மவுலிவாக்கம் II

ஓர் ஏரியின் தேடல்

IMG_8124

தண்ணீரால் தளும்பி வழியும்

தாகம் தணிக்கும் ஜீவன் நான்.

தாவர உரோமங்கள் என் தசைகளில்…

 

வானம் தருகிற மழை முத்தம் என் மடியில்.

என்னுள்

சிலிர்த்துயிர்க்கும் ஜீவராசிகள்!

 

தலைப்பிரட்டை, மீன், தவளை

நண்டு, நத்தை, பாம்பு

அட்டை, ஆமை, உள்ளான் என

அத்தனை ஜீவராசிகளும்

அடைக்கலம் என் கர்ப்பத்தில்!

 

புல், பூண்டு, பச்சிலை

ஆம்பல்,கருங்குவளை, தாமரை

நான் அணியும் இயற்கை ஆபரணங்கள் !

 

தினமும் வானம் முகம் பார்க்கும்

வசீகரக் கண்ணாடியாய் என் தேகம்!

 

பறவை, எலி, அணில், முள்ளம் பன்றி, மூஞ்சூறு

சிக்குளுக்காம் மூட்டிச் சேட்டை செய்யும்

என்  மேனியெல்லாம்!

 

ஆல், அரசு, வேங்கை,

தென்னை, தேக்கு, கோங்கிலவம்…

நிழல்களின் ராஜ்ஜியம் என் கரையெல்லாம்!

 

உழவராய், மள்ளராய், வேடராய்

மாடுகள் குளிப்பாட்டிய மனுசனே…..

உயிர்களுக்கெல்லாம் உறைவிடமாகி

பயிர்ப் பச்சிலுக்குப் பாசனமாக

நீ

எப்போது திறந்தாலும்

என் மதகிலிருந்து மதநீர் பாய்ந்ததே!…..

இன்றென்ன ஆச்சு?…

ஏனிந்தப் பேராசை?

 

மாடிகள் இடிந்து மரண ஓலம்

சுவர்க் கோழிகள் ரீங்கரித்த என் செவியோரம்

உயிர்பிழியும்

கடவுளின் தற்கொலை ஓசைகள்!

 

ஜீரணிக்க முடியவில்லை…

செவிகிழியும் மரண கீதங்கள்!

 

அடைந்துபோன என் ஆதி மதகுகளில்

அணை உடைத்துப் போகும்

கருணையைத் தேடி என் கண்ணீர் வெள்ளம்!

 

மனிதர்களை நம்பமுடியவில்லை…

கடவுளை காணவில்லை….

 

– நா.வே.அருள்

 

முகவரியற்ற மரணங்களும் மரணங்களற்ற சில முகவரிகளும் !

IMG_8006

திடீரென இடிந்து நொறுங்கி

சிதிலமாகி

சிதைத்துப் போட்ட கான்க்ரீட் வனமென

காட்சியளிக்கும்

மவுலிவாக்கத்தில்

கண்டுபிடிப்புகளை மீறி நாறும்

முகவரியற்ற மரணங்கள்!

 

கால்குத்திக் கிழிக்கும் கான்க்ரீட் கம்பிகள்

நவீன சாம்பல் நிற சதுர கற்கள்

தகர்ந்து கிடக்கும் சிமெண்டுச் சுவர்கள்

சக்கரங்களில் சிக்கியக் கருப்பஞ் சக்கைகளாய்க்

காட்சியளிக்கும்

முறிந்து கிடக்கும்

கட்டிடத்தின் கணுத் தொடைத் தூண்கள் !

 

பாதாளத்தில்

சுவர்க் குகைகளுக்குள்

மரணத்திலிருந்து தப்பிக்க

வெடித்துக் கிளம்பும் மனிதர்களின் கடைசிக் கேவல்கள்

பூமி கேட்க விரும்பிய

மரணத்தின் நெடுந்துயரப் பாடல்களாக

இருக்க முடியாது…

 

பேராசைகளின் ஜீவநதியாய்ப்

பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்

சில மனிதர்களில் பணரங்கச் சுழற்சியில்

பாவம்… இந்த

பதினொரு மாடி வளாகம்!

 

இதயத் துடிப்பறியும் நவீன கருவியும்

தெர்மல் கேப்சரிங் கேமராவும்

கண்டுபிடிக்க முடியாமல் திணறும்

துரோகங்களின் மீது கட்டப்பட்ட

“நம்பிக்கை” என்னும் வாசகம் பொறித்த வளாகத்தின்

இடிபாடுகளுக்கு அடியில்

கண்ணாமூச்சியாடும்

முகவரியற்ற மரணங்களும்

மரணங்களற்ற சில முகவரிகளும்!

– நா.வே.அருள்

 

நூல் அறிமுகம் – 1

சாகசக்காரி பற்றியவை 

Image

னிதநேயப் பண்புகளும் முற்போக்கான சிந்தனைகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் மிகுந்த கவிஞர் தான்யா புலம் பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவர். தான்யாவின் புதிய கவிதைத் தொகுப்பு ‘சாகசக்காரி பற்றியவை’. 2009ல் வெளி வந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் இவர்.

புலம்பெயர் வாழ்வில் புலம்பெயர்ந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் தாய்நிலம் பிரிந்த ஏக்கம், கலாசார-நிற வேறுபாடு, மண்ணுக்குரியவர்களால் அந்நியராக மதிக்கப்படுகின்ற நிலை, புலம்பெயர்ந்து வாழும் நிலத்தில் மனதோடு ஒட்டிக் கொள்ளாத வாழ்வு, இன்னபிற நிலைகளைக் கடந்தும், உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மனிதரின் நல்வாழ்வும் – தமிழ்கூறும் நல்லுலகத்தின் வளர்ச்சியும் உயர்ச்சியும் நாடி நிற்கின்ற சமூக அக்கறையும் ஆண்-பெண், உயர்வு-தாழ்வு கலைந்த சமநிலை வேண்டுகின்ற சமூக மாற்றமும், ஆளுமையும், போர்க்குணமும் இயல்பாகவே உள்ள பலநூறு ஈழப் பெண்களில் ஒருவராவார் கவிஞர் தான்யா.

புத்தாயிரத்திலிருந்து எழுதி வரும் கவிஞர் தான்யா தனது கவிதைகளில் மனிதர்களுக்குச் சில வேளைகளில் தோன்றக்கூடிய சூழலோடும், சூழ்நிலைகளோடும் ஒன்றிப் போகாத, ‘‘கூட்டத்தோடு இருக்கும் போது தனிமையில் இருப்பதாகவும், தனிமையில் இருக்கும் போது கூட்டத்தோடு இருப்பதாகவும்’’ எண்ணக் கூடிய மனப் பிறழ்வு நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார். உலகில் சரிபாதியாக இருக்கின்ற, பேராற்றல் கொண்ட பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றுகிறது, தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்ட்த்துக்குள் சுற்ற வைக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர எத்தனிக்கும் போராடிக் கொண்டிருக்கும் ‘சாகசக்காரி(கள்) பற்றியவை’ இக்கவிதைகள். நன்னல வாழ்வை நோக்கிய முன்னகர்த்தலாக, வாசிப்பில் பெரிதுவக்கும் இந்நூலை ‘வடலி வெளியீடு’ பதிப்பித்துள்ளது.

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில…

மூச்சுக் காற்றுக் கூட

எட்டாத தொலைவில்

வாழ்வு.

***

திகார சமனற்ற வாழ்வை

ஏற்றுக் கொண்டு

நினைவில் முட்டி

மோதித் தெறிக்கும்

இயலாமையின் கனத்தோடு

நாட்கள் நகரும்

 

உள்ளிடும் வார்த்தைகளின்

அழுத்தத்தில்

மொழி இழந்த மௌனம்

 

காலையும் மாலையும்

எழுதலும் மறைதலுமாய்

சூரியன்

 

விருப்பு வெறுப்பு தன்னம்பிக்கை

இவற்றை

பற்ற விழையும்

ஒரு சிறுமிக்கு

 

ஏது இயல்பு

***

ங்கிருக்கிறாய் என் அன்பே

எரிந்துபோன கட்டிடங்களிலா

தொலைந்துபோன நாகரிகங்களிலா

எங்கு உன் வாழ்வு

மறைந்து கிடக்கிறது

ஓயாது அலையும் கடலிடமும்

ஈரக் காற்றிடமும்

மறக்க முடியாத உன் நினைவைச் சொன்னேன்

அவை உன்னையும்

உன் தேச(க)த்தின் நினைவையும்

அடித்து வந்தன.

***

த்தனை குழந்தைகள்

பதிலற்ற கேள்வியாய்

நூறாயிரம் கால்களுடன்

என்னை வந்தடைகின்றது

ஓசையின்றி வரும் எரிச்சலை

என்னுள் அழித்துக் கொள்கின்றேன்

வெளியில்

மத்த்தின் பெயரால்

மனிதாபிமானமாய்

‘‘குழந்தைகளைக் கொல்லாதீர்’’

என்கின்ற கோசங்கள்.

பிரசவங்கள் பற்றி

எடுத்தெறிந்த கர்ப்பப்பை பற்றி

கருச்சிதைவு பற்றி,

கர்ப்பப்பை அற்றவர்கள் பற்றி

கருக்கலைப்பு கர்ப்பத்தடை பற்றிப்

புரியாதவர்கள்

எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்

இன்னும் பிரசவங்களை

***

வெளியீடு: வடலி வெளியீடு

விலை: ரூ.50/-.

முகவரி: 8A, அழகிரி நகர் 4வது தெரு,

லட்சுமிபுரம்,

வடபழனி, சென்னை – 600 026.

மின்னஞ்சல்: sales.vadaly@gmail.com

இணையத்தளம்: http://www.vadaly.com

***

விற்பனை மற்றும் தொடர்புகளுக்கு…

தமிழ்நாடு: +91 – 97892 34295

கனடா: +1 64789 63036

***

நூல் பற்றிப் பகிர…

sakasakkari@gmail.com

***

 

தொல்லியல் துறையில் அம்மா!

Image

மார்கழி மகோத்சவங்கள்

மனம் நிறைக்கும் கச்சேரிகள்…

மறப்பதில்லை எப்போதும்.

 

அம்மாவின் தள்ளாமை…

நாமும் போகமுடியாமல் போனாலும்

ராகமழைதான் வீட்டில்.

 

முதிர்ச்சியின் ஆலாபனையுடன்

மழலைக்கு மாறியதால்

மிளிறும் மொழியெல்லாம்

மோகனம்தான்.

 

குளறும் வார்த்தைகளுடன்

கொட்டித்தீர்க்கும் அன்புதான்

கல்யாணி.

 

அந்தக்கால கதைகளை     

ஆசையுடன் ஆரம்பிப்பது

ஆனந்தபைரவிதான்.

 

நடுங்கும் விரல்களுடன்

நமக்கு திலகமிட்டு

நெகிழும் நேரம்

நன்றாய் கேட்கும் நீலாம்பரி

.

தொண்ணூறு என்பது

வயோதிகமாய் தோன்றவில்லை

தொல்லியல் கச்சேரி ஒன்றை

தொடங்கி இருக்கிறாள்

அம்மா.                           

– ரஜினி பெத்துராஜா

Image courtesy: http://nutrivize.com/

வண்ணம் படிந்த கவிதைகள்

Image

ஒரு சுழலும் மின்விசிறியின் கீழ்…

 வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சியை 

எப்படி வரவேற்பது என்று புரியாமல் விழித்தேன்.

இயல்பான பறத்தல் மறந்த அதன் படபடப்பை மறக்கடிக்க 

நான் என்னதான் செய்யவேண்டும்?

அதன் மொழியில் வார்த்தைகள் கற்காத நான் 

எனது வரவேற்பை எப்படிப் புரியவைப்பேன்?

அதன் மொழியைப் புரிந்து கொள்ள 

நான் இயற்கையின் எந்தப் பாடத்தைப் படிக்கவேண்டும்?

அறையெங்கும் அதன் பயந்த சுவாசம் நிறைந்திட 

என் மார்புக் கூட்டுக்குள் 

காற்றுப் போன பலூன்கள் 

பாறைகளைப்போல அசைகின்றன.

வண்ணத்துப்பூச்சியை வரவேற்பது இருக்கட்டும் 

எப்படி அதை வெளியேற்றுவது 

என்பதுதான் இப்போதைய எனது பிரச்னை! 

வேகமெடுத்த வாகனத்தின் முன் 

திட்டவட்டமாக விபத்தை எதிர்நோக்கிய 

ஒரு  தடுமாறும் நெடுஞ்சாலைப் பயணியைப் போல

சுழலும் மின்விசிறி நோக்கி 

ஏறி இறங்கிப் பறந்துகொண்டிருக்கும் 

வண்ணத்துப்பூச்சியை 

எப்படி அறையை விட்டு வெளியேற்றுவது என்று புரியாமல் விழிக்கிறேன்!

Image
                                             

 காற்றில் பறக்கும் வண்ணங்கள் 

வண்ணத்துப்பூச்சியை 

விழிகளால் நோக்கிடும் துணிச்சலில்லை 

விழிகளில் ஒட்டிக்கொண்ட வண்ணங்களை 

துடைத்தெடுக்க 

மின்பஞ்சு விரல்கள் வாய்க்கவில்லை எனக்கு.

Image 

வண்ணத்துக் கிளி 

வண்ணத்துப்பூச்சியை 

இனி யாரும் பூச்சி என்று சொல்ல வேண்டாம் 

என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எல்லோரையும்…

பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று 

நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்…

அதன் பறத்தல் பறவைக்கும் வாய்க்காது என்று 

பரவசப்படுகிறீர்கள்…

அதற்கு சிறகுகள் இருப்பதாக 

நீங்கள்தான் சிலாகிக்கிறீர்கள்…

ஒரு மலரே பறவையானதைப் போல 

வண்ணங்கள் நிறைந்த அதன் பெயரை 

இனி நீங்களும் நானும் சேர்ந்து 

இப்படி மாற்றி வைக்கலாமா..?

” வண்ணத்துக் கிளி” 

– நா.வே.அருள்

Image courtesy:

http://www.pageresource.com

http://img.wallpapergang.com

http://www.mrwallpaper.com/

http://timskellett.com

Image

மகாபாரதம் ஒரு மறு ஒளிபரப்பு

Image

நாட்கள் கடந்துவிட்டன

வியாசனுக்கே வியப்பு

மகாபாரதமே மாறிப்போய் விட்டது

கோபியர்களுக்கு ஒரே குழப்பம்

குளத்தில் குளிக்கையில் கண்ணன்

ஒளித்து வைத்த புடவைகள்

திரும்பக் கிடைக்குமாவென்றும்

முக்கியமாக…

நவீன கண்ணனை  நம்ப முடியுமாவென்றும்

இப்போது

வெண்ணெய் திருடி உண்டவன்

வாயைத் திறப்பதேயில்லை என்றொரு வதந்தி

யசோதை அதிர்ந்து போய் இருக்கிறாள்…

உலகமே ஒருவனின் வாய்க்குள்

வாயைத் திறந்ததோ கம்சன்!

ஒன்றுமட்டும் மாறாமல்…

துரியோதனின் துகிலுரி சபை தொடர்கிறது

விதுரர்களும் வேடிக்கைபார்க்க

சபை மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது

அலுவலகங்களில்…நீதிமன்றங்களில்…

ஊடகங்களில்…பேருந்துகளில்….

இன்னும்…இன்னும்…

ஆண்கள் புழங்கும் அத்தனை இடங்களிலும்….

  ஆதி பெருந்தேவி  

 Image courtesy: http://commons.wikimedia.org/

போன்சாய் கவிதைகள்

Image

கொசு வளரும் சாக்கடையில் 

வளர்கிறது 

வாழையும்!

***

 Image

இலைகள் ஏந்தி… மரங்கள் 

அமுது படைக்க 

ஒருவரேனும்..?

***

Image

அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த 

கோன் ஐஸ்க்ரீம் 

இந்தியா….

*** 

Image

அனேக பசுக்கள் இறந்து கிடந்தன 

அறுந்துகிடந்தது 

ஆராய்ச்சிமணி 

***

Image 

ராமன் ஆண்டாலென்ன ?  ராவணன் ஆண்டாலென்ன?

விட்டுவிட முடியுமா?

சீதை சொல்லட்டும்…

-நா.வே.அருள் 

ஆமாஞ்… சொல்லிப்புட்டேன்!

Image 

பொண்ணாப் பொறந்ததுக்குப் 

     புழுவாப் பொறந்தாலும் 

மண்ணில் பொரண்டுடலாம் 

     மறைவாக் கெடந்திடலாம் 

 

சிறுஜன்னல் கம்பியெல்லாம் 

     சிறைக்கம்பி ஆனதென்ன?

ஒருமின்னல் இடியாகி 

     உடம்புக்குள் விழுந்ததென்ன?

 

அடியேன்னு கூப்புடுற  

     ஆம்பிளைக்குச் சேவைசெய்ய 

புடவை கட்டிவிட்ட 

     பொம்மையாய்ப்  பொறந்ததென்ன ?

 

கொழந்தை பெக்கும் மெசினாகக் 

     குல விருத்தி செய்தவளை 

அழுந்தி மிதிக்குறாங்க 

     அவ உசுர எடுக்குறாங்க 

 

சாணியால மெழுகி வச்சி 

     சம்பரமா கோலம்போட்டு 

நாணிக் கோணி நின்னுப்புட்ட 

     நாளெல்லாம் போயாச்சு 

 

எந்திரமா ஒழைச்சாலும் 

     எஞ்சியதைத்  தின்னுப்புட்டு 

தந்திரமா ஏமாந்த 

     தரித்திரமே முடிஞ்சிடுச்சு 

 

வானத்தில் பறக்குறமே 

     வரலாறா இருக்குறமே 

வானந்தாண்டி ஞானத்தின் 

     வாசலையே திறக்குறமே 

 

விஸ்வரூபப் பெண்வடிவம் 

     விபச்சார வாணிபமா?

பஸ்சுக்குள் துகிலுரிய 

     பாஞ்சாலி ஆகணுமா?

 

கற்பை வச்சி சூதாடும் 

     களியாட்டம் நிக்காதா?

உறுப்பை சிதைப்பவர்கள் 

     உரு சிதைஞ்சி போகாதா?

 

மொத்த மேனியையும் 

     முழுங்கிப்புட்ட பொய்சிவனே 

அர்த்தநாரி என்னும் 

     அலங்காரச் சொல் எதற்கு?

 

ஆண்டாண்டா செய்ஞ்சி வந்த 

     அநியாயம் பலிக்காது 

பெண்டுகளே  இனிஇந்தப் 

     பிரபஞ்ச வரலாறு 

– வெள்ளச்சி 

(2012 டிசம்பர் 16 ஆம் நாள் இரவில் புது தில்லியின் தென்பகுதி முனிர்கா அருகில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் உயிர் சூறையாடப்பட்ட ஒரு பெண்ணின் நினைவாக…)

 Image Courtesy: http://www.actionaid.org.uk

 

தொண்டையில தூண்டி முள்ளு!

Image

அடுக்குமா மவராசா

அன்னாடம் குடிச்சுப்புட்டு

எடக்கு  பண்ணுறயே

எழவு எடுக்குறயே

டாஸ்மாக்கு போதையிலே

டவுசர் கிழிஞ்சிடுச்சி

கோஸ் அழுகிப் போனதுபோல்

குடும்பம் அழிஞ்சிடுச்சி

மவுஸ் நெறஞ்ச பெருவாழ்க்கை

மதுவால தாழ்ந்தாச்சே

பியூஸ் போன பல்பாச்சே

பிணம் விட்ட மூச்சாச்சே

மாடத்துல வச்ச காசு

மாலையிலே காணலியே

பாடையிலே போறவனே

பசியாத்தத்  தோணலியே

நான் வடிச்ச கண்ணீரு

நாய் வடிச்ச கண்ணீரா

பேய் புடிச்ச சாராயம்

பேதியிலே போகாதா

ஒருடம்ளர் சாராயம்

ஊத்திக்கிட்டு வந்தாக்கா

தெருவே நடுங்குதையா

திருவாயும் நாறுதையா

வீட்டுக்குக் கேடுன்னு

விளம்பரத்தில் எழுதிவச்சி

நாட்டுச் சரக்குகளோ

நாட்டுடைமை ஆனதென்ன

குடிகாரன் பொஞ்சாதி

கூப்பாடு கேக்கலையா

குடிகாரன் கேக்கவில்ல…

குடியரசு கேக்காதா..?

– வெள்ளச்சி

புதிய சமையலறை

Image

உப்பும் சர்க்கரையும் உள்ள 

பழைய என் சமையலறைதான் 

எனினும்…

சாத்தியங்களை  மீறும் 

புதிய சமையலறை!

இப்போதும் நான்தான் சமைத்துக்கொண்டிருக்கிறேன் 

இனி… 

புதிய சமையல்!

 ******

Image

கத்தரிக்காய் எனது சகோதரி 

அதுவும் 

கொண்டை வைத்திருக்கிறதே…

******

Image

எந்த கிளி 

பட்டினி கிடக்கிறதோ…

கோவைக்காய் 

******

Image 

ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தை 

வெட்டிச் சமைக்கிறேன் 

முட்டை கோஸ் 

******

Image

எப்போது கேட்கும் 

சமையலறைக்குள் 

ஆண்களின் சத்தம்? 

******

Image

விரல்களின் விஸ்வரூபம் கோலம் 

எப்போது உணர்வாய் 

உனது விஸ்வரூபமே உலகம்!

– ஆதி பெருந்தேவி

Image Courtesy:

http://www.myshutterspace.com

http://www.indiamart.com/

http://pettagum.blogspot.in

http://www.dosomething.org