திரைவானின் நட்சத்திரங்கள் – 8

Image

ஆசிட் வீச்சைத் தாங்குமா அழகிய முகம்?

பாகிஸ்தான். பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நாடு. ஆப்கானிஸ்தானோடு பிரச்னை, தீவிரவாதிகள் ஊடுருவல், வெடிவிபத்து, அரசியலில் தடாலடி மாற்றங்கள்… என்று எப்போதும் சர்ச்சைகளுடன் ஒவ்வொருநாள் பொழுதையும் தொடங்கும் பூமி. கடந்த ஆண்டு, இவை, எல்லாவற்றையும் இடது கையால் ஓரம் கட்டிவிட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய் (Sharmeen Obaid Chinoy).

காரணம், இவரும் டேனியல் ஜங் என்கிற அமெரிக்க இயக்குநரும் இணைந்து இயக்கியிருந்த ‘சேவிங் ஃபேஸ்’ (Saving Face) என்ற ஆவணப் படத்துக்கு, சிறந்த டாகுமென்டரிக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. அதோடு, பாகிஸ்தானிலிருந்து முதன்முதலாக ஆஸ்கர் விருது பெறுபவர் என்கிற பெருமையையும் தட்டிக்கொண்டு போயிருந்தார் இவர். இத்தனைக்கும் ஒரு வெடிவிபத்தில் ஏழு பேர் பலியாகி, முதலமைச்சர் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவமும் அன்றைக்கு நடந்திருந்தது. ஆனாலும், ஷர்மீன் ஓபெய்ட் சினாய் தலைப்புச் செய்திகளில்…

Image

ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்கள்தான் இந்த டாகுமென்டரியின் முக்கிய களம். ரக்‌ஷனா, ஜாகியா இருவரும் அப்படி ஒரு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அந்தப் பெண்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது அந்த நிகழ்வு. அவர்களுக்கு சிகிச்சை தருவதற்காக லண்டனில் இருந்து பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரான டாக்டர். முகமது ஜாவத் என்பவர் வருகிறார். அவருடைய பயணத்தையும் அவரிடம் சிகிச்சை பெறும் பெண்களையும் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளோடு நகர்கிறது படம்.

வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆசிட் வீச்சுக்கு ஆளாவது பாகிஸ்தானில் தொடர்கதையாகிப் போன ஒரு நிகழ்வு. அவர்களில் பலர் அற்பக் காரணங்களுக்காகவும், காரணமே இல்லாமலும்கூட அந்தக் கொடுமைக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான பிரச்னையை ஆவணப்படுத்தவேண்டும் என்று நினைத்ததற்காகவே ஓபெய்ட் சினாயை மனதாரப் பாராட்டலாம். பாகிஸ்தானில் இருந்துகொண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்னையை ஆவணப்படமாக எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் அதுகூட அவருக்குப் பிரச்னை இல்லை. ஓபெய்ட் சினாய் வேறுவிதமான சிக்கல்களை அனுபவிக்கவேண்டி இருந்தது.

“படப்பிடிப்பின் போது, நானோ எங்கள் குழுவில் இருப்பவர்களோ உடல்ரீதியான எந்த அபாயத்தையும் எதிர்கொள்ளவில்லை. யாரும் எங்களுக்கு எதிராக உரத்த சத்தத்தைக்கூட எழுப்பவில்லை. ஆனால், இதுபோன்ற உச்சகட்ட வன்முறையைக்கூட சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிற மக்களின் மனநிலையை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருந்தது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் ஷூட்டிங்குக்குப் போன இடம் செராய்க்கி பெல்ட் (Seraiki Belt) என்கிற ஊர். பருத்தி விளையும் பூமி. பாகிஸ்தானிலேயே மிகக் குறைந்த படிப்பும், மிக அதிகமான அளவில் வறுமையும் தாண்டவமாடும் பகுதி. அந்த மக்களோடு பணியாற்றுவதுதான் சிரமமான காரியமாக இருந்தது. ‘பாகிஸ்தானி’ என்கிற முறையில், ஓர் ஆண், சகல உரிமைகளையும் அனுபவிக்கிறான். இஷ்டத்துக்கு வாழ்கிறான். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பெண்களின் பிரச்னையைப் புரிய வைப்பது கடினம்’’ என்று ஆஸ்கருக்கு நாமினேஷன் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டிருந்தார் அவர்.

****

Image

ஓபெய்ட் சினாய், 1978ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார். நன்றாக உருது பேசத் தெரிந்த, உருது மொழியிலேயே ஊறிய குடும்பம்.  பள்ளிப் படிப்பை கராச்சியில் முடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள ஸ்மித் காலேஜில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். இன்டர்நேஷனல் பாலிஸி ஸ்டடீஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அவர் இந்தத் துறையில் ஈடுபடுவதற்குக் காரணமே ஒரு சோகமான கதை! அப்போது பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தார் ஓபெய்ட் சினாய். பாகிஸ்தானில் வாழும் ஆப்கன் அகதிக் குழந்தைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. நேரில் போனார். பல குழந்தைகளைப் பார்த்தார். அவர்களுடைய கொடுமையான வாழ்க்கைக் கதைகளைக் கேட்டதும் நொந்துபோனார். ‘இதை வெறும் கட்டுரையோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆவணப்படமாக எடுத்தால் உலகம் முழுக்கக் கொண்டு போகலாமே!’ என்கிற எண்ணம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. கட்டுரை முயற்சியை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்தார்.

வந்தவர் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கவில்லை. ‘ஸ்மித் காலேஜு’க்கும், ‘நியூ யார்க்ஸ் டைம்ஸ் டெலிவிஷன் டிவிஷனு’க்கும் முதல் காரியமாக ஒரு அப்ளிகேஷன் போட்டார்.  தன்னுடைய ப்ராஜக்டுக்கு நிதி உதவி கோரினார். அவர் அனுப்பியிருந்த உருக்கமான கடிதத்தைப் பரிசீலித்த இரண்டு அமைப்புகளுமே அவருக்கு நிதி உதவி தருவதற்கு ஒப்புக்கொண்டன. அதோடு, அவர் ஆவணப்படம் எடுப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் பயிற்சியையும் கொடுத்தன. இப்படி ஆரம்பித்த அவருடைய பயணத்துக்குப் பலன் இல்லாமலும் போகவில்லை.

‘டெரர்ஸ் சில்ட்ரன்’ என்கிற பெயரில் அவர் எடுத்த ஆவணப்படம்  பரவலாகப் பேசப்பட்டது. ‘ஓவர்சீஸ் பிரஸ் கிளப் விருது’, ‘அமெரிக்கன் வுமன் அண்ட் ரேடியோ அண்ட் டெலிவிஷன் விருது’, ‘சவுத் ஏஷியன் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் விருது’ என்று மூன்று விருதுகளைப் பெற்றுவிட்டது அந்தப் படம். மொத்தம் 16 ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய். பல உலகப் படவிழாக்களில் அவர் படங்கள் பங்கேற்றன. விதவிதமான விருதுகளை வாங்கிக் குவித்தன. அவற்றில் ஒன்று ‘எம்மி’ விருது.

கிட்டத்தட்ட ஆஸ்கர் விருதுக்கு சமமாகக் கருதப்படும் எம்மி விருது, தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்படும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படுவது. ‘பாகிஸ்தான்: சில்ட்ரன் ஆஃப் தலிபான்’ என்கிற டாகுமென்டரி படத்துக்காக ஓபெய்ட் சினாய்க்கு எம்மி விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் தலிபான் அமைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்கள், அவர்களுடைய மனநிலை, வாழ்வாதாரமே ஆட்டம் காணும் சூழ்நிலை என எல்லாவற்றையும் அழகாக அந்தப் படத்தில் சித்தரித்திருந்தார் ஓபெய்ட் சினாய்.

Image

ஆஸ்கர் விருது பெற்ற பிறகும் கூட அடுத்த களப்பணி என்ன என்பதிலேயே அவருடைய எண்ணம் எல்லாம் இருந்தது. ஆஸ்கர் விருது பெற்றது குறித்து அவர் பத்திரிகையில் பேட்டி அளித்தபோது குறிப்பிட்டது, அவர் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “இந்த விழாவில் நம்முடன் இருக்கும் டாக்டர் முகமது ஜாவத்திலிருந்து, பாகிஸ்தானில் என்னுடன் பணியாற்றிய அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இது போன்ற பெண்களுக்கு சிகிச்சை தருவதுதான் டாக்டர் முகமது ஜாவத்தின் முக்கியப் பணி. இந்தப் படத்தின் முக்கியமான அங்கமாக இருந்தவர்கள் ரக்ஸனாவும் ஜாகியாவும். அந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தப் படத்தில் பணியாற்றிய தைரியத்தையும் வேதனையையும் ஈடுபாட்டையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒரு மாற்றத்துக்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் பெண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்களுடைய கனவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். இந்த விருது உங்களுக்காக’’.

ஆஸ்கர் விருது கிடைத்த அன்று டிவிட்டரில் பதிவு எழுதிய ஓபெய்ட் சினாய் இப்படி எழுதினார்: “பாகிஸ்தானின் பிரதிநிதியாக பெருமைக்குரிய ஓர் உலக மேடையில் நான் ஏறியதற்காகப் பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. வெற்றி, தோல்வியைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நான் திரும்ப வருவேன்.”

உலகம் முழுக்க இருந்து ஓபெய்ட் சினாய்க்கு பாராட்டுகள் குவிந்தன. ஆஸ்கர் விருது பெற்ற பிறகு, பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், இணையதளங்களிலும் ‘சேவிங் ஃபேஸ்’ பற்றிய பேச்சுத்தான். பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர், ‘ஜாகித் சுல்ஃபிகார் அலி பூட்டோ இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’யில் ஃபேகல்டி உறுப்பினர், ‘தி சிட்டிஸன்ஸ் ஆர்ச்சிவ் ஆஃப் பாகிஸ்தான்’ அமைப்பின் தலைவர் போன்ற பல பதவிகளோடு மகுடமாக இந்த ஆஸ்கர் விருதும் அவருக்குச் சேர்ந்திருந்தது.

****

‘சேவிங் ஃபேஸ்’ ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றும் ஓபெய்ட் சினாய்க்கு நடந்தது. அதில் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக நடித்த ரக்ஸனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரக்ஸனா தன் குழந்தைக்குப் பெயர் சூட்டினார். பெயர்: முகமது ஜாவத். பல பேர் ரக்ஸனாவிடம், “குழந்தையின் அப்பா பெயரையே வைத்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

அதற்கு ரக்ஸனா சொன்னார்: “என் பையன் வளரும்போது டாக்டர். ஜாவத் மட்டும்தான் அவனுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டும். அவன் அப்பாவாக இருக்கக்கூடாது. ஏனென்றால், என் முகம் இப்படி ஆனதற்குக் காரணமே அவன் அப்பாதான்.”

****

Image

காய்த்த மரம் கல்லடி படும். இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஓபெய்ட் சினாய்க்கு மிகப் பொருத்தம். எந்தப் பெண்ணை முன்னிலைப்படுத்தி ஆவணப்படம் எடுத்தாரோ, அந்தப் பெண்ணே எதிராகக் கிளம்பினார். ரக்ஸனா வழக்குப் போட்டார். ‘‘இந்தப் படத்தில் நடித்தால் எனக்குப் பணமும், குடியிருக்கப் புது வீடும், என் முகத்தை மாற்றியமைக்க பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து தருவதாக உறுதி அளித்தார் ஓபெய்ட் சினாய்’’ என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். கோர்ட்டில் தன் கணவன் தன்னை விட்டுப் போய்விட்டதாகவும், தான் சார்ந்திருந்த மொத்த சமூகமே தன்னை ஒதுக்கிவிட்டதாகவும் முறையிட்டார். ஓபெய்ட் சினாய், தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை கடுமையாக ஆட்சேபித்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ரக்ஸனாவை பின்னால் இருந்து இயக்குவது ஜாவத் என்கிற உண்மை. வெறுத்துப் போனார். மனதளவில் புழுக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் அவர் மீது சுமத்தப்பட்ட கறையைப் போக்க வழி பிறக்கவில்லை. ரக்ஸனாவும் ‘ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிர் பிழைத்தோர் அமைப்பு’ம் (The Acid Survivors Foundation) இணைந்து வழக்குப் போட்டன. ‘சேவிங் ஃபேஸ்’ படத்தை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது. அதனால் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்கள் திரும்பவும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. தலை வணங்கி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார் ஓபெய்ட் சினாய். அவரைப் பொறுத்தவரை இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு. போதும்!

ஆனால், அவர் பயணம் நிற்கவில்லை. சமூகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், சாமான்யர்கள் என்று தேடித்தேடி பல மறைக்கப்பட்ட பக்கங்களை ஆவணப்படுத்தினார். அவர் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும் என்றுதான் தோன்றுகிறது.

– பாலு சத்யா

****

Obaid-Chinoy
Born 12 November 1978
KarachiPakistan
Residence KarachiPakistan
Nationality Pakistani
Occupation Documentary filmmaker
Known for Saving Face (2012)
Pakistan’s Taliban Generation/ Children of the Taliban (2009)
Afghanistan Unveiled/Lifting the Veil (2007)
Iraq: The Lost Generation (2008)
First Pakistani to win an Oscar.
Religion Islam
Website
Official website

திரைவானின் நட்சத்திரங்கள் – 7

Image

இரும்புப் பெண்மணி!

மெரில் ஸ்ட்ரீப். “இந்தப் பெயர் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை. பேசாமல் ‘விருது மங்கை’ என்று மாற்றி வைத்துக்கொள்ளலாம்” என்று அவர் காதுபடவே முணுமுணுத்தவர்கள் ஏராளம். இது போல எந்தப் பேச்சைக் கேட்க நேர்ந்தாலும், தன் ‘பளிச்’ புன்னகையை உதிர்த்துவிட்டு, பேசாமல் நகர்ந்து போய்விடுவார் மெரில் ஸ்ட்ரீப் (Meryl Streep).

பின்னே! 17 முறை ஆஸ்கர் விருதுக்காக இவர் பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்றுக்கு விருது. 27 முறை கோல்டன் குளோப் விருதுக்காக இவர் பெயரில் நாமினேஷன். அவற்றில் எட்டுக்கு விருது. மேலும், இரண்டு எம்மி விருதுகள், ஐந்து முறை கிராம்மி விருதுக்காக நாமினேஷன் செய்யப்பட்டவர், கேன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதை ஒரு முறை பெற்றவர்… இப்படி பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலகில், வேறு எந்த நடிகரும், நடிகையும் எட்ட முடியாத உயரத்தை அலட்சியமாகக் கடந்து அடைந்தவர். பல நடிகர்கள் பெற்ற ரெகார்டுகளை உடைத்தவர். இதற்கெல்லாம் அடிப்படை, அவருடைய உழைப்பு, உறுதி, தொழில்பக்தி.

கடந்த 2012ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடித்ததற்காக மெரில் ஸ்ட்ரீப்புக்கு கிடைத்தது. அதில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ‘மார்கரெட் தாட்சர்.’ ‘இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி’ என்று போற்றப்படும் மார்கரெட் தாட்சர், இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர். தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர். ‘அயர்ன் லேடி’ படத்தில் கிட்டத்தட்ட மார்கரெட் தாட்சராகவே மாறியிருந்தார் மெரில் ஸ்ட்ரீப். அந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்புத்தான் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது.

Image

1949, ஜூன் 22. அமெரிக்காவில், நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள சம்மிட் என்கிற இடத்தில் பிறந்தார் ஸ்ட்ரீப். அம்மா மேரி வோல்ஃப் ஓவியர். அப்பா ஒரு மருந்து கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ். ‘டேனா டேவிட்’, ‘மூன்றாம் ஹாரி வில்லியம்’ என்று இரண்டு சகோதரர்கள். பாரம்பரியப் பெருமை உள்ள குடும்பம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த பரம்பரை. மெரிஸ் ஸ்ட்ரீப்பின் அம்மாவும் அயர்லாந்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அமெரிக்காவில் பென்சில்வேனியாவை உருவாக்கிய வில்லியம் பென்னுக்கு ஸ்ட்ரீப் குடும்பத்துக்கு தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் சொல்வார்கள்.

நியூ ஜெர்சியில் இருக்கும் பெர்னார்ட்ஸ் வில்லியில் வளர்ந்தார் ஸ்ட்ரீப். அவருக்கு நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவர் சென்று சேர்ந்த இடம் நியூ யார்க்கில் இருக்கும் வாஸ்ஸர் காலேஜ். அங்கே அவருக்கு நடிப்பின் முக்கியமான நுட்பங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. கூடவே, அப்போது புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகை ஜீன் ஆர்தரிடம் விளக்கமாக நடிப்பைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.

நாடகத்தில் பி.ஏ. முடித்தார் ஸ்ட்ரீப். அத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிடாமல் ‘யேல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் சேர்ந்து, நாடகத்தில் எம்.எஃப்.ஏ. பட்டமும் பெற்றார். யேலில் படித்தபோது அவர் நிறைய நாடகங்களில், விதவிதமான பாத்திரங்களில் நடித்தார். அந்த அனுபவங்கள்தான் அவருடைய நடிப்புத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றின.

Image

நடிகைகளுக்கே உண்டான வாழ்க்கை பிரச்னைகள் அவரையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்ப கால வாழ்க்கையில் அவ்வளவு வேதனைகளை சந்தித்தார். யேல் (Yale) கல்லூரியில் இருந்து வெளி வந்தபிறகு, பல மேடை நாடகங்களில் நடித்தார். நாடகங்களுக்கேயான ‘பிராட்வே’ அவரை அரவணைத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஸ்டார் அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. அந்தச் சமயத்தில் அறிமுகமானவர்தான் ஜான் கேஸேல் (John Cazale). அறிமுகம், நட்பானது. நட்பு காதலாக மாறியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கேஸேலோடு சேர்ந்து வாழ்ந்தார் ஸ்ட்ரீப்.

நடிப்புத் துறையில் பலருடைய அலட்சியத்தையும் அவமானத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு படத்தின் ஆடிஷனுக்காகப் போயிருந்தார் ஸ்ட்ரீப். அது புகழ்பெற்ற ‘கிங் காங்’ திரைப்படம். அதன் தயாரிப்பாளரான டினோ டே லாரன்டீஸுக்கு (Dino De Laurentis) என்ன காரணமோ, ஸ்ட்ரீப்பைப் பிடிக்கவில்லை. தன் மகனை அழைத்தார். ஸ்ட்ரீப்புக்கு இத்தாலி தெரியாது என்ற நினைப்பில் அந்த மொழியிலேயே மகனைத் திட்டித் தீர்த்தார். “இவளைப் பாக்கவே அருவெறுப்பா இருக்கு. எதுக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்தே?” இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ட்ரீப் நிதானத்தை இழக்கவில்லை. மிக மென்மையான குரலில், தெளிவான இத்தாலியில் டினோவுக்கு பதில் சொல்லிவிட்டு வெளியேறினார். 

நடிப்பு… இதுதான் வாழ்க்கை என்கிற தீர்மானம் அழுத்தமாக அவருக்குள் விழுந்திருந்தது. சின்ன கதாபாத்திரமோ, கதாநாயகி வேடமோ நிறைவாகச் செய்ய வேண்டும் என்கிற உறுதி அவருக்குள் இருந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வது போல் பாத்திரமாக மாறும் கலை மெல்ல மெல்ல அவருக்கு வசப்பட ஆரம்பித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டன் செகாவ், பெர்டோல்ட் பெர்க்ட் நாடகங்களில் எல்லாம் நடித்தார். 1976ல் ‘சிறந்த நாடக நடிகை’க்கான ‘டோனி விருதை’யும் பெற்றார். இது போல மேலும் சில விருதுகளும் நாடகத்தில் நடித்ததற்காக அவருக்குக் கிடைத்தன.

ஸ்ட்ரீப் நடித்த முதல் படம், ‘ஜூலியா.’  ஒருவழியாக 1977ல் வெளியானது. மிகச் சிறிய பாத்திரம். ஆனாலும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருந்தார். நியூ யார்க்கில் தன் காதலன் கேஸேலோடு தங்கிக்கொண்டே வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். கேஸேலுக்கு எலும்பு கேன்ஸர். உடம்பு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கேஸேல் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய சூழல். ‘தி டீர் ஹன்ட்டர்’ என்பது படத்தின் பெயர். அந்தப் படத்தில் நடிக்க ஸ்ட்ரீப்புக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காரணம், அவர் சிறந்த நடிகை என்பதற்காக அல்ல; அதில் கேஸேல் நடிக்கிறாரே! அதற்காக.

பிறகு, ‘ஹோலோகாஸ்ட்’ என்கிற ஒரு சிறிய தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு. பிடிக்கவே இல்லையென்றாலும் நடித்தே ஆகவேண்டிய சூழல். காரணம் பணம். அது ஸ்ட்ரிப்புக்கும் கேஸேலுக்கும் வாழ்வாதாரத்துக்கு மிகவும் தேவையாக இருந்தது.

ஒரே இடத்தில் தங்கியிருந்தால், தேங்கிப் போய்விடுவோம் என்று நினைத்தார் ஸ்ட்ரீப். கேஸேலை தனியாக விட்டுவிட்டு, ஆஸ்திரியா, ஜெர்மனிக்கெல்லாம் நடிப்பு வாய்ப்புத் தேடிப் போனார். பிரமாதமாக ஒன்றும் அமையவில்லை. திரும்பி வந்தபோது கவலைக்கிடமான நிலையில் இருந்தார் கேஸேல். 1978, மார்ச் 12ம் தேதி கேஸேல் மறைந்தார். அவர் மரணத்தைத் தழுவும் வரைக்கும், கூடவே இருந்து ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வது போலப் பார்த்துக்கொண்டார் ஸ்ட்ரீப்.

கேஸேல் இறந்த பிறகு, ஸ்ட்ரீப் தன் கவனம் முழுவதையும் நடிப்பில் திருப்பினார். ‘ஹோலோகாஸ்ட்’ அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் நடித்ததற்காக சில விருதுகளும் அவரைத் தேடி வந்தன. அவற்றுள் ஒன்று, பிரைம் டைம் எம்மி விருது. அதே சமயம், ‘தி டீர் ஹன்ட்டர்’ ரிலீஸானது. அதில் சிறப்பாக நடித்திருந்ததற்காக, ஸ்ட்ரீப்பின் பெயர், சிறந்த துணை நடிகை பரிசுக்காக ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்குப் பிறகும்கூட வாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. துணைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புத்தான் ஸ்ட்ரீப்புக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்படித்தான் ‘மன்ஹாட்டன்’ படத்தில் வுட்டி ஆலனோடு சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இயக்குநர், ஸ்ட்ரீப்பிடம் ‘நீங்களாக எதுவும் செய்யக்கூடாது’ என்றார். சொல்லிக் கொடுக்கிற வசனத்தைத் தாண்டி ஒரு துணையெழுத்துக்கூட வாயிலிருந்து வரக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பல்லைக் கடித்துக்கொண்டு நடித்தார் ஸ்ட்ரீப்.

‘க்ராமர் வெஸர்ஸ் க்ராமர்’ (Kramer Vs Kramer) படத்திலும் அவருக்குத் துணை நடிகை வேடம்தான். ஆனால், அங்கே முழுச் சுதந்திரம் கிடைத்தது. அவருக்காக ஸ்கிரிப்டையே மாற்றி எழுதினார் இயக்குநர். ஒரு சராசரிப் பெண்மணி கதாபாத்திரம். அந்தப் பெண் வீட்டில் எப்படி இருப்பார், என்ன செய்வார், எப்படியெல்லாம் மற்றவர்களோடு நடந்து கொள்வார் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடிவு செய்தார் ஸ்ட்ரீப். காரணம் படிப்பும் நடிப்பும் அவரை வீட்டிலிருந்து தள்ளியே வைத்திருந்தன. அம்மாவுடன் வீட்டிலேயே நாள் கணக்கில் செலவழித்தார். அம்மா எப்படி வீட்டு வேலைகளைச் செய்கிறார், எல்லோருடனும் எப்படியெல்லாம் பழகுகிறார் என்று கவனித்தார். சிலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அம்மாவில் ஆழ்ந்து போனார். கற்றுக் கொண்டதை தன் நடிப்பில் கொண்டு வந்தார் ஸ்ட்ரீப். அவருடைய உழைப்புக்குப் பலன்… சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகள்… அவற்றில் கோல்டன் க்ளோப் அவார்டும், ஆஸ்கர் விருதும் அடக்கம்.

Image

அதற்குப் பிறகு, வாழ்க்கை முழுக்க வேகம்தான். ‘பிரெஞ்ச் லெப்டினெண்ட்ஸ் வுமன்’ படத்தில் பிரதானமான பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த ஒன்று மட்டுமல்ல… அன்றிலிருந்து இன்றுவரை அவர் நடித்ததெல்லாமே பிரதான கதாபாத்திரங்கள்தான். பார்ப்பவர்களை பிரமிக்க வைத்த பாத்திரங்கள். தேர்ந்தெடுத்து, கதை கேட்டு, அதை உள்வாங்கி அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்திய பாத்திரங்கள். ‘என்ன பிரமாதமான நடிப்புப்பா!’ என்று ‘அட!’ போட வைத்த அற்புதங்கள் அவை!

1978ல் டன் கம்மர் என்கிற சிற்பியைத் திருமணம் செய்து கொண்டார். நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் இருவர் அம்மாவைப் போலவே நடிகைகள். ஒருவர் இசையமைப்பாளர்.

மதம் தொடர்பான பல பாத்திரங்களில் நடித்திருந்தார் ஸ்ட்ரீப். அது தொடர்பான ஒரு கேள்விக்கு இப்படி பதிலும் சொல்லியிருந்தார்… ‘‘நான் எந்த மதக் கொள்கையையும் பின்பற்றுபவள் அல்ல. நான் எந்த சர்ச்சையோ, கோயிலையோ, ஆசிரமத்தையோ சார்ந்தவளும் அல்ல. நான் எப்போதும் நம்பிக்கையில் ஆர்வம் வைத்திருக்கிறேன். ஏனென்றால், மதங்களின் மொத்தக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது அமைதி. அதைத் தருவது நம்பிக்கை’’.

அறுபதைத் தாண்டிய வயதில் இன்னும் வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ஸ்ட்ரீப். அவரைப் பொறுத்தவரை வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை. 2013 டிசம்பரில் வெளி வர இருக்கும் ‘ஆகஸ்ட்: ஓசேஜ் கவுண்டி’ படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று ஆவலோடு ஒரு சிறுமியைப் போலக் காத்திருக்கிறார். கடைசியாக 2012ல் வெளி வந்த ‘ஹோப் ஸ்ப்ரிங்ஸ்’ படத்தில் நடித்ததற்காக ஒரு விருதையும் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில், “விருதுகள், திரைப்படங்களில் நான் பார்த்த வேலைக்கு அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருபவையாக இருக்கின்றன. அது எனக்குப் பரவசத்தைத் தருகிறது. உலகத்தின் உயரமான இடத்தில் நான் இருப்பதாக என்னை உணரச் செய்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரைப் போலவே, உலகெங்கும் இருக்கும் எத்தனையோ சினிமா விமர்சகர்களும் “இவங்க இன்னும் எத்தனை விருது வாங்குவாங்கப்பா?“ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை மார்கரெட் தாட்சரோ, சாதாரண குடும்பப் பெண்மணியோ அவர்கள் பேசுவதைப் போலவே பேசுவதும், அவர்களைப் போலவே ஸ்ட்ரீப் மாறுவதும்தான். இது எப்படி சாத்தியம்? இந்தக் கேள்விக்கு அவர் சொல்லும் பதில்… ‘‘நான் கவனிக்கிறேன்.’’  

– பாலு சத்யா 

Meryl Streep
Born June 22, 1949 (age 64)[1]
SummitNew Jersey, U.S.
Alma mater Vassar College
Yale School of Drama
Occupation Actress
Years active 1971–present
Title Doctor of Fine Arts (honorary) of Princeton University
Spouse(s) Don Gummer
(1978–present)
Partner(s) John Cazale
(1976–1978, his death)
Children Henry Wolfe Gummer
Mamie Gummer
Grace Gummer
Louisa Gummer