சிறுகதை

காவிரிக்கரை பெண்ணே…

புவனா ஸ்ரீதர்

ilayaraja

வருடம் 1990.  ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.  தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?

போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!

காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…

கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.

சரி மிஸ்.

என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.

மிஸ்…

ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?

ம்..சரி மிஸ்.

அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.

எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.

போர் அடிக்குது பாடுடி…

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….

துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.

முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.

எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.

ஏன் லேட் வெளிய நில்லு.

‘பொன் மானே கோபம் ஏனோ?’

பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.

‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’

சரி உள்ள வந்து தொல.

‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”

சரி போய் உக்காரு.

ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.

அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.

பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.

எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.

நான்  பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?

எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.

நீ நல்லா படி.

ம் சரிடி.

அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.

———————————————————————–

நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.

அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.

என்னாச்சுடி?

ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.

பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.

இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…

அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.

உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.

என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…

தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.

————————————————————————–

கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.

அவ சொல்லவும்…

யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.

தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.

நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.

குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.

————————————————————————

20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.

நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.

நிஜமா கனவா?

ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?

எல்லாம் நேர்ல பேசலாம் வா.

ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.

முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…

பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.

எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?

ம்… கல்யாணம் முடிந்ததும்  அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.

ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?

இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.

ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.

அழகாகச் சிரித்தாள்.

ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?

அவ தோள் மேல கை போட்டேன்.

நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.

படபடன்னு பேசினா.

ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!

பெருமை பொங்க முத்து பார்த்தாள்…

இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.

முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.

அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?

இருக்கு, ஆனா இல்ல!

புரியலயே தெளிவா சொல்லும்மா.

ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.

எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.

ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

Painting Credit: Artist Ilayaraja

Bhuvana

ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

காதல் ஓவியங்கள்!

கட்டுத்தனமான, உயர்ரகக் காதல்களை சினிமாவில் பார்த்து சலித்துப் போய்விட்டோம்… நாளைக்கு ஒன்றாக பத்து வருடங்களுக்கு காதல் இணைக்கு மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஒருவருக்காக மற்றொருவர் உருகுவதும், உயிர் விடுவதும் கூட இதில் அடக்கம். ஒருவரின் மொத்த வாழ்க்கையையும் மற்றொருவரின் பின்னால் அடகு வைப்பதே காதல் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கொரிய பெண் ஓவியர் புவ்வாங்கின் (Puuung) கருத்தோ வேறாக இருக்கிறது.

‘‘ஒவ்வொருவரோடும் தொடர்புபடுத்தக் கூடிய ஏதோ ஒன்றுதான் காதல். நம் தினசரி நடவடிக்கைகளில், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் காதல் வரும் வழிகளை வெகு சுலபமாக கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதனால்தான் நம் அன்றாட வாழ்க்கையில் காதலுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க நான் முயற்சி செய்தேன். அவற்றை ஓவியமாக வடித்தேன்.’’ இப்படிச் சொல்லும் புவ்வாங் வெகு சாதாரணமாக வரைந்த ஓவியங்கள் உலகம் முழுக்க வெகு பிரபலம். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களில் காதல் எப்படியெல்லாம் ஒளிந்திருக்கிறது என்பதை அந்த ஓவியங்கள் பேசுகின்றன.

இவருடைய காதல் ஓவியங்களை http://www.grafolio.com இணையதளத்தில் காணலாம். இங்கே சில ஓவியங்கள் தோழிகளின் பார்வைக்கு…

1

 

3

4

5

6

 

8

9

10

11

12

13

14

15

16

17

 

19

20

21

 

***

காதல்… காதல்… காதல்…

Snow-Love-Wallpaper

காதல் குளிர்

ஓர் எலியைப் போல

முதுகு மடங்கி உட்கார விருப்பம்

எனக்கும்

உன் உள்ளங்கைப் போர்வைக்குள்

இத்தனை பாந்தமாய்

‘மவுஸ்’.

1120

புள்ளி இல்லாத கோடுகள்

என்னால் உன்னை

வாசித்தறிய முடியவில்லை

புத்தகத்தின் பின்புறமுள்ள

கணிப்பொறி விலைக்கோடு

நீ.

Red_Rose_flowers

வழுக்கு ஏணி

ஒருமுறை

ஏணி எடுத்து வந்து

ஏறச் சொன்னாய்

மெல்ல மெல்ல

இறங்கிக் கொண்டிருந்தேன்

உன் இதயத்திற்குள்.

rose_buds-normal

காதல் பயணம்

ஒரு டிக்கெட்தான்

எடுத்துச் சென்றேன்

பாவம்

கடைசி வரையிலும்

நீ என் பக்கத்திலேயே

பயணம் செய்ததை

பார்க்கவேயில்லை

பரிசோதகரும் கண்டக்டரும்…

valentines-heart-in-water-free-hd-wallpaper-t2

காதல் வெடிகுண்டு

அவசரமாய் நீ திரும்புகையில்

குவிகிற அழகை

என் செல்போன் கேமராவில்

சேமித்திருக்கிறேன்

விம்மிப் புடைக்கும் அது

எப்போது வெடிக்குமோ?

rose 1

உரிமை ஆசிரியருக்கு

உன் செல்போனுக்கு அனுப்பிய

குறுஞ்செய்திகளையெல்லாம்

தொகுப்பாய் வெளியிட எனக்கு

விருப்பம்தான்

உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?

3d-abstract_widewallpaper_red-rose_26213

பொய்யாய் பழங்கதையாய்…

சங்க காலத்தில்

நம் தாத்தா பாட்டிகள்

வெயிலில் மரநிழலில்

இரவில் நிலவடியில்

காதலித்தார்களாமே

நமக்கு

கணிப்பொறி சாட்டிங்

காதல் போதுமா?

water-lillies-x4dq

பிரளயம்

நீ

குளம் சென்று வந்த பிறகு

அலை அடங்கவேயில்லை.

– நா.வே.அருள்

heart_in_sand_1600x1200

Image courtesy:

http://www.afloralaffairpa.com

http://www.hdwallpapers.in

http://wondrouspics.com

http://stuffkit.com

http://www.wallpapersdb.org

http://www.hdwallpapersfree.eu

http://hdwallpaper.freehdw.com

http://www.gebs.net.au