு ஒருவராய் உட்கார்ந்திருப்பார்கள்.

ரங்கசாமிக்கு உண்மையில் கமலாவிடம் பிரியம் இல்லையா? பெற்ற பாசம், மனத்தில் கலக்கம், கவலை எல்லாம் சேர்ந்துதான் அவர் வாயைப் பெருக்கின. தம் சக்திக்கு மீறியே எல்லாம் செய்தார். அழகாய்க் கல்யாணம் செய்து, வேண்டியபடி சாப்பாடு போட்டு சம்பந்திக்கும் குறைவின்றிச் சீரோ பணமோ கொடுத்தார். ”மொத்தம் ஒரு ரூபாயை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். என்ன வேண்டுமோ செய்து கொள்ளட்டும். காது மூக்கு மூளி இல்லாமல் போட்டுக் கல்யாணத்தை நான்றாய்ச் செய்யலாம்” என்றாள் ரங்கம்மாள். அது வரையிலும் எல்லோருக்கும் திருப்திதான்.

சரியான காலத்தில் கமலாவையும் கணவனிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார். இதற்குப் பிறகுதான் அக்கப்போர் எல்லாம் ஆரம்பமாயின.

கடிதத்திற்கு மேல் கடிதம் வந்தது. ‘பெண் சமர்த்தாக இல்லை; காரியம் தெரியவில்லை’ என்று ஒரு பக்கம். ‘பெண்ணை அடக்க ஒடுக்கமாய் வளர்க்கத் தெரியவில்லை உங்களுக்கு’ என்று இரண்டு பக்கம்.

எப்படி இருக்கும் ரங்கசாமிக்கு? ஒவ்வொரு கடிதத்தையும் பார்க்கும்போது கோபம் பொங்கிவந்தது. ரங்கம்மாள் ஒன்று சொல்ல, இவர் ஒன்று சொல்ல, எப்பொழுது பார்த்தாலும் ஒரே ரகளை வீட்டில்.

ஒருநாள் காலை, சுமார் ஒன்பது மணி இருக்கும். ரங்கசாமி சாப்பிடலாமா என்று கிளம்பும்பொழுது அவருக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை, கமலாவின் கணவன் உள்ளே நுழைந்தான். திடீரேன்று மாப்பிள்ளையைப் பார்த்ததும் ரங்கசாமிக்குச் சந்தோஷம் உண்டாயிற்று.

”வரவேணும், வரவேணும். எப்போது வந்தீர்கள்?” என்றார் மலர்ந்த முகத்தோடு. மாப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே, ”ஏதோ வேலையாக வந்தேன்” என்றான்.

உடனே, ”அடியே” என்றார் ரங்கசாமி. மாப்பிள்ளைக்குக் காபி வந்தது. சாதாரணமாய்ப் பேச்சுகள் நடந்தன.

”மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சாப்பிட வாருங்களேன்” என்றாள் ரங்கம்மாள். இதைச் சொன்னதுதான் தாமதம், மாப்பிள்ளை எழுந்துவிட்டான்.

”எனக்கு அவசரமாய் ஜோலி இருக்கிறது. இந்தக் கடிதத்தைக் கமலா உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அதற்காக வந்தேன். ராத்திரி ரெயிலுக்குப் போகிறேன். வரட்டுமா?” என்றான் நின்றபடி

கடிதத்தைக் கையில் வாங்கிய ரங்கசாமிக்கு ஒன்றும் ஓடவில்லை. மனத்தில் பல யோசனைகள் ஓடின. கடிதம் உறையில் போட்டு ஒட்டி, ‘ரங்கம்மாளுக்கு’ என்று எழுதி இருந்தது. சற்று நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மாப்பிள்ளையை உபசரிப்பதில் ஈடுபட்டார்.

‘‘ஊருக்கு வந்தால் நம்மகத்தில் வந்து இறங்கக்கூடாதா? இப்படி ஒவ்வொரு தடவையும் செய்வது நன்றாக இருக்கிறதா? சாப்பிடாமல் போகவே கூடாது. இங்கிருந்துதான் ரெயிலுக்குப் போகவேண்டும்” என்றெல்லாம் ரங்கம்மாளே நேரில் வந்து உபசாரம் செய்தாள். ஸ்ரீநிவாசன் கேட்கவே இல்லை. பேசாமலும் போகவில்லை. ”இந்த அசட்டுப் பிணத்தை என் கழுத்தில் கட்டினீர்களே! அதற்குச் சாப்பாடு வேறு! ஊரில் வந்து பாருங்கள். என் மானமே போகிறது!” என்று கூறி விடுவிடுவென்று போய்விட்டான் வாசலை நோக்கி.

திடீரென்று ஒரு பெரும் புயல் வீசி மரத்தை வேரோடு உலுக்கியது போலிருந்தது. ரங்கசாமி ரங்கம்மாளைப் பார்த்தார். அவள் இவரைப் பார்த்தாள். கீழே விழுந்து கிடந்த கடிதத்தை உடைத்துப் பார்க்கவும் இருவருக்கும் தோன்றவில்லை.

”கடன்காரன்! பொழுது விடிந்து வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறான்!” இது ரங்கசாமியின் அடி வயிற்றிலிருந்து வந்த வார்த்தை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்.

”என்ன கடிதம்?” என்றாள் ரங்கம்மாள்.

”பெண் எழுதியிருக்கிறாள்! பார்!” என்று கடிதத்தை வீசி எறிந்தார் ரங்கசாமி.

ரங்கம்மாள் ஆவலுடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள். சில விநாடிகளுக்கு மௌனம் நிலவியது. கடிதத்தைப் படித்து முடித்து உறையில் போடும் சமயம் ரங்கம்மாளின் உள்ளத்திலிருந்து நீண்ட பெருமூச்சுக் கிளம்பியது.

”உம்! எல்லாம் ஜன்மாந்தரக் கடன். பிள்ளையாவது! பெண்ணாவது!” என்று உறுமினார் ரங்கசாமி.

”அவளாக எழுதி இருக்க மாட்டாள்” என்றாள் ரங்கம்மாள்.

”ஆமாம்! பெண்ணுக்குப் பரிந்துகொண்டு வராமல் என்ன செய்வாய் நீ? தகப்பன் செய்யட்டுமே என்ற எண்ணந்தான். இதைத் தபாலில் போடமுடியவில்லையோ அவளுக்கு? அவனுக்கும் தெரியவேண்டும் என்றுதானே இப்படிச் செய்தாள்?”

”பிடுங்கிப் பிடுங்கி எடுத்தால் அவள்தான் என்ன செய்வாள்? குழந்தைதானே? நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவாள்?”

”குழந்தை! நீதான் சொல்லிக்கொள்ள வேணும். அது அவளாக எழுதவில்லை என்கிறாயே; ஒரு தூபம் போட்டால் அதற்காகக் குதிக்கிறதோ? முடியாது என்று சொல்லுவதற்கு என்ன?”

”எப்படித் தைரியம் வரும்? சிறியவள்தானே?”

”ஆமாம், நமக்கு எழுத மட்டும் தைரியம் வரும்! அவ்வளவு இளக்காரமாய்ப் போய்விட்டது. இங்கே என்ன கொட்டியா வைத்திருக்கிறது பணமும் காசும்? கூஜா வேணுமாம் கூஜா! இனிமேல் ஒரு சல்லிக்குச் செய்ய முடியாது என்னால்! வந்தவனுக்கு ஒரு வார்த்தை பேச முடியவில்லை. ஒரு பிடி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு இல்லை. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை! வறட்டுத் தொத்தல். எழுது உன் பெண்ணுக்கு; தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்காது என்று எழுது”.

ரங்கம்மாள் ஒன்றுமே பேசவில்லை. அவள் கண்களில் நீர் முத்து முத்தாய்த் துளித்து நின்றது.

”உம்! சோற்றைப் போடு. வயிற்றை எரிகிறது” என்று ஏதோ இரண்டு பிடி எச்சிலாக்கி விட்டு வெளியில் போய்விட்டார் ரங்கசாமி.

ரங்கம்மாளுக்கு வேதனை அள்ளி அள்ளிப் பிடுங்கியது. கடிதத்தை எடுத்து மறுபடியும் திருப்பித் திருப்பிப் படித்தாள். என்ன யோசித்தாலும் அந்தக் கடிதத்தைக் கமலா தானாக எழுதியிருப்பாள் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை. ‘புருஷன் முரடனாகவும் கோணலாகவும் இருந்தால் குழந்தைகள் என்ன செய்யமுடியும்? பாவம்! தம்பதிகளின் இன்ப வாழ்க்கையில் போராட்டம் போதாதென்று பெற்றோரும் கட்சியும் சண்டையும் பிடித்தால் என்ன செய்வது? ஏதோ பொன் வைக்குமிடத்தில் பூ. இருவரும் முரணிக்கொண்டு நிற்பதில் லாபம் என்ன?” என்றெல்லாம் எவ்வளவோ சிந்தனைகள் அவள் மனத்தில் எழுந்தன.

மளமளவென்று சென்று பெட்டியைத் திறந்தாள். தன் கல்யாணத்தில் கொடுத்த வெள்ளிக் கூஜாவை எடுத்துக்கொண்டு தட்டான் வீட்டை நோக்கி நடந்தாள்.

Image

மாலை விளக்கு வைக்கும் சமயம். ரங்கசாமி கூடத்துத் தாழ்வாரத்தில் வேகமாய் இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தார். ரங்கம்மாள் கூஜாவின்மேல் பார்வை விழுந்தது. ”ஏது இது?” என்றார். குரலில் கோபம் கனல்போல் எழும்பியது.

ரங்கம்மாள் அவருக்கு நேர் மாறாகப் பொறுமையுடன் பேசினாள்; ”நான் அப்பொழுதே சொன்னேன், கொடுத்துவிடலாம் என்று. கேட்டால்தானே?” என்றாள்.

ரங்கசாமியின் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. ”கொடுக்கவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது? அப்பொழுதே கேட்டு வாங்கிக் கொண்டு போகிறதுதானே இவ்வளவு கேட்டவன்? ரொம்பச் சங்கோசப் படுகிறவனோ இல்லையோ? உன் மாப்பிள்ளை! முடியாது! இனி ஒரு சல்லிப் பெயராது! தெரிந்துகொள்!” என்று கர்ஜித்தார்.

”எல்லாம் அவனுக்காகவா செய்கிறோம்? நாமே நம் குழந்தைகளுக்கு இன்னும் உபத்திரவத்தை உண்டாக்கினால் என்ன செய்வது? சொல்லுங்கள். கூஜா சாதாரணமாய்க் கேட்பதுதானே?”

”எது வேண்டாம் சொல். கொடுக்கிறவர் இருந்தால் எனக்குந்தான் எல்லாம் வேண்டும். யார் கொடுக்கிறார்கள்? வறட்டு ராங்கிப் பயல்! வந்தானாம்! நேரே சொல்லுவதற்கு என்ன கேடு?”

”போகிறான். அசட்டுப்பிள்ளை அவனுக்குந்தான் ஒன்றும் தெரியவில்லை. ‘பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ?” என்பார்கள். நாம்தானே தாழ்ந்து போக வேண்டும்? கோடி புண்ணியம் உங்களுக்கு. ரெயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு இதையும் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கூஜாவையும் நீட்டினாள் ரங்கம்மாள். ரங்கசாமியின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தாலும் ரங்கம்மாள் பின்வாங்கவில்லை. ‘விழுந்தாலும் முதுகில் இரண்டு அடிதானே விழப்போகிறது? விழட்டும்’ என்று துணிந்து விட்டாள். ஏற்றுக்கொள்ள மறுத்து விறைத்து நின்ற அவர் கைகளில் விரல்களைப் பிடித்து பலவந்தமாக மடக்கிக் கூஜாவையும் மாட்டிவிட்டாள். ரங்கசாமிக்கு இருந்த கோபத்தில் கூஜா ஒரு மைல் தூரம் பறந்திருக்கும். ஆனால் ரங்கம்மாளின் இந்தச் செய்கையை மீறி நடக்க அவர் உள்ளம் ஏனோ தயங்கியது. ரங்கம்மாளைப் பார்த்தார். கண்ணும் கண்ணீருமாய் அவள் நிற்கும் கோலம் அவரை அயரச் செய்தது.

”நீ ஒரு பெரிய அசடு! பெண் பெண் என்று உயிரை விடுகிறாய். நாளைக்கு நமக்கு என்ன செய்யப் போகிறார்கள் எல்லாரும்? பெற்ற கடன்தான்!” என்று சொல்லிக்கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

ரங்கம்மாள் நீண்ட பெருமூச்சுவிட்டாள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்; கிளம்பினால் போதும் என்று நினைத்தாள். தெருக்கோடி சென்று ரங்கசாமி கண்களுக்கு மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தாள்.

ரெயில் கிளம்புவது சரியாய் இரவு எட்டு மணிக்கு. ரங்கம்மாள் அடிக்கு ஒரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘இவ்வளவு கோபத்துடன் போயிருக்கிறாரே. ஒருவருக்கொருவர் சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டுமே!’ என்று எவ்வளவோ பிரார்த்தனைகள். ‘கமலா என்ன கஷ்டப்படுகிறாளோ! பாவம்’ என்று வேதனைப்பட்ட வண்ணம் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

கடிகாரத்தில் ‘டண்’ என்று அடித்தது, மணி ஏழரை. ரங்சாமி அதிவேகத்துடன் உள்ளே நுழைந்தார். அவர் கையிலிருந்த வெள்ளிக் கூஜா ‘படேர்’ என்ற ஓசையுடன் ரங்கம்மாளின் காலுக்கருகில் வந்து விழுந்தது.

கூஜா தக்காளிப் பழம்போல் நசுங்கியதைக்கூட ரங்கம்மாள் பொருட்படுத்தவில்லை. ரங்கசாமி இருந்த நிலையைப் பார்த்தால் ஏதாவது அடிதடிச் சண்டைதான் நடந்துவிட்டதோ என்ற திகில் உண்டாயிற்று. இப்பொழுது அந்த மனிதரிடம் எவ்விதம் வாய் கொடுப்பது? விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் பொறுமை இல்லை. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்துதான் ரங்கசாமியின் வாயிலிருந்து வார்த்தை வந்தது. ”ஓடு ஓடு என்று விரட்டினாயே என்னை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அந்த வரட்டு ராங்கிப் பயல்! விறைத்துக்கொண்டு போனால் எனக்கா நஷ்டம்?”

ரங்கம்மாள் பேசவில்லை.

”முழு நீளம் எழுதிவிட்டுக் கூஜா வேண்டாமாம்! எப்படி இருக்கிறது கூத்து?”

இதற்குமேல் ரங்கம்மாளால் மௌனமாய் இருக்கமுடியவில்லை.

”ஏன் வேண்டாமாம்? நீங்கள் ஏதாவது சொன்னீர்களா?” என்றாள் விரித்த கண்களோடு.

கோபம் ரங்கம்மாளின் பேரில் பாய்ந்தது.

”எங்கும் இல்லாத ஒரு மாப்பிள்ளை பிடித்தாயே! அதற்கு எல்லாம்தான் சொல்லுவாய் நீயும். ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாக ஓடிப்போய் நிற்கிறானாம் ஒரு மனுஷன்! துரைக்குப் பேசக் கூட பிடிக்கவில்லை. கூட வந்தவனை விட்டுச் சொல்லச் சொல்லுகிறான். கூஜா இப்பொழுது வேண்டாமாம். யாராவது வரும்போது அனுப்ப வேண்டுமாம்! போனதற்கு நல்ல மரியாதை; சரிதானே?”

மேலே பேசுவதற்கு என்ன இருக்கிறது? ரங்கம்மாள் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். ”அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டதா?”

”அந்த அசத்து ஏறி வண்டியில் உட்கார்ந்து விட்டால் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு எனக்கு என்ன வேலை அங்கே? சொல்கிறபடியெல்லாம் ஆடவும் பாடவும் இவன் வைத்த ஆள் போலிருக்கிறது! இனி மேல் ஏதாவது எழுதட்டும், சொல்லுகிறேன். பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கிறேன். மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை! ஜன்மாந்தரக் கடன்!”

இந்த நிகழ்ச்சிகள் நடந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன. ரங்கசாமி மாப்பிள்ளைக்கோ கமலாவுக்கோ கடிதமே முடியவில்லை. எல்லாவற்றையும் விவரமாய்க் கமலாவுக்கு எழுதவும் முடியாது. மாப்பிள்ளையின் கோபம் இன்னும் எப்படி எல்லாம் முறுக்கிக்கொள்ளுமோ என்ற பயம். ஏதோ இரண்டு வார்த்தை ஜாடைமாடையாய் எழுதினாள்.

உண்மையில் ரங்கம்மாள் கூறியதுபோல் அந்தக் கடிதம் கமலா தானாக எழுதவே இல்லை. கணவன் உத்தரவு என்றாலும் எழுதும்பொழுது கை ஓடவில்லை. உள்ளத்தில் துக்கம் குமுறியது. கணவனிடம் நயமாய்ச் சொன்னாள். தான் நேரில் போகும் சமயம் வாங்கிக்கொண்டு வருவதாகவும் சொன்னாள். ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ கோணற் பிடிவாதம். கடிதம் அவள் கையில் எழுதி வாங்கிக்கொள்ளும் வரையில் விடவில்லை.

”கடிதம் நான் எழுதினேன் என்று நினைக்கவே மாட்டார்கள். உங்களுத்தான் பொல்லாப்பு” என்றுகூடக் கணவனை எச்சரித்தாள் கமலா. கோபமோ தாபமோ, கையில் கொடுத்ததை அழகாய் வாங்கிக் கொண்டுவரக்கூடாதோ? அல்லது மரியாதையாகச் சொல்லிப் பேசிவிட்டு வரக்கூடாதா? கணவன் விஷயத்தில் கமலாவுக்குத் தாங்கமாட்டாத குறைதான். பெற்றோருக்கு வரிந்து எழுதினாள். மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். ”என்னைப் பெற்று உங்களுக்குக் கஷ்டமே தவிர எந்த விதத்திலும் சுகம் இல்லை” என்று வருத்தப்பட்டுக்கொண்டு எழுதினாள்.

திடீரென்று அவளுக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம்; ”ராமுவின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். நீயும் வேண்டுமானால் போய்விட்டுவா. இரண்டு வாரம் இருந்து விட்டு அவளுடன் திரும்பி வந்துவிடலாம்” என்றான் ஸ்ரீநிவாசன்.

திடீரென்று கிளம்ப கமலா தயாராக இல்லை. வேண்டாம் என்று சொல்லிவிடலாம். ஆனால் ஊருக்கு வந்து தாய், தகப்பனை ஒரு தடவை பார்த்து நேரில் எல்லாம் சொல்லிவிட்டு வரவேண்டியது அவசியம் என்று பட்டது. யோசிக்கவில்லை; புறப்பட்டுவிட்டாள்.

திடீரென்று வந்தாலும் பெற்றோருக்கு பாரமாகவா இருக்கும்? ரங்கசாமியே மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டார். தந்தையிடம் சொல்லாவிட்டாலும் ரங்கம்மாளிடம் தன் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டினாள் கமலா. தாயும் மகளும் ஓய்வின்றிப் பேசினார்கள்; கண்ணீர் விட்டுப் பேசினார்கள். கண்ணீர் வடித்தால் பெற்ற மனம் சகிக்குமா? தன் மகளை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ரங்கம்மாள், ”அசடே, அழாதே என்ன முழுகிப் போய்விட்டது இப்பொழுது?” என்றாள்.

எல்லாவற்றையும்விட இப்பொழுது கமலாவுக்கு வந்த கடிதந்தான் அவள் மனத்தை அடியோடு உலுக்கிவிட்டது. கடிதம் வந்ததும் ரங்கசாமிக்கு எவ்வளவு கோபம் வந்தது என்பதும் தெரியும். எழுதி இருப்பதைச் சொல்ல கமலாவுக்கு எப்படித் தைரியம் வரும்? உள்ளுக்குள் துக்கமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தன. ”ஈரேழு ஜன்மத்துக்கும் இனிமேல் பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது, பகவானே!” என்று பிரார்த்தித்தாள். ரங்கசாமியிடம் அவ்வளவு பயம் என்றாலும் ரங்கம்மாளிடம் கமலாவுக்குச் சுவாதீனம் அதிகமாக இருந்தது. தாய அல்லவா? ஆயிரம் தப்புகள் உண்டானாலும் அவற்றைப் பொறுத்து அன்பினால் கண்ணீரைத் துடைப்பவள் தாய்! ரங்கம்மாள் தானாகவே கடிதத்தை வாங்கிப் படித்தாள்.

கடிதத்தில்தான் எவ்வளவு அதிகாரம்! சட்டம்! ‘ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் எழுதினால் அவள் மனம் என்ன வேதனைப்படும்? அதைப் பார்த்துப் பெற்றோர் மனம் என்ன பாடுபடும்? இவ்வளவு அறிவில்லாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள்? நாகரிகமும் படிப்புந்தான் எதற்கு?’ என்றெல்லாம் எவ்வளவோ எண்ண அலைகள் அவள் உள்ளத்தில் எழுந்தன. நன்றாய்த் தாறுமாறாகப் பதில் எழுத வேண்டும் என்றே தோன்றியது. ஆயிரம் இருந்தாலும் கமலாவுக்கு அவன் புருஷன், கஷ்டம் சுகம் இரண்டிலும் பங்கெடுத்துக் கொள்ளுபவன். இன்று அடித்தாலும் நாளைக்கு அணைத்தால், அதல்லவா கமலாவுக்குச் சந்தோஷம்? கமலாவைப் பார்த்தாள். தாயின் வாயிலிருந்து என்ன வருமோ என்று ஒதுங்கி ஒடிந்து விழுந்த இளங்கிளைபோல் தலை நிமிராமல் நின்ற அவளை காணப் பொறுக்கவில்லை. இளங்குழந்தையென அவளைத் தழுவி முகத்தை உயர்த்தினாள்.

”பைத்தியமே! கவலைப்படாதே. பேசாமல் இரு” என்றாள். ‘‘சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டுமே, அம்மா!” என்றாள் கமலா. அதில் தான் எவ்வளவு வேதனை!

அந்த கவலை எல்லாம் உனக்கு எதற்கு?”

இவ்வளவு ஆதரவான வார்த்தைகளைத் தாயன்றி உலகத்தில் வேறு யாரால் சொல்லமுடியும்?

”ஓடி ஓடிக் கூஜாவைக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னாயோ, இல்லையோ? அதற்கு வட்டி இது. இப்பொழுதே கடன் தலைக்குமேல் நிற்கிறது. வளை வேண்டுமாம் வளை! பவுன் இவள் அப்பன் வீட்டில் காய்க்கிறது என்று நினைக்கிறானோ? வறட்டுப்பயல்! ஏன், இவன் பண்ணிப் போடுகிறதுதானே ஒரு ஜோடி, அக்கறையாய் இருந்தால்? பிள்ளை இல்லாச் சொத்து பாழாய்ப் போகிறது என்று பார்க்கிறானோ? ஒன்றும் முடியாது. கூஜாவும் கிடையாது. வளையும் செய்து போட முடியாது. இஷ்டம் இருந்தால் பெண்டாட்டியை அழைத்துக் கொள்ளட்டுமே. இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகிறாள் இங்கே. நீங்கள் ஒருத்தரும் எழுதவேண்டாம். நான் எழுதிப் போடுகிறேன். என்ன செய்கிறான், பார்க்கலாம்!” என்று இரைந்தார் ரங்கசாமி.

அவர் மனம் எவ்வளவு தூரம் நொந்து போயிற்று என்பது அவருக்குத்தானே தெரியும்? ஆனாலும் சிறிது யோசித்துப் பேசலாம். குழந்தையின் சுக துக்கங்களை மறந்துவிடலாமா?

”நீங்கள் இப்படி எல்லாம் கன்னாபின்னா என்று பேசாதீர்கள். உங்களுக்கு இருக்கிற கஷ்டத்தில் எனக்கும் பாதி உண்டு. இதற்கு என்ன செய்வதென்று பார்ப்பதா? இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருப்பதா? சொல்லுங்கள்” என்றாள் ரங்கம்மாள்.

Image

”நான்கு பவுன் வாங்கி யாராலே வளையல் செய்யமுடியும் இப்பொழுது? நீயும் பேசுகிறாய்!”

”என்ன செய்கிறது! ஏதாவது ஒரு வழிதான் செய்ய வேண்டும்”.

”ஒரு சல்லி புரட்ட முடியாது. வாங்கிய கடனே இன்னும் அடையவில்லை”.

”நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாமே!”

”பின்னே நீ என்ன சாதித்துவிடப்போகிறாய்? வைத்துக் கொண்டிருக்கிறாயோ கையில் ஆயிரம் ஆயிரமாய்?”

”எதையோ, என் கையில் இருப்பதைச் செய்துவிட்டுப் போகிறேன். ஆயிரம் என்ன, இரண்டாயிரம் என்ன?”

”இந்தா ரங்கு, எதையாவது செய்தாயானால் கெட்ட கோபம் வரும் எனக்கு. அந்த வறட்டுப் பயல் எழுதுகிறானாம்! இவள் செய்யப் போகிறாளாம்! எதையாவது தொட்டாயானால் இனிமேல் இந்த வீட்டு வழி நாடமாட்டேன், பார்த்துக்கொள். கடன்! ஜன்மாந்தரக் கடன்!” என்று சொல்லிவிட்டுத் தெருப்பக்கம் போய் விட்டார் ரங்கசாமி.

ரங்கம்மாள் முணுமுணுத்துக் கொட்ட, மற்றக் குழந்தைகள் மலங்க மலங்க விழிக்க, கமலா கண்ணைப் பிசைய வீடு நிம்மதியற்றுப் போய்விட்டது.

நிம்மதியற்ற குடியில் நோயும் தலைவிரித்தாடிது.

”வேண்டாமடி; எதற்கு இப்படி நட்டுக்கொண்டு கிடக்கிறாய்? அவர் பாட்டில் சொல்லிக்கொண்டு கிடக்கட்டும். காதுங்காதும் வைத்தாற்போல் ஊருக்குப் போய்ச் சேரலாம். ஏன் கவலைப்படுகிறாய்? இப்படி அலட்டிக்கொண்டால் ஏற்கனவே உடம்பு இருக்கிற லட்சணத்திற்கு ஏதாவது படுக்கை போட்டுவிட்டால் என்ன செய்கிறது?” என்று ரங்கம்மாள் எவ்வளவோ சொன்னாள்.

கமலாவுக்கு உலகமே வெறுத்துப்போய் விட்டது போன்ற ஒரு தோற்றம். ஜுரத்தை அவளே வரவேற்றாள். கண்ட ஜுரம் விஷமாய் ஏறிவிட்டது. வைத்தியர் வந்தார்; பார்த்தார். ”விஷ ஜுரம்; ஜாக்கிரதையாகப் பார்க்கவேண்டும்” என்றார். இப்பொழுது யாரைக் கேட்பது? எங்கே போவது? உள்ளுக்கும் வெளிக்குமாய் நடந்தார் ரங்கசாமி. ‘இனி யாரைச் சொல்லி என்ன பயன்? எல்லாம் நம்மால் வந்த வினைதான்’ என்று ஒரே பயங்கர மௌனத்தில் ஆழ்ந்தாள் ரங்கம்மாள்.

கமலா பயப்படவில்லை. கவலையும் படவில்லை. வேதனைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நிம்மதியாகப் போகும் வழியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரே கடமை மட்டும் அவள் நெஞ்சைப் பிளந்தது. ”அப்பாவை அவருக்கு எழுதிவிடச்சொல் அம்மா. நான் பிழைக்கமாட்டேன்” என்றாள். அவள் பேச்சில் படபடப்பு இல்லை. அமைதியே இருந்தது.

ரங்கசாமி எப்படிக் கட்சி கட்ட முடியும? வைத்தியரைக் கேட்டார். மாப்பிள்ளைக்கு எழுதவேண்டிய முறையில் அவசியமானதை எழுதினார்.

ஜுரம் மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஏறியது. ”என்னவோ நாம் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம். ஒன்றும் விடக்கூடாது” என்றார் வைத்தியர். ஜுரம் கண்டு வாரம் இரண்டு ஓடிவிட்டன. தந்தியும் தபாலுமாகப் பறந்து மாப்பிள்ளை வந்து சேர்ந்தான்.

ஒரு நாள் பகல்; நல்ல வெயில். கமலாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெற்றோரின் முகம் வேதனை நீங்கி பளீர் என்று விளங்கியது. கணவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து ஊசிப் போட்டார்.

அவர் சென்றதும், ”அப்பா!” என்று வாய்விட்டுக் கூப்பிட்டாள் கமலா. ரங்கசாமி வந்து அவள படுக்கையில் உட்கார்ந்தார்.

கமலா அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களிலே ஏதோ ஒளி வீசியது தந்தையிடம், இப்போது பயம் இல்லை. ”அப்பா, உங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் படுத்திவிட்டேன். நான் போவதுபற்றி எனக்கு வருத்தமே இல்லை. அவரையும் வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். என் நகைகள் இருக்கின்றன. கடனை அடைத்துவிடுங்கள்” என்றாள். அவ்வளவு தான்; புன்சிரிப்புடன் கண்ணை மூடிவிட்டாள். ”கமலா, கமலா!” என்று ஒரே கூப்பாடு. எல்லாரும் அழக் கிளம்பிவிட்டார்கள்.

”கடன் கடன் என்று வதைத்து எடுத்தீர்கள்; குழந்தை உயிரையே விட்டுவிட்டாள், போங்கள்” என்று அலறினாள் ரங்கம்மாள்.

ரங்கசாமி அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்தார். மாப்பிள்ளையோ வேரற்ற மரம்போல் சாய்ந்து விட்டான் தரையில். இந்த அமர்க்களத்தில் வைத்தியரைப் பற்றி ஒருவருக்கும் தோன்றவில்லை. யார் ஓடினார்களோ என்னவோ, அவர் வந்து அதட்டல் போட்டதுந்தான் அமர்க்களம் சற்று ஓய்ந்தது.

Image

”ஒன்றும் இல்லை. எதற்காக இப்படி அமர்க்களம்? களைப்பினால் கண்ணை மூடி இருக்கிறாள். கண்டம் தப்பிவிட்டது, இனிப் பயமே இல்லை” என்று ஓர் ஊசிப் போட்டார். ”ஒருவரும் சத்தம் போட வேண்டாம். இன்னும் ஒரு மணிநேரத்தில் தானாகக் கண் திறந்து பேசுவாள். மாலை வந்து பார்க்கிறேன்” என்று கிளம்பினார் வைத்தியர்.

”நிஜமாகவா டாக்டர்?” என்று தவித்துப் போய்விட்டாள் ரங்கம்மாள்.

”குழந்தைக்குக் கவலையேதான் டாக்டர் உடம்பு!” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ரங்கசாமி.

ஒவ்வொரு நாளாய் ஓடி ஒரு வாரமும் கழிந்து மாதமும் கழிந்தது. நடந்ததெல்லாம் சொப்பனம்போல் கண்முன் நின்றது. கமலா இளைத்துத் துரும்பாய் இருந்தவள், சற்றுத் தேறி வந்தாள். ஊருக்குப் புறப்படப்போகிறாள். ரங்கம்மாள் தெய்வங்களைத் தொழுது பக்ஷணம் செய்து கொண்டிருந்தாள்.

ரங்கசாமியோ அவசர அவசரமாய்ச் சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார். கமலாவின் பெட்டியில் அவள் சாமான்களை எல்லாம் சரிவர வைத்தபடி, ”ரங்கம், எங்கே, அந்தக் கூஜாவை எடுத்துக்கொண்டு வா இப்படி” என்றார். அவர் கையாலேயே பெட்டியில் அதை வைக்கும்போது ரங்கம்மாளின் உள்ளந்தான் எப்படிக் களித்துக் கொந்தளித்தது, தெரியுமா?

கமலா ஒன்றுக்குமே வாய் திறக்கவில்லை. ரங்கசாமியைக் கண்டு அவள் உள்ளம் உருகியது.

சாப்பாடு முடிந்தது. ரெயிலுக்குப் போக வண்டி வந்து நின்றது வாசலில். வேப்பிலையைக் கமலாவின் தலையில் செருகி நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் ரங்கம்மாள். சாமான்கள் எல்லாம் வண்டியில் ஏற்றியாகிவிட்டன. ரங்கசாமியும் கமலாவும் வண்டியில் ஏறும் சமயம்.

ரங்கசாமி ரங்கம்மாளைப் பார்த்தார்.

”ஏன்? ஏதாவது மறந்துவிட்டீர்களா?”

”இல்லை, இல்லை; கமலாவுக்குக் கையில்”.

”வேண்டாம் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார் அப்பா, இந்த அம்மா” என்று குறுக்கே வந்தாள் கமலா.

”எப்படியோ எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாயே அம்மா! பிழைத்துக்கிடந்தால் இந்த வளைதானா பிரமாதம்?”

கமலா தாயைப் பார்த்தாள். ரங்கம்மாள் ரங்கசாமியைப் பார்த்தாள். என்ன அருமையான வார்த்தை! ரெயிலுக்குப் போகும் வண்டி தெருக்கோடி சென்று மறையும் வரையில் அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நின்றாள் ரங்கம்மாள். ரங்கசாமி சொன்ன வார்த்தைகள் அவள் தேகமெங்கும் பரவி நிம்மதிக் கடலில் அவளை ஆழ்த்தின. ”பெற்ற மனம் என்று இதற்குத்தானே சொல்கிறது உலகம்!” என்று வாய் முணுமுணுத்தது.

ரங்கசாமியின் உள்ளம் மேற்பார்வைக்குப் பாறையாகவே இருந்தது. ஆனால் துன்பம் என்னும் வெடியினால் பிளந்த பிறகு அதனடியிலிருந்துதான் நீருற்று எழுந்தது.

Painting Courtesy: http://2.bp.blogspot.com/

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி