6 மாதக் குழந்தை முதல் 60 வயது தாத்தா-பாட்டி வரை எல்லோரும் செய்யலாம் மாடலிங்!

Image

Gisele Bündchen – உலகிலேயே மிக அதிக பணம் சம்பாதிக்கும் மாடல்!

“பணக்காரங்க, ரொம்ப அழகா இருக்கிறவங்க, பொழுது போகாதவங்க… இவங்கதான் மாடலிங் துறைக்கு வரலாங்கிற நிலைமை இன்னிக்கு இல்லை. ஓரளவு அழகும், நிறைய தன்னம்பிக்கையும் இருக்கிற யாரும் மாடலிங் துறைக்கு வரலாம். டாக்டர், வக்கீல்னு வேற துறைகள்ல பிசியா இருக்கிற எத்தனையோ பேர் மாடலிங்கும் பண்ணிட்டிருக்காங்க. அந்தளவுக்கு கௌரவமான துறையா மாறிட்டு வருது இது” என்கிறார் சங்கீதா பாலன்.

Imageமாடலிங் கோ-ஆர்டினேட்டரான இவர், விளம்பரப் படங்கள், டி.வி சீரியல், சினிமா என எல்லாவற்றுக்கும் மாடல்களை ஏற்பாடு செய்து கொடுப்பவர். ’கோலங்கள்’ உள்ளிட்ட பல தொடர்களிலும், ‘காதலில் விழுந்தேன்’, ‘கற்றது தமிழ்’, ‘பேராண்மை’, ‘எந்திரன்’, ‘சுல்தான் தி வாரியர்’ எனப் படங்களிலும் இவரது மாடல்கள் முகம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 6 மாதக் குழந்தை முதல் 60 வயது தாத்தா-பாட்டி வரை அனைத்து வயதினருக்கும் மாடலிங் உலகக் கதவுகள் விரியத் திறந்து வரவேற்பதாகச் சொல்கிறார் இவர்.

’’ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சிட்டு, அந்தத் துறைல இருந்தேன். அப்ப ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக்னு நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போவேன். மாடல்களோட அறிமுகம் கிடைச்சது. ஒரு டிரெட்மில் விளம்பரத்துக்காக மாடல் தேவைப்பட்டப்ப, யதேச்சையா ஒரு நிறுவனம் என்கிட்ட, ’மாடல் யாராவது கிடைப்பாங்களா’னு கேட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்ணை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சேன். அப்படியே அடுத்தடுத்து பலரும் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் மாடலிங் கோ-ஆர்டினேட்டரானேன். பத்து வருஷத்துக்கு மேலே பண்ணிட்டிருக்கேன். நான் அறிமுகப்படுத்தின எத்தனையோ மாடல்கள் சீரியல், சினிமானு கலக்கிட்டிருக்காங்க.

Image

’மாடலிங்னா ஆபத்தான துறை, பெண்களுக்கு ஏற்றதில்லை’ங்கிற நிலை, சில வருஷங்களுக்கு முன்னாடி வரை இருந்தது. இன்னிக்கு அதைப் போல டீசன்ட்டான துறை வேற இல்லைனு சொல்லலாம்! அழகு இங்கே ரெண்டாம்பட்சம்தான். இனிமையான பேச்சும் தைரியமும்தான் மூலதனம். தயக்கமோ, பயமோ கூடாது. மத்தபடி எந்த வயசுலயும், யாரும் மாடலாகலாம். டாக்டர், வக்கீல்னு பலரையும் மாடலாக்கின அனுபவம் எனக்கிருக்கு. இவ்வளவு ஏன்? நிறைய ஹவுஸ் ஒயிஃப் மாடலிங் பண்ண விரும்பி வராங்க. பணம், புகழ்னு எல்லாம் கொடுக்கிற துறை இது” என்கிறவர், மாடலிங் செய்ய விரும்புவோருக்கான வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார்.

“போர்ட்ஃபோலியோனு சொல்ற போட்டோஸ் ரொம்ப முக்கியம். அவங்கவங்க வசதியைப் பொறுத்து 1500 ரூபாய்லேர்ந்து, 40 ஆயிரம் வரை கூட இதுக்கு செலவு பண்ணலாம். மாடலிங் கோ-ஆர்டினேட்டரை அணுகினா போர்ட்ஃபோலியோ எடுக்கிறதுலேர்ந்து, வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, சம்பளம் கைக்கு வர்றது வரை எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. சராசரியா பொண்ணுங்களுக்கு ஒரு வாய்ப்புக்கு 7500 ரூபாய்லேர்ந்து 10 ஆயிரம் வரைக்கும், பசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், குழந்தைங்களுக்கு 3500 ரூபாயும் சம்பளம் கிடைக்கும். அதுல ஒரு சிறிய தொகையை மாடலிங் கோ-ஆர்டினேட்டரோட கமிஷனா கொடுக்க வேண்டியிருக்கும்.

Image

தேவை என்னனு தெரிஞ்சு வர்றவங்களுக்கு இதுல வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு சிலர் வெறும் விளம்பரங்கள்ல மட்டும் வந்தா போதும்னு நினைப்பாங்க. படிக்கிற பிள்ளைங்க, ஸ்கூல், காலேஜுக்கு லீவு போட முடியாது, அதுக்கேத்தபடியான வாய்ப்புகளா கொடுங்கனு கேட்பாங்க. வெளியூரெல்லாம் போகத் தயாரா இருக்கிறவங்களுக்கு சினிமா ஓ.கே. இப்படி விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏத்தபடியான வாய்ப்புகளை தேடிக்கலாம்’’ என்கிறார் சங்கீதா.

(தொடர்புக்கு: 99414 81483)

–  ஆர். வைதேகி