ஸ்டார் தோழி – 13

ஒரு தோழி பல முகம்

Kavinaya Proifile 1

கவிநயா

எழுத்தாளர் / நடனக் கலைஞர்

Kavinaya.blogspot.in

நான்…

இந்தியப் பெண்ணாக அமெரிக்க மண்ணில் வாசம். மென்பொருள் பொறியியலாளராக வேலை. பெற்றெடுத்தது ஒரே ஓர் ஆண் பிள்ளை என்றாலும் நடன மாணவிகளாக என்னை வந்து சேர்ந்த பெண்பிள்ளைகள் அதிகம். உயிருக்குயிராக என்னை நேசித்துச் சீராட்டும் தோழிகளுக்கு, நானும் அவ்வாறே இருக்க முயற்சிக்கிறேன்.

பள்ளியும் ஆசிரியர்களும்

10ம் வகுப்பு வரை ஒரு குக்கிராமத்தில் தமிழ் மீடியத்தில் படிப்பு. அங்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசானையும், தமிழ் ஐயாவையும், கணக்கு மாஸ்டரையும் மறக்க முடியாது! அபூர்வமான ஆசிரியர்கள் அந்தக் கிராமத்துப் பள்ளியில் அமைந்தது என் அதிர்ஷ்டம். டிராயிங் மிஸ்தான் ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கும் நடனம் சொல்லித் தந்து, மேக்கப் போட்டு விட்டு, இப்படி எல்லாமே செய்வார்கள். ஒழுக்கம், படிப்பு, சந்தோஷம், இப்படி அனைத்தையும் போதித்த இடம் அது.

வாழ்வது…

விர்ஜீனியா மாகாணம்… வசிப்பது அமெரிக்கா என்றாலும் அதை அவ்வப்போது நினைவுபடுத்தித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவு இந்திய கலாசாரம் இங்கு வேரூன்றியிருக்கிறது. கோயில்களில் பூஜைகளும் பண்டிகைகளும் தவறாமல் அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதில் ஆகட்டும்… தமிழ் வகுப்புகளுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று கற்றுக் கொள்ளும் குழந்தைகளில் ஆகட்டும்… பாட்டு மற்றும் நடன வகுப்புகளுக்கு காட்டப்படும் ஆர்வத்தில் ஆகட்டும்… ஆன்மிக விழாக்கள், சத்சங்கங்களில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இந்த ஊர் ஒரு குட்டி இந்தியா என்றே சொல்லலாம். அலுவலகத்திலோ அல்லது சில வெளியிடங்களிலோ அமெரிக்கர்களைக் காணும் போதுதான், ‘ஆஹா, நாம் அமெரிக்காவில் இருக்கிறோம்’ என்ற நினைப்பே வரும். இங்கு சொந்தங்கள் அதிகம் அருகில் இல்லை என்பதனாலேயே நண்பர்களுக்குள் நெருக்கம் அதிகம். கூப்பிடாமலேயே நிலைமை புரிந்து உடனே உதவிக்கு ஓடி வரும் அன்பும் அதிகம்.

அமெரிக்கர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. முதலில், காலையில் சீக்கிரம் எழுவது. காலை 7:00 – 7:30 மணிக்குள் பலரும் வேலைக்கு வந்து விடுவார்கள். எங்கு சென்றாலும் கூட்டமாக இருந்தால் வரிசை ஏற்படுத்தி விடுவார்கள். பல நாட்டு மக்களும் இங்கு வசிக்கும் நிலையில், மற்றவர்களின் பழக்கங்களை, கலையை, உணவை, கலாசாரத்தை, கீழாக எண்ணாமல் மேலாக மதித்துப் பாராட்டுவார்கள். வயதானவர்களும் முடிந்த வரை வேலை செய்த வண்ணம் இருப்பார்கள். இங்கு எல்லா நாட்டு உணவு விடுதிகளும் உள்ளன. எனக்குப் பிடித்தவை இத்தாலியன் மற்றும் மெக்ஸிகன் உணவு வகைகள்!

புத்தகங்கள்

sugi sivam

மிகவும் பிடித்த்து கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். சுய முன்னேற்ற நூல்களில் ஆர்வம் உண்டு. சுகி.சிவம் எழுத்துப் பிடிக்கும்.

பொழுதுபோக்கு

எழுதுவதும் நடனம் ஆடுவதும். அவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கி விட முடியாதபடி, வாழ்க்கையின் அங்கங்கள் ஆகிவிட்டன. கல்லூரியில் கவிதை எழுத ஆரம்பித்து, எழுத்துப் பயணம் எங்கெங்கோ தொடர்ந்து, இப்போது வலைப்பூவில் எழுதுவதுடன் நிற்கிறது. அதற்கு அப்பால் செல்ல நேரம் இல்லை… நடனம் கற்றுக் கொடுப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் பெரும்பாலான நேரம் கழிகிறது.

இயற்கை

இயற்கை என்பது அழகு மட்டுமல்ல… நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியதும் கூட. இயற்கை வளங்களை ‘taken for granted’ ஆகக் கொண்டிருப்பது மிகவும் வருத்தம் தரும் விஷயம். ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் தன் வரையிலாவது அதனைப் பாழ்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வது நம் எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்கு மிகவும் அவசியம். இந்தக் காலத்தில் விளை நிலங்களும் நீர் நிலைகளும் கட்டிடங்களாக மாறிக் கொண்டிருப்பதைக் காணக் காண வேதனை அதிகரிக்கிறது.

தண்ணீர்

water-conservation1

ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1,000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்… அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம் ஆபிட் சுர்தி (Aabid Surti). அதனால், மும்பையில் வீடு வீடாகச் சென்று ஒழுகும் குழாய்களை இலவசமாகச் சரி செய்து தர ஆரம்பித்தார். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 4 லட்சத்து 14 ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்! நாம் ஒவ்வொருவரும் அவரைப் போல் ஆக முடியாவிட்டாலும், நம் வரையில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க முயற்சிக்கலாம்.

banana leaf

thonnai

அதே போல் பிளாஸ்டிக் சாமான்களையும் பைகளையும் முடிந்த வரை தவிர்க்கலாம். இந்தியாவில் அந்தக் காலத்திலேயே திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தக் கூடிய துணிப்பைகளையும், வாழை இலைகளையும், தொன்னைகளையும், மரத்தாலான விளையாட்டுச் சாமான்களையும் பயன்படுத்தினார்கள். நம் முன்னோர் அப்போதே ஒரு காரணத்தோடுதான் இந்தப் பழக்கங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், மேல் நாட்டுப்பழக்கங்களின் மோகம் காரணமாக வேண்டாதவற்றை நிறையக் கற்று வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

குப்பை

நம் ஊரில் ‘கண்ணைக் கவரும்’ விஷயம் குப்பைகள்தான். இரண்டு கடைகளோ, வீடுகளோ இருந்தால் இருவரும் குப்பைகளைத் தள்ளி, இருவருக்கும் நடுவில் குவித்து வைக்கிறார்கள். காகிதக் கோப்பையில் காபி, டீ தருவது நல்ல பழக்கம்தான். ஆனால், அதைக் குடித்து விட்டுப் போட, கூடவே ஒரு குப்பைத் தொட்டியும் வைக்கலாமே! வெளிநாட்டுக்காரர்களிடமிருந்து என்னென்னவோ கற்றுக் கொள்கிறோம். இந்த அடிப்படை விஷயத்தைக் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். திரைப்படங்களில் கூட பிரபலமான கதாநாயகர்கள் ஏதாவது குடித்தாலும் சாப்பிட்டாலும் அப்படியே தூக்கித் தெருவில் எறிகிறார்கள். குறைந்தது அவர்கள் குப்பைத் தொட்டியைத் தேடி அதைப் போட்டால், அவர்களை ஆதர்சமாகப் பின்பற்றும் ரசிகர்களும் அப்படி மாற வாய்ப்பிருக்கிறது.

wastes

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும், மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களைத் தனியாகப் போடவும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கமும் இவற்றைச் சேகரிப்பதைச் சரியாக நடமுறைப்படுத்த வேண்டும். சென்னையிலும் நான் பார்த்த ஊர்களிலும் இவை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

குடி

Alcohol--generic

முன்பெல்லாம் புகைப் பிடிப்பது அடிக்கடி திரைப்படங்களில் காட்டப்பட்டது. இப்போது அது குறைந்து விட்டது. ஆனால், அதற்குப் பதில், குடிப்பது மிக அதிகமாகக் காட்டப்படுகிறது. திரைப்படங்களில் மட்டுமல்ல… சின்னத்திரை தொடர்களிலும் குடிப்பது மிக இயல்பான விஷயம் போலக் காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் குழந்தைகளும் இளைஞர்களும் ‘குடிப்பது தவறில்லை’ என்று நினைக்க மாட்டார்களா? அதே தவறான வழியில் செல்ல மாட்டார்களா? இயக்குநர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

மனிதர்கள்

அடிப்படையில் எல்லோரும் நல்லவரே. மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நிறைகளை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொள்வது நன்மை தரும்.

நேர நிர்வாகம்

நேர நிர்வாகம்தான் கடினமான ஒன்றாக இருக்கிறது. நேரத்துடன் போட்டி போட்டு சில வேலைகளைச் செய்ய நேரிடும் போதுதான் ஆயாசமும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் கலையைக் கற்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகிறேன்.

சமையல்

cooking

ஆர்வத்தோடு சமைத்ததை மற்றவர்கள் ஆசையாகச் சாப்பிடுவதைப் பார்த்தாலே, பட்ட சிரமமெல்லாம் மறந்து விடும். சமைக்கப் பிடிக்கும். என்றாலும், நேரம் அமைவதைப் பொறுத்துதான் சிறப்புப் பண்டங்கள், பலகாரங்கள் செய்ய முடிகிறது. நம்முடைய பண்டிகைகளுக்கு இங்கே விடுமுறை இல்லையென்பதால், முன்கூட்டியே திட்டமிட்டால்தான் நம் ஊரைப் போலக் கொண்டாட முடிகிறது.

வீடும் அலுவலகமும்

வீட்டுக் கவலைகளை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது. அலுவலகப் பிரச்னைகளை வீட்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால், செய்து கொண்டிருக்கிற வேலைக்குத் தேவையான கவனத்தை முழுமையாகச் செலுத்த முடியாது. ஆனால், அலுவலக வேலைகளை சில சமயம் வீட்டில் செய்ய நேரிடும். அது போன்ற சமயங்களில் முதலில் குடும்பத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடித்த பிறகே, கணினியைக் கையில் எடுக்கிறேன்.

கடந்து வந்த பாதை

வாழ்க்கையின் அனுபவங்கள் எத்தனையோ கற்றுத் தந்திருக்கின்றன. பொதுவாக இளமைக் காலமே இனிமையானது என்பார்கள். எனக்கென்னவோ அடிபட்டுக் கற்றுக் கொண்டு, ஓரளவு முதிர்ந்த மனநிலையையும் பக்குவத்தையும் தருகின்ற நடுத்தர வயதே சிறந்தது என்று தோன்றுகிறது.

உடலும் மனமும்

உடல் நலமும் மன நலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல் நலத்தைப் பேணாவிட்டால், மன நலமும் பாதிக்கப்படும். அதனால், உடல் நலத்தை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ‘உடம்பு என்பது இறைவன் உறையும் கோயில்’ என்பார் திருமூலர்:

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக்குள்ளேயுறுபொருள் கண்டேன்

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே!’

thirumoolar_jpg

அதே போல் மனநலத்தைப் பேண தியானம் அவசியம். (உடல் நலமாக இருந்தால் தியானத்துக்கு அமரும் போது அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று நம்மைத் தொந்தரவு செய்யாமல் ஒத்துழைக்கும்.) தியானம் என்றால் என்ன? ஒவ்வொரு நிமிடமும் நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருப்பதே தியானம். தினமும் நம் செயல்களை ஒரு முறை எண்ணிப் பார்த்து, தவறுகள் செய்திருந்தால் திருத்திக் கொள்வது நலம். இப்படிச் செய்வது நம்மை மேம்பட்ட மனிதனாக ஆக்க உதவும், நம் மன அமைதியும் அதிகரிக்கும். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இறைவனை எண்ணி தியானம் செய்யலாம்.

எழுதியதில் பிடித்தது…

கவிதைகளை பலவிதங்களில் எழுதியிருக்கிறேன். உணர்வுகளின் வடிகாலாக, பக்தியின் வெளிப்பாடாக, இப்படி… கற்றுக் கொண்ட பாடங்களை கட்டுரைகளில் வடித்திருக்கிறேன். அதைத் தவிர சிறுகதைகளும் எழுதியதுண்டு. என்றாலும், பாப்பா பாட்டுகள் அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை என்பதால், நான் எழுதிய, பலரும் விரும்பி வாசித்த பாப்பா பாட்டுகளில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…

Sumatran elephant, Riau, Indonesia

ஆனை பாரு!

ஆனை பாரு யானை பாரு

ஆடி அசைஞ்சு வருது பாரு!

கறுப்பு யானை கம்பீரமா

நாட்டை நோட்டம் விடுது பாரு!

தூணைப் போலக் காலைப் பாரு

நீண்ட தும்பிக் கையைப் பாரு!

முறத்தைப் போலக் காதைப் பாரு

விசிறி வீசும் அழகைப் பாரு!

மலையைப் போல உடம்பைப் பாரு

கடுகைப் போலக் கண்ணைப் பாரு!

குட்டிக் குட்டி வாலைப் பாரு

குனிய வச்சு ஏறிப் பாரு!

நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு

பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!

வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு

வாகாய் உள்ளே தள்ளும் பாரு!

கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு

காத தூரம் கேட்கும் பாரு!

பிள்ளை யாரு முகத்தைப் பாரு

உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!

ஆனை யோட பலத்தைப் பாரு

தும்பிக் கையில் இருக்கு பாரு!

நீயும் கொஞ்சம் உள்ளே பாரு

நம்பிக் கையில் தெரியும் பாரு!!

பிடித்த பெண்கள்

வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள், சிறந்தவர்கள். என் அம்மா. மிகுந்த மன உறுதி மிக்கவர்… பொறுமையும் அன்பும் அதிகம். அடுத்து என் மாமியார். அதிர்ந்து பேசத் தெரியாதவர். இவரும் எனக்கு இன்னொரு அம்மாதான். என் தங்கைகள், என் நாத்தனார்கள்… இப்படிப்பட்ட, பிரியத்தைப் பொழியும் சொந்தங்களைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

என் நெருங்கிய தோழிகள்… எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்துவதில் நிகரில்லாதவர்கள். என் மனசிடம் நான் பேசிக் கொள்வது போலவே எந்த வெளிப்பூச்சும் இன்றி அவர்களிடமும் பேசலாம்.

அழகென்பது

child

மனம் அழகாக இருந்தாலே முகத்திலும் அது தானாகப் பளிச்சிடும். குட்டி பாப்பாவைப் பார்த்தால் உடனே தூக்கி வைத்துக் கொஞ்சத் தோன்றுகிறது. அதே நேரம் புதிதாகப் பார்க்கிற சிலரிடம் சென்று ‘ஹலோ’ சொல்லக் கூட தயக்கமாக இருக்கிறது. பெரியவர்களிடம் இல்லாத கவர்ச்சி சின்னக் குழந்தைகளிடம் இருக்கிறதே, ஏன்? அவர்கள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அந்த காலத்தில் ரிஷிகளிடமெல்லாம் ‘தேஜஸ்’ ஒளி வீசியதாக சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளம் மாசில்லாமல் தூய்மையாக இருந்தது. யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. மனம் எப்போதும் சமநிலையில் ஆனந்தமாக இருந்தது. அதுதான் காரணம். அதனால் நாமும் நம் மனதைச் சுத்தமாக, கல்மிஷமில்லாமல் குழந்தை மனசு போல வைத்திருந்தால், மற்ற அழகெல்லாம் தானாக வந்து விடும்.

வாழ்க்கை

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. அது என்ன பாடம் என்று நாமேதான் சிந்தித்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எதுவுமே நிரந்தரமில்லை. ‘This too shall pass’ என்பார்கள். இன்பம், துன்பம் – இரண்டுக்குமே அது பொருந்தும். எத்தகைய துன்பம் வந்தாலும் மனம் தளராமல், அதைப் பற்றியே நினைத்துக் கவலையில் மூழ்காமல், நடக்க வேண்டியதைப் பற்றிச் சிந்தித்து, வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக நடத்துவது நம் கையில்தான் இருக்கிறது.

நடனம்

சிறுவயதிலிருந்தே நடனங்களைப் பார்த்து ரசிப்பது பிடிக்கும். கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. அமெரிக்கா வந்த பிறகு, வேலைக்கும் போக ஆரம்பித்த பிறகு, ஏதோ ஒரு தைரியத்தில் சேர்ந்து விட்டேன். அவர்களும் ஏதோ ஒரு தைரியத்தில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். அதன் பிறகு No turning back! பிறகுதான் தெரிந்தது… பெரும்பாலான நடன ஆசிரியர்கள் சிறுமிகளை மட்டுமே மாணவிகளாக ஏற்கிறார்கள்… பெண்களை ஏற்க மிகவும் தயங்குகிறார்கள் அல்லது ஏற்பதே இல்லை. அதனால் என்னை ஏற்றுக் கொண்ட என் நடன ஆசிரியைக்கு மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரைப் போலப் பெண்மணியைப் பார்ப்பது அரிது. 150க்கும் மேற்பட்ட மாணவிகளுடனான நடனப் பள்ளியை 15 வருடங்களாக வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு MBA, CPA. முழுநேர வேலையும் பார்த்துக் கொண்டு, நடனப் பள்ளியைத் திறம்பட நிர்வகித்து, குடும்பத்தினரையும் அருமையாகக் கவனித்துக் கொண்டு, இரண்டு பிள்ளைகளை அற்புதமாக வளர்த்திருக்கிறார்.

பாரம்பரிய நடனக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு பொறுமையும் கடின உழைப்பும் மிகவும் அவசியம். இதை பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். அரங்கேற்றத்துடன் எல்லாம் முடிந்து விடுவதில்லை. அது நீண்ட பயணத்தின் முதல் மைல் கல் மட்டுமே.

Kavinaya Profile 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

Image courtesy:

http://www.waterweb.org

http://upload.wikimedia.org/wikipedia/commons

http://www.wikihow.com

http://i2.dailyrecord.co.uk/

http://www.wired.com

http://www.tamilkadal.com

http://assets.worldwildlife.org/