பெண்கள் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்?

Image

‘பெண்கள் பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, ‘பெண்கள் படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியைகள் நியமிக்கப்படுவார்கள். ஆண்கள் பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்களுக்கு அனுமதி. இருபாலரும் படிக்கும் பள்ளிகள் என்றால் அதில் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

இந்த உத்தரவால் பெண்கள் பள்ளிகளில் மாற்றம் ஏற்படுமா? மாணவிகள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துவிடுவார்களா? பெண்கள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே…

Image

சந்தன முல்லை – குடும்ப நிர்வாகி 

பாலியல் தொந்தரவு என்ற ஒரே ஒரு விஷயத்துக்காக பெண் ஆசிரியர்களை நியமிப்பது எந்த விதத்திலும் சரியான தீர்வாகாது. ஏனென்றால், பெண் ஆசிரியர்களால் பிள்ளைகளுக்கு துன்புறுத்தல் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதற்கு ஒரு பெண் ஆசிரியர்தான் உடந்தை என்பது தெரிய வந்தது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் ஆண்- பெண் என பிரித்து வைப்பது எந்த விதத்திலும் சரி இல்லை.

பள்ளிகளில் மட்டும் இந்த விஷயத்தை சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? குழந்தைகள் டியூஷன் செல்லும் இடம், ஸ்பெஷல் கிளாஸ் – இங்கெல்லாம் ஆண்கள் இருந்தா என்ன செய்வது? அதற்காக பிள்ளைகளை அப்படியே விட்டுவிட முடியுமா? பெண்கள் வெளியில் வருவதால்தான்  பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று டெல்லி சம்பவம் நடந்தபோது சொன்னார்கள். இந்த மாதிரி பிற்போக்குத்தனமான அடக்குமுறைகளுக்கு பெண் குழந்தைகளை பழக்குவது நல்லதில்லை.

ஒரு நல்ல பள்ளியில் முறையான கண்காணிப்பு இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பிருக்காது. பாலியல் பிரச்னைகளை விட பிள்ளைகளுக்கு மனரீதியான அழுத்தம்தான் அதிகம். அதைத் தீர்க்க எந்த நடைமுறைகளும் இருப்பது போல தெரியவில்லை. முதலில் நான் ஒரு தாயாக, என் பெண் நல்ல சூழலில் நிம்மதியாக படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவேன். அதற்கு பெண் ஆசிரியர்கள்தான் தீர்வு எனச் சொல்ல மாட்டேன். முறையான விழிப்புணர்வு எல்லா ஆசிரியர்களுக்குமே அவசியம். குழந்தைகளை ட்ரீட் செய்யும் சைக்காலஜி தெரிந்தாலே போதும்… எந்த ஆசிரியராக இருந்தாலும் ஓகேதான். பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் எல்லாருமே பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!

Image

ஜன்னத் – பள்ளி ஆசிரியை 

பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் நியமிக்கறதை வரவேற்கிறேன். ஏன்னா, பெண் ஆசிரியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். டீன் ஏஜ்ல இருக்குற பாய்ஸை ஹேண்டில் பண்றது ஆசிரியைகளுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயமும் கூட. இதனால டீச்சர்ஸுக்கும் மன உளைச்சல் ஏற்படும். ஆனா, அதுவே பெண்கள் பள்ளின்னு வரும்போது ரிலாக்ஸாக வேலை பார்க்கலாம். டீன் ஏஜ்ல இருக்குற பெண்கள், அவங்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டா ஆண் ஆசிரியர்கள்கிட்ட சொல்லத் தயங்குவாங்க. இனி அந்த பிரச்னைகள் கூட இருக்காது. பெண்கள் பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் என்பது ரெண்டு தரப்புக்குமே நல்ல விஷயம்தான். இந்த மாதிரி விஷயங்களைக் காரணம் காட்டி அரசு உத்தரவிட்டிருக்கலாம். பாலியல் தொந்தரவைக் காரணம் காட்டி இந்த உத்தரவை கொண்டு வந்திருப்பது சரியல்ல. ஏன்னா, ஏதோ ஒரு ஆண் தப்பு பண்றார் என்பதற்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தப்புதானே?

Image

விஜயா – கல்வியாளர் 

அரசின் இந்த உத்தரவை சோதனை முறைப்படி செய்து பார்ப்பதில் தவறில்லை. அதே நேரம், ‘பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற நடைமுறை வந்தால் ஆண்கள் எப்போதுதான் தங்களை சரி செய்து கொள்வார்கள்? ஆண் ஆசிரியர்களுக்கு முறையான கவுன்சலிங், பிள்ளைகளை ஹேண்டில் செய்யும் விதம் என எல்லாவற்றையும் முறையாக கற்றுத்தர அரசு முன்வர வேண்டும். ‘பெண் பிள்ளைகளிடம் 3 அடி தள்ளி நின்று பேச வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அவர்களிடம் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது. அவர்களை தொடுவது, அடிப்பது, உடல் பாகங்களைக் குறித்துப் பேசுவது உள்ளிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என முன்னரே சொல்லி, அதை அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அரசின் உத்தரவுப்படி பார்த்தால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், சிறு பிள்ளைகளிடம்தான் இப்போது பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது. அவர்களால் யாரிடமும் சொல்லமுடியாது என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் அத்துமீறுகிறார்கள். அதனால், 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கும் முறையான கவுன்சலிங் தர வேண்டும். தவறான தொடுதல் போன்றவை நடக்கும்போது, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க மாணவர்கள் முன்வந்தால் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தவறுக்கு உரிய தண்டனை கிடைக்கிறது என்றால் அடிப்படை சரியாக அமைந்துவிடும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிக்க ஒரு குழு இருக்க வேண்டியது அவசியம்.

தொகுப்பு: எஸ்.பி.வளர்மதி

Image