ப்ரியங்களுடன் ப்ரியா–21

நம்பிக்கையுடன் தொடர்வோம்!

dawn

இந்த ஆண்டு இனிய ஆண்டே!

 

நேற்றும் இன்றும் 
மாறிவிடாத 
தவமொன்றின் வலிகளாய்

மேகங்கள் மெய்வருத்தத் 
தருங் கூலியென 
பெய்யென பெய்த 
பெருமழை தாண்டி

இதோ 
நமக்கான  விடியல் 
தன் கதவுகளை 
திறக்கிறது…

கனவுகளால் 
கட்டமைக்கப் பட்ட 
ஒவ்வொரு நாளும் 
நமக்கான  பறவையே

தேட முடிவெடுத்த பின் 
தொலைதலில் 
பயம் கூடாது…

வெல்ல  தொடங்கிய பின் 
தொடுவானம் தூரம் 
என்பதில் 
மூச்சு மட்டுமே வாங்க முடியும்…

எல்லாம் முடியும் 
என்பதாகவே பேசட்டும் 
கண்களும் காலமும்…

புதிய வருடமும் 
புதிதாக பிறக்கும் குழந்தையும் 
வளர்க்கும் கைகளும் 
வாழும் வாழ்கையும் 
தீர்மானம் செய்வது போல

நீண்டு கிடக்கும் நீலவானம் 
மௌனமாய் புன்னகைக்கிறது
இரு கரம் நீட்டி நம்மை வரவேற்கிறது.

பொதுவா ஒவ்வொரு வருட தொடக்கத்தையும் சந்தோசமா வரவேற்போம். இத்தனை வருஷம் இயற்கைக்கு எதிராக நாம் செய்த எல்லாவற்றிக்கும் ஒரே வாரத்தில் இயற்கை தந்த பதிலால் கொஞ்சம் இல்லை நிறையவே வேதனையுடன் இந்த வருடத்தை தொடங்கி இருக்கிறோம்.

முன்னாடி எல்லாம் புதுவருஷம் என்றால் காலையிலே சீக்கிரமா எந்திரிச்சு கோவிலுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கி ஆண்டை தொடங்கிய காலம் கடந்து, வருடம் விடிந்துதான் படுக்கை செல்லும் அளவிற்கு நாம் முன்னேறி இருக்கிறோம்.

2015…

மனிதம் தழைய செய்த மழை வெள்ளம்

அக்னிசிறகு நாயகன் அப்துல்கலாம் ஐயா மறைவு

இப்படி இரண்டு பெரிய நிகழ்வை இந்த ஆண்டு கடந்தோம்.

ஒவ்வொரு வருடமும் வழக்கமாக வரும் டைரி, காலெண்டர், கேக், புத்தாண்டு சபதம் என இயல்பு நிகழ்வுகள் தொடர்ந்தாலும், என்றுமே தொடங்கும் ஒரு நாளாகத்தான் தொடங்கி இருக்கிறது இந்த ஆண்டும்.

நாங்கள் புத்தாண்டை வரவேற்ற முறைக்கும் இப்போதைய தலைமுறை வரவேற்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம் என்றால், ஒரு தலைமுறைக்குள் நூற்றாண்டு வேறுபாடுகள்…

காதை கிழிக்கும் இரைச்சல்… உணர்வை மறக்க உற்சாக பானங்கள் என அதி நவீன வாழ்வின் அடிமைகள் ஆன நமது தலைமுறைகளை நினைக்கும் பொழுது மனம் வேதனை அடைவது என்னவோ உண்மைதான்.

பொதுவாக நாம் எல்லோருமே புத்தாண்டை ஒரு விடுமுறை தினமாக தான் பார்க்கிறோம். அதான் உண்மையும் கூட… மேற்கத்திய கலாசாரம் என்று அதை ஏற்றுக்கொண்ட பொழுதிலும், தமிழ் புத்தாண்டுக்கு உரிய மனநிறைவை ஏனோ  அது தருவதில்லை.

dawn2

கடந்து செல்லும் நாட்களில் அதுவும் ஒன்றாக எண்ணாமல் புதிதாகத் தொடங்கும் ஆண்டின் உறுதிகளாக சிலவற்றை தொடர்வோம்…

  • ‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
  • பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
  • ‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுகளிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

dawn1

  • தனித்தன்மையுடன் திகழுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
  • நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் உள்ளதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை உங்களுக்கு அளிக்கவிருக்கும் அரிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதே உங்கள் முன் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி.
  • முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை நாம் செய்து முடிப்பதன் மூலம் அடையக் கூடிய மகிழ்ச்சி அளவற்றது.
  • கனவுகளைக் காண முடிந்தவர்களால் அடைய முடியாதது என்று எதுவுமே கிடையாது.
  • எந்த ஒரு பொருளையும் முதலாவதாகவோ அல்லது கடைசி முறையாகவோ பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகத் தோன்றும்.
  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
  • நம் கனவுகளின் தேடல் வேட்டையில், தேடலில் தொலைந்து போய் அதனை விட சிறப்பான ஒன்றை நாம் பெறுகிறோம்.
  • உங்கள் வாழ்க்கைப் பாதைகளில் வரும் தடங்கல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே அவை ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்னைகள் உண்டு. அவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை… அவை ஒவ்வொன்றும் நன்மை தரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியே அமைகின்றன… பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனிதனை பட்டை தீட்டும் வலிமை கொண்டவை.
  • இந்த ஆண்டில் தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம்தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ, அலுவலக நண்பர்களோ, நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.
    மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும்!

DSC01519

  • ப்ரியா கங்காதரன்