ஏய் வாசகா !!! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

ப்ரியங்களுடன் ப்ரியா–14

book1

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாகக்கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும்…
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன…
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்…

 book2

ஏய் வாசகா !!!  உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

என்று நகுலனின் ஒரு கவிதை…

இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதற்க்கு.. எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கொஞ்சம் கோபம் கூட படுகிறது

புத்தகம் படிப்பது என்பது  நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் குறித்து  ஆயிரம் கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன…

 book

எனது வாசிப்பு …

உயிர்ப்பாக எழுத்தை நான் சுவாசிக்க ஆரம்பித்தது கடவுளின் தேசத்தில் தான்.. ஆம்… நான் வாசிப்பை தொடங்கியது கேரளாவில்தான்!

நான்காம் வகுப்பு வரை மழலை தமிழை மலைமுகட்டில் வாசிக்க ஆரம்பித்தேன் ..

அம்மா அப்பாவின் வருகை அவர்களின் அருகாமை அன்பை விட அவர்கள் எனக்கு கொண்டுவரும் சிறுவர்மலர் .. பூந்தளிர் ..எதிர்நோக்கியே இருந்தது …

காமிக்ஸ் கதைகள் .. அம்புலிமாமாவில் தொடங்கிய எனது வாசிப்பு இன்றுவரை தடையற்ற வெள்ளமாக பல்கி பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

கொங்குவாசியான நான் எங்க ஊர் எழுத்தாளார் ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசகியாகி ஒரு கால கட்டத்தில் க்ரைம் நாவலும் நானுமாகி போனதும் நிஜமே.

அதனை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் குடும்ப நாவல் பக்கம் திரும்பிய பொழுது கல்கியில் தொடராக வெளியான லக்ஷ்மி அம்மாவின்  எதற்காக என்ற நாவல் வாசிப்பின் மறுபக்கத்தை எனக்கு அழகாகக் காட்டியது.

இதுவரை படிக்கணும் என்று ஆசைப்பட்டு வாங்கியும் இதுவரை படிக்கச் முடியாத நாவல் ** கங்கை கொண்ட சோழபுரம் ** 2 ,3 , 4 பகுதிகள் மட்டுமே.

அதை போல பலமுறை படித்த நாவல்கள் என்றுபார்த்தால் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் ** காதெலெனும் சோலையிலே , மாலை மயங்குகிற நேரம், வளையோசை, விடியலை தேடும் பூபாளம் , மானே மானே ,,, புதுவைரம் நான் உனக்கு ** இதுவரை எத்தனை முறை வாசிச்சு இருப்பேன் என்று தெரியலை ,, எத்தனை முறை வாசிக்க போறேன் என்றும் தெரியலை …

ஆதர்ச எழுத்தாளர் வரிசையில் நான் நெறைய பேரை சந்தித்து இருந்தாலும் இதுவரை நிறைவேறாத விரைவில் நிறைவேற வேண்டிய ஆசை என்று ஒன்று இருந்தால் அது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களை சந்திக்கணும்… சந்திச்சே ஆகணும்…

எல்லோருக்கும் வாசிப்பின் மேல காதல் வர எதாவது ஒரு காரணம் இருக்கும். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா குமுதம்,விகடன் என்று படிக்கப் படிக்க எனக்கும் வாசிப்பின் மீதான காதல் வளர ஆரம்பித்தது …

சிறுவயசில் மளிகை கடையில் பொட்டலம் கட்டி தரும் தாளை வீட்டில் வந்து பிரிச்சு படிக்கக் கூட பொறுமை இல்லாமல் இடப்புறம் வலப்புறம் என்று அந்த பொட்டலத்தை தலைகீழாக வாசித்துதான் வீடு வந்து சேர்வேன் ..
 book5

வாசிக்கும் சமுகமே வளரும் சமுகம் என்ற வார்த்தையை மனதார பின்பற்றுவள் நான். இந்த நாகரிக கணினி உலகில் என் மகளையும் வாசிக்க வைக்கணும் என்று சிறுவயதிலே நீதிக்கதைகளில் ஆரம்பித்து இப்போ போன மாதம் கல்பனா சாவ்லா பற்றிய புத்தகம் வாங்கி கொடுத்தேன்.

வாசித்தலில் வருடியவர்கள்.. ( இதை முன்னமே நமது ஸ்டார் தோழி பகுதியில் எழுதி இருந்தேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகள் நீங்களும் இதை வாசிக்கணும் என்று)

சில நேசிக்கும் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும்… கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும்… அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சிலரின் வரிகள்…

1. எஸ் ரா ..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி.

s-ramakrishnan
வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணித்த அனுபவம் .. ஒவ்வொரு பக்கமும் ஒவொரு தேசமாய் ஒவ்வொரு மனிதராய் சந்தித்த போது பயணத்தின் சுகானுபவம். படிக்கும் பொழுதே பலரை சந்திக்கும் அனுபவம்.

இவரின் விழி வழியே வரிகளை கடக்கையில் அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என மனசு கேக்காமல் இருபதில்லை . , தேசாந்திரி புத்தகத்தின் சில தேன் துளிகளை சொல்கிறேன் ..தித்திப்பை நீங்களும் ரசியுங்கள் ..

சாரநாத்தில் ஒரு நாள்…. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது..

நிலமெங்கும் பூக்கள்…

பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்…. எத்தனைவிதமான மலர்கள்…! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் ..

உறங்கும் கடல்…

தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன….

2. எழுத்துச் சித்தரின் வரிகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை .. பாலா ஐயாவின் வரிகளை புத்தகங்களை வரிசை செய்து வகை செய்யும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை என்றாலும் ஐயாவின் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்.

 balakumaran

மனசோ உடம்போ சோர்வாவும் பொழுது ஐயாவின் புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை ..

ஐயாவின் வரிகளில் எனது அடி நாதம் வென்றவை …

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. — குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.- சுழற்காற்று

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை. -உத்தமன்….

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.–என் கண்மணித்தாமரை

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர். ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன்..

 ramanichandran

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை.

சில நேரங்களில் அந்த கதாநாயகிகள் ஆகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு … படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது….

4. விகடனில் தொடராக வந்து படித்ததுதான் என்றாலும் மீண்டும் புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்… இன்று வரை மீள இயலவில்லை!

 vairamuthgu

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

வைரமுத்து ஐயாவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிய கருவாச்சி காவியம் பற்றித்தான் சொல்கிறேன் ..

ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது. படிக்கும் போதே உசிரு ஒடுங்கி ஒரு நடுக்கம் வருவது தடுக்க முடியாது

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே.

நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

5. நிலவையும் தாளில் கொண்டு வந்த வித்தகக் கவி பா.விஜய். கி.பி, கி.மு நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய் . சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

 pavijay
பா.விஜயோட “உடைந்த நிலாக்கள்” ஆகச் சிறந்த கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு… எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு…

ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுட்டே போகும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

“பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன் முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன் தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன் தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன் மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்”

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

 book3

மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .

சமுதாய வளர்ச்சியில் தனிமனித பங்காக வாசிப்பை சொல்வேன் நான் ..

வாசிப்பவன் என்றுமே பிறரை நேசிப்பான் ..

பிறரை நேசிப்பவன் என்றுமே தவறு செய்ய மாட்டான் …

வாசிப்போம் …வளம் பெறுவோம் …

 book4

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாய் கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும் …
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன.
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்.

  • ப்ரியா கங்காதரன்

book6

நூல் அறிமுகம் – 7

wrapper375

மிச்சமென்ன சொல்லுங்கப்பா

கி.பி.அரவிந்தன்

‘ஈழத்தமிழரின் வாழ்விலும் இருப்பிலும் இன்று என்னதான் மிஞ்சியுள்ளது? அந்தக் குழந்தைக்குச் சொல்வதற்கு அப்பனிடமும் மிச்சம் மீதம் என்ன இருக்க முடியும்?

பொய்யையும் புனைகதையையுமா எடுத்துரைக்க முடியும்?

அறுபதாண்டுகளுக்கும் மேலாக அறவழியிலும் ஆயுத வழியிலும் தொடர்ந்த ஈழத்தமிழரின் அரசியல் கோரிக்கைக்கான போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் சிதைவுற்றது.

அறவழிப் போருக்கும் ஆயுதவழிப் போருக்கும் இடையேயான பிரரிப்பும் தொடுப்பும் 1970ம் ஆண்டில் முகிழ்ந்த ஓர் இளந்தலைமுறையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

70ம் ஆண்டு இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒரு போராளியாகவும் கவிஞனாகவும் அந்த்த் தலைமுறையினருடன் இணைந்து நான் கண்ட கனவுகளும் அவற்றின் மீதிகளும்தான் இக்கவிதைகள்…’

கவிஞர் கி.பி.அரவிந்தன், இந்நூலின் முன்னுரையில் சொல்லியிருக்கும் இந்தக் குறிப்புகளே இக்கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்யப் போதுமானவை. பெரும்பாலான கவிதைகளின் அடிநாதம் துயரம் தோய்ந்ததாக இருக்கிறது. கவிதை வரிகளோ அத்துயரத்தை ஏற்படுத்திய சூழலின் மீது நம்மை கோபம் கொள்ள வைக்கின்றன.

எழுத்தாளர்கள் வ.கீதா மற்றும் எஸ்.வி.ராஜதுரை கி.பி.அரவிந்தனின் கவிதைகளுக்கான அணிந்துரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்… ‘கி.பி.அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை: யாழ்ப்பாணத்து அனுபவங்கள்; தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்து அனுபவங்கள்; அகதி வாழ்வின் பாதிப்புகள் (மேற்கு ஐரோப்பிய அனுபவங்கள்). இக்கவிதைகள் வரலாற்றனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல. அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டுப் பண்படுத்தப்பட்டுக் கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. போராளியின் சோர்வு, அகதியின் மனத்தாங்கல்கள், சிந்திக்கும் எவருக்குமே உண்டாகும் ஐயப்படுகள், தர்ம சங்கடங்கள் – இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையை இக்கவிதைகளில் காணலாம்…’

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியோ, ‘ஒரு நாட்டில் வாழுகிற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகிற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளதென்றே கருதுகிறேன்’ என்று குறிப்பிடுகிறார்.

’தன் ஆன்ம நிறைவைத் தேடியும், தன் சகமனிதர்களுக்கு அது இல்லையே என ஏங்கியும் எழுகிற விசும்பலின், கண்ணீரின், அரற்றலின், சினத்தின் வார்த்தைகளாகவே அரவிந்தனின் அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன. தான் இழந்தவைதாம் ‘தான்’ என்று கண்டுகொண்ட தகிப்பில் சொற்களாக்க் குமைந்து வெடிக்கின்றன’ என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் பாரதிபுத்திரன்.

இந்தத் தொகுப்பில் ஏற்கனவே வெளிவந்த கி.பி.அரவிந்தனின் ‘இனி ஒரு வைகறை’, ‘முகம்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்ற கவிதைகளும், நூலாக்கம் பெறாத கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…

இருப்பு

குளிர் சிரிக்கும்

தோற்றுக் கொண்டிருப்பது

தெரியாமல்

மரங்கள் எதிர்கொள்ளும்

தயங்காமல்

தங்களை நட்டுக்கொள்ளும்

தலைகீழாய்

பட்டுப்போன பாவனையாய்

பனியாய்ப் படிந்து

நளின அழகில்

பரிசோதிக்கும் குளிர்

பின்வாங்கல் வேருக்குள்

சூரியன் வரும்வரை…

***

நெல்லியும் உதிரும் கனிகளும்

வேப்பமர நிழலில்

கொப்பெல்லாம்

காய்க்கொத்தாய்

சாய்ந்து நிற்குமே

பாரமதைத் தாங்காமல்

நெல்லி மரம்

நினைவுண்டா?

கனி உதிர்த்து நிற்குமந்த

நிறு நெல்லி மரத்தில்தான்

காய் சுவைத்தோம்.

சாட்சியமாய்

வாய் சுவைத்தோம்.

காய்த்திருந்தது பார்

தேனடையில் தேனீக்களாய்

கலையாத சுற்றம்போல்

குலைகள்

அப்போது

உன் வயிற்றில் நம் கனி.

இரும்புச் சிறகசைத்து

சாவரக்கன்

வானேறி வருகையிலும்

சின்னி விரலால்* அவனைப்

புறந்தள்ளி

அதனடியில்தானே

வெயில் காய்ந்திருக்க

வேப்பங்காற்றினால் நாம்

தோய்ந்திருந்தோம்.

வான்வெளியை அளந்தபடி

நம் கனவில்.

நெல்லி

இலைக்காம்புதனை

ஒன்றொன்றாய் நீ பொறுக்கி

மடக்கென்று மொக்கொடிக்கும்

மெல்லொலியிலும்

கேட்டது பார்

நம் சுற்றமெல்லாம்

உயிரொடியும் ஓசை

அறியாயா?

அறிந்தோமா நாம்

ஊரொடிந்து

ஊரோடிணைந்த

உறவொடிந்து

உறவின் ஊற்றான

குடும்ப அலகொடிந்து

உதிர்ந்த கனிகளாய்

வேறாகி வேற்றாளாகி

அந்நியமாகும் கதை

காலவெளிதனில் கரைந்த்து

ஒரு பத்தாண்டானாலும்

நெல்லி உண்ட அவ்வையின்

பழங்கதையைச்

சிதறி உருண்டோடும்

நம் வயிற்றுக் கனிகளுக்கு

ஒப்புவிக்கும் போதினிலே

உயிர் பின்னிக் கிடக்குமெம்

காதல்தனை இசைக்கிறது

கண் நிறைத்து வீற்றிருக்கும்

நெல்லி.

நூல்: மிச்சமென்ன சொல்லுங்கப்பா

ஆசிரியர்: கி.பி.அரவிந்தன்

விலை: ரூ.200/-

வெளியீடு: ஒளி, இராயப்பேட்டை, சென்னை-600 014. செல்: 9840231074.

விற்பனை உரிமை: அகல், 348-ஏ, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014. செல்: 9884322498.

***

தொகுப்பு: பாலு சத்யா

பிரெஞ்ச் மொழியில் தமிழ்க் கவிதைகள்!

Image

ழத்தமிழ்க் கவிதைகள் பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘Le messager de I’hiver’ [ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்] என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா கடந்த ஜூன் 3 அன்று, செவ்வாய்க்கிழமை பாரீஸ் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்றரங்கில் எளிமையாக, அதே நேரம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ், பிரெஞ்ச் என இரண்டு மொழிகளிலும் கவிதைகள் இடம் பெற்றிருக்கும் இந்நூலில் புலம்பெயர்ந்து ஃபிரான்சில் வாழும் கி.பி.அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்ச் உயர்கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத்தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை ‘றிவநெவ்’ (RIVENEUVe) என்ற பிரெஞ்ச் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தநூலின் அட்டைப்படத்தை தமிழ்நாட்டின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவரான ஓவியர் மருது வரைந்திருக்கிறார்.

Image

இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் பற்றி மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் அவர்களுடன் உரையாடினோம். அவர் தெரிவித்த கருத்துகள்…

உங்களுக்கு ஈழத்தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படித் தோன்றியது? அதற்கான செயலில் இறங்க உந்திய காரணிகள் என்னென்ன?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக பாரீஸ் பல்கலைக்கழகம்-8ல், தமிழ்மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றிய இளநிலை முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுகப் பாடத்தை நடத்தி வருகின்றேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகள் உள்ளன. முதலாவதாக, தமிழ் இலக்கியத் தரவுகளை மையமாக / கருப்பொருளாகக் கொண்டு மொழிப்பண்பாட்டை படிப்பித்தல். இரண்டாவதாக, புலம்பெயர் தமிழரின் மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல்.

இலக்கியத் தரவுகள் மூலம் மொழியையும் பண்பாட்டையும் பயிற்றுவித்தலில் (பயிற்றுமுறை) மொழிபெயர்ப்பு (Pedagogical translation) அத்தியாவசியமான கருவியாகும். மேலும், புலம்பெயர் இலக்கியத் தரவுகள் இல்லாமல் புலம்பெயர்த் தமிழர் பற்றிய ஆய்வு மேற்கொள்ள முடியாது. இந்த இரண்டு அடிப்படைக் காரணங்களும், என்னுடைய பாடத்திட்டத்தின்கண் பலதமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பட்டறைகளை திட்டமிட்டு நடத்த வழிவகுத்தன. இப்பட்டறைகளில் கலந்துகொண்டோரில் 95 விழுக்காடு யாழ்ப்பாணத் தமிழ்மக்களே.

Image

இக்காலகட்டத்தில், 1980-2000களில் பாரீஸில் யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப்பணி மிக்க உச்சகட்டத்தில் இருந்தது. இச்சூழ்நிலையில் என்னுடைய ஆராய்ச்சிப்பணி குறித்து கி.பி.அரவிந்தன் போன்ற சில எழுத்தாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. கி.பி.அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்தபட்டறைகளிலும் மேலும் என்னுடைய பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழி, பண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சிக்காகவும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களே கி.பி.அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்க்க வித்திட்டன.

புலம்பெயர்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

புலம்பெயர்ச் சூழலில், மூன்றாவது தலைமுறைக்குப் பின், முன்னோர் மொழியை தக்கவைத்துக் கொள்வது என்பது படிப்படியாகக் குறைந்து ஒருகாலகட்டத்தில் மறைந்துவிடும் என்பது ஒரு கண்டறிந்த கருத்து. இவ்வாறன மொழி, பண்பாட்டு இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக புலம்பெயர்ச் சமுதாயங்கள் பல யுக்திகளை கையாளுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் மொழிபெயர்ப்பு முயற்சியும். ஆனால், மற்ற முயற்சிகளோடு ஒப்பிடும்போது மொழிபெயர்ப்பு சிறிது சிக்கலானது. இருமொழியப் பண்பாட்டினை உள்வாங்கி செயல்பட வேண்டியுள்ளதால், பல புலம்பெயர்ச் சூழல்களுள் இருமொழியத் தேர்ச்சி பெறும் முன்பே மூதாதையர் மொழிப்பண்பாட்டு இழப்பு காலூன்றிவிடுகின்றது. தமிழ்மொழி இலக்கியங்களை பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற தாங்கள் வாழுகின்ற பகுதியின் முக்கியமான மொழிகளில் மொழிபெயர்ப்பது பின்வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் கருத்தில் கொள்ளவேண்டும். 1960-70களில் மலேசியத் தமிழரிடையே தமிழ்மொழிப் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் மற்றும் மொழி உணர்வு ஏற்படுவதற்கும் தமிழ் ஆங்கில இருமொழியில் தேர்ச்சியும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் வித்திட்ட நிகழ்வை சிறந்த முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பின் போது தாங்கள் எதிர்கொண்ட சவால்களை கூறுவீர்களா?

முதலில், இம்மொழிபெயர்ப்பு ஒருகூட்டுப்பணி, பலருடைய ஒத்துழைப்பின் பலனாகத்தான் செயல்படுத்தி முடிக்க முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பே நடந்தேறியுள்ளன. இந்த, எங்களுடைய முயற்சி புதிதல்ல.ஆனால், நோக்கம்தான் சிறிது வேறுபட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு தமிழ் இளையதலைமுறையினருக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய இலக்கு. அடுத்து, அரவிந்தனின் கவிதைகள் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தவை. மொழிபெயர்ப்பில் சவால்கள் ஏற்படுவது புதிதல்ல,ஆனால், எல்லோரும் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் எல்லாம் எங்களுடைய இந்த இலக்குகளையும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை வகையையும் சார்ந்ததே. அரவிந்தன் மூன்று கவிதைத் தொகுப்புகளில் தொண்ணூறு கவிதைகளை வெளியிட்டுள்ளார். முதலாவதாக எதிர்கொண்ட கேள்வி, இத்தொண்ணூறு கவிதைகளில் எத்தனைக் கவிதைகளை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்பதுதான். எங்களுடைய இரு இலக்குகளையும் திருப்திப்படுத்த வேண்டும். அதே வேளையில் கவிஞரின் உள்ளக் கிடக்கைகளையும் / எண்ணங்களையும் பண்பாட்டு தாக்கங்களை, குறுக்கீடுகளைத் தாண்டி பொருள் மயக்கமின்றி மொழிமாற்றம் செய்ய வேண்டும். நானே தனித்து பல முறையும் திரு அரவிந்தனுடன் கலந்து பலமுறையும் ஒவ்வொரு கவிதையாகப் படித்து பரிசீலனை செய்து பண்பாட்டுப் புரிதல்களில் சிக்கல் இல்லாத அல்லது சிக்கல்கள் மிகக்குறைவாக உள்ள கவிதைகளை முதலில் தெரிந்தெடுத்தோம். பின்னர் அவற்றுள் பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட சாதியம் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை மொழிமாற்றம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. அடுத்து இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் குறித்த கருத்துகளை மிகத் துல்லியமாக அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு தனிமனிதனின், தந்தையின், சுதந்திர போராட்ட வீரனின் நிலையில் நின்று எவ்வாறு மொழிபெயர்ப்பது? இக்கேள்விகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பு என்பது ஒரு மிகக் கடினமான மீட்டுருவாக்க பயிற்சி. இப்பயிற்சியை முடிந்த அளவு வெற்றியுடன் முடிக்க பலருடைய ஒத்துழைப்பும் தேவை என்பது தெளிவு.

Image

இம் மொழிபெயர்ப்பின் போது இக்கவிதைகள் ஊடாக நீங்கள் பெற்ற அனுபவங்கள் என்னென்ன?

யாழ்ப்பாணத் தமிழர் பற்றியும் அவர்களது தமிழ்மொழியின் தனித்தன்மைகள் பற்றியும் எவ்வளவோ படித்திருந்தாலும் அரவிந்தனின் கவிதைகள் மூலம் தெரிந்துகொண்டது அளவிலடங்காதது. அவர்களது சமூக அமைப்பு, பண்பாட்டு விதிகள், சாதி சமயக் கோட்பாடுகள், உரிமை பறிக்கப்பட்டோரின் ஆற்றாமை, காந்தி அல்லது அரவிந்தர் போன்ற ஆன்மிகவாதிகள் போராளிகளாக அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகின்றது எனும் பல்வேறுபட்ட கருத்துகளை அடக்கி புனையப்பட்டுள்ள அவரது கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலுகின்ற எல்லோரும் என்னைப் போல் திக்கு முக்காடித்தான் போக வேண்டியிருக்கும். உள்ளுக்குள் வீசும் பெரும் புயலை ஆற்றுப்படுத்தி அதனை ஆக்க சக்தியாக மாற்ற கவிஞனாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தை புகட்டுவதாக இருந்தது இம்மொழிபெயர்ப்பு அனுபவம். திரு அரவிந்தனின் கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த, தாய்நாட்டைத் துறந்த, சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்த ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

இக்கவிதைகளில் எல்லாம் அங்கும் இங்குமாக என்னுடைய அனுபவங்களில் பலவற்றை அடையாளம் கண்டேன். அரவிந்தனுடைய கவிதைகள் அவருடைய தனிப்பட்ட  அனுபவங்களின் அடிப்படையில் இருப்பினும் புலம்பெயர்ந்த ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் ஏதோ ஒருவகையில் சித்தரிப்பதாக உள்ளன. இக்கவிதைகளை என்னுடைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது ஒவ்வொருவரும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களில் ஏதோ ஒருசில அரவிந்தனது கவிதைகளில் பிரதிபலிப்பதாகக் கூறினர். அரவிந்தனுடைய கவிதைகள் எல்லைக் கடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவை அவர் உலகுக்கு விடுத்த தூது என்று கொள்வது மிகையாகாது.

– முகிலன், பாரீஸ் 

நூல் அறிமுகம் – 1

சாகசக்காரி பற்றியவை 

Image

னிதநேயப் பண்புகளும் முற்போக்கான சிந்தனைகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் மிகுந்த கவிஞர் தான்யா புலம் பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவர். தான்யாவின் புதிய கவிதைத் தொகுப்பு ‘சாகசக்காரி பற்றியவை’. 2009ல் வெளி வந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் இவர்.

புலம்பெயர் வாழ்வில் புலம்பெயர்ந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் தாய்நிலம் பிரிந்த ஏக்கம், கலாசார-நிற வேறுபாடு, மண்ணுக்குரியவர்களால் அந்நியராக மதிக்கப்படுகின்ற நிலை, புலம்பெயர்ந்து வாழும் நிலத்தில் மனதோடு ஒட்டிக் கொள்ளாத வாழ்வு, இன்னபிற நிலைகளைக் கடந்தும், உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மனிதரின் நல்வாழ்வும் – தமிழ்கூறும் நல்லுலகத்தின் வளர்ச்சியும் உயர்ச்சியும் நாடி நிற்கின்ற சமூக அக்கறையும் ஆண்-பெண், உயர்வு-தாழ்வு கலைந்த சமநிலை வேண்டுகின்ற சமூக மாற்றமும், ஆளுமையும், போர்க்குணமும் இயல்பாகவே உள்ள பலநூறு ஈழப் பெண்களில் ஒருவராவார் கவிஞர் தான்யா.

புத்தாயிரத்திலிருந்து எழுதி வரும் கவிஞர் தான்யா தனது கவிதைகளில் மனிதர்களுக்குச் சில வேளைகளில் தோன்றக்கூடிய சூழலோடும், சூழ்நிலைகளோடும் ஒன்றிப் போகாத, ‘‘கூட்டத்தோடு இருக்கும் போது தனிமையில் இருப்பதாகவும், தனிமையில் இருக்கும் போது கூட்டத்தோடு இருப்பதாகவும்’’ எண்ணக் கூடிய மனப் பிறழ்வு நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார். உலகில் சரிபாதியாக இருக்கின்ற, பேராற்றல் கொண்ட பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றுகிறது, தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்ட்த்துக்குள் சுற்ற வைக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர எத்தனிக்கும் போராடிக் கொண்டிருக்கும் ‘சாகசக்காரி(கள்) பற்றியவை’ இக்கவிதைகள். நன்னல வாழ்வை நோக்கிய முன்னகர்த்தலாக, வாசிப்பில் பெரிதுவக்கும் இந்நூலை ‘வடலி வெளியீடு’ பதிப்பித்துள்ளது.

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில…

மூச்சுக் காற்றுக் கூட

எட்டாத தொலைவில்

வாழ்வு.

***

திகார சமனற்ற வாழ்வை

ஏற்றுக் கொண்டு

நினைவில் முட்டி

மோதித் தெறிக்கும்

இயலாமையின் கனத்தோடு

நாட்கள் நகரும்

 

உள்ளிடும் வார்த்தைகளின்

அழுத்தத்தில்

மொழி இழந்த மௌனம்

 

காலையும் மாலையும்

எழுதலும் மறைதலுமாய்

சூரியன்

 

விருப்பு வெறுப்பு தன்னம்பிக்கை

இவற்றை

பற்ற விழையும்

ஒரு சிறுமிக்கு

 

ஏது இயல்பு

***

ங்கிருக்கிறாய் என் அன்பே

எரிந்துபோன கட்டிடங்களிலா

தொலைந்துபோன நாகரிகங்களிலா

எங்கு உன் வாழ்வு

மறைந்து கிடக்கிறது

ஓயாது அலையும் கடலிடமும்

ஈரக் காற்றிடமும்

மறக்க முடியாத உன் நினைவைச் சொன்னேன்

அவை உன்னையும்

உன் தேச(க)த்தின் நினைவையும்

அடித்து வந்தன.

***

த்தனை குழந்தைகள்

பதிலற்ற கேள்வியாய்

நூறாயிரம் கால்களுடன்

என்னை வந்தடைகின்றது

ஓசையின்றி வரும் எரிச்சலை

என்னுள் அழித்துக் கொள்கின்றேன்

வெளியில்

மத்த்தின் பெயரால்

மனிதாபிமானமாய்

‘‘குழந்தைகளைக் கொல்லாதீர்’’

என்கின்ற கோசங்கள்.

பிரசவங்கள் பற்றி

எடுத்தெறிந்த கர்ப்பப்பை பற்றி

கருச்சிதைவு பற்றி,

கர்ப்பப்பை அற்றவர்கள் பற்றி

கருக்கலைப்பு கர்ப்பத்தடை பற்றிப்

புரியாதவர்கள்

எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்

இன்னும் பிரசவங்களை

***

வெளியீடு: வடலி வெளியீடு

விலை: ரூ.50/-.

முகவரி: 8A, அழகிரி நகர் 4வது தெரு,

லட்சுமிபுரம்,

வடபழனி, சென்னை – 600 026.

மின்னஞ்சல்: sales.vadaly@gmail.com

இணையத்தளம்: http://www.vadaly.com

***

விற்பனை மற்றும் தொடர்புகளுக்கு…

தமிழ்நாடு: +91 – 97892 34295

கனடா: +1 64789 63036

***

நூல் பற்றிப் பகிர…

sakasakkari@gmail.com

***