ஆளாவது எப்படியோ?

IMG_2518 IMG_2519 IMG_2517 IMG_2516 IMG_2515 IMG_2512 IMG_2510 IMG_2508 IMG_2506 IMG_2504 IMG_2502 IMG_2501 IMG_2500 IMG_2499 IMG_2498 IMG_2497 IMG_2496 IMG_2494 IMG_2493 IMG_2520 IMG_2492 IMG_2494 Lakshmi Ramaswamy

This slideshow requires JavaScript.

பரதநாட்டியத்தில் பாடல் வரிகளுக்கு அபிநயம் பிடிப்பார்கள். சரி. அபிநயங்கள் மூலமாகப் பேச முடியுமா, பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? நாட்டிய நாடகத்தில் முடியும். அதை, தன் ‘ஆளாவது எப்படியோ?’வின் மூலமாக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் பரத கலைஞர் லட்சுமி ராமசுவாமி. தமிழ் மொழியில் ஆழ்ந்த பற்றும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் கொண்டவர். ஏற்கனவே, ‘நற்றிணை’, ‘புறநானூறு’, ‘ஐங்குறுநூறு’, ‘திருவரங்கக் களம்பகம்’ போன்ற சங்க இலக்கியப் பாடல்களை நாட்டிய நாடகங்களாக ஆவணப்படுத்தியிருப்பவர்.

‘ஆளாவது எப்படியோ?’வின் கதைக் களன் மிகச் சிறியது. பட்டினத்தார், சிவபெருமானிடம் ஒரு பாடலில் கேள்வி கேட்கிறார். ‘வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்…’ என்ற பாடல் அது. ‘சிவபக்தியால், மகனைக் கொன்று பிள்ளைக்கறியை இறைவனுக்குப் படைத்தவர் சிறுதொண்டர். மனைவி சொன்ன வார்த்தைக்காக இளமையையே துறந்தவர் திருநீலகண்டர். சிவலிங்கத்தின் கண்களில் ரத்தம் வடிவதைக் கண்டு பொறுக்காமல் தன் கண்ணையே பறித்தெடுத்துப் படைத்தவர் கண்ணப்ப நாயனார். இவர்கள் அளவுக்கு எந்தத் தொண்டும் செய்யாத நான் எப்படி ஆளாவேன், உன்னை அடைவேன் இறைவா!’ என்கிறார் பட்டினத்தார். இந்தப் பாடல் மிகவும் பாதித்துவிட, லட்சுமி ராமசுவாமி நாட்டிய நாடகமாகப் படைத்துவிட்டார்.

சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்தபோது நடனக்கலைஞர் இந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் பரதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் லட்சுமி. திருமணத்துக்குப் பிறகு சென்னைக்கு வர வேண்டிய அவசியம். ஆனாலும் பரதத்தின் மேல் இருந்த ஆர்வம் அவரை பரதக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அவரிடம் 15 வருட காலம் பரத நாட்டியத்தில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இன்னும் இன்னும் என்கிற அவருக்கான தேடல் அவரை கலாநிதி நாராயணனிடம் கொண்டு போய் நிறுத்தியது. அவரிடம் ‘அபிநயம்’ கற்றுக் கொண்டார். தேடலுக்கும் கற்றலுக்கும் அளவு கிடையாது. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ லட்சுமி ராமசுவாமிக்கு நன்றாகப் பொருந்தும். சிறிது காலம் பிரபல பரதக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்திடம் பரதத்தின் நுட்பங்கள் பயின்றார். டாக்டர் ரகுராமனிடம் தமிழ் இலக்கியம் கற்றார்.

அமெரிக்க அரசு வழங்கிய ‘ஃபுல்பிரைட்’ (Fulbright) ஸ்காலர்ஷிப் இவர் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை. கலை மற்றும் பண்பாடு தொடர்பான இவர் படிப்புக்கு அது உதவியது. ‘‘இப்போது கூட என் நடனப் பள்ளியை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் அது உதவுகிறது’’ என்கிறார் லட்சுமி.

சென்னை பல்கலைக்கழகம் நடனக்கலைக்காகத் தன் கதவைத் திறந்தபோது, முதல் பேட்சில் முதுகலைப் பட்டத்துக்குப் படித்தார். அவ்வப்போது அங்கே கெஸ்ட் லெக்சரராகவும் பணியாற்றி வருகிறார். அவருக்கிருந்த கட்டுக்கடங்காத மொழி ஆர்வம், தமிழ் இலக்கியத்துக்குள் மூழ்கச் செய்து அதில் இருக்கும் முத்துகளை தன் நாட்டிய நிகழ்வுகளுக்கு அவரைப் பயன்படுத்த வைத்திருக்கிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் தந்த ஆதரவில் ‘நற்றிணை’, ‘ஐங்குருநூறு’, ‘திருவரங்கக் கலம்பகம்’, ‘புறநானூறு’ ஆகியவற்றில் இருந்த தமிழ்ப்பாடல்களுக்கு நாட்டிய வடிவம் கொடுத்திருக்கிறார்.

‘ஆளாவது எப்படியோ?’ அது போன்ற ஒரு தாக்கத்தில் உருவானதுதான். ‘‘பட்டினத்தார் சைவ அடியார்களில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவர். அவரே ‘நான் அந்த அளவுக்குத் தியாகம் செய்யவில்லையே என்று இறைவனிடம் முறையிடுவது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அதனால்தான் பட்டினத்தாரின் அந்த பாடலையே மையமாக வைத்து இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கினேன். இதைத் தயாரிப்பதற்கு பண்பாட்டு அமைச்சகம் (Ministry of Culture) உதவி செய்தது. வாழ்க்கையின் மதிப்பு பலருக்குப் புரிவதில்லை. அதை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோமே என்கிற எண்ணம் எனக்கு உண்டு. திரைப்படமும் ஊடகங்களும் இன்று எதை, எதையோ முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அவை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு நம்மைத் தயார்ப்படுத்தும் செயல்கள் மிகவும் குறைவு. ‘ஆளாவது எப்படியோ?’வில் சிறுதொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகியோர் எப்படி தங்கள் சோதனைகளைத் தாங்கினார்கள், எப்படி அதைவிட்டு வெளியே வந்தார்கள் என்பதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற நிகழ்வுகள்தான் இன்றைய அவசியத் தேவை என நினைக்கிறேன்’’ என்கிற லட்சுமி இன்னும் பல ஊர்களில் ‘ஆளாவது எப்படியோ?’வை மேடை ஏற்ற இருக்கிறார்.

இந்த நாட்டிய நாடகத்தில், பட்டினத்தார் பாடலோடு தொடங்கி, மூன்று நாயன்மார்களின் கதையும் காட்சிகளாக விரிகின்றன. பின்னணியில் இசையும் அவ்வப்போது பாடல்களும் ஒலிக்கின்றன. மற்றபடி அபிநயங்களாலேயே காட்சிகள் நகர்த்தப்படுகின்றன. நாட்டியத்தில் பங்கேற்ற அத்தனைபேரும் பெண்கள். கண்களை அப்படி, இப்படி நகர்த்தவிடாமல் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். தூய தமிழ்ப் பாடல்கள்… மனதை உருக்கும் இசை… மிக நேர்த்தியான பாரம்பரிய நடனம்… ‘ஆளாவது எப்படியோ?’ மனதை அள்ளுகிறது.

– பாலு சத்யா

படங்கள்: பரணி