கதாநாயகி… நம்பர் ஒன்!
திரையில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகுப் பதுமை யார்? ஒரு காலத்தில் உலகம் முழுக்க, பல லட்சம் ரசிகர்கள் யோசிக்காமல் சொன்ன பெயர் ஒன்று இருந்தது.
‘மர்லின் மன்றோ’.
இத்தனைக்கும் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் மர்லின் மன்றோ. தன் அழகு, நடிப்பு, பாடலால் பல லட்சம் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.
நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் வேதனை நிரம்பியதாகத்தான் இருக்கும். அவர்களின் அந்தரங்க வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவும் ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். காலாற ரோட்டில் நடந்து போக முடியாது. ஒரு ரெஸ்டாரன்டில் தனியாக அமர்ந்து காபி சாப்பிட முடியாது. வேறு எந்த ஆணோடு பேசினாலும், அடுத்த நாளே அவரோடு இணைத்துப் பேசப்பட்டு, ஒரு ‘கிசுகிசு’ செய்தி பத்திரிகையில் வெளியாகும். கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், எங்கே போனாலும் ஒரு கூட்டம் பின்னாலேயே ஓடி வரும்… இப்படி அடுக்கிக் கொண்டே போக நடிகைகளுக்கான பிரச்னைகள் ஏராளம்.
இது போன்ற பிரச்னைகளை அதிகம் எதிர்கொண்டவர் மர்லின் மன்றோ. அதையும் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான சம்பவங்களை சந்தித்தவர். அவருடைய மரணமே கூட சர்ச்சைக்கு உரியதாகத்தான் இன்று வரை இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் இறந்து போனாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. ஆனால், அதிகாரபூர்வமான அறிவிப்பு என்னவோ அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பதாகத்தான் இருக்கிறது.
***
1926 ஜூன் 1ம் தேதி அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிறந்தார் மர்லின் மன்றோ. பிறந்த போதே குழந்தையின் அப்பா யார் என்கிற பெரிய சர்ச்சையைச் சுமந்து கொண்டுதான் பிறந்தார். அம்மா கிளாடிஸ் பியர்ல் பேக்கர் (Gladys Pearl Baker) மர்லின் மன்றோவுக்கு வைத்த பெயர் ‘நோர்மா ஜீன் மார்டென்சன்’ (Norma Jean Mortenson). அவருடைய பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் ‘மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மார்டென்சன் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதோ, முகவரியோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவில் குழந்தையின் பெயரோடு தந்தையின் குடும்பப் பெயரை சேர்த்து அழைப்பது வழக்கம். அந்த வகையில் நோர்மாவின் பெயர் ‘நோர்மா மார்டென்சன்’ என்று இருக்க வேண்டும். அம்மா கிளாடிஸ் ஒரு காரியம் செய்தார். நோர்மாவின் பெயருக்குப் பின்னால் ‘பேக்கர்’ என்ற தன் அப்போதைய கணவரின் குடும்பப் பெயரைச் சேர்த்தார். இதனாலேயே நோர்மாவின் உண்மையான தந்தை யார் என்கிற குழப்பம் பிற்காலத்தில் எழுந்தது.
1924ல் கிளாடிஸ், மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சனைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிளாடிஸ் கருவுறுவதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்துவிட்டார்கள். பின் எதற்காக அவர் தன் கணவரின் பெயராக, மார்டென்சன் பெயரை மருத்துவமனையில் பதிவு செய்தார்? சட்ட விரோதமாக குழந்தை பிறந்ததாக களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கிளாடிஸ், முதலில் தன் முன்னாள் கணவரின் பெயரைப் பதிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் பிற்காலத்தில் மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்கள். 85வது வயதில் மார்ட்டின் மரணம் அடைந்த பிறகுதான் அவரும் கிளாடிஸும் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களும் மர்லின் மன்றோவின் பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. ஆனாலும், தன் வாழ்நாள் முழுக்க மார்ட்டின் தன் தந்தையல்ல என்றே சொல்லி வந்திருக்கிறார் மன்றோ.
‘‘என் அம்மா என் சிறு வயதில் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, ‘இதுதான் உன் தந்தை’ என்று சொல்லியிருக்கிறார். அவர் உருவம் என் மனதில் அப்படியே பதிந்து போய்விட்டது. அவர் சார்லஸ் ஸ்டேன்லி கிளிஃபோர்டு. அவருடைய அரும்பு மீசை இன்னமும் என் நினைவில் இருக்கிறது. பார்ப்பதற்கு கிளார்க் கேபிளைப் (Clark Gable) போலவே இருப்பார். அதனால் கிளார்க் கேபிள்தான் என் தந்தை என்று வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. (கிளார்க் கேபிள் அப்போது பிரபலமாக இருந்த அமெரிக்க நடிகர்).
***
‘புயலிலே ஒரு தோணி’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவஸ்தை தோணிக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும்தான் தெரியும். அப்படி ஓர் அவஸ்தையை குழந்தை நோர்மா அனுபவித்தாள். வீட்டில் வறுமை… ஆண் துணை இல்லை… குழந்தைக்குக் கொடுக்க சத்தான ஆகாரங்கள் இல்லை. இவற்றை எல்லாம்விட அம்மா கிளாடிஸ் மனநிலை பிறழ்ந்தவர். ஒரு குழந்தைக்கு இதைவிடப் பெரிய இன்னல் வேறு என்ன வேண்டும்?
அவரால் குழந்தை நோர்மாவை சரியாகப் பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், கலிபோர்னியாவுக்கு குழந்தையை அனுப்பி வைத்தார் கிளாடிஸ். அங்கே ஆல்பர்ட்-இடா போலெண்டர் தம்பதி நோர்மாவின் வளர்ப்புப் பெற்றோர் ஆனார்கள். அவர்களின் அன்பான அரவணைப்பில் ஏழு வயது வரை அவர்களுடனேயே வாழ்ந்தாள் நோர்மா. நல்ல உணவு, உடைகள்… கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை. அந்த நிம்மதியைக் குலைக்க அம்மா கிளாடிஸின் உருவில் வந்தது விதி.
ஒருநாள் திடுதிப்பென்று வீட்டுக்குள் நுழைந்தார் கிளாடிஸ். இடா அவரை வரவேற்றார். குழந்தை நோர்மாவை வாரி எடுத்துக் கொஞ்சினார் கிளாடிஸ். வழக்கமான உபசரிப்புகள் நடந்து முடிந்தன. அதுவரை அமைதியாக இருந்த கிளாடிஸ் பேச ஆரம்பித்தார்.
‘‘நான் நோர்மாவை கூட்டிட்டுப் போறேன்.’’
‘‘எங்கே?’’
‘‘என் வீட்டுக்கு.’’
‘‘ஏன்? அவ இங்கே நல்லாத்தானே இருக்கா?’’
‘‘இல்லை. எனக்கு அவ வேணும்…’’
உரையாடல் நீண்டுகொண்டே போனது. வார்த்தைகள் தடித்தன. காரசாரமான விவாதம். குழந்தை தனக்கே உரித்தான ஒரு பொருள் என்பது போல கிளாடிஸ் பேச, மனநலம் குன்றியவருடன் குழந்தை வாழ்வது சரியல்ல என்பதை உணர்ந்த இடா குழந்தையை அனுப்ப மறுக்க… சண்டை வலுத்தது. அப்போதுதான் அது நடந்தது. எதிர்பாராத கணத்தில் இடாவைப் பிடித்து முற்றத்தில் தள்ளினார் கிளாடிஸ். சட்டென்று வீட்டுக்குள் ஓடி, கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார்.
பதறிப்போன இடா, கதவை பலமாகத் தட்டிப் பார்த்தார்… கூச்சல் போட்டார்… ‘யாராவது வந்து என் குழந்தையைக் காப்பாத்துங்களேன்!’ என்று உதவிக்கு ஆட்களை அழைத்தார். அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவருடைய உதவிக்கு வர கணவர் ஆல்பர்ட்டும் அப்போது வீட்டில் இல்லை. கதவைத் தட்டித் தட்டி சோர்ந்து போனவராக இடா அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார். சில நிமிடங்கள் கழிந்தன. என்ன செய்வது என்பது தெரியாமல் அழுது கொண்டிருந்தார் இடா.
கதவு திறந்தது. கிளாடிஸ் வெளியே வந்தார். அவர் கையில் ஒரு பெரிய பேக். அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது. அதன் ஜிப் மூடியிருந்தது. அதற்குள்ளேயிருந்து குழந்தை நோர்மாவின் குரல்…
‘‘அம்மா… அம்மா! என்னை வெளிய விட்டுடுங்கம்மா… ப்ளீஸ்மா..!’’
அவ்வளவுதான். கொஞ்சமும் தாமதிக்கவில்லை இடா. கிளாடிஸை வழிமறித்தார். அவர் கையில் இருந்த பேக்கை பறிக்க முயற்சி செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் கிளாடிஸின் கையில் இருந்த பேக் கீழே விழுந்தது. எப்படியோ ஜிப்பைத் திறந்து கொண்டு குழந்தை நோர்மா வெளியே வந்தாள். சத்தம் போட்டு அழுதாள். அதைத் தாங்க முடியாத இடா, நோர்மாவை வாரி அணைத்து எடுத்து, வீட்டுக்குள் தள்ளி கதவைச் சாத்தினார். அன்றைக்கு வீட்டைவிட்டு வெறுங்கையோடு திரும்பினார் கிளாடிஸ். ஆனால், பிரச்னை அத்துடன் தீர்ந்துவிடவில்லை.
1933. கிளாடிஸ் புதிதாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கியிருந்தார். உதவிக்கு சில ஆட்களை அழைத்துக் கொண்டார். நேராக ஆல்பர்ட் வீட்டுக்கு வந்தார். இந்த முறை இடாவுக்கு, நோர்மாவை அனுப்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ‘குழந்தையைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்துவிட்டுத்தான் கிளாடிஸ் அழைத்துப் போனார். உண்மையில் அது நடக்கவில்லை.
மனநலம் பிறழ்ந்த தாய்… அவரிடம் வளரும் குழந்தை. சினிமாவுக்கு ஒன்லைன் தருவது போல சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், குழந்தைக்கு அது நரக வேதனை. வலி மிகுந்த நாட்கள் அவை. அந்த வேதனை காலம் முழுக்க அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டே இருந்தது. தன் குழந்தையையே படாதபாடு படுத்தியிருந்தார் அந்தத் தாய். அது நோர்மாவின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிளாடிஸின் நிலைமை மிகவும் மோசமாகிவிட அவரை ஒரு மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். பின்னாளில் மர்லின் மன்றோ தன் சுயசரிதையில் தன் தாயைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘எப்போதும் அளவுக்கு அதிகமாக சிரிக்கும் முகம் அல்லது எல்லை மீறிய அலறல் குரல்… இதுதான் என் தாயை நினைத்தால் என் நினைவுக்கு வருவது’’.
***
அமெரிக்காவில் ‘வார்டு ஆஃப் தி ஸ்டேட்’ (Ward of the State) என்று ஒரு நடைமுறை உண்டு. ஆதரவற்றவர்கள், தனியாக வாழும் முதியோர், பெற்றோர் துணை இல்லாத குழந்தைகளை நீதிமன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும். இவர்களுக்காக பொருத்தமான காப்பாளர் (Guardian) ஒருவரை நியமித்து அவர் பொறுப்பில் இவர்களைக் கொடுத்து பராமரிக்கச் சொல்லும். அப்படிப் பொறுப்பில் நியமிக்கப்படும் நபர் கிட்டத்தட்ட வளர்ப்புப் பெற்றோராகவே கருதப்படுவார்கள்.
நோர்மாவுக்கு அப்படி கார்டியனாக நியமிக்கப்பட்டவர் கிரேஸ் மெக்கி (Grace Mckee)… கிளாடிஸின் நெருங்கிய தோழி. நோர்மாவின் மனக் காயங்களுக்கு மருந்திடுவதாக இருந்தது கிரேஸின் துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்… ஆலோசனை சொல்வார்… எதைச் செய்வதற்கும் ஊக்கம் கொடுப்பார். எதிர்காலம் குறித்த கனவுகளையும் விதைப்பார். கிரேஸ், நோர்மாவிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்… ‘‘பார்த்துகிட்டே இரேன்… நீ ஒருநாள் ஹாலிவுட்ல பெரிய ஸ்டாரா ஆகப் போறே…’’
கிரேஸ் மெக்கியுடன் வாழ்ந்த போதுதான் ஜீன் ஹார்லோவின் அறிமுகம் கிடைத்தது நோர்மாவுக்கு. ஜீன் ஹார்லோ நடிகை… 1930களில் அமெரிக்க சினிமா உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களின் தேவதையாக வலம் வந்தவர். ஜீன் ஹார்லோவுக்கு நோர்மாவைப் பார்த்த முதல் கணத்திலேயே பிடித்துப் போய்விட்டது. பரிதாபமான முகத்தோடு அதுவரை வலம் வந்த அந்தக் குழந்தையின் அழகை மெருகூட்டக் கற்றுக் கொடுத்தார். சில நாட்களிலேயே தானாகவே மேக்கப் போடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள் நோர்மா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வெளியே அழைத்துப் போவார் ஜீன் ஹார்லோ. சிகையலங்காரக் கடைக்கு அழைத்துப் போய் சுருள் சுருளான அவள் முடியை அழகுபடுத்துவார்.
நெருக்கம் அதிகமானது. இருவரும் சேர்ந்து சினிமாவுக்குப் போக ஆரம்பித்தார்கள். திரைப்படங்களின் மீதும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மீதும் நோர்மாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு வர ஆரம்பித்தது. ஆர்வமாக நோர்மா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் ஜீன் ஹார்லோ. ஹாலிவுட்டும் சினிமாவும் அழுத்தமாக நோர்மாவின் மனதில் பதிய ஆரம்பித்தன.
1935. அப்போது நோர்மா ஜீனுக்கு 9 வயது… மர்மக் கதைகளில் வரும் திடீர் திருப்பம் போல, கிரேஸ், எர்வின் சில்லிமேன் காட்டார்டு (Ervin Silliman ‘Doc’ Goddard) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்தச் சின்னஞ்சிறு வயதில் அங்கும் இங்குமாக பந்தாடப்பட்ட அந்தக் குழந்தை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்துக்கு (பிறகு ‘ஹோலிகுரோவ்’ என்றழைக்கப்பட்டது) அனுப்பி வைக்கப்பட்டது.
(தொடரும்)
– பாலு சத்யா
Image courtesy:
http://dshenai.files.wordpress.com/
Monroe
BornNorma Jeane Mortenson
June 1, 1926
Los Angeles, California, U.S.DiedAugust 5, 1962 (aged 36)
Brentwood, Los Angeles, California, U.S.
Cause of death
Resting place
Westwood Village Memorial Park Cemetery, Westwood, Los AngelesOther names
- Norma Jeane Baker
- Norma Jeane Dougherty
- Norma Jeane DiMaggio
- Marilyn Monroe Miller
OccupationActress, model, singer, film producerYears active1945–62Notable work(s)Niagara, Gentlemen Prefer Blondes, River of No Return,The Seven Year Itch, Some Like It Hot, The MisfitsReligion
- Pentecostal (1926–1956),
- Judaism (1956–1962)[1]
Spouse(s)
- James Dougherty (m.1942; div. 1946)
- Joe DiMaggio (m.1954; div. 1954)
- Arthur Miller (m.1956; div. 1961)
- Golden Globe Award for Best Actress – Motion Picture Musical or Comedy
- 1960 Some Like It Hot
- Golden Globe for World Film Favorite: Female
- 1953
- 1962
AFI AwardsAFI’s 100 Years…100 Stars
1999Signature
திரைவானின் நட்சத்திரங்கள் பிற…