பிரெஞ்ச் மொழியில் தமிழ்க் கவிதைகள்!

Image

ழத்தமிழ்க் கவிதைகள் பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘Le messager de I’hiver’ [ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்] என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா கடந்த ஜூன் 3 அன்று, செவ்வாய்க்கிழமை பாரீஸ் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்றரங்கில் எளிமையாக, அதே நேரம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ், பிரெஞ்ச் என இரண்டு மொழிகளிலும் கவிதைகள் இடம் பெற்றிருக்கும் இந்நூலில் புலம்பெயர்ந்து ஃபிரான்சில் வாழும் கி.பி.அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்ச் உயர்கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத்தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை ‘றிவநெவ்’ (RIVENEUVe) என்ற பிரெஞ்ச் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தநூலின் அட்டைப்படத்தை தமிழ்நாட்டின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவரான ஓவியர் மருது வரைந்திருக்கிறார்.

Image

இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் பற்றி மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் அவர்களுடன் உரையாடினோம். அவர் தெரிவித்த கருத்துகள்…

உங்களுக்கு ஈழத்தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படித் தோன்றியது? அதற்கான செயலில் இறங்க உந்திய காரணிகள் என்னென்ன?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக பாரீஸ் பல்கலைக்கழகம்-8ல், தமிழ்மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றிய இளநிலை முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுகப் பாடத்தை நடத்தி வருகின்றேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகள் உள்ளன. முதலாவதாக, தமிழ் இலக்கியத் தரவுகளை மையமாக / கருப்பொருளாகக் கொண்டு மொழிப்பண்பாட்டை படிப்பித்தல். இரண்டாவதாக, புலம்பெயர் தமிழரின் மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல்.

இலக்கியத் தரவுகள் மூலம் மொழியையும் பண்பாட்டையும் பயிற்றுவித்தலில் (பயிற்றுமுறை) மொழிபெயர்ப்பு (Pedagogical translation) அத்தியாவசியமான கருவியாகும். மேலும், புலம்பெயர் இலக்கியத் தரவுகள் இல்லாமல் புலம்பெயர்த் தமிழர் பற்றிய ஆய்வு மேற்கொள்ள முடியாது. இந்த இரண்டு அடிப்படைக் காரணங்களும், என்னுடைய பாடத்திட்டத்தின்கண் பலதமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பட்டறைகளை திட்டமிட்டு நடத்த வழிவகுத்தன. இப்பட்டறைகளில் கலந்துகொண்டோரில் 95 விழுக்காடு யாழ்ப்பாணத் தமிழ்மக்களே.

Image

இக்காலகட்டத்தில், 1980-2000களில் பாரீஸில் யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப்பணி மிக்க உச்சகட்டத்தில் இருந்தது. இச்சூழ்நிலையில் என்னுடைய ஆராய்ச்சிப்பணி குறித்து கி.பி.அரவிந்தன் போன்ற சில எழுத்தாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. கி.பி.அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்தபட்டறைகளிலும் மேலும் என்னுடைய பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழி, பண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சிக்காகவும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களே கி.பி.அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்க்க வித்திட்டன.

புலம்பெயர்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

புலம்பெயர்ச் சூழலில், மூன்றாவது தலைமுறைக்குப் பின், முன்னோர் மொழியை தக்கவைத்துக் கொள்வது என்பது படிப்படியாகக் குறைந்து ஒருகாலகட்டத்தில் மறைந்துவிடும் என்பது ஒரு கண்டறிந்த கருத்து. இவ்வாறன மொழி, பண்பாட்டு இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக புலம்பெயர்ச் சமுதாயங்கள் பல யுக்திகளை கையாளுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் மொழிபெயர்ப்பு முயற்சியும். ஆனால், மற்ற முயற்சிகளோடு ஒப்பிடும்போது மொழிபெயர்ப்பு சிறிது சிக்கலானது. இருமொழியப் பண்பாட்டினை உள்வாங்கி செயல்பட வேண்டியுள்ளதால், பல புலம்பெயர்ச் சூழல்களுள் இருமொழியத் தேர்ச்சி பெறும் முன்பே மூதாதையர் மொழிப்பண்பாட்டு இழப்பு காலூன்றிவிடுகின்றது. தமிழ்மொழி இலக்கியங்களை பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற தாங்கள் வாழுகின்ற பகுதியின் முக்கியமான மொழிகளில் மொழிபெயர்ப்பது பின்வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் கருத்தில் கொள்ளவேண்டும். 1960-70களில் மலேசியத் தமிழரிடையே தமிழ்மொழிப் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் மற்றும் மொழி உணர்வு ஏற்படுவதற்கும் தமிழ் ஆங்கில இருமொழியில் தேர்ச்சியும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் வித்திட்ட நிகழ்வை சிறந்த முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பின் போது தாங்கள் எதிர்கொண்ட சவால்களை கூறுவீர்களா?

முதலில், இம்மொழிபெயர்ப்பு ஒருகூட்டுப்பணி, பலருடைய ஒத்துழைப்பின் பலனாகத்தான் செயல்படுத்தி முடிக்க முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பே நடந்தேறியுள்ளன. இந்த, எங்களுடைய முயற்சி புதிதல்ல.ஆனால், நோக்கம்தான் சிறிது வேறுபட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு தமிழ் இளையதலைமுறையினருக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய இலக்கு. அடுத்து, அரவிந்தனின் கவிதைகள் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தவை. மொழிபெயர்ப்பில் சவால்கள் ஏற்படுவது புதிதல்ல,ஆனால், எல்லோரும் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் எல்லாம் எங்களுடைய இந்த இலக்குகளையும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை வகையையும் சார்ந்ததே. அரவிந்தன் மூன்று கவிதைத் தொகுப்புகளில் தொண்ணூறு கவிதைகளை வெளியிட்டுள்ளார். முதலாவதாக எதிர்கொண்ட கேள்வி, இத்தொண்ணூறு கவிதைகளில் எத்தனைக் கவிதைகளை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்பதுதான். எங்களுடைய இரு இலக்குகளையும் திருப்திப்படுத்த வேண்டும். அதே வேளையில் கவிஞரின் உள்ளக் கிடக்கைகளையும் / எண்ணங்களையும் பண்பாட்டு தாக்கங்களை, குறுக்கீடுகளைத் தாண்டி பொருள் மயக்கமின்றி மொழிமாற்றம் செய்ய வேண்டும். நானே தனித்து பல முறையும் திரு அரவிந்தனுடன் கலந்து பலமுறையும் ஒவ்வொரு கவிதையாகப் படித்து பரிசீலனை செய்து பண்பாட்டுப் புரிதல்களில் சிக்கல் இல்லாத அல்லது சிக்கல்கள் மிகக்குறைவாக உள்ள கவிதைகளை முதலில் தெரிந்தெடுத்தோம். பின்னர் அவற்றுள் பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட சாதியம் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை மொழிமாற்றம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. அடுத்து இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் குறித்த கருத்துகளை மிகத் துல்லியமாக அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு தனிமனிதனின், தந்தையின், சுதந்திர போராட்ட வீரனின் நிலையில் நின்று எவ்வாறு மொழிபெயர்ப்பது? இக்கேள்விகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பு என்பது ஒரு மிகக் கடினமான மீட்டுருவாக்க பயிற்சி. இப்பயிற்சியை முடிந்த அளவு வெற்றியுடன் முடிக்க பலருடைய ஒத்துழைப்பும் தேவை என்பது தெளிவு.

Image

இம் மொழிபெயர்ப்பின் போது இக்கவிதைகள் ஊடாக நீங்கள் பெற்ற அனுபவங்கள் என்னென்ன?

யாழ்ப்பாணத் தமிழர் பற்றியும் அவர்களது தமிழ்மொழியின் தனித்தன்மைகள் பற்றியும் எவ்வளவோ படித்திருந்தாலும் அரவிந்தனின் கவிதைகள் மூலம் தெரிந்துகொண்டது அளவிலடங்காதது. அவர்களது சமூக அமைப்பு, பண்பாட்டு விதிகள், சாதி சமயக் கோட்பாடுகள், உரிமை பறிக்கப்பட்டோரின் ஆற்றாமை, காந்தி அல்லது அரவிந்தர் போன்ற ஆன்மிகவாதிகள் போராளிகளாக அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகின்றது எனும் பல்வேறுபட்ட கருத்துகளை அடக்கி புனையப்பட்டுள்ள அவரது கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலுகின்ற எல்லோரும் என்னைப் போல் திக்கு முக்காடித்தான் போக வேண்டியிருக்கும். உள்ளுக்குள் வீசும் பெரும் புயலை ஆற்றுப்படுத்தி அதனை ஆக்க சக்தியாக மாற்ற கவிஞனாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தை புகட்டுவதாக இருந்தது இம்மொழிபெயர்ப்பு அனுபவம். திரு அரவிந்தனின் கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த, தாய்நாட்டைத் துறந்த, சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்த ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

இக்கவிதைகளில் எல்லாம் அங்கும் இங்குமாக என்னுடைய அனுபவங்களில் பலவற்றை அடையாளம் கண்டேன். அரவிந்தனுடைய கவிதைகள் அவருடைய தனிப்பட்ட  அனுபவங்களின் அடிப்படையில் இருப்பினும் புலம்பெயர்ந்த ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் ஏதோ ஒருவகையில் சித்தரிப்பதாக உள்ளன. இக்கவிதைகளை என்னுடைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது ஒவ்வொருவரும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களில் ஏதோ ஒருசில அரவிந்தனது கவிதைகளில் பிரதிபலிப்பதாகக் கூறினர். அரவிந்தனுடைய கவிதைகள் எல்லைக் கடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவை அவர் உலகுக்கு விடுத்த தூது என்று கொள்வது மிகையாகாது.

– முகிலன், பாரீஸ்