குளிர்
..
நீ…நான்…
பின் நமக்கான குளிர் …
நீயும் நனைய நானும் நனைய
நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து
நடுங்கியது குளிர் ..
மழை குளிரை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில் காதலையும் …
குளிர் உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில் அவஸ்தையாகவும் ..
சிறுமழை, பெருமழை
எதுவும் குளிரை மட்டும்
கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும் சேர்த்தே ..
நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
குளிர் சாரல் …
நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான குளிர்…
குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும் சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும் இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…
.
என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.
வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.
கடவுளின் தேசத்தில் நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும் அந்த மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா மரத்தடியில் உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் .. அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..
குளிர் அதிகமாக இருக்கும் நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?
நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.
குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :
குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.
இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..
.
பனிக்கால பராமரிப்பு:-
இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.
சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.
உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள
பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.
பாதாம்
பாதாம் பருப்பு பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.
தேன்
இந்த குளிர்காலங்களில் தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஒமேகா 3
கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்
இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.
இஞ்சி
அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.
வேர்க்கடலை
குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.
குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.
தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.
வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.
அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.
அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.
மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.
தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.
குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.
தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.
இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.
குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..
நீ…நான்…
பின் நமக்கான குளிர் …
நீயும் நனைய நானும் நனைய
நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து
நடுங்கியது குளிர் ..
மழை குளிரை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில் காதலையும் …
குளிர் உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில் அவஸ்தையாகவும் ..
சிறுமழை , பெருமழை
எதுவும் குளிரை மட்டும்
கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும் சேர்த்தே ..
நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
குளிர் சாரல் …
நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான குளிர்
– ப்ரியா கங்காதரன்