அதிகம் படித்தால் குறைந்த சம்பளம்!

Image

‘‘அதிகம் படித்த பெண்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கும் ஆண்கள் வாங்குவதற்கும் நிச்சயம் அதிக வேறுபாடு இருக்கும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ இப்படிச் சொல்லியிருப்பது யாரோ அல்ல… அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management – Ahmedabad) கல்வி நிறுவனத்தில், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட உறுப்பினர்கள் சொல்கிறார்கள்!

பெண் கல்வி வெகு அழுத்தமாக வலியுறுத்தப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வு சொல்லியிருக்கும் கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகம் படித்திருந்தாலும், பெண் என்கிற காரணத்துக்காகவே சம்பளம் குறைத்துக் கொடுக்கப்படுவதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதிகம் படிக்காத பெண்கள் கூட, ஆண்களுக்கு சமமாகவோ, சில நேரங்களில் அவர்களை விட அதிகமாகவோ சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், படித்திருந்தாலோ நிலைமை தலைகீழ்!

அடிப்படைக் கல்வியோடு கொஞ்சம் கூடுதல் தகுதியோ, டிப்ளமோ படிப்போ படித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு சமமான கல்வித்தகுதி உடைய ஆண்களைவிட 10 சதவிகிதம் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் நிலைமை இவர்களை விட மோசம். தங்களுக்கு சமமான தகுதியுடைய ஆண்களைவிட 40 சதவிகிதம் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை செய்வது, வீட்டைப் பராமரிப்பது, சமைத்துப் போடுவது போன்றவை இந்தியப் பெண்கள் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாமல் செய்யும் மகத்தான வேலைகள். உண்மையில் இவையெல்லாம் விலை மதிப்பிட முடியாத பணிகள். அதுவும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. இந்த உணர்வுபூர்வமான வேலைகள் பெண்களைப் பெரும்பாலும் கட்டிப் போட்டே வைத்திருக்கின்றன. இந்த வேலைகளின் அடிப்படையில் பார்க்கப்படுவதால்தான் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களிலும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் மறுக்கப்படுகிறது. ஆனால், அடிமட்டக் கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக, அடிப்படை கல்விகூட பெறாத பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதே தகுதியுடைய ஆண்கள் சம்பாதிப்பது வருடத்துக்கு சராசரியாக 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்தான்.

ஒரு பெரிய நிறுவனம்… அங்கே முக்கியமான பதவிக்குப் போட்டி. ஆண், பெண் இருவருமே விண்ணப்பம் செய்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்கு முன்பாகவே பெண்கள் வடிகட்டப்படுவதும் இப்படி நடக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். அதே முதுகலைப் பட்டம் பெற்ற ஆணாக இருந்தால், வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். அதாவது சதவிகிதக் கணக்கில் ஆண், பெண்ணை விட 40.76% அதிகமாகப் பெறுகிறார்.

Image

இந்த ஆய்வு வேறொரு கோணத்திலும் பெண்களை அணுகியிருக்கிறது. பொதுவாக, பெண்கள் பயிற்சிகள் அதிகம் தேவைப்படும், நீண்ட நேரம் பணியாற்றும் வேலைகளை விரும்புவதில்லையாம். அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள், திருமணம், தாய்மையடைதல் போன்ற காரணங்களால் சீக்கிரத்திலேயே வேலையை விட்டுவிடுகிறார்களாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, வேலைகளுக்கு இடைவெளி விடுகிறார்கள் அல்லது பகுதி நேர வேலைகளில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநேரமாக வேலைக்கு வரும் பெண்களுக்குக் கிடைப்பது ஆண்களைவிட குறைந்த சம்பளமே!

சரி… தாய்மையடையாத பெண்கள்? அவர்களுக்கும் இதே நிலைமைதான். குழந்தை இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிறப்பாக எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அவர்களை, ‘சீக்கிரமே அம்மாவாகப் போகிறவர்கள்’ என்று முத்திரை குத்தி அடையாளப்படுத்தியிருக்கிறது சமூகம்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மின் ’பேசெக் இந்தியா’ (Paycheck India) என்கிற ஆய்வுப் பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘வேஜ் இண்டிகேட்டர் ஃபவுண்டேஷன் அண்ட் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ம்ஸ்டர்டாம்’ (Wage Indicator Foundation and University of Armsterdam) உதவியிருக்கிறது. இந்தியா முழுக்க இந்த ஆய்வு 21,552 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது… அதுவும் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள்!

ஆய்வு கிடக்கட்டும்… ஆண்களைவிட பெண்கள் எவ்வளவு குறைவாக வருமானம் பெறுகிறார்கள் என்பது நம் மனசாட்சிக்குத் தெரியாதா?

 

Photo Courtesy: http://freeimagescollection.com

http://www.employeerightspost.com/

– பாலு சத்யா