காலத்தை வென்ற கதைகள் – 27

கமலா விருத்தாச்சலம்

(1917 – 1995)

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பொதுப் பணித்துறையின் புகழ்பெற்ற ஒப்பந்ததாரர் பி.டி.சுப்ரமணிய பிள்ளையின் மகளான இவர், தன்னுடைய பதினைந்தாவது வயதில் புதுமைப்பித்தனைத் திருமணம் செய்துகொண்டார்.

1935க்குப்பின் எழுதத் தொடங்கிய இவர், குறிப்பிட்ட சின்னஞ்சிறு சம்பவங்களையொட்டிய கதையாக்கத்தில் தேர்ந்தவர். தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் இவரின் முக்கிய கதைகள் பிரசுரமாயின. 

திறந்த ஜன்னல்

Image

”சீ, மணி என்ன ஆச்சு இன்னமுமா தூக்கம், எருமை மாட்டு தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே வேணு எதிர் அறையில் இருந்து கதவை திறந்துகொண்டு, ராதை படுத்திருக்கும் அறையில் நுழைந்தான்.

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி, தலையில் ஓர் ஈரத்துணியை போட்டுக் கொண்டு அயர்ந்த தூக்கத்தில் இருந்த ராதை, தற்செயலாக அப்போதுதான் திரும்பி படுப்பதற்காக புரண்டாள். ”எருமை மாட்டு தூக்கம்” என்ற கடைசி வார்த்தையைக் கேட்டு சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். கலைந்து கிடக்கும் தலை மயிரை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிய வண்ணம், படபடவென்று எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியில் பார்த்தாள். வெயிலின் அடையாளத்தைப் பார்த்து மணி நாலு என்பதை அறிந்து கொண்டாள். குழாயடியில் போய் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைந்து விட்டாள். அடுப்பை பற்றவைத்து காப்பி போட்டாள். ‘ஐயோ! மணி நாலு ஆயிற்றே. அவர்கள் வெளியில் போக வேண்டுமே’ என்று விசிறியால் அடுப்பை வீசிக்கொண்டே அதன் முன் உட்கார்ந்தாள். ‘அவர் புறப்பட்டு விடுவாரோ’ என்று அடிக்கடி அவ்விடத்தில் இருந்தபடியே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவ்வளவு அவசரமாக வேலையில் கவனம் இருந்தும், வேணு சொல்லிக்கொண்டு வந்த ‘எருமை மாட்டு தூக்கம்’ என்ற வார்த்தையும் அடிக்கடி அவள் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. ”ஆமாம்! நிஜந்தான். எருமை மாட்டு தூக்கம், பாழுந் தூக்கம், என்றைக்குத்தான் என்னை விட்டுக் தொலையுமோ; அல்லது முழிப்பில்லா தூக்கம் என்றுதான் வருமோ” என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அடுப்பை வீசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் காப்பியும் தயாராகி விட்டது; காப்பியை வடிக்கட்டி, பால் சர்க்கரை சேர்க்க வேண்டியதுதான் பாக்கி. வேணு சட்டை போட்டுக்கொண்டு வெளியில் போக புறப்பட்டு விட்டான்.

”கொஞ்சம் இருங்கள், இதோ காப்பி ஆகிவிட்டது. கொண்டு வருகிறேன்” என்று காப்பியைச் சேர்க்கப் போனாள்.

அதற்குள் வேணு ”ஆமாம் மணி ஐந்து அடிக்கப் போகிறது. எனக்கு அவசரமாக இன்று வெளியில் போகவேண்டும் என்று எப்பவோ சொன்னது” என்று சொல்லிக்கொண்டே வாசற்படிவரை வந்து விட்டான்.

ராதை சட்டென்று சென்று அவன் முன் பாய்ந்து, கதவை மூடினாள். ”காப்பி ஆகிவிட்டது எடுத்து வருகிறேன். சூடு ஜாஸ்தியாக இருந்ததினால் ஆற்றிக்கொண்டு இருந்தேன். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றாள். அவள் குரலில் சிறிது கோபமும் வருத்தமும் கலந்திருந்தது. எப்போழுதாவது ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டால், கெஞ்சி மன்றாடி, அவன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கும் ராதைக்கு இன்று கோபம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது. ‘’எவ்வளவு நேரம் ஆனாலும் இன்று காப்பி சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’’ என்று மெதுவாக சொல்லிக் கொண்டே, காப்பி எடுத்து வருவதற்காக அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

அவள் அடுப்பங்கரைக்குள் சென்றதும், ‘சீ இந்தப் பிடிவாதம் ஆகாது. அதைத்தான் இன்று பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டு வெளியில் போக கதவைத் திறந்தான் வேணு.

”இதோ கொண்டு வந்துவிட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று சொல்லிக்கொண்டே, ராதை கையில் காப்பியோடு அவன் அருகில் வேகமாக வந்தாள்.

”உங்கள் உத்தரவுப்படிதான் நடக்க வேண்டுமோ, அதைத்தான் இன்று பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, வேணு வெளியில் சென்று விட்டான்.

ராதைக்கு கோபம், தூக்கம் இரண்டும் விஷக்கடி போல் உச்சஸ்தாயில் ஏறிவிட்டது. கதவை ‘படார்’ என்று அடைத்துத் தாழ்ப் போட்டாள். காப்பியை தானும் சாப்பிடாமல், தர்மாஸ் பிளாஸ்கில் விட்டு வைத்துவிட்டு, கூடத்தில் கிடந்த சாய்வு நாற்காலியில் வந்து படுத்துக்கொண்டாள். ”சரி, போய் வரட்டுமே, எனக்கென்ன வந்தது. என்னைக்கோ ஒருநாள் கொஞ்சம் தெரியாமல் தூங்கிவிட்டால், இந்த மாதிரி தண்டனை. சீ, என்ன பிழைப்பு. இதைவிட எங்கேயாவது போய் தொலைந்தால் நம் இஷ்டம் போல் இருக்கலாம். யாருக்காக பயப்பட வேண்டும். வருகிறது வரட்டும்; இன்று இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டியது. எத்தனை நாளைக்கு இப்படி மனசிலே வைத்துக்கொண்டு இருக்க முடியும்” என்று மனதை ஒருவிதம் சமாதானப்படுத்திக்கொண்டு, இரவு சாப்பாட்டுக்கு தயார் பண்ணுவதற்காக மறுபடியும் வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

இரவு சாதம்கூட சாப்பிடுவாரா என்பதே சந்தேகம் என்றாலும், நம் கடமையை நாம் சரியாகச் செய்து வைப்போம். பிறகு அவாள் அவாள் இஷ்டம்போல் செய்யட்டும்’ என்ற நினைப்பு.

அவள் பம்பரம் மாதிரி ஓடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மனசில் கசப்பிருந்தால் அது சோர்வுக்கும் சுறுசுறுப்புக்கும் தூண்டுதல்தானே. அவர்கள் வருவதற்குமுன், சமையலை முடித்துவிட வேண்டும் என்ற பல்லவி அவளது உள்ளத்தில் ஓயாது ஒலித்தது.

இரவு

ழு மணி ஆயிற்று. வேலைகள் எல்லாம் முடித்து, கை கால் கழுவிவிட்டு, கூடத்து தூணில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். வேணு வரும் சமயம் ஆயிற்று. நேரம் ஆக ஆக அவள் மனம் படபடவென்று அடித்துக்கொண்டே இருந்தது. ‘எதற்காக பயப்படுகிறோம்’ என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அறிந்து யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருந்தும், இந்தக் காரணமில்லா பயப்பிராந்தி எதற்காக ஏற்படுகிறது! – என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பது போல், அசைவற்று நாடியில் கை வைத்து மேல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மச்சுப் படியில் செருப்புச் சத்தம் கேட்டது. ”அவர்கள்தான் வந்து விட்டார்கள். வரும்போது அவர் எதிரிலேயே படக்கூடாது” என்று எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

வீட்டுக்குள் வந்த வேணு நேராக அறையில் சென்று உடைகளை மாற்றிவிட்டு, கை கால் கழுவிக்கொண்டு, எதிர் அறையில் சென்று ஜன்னல் அருகில் கிடந்த சாய்வு நாற்காலியில் படுத்தான். அவனுடைய செய்கைகளை மறைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ராதைக்கு சந்தேகம் அதிகரித்தது. பிளாஸ்கில் விட்டு வைத்த காப்பியை எடுத்துக் கொண்டு வேணு இருந்த அறையில் நுழைந்தாள். ராதையைக் கண்டதும் வேணு சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து ”என்னது காப்பியா? சரி இப்படி எடுத்து வா’ என்று வெளியில் வந்துவிடப் பார்த்தான். அவன் முகம் ஏதோ குற்றம் செய்து விட்டது போலுள்ள தோற்றத்தைக் காண்பித்தது. தலைமேல் மலையே இடிந்து விழுந்தால் கூட சற்றேனும் பயம் என்பது தோன்றாத அவனுடைய நெஞ்சு, இன்று ராதையைக் கண்டதும் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஜன்னல் அருகில் சென்ற ராதை எதிர் வீட்டு வெளி தளத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்தபின்பே ராதைக்குச் சந்தேகம் முற்றும் தெளிவுபட தொடங்கியது. பல நாட்களாக அவள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த சந்தேகம். இன்று அவள் நேரிலேயே பார்த்துவிட்டாள். ஆனால் வேணு இப்படிப்பட்டவனாவென்று அவளால் நம்ப முடியவில்லை. தன் கண்ணால் பார்த்த பிறகும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வாள்!

ஒரு நாளும் தனிமையை விரும்பாத வேணு, இப்போது கொஞ்ச நாட்களாக தனியாக அந்த அறையில் சென்று இருப்பதும், அவள் அருகில் சென்றால்கூட என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வேலை இருக்கிறது என்று ஏதாவது எழுதுவது போலவும், படித்துக்கொண்டிருப்பது போலவும் இருப்பான். ஆனால், அவன் மனம் எந்த மாதிரி இருந்தது என்ற உண்மை இப்போதுதான் அவளுக்கு அர்த்தமாயிற்று. ஓரோர் சமயம் வேணுவிடமே ‘அது உண்மைதானா?’ என்று விசாரித்துப் பார்க்கலாம் என்று நினைப்பாள். என்றாலும் ‘சமயம் வரும்போது கேட்கலாம்’ என்று மனதை அடக்குவாள். அன்று ஜன்னல் அருகில் சென்ற அவள் வேணுவிடம் கேட்பதற்காக நெருங்கினாள். ஒரு வேளை கோபப்பட்டு காப்பியோ, சாதமோ சாப்பிடாவிட்டால் என்ன செய்வது என்ற பயம். சாவகாசமாக கேட்டுக்கொள்ளலாம் என்று காப்பியை எடுத்துக்கொண்டு வேணு நின்றிருந்த கூடத்துக்கு வந்து விட்டாள்.

காப்பியை அவனிடம் கொடுத்தாள். வேணுவும் ஒரு தடையும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். சாயங்காலம் வீட்டை விட்டு அவன் சென்ற மாதிரியில், இப்போது காப்பி சாப்பிடுவான் என்று ராதை சற்றேனும் எதிர்பார்க்கவில்லை.

காப்பி சாப்பிட்டு விட்டு வேணு ராதையை பக்கத்தில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டு, ஏதேதோ ஆபீஸ் விஷயங்களும் அது, இது என்று பேசிக் கொண்டிருந்தான்.

ராதைக்கு அவன் பேச்சில் சற்றும் மன நிம்மதியோ, சந்தோஷமோ தோன்றவில்லை. எங்கே தன் செய்கையைக் கவனித்து விட்டாளோவென்று சந்தேகப்பட்டு, தன்னை அந்த மாதிரி நினைத்தது தப்பு என்று நினைக்கும்படி செய்வதற்காக, இந்தப் பாசாங்கு வார்த்தைகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். எப்போது பேச்சு முடியும், சாப்பாட்டு வேலைகளை முடித்துக் கொண்டு நிம்மதியாகப் படுக்கலாம் என்று சகித்திருந்தாள்.

”மணி ஆயிற்றே, சாப்பிடுவோமா” என்றான் வேணு சிறிது நேரம் கழித்து.

‘‘ஓகோ, சாப்பிடுவோமே’’ என்று ராதை எழுந்தாள். இரண்டு பேரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுத்துக் கொண்டார்கள். படுக்கையில் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் வேணு தூங்கி விட்டான்.

அதிகாலை

ராதைக்கு தூக்கமே வரவில்லை. அப்படியும், இப்படியுமாக புரண்டுகொண்டே கிடந்தாள். பிறகு எப்போதுதான் தூங்கினாளோ; அவளுக்கே தெரியாது. கண்ணைத் திறந்து பார்த்தாள். அறையின் ஜன்னல் இடுக்கு வழியாக சூரிய ஒளி தெரிவதைப் பார்த்து நேரம் விடிந்துவிட்டது என்று வெளியில் வந்து நித்திய வேலைகளைத் தொடங்கி விட்டாள்.

”நேற்றுத்தான் ஆபீஸில் லீவு எடுத்திருக்கிறேன் என்றார்கள். இன்று ஆபீஸிற்குப் போக வேண்டுமோ, வேண்டாமோ… எழுப்பலாமா” என்று நினைத்தாள். பிறகுதான் அவளுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைவுக்கு வந்தது. ”தூங்கட்டும். காப்பி எல்லாம் தயரான பிறகு எழுப்பலாம்” என்று அடுப்பங்கறைக்குச் சென்று விட்டாள். அப்பொழுதும் அவள் மனம் அவர் மேல் இருந்த சந்தேகத்தைப் பற்றி, ‘இன்றாவது சந்தர்ப்பம் வாய்த்த வேளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று துடித்துக் கொண்டிருந்தது.

காப்பி பலகாரங்களைச் செய்து வைத்துவிட்டு, வேணுவை எழுப்பப் போனாள். ஆனால், படுக்கையில் அவனைக் காணவில்லை; அவள் வந்து எழுப்புவதற்கு முன்னமே அவன் எழுந்து எதிர் அறையில் சென்று, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, நாற்காலியில் படுத்திருப்பதைப் பார்த்தாள்.

அன்று காலையில், படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது சிறிது தெளிவு ஏற்பட்டிருந்த அவள் மனது மறுபடியும் ஒரே குழப்பத்தில் சென்று விழுந்தது. ‘முந்திய இரவுதான் இதற்கு என்ன செய்வது’ என்று வெகு நாழிகைவரை நினைத்துப் பார்த்தும் ஒருவழியும் தெரியாமல் விதி போல நடக்கட்டும் என்று சமாதானப்பட்டாள். ஆனால் மறுபடியும் மறுபடியும், வேணு சந்தேகப்படும்படி நடந்துகொள்வதைப் பார்க்க அவளால் சகிக்க முடியவில்லை. சரி ‘காப்பி ஆச்சு’ என்றுகூட சொல்ல வேண்டாம், எப்போதான் வருகிறார்கள் பார்போமே’ என்று பேசாதிருந்து விட்டாள்.

சிறிது நேரம் சென்று அவனாகவே வெளியில் வந்தான். ”ராதை ராதை!” என்று அழைத்தான். ராதை பதில் பேசாமல் அவன் அருகில் வந்தாள். அவனுக்கு வேண்டிய சிற்றேவல்களை வழக்கம்போல் செய்தாள். அவனிடம் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவன் நோக்கம் அறிந்து, அவன் சொல்லாமலே அவள் அன்று வேலைகள் எல்லாம் செய்தாள்.

மத்தியானம்

த்தியானம் சாப்பாடு முடிந்ததும் வேணு அந்த அறையில் சென்று ஒரு பாயை எடுத்து விரித்துப் படுத்துக்கொண்டான். ராதை சாப்பாடு முடிந்து வேலைகள் எல்லாம் ஆனபிறகு, வேணு இருந்த அறையில் நுழைந்தாள். அவன் பார்வையில் படும்படி சிறிது தள்ளி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். வேணு எதோ ஒரு புஸ்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். ராதை அவ்வறையில் நுழைந்ததைக்கூட கவனியாததுபோல் இருந்தான். ராதை இன்று எப்படியும் தன் சந்தேகத்தைப்பற்றி வேணுவிடம் கேட்க வேண்டும் என்ற திட நம்பிக்கையோடு அவ்வறையில் நுழைந்தாள். வேணு திரும்பிக்கூட பார்க்காததைக் கண்டதும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ஆலோசித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

வேணுவுக்கு ராதை அவ்விடத்தில் இருப்பது பிடிக்கவில்லை. அவளை என்ன காரணத்தைச் சொல்லி வெளியேற்றுவது என்று வெகுநேரம் யோசனை செய்து பார்த்தான். சிறிது நேரம் சென்று அவன் கையில் இருந்த புஸ்தகத்தை மூடி வைத்துவிட்டு ராதையைப் பார்த்து,

”என்ன ராதை ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறாய், இங்கே என் பக்கத்தில் வந்து உட்காரேன்” என்று அருமையாக அழைத்தான்.

எதிர்பார்க்காவிதத்தில் வேணு அம்மாதிரி தன்னை அருமையாக அழைப்பதை பார்த்ததும் ராதைக்கு மனதில் சிறிது மகிழ்ச்சி தோன்றவே, தானாகவே அவள் கால்கள் எழுந்து வேணுவின் அருகில் சென்று உட்காரும்படி செய்துவிட்டது. அவன் அருகில் சென்று உட்கார்ந்த பிறகுதான் அவள் தன்னையும் மீறிச் சில சந்தர்ப்பத்தில் தன் மனம் சாய்ந்து செல்வதை உணர்ந்தாள். பெண்கள் மனதை எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சில சமயத்தில் அன்பு வார்த்தைகள் அவர்கள் மனதை தளர விட்டு விடுகிறதே” என்று பரிதாபப்பட்டுக் கொண்டாள்.

கூர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.

”என்ன ராதை, பேசாதிருக்கிறாயே, ஏன் தூக்கம் வருகிறதா? அப்படியானால் போய்ப் படுத்துக்கொள்ளேன்; ஏன் வீணாக இருந்து கஷ்டப்படுகிறாய்” என்று அவள் கன்னத்தை தடவிக்கொண்டு சொன்னான்.

”ஆமாம், தூக்கம்தான் குறைச்சல்! அன்று ஒரு நாள் பகல் தூங்கியதற்குக் கிடைத்த தண்டனை போதாதா?”

”ஏன் என்ன பிரமாத தண்டனை. தண்டனையுமில்லை, ஒன்றுமில்லை. எனக்கு அவசரமாக வெளியில் போகவேண்டி இருந்தது. போனேன். நான் இருந்து காப்பி சாப்பிட்டுவிட்டு போனால், நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆள் வெளியில் போய்விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் அவசரமாகப் போய்விட்டேன். அதற்கென்ன பிறகு வந்து சாப்பிடவில்லையா? அதுக்கா இவ்வளவு கோபம் உனக்கு! அதுதான் இரண்டு நாட்களாக ஒருமாதிரி இருக்கிறாய். ஓகோ இப்போதுதான் அர்த்தமாச்சு.”

”ஒரு நாளைக்கு என்னவோ கொஞ்சம் தெரியாமல் தூங்கி விட்டால், அதற்கு எவ்வளவு கோபம் வந்து விட்டது உங்களுக்கு. அப்பா! போதும்!”

”யாருக்கு, எனக்கா கோபம்! சீச்சீ! கோபமுமில்லை ஒன்றுமில்லை. யார் சொன்னது கோபமென்று? என்னவோ அவசரமாகத்தான் போனேன் என்று சொல்லுகிறேனே!”

”ஆமாம் கோபம் இல்லாமத்தான் எருமை மாட்டுத் தூக்கம் என்று சொல்லுவார்களாக்கும்.”

”அடே அப்பா, இதுதானா? மத்தியானம் சாப்பிடும்போதே இன்று சாயங்காலம் மூன்று மணிக்கே வெளியில் போக வெண்டுமென்று சொல்லி இருந்தேனே, வந்து பார்த்தபோது இன்றும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஏதோ தெரியாது வாயில் வந்துவிட்டது. மனிதன் என்றால் எல்லா சமயமும் ஒரே மாதிரி இருப்பானா, ஏதோ கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக நீயும் கோபப்பட்டால் முடியுமா? யாராவது ஒருத்தர் தாழ்ந்து போனால்தான் சமாதானம் ஏற்படும். சரி, அதை ஏன் இன்று பேச வேண்டும். வேறு ஏதாவது பேசு” என்று வெற்றிலை போடுவதற்காக பாயில் எழுந்து உட்கார்ந்து, ஜன்னலில் இருந்த வெற்றிலைத்தட்டை இழுத்தெடுத்தான்.

எதிர் தளத்தில் அந்தப் பெண் நின்றிருந்ததைப் பார்த்து விட்டான். சடடென்று அவன் மனம் மாறியது. இன்னும் ஒரு தடவை அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ‘ராதை பார்த்துவிட்டால் என்ன நினைப்பாள்’ என்று மனதில் எழுந்த ஒரு சிறு கேள்வி; – அவளை அவ்விடமிருந்து ஏதாவது சொல்லி வெளியேற்றுவதுதான் சரி என்று அவனுக்குப் பட்டது.

”என் கண்ணே… ஏன் ஒருவருக்கொருவர் இப்படி மௌனமாக பேசாது உட்கார்ந்திருக்க வேண்டும். எனக்கு ஆபீஸ் வேலை கொஞ்சம் எழுத வேண்டி இருக்கிறது. நீ வேண்டுமானால் போய்ப் படுத்துத் தூங்கேன். நீ இங்கிருந்தால் எனக்கும் எழுத முடிகிறதில்லை. உன்னோடு பேசவேண்டும் என்ற ஆசை எழுத முடியாமற் செய்கிறது” என்று ஜாடையாக அவளை அங்கிருந்து போகும்படி செய்ய வழி பண்ணினான்.

”சாரி” என்று ராதை எழுந்திருந்தாள். அவள் மனம் அன்றும் பெரிய ஏமாற்றமடைந்தது. எப்போதான் இதற்கு முடிவு என்று பார்ப்போமே, அதிகம் பேசினால் கோபம் வந்து விடுமோவென்ற பயம். படுக்கப் போவதற்காகத் திரும்பினாள். அவள் கண்கள் ஏமாற்றப் பார்வையில் ஜன்னல் வெளியே நோக்கிற்று. அதே பெண், அதே தளத்தில் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். கூர்ந்து அவளையே சற்று நேரம் நோக்கினாள்; தனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று அந்தச் சிறிது நேரத்தில் அறிந்துகொண்டாள். அவள் மனம் குமுறிக்கொண்டு புகைந்தது; திரும்பி வேணுவைப் பார்த்தாள். அவன் விரித்த புஸ்தகத்தை நெஞ்சில் வைத்தபடி எதிர்ச் சுவரை நோக்கி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டாள்.

”சீ, என்ன பொய்! என்னை எப்படியும் இந்த அறையை விட்டு போகவேண்டும் என்று சொன்ன பொய்! ஏன்? ‘நீ இங்கிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. என் முன்னிருந்து எழுந்து போ’ என்ற ஒரு வார்த்தை போதாதா? இத்தனை ஆசை வார்த்தை! சீ அல்ல, பாசாங்கு வார்த்தை சொல்லி, பொய் சொல்லி ஏமாற்றுவானேன். இங்கேயேதான் இருப்பேன். எப்படியும் இன்று இரண்டில் ஒன்று அறிந்தாலன்றி இவ்விடத்தை விட்டு நகரமாட்டேன்” என்று மனதில் எழுந்த கோபத்தோடு உறுதி பண்ணிக்கொண்டு மறுபடியும் அவன் அருகில் உட்கார்ந்தாள்.

”ஏன் நீ படுக்கப் போகவில்லை, போய் படுத்துக்கொள்ளேன். நான் எழுதப் போகிறேன்” என்று வேணு லெட்டர் பேடையும், பௌண்டன் பேனாவையும் கையில் எடுத்தான்.

ராதை மௌனமாக அவனையே நோக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

வேணு என்னமோ நாலு வரி எழுதுவதும் வெட்டுவதுமாக ஐந்து நிமிஷம் பொழுதை போக்கிப் பார்த்தான். ”பிடிவாதக்காரியிடம் அருமையாய்ச் சொன்னால் காரியம் நடக்காது,” என்று நினைத்து,

”ராதை, நீ போய் படுக்கணுமானால் படு; அல்லது ஏதாவது போய் படித்துக்கொண்டு இரு. நான் இதை எழுதி விட்டு வருகிறேன்.”

”ஆமாம்! எனக்குத் தூக்கம் வரவில்லை. ஏன் நான் இங்கு இருந்து விட்டால் என்ன? நான் என்ன உங்களை தொந்தரவு பண்ணுகிறேனா? என் பாட்டுக்குத்தானே உட்கார்ந்திருக்கிறேன்”.

”வீண் வார்த்தைகள் எதற்கு? நீ இங்கிருந்தால் எனக்கு எழுத முடிகிறதில்லை; போ என்றால், போயேன்” என்று சிறிது குரல் உயர்த்திச் சொன்னான் வேணு.

வேணுவினுடைய பிடிவாதத்தைப் பார்த்த ராதைக்கு கோபம் உச்சஸ்தாயில் ஏறிற்று. ”என்னதான் வருகிறது பார்ப்போம். இங்கிருந்து இப்போது எழுந்து போகக்கூடாது” என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு வேணுவைப் பார்த்து, ”முடியாது இவ்விடமிருந்து இன்று எழுந்து போகிறதில்லை” என்று அழுத்தமாக பதில் சொன்னாள்.

ராதையினுடைய இந்தப் பதிலைக் கேட்ட வேணுவுக்குக் கோபம் ஆவேசமாக வந்து பொங்கியது. ”எந்த விஷயத்திலும் பெண்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது. சீ கழுதே, எழுந்து போறயா இல்லையா, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவேன்!”

”அதைத்தான் இன்று பார்ப்போம். முடியவே முடியாது!”

”சீ அடம் பிடித்த கழுதை” என்று சட்டென்று வேணு எழுந்து, ராதையை இழுத்துக்கொண்டு வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

வெளியில் தள்ளப்பட்ட ராதைக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு நின்ற துக்கம், உடைபட்ட மதகு வெள்ளம் போல் கண்ணீராக அவள் புடவையை நனைத்தது. ‘இனி என்ன செய்வது?’ என்ற கேள்வியைக் கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சட்டென்று அவள் மனதில் பட்டது. ‘தற்கொலை ஒன்றுதான் இதற்கு ஆறுதல் அளிக்கும்’ என்று தோன்றிற்று.

அதற்கு வழி என்னவென்று நாலு பக்கமும் சுற்றி நோக்கினாள். அண்ணாந்து உயர நோக்கினாள். அவள் கண்ணில் ஒன்றும் படவில்லை. எப்படி தற்கொலை பண்ணிக்கொள்வது என்று ஒன்றன்பின் ஒன்றாக பல கேள்விகள் அவள் மனதில் எழ ஆரம்பித்தன. கயிறு கொண்டு உயிரைவிட வேண்டும் என்றால் ஒரு முழக் கயிறு கூட வீட்டில் இல்லை. மேலும் கயிறு தொங்கப் போடுவதற்கு ஒரு உத்திரமாவது சற்று சமீபத்தில் இருக்கிறதாவென்று பார்த்தாள். அதுவுமில்லை. விஷம், திராவகம் என்றால், நினைத்த உடனே எங்கிருந்து கிடைக்கும். என்ன செய்வது என்று அவள் மனம் எவ்வளவு போராடியும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. நேரம் ஆக ஆக அவள் தற்கொலை என்பது எளிதான காரியமல்லவென்பதை உணர்ந்தாள்.

ஆனால் துர்ப்பாக்கியவதியாக தான் இந்த உலகில் இருப்பதைவிட, சாவதே மேல் என்று பட்டது. இவ்விடத்தில் தற்கொலை செய்துகொண்டால் வேணு மேல் அந்த பழி விழுமே என்று நினைக்க அவளுக்கு தான் ‘ஒரு நீலி,’ என்று தோன்றியது. வேணுவுக்கு தன் மேல் அன்பு உண்டென்றால் அவன் வேறு ஒருத்தியை திரும்பிப் பார்ப்பானா? என்ற கேள்வி அவள் மனதில் எழும்போதுதான் அவளுக்கு சகிக்கமுடியாத துக்கம் மேலிடும். ஆனால், பல வருஷங்களாக அவனோடு இருந்து வாழ்க்கை நடத்தி வந்து கொண்டிருந்த ராதைக்கு, இப்போதுதான் அவன் பேரில் சந்தேகம் தோன்றியது. அதுவும் அவள் கண்ணால் நேரில் பார்த்தபிறகு! உலகத்திலேயே அவளுக்குப் பிரியமானது எது என்று கேட்டால் ‘வேணு’ என்ற உருவம்தான் அவள் அகக் கண்களில் சட்டென்று தோன்றும். ஐந்து நிமிஷம் வேணுவைக் காணாவிட்டால், அவள் உயிர் துடித்துக்கொண்டு இருக்கும். அவ்வளவு அபாரப்பட்ட அன்பு அவன் மேல் பதிந்து கிடந்தது. ஆனால், இந்த சந்தேகத்தில் கூட அவன் மேல் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டதே இல்லை. அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். ‘ஏன் என்னிடம் நேரில் சொல்லி, தன் விருப்பத்தை நிவர்த்தித்துக் கொள்ளக்கூடாது. என்னையேன் பொய் சொல்லித் துரத்த வேண்டும்?’ என்றுதான் பட்டது அவளுக்கு. தன் நினைப்புக்கு முடிவில்லாமல் போகிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம்; அன்பில்லாதவருடன் இருந்து எவ்வளவு நாட்கள் வாழ்க்கை நடத்துவது என்பது ஒரு பக்கம், ஒரு வழியும் தெரியாமல் வெளியில் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள். ”எவ்வளவு நேரம்தான் அழுது கொண்டிருப்பது. சீ, பெண்களுக்கு எதற்கெடுத்தாலும் அழுகைதான் முந்திவரும். அதனால் கண்ட பலன் என்ன?” என்று நினைத்து அவ்விடத்தை விட்டு எழுந்தாள். அவள் மனம் ‘வேணு அந்த அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான்’ என்று பார்க்க வேண்டும் என்று துடித்தது. கதவு இடுக்கு வழியாக நோக்கினாள். வேணு எழுந்து ஜன்னல் அருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளால் சகிக்க முடியவில்லை. ‘எங்காவது ஓடிப்போய் விடலாம், அவர் இஷ்டம் போல் இருக்கட்டும்’ என்று நினைத்தாள். ஒரு பேப்பர் எடுத்து வேணுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தாள். அவன் அறையில் இருந்து வெளி வந்ததும் அவன் கண்களில் படும்படியான ஒரு ஆணியில். அவள் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து மாட்டினாள். வெளியில் போவதற்குப் புறப்பட்டு விட்டாள். அவள் மனம் அலை மோதிக்கொண்டிருந்தது. கை கால் நடுக்கமெடுத்துக் கொண்டிருந்தது. தான் போகுமளவும், வேணு அறையை விட்டு வெளியில் வந்துவிடக்கூடாதே, என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள். வேணுவை ஒரு தடவை கடைசியாகப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மறுபடியும் அக் கதவு இடுக்கு வழியாக அவள் பார்வையை செலுத்தினாள். வெளியில் இறங்குவதற்கு அவளுக்குக் கூட கொஞ்சம் தைரியம் தோன்றும்படியாக, அவன் ஜன்னல் வழியாக அவன் மேல் விழும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். ‘இனி பொறுத்தக் கொண்டிருப்பது சரி இல்லை’ என்று பட்டது அவளுக்கு. வெளியில் போனால் தன் கதி என்னவாகும் என்பதை அவள் சற்றேனும் எண்ணிப் பார்க்கவில்லை. புறப்பட்டு விட்டாள். ஆனமட்டும் கலங்கி மறியும் தன் மனதை கட்டுப்படுத்திப் பார்த்தாள்; முடியவில்லை ”கடவுள் விட்ட வழி, கால்கள் எவ்வழி நோக்கிச் செல்லுகின்றதோ அதே பாதையில் நடப்போம், பசிக்கோ களைப்புக்கோ ஒன்றும் சாப்பிடக் கூடாது; எவ்வளவு தூரம் நடக்க முடிகிறதோ நடப்போம். பிறகு எந்தயிடத்திலாவது சுருண்டு விழுந்தால் உயிர்தானே போகும்; போகட்டும்.” என்று மனதில் உறுதி பண்ணி கொண்டாள். ”ஐயோ நான் ஒரு பெண், எனக்கு வழியில் வேறு ஏதாவது அபாயம் ஏற்பட்டால் என்னை காத்துக்கொள்ளுவதற்கு உள்ள சக்தி எனக்கு வேண்டும்; அதற்கு என்ன செய்வது” என்று அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அலமாரியைத் திறந்து ஒரு நல்ல கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டாள்.”அன்றும், இன்றும், இனிமேலும் உள்ளன்போடு நேசிக்க வேண்டியது இந்த கத்தியைத்தான்” என்று அதை ஒரு விசேஷ பொருளென மதித்து, இரண்டு கண்களிலும் ஒத்தி, மடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மச்சுப் படிகளை விட்டு இறங்கி வாசல்படிவரை வந்தாகிவிட்டது.

அவள் மனதில் ‘நீ செய்வது தவறு’ என்று சிறு குரல் போல ஓர் எண்ணம் எழுந்தது. ‘சீ மனமே, நீயும் என்னை அடிமைப்படுத்தவா பார்க்கிறாய். முடியாது, முடியாது; உடல்தான் ஒருவருக்கு அடிமை. உயிர் ஒருவருக்கும் அடிமை இல்லை. அது எனக்குச் சொந்தம். ஆனால், எனக்கு அடிமை இல்லை. அதற்கு தன்னை எப்படி எப்படி காப்பாற்ற வேணுமோ, அதற்கு நன்றாகத் தெரியும். தன்படி செய்வதற்கு அதற்கு பூரண சுதந்திரம் உண்டு,’ என்று பலவாறாக நினைத்துத் தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

வாசற்படியில் நின்று, தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்று நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். வலக் கோடி கடைசியிலிருந்து ஒர் ஆள் அப்பாதை வழியாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஆள் போன பிறகு போகலாம் என்று சிறிது வாசல் பக்கம் இருந்து நாலு அடி உள்ளே வந்து கதவு மறைவில் நின்றாள்.

மாடியில் வேணு கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று வெளியில் சென்றுவிடப் பார்த்தாள். அந்த ஆள் அப்போதுதான் அவள் வீட்டுக்கு சமீபத்தில் வந்து கொண்டிருந்தான். ‘இந்த நேரத்தில் பரபரத்த தோற்றத்தோடு வெளியில் தனியாக இறங்குவதை, அந்த ஆள் பார்த்து விட்டால் சந்தேகித்து விடுவானோவென்று பயம். மறுபடியும் உள்ளே வந்து, அந்த கதவு மறையில் நின்றாள்.

மாலை

அறைக் கதவை திறந்து வெளி வந்த வேணு, நேராக குழாயடியில் சென்று, கை கால் கழுவிட்டு தாகத்துக்குத் தண்ணீர் கேட்பதற்காக ராதை எங்கே என்று பார்த்தான். ‘அவள் ஒரு இடத்திலும் இல்லை’ என்று அறிந்ததும் அவன் மனம் சட்டென்று உயர்ந்து, தாழ்ந்து நின்றது. ஒருவேளை பின்புறம் போயிருப்பாளோவென்று சந்தேகம். உரக்க இரண்டு மூன்று தடவை கூப்பிட்டுப் பார்த்தான். பதில் இல்லை. ‘எங்கு சென்றாளோ, யாரிடம் போய் என்ன கேட்பது?”

அவன் மனம் என்ன என்னவோ நினைக்கச் செய்தது. தன் தவறை நினைத்து வருந்தினான். ”சீ வருந்தி என்ன பயன்? வெளியில் எங்காவது சென்று பார்ப்போம்; ஏன் அவள் போக வேண்டும்? என் மேல் சந்தேகப்பட்டு விட்டாளோ? அது உண்மையானால் அவளை நான் இனி உயிரோடு பார்க்க முடியுமா? ஒரு சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத அவள், என் தவறைப் பார்த்து விட்டிருந்தால் எப்படி சகித்திருப்பாள். இன்று நான் நடந்து கொண்டதிலிருந்துதான் அவளுக்கு உண்மை தெரிந்து வீட்டை விட்டு போயிருப்பாள். ஐயோ, இனி எங்கே போய் அவளைத் தேடுவது? வழியில் யாராவது என்னவென்று கேட்டால், என்ன பதில் சொல்வது! இனி கால தாமதம் பண்ணக் கூடாது’ என்று அவசர அவசரமாகக் கொடியில் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான். தற்செயலாக திரும்பிய அவன் பார்வையில், கூடத்து கவரில் உள்ள ஓர் ஆணியில், அவள் அணிந்திருந்த நகைகளும், அதோடு ஒரு கடிதம் சொருகி இருப்பதையும் பார்த்தான்.

கடிதத்தை எடுத்துப் பிரித்து படித்தான். ‘நாலைந்து நாட்களாக என் மனதில் கிடந்து வாட்டிக் கொண்டிருந்த சந்தேகத்தை நேரில் பார்த்து அறிந்து கொண்டேன். இனி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். எனக்காக வருத்தப்பட வேண்டி வந்தாலும், தாங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் நான்காம் நாளுக்கு முந்தியே நின்று விட்டது. தாங்கள் இனி மேலாவது நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். இன்னும் உலகில் இருந்து இவ்வித கண்றாவிகளைப் பார்க்க என் மனம் இடந்தராது. அதனால் நான் என் இஷ்டம் போல் நடந்துக்கொள்ளுகிறேன். நான் செய்வது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள். என் காலத்திற்குப் பிறகேனும் நீங்கள் நல்லபடியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கைக்காவது நான் இந்த முடிவை சந்தோஷமாக எதிர் ஏற்கிறேன்,’ என்று எழுதி இருந்ததை வாசித்ததும், அவன் மனம் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே அவன் சந்தேகித்தபடி முடிந்து விட்டதே என்று ரொம்ப வருத்தப்பட்டான். அவசர அவசரமாக மேல் வேஷ்டியை இழுத்து சரியாக தோளில் போட்டுக் கொண்டு, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘அவள் எங்கு அகப்பட்டாலும் அவள் காலில் விழுந்தேனும் மன்னிப்பு கேட்டு, அவளை வீட்டுக்கு அழைத்து வருவது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளிக் கிளம்பினான்.

கதவு மறையில் நின்றிருந்த ராதை, வேணுவின் வருகையை அவன் செருப்பு சத்தத்தில் இருந்து அறிந்துக் கொண்டாள். தான் அங்கு நின்றால் தன்னை வேணு பார்த்து விடுவான் என்று வெளியில் செல்வதற்காக மறுபடியும் தெருவை எட்டிப் பார்த்தாள். தெருவில் இன்னும் சில ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பதை பார்த்து, ‘சரி இப்போது சமயம் சரியாக இல்லை. இப்போது நான் வெளியில் சென்றால், அவரும் பின் தொடர்வார். பிறகு ஊர் அறிய இருவருக்கும் வீண் அவமானம். அவர் இப்போது நம்மை தேடித்தான் வெளியில் புறப்படுகிறார். அவர் வெளியில் சென்றபின் நாமும் வேறு பாதையாக அவர் கண்களில் படாமல் எங்காவது சென்று விடலாம்’ என்று நினைத்து கதவோடு ஒடுங்கி, அவர் பார்வையில் படாமல் மறைந்து நின்றாள்.

கீழே இறங்கி வந்த வேணு வாசலில் வந்து தெருவை இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தான். ஒன்று இரண்டு ஆட்களைத் தவிர அவன் தேடும் அல்லது தேடப் போகும் ஆளைத்தான் காணவில்லை. ஒரு தடவை வீட்டை திரும்பிப் பார்த்தான். வாசல் கதவு சிறு இடுக்கு வழியாக, ஒரு சிவப்புக் கலர் தெரிந்தது போல் இருந்தது. சட்டென்று அவன் மனதில் ‘ராதை இன்று என்ன கலர் புடவை கட்டி இருந்தாள்’ என்ற கேள்வி எழுந்தது. சிவப்புத்தான் என்ற முடிவுக்கு வந்தான். கதவண்டை போய் பார்த்தான். ராதை பயத்தினால் நடுங்கி ஒரு சிறு குழந்தை போல் உடம்பை எல்லாம் ஒடுக்கிப் புடவையை ஒதுக்கி கூட்டிப் பிடித்து கதவு மூலையோடு நெருங்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

பயந்து வெறுவிப் போய் நின்று கொண்டிருந்த ராதை வேணுவை பார்த்ததும், திடுக்கிட்டு அவன் முகத்தையே கூர்ந்து நோக்கி, அசைவற்று அப்படியே நின்று விட்டாள்.

வேணுவும் ஐந்து நிமிஷம் வரை அவளையே பார்த்து நின்றான்.

”என் ராதை இங்கு வந்து நிற்கிறாய்? வா, மேலே போவோம்’ என்று அழைத்தான் மெதுவாக. அவன் குரலில் பரிதாபம், மன்னிப்பு, இரண்டும் கலந்திருந்ததாக பட்டது ராதைக்கு. பதில் பேசாமல் அவன் பின் மாடிப் படிகளில் கால் வைத்து ஏறினாள்.

***   

Image Courtesy: http://images.nationalgeographic.com/ 

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 26

சரோஜா ராமமூர்த்தி

(1921  – 1991)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். அக்காலத்தின் பிரபல வெகுஜன எழுத்தாளர்களுள் ஒருவர். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தவர். பல எதிர்ப்புகளை மீறி துணிவாக பதிவுத் திருமணம் செய்துகொண்டவர். இவரின் ‘பனித் துளி’ நாவல் இவரை எழுத்துலகில் பிரபலமாக்கியது. ‘பனித்துளி சரோஜா’ என்றே அழைக்கப்பட்டார். ‘முத்துச்சிப்பி’,  ‘இருளும் ஒளியும்’, ‘நவராத்திரிப் பரிசு’, ‘மாளவிகா’ இவரின் பிற நாவல்கள்.

600 சிறுகதைகள், 10 நாவல்கள் வரை எழுதியுள்ளார். இவரின் குடும்பமே எழுத்துத்துறையில் இருப்பது ஆச்சரியமே. கணவர் து.ராமமூர்த்தி, மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி என நான்கு எழுத்தாளர்களைக் கொண்ட குடும்பம்.

முதல் கடிதம்

நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள்.

”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள்.

Image

ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் – மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டும் அலுப்பு இல்லை. வாழ்க்கைப் பாதையில் முதல் முதல் பிரவேசிக்கும் உற்சாகம் அல்லவா அவர்களுக்கு? நாலைந்து சிறிய பெண்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாகஸ்வரக்காரன் மத்தியமாவதி ராகத்தை வாசித்துக்கொண்டு நடந்தான். சீனிவாசன் ஜயலஷ்மியைக் கடைக்கண்ணால் கவனித்தான். இதற்குள் எத்தனையோ தடவைகள் அவள் கண்களை அவன் சந்திக்க முயன்றும் அவள் இவன் பக்கமே திரும்பாமல் உறுதியுடன் இருந்தது, அவள் பிடிவாதக்காரி என்பதை சீனிவாசனுக்குச் சொல்லாமலே விளக்கிவிட்டது. ஜயலஷ்மியும் அவனை அதே சமயத்தில் கடைக்கண்ணால் பார்த்தாள்.

”என்ன, என்னைப் பார்க்கக்கூட மாட்டாயோ?” என்று மெதுவாக, ஆனால் ஸ்பஷ்டமாகக் கேட்டான் சீனு அவளைப் பார்த்து.

அவள் பொன்னிறக் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. அழகாக ஆனால் சுருக்கமாக அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜயம்.

”உன்னைத்தானே?” என்று மறுபடியும் கேட்டான் சீனு.

”பேசினால் போயிற்று. கூட எல்லோரும் வருகிறார்கள்” பெண்மையின் நிதானத்தை அந்தச் சொற்கள் விளக்கின.

இதற்குள் கோவில் வந்துவிட்டது. கூட வந்த பெண்கள் குளக்கரையில் பாலிகைக் கிண்ணங்களை வைத்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றப் போய்விட்டார்கள். பாலிகைச் செடிகளைக் குளத்தில் அலம்பிக்கொண்டே தலை குனிந்து கொண்டிருந்தாள் ஜயலஷ்மி. அவளுடைய நிதானம் சீனுவுக்குப் பிடிக்கவில்லை.

”என்னவோ அந்தக் காலத்துக் கல்யாணப் பெண் மாதிரி தலையைக் குனிந்து கொள்கிறாயே! இரண்டு வார்த்தை பேசினால் வாய் முத்து உதிர்ந்து போய்விடுமா?” சீனுவின் வார்த்தைகள் கடுமையாகத் தோன்றவே ஜயம் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

”என்ன பேச வேண்டும்? ஏதாவது கதை கிதை சொல்ல வேண்டுமா?” இப்படிச் சொல்லிவிட்டு அவள் பரிகாசச் சிரிப்புச் சிரித்தாள்.

”இன்றைக்கு மத்தியானம் ஊருக்குப் போகிறேன் என்பது தெரியுமா உனக்கு?”

”வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்” என்றாள் ஜயலஷ்மி.

”மறுபடியும் தீபாவளியின்போதுதான் நாம் சந்திக்கப் போகிறோம்” என்றான் சீனு.

அவன் வார்த்தைகளில் பிரிவின் துயர் நிரம்பி இருந்தது ஜயலஷ்மியின் முகமும் வாடியது.

”அப்பொழுது என்னைக் கட்டாயம் உங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவீர்கள், இல்லையா?”

”இப்பொழுதுதேகூட அழைத்துப் போய்விடுவேன். உன் அப்பா தான் சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.”

இதற்குள் கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த பெண்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

”நான் ஊருக்குப் போனபிறகு கடிதம் போடுகிறாயா?” என்று கேட்டான் சீனு.

”ஓ”என்றாள் ஜயலஷ்மி.

சீனு அவசர அவசரமாகத் தன் விலாசத்தை அவளிடம் கூறி முடிப்பதற்குள், மற்றப் பெண்கள் வந்துவிட்டார்கள்.

2

Image

சீனு ஊருக்கு வந்த பிறகு இதுவரையில் தனிமை என்றால் என்ன என்று அறியாதிருந்தவனைத் தனிமை மிகவும் வருத்தியது. ஜயலஷ்மியின் பேச்சு, புன்னகை, பரிகாசம், ஒவ்வொன்றும் மாறி மாறி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் பெண் கடிதம் எழுதினாலும் புத்திசாலித்தனமாகத்தான் எழுதுவாள் என்று நினைத்துக் கொண்டான். தேனூறும் அவள் வார்த்தைகளைப்போலவே கடிதமும் தேனில் தோய்த்து எழுதப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துகொண்டான் சீனு. ஆனால், நாட்கள் ஒவ்வொன்றாகச் சென்று கொண்டிருந்தன. தினமும் தபால்காரன் இவன் எதிர்பார்க்கும் கடிதத்தைத் தவிர வேறு கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். சீனுவுக்கு மனத்தில் தெம்பு குறைந்து போயிற்று. இந்தச் சந்தர்ப்பத்தில் கல்யாணம் முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது ஜயலஷ்மி சீனுவின் தங்கையிடம் ரகசியமாக ஏதோ கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் தங்கையிடம் அந்த ரகசியத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.

”மதனியைக் கடிதம் போடச் சொல்லி இருக்கிறாயாம் அண்ணா. ஆனால், அவள் உனக்கு முதலில் எழுத மாட்டாளாம். நீதான் எழுத வேண்டுமாம்” என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே கூறினாள்.

சீனுவுக்கு இப்பொழுதுதான் புரிந்தது, ஜயத்தினிடமிருந்து கடிதம் வராத காரணம். கடைசியில் தன்னுடைய பிடிவாதத்தையும் போக்கிரித்தனத்தையும் விடவில்லையே என்று தோன்றியது அவனுக்கு. சீனுதான் கடிதம் முதலில் எழுத வேண்டும் என்பது தெரிந்து விட்டது. அப்பொழுதுதான் சீனுவுக்குத் தான் அவளிடம் அவள் விலாசம் கேட்டு வாங்காமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. கடைசியில் கல்யாணம் நடந்த வீட்டு விலாசத்தைப் போட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்த பிறகுதான் அவன் மனம் ஆறுதல் அடைந்தது.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதன் பிறகும் அவளிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரவில்லை!

கடைசியாக அவன் எதிர்பார்த்திருந்த தீபாவளிக்கு ஒரு வாரம் இருந்தது.

”ஊரிலேயிருந்து உன் வேட்டகத்தார் உன்னைத் தீபாவளிக்கு அழைப்பார்களே. நல்லதாகப் புடவை ஒன்று ஜயலஷ்மிக்கு வாங்க வேண்டும். என்னுடன் கடைக்கு வருகிறாயா?” என்று அவன் தாய் அவனைக் கூப்பிட்டாள்.

”நான் எதற்கு அம்மா? நீங்களே வாங்கி வந்துவிடுங்கள்” என்றான் சீனு.

”நான் கர்நாடக மனுஷி அப்பா. உன் மனசுக்கும் பிடிக்க வேண்டுமோ இல்லையோ?” என்று தாய் வற்புறுத்திக் கூப்பிட்ட பிறகு அவனும் கடைக்குப் புறப்பட்டாள்.

தாமரை வர்ணத்தில் இருந்த புடவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜயலஷ்மியின் சிவந்த மேனிக்கு இது நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அந்த ஜயலஷ்மிதான் ஒரு கடிதங்கூடப் போடாமல் இருக்கிறாளே என்பதை நினைத்தபோது அவளிடம் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஜயலஷ்மியின் வீட்டை அடைந்தான் சீனு. மாமனார் பரிந்து பரிந்து உபசரித்தார். மாமியாருக்கு மாப்பிள்ளை வந்திருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. மைத்துனன் மைத்துனிகளுக்குப் பரிசுகள் வாங்கி வந்திருப்பவற்றை அவர்களிடம் கொடுத்தான் சீனு.

ஜயலஷ்மியும் பின்னல் அசைய ஒய்யார நடை நடந்து அவன் எதிர்போய் வந்து கொண்டிருந்தாள். ஆனால் இவன் இருக்கும் பக்கங்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கலகலவென்று குழந்தைகளுடன் சிரித்துப் பேசினாள். அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டு இவன் உள்ளம் தேனைக் குடித்த வண்டுபோல் மயங்கியது.

‘ஒருவேளை ரொம்பவும் கர்வம் பிடித்தவளாக இருப்பாளோ?’ என்று தன் அறையில் உட்கார்ந்துகொண்டு எண்ணமிட்டான் சீனு. இரவு சாப்பிடக் கூப்பிட அவன் மாமனாரே வந்தார்.

”சீக்கிரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம். விடியற் காலம் எழுந்திருக்க வேண்டும்” என்று கூப்பிட்டார் அவர். கனவில் நடப்பதுபோல எழுந்து இலையில் முன்பு உட்கார்ந்து கொண்டான். ஜயலஷ்மிதான் பரிமாறினாள். ‘வேண்டாம் வேண்டாம்’ என்னும்போதே இலையில் பாயசத்தை ஊற்றினாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமனார் சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையின் அவஸ்தையை மிகவும் ரசித்தார். அந்தச் சந்தர்ப்பத்திலும் சீனு அவள் கண்களைச் சந்திக்க முயன்றான். அழகிய விழிகள் நிலத்தில் பதியக் குனிந்த தலை நிமிராமல் உள்ளே போய்விட்டாள் அவள்.

சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்று உட்கார்ந்தான் சீனு. தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு அவள் மைத்துனி உள்ளே வந்தாள். யாருக்காக ஆறு மாசமாக காத்திருந்து வந்திருக்கிறானோ அவள் தன்னை லட்சியம் பண்ணாமல் இருந்தது அவனுக்கு வேதனையை அளித்தது. எதிரில் தட்டில் இருந்த தளிர் வெற்றிலையும் வாசனைப் பாக்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

”இந்தா! இந்தப் புடவையை அம்மா அதுக்காக வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்று தாமரைவர்ணப் புடவையை எடுத்து மைத்துனியிடம் கொடுத்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் புடவையைப்பற்றி எல்லோரும் பேசுவது கேட்டது. ஜயலஷ்மி ஏதாவது பேசுகிறாளா என்று குறிப்பாகக் கவனித்தான் சீனு. அவளுடைய பேச்சுக் குரல் கேட்கவில்லை. கடைசியாக அவள் தாய் அந்தப் புடவையைப் பீரோவில் வைக்கச் சொல்லி இவளிடம் கொடுத்ததும் அவள் பேசாமல் அதை வாங்கிக்கொண்டு போனதும் சீனுவின் வேதனையை அதிகரிக்கச் செய்தன.

3

நாகஸ்வரக்காரன் பூபாள ராகத்துடன் பள்ளியெழுச்சியை ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து அப்பொழுதுதான் கண் அயர்ந்த சீனுவை அவன் மாமனார் வந்து எழுப்பினார். வேண்டா வெறுப்பாகப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் சீனு.

”ரெயிலில் வந்தது அலுப்பாக இருக்கிறது. வீட்டில் எல்லோரும் ஸ்நானம் செய்து ஆகட்டுமே” என்றான் சீனு.

”மத்தியானம் தூங்கலாம். எழுந்திருங்கள்” என்று கண்டிப்பாக உத்தரவிட்டார் அவர்.

மங்கள ஸ்நானம் ஆயிற்று. தாமரை வர்ணப் புடவை சல சலக்கக் கூடத்தில் தன் தகப்பனாருடன் உட்கார்ந்திருந்த கணவனுக்கு நமஸ்காரம் பண்ண வந்தாள் ஜயலஷ்மி. ஈரம் உலராத கூந்தலைப் பின்னிப் பாதியில் கட்டியிருந்தாள். அதன்மேல் செண்டாகக் கட்டி வைத்திருந்த ரோஜாவும், மை தீட்டிய விழிகளும், புன்னகை ததும்பும் முகமும் அவனைப் பரவசத்தில் ஆழ்த்தின.

Image

”மாப்பிள்ளை! வைர ஜிமிக்கி வேண்டுமென்று குழந்தை ஆசைப்பட்டாள். செய்து போட்டிருக்கிறேன். ஜயம்! எங்கே ஜிமிக்கியைக் காட்டம்மா” என்றார் அவர். ஜயம் காதுகளில் சுடர் விட்ட ஜிமிக்கிகளைக் கழற்ற ஆரம்பித்தாள்.

”வேண்டாம். பார்த்தாகிவிட்டதே!” என்று கூறிவிட்டுச் சீனு தன் அறைக்குப் போவதற்கு எழுந்தான்.

சமையல் அறையிலிருந்து வந்த சம்பாஷணை அவன் காதில் விழுந்தது. ”தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி இல்லையே உன் கணவர்! அவர் வந்ததிலேயிருந்து நீ அவர் இருக்கும் பக்கமாவது போனால்தானே? சமையல் அறையையே சுற்றிச் சுற்றி வருகிறாயே!” என்றாள் ஜயலஷ்மியின் தாய்.

”நீதான் பட்சணமும் காபியும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வேறே யாரும் போகக்கூடாது; தெரியுமா?” என்று வேறு மற்றவர்களுக்குத் தடை உத்தரவு போட்டாள் அந்த அம்மாள்.

ஜயலஷ்மி காபியையும் பட்சணத்தையும் கொண்டு வந்து மேஜைமேல் வைத்தாள். யாருடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தானோ அவள் பதுமைமாதிரி அவன் எதிரில் நின்றுகொண்டிருந்தாள். சீனு மெதுவாக எழுந்து கதவை ஓசைப் படாமல் தாழிட்டான். கைதியைச் சிறைபிடித்த அதிகாரியின் உற்சாகம் அவன் முகத்தில் இருந்தது.

”இந்தா! இங்கே எதற்காக வந்திருக்கிறேன், தெரியுமா?” என்று கேட்டான் அவன்.

”தெரியும்” என்று பதில் அளித்தாள் அவள்.

”என்ன தெரியும்? வந்தவனை மதிக்காமல் இருக்கத் தெரியும். போட்ட கடிதத்துக்குப் பதில் போடாமல் இருக்கத் தெரியும்.”

ஜயலஷ்மியின் முகம் கடிதம் என்றவுடன் கோபமடைந்து சுருங்கியது.

”யாருக்குக் கடிதம் எழுதினீர்கள்? யார் பதில் போட வேண்டும்?”

”சாக்ஷாத் உனக்குத்தான். நீதான் எனக்குப் பதில் போடவேண்டும். போட்டாயா?”

”எனக்கு ஒன்றும் நீங்கள் கடிதம் எழுதவில்லை.”

”பொய்யா சொல்லுகிறாய்?”

”ஐயோ! கடிதத்தைப் பற்றி உரக்க வெளியில் பேசாதீர்கள். எனக்கு அவமானமாக இருக்கிறது!”

சீனுவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

”என் மனைவிக்குக் கடிதம் எழுதி அவமானப்பட என்ன இருக்கிறது ஜயா.” ஜயலஷ்மியின் கண்களில் முத்துப்போல் நீர் வழிந்தது. ”நீங்கள் எனக்கு ஒன்றும் கடிதம் எழுதவில்லை. என் சிற்றப்பா பெண் ஜயத்துக்குத்தான் எழுதியிருக்கிறீர்கள். கூடப் பிறந்த சகோதரிகளைவிட நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் இந்த விஷயம் பெரியவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முடிந்தது. பாவம்! அவள் வேர்க்க விறுவிறுக்க அந்தக் கடிதாசியை என்னிடம் கொண்டுவந்து கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

சீனு அவள் கையில் இருந்த கவரை வாங்கிப் பார்த்தான். ஒன்றும் புரியாமல் விழித்தான்.

”ஜயம்! எனக்கு ஒன்றுமே புரியலையே! அந்தப் பெண்ணின் பெயரும் ஜயலஷ்மிதானா?”

”நமக்குக் கல்யாணம் என் சிற்றப்பா வீட்டில்தானே நடந்தது! அந்த விலாசத்தில் என் தங்கை ஜயலஷ்மி என்று ஒருத்திதானே இருக்கிறாள்?”

”ஆமாம், என் விலாசம் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு உன் விலாசம் கொடுக்காமல் இருந்துவிட்டாயே. அத்துடன் முதல் கடிதம் நான்தான் போடவேண்டும் என்று வேறு சொல்லி அனுப்பியிருந்தாய்!”

ஜயலஷ்மி கன்னம் குழியச் சிரித்தாள்.

”இந்தத் தடவையாவது சரியான விலாசம் கொடுக்கிறாயா ஜயம்?”

”போதும், போதும், முதல் கடிதம் போட்ட லட்சணம்! விலாசமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களுடன் என்னை அம்மாவும் அப்பாவும் ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம்.”

இப்படிக் கூறிவிட்டு ஜயலஷ்மி அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். வெளியில் குழந்தைகள் கொளுத்தும் மத்தாப்பின் ஒளி பட்டு அவள் மதிவதனம் சுடர்விட்டு பிரகாசித்தது. சீனு வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தான். இருவரும் ஒரே சமயத்தில் மேஜைமீது கிடந்த முதல் கடிதத்தைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தார்கள்.

Picture Courtesy: http://www.rabnebanadijodi.in

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 25

Image

கு.ப.சேது அம்மாள்

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலின் சகோதரியான இவர், தன் வீட்டில் நிலவிய இலக்கியச் சூழலின் உந்துதலால் எழுதத் தொடங்கியவர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதியவர். இவருடைய படைப்புகள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டன.

மங்கை, கலைமகள், கலா மோகினி ஆகிய இதழ்களில் இவர் தொடர்ந்து  எழுதியுள்ளார். 

புயல் ஓய்ந்தது

ப்பசி மாதத்து அமாவாசை. அந்தியில் பிடித்த மழை விடாமல் ஒரே மாதிரியாக அடித்துப் பெய்துகொண்டிருந்தது.

நல்ல நிசிவேளை. இடியும் மின்னலுமான அந்த அடை மழையிலும் சாரதா, தன் அறையின் ஜன்னல்களையும் கதவையும் திறந்துபோட்டு விட்டுத் தூக்கம் கொள்ளாமல் மறுகும் மனவேதனையை வெளியுலகத்து ஆர்பாட்டத்தோடு கலந்துகண்டு கொண்டு சாய்மானத்திலேயே கிடந்தாள். இன்னும் பலமான மழை வலுக்கவே அவள் மீது சாரலடித்தது. எழுந்தும் ஜன்னலை மூடும் சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

நின்று கேட்டாள். ஒரு தடவை, மறுதடவை, பிறகு தொடர்ந்து தட்டுவது கேட்டது. சரி நமது வீட்டுக் கதவுதான் என்று மாடியிலிருந்து இறங்கிவந்து கதவருகில் நின்று, கதவைத் திறக்காமலேயே ‘யாரது?’ என்று கேட்டாள்.

”நான்தான் சாரதா, திற”

குரலைக் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஒரு காலத்தில் அமுதச் சுவையாக இனித்த அந்தக் குரல். இன்று கர்ணகடூரமான த்வனியாகக் கேட்டது. உள்ளே இருந்து பதிலுமின்றி, கதவும் திறக்கப்படாதது கண்டு மறுபடியும், ”சாரதா, கதவைத் திற, நான்தான்” என்றது மறுபடி வெளியிலிருந்து குரல்.

தாழ்ப்பாளை நீக்கிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் சாரதா. கதவைத்திறந்து கொண்டு நடராஜன் அவள் பின்னாலேயே கூடத்திற்கு வந்து நின்றான். சாரதா திரும்பி நின்று வந்தவனைப் பார்த்து ”வாருங்கள் ராஜா, சௌக்யா?” என்று பதபாகமான தொனியில் கேட்டவுடனேயே நடராஜனின் நம்பிக்கையில் ஒரு பாதி செத்துவிட்டது.

அந்த அதிர்ச்சியினால் தூண்டப்பட்டவனாக மெய்மறந்து போய் அவளை நோக்கிப் பாய்ந்தான். சட்டென்று இரண்டடி பின்வாங்கி நின்று கொண்டாள் சாரதா. கூரிய சிரிப்பொன்று சிரித்துக் கொண்டு, ”இவ்வளவு பிரேமை உங்களுக்கு எப்போது உதித்தது?” என்று அவனைப் பார்த்து கொண்டே கேட்டாள். அவளுடைய அந்த தீஷண்ய வகசிதமான சிரிப்பு பாணம் போல நடராஜனின் உள்ளத்தில் தைத்தது. ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்று, பிறகு தெளிவடைந்து, ”சாரதா உன் தயாளத்தை நம்பி எனது தவறை உன் முகத்தின் முன் ஒப்புக்கொண்டு, உனது மன்னிப்பையும் உன்னையும் கேட்கிறேன். என்னை ஏமாற்…”

எட்டிக் கசப்பை விழுங்குவது போல அந்த வார்த்தைகளை வாங்கிக் கொண்ட சாரதாவின் தோற்றத்தைக் கண்ட நடராஜன் மேலே பேசத் தெரியாமல் திகைத்து நின்றான்.

நிலைமையைச் சமாளித்துக்கொண்டு சகஜ பாவத்துடன் சாரதா, ”உட்காருங்களேன். தீர்த்தம் வேண்டுமா?” என்றாள் உபசாரமாக, ”வேண்டும். கொண்டு வா” என்றான். வந்ததும் வாங்கிக் குடித்தான். உட்கார்ந்து கொண்டான், பேசாமல் எதிரே சிலை போல நிற்கும் மனைவியை உற்றுப் பார்த்தான் ஐந்து நிமிஷம். ஐந்து வருஷங்களுக்கு முன்பு எந்தக் கம்பீர ரூபத்தையும். ஞான சோபைபையும் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுத்தானோ… அதே கம்பீர ரூபமும் தேஜஸும் அவளுடைய தோற்றத்தை மறுமுறையாக அதுவும் ஸ்பஷ்டமாகக் கண்டான். மனம் படாதபாடு பட்டது. தத்தளித்து உருகினான். அதே அளவில் குரலும் கெஞ்ச, ”சாரதா. வா இப்படி உட்காரு என் பக்கத்தில். மாட்டாயா?” என்று விம்மினான்.

Image

ஒரு காலத்தில் மெழுகு போன்ற சுபாவமாக இருந்த சாரதா இன்று இரும்பு வன்மை பெற்ற தன்மையுடன் தீர்க்கமான குரலில், ”இருக்கட்டும். இந்திராவும் குழந்தையும் சௌக்யம்தானே?” என்று கேட்டுக்கொண்டே நின்ற இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

கேள்விக்கு செவிகொடாதவனாக இரு கைகளையும் ஒரு நெற்றியில் ஊன்றிக்கொண்டு பூமியை நோக்கினான். அவனுடைய இரு கண்களிலிருந்தும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

அப்படியாக அரை மணி நேரம் சென்றது. வேகம் தணிந்து அவன் தலை நிமிரும் வரையிலும் சாரதா கல் மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

பிறகு அவனாக ஓய்ந்து தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். நீர் வழியும் கண்களுடன் தேம்பிக்கொண்டு, ”சாரதா, போதும், இரங்கு எனக்கு” என்றான் பரிதாபமாக.

”நீங்கள் என்ன சிறு குழந்தையா? ஆண் பிள்ளைகளுக்குக் கண்களில் ஜலம் வரக்கூடாது. அது கோழைத்தனத்தின் அறிகுறியல்லவா? அந்த வகையில் நான் உங்களை மதிப்பிட மாட்டேன். முதலில் கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

”நானா துடைத்துக்கொள்ளவேண்டும், சாரதா? உன் மனதை எவ்வளவு இறுக்கிவிட்டேன் பாபி! என் கண்ணே! உனது அன்பு எங்கே! அதை என் மீது சொரி, இல்லாவிட்டால் உயிர் வாழ என்னால் சாத்தியமில்லை… சாரதா…”

”ராஜா! கொஞ்சம் பொறுங்கள். இருந்த அன்பையெல்லாம் அன்றே உங்களுக்கு அளித்துவிட்டேன். பாக்கி வைத்திருக்கவில்லை, இன்று கொடுக்க! ஆண்களின் அன்புக்கும் பெண்களுக்கும் இதுதான் வித்தியாசம். உங்களுக்குத் தெரியாத தத்துவமா இது?”

”ஆமாம், உண்மை, நிஜமான வார்த்தை, பிறந்து பிறந்து மாய்வதும் நிமிஷத்தில் மாறுதலடைந்து விடும் சபல சித்தமும்தான் ஆண்களின் அன்பு என்று சொல்லுகிறாய்! வாஸ்தவம். இதே வீட்டில் முதல் முதலாக உன்னைக் கண்டதுமே உனது கம்பீர உருவமும் நளினமான சுபாவமும் என்னை ஆட்கொண்டது. உன்னை எனது மனைவியாக்கிக் கொண்டேன். நான் புருஷன், நீ மனைவி, எனது கட்டளைப்படி நீ நடக்கவேண்டியது என்ற நினைப்பில் என் மனம்போன போக்கிலெல்லாம் உன்னை நடத்தினேன். எதனால்? மனைவி என்பவள் கணவனுடைய அடிமை என்ற ஆவேசத்தில். உனக்கும் ஒரு மனம், அபிலாஷைகள், உணர்ச்சி என்பதிருக்கிறது என்ற ஞாபகமே இன்றி உன்னை எனது இஷ்டப்படி ஆட்டுவித்தேன். அது மட்டுமல்ல, என்றாவது ஒருநாள் உனது உயர்வை நீ சூசகமாக நினைவூட்டுவதுகூட எனக்கு விஷயமாக இருந்தது. ரொம்ப சாதாரணமாக அதைச் சகித்துக்கொண்டு போனாய். எனது போதாத காலத்தின் விளைவாக உன்னை மாதக் கணக்காகத் தனிமையில் திணறவிட்டுவிட்டு, வாட்டி, வதக்கி, உன்னால் எனக்குச் சுகமே கிடையாது என்று நேருக்கு நேராக நின்று முகத்தைப் பார்த்துக் கேட்டேன். அதையும் பொறுத்துக்கொண்டாய். தவறு என்னுடையதாக இருக்க உன்னை மலடு என்று மனம் துணிந்து கூறி எனது உதாசீனத்தைக் காட்டி எனது திருப்திக்கு உன்னை இரையாக்கிக் கொண்டேன். அதையும் சகித்துக்கொண்டு வாய் திறவாமல் எனக்கு மறுமணம் செய்வித்து – அந்தச் சிறுமைப்படுத்தி – எனக்களித்துவிட்டு அப்போதும் உனது தன்மை மாறாது, என் வீட்டில் ஒரு வேலைக்காரியின் நிலைமையில் இருந்தாய்! சாரதா, ஆண்டவன் உன் பக்கத்தில் இருந்து அதே சமயத்தில் எனது கொடிய சித்தவிருத்தியை விளம்பரம் செய்ய உன்மூலம் எனக்கு ஒரு மகனையளித்தார். அதுவும் என் குழந்தை என்ற நினைவே எனக்கு இல்லாமல் போய் – அவளுக்குப் பிறந்த குழந்தையைக் குலாவி உனது குழந்தையை வெறுத்தேன். எனது வெறுப்பையும் வேண்டாமையையும் அங்கீகாரம் செய்து அந்த என் மாணிக்கத்தை மண்ணுக்கு இரையாக்கிவிட்டு அதன் பிறகும் மனோதிடத்துடன் என் வீட்டில் இருந்தாய்…”

”ராஜா, அதே மனதிடம் இன்னும் என் மனதிலிருக்கிறது, இருங்கள். பிற்பாதியை நான் முடித்து விடுகிறேன். நீங்கள் என்னை நடத்திய விதம் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. எனது லோகானுபத்தை விருத்தி செய்தது! அதையெல்லாம் பற்றி இப்போது என் மனதில் ஒருவித நினைவும் இல்லை! ஆமாம், இன்று கேட்கிறேன் சாவகாசமாக. குழந்தை இறந்த அன்று என்னை வந்து துக்கம் விசாரித்தீர்களே, அதன் அர்த்தம் என்ன?”

”ஒரு தரமல்ல, லட்சம் தரம் கேள். நான் அபராதி. அது நீ ஈன்ற குழந்தைதானே! அந்த நினைப்பில் கேட்டிருக்கிறேன். எனக்குப் பாத்தியம் என்ற நினைவு இருந்தாலன்றோ நான் துக்கப்பட! சாரதா, அந்தப் பாதகச்செயலுக்காக ஒவ்வொரு நிமிஷமும் என்னை நான் தண்டித்துக்கொண்டிருக்கிறேன். உனக்காக இதை நான் சொல்லவில்லை….”

”சரி, அது இருக்கட்டும், சந்துரு நன்றாகப் பேசுகிறானா?”

”வா சாரதா, வந்து பார் அவனை.”

”சௌக்யமாக இருக்கட்டும். எனது பாபக் கண்களால் அவனைப் பார்க்கவேண்டாம்.”

”யாருடையது பாபக் கண்கள்? சுகத்தையும் துக்கத்தையும் சமதிருஷ்டியுடன் பார்க்கும் உனது கண்களா பாபக்கண்கள்? சாரதா, உனது சுபாவத்தின் மேன்மையை முதலிலும் முடிவிலும் கண்ட நான், நடுவில் ஏன் காணவில்லை?”

”அதிசயமென்ன இருக்கிறது இதில்? விதியாகிய படுதா நம்மிருவருக்கும் நடுவில் இருந்தது.”

”இப்போது இல்லை. சாரதா. வா, என்னருகில்.”

”இனி அதற்குத் தேவை இல்லை.”

”எனக்கு இருக்கிறது. வா, நீ இல்லாமல் வீடு நன்றாக இல்லை.”

நடராஜன் இந்த வார்த்தையைச் சிந்தியதுதான் தாமதம். சாந்த ஸ்வரூபமாக நின்ற சாரதா வினாடியில் சீறியெழுந்தாள். அவளுடைய கண்கள் தணலாக ஜொலித்தன.

”என்ன சொன்னீர்கள்? நானின்றி வீடு நன்றாக இல்லையா?”

”ஆமாம், நன்றாக இல்லை. எல்லாம் மறந்துவிடு. நமது கஷ்ட காலம் நீங்கிவிட்டது.”

”என்றோ நீங்கிவிட்டது – இன்றல்ல!”

”எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லு. சாரதா, உன் வீட்டுக்கு நீ வர வேண்டாமா?”

”என் வீடா! அதெங்கிருக்கிறது? அந்த வீட்டில் உங்கள் குழந்தைக்கே அன்னமும் இடமும் இல்லை என்றால் எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? ஒரு காலத்தில் உங்களுக்கு இந்தக் கழிவிரக்கம் தோன்றாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பதிலாகத்தான் இந்திரா இருக்கிறாளே! நீங்கள் கருதியபடி மலடியாக நின்று விடாமல் காத்த கடவுள் கருணாநிதி! அது போதும் என்ற திருப்தியுடன் உங்களுக்குப் பாரமாக அங்கிருந்துகொண்டு என்ன பயன்? வந்துவிட்டேன்! எனது பர்த்தா சுகமடைய வேண்டி அதற்கானதைச் செய்து எனது ஆயத்தை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் அவளுக்குக் கற்றுக் கொடுத்த பதி சேவையை அவளே எனக்குப் போதிக்கும் அளவில் உயர்வடைந்து விட்டாள். என் வேலை சித்தியாகி விட்டது. எனது துயரமும் இன்றோடு நிவர்த்தி. உங்களையும் மறுமுறையாகக் கண்டுவிட்டேன். துயரம் தீர்த்த தங்களுடைய பாதங்களுக்கு நமஸ்காரம்!”

”நிஜம்தானா, சாரதா, இது?”

”எனது சுபாவம் என்றும் ஒரே மாதிரிதான், சுயநலமற்றது என்று நிமிர்ந்து சொல்ல இடம் வைத்துக்கொண்டுதான் நான் மனிதர்களுடன் பழகுகிறேன். எனது முடிவில் தவறுதல் ஏற்பட இடமே கிடையாது”

”மிஞ்சி விட்டாயா உன் கணவனை?”

”ராஜா, அது விதியின் கூற்று. என்னதல்ல. இந்த ஞானமில்லா விடில் நான் என்றோ தற்கொலை புரிந்துகொண்டிருப்பேன்” என்றாள் சாந்தமாக.

சாரதாவின் பதிலில் ஆழ்ந்தபடியே வெளியுலகைப் பார்த்தான் நடராஜன்.

வெளியே நிகழும் ஆர்ப்பாட்டம் அவனுடைய உள்ளப் போராட்டத்திற்கு எவ்விதத்திலும் குறைந்திருக்கவில்லை.

Picture Courtesy: http://bestmodernpaintings.blogspot.com

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 24

குகப்பிரியை

பழைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். பத்திரிகையாளர். ‘மங்கை’ என்னும் இதழை ஓராண்டிற்கும் மேலாகத் தனிக் கவனத்துடன் நடத்தியவர். பேச்சாளர்.

‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல், சிறுகதைகளுக்காக முதல் பரிசுப் பெற்றவர். காந்தியத்தின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் தன் வாழ்நாளின் இறுதிவரை கதராடையை அணிந்தார்.

நூல்கள்: சந்திரிகா, இருள், ஒலி, திப்பு சுல்தான், மார்த்தாண்டவர்மன், தேவகி முதலிய கதைகள், ஜீவகலை.                                                                                                                   

பச்சை மோதிரம் 

Image

”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு! என்ன இடி இடிக்கிறது! ஐப்பசி மாதம் அடை மழை என்பார்களே, சரியாய்த்தான் இருக்கிறது. குழந்தைகள் துணிமணி ஒன்றுகூட உலரவில்லை. புடவை ஒரே தெப்பல். இந்தப் புடவைகளே உலரமாட்டேனென்கின்றன. இன்னும் கதர் வேண்டுமாம். கதர்! தூலம் தூலமாய் இரட்டையும் ஜமக்காளத்தையும் வாங்கினால் யாரால் தூக்கி உடுத்த முடியும்? சொல்லப் போனால் பொல்லாப்பு. நான் கதர் உடுத்திக்கொள்ளவில்லையென்னுதான் ‘சுயராஜ்யம்’ வராமெ வழியிலே நின்றுகொண்டிருக்கிறதாக்கும்! இதைத் தவிர மீதியெல்லாம் பண்ணினால் போறலையாக்கும்! போன வருஷமாவது தேவலை. இவ்வளவு மழை இல்லை. இந்த வருஷம் ரொம்ப அக்கிரமம். இந்த மாதிரி சொட்டச் சொட்ட வந்தேன். தோழி, கதவைத்திறன்னு நாலு நாள் வேலை செய்தால்? அப்புறம், அப்புறந்தான். யாரால்தான் சாத்தியம், என்னால் முடியவே இல்லை” என்று நிறுத்தினாள் செல்லம்.

”ஆகிவிட்டதோ, இன்னும் பாக்கி உண்டோ?” என்றேன்.

”ஆமாம். உங்களுக்கென்ன; ஏதடா பாவம். ஒண்டியாய் குழந்தைகளுடன் அலைகிறாளே என்ற எண்ணம் இருந்தால் தானே? உக்கார்ந்தபடியே பரிகாசத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆகா! போருமே சவரணை!” என்று முகத்தைக் கோணிக் கொண்டாள்.

”ஏன் ஒண்டியாய்த் திண்டாடுவானேன்? எல்லாம் நீயாகப் பண்ணிக்கொண்ட விவகாரந்தானே? அம்மா இருந்தால் உன்னை இவ்வளவு அலையவிடுவாளா? மடி விழுப்பு என்று நன்றாய்த்தான் உன்னை உட்கார வைத்துச் சிசுருஷை செய்துகொண்டிருந்தாள். நீயாகத்தானே வீண்பழி சுமத்தினாய்? ஒன்றும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தவிக்கிறேன். நீ ஆனாலும் அநியாயம்! அம்மா காதிலும் படும்படிச் சொல்லிவிட்டாய். என்னதான் இருந்தாலும் பெரியவர்களை அப்படி மனம் நோகப் பேசலாமா?”

”ஆகா! நான் முதலில் சொன்னபொழுது என்னை வெருட்டினீர்கள். குட்டியம்மாளிடமிருந்து, ‘நீ அனுப்பிய ரூபாய் ஐம்பதும் வந்து சேர்ந்தது’ என்ற காகிதத்திற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களை அறியாமல் அம்மாவுக்குத் திடீரென்று ஐம்பது ரூபாய் ஏது? அதை யோசித்துப் பாருங்களேன். தவிர, நான் மோதிரத்தைப் பற்றி ஸந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், தைரியமாய்க் கேட்கிறதுதானே? துலா காவேரி ஸ்னானத்துக்குப் போகிறேனென்று சொல்லிக்கொண்டு பெண்ணகத்தில் போய் ஏறிக்கொள்வானேன்? நானும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தேன். மாதம் தவறாமல் அப்பளமும் வடாமும் அவலும் யார் போனாலும் டப்பி டப்பியாய்க் கொடுத்துக் கொடுத்து வசங்கண்டு போயிற்று. இங்கே இடுவதற்குக் கூலிக்காரி நான் ஒருத்தி இருக்கிறோனோ இல்லையோ? பெண் கை சளைத்துவிட்டால்தான் என்ன? இப்படி ஒரு அடியாய்ப் பிள்ளை வீட்டை மொட்டை அடிக்கிறதுண்டா? வீட்டில் ஒரு தகரம் பாக்கி கிடையாது. பொரி விளங்காய் வேணுமென்னு ஆசைப்பட்டாளாம். மாவை ஒரு டப்பி, திணியத் திணியக் கோடியாத்து அம்மாவிடம் கொடுத்தனுப்பினாள். ஏன், அந்தப் பொரிவிளங்காயை இங்கேயே உருண்டையாய்ப் பிடித்தால், நானும் என் குழந்தைகளும் தின்றால் உடம்புக்காகாதோ? உங்களுக்கு என்னமோ உலகத்தில் இல்லாத அதிசயமாய் அம்மாவைப் படைத்து விட்டதாக எண்ணம்! இந்தச் சின்ன ஸங்கதிகளிலேயே இவ்வளவு சூதும் வினையுமானால் மோதிரத்துக்கு நான் சொன்னது குற்றமாய் விட்டதோ? தலைவாரிக்கொள்ளும் பொழுது சுழற்றிப் பக்கத்தில் வைத்துக் கொண்டது. வேலைக்காரியா, குழந்தையா, ஒரு பிராணி வரவில்லை. எங்கே போய்விடும்? அதுதான் போகட்டும்! ஐம்பது ரூபாய் எப்படி முளைத்தது? அதுக்கேன் பதில் இல்லை?”

”சரி, சரி, இதென்ன தலைவேதனை? போதும். நிறுத்துன்னா நிறுத்து மற்ற ஸமாச்சரங்கள் ஏதோ பெண் என்ற சபலத்தினால் சொல்கிறாள் என்றால், அதற்காக ஒரேயடியாய் திருட்டுப் பட்டம் கட்டுகிறதோ? அதோடு விட்டாயா? நான் ‘கேம்ப்’ போய் வருவதற்குள் ஊரைவிட்டே ஓட்டியும் விட்டாயே! என்ன நீலியடி நீ! ஒண்டியாய் அலைகிறாளாம்! நன்றாய் அலையேன்; யாருக்கு என்ன?”

”ஆகா! குறைச்சல் இல்லை. வேணுமென்று நான் ஆசைப்பட்டுக் கேட்டேன் என்ற அப்பா எவ்வளவோ பொறுக்கிப் பொறுக்கி வாங்கினார் நடுப் பச்சையை. அருமையாய் இருந்தது மோதிரம். நிமிஷத்தில் தொலைந்தாயிற்று. நீங்கள் பணம் போட்டு வாங்கியிருந்தால் தெரியும். எப்பேர்ப்பட்ட ‘ப்ளூ ஜாகர்’ வைரம்! இரண்டு கல்லும் இரண்டு நட்சத்திரம் மாதிரி ஜொலிக்குமே.”

”சரி, சரி, நிறுத்தப் போகிறாயா இல்லையா? குழந்தைகளுக்குப் போர்த்து இருக்கிறதா பார்” என்றேன்.

”அம்மாடி! இப்பொழுதுதான் உக்கார்ந்தேன். உடனே எழுந்திரு என்கிறீர்கள். எப்பொழுதுமே நான் சற்றே உக்கார்ந்தால் மனலாகாது; நீங்க மட்டும் சுகமாய் நாள் முழுக்க வெற்றிலை மென்றுகொண்டே ‘ஈஸிசேரி’ல் படுத்திருக்கலாம். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஏதோ வீணாய் போய்விட்ட மாதிரிப் பறக்கிறேன். ஒன்றும் அகப்படாவிட்டால் ‘வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போய்ப் பார்’ என்பீர்கள். நீங்கள்தான் எஜமான் என்பதை என்னிடம் காட்டாமல் வேறே யாரிடம் காட்டுகிறது” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்தாள் செல்லம்.

இடியும் மின்னலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வந்தன. மழை சற்று நின்றது போல் தோன்றிற்று. காற்று ‘ஹோ’ என்று பலமாய் அடிக்கத் தொடங்கிற்று. காற்றுடன் கடலோசையும் கலந்து சமுத்திரமே அருகே நகர்ந்து வருவது போலவும், மரங்கள் ‘விர் விர்’ என்று சுழல்வது போலவும் ஓசை கேட்கலாயிற்று.

2

செல்லத்துக்கு இடி என்றால் ஒடுக்கம், இரவு முழுவதும் தானும் தூங்கமாட்டாள். பிறரையும் தூங்கவிடமாட்டாள். அதிலும் நாங்கள் குடியிருந்த வீடோ வெகு அற்புதம். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்து ஏலத்தில் எடுத்த பனங்கட்டைகளையும், ஓடுகளையும் வைத்துக் கட்டப்பெற்ற மாளிகை. வீட்டுக்காரர் பத்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் மராமத்துச் செய்வார். அது வரையில், குடியிருப்பவர் ஏதோ பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு மழைக்கும் வீடு ஓர் அடி கீழே இறங்கிவிடும். அவர்கள் பூகம்ப வெடிப்புகள் போல் வெடிக்கும். குடியிருப்பவர்களுடைய ஆசிர்வாதங்கள் நடக்கும். என்ன ஆனால்தான் என்ன? சொந்தக்காரருக்கு வாடகை வந்து விடும். அந்தச் சொந்தக்காரருக்கு இதே மாதிரிப் பலவீடுகள் உண்டு. ஓடு மாற்ற நேரிட்டால், இந்த வீட்டு ஓடுகளை அந்த வீட்டிற்கும், அந்த வீட்டு ஓடுகளை இந்த வீட்டிற்கும் மாற்றி விடுவார். ஓடு மாற்ற வேண்டியதுதானே!

கட கட மட மடவென்று ஒரு பெரிய இடி இடித்தது.

பாவம்! இடியோசை கேட்டுச் செல்லம் நடுநடுங்கி விட்டாள்.

”காற்றடிக்குது கால் குமுறுது கண்ணே

விழிப்பாயென் நாயகி,

தூற்றல் கதவு சாளர மெல்லாம்

தொளைத் துடிக்குது பள்ளியிலே”

என்று பாடலானேன்.

”போதுமே பாட்டு! என்னக் காற்று, என்னக் கண்ராவிப் புயலடிக்கிறதே என்னமோ!”

”புயல்தான். நேற்றே பேப்பரில் போட்டிருந்தது. சொன்னால் நீ நச்சு நச்சென்று கழுத்தை அறுத்துவிடுவாய் என்றுதான் சொல்லவில்லை. நாகப்பட்டினம் வழியாகத்தான் வருகிறதாம்”

”ஆமாம், பொய்யும் புளுகும்! நாகப்பட்டினம் வழியாய் ரெயிலில் வருகிறதோ, கட்டை வண்டியில் வருகிறதோ?”

”நிஜத்தைச் சொன்னால் பொய் என்கிறாய், மணிக்கு இத்தனை மைல் வீதமென்று கூடக் கணக்கிட்டிக்கிறார்கள், கதவைத் திறக்கிறேன் பார்”

”வேண்டாம், வேண்டாம்” என்று ஆத்திரத்துடன் கூவினாள் செல்லம். நான் ஜன்னலின் ஏழு கதவை மட்டும் திறந்தேன்.

‘அடாடா, என்ன வேகம்! தென்னை மரங்கள் பேயாடுவது போல் தலை சுற்றிப் பயங்கரமாய் ஆடிக் கொண்டிருந்தன. காற்றின் வேகத்தினால் திறந்த கதவு படீரென்று மோதிற்று. மறுபடியும் மூடினேன்.

செல்லம் தலையையும் சேர்த்துப் போர்வையால் மூடியவளாய், இரு கைகளாலும் காதுகளை இறுகப்பொத்திக் கொண்டு சுருண்டு உட்கார்ந்திருந்தாள். நான் எழுந்து குழந்தைகளின் போர்வைகளை ஒழுங்குபடுத்திவிட்டுப் படுத்தேன். ”என்ன? நீங்கள் தூங்கப்போகிறீர்களா?”

“எனக்குத் தூக்கம் தலையைச் சுற்றுகிறது. உன்னைப்போல் கொட்டு… கொட்டு… என்று உட்கார்ந்திருந்தால் நாளைக்கு வேலை போய்விடும்” என்று சொல்லிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

3

”என்ன! எனக்குக் கொஞ்சம் துணை வருகிறீர்களா?” என்று கெஞ்சினாள் செல்லம்.

”துணை என்ன? என்னால் முடியாது, போ!”

செல்லத்துக்கு இந்த நெருக்கடியான சமயத்தில்தான், ”அடடா, மாமியாரை வெரட்டி விட்டோமே” என்ற ஞானோதயம் ஏற்படலாயிற்று. ”என்னமோ நீங்கள் இல்லாத பிகு பண்ணுகிறீர்கள், அம்மா இருந்தால் உங்களை லட்சியம் செய்து யார் கூப்பிடக் காத்திருக்கிறார்கள்?” என்று முணுமுணுத்தாள் செல்லம்.

”அம்மாவை வெரட்டினது நீயோ, நானோ? காகிதம் வந்தால்தான் என்ன? உடனே படபடவென்று உளறணுமோ?”என்று சொல்கையில் ‘மள மள’ வென்று ஏதோ முறிவது போலவும் சாய்வது போலவும் பிரமாதமான ஓசை கேட்டது. நானும் நடுங்கிவிட்டேன். தெருவில் வீட்டிற்கு எதிர் வரிசையில் பெரிய கிழத் தூங்குமூஞ்சி மரம் ஒன்று உண்டு. அதுதான் முறிந்திருக்க வேண்டும். வீட்டின் மேல் விழுந்தால் வீடும் நாங்களும் ‘சட்னி’தான் என்று தோன்றவே சுருட்டி வாரிக்கொண்டு எழுந்தேன்.

என்னை அறியாமலே என் கரங்கள் குவிந்தன.

”தீனக்குழந்தைகள் துன்பங்கள் படாதிருக்க

தேவியருள் செய்ய வேண்டுகிறேன்”

என்ற தொடர் என் மனத்துள் எழுந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டேன் ”ஐயோ!” என்று அலறியவளாய் என்னைத் தழுவி நின்றாள் செல்லம்.

4

Image

”நல்ல வேளை. இந்த மட்டில் வீடு பிழைத்ததே” என்று ஆனந்தப்பட்டார் வீட்டுக்காரர். ‘மாப்பிள்ளை தலை போனாலும் போகட்டும், பழைய நாளைய உரல் மிஞ்சிற்றே’ என்று சொன்ன மாமியாரின் நினைவு வந்தது. செல்லத்துக்கு அசாத்தியக் கோபம். வீட்டுக்காரரை அப்படியே எரித்துவிடுபவள்போல் பார்த்து, ”சிரிக்கத்தான் வேண்டும்! இவ்வளவு பெரிய மரம் வீட்டில் சாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ வீடு தொட்டால் விழுந்துவிடும் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் வாடகைக்கு மாத்திரம் மாசம் முடிவதற்கு முந்தி இருபத்தேழாந்தேதியே ஆள் வந்து விடுகிறது. குடியிருப்பவர்கள் எப்படிச் செத்தாலென்ன? இந்தப் பாழும் ஊரில் ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் குடிவந்து விடுகிறார்கள். நல்ல வேளையாய் வீடு பிழைத்ததாம்! மனிதர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும், நம் வீட்டிற்குப் பழுது வராமல் இருந்தால் சரி. இந்த மாதம் வாடகையைச் செலவழித்தாவது ஏதாவது செய்யட்டுமே, இல்லாவிட்டால் வாடகையைக் கொடுக்கப் போகிறதில்லை. இவர் வாங்குகிறபடி வாங்கிக்கொள்ளட்டும் பார்க்கிறேன்” என்று உறுமிக்கொண்டே உள்ளே போனாள்.

வீட்டுக்காரர் சர்வ சாதாரணமான குரலில் மிகவும் மெதுவாய் நிறுத்தி நிறுத்தி, ”இல்லே ஸார், இல்லை என்ன! மற்றவர்களைப் போல் நான் பத்து வருஷங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்கிறேனே? வருஷா வருஷம் பொங்கலுக்கு முன்னாலேயே ஆள் விட்டு, போனது வந்தது பழுது பார்த்து, ஒட்டடை கூட என் செலவிலேயே அடித்துக் கொடுக்கவில்லையா? அம்மா, ஏதோ ரொம்பக் கோபப்படுகிறார்கள். நானும் ஸம்ஸாரிதானே? போன வருஷம் மராமத்துக்கு வந்தபோது நீங்கள்தான் ‘குழந்தைகளுக்கு இருமல்; இப்போ வேலை செய்ய முடியாது’ என்றீர்கள். எனக்கும் கையோடு கையாய்ச் செய்தால்தான் முடிகிறது. இல்லாவிட்டால் எங்கே முடிகிறது” என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னார். எனக்கோ கோபம் ஒரு பக்கம். சிரிப்பு ஒரு பக்கம். ஒன்றும் பதிலே சொல்ல முடியவில்லை.

”என்ன ஸார்! பதிலே சொல்லவில்லை. நானே இந்த மழைக்காலத்துக்கு முன்னே இந்தத் தூங்குமூஞ்சி மரத்தை வெட்டிவிட வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனாலும், அநியாயக் கூலி கேட்டான். தாம்புக்கயிறு ஒரு சுருள் வேணுமென்றான். ஏதோ வாயு பகவான் கிருபை அதுவும் லாபம். பாருங்கள்; விறகு நன்றாய் நின்று எரியும். தை பிறந்ததும் வெட்டித் துண்டு போடலாம்” என்று சொல்லியவராய் ”அட கோவிந்தா! முனியனை அழைத்துக் கொணர்ந்து சீக்கிரம் மரத்தை எடுங்கள். எலெக்ட்ரிக் கம்பி மேலே விழுந்து அது வேற போய் விட்டது. அந்த மட்டும் நம்ம வீட்டுக் கம்பிமேலே விழவில்லை. முனிஸிபாலிடி கம்பிதான்” என்றார்.

“இல்லேங்க, நம்ப கம்பிகூடப் பூட்டுதுங்க” என்றான் கோவிந்தன்.

”அடடா, சரியாய் பார். சீக்கிரம் மரத்தை அப்புறப்படுத்துங்கள். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் கிளை கிளையாய் ஒடித்துக் கொண்டு போய்விடுவார்கள். சீக்கிரம் சீக்கிரம்?” என்று அவசரப்படுத்தினார் வீட்டுக்காரர்.

5

”எப்போதும் இதே தொல்லைதான். வாசல் மரத்தை இன்னும் எடுத்தபாடில்லை. இந்தக் குட்டிகள் ஏறி இறங்கிக் கைகால்களை முறித்து தொலைத்துக்கொள்ளப் போகிறதுகள்! நான் வீட்டு வேலை செய்கிறதோ, குழந்தைகளை மேய்க்கிறதா? லீவுதானே. அந்த நாவலை இராத்திரி படித்தால் என்ன?” என்று சொல்லிக்கொண்டே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தாள் செல்லம்.

வாயிற்புறத்து ரேழியில் ஏக அமளி. ”ஐயோ! அப்பா! நான் மாட்டேன்; அடிக்கிறானே. எனக்குத்தான். நான்தானே முதலில் கண்டுபிடித்தேன்” என்று பற்பல ஸ்தாயிகளில் குரல்கள் கேட்டன. நான் படிப்பை நிறுத்தாமல், ”என்ன அமர்க்களம்! சண்டை இல்லாமல் பகிர்ந்துகொள்றதுதானே?” என்று சொல்லிவிட்டு ”செல்லம்! நீயாவது பார்த்துத் தொலைக்கப்படாதா? என்ன இரைச்சல்; சந்தைகூட கெட்டது! நல்ல குழந்தைகள்! தலைவேதனை; ச்சீ” என்று சீறினேன்.

செல்லத்துக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. ”அடுப்பில் ஒன்றும் துடுப்பில் ஒன்றுமாக இருக்கும்பொழுதே பகிர்ந்துக் கொடுக்க அவசரமா? நன்றாய்க் கிடந்து அலைகிறதுகள்! அவர்கள் இரைச்சலைவிட நீங்கள் இரைவதுதான் நன்றாய் இருக்கிறது! அதுகள் கூட இவ்வளவு அவசரப்படுத்தவில்லை. நீங்கள் எல்லோரையும் கூட பச்சைக் குழந்தை என்று சொல்லி மோவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

எனக்கும் கோபந்தான்; படித்துவிட்டுக் கோபித்துக் கொள்ளலாமென்று மேலும் படிக்க, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி வந்து என் கால் தடுக்கி ஒருவர் மேலொருவராய் விழுந்தார்கள். என் கணுக்கால் எலும்பிலும் அடிபட்டு விட்டது. என்ன யார் என்று கூடக் கவனியாமல் அகப்பட்ட முதுகில் ஒரு அறை அறைந்தேன்.

அழுத குரலுடன் ”நாந்தான் முதலில் பார்த்தேன்” என்றான் சீனு.

”என்னடா அது?”

”தூக்கணாங் குருவிக்கூடு” என்றான் சீனு.

”அண்ணா பொய் சொல்றான். அப்பா கூடு இல்லே;” நான் போட்டது, அதுக்குள்ள இருக்கிற குர்நாப் பட்டை.

”ஏதுடா கூடு” என்று அவன் கையில் இருந்த கூட்டை கையில் வாங்கினேன்.

”வாசல் மரத்திலே இருந்தது; கோவிந்தன் கொடுத்தான்”.

”சீ, சீ, ஆபாஸம்” என்று வீசி எறியப்போனேன்.

”அப்பா, அப்பா! எறியாதே, அதிலே நிறைய மின் மினாம் பூச்சி இருக்குமாம். இராத்திரியிலே நஷத்ரம் மாதிரி மினுங்குமாம்” என்று என் கைகளைப் பற்றிக் கொண்டாள் தங்கம்.

கூட்டை திருப்பினேன், பளிச்சென்று மின்னிற்று. ”அடியே! செல்லம், ஓடிவா, ஓடிவா” என்று ஆச்சிரிய மிகுதியில் கூவினேன்.

என்ன வந்துவிட்டது வேலை அதற்குள்?

“காரியம் இல்லாத மாமியார் கல்லையும் நெல்லையும் கலந்தானாம் என்கிற மாதிரி வந்து கேட்டால் ஒன்றும் இராது. தெரிந்த சங்கதிதானே?” என்று வெகு அலட்சியத்துடன் சொல்லிக் கொண்டே வந்தாள் செல்லம்.

”இன்னமும் மாமியாரைத்தானே கரிக்கிறாய் நீ? இந்தா உன் மோதிரம், எங்க அம்மாள்…” என்று சொல்லிக் கொண்டே மோதிரத்தை நீட்டினேன்.

செல்லம் இடைமறித்து, ”மோதிரமா! எங்கேயிருந்து அகப்பட்டது?” என்று கேட்டவள், என்னைச் சூழ்ந்து நின்ற குழந்தைகளையும் கையில் பாதியும் தரையில் பாதியுமாகச் சிதறிக் கிடந்த குருவிக் கூட்டையும் பார்த்துவிட்டு மௌனமாகி விட்டாள். இருந்தாலும், அவளுக்குத் தோல்வியை ஒப்புக்கொள்ள இஷ்டம் இல்லை.  “இதுதான் இப்படி இருக்கட்டும் அந்த ஐம்பது ரூபாய் உங்களை அறியாமல் எப்படி முளைத்…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவள்.

தேவகி முதலிய கதைகள் – சிறுகதைத் தொகுப்பு 1949லிருந்து… (இரண்டாம் பதிப்பு)

Photo Courtesy: digitaljournal.com

&

www.etsy.com

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 23

எம்.எஸ்.கமலா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் ரவிப்பிரியா லஷ்மிகுமாரி, மைத்ரேயா போன்ற புனைப் பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்புகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை.

சிறுகதை நூல்கள்:

  • கன்னித் தெய்வம்
  • காதற்கோயில்

கார்த்திகைச் சீர் 

Image

டி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த் தைத்து, கை வேலைப்பாட்டுடன் சோபிக்கும் படங்களுக்கு புஷ்ப ஹாரங்களையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகம் நிஷ்களங்கமாய்ப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. புக்ககம் வந்து இரண்டு மாதகாலமாகிறது. ஆடிக்கு அழைத்துச் சென்று அன்று காலைதான் அழைத்து வந்து விட்டான் அவள் சகோதரன். கணவன் ஆபீசிலிருந்து வருவதற்கு முன் தன் வேலைகளை எல்லாம் செய்துவிட்டுத் தயாராய் இருக்க எண்ணிச் சுறுசுறுப்பாய்த் தன் வேலைகளை முடித்துக் கொண்டாள். சகோதரன் வாங்கிக் கொடுத்த புஷ்பச் செண்டுகளைப் படங்களுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் உற்சாகத்துடன்,

”மங்கள மும்பெறுவார் – உலகினிலே

மங்கைய ரெல்லாம் உன்பெயர் சொன்னால்…”

என்று பரிபூரண ஆனந்தத்துடன் அற்புதமாய்ப் பாடிக்கொண்டு படங்களை அழகு பார்த்தாள். லஷ்மி படத்திற்கு முன் லஷ்மி கரங்குவித்து நின்றாள். காலை அவள் வீட்டிற்கு வரும் முன்பே அவள் கணவன ஆபீசுக்குச் சென்றுவிட்டான். மாலையை மாண்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மலைச் சிகரங்களில் தாவி மறையும் ரவியைக் கண்டதும் உற்சாகம் பிறந்தது. உற்சாக வேகத்தில் அவள் வாய் திறந்ததும் மதுரகீரம் மகிழ்வுடன் வெளிவந்தது.

அச்சமயம், ”ஜானகீ! குட்டிச்சுவருக்கு ஆனாப் போலே வயசாச்சு. எப்படி நடந்துக்கணும்னு இன்னும் தெரியலே. வெள்ளிக்கிழமையும் அதுவுமா முகத்தில் கையை வச்சுக் கொண்டு என்ன உக்காரல்?  எழுந்து மொறமொறக்க மூஞ்சியலம்பி நெத்திக்கிட்டுண்டு அம்பாள் படத்துக்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தினால் என்ன? பாவமா வரும்? அந்த மாமியாருக்கும் ஆம்படையானுக்கும் நல்ல புத்தி வந்து நம்மை அழைச்சிண்டு போகணுமேன்னு நமஸ்காரம் செய்யப்படாதா? நன்னா இருக்கு போ! பண்ணின பாவம் எங்கே போனாலும் தொலையாது” என்று ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒர் அம்மாள் இரைந்து கூச்சலிட்டாள்.

”ஆமாம் அம்பாளுக்கு விளக்கேத்திப் புஷ்பம் சாத்தி நமஸ்காரம் பண்ணிவிட்டால் என் மாமியார் அழைச்சிண்டு போயிடுவா இல்லே! அவா கேக்கும் அந்தக் கார்த்திகைச் சீரை செய்ய அப்பாவுக்கு மனசு வரல்லே. உனக்கும் அதுக்கு மேலே இருக்கு. மன்னியைப் பார்த்து அப்படியே மகிழ்ந்து போறே. என் வாழ்வும் இப்படியாச்சே! இதுக்கு ஒருவழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை. எனக்கெங்கே வெடியப் போறது? ‘வாழாப் பெண் தாயோடே’ என்பதைப் போல் இருந்து விட வேண்டியதுதான்” என்று கண்ணீர் வடியச் சொன்னாள் ஜானகி.

வெகு கனிவாய்ப் பாடிக்கொண்டிருந்த லஷ்மி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டதும் அப்படியே அயர்ந்து நின்றாள். அவள் உள்ளம் துடித்தது. அவளை அறியாமல் அவள் கண்களில் நீர் வடிந்தது. தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்லத் தன் படுக்கை அறையை விட்டு வெளிவந்தாள். ஜானகி இருக்குமிடம் சென்று அவள் கூந்தலிலே அழகாய்ப் புஷ்பத்தை வைத்து அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள். அவளைவிடச் சிறியவளாய் இருந்தும் அவள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளப் பார்த்தாள்.

மாலை லஷ்மியின் கணவன் கோபாலன், வெகு அவசரமாய் ஆபிசிலிருந்து வந்தான். உடைகளைக் கழற்றி விட்டுச் சயன அறையில் வெகு ஒய்யாரமாய் அமர்ந்து லஷ்மியின் வரவை எதிர்பார்த்துக்கெண்டிருந்தான். லஷ்மியின் காதுகளிலோ, ‘என் வாழ்வும் இப்படியாச்சே! இதற்கொரு வழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை’ என்ற ஜானகியின் வேதனைச் சொற்கள் வெண்கல மணியைப் போல் சதா ஒலித்துக் கொண்டே இருந்தன. தன்னைத் தான் சமாளித்துக் கொண்டு காபியை எடுத்துக்கொண்டு கணவனிடம் சென்றாள். சற்று முன் இருந்த பரிபூரண ஆனந்தம் இல்லை. மெல்லிய வேதனைத் திரை பளிங்கு போன்ற முகத்தில் படர்ந்து பிரகாசத்தை மறைத்தது. ஆசையுடன் மனைவியின் முகத்தை நோக்கினான் கோபாலன். மங்கிய முகம் பிரயாணத்தினால் ஏற்பட்ட சோர்வு என்று நினைத்தான். அவன் உள்ளத்துள் நடக்கும் போராட்டம் எத்தகையதென்பதை அவன் அறிந்தால் அல்லவோ தெரியும்?

நாட்கள் செல்லச் செல்ல ஜானகி புக்ககம் செல்லாமல் இருக்கும் காரணம் தெரியவந்தது. அவள் கணவனுடன் போய் வசிக்கக் குறுக்காய் நிற்பவை சில நூறு ரூபாய்கள் என்றறிந்தாள். ஜானகிக்கு ஒரு வேலையும் கொடாமல் மாமியாருக்குச் சகாயமாய் எல்லா வேலைகளையும் செய்வாள். தன்னாலான மட்டில் அவளை உற்சாகமூட்டிக் கொண்டிருப்பாள். தன் பிறந்த வீட்டிலிருந்து எது வந்தாலும் ஜானகி விரும்பினால் சந்தோஷமாய் அவளுக்குக் கொடுப்பாள். லஷ்மியின் குணங்கள் அவள் மாமனார் மாமியாரை வசீகரித்தன.

Image

ன்று கார்த்திகை. எல்லோர் வீட்டிலும் வெல்லப் பாகு வாசனை மணக்கிறது. பொரி வறுப்பவர்களும், விளக்குகளுக்கு எண்ணெய் நெய்விட்டுத் திரி போடுபவர்களுமாய் ஊர் முழுவதும் மங்களமாய்த் தீபாலங்காரங்களில் ஈடுபட்டு, யுவதிகள் கார்த்திகை மதியைக் காணும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். விண்ணில் விண்மீன்களில் கண் சிமிட்டல். மண்ணில் மங்கையர்கள் கைகளினால் ஏற்றப்பட்ட மண் விளக்குகளின் நடனம் சிறுவர்களின் ஆனந்தத் தாண்டவம். சந்நிதி வீதியில் மாலை மங்கள ஹாரத்தியின் மத்தியில் மங்கள ஒலி கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

மங்களம்மாள் கையில் பூச்செண்டுடன் கூடத்திற்கு வந்து அங்கிருக்கும் படங்களில் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி வைத்துவிட்டு, ”லஷ்மி! ஜானகி!” என்று கூப்பிட்டுக்கொண்டே புஷ்பத்தைக் கையில் சுருட்டிக்கொண்டு இருந்தாள். லஷ்மி சிரித்த முகத்துடன் எதிரில் வந்து நின்றாள். ”திரும்பு. அவள் எங்கே? ஜானகி! நீ மாத்திரம் கூப்பிட்டதும் வர்ற வழக்கந்தான் கிடையாதே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே லஷ்மியைவிட நான்கைந்து வயசு பெரியவளாகிய ஜானகி அவ்விடம் வந்தாள். லஷ்மியின் தலையில் புஷ்பத்தை வைத்துவிட்டு மங்களம்மாள் ஜானகிக்குப் பூவை வைக்க அவளைப் பார்த்தாள். அவள் இன்னும் முகத்தைத் துடைத்துப் பொட்டிட்டுக் கொள்ளாமல் இருப்பதைப் பார்த்துக் கோபமாய், ”ஏண்டி? உனக்கு ஏதாவது புத்திகித்தி இருக்கா இல்லையா? விளக்கேத்த வேண்டிய நாழியாயிடுத்து, என்ன செய்து கொண்டிருந்தாய்? எப்போ விளக்கேத்தி நாலு வீட்டுக்குப் பொரியும் அப்பமும் கொடுத்துவிட்டு வர்றது? ரொம்ப அழகு போ! அந்தச் சிறுபெண் என்ன செய்வாள்! அதுவும் தேமேன்னு எல்லா வேலைகளையும் செய்துவிட்டுச் சிரித்தபடி வளைந்து வருகிறது. ஒரு வேலையும் செய்யாவிட்டாலும் உன் மூஞ்சியை அலம்பி, நெத்திக்கிட்டுண்டு அழகா ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கக் கூடாதா?” என்று சொல்லிவிட்டுப் புஷ்பத்தைச் சூட்டினாள்.

ஜானகி பொங்கிவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டு, ”அம்மா! நான் யாராத்துக்கும் போகமாட்டேன். நீ வேணும்னா உன் நாட்டுப்பெண்ணை அழைத்துக் கொண்டு போயிட்டு வா” என்று மடமடவென்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றாள். மங்களம்மாள் பெருமூச்சுடன் கண்களில் வரும் நீரை, பல்லைக் கடித்துக்கொண்டு அடக்கப் பிரயத்தனப்பட்டாள். அதே சமயம் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து லஷ்மியின் சகோதரன், ‘கார்த்திகைச் சீர்’ எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் வைக்கக் கூடிய குத்துவிளக்குகள் இரண்டு, அப்பத்துடன் வெள்ளி பக்கெட், பொரி பணியாரத்துடன் வெள்ளித்தட்டு, டவரா எல்லாம் வைத்து, மஞ்சள் குங்குமம், பழங்கள் முதலியவற்றை நிறைய வைத்தான். லஷ்மிக்கு ஏற்றாற்போல் நீலநிறப் பட்டில் நட்சித்திரங்களைப் போல் ஜ்வலிக்கும் தங்கச் சரிகையால் மல்லிகை மொக்குகள் போட்ட அழகிய புடவையும் மேகக்கூட்டம் ஓடி விளையாடுவதைப் போல் ஜாக்கெட்டும் ஒரு தட்டில் வைத்தான்.

லஷ்மிக்குத் தந்தையில்லை. இரண்டுபேர் சகோதரர்கள்; மூத்தவன் பலராமன், இளையன் கிருஷ்ணமூர்த்தி. அவ்விரு சகோதரர்களுக்கு லஷ்மி என்றால் அன்பு மிக அதிகம். லஷ்மிக்கு மணமாகி இரண்டு வருஷமாயின. முதல் வருஷக் கார்த்திகை (தலைக் கார்த்திகை) அவள் பாட்டி இறந்ததால் நடக்கவில்லை. இரண்டாம் வருஷக் கார்த்திகைக்குள் மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டாள். கிருஷ்ணமூர்த்தி விசால மனப்போக்கு உள்ளவன். ஆசையுடையவன். அவர்கள் தந்தை பெரிய உத்தியோகத்திலிருந்து வேண்டிய பணம் சேர்த்து வைத்திருந்தார். பிள்ளைகளும் தந்தையில்லாக் குறையை வெளிப்படுத்தாமல் ஒவ்வொன்றையும் விமரிசையாய்ச் செய்துவந்தார்கள்.

லஷ்மியின் கணவன் கோபாலன் நல்ல அழகுடையவன். எம்.ஏ.பட்டதாரி. செக்ரிடேரியேட்டில் வேலையில் இருக்கிறான். மாதம் நூறு ரூபாய் சம்பளம். தந்தை கலெக்டரேட்டிலிருந்து பென்ஷன் பெற்றவர். ஐந்து பெண்கள், கோபாலன் ஒரு பிள்ளை. அவர் பொருள் ஒன்றும் சேர்க்கவில்லை. தம் சக்திக்கு மேற்பட்டுப் பெண்களுக்குச் செய்து ஓட்டாண்டியானார். சொற்பக் கடனும் உண்டு. அவர் நாற்பது ரூபாய் பென்ஷனும், கோபாலன் நூறு ரூபாயும் கடனுக்குச் செலுத்தியது போக மீதி வீட்டிற்குப் போதும் போதாததுமாய் இருந்தது.

Image

லஷ்மியின் பிறந்த வீட்டவர்கள் இதை எல்லாம் அறிந்திருந்தும், கோபாலனின் அழகு, கல்வி, நற்குணம் இவற்றை உத்தேசித்து லஷ்மியை அவ்வீட்டில் கொடுத்தார்கள். லஷ்மியும் கோபாலனும் அன்னியோன்னிய தம்பதிகள். மங்களம்மாள் தனக்கு நல்ல பணம் படைத்தவர் வீட்டுச் செல்லப் பெண் நாட்டுப் பெண்ணாய் வந்ததற்குப் பெருமை கொண்டாள். அதற்கு மேல் அவள் குணமும் எல்லோரையும் வசீகரித்தது.

அந்த அம்மாளின் கடைசிப் பெண்ணான ஜானகியை அவர்கள் அவ்வூரிலேயே தங்களுக்குத் தூர பந்துவின் வீட்டில் கொடுத்திருந்தார்கள். ஜானகியின் மாமியார் அதிக ஆசைக்காரி. வருஷந்தோறும் சீரும் செல்லமும் சரியாய் ஒவ்வொரு பண்டிகைக்கும் வரவேண்டும். இல்லாவிடில் உக்கிர சண்டியாகிவிடுவாள். ஜானகிக்கு விவாகமாகி ஐந்தாண்டுகள் வரை அவள் மாமியார் கேட்டதை எல்லாம் தங்கள் சக்திக்கு மீறி மங்களம்மாள் செய்துகொண்டு வந்தாள். ஆனால் கோபாலனுக்கு ரூ.5,000 ஜாமீனுடன் லஷ்மி வரவே, ஜானகியின் மாமியார் அவ்வருஷம் கார்த்திகைச் சீருக்கு ஒரு ஜோடி வெள்ளிக்குத்து விளக்கு, தன்பிள்ளைக்கு மூன்று வைரம் பதித்த மோதிரம், அப்பம் பொரி முதலியவற்றுக்கானத் தன் நாட்டுப் பெண்ணிற்கு நான்கு பவுனில் ‘ஸ்வஸ்திக்’ வளையல் என்று திட்டம் போட்டுச் சம்பந்திக்கு அனுப்பிவிட்டாள்.

கோபாலனின் தந்தை கஷ்டத்தில் நன்றாய்ப் பக்குவப் பட்டவராதலால் தம் நிலையையறிந்து கோபாலனின் ஜாமீன் தொகை இருந்தால் கடனுக்காக கட்டவேண்டிவரும் என்று நினைத்து, அத்தொகைக்கு அழகிய சிறு வீடொன்றைக் கட்டி அதை லஷ்மியின் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்துவிட்டார். அது லஷ்மியின் பிறந்த வீட்டு ஸ்ரீதனம் என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். ஜானகி மாமியாரின் துர் எண்ணத்தைக் கண்டதும் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. தம் சம்பாத்தியத்தில் கால் பங்கிற்குமேல் ஜானகிக்குச் செய்திருந்தும் தம்பிள்ளைக்கு வந்ததையும் பிடுங்கிக்கொள்ளப் பார்க்கும் சம்பந்தியின் கொடூர எண்ணத்தை அறிந்ததும், இனித் தம்மால் செப்பாலடித்த காசுகூடச் செய்ய இயலாதென்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். அதன் பலன், ஜானகி சுமார் இரண்டு வருஷ காலமாய்ப் பிறந்த வீடே கதி என்றிருக்கும்படியாகி விட்டது.

லஷ்மி தன் நாத்தனாரின் வாழ்க்கையை எப்படிச் சீர்திருத்துவதென்று யோசித்தாள். மாமியாரின் முன் சொல்லப் பயம். கணவனிடம் கேட்கவோ வெட்கம். ஆனால் தன்னைப்போல் சிறுபெண் கணவன் ஆலிங்கனத்தில் அன்பாய் இருக்கவேண்டிய காலத்தில் அவள் யௌவனம் காட்டில் காய்ந்த நிலவைப் போல் ஆவதைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பாள். லஷ்மி ஐந்தாவது பாரம் வரையில் படித்தவள். நன்றாய் ஆங்கிலம் படிப்பாள். ஜானகியின் வருத்தத்தைப் போக்க அவளுடன் மத்தியானங்களில் ஏதாவது ஆட்டம் போடுவாள். வீட்டு வேலைகளில் மங்களம்மாளுக்குச் சகாயமாய் எல்லாவற்றையும் செய்வாள்.

ஜானகியோவெனின் ஒவ்வொரு சமயம் தன் தந்தையின் வறுமை நிலைக்கும் மாமியாரின் துராசைக்கும் வருந்துவாள். சகோதரனும் அவன் மனைவியும் அன்னியோன்னியமாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமையுறுவாள். லஷ்மி வந்த பின் தாய் தந்தையருக்குத் தன்மேல் அன்பு குறைந்துவிட்டதென்று நினைப்பாள். அப்படி அன்பிருந்தால் கையில் பணம் இல்லாதபோது கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுச் செய்த தந்தை, இன்று ஐயாயிரம் ரூபாய் இருந்தும் தன் மாமியார் கேட்ட சுமார் ரூ.500 க்குப் பின்வாங்கினாரே என்று கடுகடுப்பாள். நாள் பொழுதென்றால் கண்களைக் கசக்கிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். லஷ்மி அவள் துக்கத்தில் எவ்வளவு பகிர்ந்து கொள்ளக்கூடுமோ அவ்வளவு பகிர்ந்து கொள்வாள். ஆனால் ஜானகி அதை வெறும் பாசாங்காய் நினைத்தாள்.

3

Image

கிருஷ்ணமூர்த்தி கார்த்திகைச் சீர் வைத்துவிட்டுத் தங்கை புதுப் புடவை உடுத்துக் கொண்டு வரும் அழகைப் பார்க்க கோபாலனின் தந்தையுடன் பேசிக்கொண்டு வீற்றிருந்தான். அச்சமயம் கோபாலனும் ஆபீஸிலிருந்து புன்சிரிப்புச் சிரித்தவாறே மைத்துனனைத் தலையசைப்பால் வரவேற்று மாடிக்குச் சென்றான். அவ்விடம் லஷ்மி நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் முன் மேஜைமேல் நாக ஒத்தும், வங்கியும் இருந்தன. கோபாலன் ஓசைப்படாமல் உடைகளைக் கழற்றிவிட்டு ‘இவள் இப்படி இருப்பதற்குக் காரணம், சில நாட்களாய் இவளிடம் ஏற்பட்ட மாறுதலா, அல்லது…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ”ஆம் அப்படித்தான் செய்யவேண்டும். அவள் பாவம் எப்படிச் சிரிப்பாள்? ஒரு நாளா, இரண்டு நாளா? இரண்டாண்டுகள்” என்று அவள் வாய் முணுமுணுத்தது. அதே சமயம் கீழே மங்களம்மாள், ”ஜானகி! உன்னால் எனக்கு எப்பொழுதும் கஷ்டந்தான். நீ அவளுக்கேற்ற நாட்டுப் பெண்தான்! அகங்காரம் பிடிச்சவள். எழுந்து போய்ப் புடவையை உடுத்திண்டு வந்து அவளுக்குச் சகாயமாய் விளக்கேத்தி நாலு சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து விட்டு வா; கோயிலுக்குப் போய் வரலாம். அவளும் சிறிசு. காத்தாலே இருந்து எனக்குச் சரியாய்ப் பம்பரமாய் வேலை செய்தாள். மசக்கைக்காரி; கொஞ்ச நேரம் காத்தாட இருந்துவிட்டு வரட்டும். அதுக்குள் நீ பூஜைக்கு எடுத்து வைச்சு விளக்கேத்தப் பிரயத்தனம் செய். ஏன்தானோ இப்படி இருக்கே! உன்னைவிடச் சிறிசுதானே! எத்தனை சமர்த்தாய் இருக்கா பார்!” என்று கூச்சலிட்டுச் சொல்வதைக் கேட்டதும் நாற்காலியை விட்டெழுந்து ஜன்னலருகில் ஓடி மாலைச் சூரியன் மறைந்து விட்டானா என்று மேற்கே பார்த்தாள் லஷ்மி. தன் பொலிவு மங்கி மறையும் தறுவாயிலிருக்கும் கதிரோனைப் பார்த்ததும் தடதடவென்று கீழிறங்கி ஓடினாள். ”ஏன் அவ்வளவு அவசரம்?” என்று கோபாலன் பின்புறமிருந்து அவள் இரண்டு தோள்களையும் பிடித்து நிறுத்தினான். திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். அதில் உற்சாகமோ, பெருமையோ ஒன்றும் இல்லை. மண்பாண்டம் போல் மங்கிப் பிரகாசமற்று இருந்தது.

‘‘உனக்கென்ன? ஏன் இப்படி இருக்கிறாய்? கீழே கிருஷ்ணமூர்த்தி காத்திருக்கிறான். இன்னும் அரைமணி நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். நீ ஏன் இன்னும் பூர்த்தியாய் அலங்கரித்துக் கொள்ளவில்லை?”

‘‘நானா… நா…ன் அலங்கரித்துக் கொண்டிருக்கேனே! பாருங்கள்” என்று பலவந்தமாய்ச் சிரிப்பை வருவித்துக்கொண்டு, அவனை உற்றுப்பார்த்தாள். அவள் நெற்றியில் குங்குமம் ஜிகினாப் பொடியுடன் பளபளப்பாய் மின்னிற்று. அவள் கம்பீர வாக்கும் நிஷ்களங்கமான பார்வையும் அவனைத் தலைகவிழச் செய்தன. மின்னலைப்போல் அவன் கையைவிட்டாள். பரபரவென்று கீழிறங்கிச் சமையலறைக்குச் சென்று ”அம்மா, உங்க பிள்ளை வந்துவிட்டார்” என்றாள். மங்களம்மாள் அவள் குரலைக் கேட்டு அவளிடம் ஒரு டம்ளர் காப்பியைக் கொடுத்து, ”நீயும் புதுப்புடவை உடுத்திக்கலையா? இத்தனை நேரம் என்ன செய்தாய் லஷ்மி!” என்றாள்.

”இதோ ஒரு நிமிஷத்தில்” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மாடி ஏறினாள். அவள் முன் வீற்றிருந்த நாற்காலியில் கோபாலன் உட்கார்ந்து அன்று அவள் அப்படி இருப்பதற்குக் காரணம் என்னவென்று அறியப் பிரயத்தனம் செய்துகொண்டிந்தான். லஷ்மி காப்பியை மேஜைமேல் வைத்துவிட்டு, இடது கரத்தை மேஜையின் மேல் ஊன்றிக்கொண்டு, சற்று ஒரு புறம் சாய்ந்தவாறு நின்று வலக்கரத்தால் அவன் நெற்றியில் கலைந்து படிந்திருக்கும் கிராப்பைக் கோதினாள்.

அவள் அழகிய ரூபத்தில் மயங்கினான் கோபாலன். அவள் ஒய்யாரம் ஒரு சித்திரக்காரனை அப்படியே மயங்கச் செய்திருக்கும். அவன் சிரித்தவாறே, ”எதற்காக இந்த ஒற்றைக்கால் தபஸ்? எவ்வளவு அஜாக்கிரதை? இப்படி நகைகளை எடுத்து மேஜை மேல் போட்டிருக்கிறாயே! அதிக நகைகள் இருந்தால் இப்படித்தான். அம்மாவைப் பாரு. எதையாகிலும் எடுத்து இப்படிப் போடுவாளா? போடுவதற்குத்தான் அதிகமாய் என்ன இருக்கிறது?” என்று கண் சிமிட்டியபடி அமுத்தலாய்ச் சொன்னான்.

”ஆம்” என்று சொல்லிக்கொண்டு எழுந்து நாற்காலியின் கைப்பிடியில் உட்கார்ந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்து, ”எனக்கு ஒன்றுவேண்டும். வாங்கித் தருகிறீர்களா?” என்று கொஞ்சியவாறு செஞ்சிய பார்வையுடன் கேட்டாள். அவள் இதுவரையில் அவனை ஒன்றும் கேட்டதில்லை. அவனுக்கே வியப்பாகி விட்டது. ஆச்சர்யப் பார்வையுடன் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவள் காபியை அவன் வாயருகில் கொண்டுபோய்ப் பருகச்செய்து, ”இந்த நகைகள் எனக்கு இப்பொழுது அவசியமில்லை. பெட்டியில் வெட்டிக்குத் தூங்குகின்றன. இவற்றைக் கொண்டுபோய் முதலில் எவ்வளவிற்குப் போகுமோ விற்றுக்கொண்டு வாருங்கள். எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும்” என்றாள்.

”லஷ்மீ! என்ன சொன்னே! பண்டிகையும் அதுவுமாய் வீட்டிலிருக்கும், அதிலும் உன் நகைகளை, உன் வீட்டவர்கள் செய்தவற்றை விற்கவா சொல்கிறாய்? ரொம்ப அழகு! நீ சமத்து என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அசட்டுப் பட்டம் கட்டி விட்டாயே! நல்லவேலை! எதற்கு உனக்கு இப்பொழுது அவ்வளவு பணம் வேண்டும்?” என்று கடிந்தபடி முகம் சிவக்க தன் உணர்ச்சியை அடக்கக் கூடாமல் கேட்டான்.

”எதற்கென்று கேட்காதீர்கள். எல்லாம் நல்லதுக்குத்தான். இதைத் தயவு செய்து உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லாமல் செய்யுங்கள். அப்புறம் சொல்கிறேன். தயவு செய்து இந்தச் சகாயம் செய்யமாட்டீர்களா? நான் வேறு யாரைப் போய் இதைச் செய்யும்படி சொல்லுவேன்? எங்கள் அண்ணாவிடம் சொன்னால் நன்றாக இராதே” என்றாள். அவள் கண்களில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது. ‘இதென்ன அவஸ்தை? இவள் காரணமில்லாமல் பெரும் தொகைக்காக ரகளை செய்கிறாளே!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘லஷ்மி! போதாயிடுத்தம்மா! வா சீக்கிரம்” என்று மாமியார் அழைக்கும் குரல் கேட்கவே, அவசர அவசரமாய்க் கீழிறங்கிச் சென்று கொண்டே, ”போதாயிடுத்து; சீக்கிரம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்லிச் சென்றாள்.

பூஜை அறையில் வைத்திருக்கும் கார்த்திகைச் சீரை பார்த்தாள். கண்களில் நீர் மல்கியது. விளக்குகள் ஏற்றி வரிசையாய் வைத்தாயிற்று. ஒவ்வொருவருக்கும் நமஸ்காரம் செய்துகொண்டு வந்தாள். ஆனால் அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. மாடியில் கோபாலனும் கிருஷ்ணமூர்த்தியும் ஆனந்தமாய்ப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி கோபாலனிடம் ரூ.500 கொடுத்து, ”நீங்கள் விரும்பிய மோட்டார் பைக்கை வாங்கிக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமானால் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். கோபாலன் வியப்புடன் இவ்வளவு சீக்கிரம் தன் அபிப்ராயத்தைத் தெரியப்படுத்தியது லஷ்மியின் வேலைதான் என்று நிச்சயித்து, சிரித்தவாறே சங்கோசத்துடன், ”இப்பொழுது வேண்டியதில்லை; வேண்டும்போது நானே கேட்கிறேன்” என்றான். கிருஷ்ணமூர்த்தி அதற்கு இடங்கொடாமல் அவன் பையில் அப்பணத்தைத் திணித்து விட்டு வேறு பேச்சுப் பேசலுற்றான்.

லஷ்மி கணவனும் சகோதரனும் பேசும் இடத்திற்குக் கால்கள் தளர வந்தாள். சகோதரனை நமஸ்கரித்தாள். கணவனருகில் போனாள். அவள் கண்கள் நீரினால் மறைக்கப்பட்டிருந்தன. அவள் முகத்தைப் பார்த்தான் கோபாலன். ”லஷ்மி, இங்கே வா; இந்தப் புடவை உனக்கு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா? வங்கி நாகொத்து எல்லாம் போட்டுக்கோ. இன்னும் அழகா இருக்கும்” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

”நீ வாங்குவதற்கு அப்பழுக்கு உண்டா அண்ணா? இப்போ எனக்கு இவை பிடிப்பாய் இருக்கு. போட முடியவில்லை; இத்தனை நேரம் போட்டுப் பாத்துட்டுத்தான் அப்படியே வெச்சூட்டுக் கீழே போனேன்” என்றாள். ”சரி, அப்படியானால் நான் சற்று வெளியில் சென்று விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து சென்றான்.

”எங்கே எவ்வளவு பெருத்திருக்கிறாய் பார்க்கலாம்?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அந்நகைகளை அவளுக்கு அணிவித்தான் கோபாலன். ஆனால் அவை தளர்ந்து கீழே விழத் தொடங்கின. லஷ்மி அவ்வளவு இளைத்தா போய்விட்டாள் என்று நினைத்து அவள் கண்களில் தேங்கும் நீரைத் துடைத்து, ”இந்தா! உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ எடுத்துக்கொள்” என்று தன் மைத்துனன் கொடுத்த ரூபாயைக் கண்டதும் மலர்ந்தது. கண்கள் பிரகாசத்துடன் ஜ்வலித்தன. ரூபாயை எண்ணினாள். ”இவ்வளவுதான் வேண்டும்” என்று சொல்லிச் சிரித்தவாறே அவனை ஒரு பார்வை பார்த்தாள். மனைவியின் பார்வைக்கு மயங்காதவர்கள் யார்? ”அடி கள்ளி!” என்று கன்னத்தில் அன்புடன் ஒரு தட்டுத் தட்டினான். அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அவன் முகம் ஆச்சரியத்துடன் திகழ்ந்தது.

Image

வள் கீழே சென்று தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு வண்டிக்காக எதிர்பார்த்தாள். ஜானகி தாயின் கோபத்திற்குப் பயந்தும், தன் தலை விதியை நினைத்து நொந்தும், மன்னியின் ஆனந்த வாழ்க்கைக்கு வியந்தும், அவள் சகோதரன் செய்த சீரைக் கண்டு பொறாமை கொண்டும், தந்தையின் கடின சித்தத்தைக் கடிந்துகொண்டும் தன் தாயுடன் விளக்குகளைச் சரிவரத் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள். காற்றில் விளக்குகளின் துடிதுடிப்பு; அவள் உள்ளத்தில் வாழ்க்கையின் கொந்தளிப்பு.

கோபாலன் வண்டியுடன் வந்தான். லஷ்மி மாமியாரை அணுகி, ”அம்மா, நீங்களும் எங்களுடன் வாருங்கள்; எனக்கு ஒருவரையும் தெரியாது” என்று வற்புறுத்தினாள். தன் பெண் ஒரு மாதிரி சுபாவம் படைத்தவளாதலால் மங்களம்மாள் நாட்டுப் பெண்ணுடன் புறப்பட்டாள். கிழவர், ”குழந்தைகளுக்கு மேல உனக்குத்தான் பால்யம் திரும்பி விட்டதென்று தோன்றுகிறது” என்று ஏசினார். லஷ்மி தன் சகோதரன் கொண்டுவந்தவற்றை அப்படியே வண்டியில் எடுத்து வைத்தாள். குத்துவிளக்குகள் மாத்திரம் சுவாமியருகில் எரிகின்றன. ஜானகியையும் வண்டியில் ஏறச் சொன்னாள். அவள் முணுமுணுத்தவாறே ஏறினாள். எல்லாரும் ஏறினதும் லஷ்மி கோபாலனை ஒரு பார்வை பார்த்தாள். அதற்கு அக்கண்களே விடையளித்தன.

அரை மணி நேரத்தில் எழுத்து மறையும் வெளிச்சத்தில் வண்டி ஒரு சிறிய வீட்டு வாயிலில் வந்து நின்றது. அவ்வீட்டு வாயிலில் ஒரு பாட்டியம்மாள் நின்றுகொண்டு ஒரு சிறிய பெண்ணின் கையால் விளக்குகளை ஏற்றுவித்துக் கொண்டு இருந்தாள். முதலில் கோபாலனும் லஷ்மியும் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் அந்த அம்மாள் உள்ளே சென்று விட்டாள்.

”இது யார் வீடுடா, கோபாலா?” என்றாள் தாய்.

வண்டியிலிருந்தவற்றை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். கூடத்தில் லஷ்மி படம் ஒன்று மாட்டப்பட்டு அதனருகில் அதற்கு முன் வெண்கல யானை விளக்கு ஒன்று சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது. எல்லாவற்றையும் அதன் முன் வைத்தார்கள். வெற்றிலைத் தட்டின் மேல் ஒரு கவர் வைக்கப்பட்டு இருந்தது.

கோபாலன் உள்ளே சென்று, ”மாமி, இதோ நீங்கள் கேட்ட கார்த்திகை சீர்” என்று சொல்லி அழைத்தான். அவன் சொன்னதைக் கேட்ட மங்களம்மாளும் ஜானகியும் திகைத்தனர். ஜானகியின் மாமியார், தட்டுத் தட்டாய் வைத்திருக்கும் சீரையும் வெள்ளிப் பாத்திரங்களையும் பார்த்து மகிழ்ந்தவளாய் எல்லோரையும் அன்புடன் வரவேற்றாள். லஷ்மியும் ஜானகியும் அந்த அம்மாளை நமஸ்கரித்தனர்.

சற்று நேரத்தில் தாயுடனும் மனைவியுடனும் வீட்டிற்கு வந்தான் கோபாலன். மங்களம்மாள் திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். தன் நாட்டுப் பெண்ணின் சீரை எல்லாம் கோபாலன் ஜானகிக்குக் கொடுத்து விட்டானே என்று கணவனிடம் நடந்ததைச் சொன்னாள். அவர் தம் பிள்ளையையும் நாட்டுப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார். மாலையில் கோபாலன் தான் ஆபீசிலிருந்து வந்தது முதல் நடந்தவற்றைச் சொன்னான். மங்களம்மாள் மௌனமாக இருந்தாள். ”லஷ்மி, நீ எங்கள் வீட்டை உத்தரிக்கவந்த லஷ்மிதான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் கிழவர். ”அதில் சந்தேகம் என்ன?” என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி உள் நுழைந்தான்.

எல்லோரும் அவரவர்கள் படுக்கையறையை அணுகினர். மாடியில் வெட்ட வெளியில் லஷ்மியும், கோபாலனும் கார்த்திகை மதியையும், அதைக் கவர வரும் மேகக் கூட்டங்களையும் கண்டு உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். ”லஷ்மி, நீ இன்று செய்த காரியம் மிகவும் வருந்தக்கூடியது. உனக்கென்று ஆசையாய் உன் சகோதரன் பண்ணிக்கொண்டுவந்த பாத்திரங்களையும், பட்சணங்களையும் அந்த ஆசை பிடித்த கிழத்திற்கு அர்ப்பித்ததன்றி, ரூபாய் ஐந்நூறையும் கொடுத்தாயே” என்றான்.

”வருந்தக்கூடியதென்று சொல்லாதீர்கள். ஆனந்திக்க வேண்டியது. என்னைப்போல் சிறிய வயசினள், ஆனந்தமாய் இருக்க வேண்டியவள், எப்பொழுதும் அழுது வடிந்துகொண்டு, உங்கள் தாய் தந்தையராலும் அருவெறுக்கப்பட்டு வந்தால் அவள் மனம் எவ்வளவு துடிக்கும்? அவள் துடிதுடித்து விடும் மூச்சு நமக்கு இன்பமூட்டுமா? இன்றுதான் என் மனம் பரிசுத்த ஆனந்தத்துடன் இருக்கிறது. ஜானகியும் அவள் கணவனுடன் ஆனந்தமாய் இருப்பாளன்றோ? எல்லோர் வீட்டிலும் இருளைப் போக்கிப் பிரகாசத்தை உண்டு பண்ணிய இக்கார்த்திகை உங்கள் தங்கையின் மன இருட்டைப் போக்கி ஆனந்த விளக்கை ஏற்றட்டும்!” என்றாள்.

மனைவியுடன் மாமியார் வீட்டவர்களை நமஸ்கரிக்க வந்த ஜானகியும் அவள் கணவனும் இவர்கள் பேசுவதை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டு நின்றனர். ஜானகி லஷ்மியைக் கட்டிக்கொண்டு, ”என் வாழ்க்கை விளக்கை ஏற்றிய லஷ்மீ” என்று நாத் தழுதழுக்கச் சொன்னாள். லஷ்மியின் முகத்தில் என்றுமில்லா ஆனந்தம். அவள் கண்களில் கருணை நீர் ஊற்று. உதடுகளில் இன்பப் புன்னகை. இவ்வளவும் சோபிக்க, ”ஜானகி, உன் வாழ்க்கை விளக்கை ஏற்றியது நான் அல்ல; கார்த்திகைச் சீர்” என்றாள்.

*** 

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 21

Image

குமுதினி

(1905 – 1986)

திருவிதாங்கூர் திவானாக இருந்த கோபாலாச்சாரியார் குடும்பத்தைச் சார்ந்த ரங்கநாயகியே குமுதினி. தன்னுடைய பத்தாவது வயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்ட இவர், திருமணத்திற்குப் பிறகும் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். காந்தியின் கொள்கையில் பற்றுடைய குமுதினி, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும் அதனைப் பின்பற்றத் தவறவில்லை. எதிர்ப்பு வலுப்பட்ட சில நேரங்களில், காந்தியின் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று தங்கியுள்ளார். 1950களில் கலைமகளில் இவர் தொடராக எழுதிய உளவியல் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றவை.

 

நந்துவின் தம்பி 

 torn_book

மணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும் அவனுக்குத் தெரியாது. தம்பி வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தாள். நந்துவைக் கவனிக்கவே மாட்டாள். அக்காதான் நந்துவை விரட்டுவாள். ”இன்னும் குளிக்கலையா! இன்னுமா சாப்பிடலே! பின்னே எப்போ பள்ளிக்கூடம் போறது!” என்று சும்மா சும்மாக் கேட்பாள்.

ஒரு நாள் அம்மா, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு அழுவதைக் கூட நந்து பார்த்தான். அது அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கவனிக்காதது போல் பாசங்கு செய்து ஓடிப் போய்விட்டான்.

பிறகு ஒரு நாள், அம்மாவிற்கு உடம்பு சரியாகிப் போன பிறகு, அம்மாவே நந்துவையும் அக்காவையும் கூப்பிட்டு, ”உங்களுக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறதே, தெரியுமோ” என்று கேட்டாள்.

”தெரியுமே!” என்று இரண்டுபேரும் சேர்ந்தாற்போல் சந்தோஷத்துடன் சொன்னார்கள். இந்த ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் ஒளித்து வைத்திருப்பது அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் கஷ்டமாக இருந்தது. அம்மா என்னவோ மாதிரி இருந்த படியால் தாங்களே அம்மாவிடம் சொல்வதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது அம்மாவே நேரே சொல்லி விட்டதால் அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் சந்தோஷம்.

”யார் உங்களுக்குச் சொன்னார்கள்?” என்று அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

பாட்டி என்று அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். இந்த ரகசியம் அவர்களுக்குத் தெரிந்திருப்பதில் ஒரு பெருமை. அதற்கப்புறம் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

நந்துவின் சித்தி பிள்ளை ராம்ஜிக்குத் தங்கை பிறந்த சமயம் அவன் ரொம்பவும் வெட்கப்பட்டான். ”உனக்குத் தங்கை பிறந்திருக்கிறதா, ராம்ஜி?” என்று யாராவது கேட்டால் அவன் தன்னுடைய அம்மாவிற்குப் பிறந்திருக்கிறது என்று நினைக்காமல், தனக்குத்தான் பிறந்த விட்டது என்று எண்ணிக்கொண்டு வெட்கப்பட்டுக் கதவு மூலையில் போய் ஒளிந்து கொள்ளவான். நந்து அந்த மாதிரி இல்லை. சாதாரணமாக இருந்தான். தம்பி வரப்போகிறதைப் பற்றி நினைக்கவே இல்லை. அது எப்படியும் ஏற்படப்போகும் விஷயம் என்று அதை ஏற்றுக்கொண்டு விட்டான்.

தம்பி பிறந்த சமயம் நந்துவிற்கு அவ்விஷயம் அவ்வளவு பெருமையாகவும் இல்லை. அவன் அறைக்கு வெளியில் நின்ற வண்ணம் எட்டிப் பார்த்துவிட்டுப் போய் விடுவான். அம்மா மாத்திரம் சீக்கிரம் குளித்துவிட்டு வந்தால் தேவலை என்று அவனுக்குத் தோன்றும். அக்காவோ, ”தம்பி ரொம்ப அழகாய் இருக்கிறதே” என்று பெருமைப்பட்டுக்கொண்டு அறையின் வாசற்படியிலேயே எப்போதும் உட்கார்ந்து கொண்டிருப்பாள்.

பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து அக்கா குழந்தையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள். நந்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்து, பஷணம் சாப்பிட்டு, விளையாடின பிறகு சாவகாசம் இருந்தால் தம்பியைப் போய்ப் பார்ப்பான், அது படுத்துக் கொண்டே இருக்கும். இவனும் அதன் பக்கத்தில் படுத்துக் கொள்வான். உடனே அக்கா, ”எந்திரு, நீ போ – அம்மா, இதோ பாரேன், வந்து குழந்தையை நசுக்கறான்” என்பாள். மேலும், ”அது சின்னதாய் அழகாய் இருக்கு. அதன் பக்கத்தில் நந்து படுத்துக் கொண்டால் இவனைப் பார்த்தால் ராஷஸன் மாதிரி இருக்கு” என்பாள்.

நந்து சிரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படுத்துக் கொள்வான். அக்கா கோபித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு வேறிடம் போய்விடுவாள்.

தம்பிக்குப் பத்து மாதமாகித் தவழும் சமயத்தில் நந்துவும் கூடக்கூடத் தவழ்ந்து அதற்கு அழகு காண்பிப்பான், போட்டியிடுவான். அது சிரிக்கும். இவனும் சிரிப்பான்.

அது உட்கார்ந்திருக்கும்போது அதனுடைய மடியில் இவன் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொள்வான். அது இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுக்கும், பிய்க்கும்.

அம்மா பார்த்துவிட்டு, ”ஐயையோ, எழுந்திரு. அது இந்த மாதிரி பண்ணுவதற்கு இடம் கொடுக்காதே” என்பாள். ஆனால் தம்பியின் சின்னக் கையால் நந்துவின் மயிரைப் பிடித்து இழுத்தால் அது நந்துவுக்கு வலிக்கவே வலிக்காது. வேடிக்கையாகத்தான் இருக்கும்.

பிற்பாடு தம்பிக்கு இரண்டு இரண்டரை வயசான பிறகுதான் இவர்களுடைய சண்டைகள் ஆரம்பித்தன.

நந்துவின் தம்பிக்கு ரகு என்ற பெயர். ஒரு நாள் ரகு, நந்துவின் புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தது. உடனே நந்து அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினான். ரகு துரத்திக்கொண்டு ஓடிற்று. நந்துவை அதனால் பிடிக்கமுடியவில்லை. உடனே அசடாக அழுதது. அழக்கூடாதல்லாவா? ஆகையால் ஓடிப்போன நந்து திரும்பி வந்து அதனுடைய கன்னத்தில் மெதுவாக அடித்தான். ரகு உடனே அவனைப் பதிலுக்கு அடித்தது. அம்மா ஓடிவந்து பார்த்தாள்.

”பாரு அம்மா, ரகுவை. என் பொஸ்தகத்தைக் கிழிக்கணும்னு அழறான்” என்று நந்து பெரிதாய்ப் புகார் சொன்னான்.

”நந்து அடிச்சான்” என்று ரகு அழுதது.

”ஏன் நந்து? தம்பியை அடிச்சியா?” என்று ஆச்சர்யத்துடன் அம்மா கேட்டாள்.

‘‘நீ ரொம்ப சமர்த்தாயிற்றே! நீயா தம்பியை அடித்தாய்?’’ என்று மறுபடி கேட்டாள்.

நந்துவுக்கு வெட்கமாய் இருந்தது. இருந்தாலும் தான் செய்தது சரி என்று காண்பிப்பதற்காக, ”அவன் மாத்திரம் என் புத்தகத்தைக் கிழிக்கலாமோ?” என்று கேட்டுவிட்டுக் கோபித்துக் கொண்டு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான்.

உடனே ரகுவும் ”அவன் என்னே அடிச்சான்” என்று சொல்லி, நந்துவை போலவே கோபித்துக்கொண்டு குப்புறப் படுத்தது. நந்துவைப் போலவே அதுவும் முகத்தை வைத்துக்கொள்ளும், நந்துவைப் போலவே அதுவும் கையால் முகத்தை மூடிக் கொள்ளும்.

மறுதினம் அம்மா ரகுவிற்கும் ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாள். அதை ரகு பெருமையாகக் எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் உலாவிற்று. நந்துவிற்குத் தம்பியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே தெரியாது. உடனே ரகு நந்துவின் தலைமயிரை இரண்டு கையாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இழுத்தது. நந்து கத்தினான். அம்மா ஓடி வந்தாள்.

”பாரும்மா! நான் ஒண்ணும் பண்ணாம இருக்கச்சே ரகுதான் என்னே மொதல்ல அடிச்சான்” என்றான் நந்து.

அம்மா ரகுவைத் திரும்பிப் பார்த்தாள். உடனே ரகு முதல் நாள் நந்து முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டிருந்த மாதிரி வைத்துக் கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குப்புறப் படுத்தது. தலையைத் தூக்கவே மாட்டேனென்றது.

நந்து, ”இந்தா உன் புஸ்தகம்” என்று சொல்லி ரகுவின் புஸ்தகத்தை அவனிடம் வீசி எறிந்தான். ரகு உடனே அதை வாங்கிக் கொள்ள மாட்டேனென்று நந்துவிடம் திரும்ப எறிந்தது. புஸ்தகம் கிழிந்துவிட்டது.

056

உடனே அம்மா புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு ரகுவையும் அழைத்துக் கொண்டு உள்ளே போய்க் கோந்து தடவி அதை ஒட்டிக் கொடுத்தாள். ரகு உடனே தானும் கொஞ்சம் கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டு அதன் மேல் சொக்காயை வைத்து ஒட்டிக் கொண்டது.

நந்துவிற்கு அதைப் பார்த்ததும் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இந்த மாதிரி ஒரு பைத்தியம் இருக்குமோ என்று தோன்றிற்று. அவனுடைய கோபம் போய்விட்டபடியால் அவன் விளையாட ஓடிப் போய்விட்டான்.

ஆனால் நாளுக்கு நாள் இவர்கள் இரண்டு பேர்களுடைய சண்டையும் அதிகரித்தது. அம்மா நந்துவிடம், ”நீ சமத்தாக இரு, நந்து. அப்பொழுதுதான் அவனும் சமத்தாக இருப்பான்” என்று சொன்னாள். நந்துவும் சமத்தாக இருக்கத்தான் பார்ப்பான். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் ஆவலாய்த் தம்பியுடன் விளையாட வருவான். ஆனால் ரகு தப்புச் செய்தால் அதைத் திருத்த வேண்டாமா? திருத்தப் பார்த்தால் உடனே சண்டை ஏற்பட்டுவிடும்.

ஒரு நாள் இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அப்பா, ”நந்து நீதான் ரகுவைச் சீண்டுகிறாய். அந்த மாதிரி செய்யக்கூடாது!” என்று கண்டித்தார்.

அதை ரகு கேட்டுக் கொண்டிருந்தது போலிருக்கிறது. மறுபடி எப்பொழுதோ இவர்கள் சண்டையிட்ட சமயம் குடுகுடுவென்று அம்மாவிடம் ரகு போய், ”அம்மா, நந்து என்னே சீண்ட்றான்” என்றது.

”அப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?” என்று அம்மா கேட்டாள். அவன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொன்னது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அம்மா கேட்டதற்குப் பதில் சொல்ல ரகுவிற்குத் தெரியவில்லை. திருதிருவென்று விழித்துவிட்டு, ”நந்து என்னே சீண்ட்றான்!” என்று மறுபடி சொல்லி அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டது.

நாளுக்கு நாள் நந்துவிற்குத் தன் தம்பியின் பேரில் பிரியம் அதிகம்தான். ஆனால் பெரியவனான இவன் புத்திமதி சொன்னால் ரகு கேட்கவே கேட்காது. தான் நல்லது சொன்னால் அவன் கேட்கவில்லையே என்று நந்துவிற்குக் கோபம் வரும். சண்டை உண்டாகும்.

அம்மா ஏதாகிலும் பழம் வாங்கினால் ரகுவிற்குக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை ”இது நந்துவிற்காக” என்று எடுத்து வைத்தால் ரகு உடனே, ”அதுவும் நேக்கு. நந்துவுக்கு வேண்டாம். அவென் என்னே அடிச்சான்” என்று சொல்லி அதையும் கொடுக்க வேண்டும் என்று அழும். அம்மாவிற்கு ரொம்ப வெட்கமாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்படுவாள்.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நந்து பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கும் சமயம், அம்மா அவனைத் தனியாக அழைத்து, மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ”நந்து, நீ பெரியவன். ரொம்பப் புத்திசாலி. பாடம் நன்றாகப் படிக்கிறாய். அப்படியிருக்க, நீ தம்பியோடு சண்டை போடுவது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறதே” என்றாள்.

”அவன்தான் நான் சொல்றதைக் கேட்கமாட்டேன் என்கிறான். சண்டை போடுகிறான்” என்றான் நந்து.

”ஆமாம், அது சின்னது. ஒன்றும் தெரியாதது. சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் பிறக்கும்போது ஒன்றும் தெரியாது. நாம் செய்வதைப் பார்த்துப் பார்த்துத்தான் அதுகளும் கற்றுக் கொள்ளும். குரங்குக் குட்டிகள் பெரிய குரங்கு செய்வதையே தாங்களும் செய்வதை நீ பார்த்ததில்லையா? அதே மாதிரிதான் தம்பியும். நீ ஒரு தினம் அதனுடைய கையில் இருந்த புஸ்தகத்தை வெடுக்கென்று பிடுங்கினாய். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த ரகுவிற்கு மற்றொருவர் கையில் இருப்பதைப் பிடுங்கக்கூடாது என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் அது எல்லார் கையில் இருப்பதையும் பிடுங்குகிறது. நீ அடித்தால் அதுவும் அடிக்கிறது. நீ கோபித்துக் கொண்டால் அதுவும் கோபித்துக் கொள்ளுகிறது. அன்றைக்கு நீ பார்த்துக் கொண்டே இருந்தாயே, நான் கோந்தை எடுத்துப் புஸ்தகத்தில் தடவினேன். ரகுவும் உடனே கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டது. சின்னக் குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். நாம்தான் பொறுமையாக அவர்களுக்கு நல்ல வழி காண்பித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றாள்.

”அது சரிம்மா. ஆனால் நான் சொல்றதே கேட்க மாட்டேன்றதே! அன்னிக்கு வெந்நீருள்ளே போச்சு. உடனே நான் ‘பச்சத்தண்ணித் தொட்டிலே எறங்காதே’ன்னு சொன்னேன். அது வேணும்னு உடனேயே சொக்காயோட அந்தத் தொட்டிக்குள்ளே எறங்கி அத்தனே தண்ணியையும் அழுக்காய்ப் பண்ணித்து” என்றான் நந்து.

”ஆமாம். நாம் ஏதாவது காரியத்தைச் செய்யக்கூடாதுன்னு அதட்டிச் சொன்னால் உடனே அதைச் செய்யவேண்டும்னு குழந்தைகளுக்குத் தோன்றும். நீ பெரியவன்தான். அவனைவிடப் புத்திசாலிதான். ஆனால் அதற்காக அதை எடுத்துக் காண்பித்து டம்பமாய்ப் பேசக்கூடாது. மரியாதை, பிரியம், பெருந்தன்மை எல்லாவற்றையும் நீ தம்பியிடம் காண்பித்து காண்பித்து அவனுக்கும் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கெட்ட குணம் உடனே பழகிவிடும். நல்ல குணம் பழக நாள் ஆகும். நாம் திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொடுக்கணும். செய்து செய்து காண்பிக்க வேண்டும். தம்பி எதிரில் தப்பாகவே நடக்கக்கூடாது. கோபித்துக் கொள்ளக்கூடாது. அவன் அசடாக இருந்தால் பொறுத்துக் கொண்டு உன்னுடைய பெருந்தன்மையைக் காண்பித்து அவனுக்கு நல்ல வழி பழக்கணும். அவன் ஒரு பங்கு சமத்தாக இருக்க வேண்டுமென்றால் பெரியவனான நீ நாலு பங்கு சம்த்தாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பங்காவது பழகும். அவன் தப்புச் செய்யச் செய்ய, உன்னுடைய பிரியத்தை எல்லாம் அவனிடம் காண்பி. நல்ல வார்த்தைகளே சொல்லு. அவனுக்குப் புரியாததைத் தெளிவாகச் சொல்லு. அவன் எவ்வளவு சமத்தாகப் போய்விடுகிறான் என்பதைப் பார்த்து நீயே ஆச்சர்யப்படுவாய்” என்றாள்.

அதற்குப் பிறகு நந்து நிரம்பச் சமர்த்தாக இருந்தான். தம்பியைக் கோபித்துக் கொள்ளவே மாட்டான். கோபம் வந்தால் அடக்கிக் கொண்டு தம்பியிடம் நயமாகப் பேசி அவனைச் சமர்த்தாகச் செய்யப் பார்ப்பான். தம்பியும் நாளடையில் சமர்த்தாகி விட்டான்.

இது ஒரு பொய் கதைபோல் இருக்கிறதல்லவா? நாட்டில் பெரிய பெரிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் எங்காகிலும் சிறு குழந்தைகள் ஓர் இரவில் சமர்த்தாகப் போய்விடுவார்களா?

****

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 20

கமலா பத்மநாபன்

(1913  – 1945)

தஞ்சாவூரைச் சேர்ந்த டெபுடி கலெக்டரான, பிரம்மஞான சபையைச் சார்ந்த டி.வி.கோபாலசாமி ஐயரின் பேத்தி. சங்கீதத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். வயலின் கற்றிருந்தார். முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினாலும், அவரின் பெரும் கவனம் தமிழின் மீதே இருந்தது.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் இளம் வயதில் (32) இயற்கை எய்தினார். 1933ல் இருந்து 1942 வரை சுமார் பத்து வருடங்களில் இவரின் படைப்பாற்றல் வியக்க வைப்பவை.

எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்து குறு நாவல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இதழ்களான பாரதமணி, ஜகன் மோகினி, கலைமகள், சுதேசமித்திரன் போன்றவற்றில் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியவர். அவரின் காலத்தில் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவராக மதிக்கப்பட்டவர். 

***                                                                                                                        

Image

உபய களத்திரம்

மெலிந்த உடலுடன் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பங்கஜம் சிறிது புரண்டு மற்றொரு புறம் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். கவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி ஆறு அடித்தது.

”ஹும்! மணி ஆறு அடிச்சுடுத்தா? மருந்து சாப்பிட வேண்டும். என்றைக்கு இந்த மருந்து சாப்பிடும் காலம் ஒழியப் போகிறதோ! இருக்கிற ஸ்திதியைப் பார்த்தால் என் மண்டையோடுதான் இந்த மருந்துக்கும் முடிவு ஏற்படும் போலிருக்கிறது. ஈசுவரா! பணம், காசு, பதவி என்று ஆசைப்படவில்லையே! ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாகத்தானே வாழ்ந்து வருகிறோம். நல்ல ஆரோக்கியத்தை அளிக்கக்கூடவா உனக்கு மனசு வரவில்லை? ஒரு நாளா? இரண்டு நாளா? மூன்று வருஷ காலமாய் இதே பாடாய்ப் போய்விட்டதே! என்னைக் கட்டிக்கொண்டிருக்கும் அந்தப் புருஷருக்குத்தான் என்ன சுகம்” என்று மிகுந்த சலிப்புடன் வாய்விட்டுக் கூறிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் பங்கஜம்.

கட்டில் அருகில் முக்காலியின்மேல் இருந்த சிறிய மருந்து சீசாவை நடுங்கிய கரத்துடன் கையில் எடுத்துக்கொண்டாள். பத்து சொட்டுக்கள் எண்ணி ஒரு அவுன்ஸ் தண்ணீரில் விட்டுக் கொண்டாள். உள்ளக் கலக்கத்தினால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்ச் சொட்டுக்களும் அதே சமயத்தில் அவளுடைய ஒட்டி உலர்ந்து போன தாடைகளில் உருண்டு வழிந்தன. பகவானைத் தியானம் செய்துகொண்டு மருந்தைக் குடித்தாள். பிறகு இரண்டு தலையணைகளை எடுத்துச் சுவரோடு பொருத்தி அவற்றின் மேல் சாய்ந்து கொண்டாள். எதிரே மாட்டியிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டு, ஒரு வறண்ட புன்னகை அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது. அவள் மனம் என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எண்ணித் துன்புற்றது.

வாயிற்புறமிருந்து ‘கிரிங், கிரிங்’ என்று சைக்கிள் மணியின் சப்தம் ஒலித்தது. பங்கஜம் சட்டென்று சிந்தனையிலிருந்து விழிப்படைந்தாள். தன் கடைவிழிகளில் தேங்கி நின்ற கண்ணீரைச் சடுதியில் துடைத்துக் கொண்டு தலை மயிரைக் கோதி விட்டுக் கொண்டாள்.

”அம்மா, ஐயா வந்துவிட்டாங்க” என்று தெரிவித்துவிட்டு வாயிற்புறம் ஓடிக் கதவைத் திறந்தான் வேலைக்காரப் பையன்.

ஸ்ரீவத்ஸன் தன் முகத்து வேர்வையைக் கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். அவன் முகம் சோர்ந்து, மிகுந்த களைப்புற்றவன் போல் தென்பட்டான்.

உற்சாகமற்றிருப்பினும் பரிவு தோய்ந்த குரலில் தன் மனைவியைப் பார்த்து, ”எப்படி இருக்கிறது, பங்கஜம்? டாக்டர் வந்திருந்தாரா? நான் இன்னும் சீக்கிரமே வந்திருப்பேன். நாளைய தினத்திற்குள் சீக்கிரமாய்ச் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கிய வேலையைப் பற்றி பிரஸ்தாபித்த வண்ணம் எனது ஆபீஸர் என்னை வெகுநேரம் நிறுத்திக் கொண்டு விட்டார்” என்று கூறிக்கொண்டே பங்கஜத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் ஸ்ரீவத்ஸன்.

பிரேமையுடன் அவளுடைய முகத்தருகே குனிந்து பொழுது கலங்கிப்போன அவளது நேத்திரத்தைக் கண்டு, ஸ்ரீவத்ஸன் திடுக்கிட்டு, ”கண்மணீ, அழுதாயா? நீ எப்பொழுது இந்த அசட்டுத்தனத்தை விடப் போகிறாய்? மனத்தை அலட்டிக்கொள்ளாமல் இருந்தால்தான் உன் வியாதி அதிகரிக்காமல் இருக்குமென்று டாக்டர் படித்துப் படித்துக் கூறுகிறார். நீயோ இப்படி அகாரணமாய் வருந்தி, குருட்டு யோசனைகள் செய்து உன் உடல் நிலைமையை இன்னும் பாழாக்கிக் கொள்கிறாய்! என் வார்த்தைகளுக்கு முன்பெல்லாம் நீ எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாய்? இப்பொழுது மாத்திரம் ஏன் இப்படிப் பச்சைக் குழந்தை மாதிரி நடந்து கொள்கிறாய்?” என்று பங்கஜத்தை அன்புடன் கடிந்து கொண்டான்.

பங்கஜம் பதில் கூறாமல் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் அப்பொழுது தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. ஸ்ரீவத்ஸன் அவள் கன்னங்களை இலேசாக வருடியபடி, ”கண்ணே! வேண்டாம், இப்படி அழாதே. மார்பு படபடப்பு ஜாஸ்தியாகிவிடும். உன் மனத்தில் இருப்பதைச் சொல். உன் இஷ்டம் எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன். உன் குறை என்ன? தயங்காமல் சொல்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றினாள்.

சிறிது நேரத்தில் பங்கஜம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன் கணவன் முகத்தை ஆவலுடன் பார்த்தபடி, ”உண்மையாகவா? என் இஷ்டம் எதுவானாலும் அதன்படி மறுக்காமல் செய்வீர்களா?” என்றாள்.

”உன் இஷ்டம் என்ன? முதலில் அதைச் சொல்.”

”நீங்கள் இன்னொரு விவாகம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய நெடுநாளையக் குறை!”

பங்கஜத்தின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீவத்ஸனின் இதயத்தில் சொல்ல முடியாத வேதனை உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வேதனை எங்கே தனது முகத்தில் பிரதிபலிக்குமோ என்று அஞ்சி அதை மறைக்க அவன் சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்ட ஒரு மாதிரி அலட்சிய பாவத்துடன், பலமாய்ச் சிரித்தான்.

”பங்கஜம், நீ இறந்துபோன பிறகல்லவா அந்த யோசனை! அதைப்பற்றி இப்பொழுது என்ன?”

”இல்லை, நான் உயிருடன் இருக்கும்பொழுதே நீங்கள் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் செய்து கொண்டால்தான் என் மனம் நிம்மதியடையும். நான் அனுபவிக்கும் வியாதியைவிட உங்களுக்குத் துளிக்கூட இல்லற இன்பமும் சௌக்கியமும் இல்லாமல் போய்விட்டனவே என்ற கவலைதான் என்னை அதிகமாக வாட்டுகிறது. ஏன், இந்தப் பெருங்கவலையே என்னைக் கொல்லாமல் கொல்கிறது என்று கூடச் சொல்வேன். என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வீர்களா?” என்று தன் நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு செஞ்சினாள் பங்கஜம்.

அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸ்ரீவத்ஸன் இடிந்து போய் உட்கார்ந்தான். சில வினாடிகள் கழித்து, ”பங்கஜம் உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? எதற்காகக் கனவிலும் நடக்க முடியாத ஒரு காரியத்தைச் செய்யும்படி என்னைத் தூண்டுகிறாய்? இல்லை, நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தைப் பரீட்சை செய்து பார்க்கிறாயா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றான் வியப்புடன்.

”புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறேன். உங்கள் அன்பின் ஆழத்தை நான் அறிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல்தான் புதிதாய்ப் பரீட்சை செய்து பார்க்க வேண்டுமா?

நாளெல்லாம் உழைத்து விட்டு மாலை வீடு திரும்பினால், குதூகலத்துடன் உங்களுக்கு வரவேற்பு அளித்து உற்சாகமூட்டக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன் நான்! நானும் எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துப் பார்ப்பது? மூன்று வருஷகளாய் இதே கண்ணறாவிப் பிழைப்புத்தான். ஆபீஸில் முதுகு ஓடிய வேலை செய்து சிரமப்படுவது போதாதென்று கிருஷலட்சுமியாகிய நான் செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் பல உங்கள் தலையில் விழுகின்றன. இது மட்டுமா? பல இரவுகள் எனக்காகக் கண் விழித்துச் சிசுருஷை செய்வதனால் உங்கள் உடம்பும் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறது. என்னால் இந்தக் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டு இனிமேல் சும்மா இருக்க முடியாது. நீங்கள் என் விருப்பப்படி நடந்தால்தான் என் மனம் சாந்தி பெறும். என்ன? மௌனமாக எங்கேயோ பார்க்கிறீர்கள். என் மேல் கோபமா?” என்று வினவியபடி, இவ்வளவு நாழியாக உணர்ச்சி வேகத்தில் படபடப்பாய்ப் பேசிய தன் ஆயாசம் தாங்காமல் மேல்மூச்சு வாங்க ஸ்ரீவத்ஸனின் மடியின்மேல் தலை சாய்த்தாள் பங்கஜம்.

ஸ்ரீவத்ஸன் வேதனையுடன் பெருமூச்சொன்று விட்டு, தன் மனைவியின் முதுகைப் பிரேமையுடன் தடவிக் கொடுத்தான். சில நிமிஷ நேரம் தம்பதிகளிடையே ஆழ்ந்ததோர் மௌனம் குடிகொண்டிருந்தது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவத்ஸனின் மூளையில் முன்வெட்டுப் போல் ஒரு நூதன எண்ணம் மின்னிற்று.

”பங்கஜம், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு என்னால் ஒன்றும் தீர்மானிக்க முடியாது. எனக்குச் சிறிது காலம் அவகாசம் கொடு. பிறகு என் சம்மதத்தைத் தெரிவிக்கிறேன்” என்றான்.

பங்கஜம் மகிழ்ச்சியுடன் தன் கணவன் மடியிலிருந்து தலையைத் தூக்கி எழுந்து உட்கார்ந்தாள். ”பார்த்தேளா? இப்பொழுதே எனக்குப் பாதி நிம்மதி ஏற்பட்டு விட்டது. என் லட்சியம் விரைவில் நிறைவேறிவிட்டால் மனத்திற்கும் பூரண சாந்தி பிறந்து விடும். அதனால் என் தீராத நோய்கூடக் குறைந்து தேகத்திற்குத் தெம்பு (பலம்) உண்டாகுமென்று நம்புகிறேன்” என்று ஆர்வத்துடன் கூறிவிட்டுத் தன் கணவனின் கரங்களைப் பற்றி ஆசையுடன் தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

***

ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தை மணம் செய்துகொண்டு ஏழு வருஷங்கள் ஆகியிருந்தன. அவளை அவன் வாழ்க்கைத் துணைவியாக வரித்தபொழுது எல்லோரையும்போல் அவளும் நல்ல ஆரோக்கியமும், அழகும், யௌவனமும் வாய்ந்த மங்கையாகத்தான் இருந்தாள். மண வாழ்க்கை நடத்த ஆரம்பித்த மூன்று வருஷங்களுக்குப் பிறகு பங்கஜத்தைத் தாய்மைப் பட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரதிருஷ்டவசத்தினால் ஆறாம் மாதத்திலேயே அவளுக்குக் குறைப் பிரசவம் ஆகி மிகவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் சரியான வைத்திய உதவியும், பராமரிப்பும் இல்லாத காரணத்தினாலோ, அல்லது போதாத வேளையினால்தானோ அவள் உடல் நிலையில் ஒன்று மாறி ஒன்றாகப் பலவிதச் சிக்கல்களும் கோளாறுகளும் ஏற்பட்டன. நாளடைவில் இதே சாக்காய்ப் பங்கஜத்தின் இருதயமே வெகுவாய்த் துர்ப்பலமாகிவிட்டது. ஸ்ரீவத்ஸன் சாதாரணச் சம்பளக்காரன்தான். தன்னிடம் ஏற்கனவே இருந்த சொற்பப் பிதுரார்ஜித சொத்து முழுவதும் செலவழித்துத் தன் அருமை மனைவிக்கு வேண்டிய உயர்தர வைத்தியமும் இதர சௌக்கியங்களும் அளித்து வந்தான். வியாதி வெக்கை ஒன்றும் இல்லாமல் இருந்தால் அந்தச் சம்பளத்தைக் கொண்டே இரண்டு ஆத்மாக்களும் எவ்வளவோ சௌகரியத்துடன் வாழ்ந்திருக்கலாம். மருந்துகளும் டாக்டர் ‘பில்’லும் ஆளை விழுங்கும்பொழுது அவர்கள் மிகச் சிரமத்துடன்தான் குடும்பம் நடத்தி வந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

இருதய சம்பந்தமான நோய்களைக் கண்டுபிடித்துக் குணம் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ‘ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்’டைக் கொண்டு தன் மனைவியின் தேக நிலைமையைப் பரிசோதிக்கச் செய்தான் ஸ்ரீவத்ஸன். அவர் வந்து பார்த்துவிட்டு நோயாளி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு மனத்தையும் தேகத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது அத்தியாவசியமென்பதைத் தெளிவாகக் கூறி அதன்படி நடந்து கொண்டால் அவள் உடம்பு இன்னும் மோசமான நிலைமைக்கு வராமலிருக்கலாம் என்று எச்சரித்தார்.

***

ஸ்ரீவத்ஸனுக்குத் தன் மனைவி இந்த இளவயதில் இப்படி நோயாளி ஆகிவிட்டாளே என்ற துயரமும் கவலையும் ஏற்பட்டனவே ஒழிய, ‘நித்திய ரோகி’ என்று அவள் மேல் சிறிதும் வெறுப்போ, அலட்சியமோ ஏற்படவில்லை. அதற்கு மாறாக அவன் அவள் மேல் வைத்திருந்த அன்பும் கனிவும் பன்மடங்கு அதிகமாகி, அவளை ஒரு குழந்தையைப்போல் கருதி ஓய்ச்சல் ஒழிவு இன்றி அவளுக்குச் சிருஷை செய்து வந்தான். வீட்டிலுள்ள சில்லறை வேலைகளைச் செய்யச் சொற்பச் சம்பளத்தில் ஒரு வேலைக்காரப் பையனை அமர்த்திக் கொண்டு சமையல் முதலிய வேலைகளை எல்லாம் இப்பொழுது ஸ்ரீவத்ஸனே செய்யும்படி ஆயிற்று.

பங்கஜத்தின் உடல் நிலை விசித்திர நிலைக்கு வந்து விட்டது. அதாவது ஒரு மாதம் சேர்ந்தாற்போல் கட்டிலோடு கட்டிலாய்ப் படுத்திருந்து பூரண ஓய்வு எடுத்துக் கொண்டால் அவள் உடம்பு தொந்தரவு ஒன்றுமில்லாமல் சாதாரணமாக இருக்கும். அதை நம்பிக் கொண்டு அவள் தன் கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில், எழுந்து சற்று காலாற நடமாடி, ஏதாவது சுலபமான வேலைகளைச் செய்யப் போவாள். ஆனால் அந்தப் பழைய நிலை எப்படியோ அவளை நெகிழ்ந்துகொண்டுவிடும். மார்பு படபடப்பு வந்து படுத்து விடுவாள். மறுபடியும் மாதக் கணக்காய்ப் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பேச்சே கூடாது. ”பூப்பட்டால் சிவக்கும்; நீர் பட்டால் கொப்புளிக்கும் அவளது பொன்னான திருமேனி” என்றாலும் மிகையாகாது.

நன்றாக உண்டு உடுத்து ஓடியாடித் திரியும் இந்தச் சின்ன வயதில் இப்படிப் படுக்கையே கதி என்று கிடந்தால் யாருக்குத்தான் அலுப்புத் தட்டாது? பங்கஜத்தின் முக்கியமான கவலை தன் கணவனுக்குத் தன்னால் ஒருவித சுகமும் சந்தோஷமும் இல்லாமற் போய் விட்டனவே என்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்கும் பொருட்டுத்தான் அவள் ஸ்ரீவத்ஸனை மற்றொரு கல்யாணம் செய்து கொள்ளும்படியாக மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டாள். அவன் அதற்கு இணங்க மாட்டான் என்று அவள் அறிவாள். ஆனால் அவனை எப்படியாவது தாஜா செய்து தன் விருப்பத்தின்படி நடக்கச் செய்யலாமென்ற, திடமான நம்பிக்கை அவளுக்கு இருந்தது. மேலும் ஸ்ரீவத்ஸனுடைய ஜாதக ரீதியாய் அவளுக்கு உபய களத்திரப் பிராப்தம் இருப்பதாக ஒரு சோதிடன் கூறியிருந்ததை அவள் மறக்கவில்லை.

”ஒரு புருஷனுக்கு இரண்டு மனைவியர் இருந்தால் வீண் சண்டையும் சச்சரவும்தான் ஏற்படுமே தவிர, இதனால் அந்தக் கணவனுக்குத் துளிச் சுகமும் கிடையாது என்று பொதுவாய் உலக மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை நான் பொய்யாக்கி விடுகிறேன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினால்தானே சப்தம் கேட்கும்? நான் எல்லா விஷயங்களிலும் ஒதுங்கியிருந்து சர்வத்தையும் புதிதாய் வருகிறவளுக்கே விட்டுக்கொடுத்து விடுகிறேன். என் உயிர் உள்ளவரைக்கும் எனது பிரிய பர்த்தாவின் முக தரிசனம் மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால் அதுவே எனக்குப் பரம திருப்தி. நான் மிகவும் நல்லவளாயும், அவளிடம் உண்மை அன்புடனும் நடந்து கொண்டால், தானே அவளுக்கும் என்னிடம் கொஞ்சமாவது பிரியம் ஏற்படாமலா போகும்? பார்க்கலாம், என்னுடைய இந்த இலட்சியம் எவ்வளவு தூரம் பெற்றி பெறுகிறதென்று!”

மேற்கூறியபடி யோசனைகள் பல செய்வதிலேயே காலங் கடத்தி வந்தாள் பங்கஜம்.

இதற்கு நடுவில் சில மாதங்கள் தேய்ந்தன. ஸ்ரீவத்ஸனுக்கு எதிர்பாராத விதமாய் வேலையில் உயர்வு ஏற்பட்டுச் சம்பளமும் அதிகமாயிற்று. இதனால் தம்பதிகள் இருவரும் இன்னும் கொஞ்சம் சௌகரியமாகவே வாழ்க்கை நடத்தச் சாத்தியமாயிற்று. சமையல் முதலிய வீட்டு வேலைகளைச் செய்யப் பிரத்தியேகமாக ஒர் ஆளை ஏற்பாடு செய்தான் ஸ்ரீவத்ஸன். பங்கஜத்தின் உடம்பிலும் இப்பொழுது கொஞ்சம் தெம்பு உண்டாகி வீட்டோடு சிறிது நடமாடவும் ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் போல் ஒரு நாள் மாலை ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீவத்ஸன் சந்தோஷத்துடன் தன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

”பங்கஜம், நீ அன்றைய தினம் சொன்னாயே, அது எப்பேர்ப்பட்ட முதல் தரமான ‘ஐடியா’ என்று எனக்கு இப்பொழுதுதான் புலப்படுகிறது. என் சிநேகிதர்கள் மூலமாகப் பெண் தேட ஏற்பாடு செய்யலாமென்று இருக்கிறேன்” என்றான்.

தன் கணவன் மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாக வாய் திறந்து என்றைய தினம் கூறப்போகிறாரோ என்று பல மாதங்களாக ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருந்த பங்கஜத்திற்கு, இன்று ஸ்ரீவத்ஸன் தன் எண்ணத்தை வெளியிட்டதும், சந்தோஷத்திற்குப் பதிலாக, எக்காரணத்தினாலோ பகீரென்று கலக்கமும் வேதனையும்தான் எழும்பின. ஆனால் அவள் கெட்டிக்காரி. மனத்திற்குள் உண்டான உணர்ச்சியைக் கடிந்து கொண்டு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள். புன்சிரிப்புடன் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்து, ”எனக்கு இப்பொழுதுதான் நிம்மதி உண்டாயிற்று! நீங்கள் எங்கே பிடிவாதமாய் ‘மாட்டேன்’ என்று சொல்லி விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்’’ என்றாள்.

ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தின் தியாகப் புத்தியையும் திட சித்தத்தையும் கண்டு அயர்ந்து போனான். அவள் முகத்தில் ஏதாவது மாறுதல் தென்படுகிறதாவென்று ஆராய்ந்தறிய விரும்புபவன் போல் சில வினாடிகள் கண்கொட்டாமல் அவள் வதனத்தைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் அவள் எதிரில் நின்றான்.

பங்கஜம் சிரித்துவிட்டாள். ”அதென்ன? அப்படி வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.

ஸ்ரீவத்ஸன் தன் மனைவியை அருகில் இழுத்து அவள் கரங்களைப் பற்றித் தன் இருதயத்தின் மேல் வைத்து அழுத்திக் கொண்டான். ”பங்கஜம், நிஜமாக நீ பிறகு வருந்தமாட்டாயே! புதியவள் வந்த பிறகு நான் உன்னை முன்போல் நேசிப்பதில்லையென்றும், நேரத்தையெல்லாம் அவளுடன் கூடிக் குலாவுவதிலேயே கழிப்பதாகவும் என்னைக் குற்றம் சாட்ட மாட்டாயே?” என்றான்.

”மாட்டவே மாட்டேன்! என்னை என்ன அத்தனை சஞ்சல புத்திக்காரி என்று நினைத்து விட்டீர்களா? நீங்கள் எந்த விதத்திலாவது ஆனந்தமாகவும் உல்லாசமாகவும் இருக்க வேண்டுமென்பதுதானே என்னுடைய ஆசை. நான்தானே முதல் முதலாக உங்களை இந்த விஷயத்தில் தூண்டியவள்?” என்று சிறிது ரோஷத்துடன் தன் கணவனுக்குப் பதில் அளித்தாள் பங்கஜம்.

மேற்சொன்ன சம்பாஷணை நடந்து சில தினங்களான பின் ஒருநாள் ஸ்ரீவத்ஸன் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு பெண்ணைப் போய்ப் பார்த்து வருவதாகச் சொல்லிப் புறபபட்டுச் சென்று சீக்கிரத்திலேயே திரும்பிவிட்டான்.

அவன் திரும்பி வந்ததும் பங்கஜம் ஆவல் துள்ள, ”என்ன, பெண் எப்படி இருக்கிறாள்? உங்கள் மனத்திற்குப் பிடித்திருக்கிறாளா? நிறம் எப்படி? என்னைவிடச் சிவப்பா? தலையில் மயிர் நிறைய இருக்கிறதா? உயரமா? குட்டையா?’’ என்று இப்படியாக ஒரே மூச்சில் பல கேள்விகள் போட்டு ஸ்ரீவத்ஸனைத் திணற அடித்தாள்.

ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தின் ஆவலைக் கண்டு கெட்டியாய்ச் சிரித்தான். ”பங்கஜம், உன் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் கூற வேண்டிய அவசியமே இல்லையென்று நினைக்கிறேன். பெண் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அசல் கொழுக்கட்டை மாதிரி இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து என்னோடு ரெயிலில் பிரயாணம் செய்து ஒருவர், மைசூரில் இருக்கும் ஒரு பெண்ணை மிகவும் பலமாகச் சிபாரிசு செய்கிறார். அதையும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். ஒருக்கால் பெண் மனத்திற்குப் பிடித்திருந்தால் அங்கேயே விவாகத்தை முடித்துக் கொண்டு கையோடு பெண்ணையும் அழைத்து வந்து விடலாமென்றிருக்கிறேன். உனக்கு இந்த ஏற்பாடு சம்மதம்தானே?” என்றான்.

பங்கஜம், மறுபேச்சுப் பேசாமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, ஒருவிதப் பாசாங்கு உற்சாகத்துடன், வேகமாய்த் தலையாட்டினாள்.

மறுவாரம் ஸ்ரீவத்ஸன் ஏற்கனவே உத்தேசித்திருந்தபடி பெண் பார்க்க மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றான். அவன் மைசூர் போய்ச் சேர்ந்த மறுதினம் பங்கஜத்திற்கு அவனிடமிருந்து ஒரு தந்தி கிடைத்தது.

”உன் மனோபீஷ்டத்தை இன்று காலை நிறைவேற்றி விட்டேன். வீணாவுடன் புறப்பட்டு நாளை மாலை அங்கு வந்து சேருகிறேன்.”

– ஸ்ரீவத்ஸன்

தந்தியைப் படித்ததும் பங்கஜத்திற்கு அவளையும் அறியாமல் துக்கம் துக்கமாய் வந்தது. நன்றாக விம்மி அழுது தீர்த்தாள். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, ”சீ இதென்ன பைத்தியக்காரத்தனம்! நானாகத்தானே அவரைத் தூண்டித் தூண்டி இன்னொரு பெண்ணை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன்! இப்பொழுது ஏன் என் மனம் கிடந்து இப்படித் தவியாய்த் தவித்துத் துன்புறுகிறது? தெய்வமே, கடைசியில் என் மனத்தைத் தளரச் செய்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே! என் கணவரின் சந்தோஷந்தானே எனது பாக்கியம்? பாவம், அந்த உத்தமசீலன் எனக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்? ஏன் இன்னமும்தான் பாடுபடுகிறார்! அவர் பொருட்டு இந்த அற்பத் தியாகத்தை மனமாரச் செய்யத்தக்க மன உறுதிகூட எனக்கு இல்லாவிட்டால் நானும் ஒரு மனுஷியாவேனா? தர்மபத்தினி என்ற பெயருக்கு அருகதை உள்ளவளாவேனா? ஈசவரா, என் புத்தி பேதிக்கும்படி செய்யாதே! உன்னைக் கெஞ்சி வேண்டிக் கொள்ளுகிறேன்!” என்று கடவுளைப் பிரார்த்தித்தாள்.

சில நிமிஷங்களுக்கெல்லாம் அவள் மனம் சிறிது சமாதானமடைந்தது. தந்தியை எடுத்து மற்றுமொரு முறை படித்துப் பார்த்தாள். ”வீணா! வீணா! எவ்வளவு இனிமையான பெயர்! பெயரைப்போல் அவளும் இனிமையான குணம் வாய்ந்தவளாகவே இருப்பாளென்று நம்புகிறேன்” என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.

கடந்த இரண்டு மாத காலமாய்ச் சுமாராய்த் தேறிக் குணமடைந்திருந்த அவளது சரீர நிலைமையை அன்றைய அதிர்ச்சி (தந்தி சமாசாரத்தினால் ஏற்பட்டது) பலமாய்ப் பாதித்து விட்டது. இருதயப் படபடப்பு அதிகமாகி, எழுந்திருக்கக்கூட சக்தியில்லாமல் படுத்து விட்டாள்.

மறுநாள் சாயந்தரம் மைசூரிலிருந்து வீணாவுடன் டாக்சியில் வந்திறங்கிய ஸ்ரீவத்ஸன், வீட்டு வாயிலில் நின்று கொண்டு பங்கஜம் தன்னை வரவேற்பாள் என்று எதிர்பார்த்தான். அவளை அங்கே காணாமல் பதைபதைத்த உள்ளத்துடன் வீணாவை ரேழி மூலையில் நிற்க வைத்துவிட்டுப் பங்கஜம் வழக்கமாய்ப் படுக்கும் அறையை நோக்கி ஓடினான்.

பங்கஜம் இலேசாகப் புன்னகை புரிந்துகொண்டே படுக்கையின்மேல் தன் முழங்கைகளை ஊன்றியபடி சிரமத்துடன் எழுந்திருக்கப் பார்த்தாள். ஸ்ரீவத்ஸன் ஒரே தாவலில் அவளைச் சமீபித்து, ”கண்மணீ, வேண்டாம்! எழுந்திருக்காதே! சும்மா படுத்துக் கொள். எப்போது முதல் உடம்பு சரியாக இல்லை? இப்படித்தானா உன் சக்களத்திக்கு வரவேற்பு அளிப்பது?” என்று வருத்தத்துடன் வினாவினான்.

250px-Veena

பங்கஜம் தன் கணவன் கேட்டதற்குப் பதில் அளிக்கவே இல்லை! யாரையோ ஆவலுடன் தேடுபவள்போல் அவன் கண்கள் அறையின் வாயிற்படிக்கு அப்பால் சுழன்று அலைந்தன. ”எங்கே வீணா? கூடவே அழைத்து வருவதாகத் தந்தி கொடுத்தீர்களே!” என்று கேட்டாள் பதற்றத்துடன்.

”அவசரப்படாதே, பங்கஜம். வீணா வந்திருக்கிறாள். ரேழியில் நிற்க வைத்துவிட்டு வந்திருக்கிறேன். போய் அழைத்து வருகிறேன்” என்றுரைத்து வெளிப்புறம் வந்தான் ஸ்ரீவத்ஸன்.

பங்கஜத்தின் இதயத் துடிப்பு இப்பொழுது பன் மடங்கு அதிகரித்தது. அடக்க முடியாத ஆவலுடனும், இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதக் கலக்கமடைந்த உள்ளத்துடனும் தனது சக்களத்தியின் வருகையை எதிர்பார்த்தவண்ணம் படுத்திருந்தாள்.

ஸ்ரீவத்ஸன் மறுபடியும் பங்கஜத்தின் அறைக்குள் வந்தபொழுது பச்சை வர்ண உறையினால் மூடப்பட்டிருந்த ஒரு வீணையைத் தழுவித் தாங்கியபடி உள்ளே பிரவேசித்தான். வீணையின் சொந்தக்காரியான தனது சக்களத்தி பின்னாலேயே வருவாள் என்று எதிர்பார்த்த பங்கஜத்திற்குப் பெருத்த ஏமாற்றம் உண்டாயிற்று.

ஸ்ரீவத்ஸனுடைய மந்தஹாஸ வதனத்தில் இப்பொழுது குறும்புத்தனம் கூத்தாடியது. ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவன்போல் வெற்றிப் பார்வையுடன் பங்கஜத்தைப் பார்த்தான். பங்கஜத்திற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

”வீணை அவளுடையதா? எங்கே அவள்” – பங்கஜத்தின் பேச்சில் மறுபடியும் அதே படபடப்பும் ஆவலும் ஒருங்கே த்வனித்தன.

ஸ்ரீவத்ஸன் வீணையைக் கீழே வைத்துவிட்டுத் தன் மனைவியின் அருகில் உட்கார்ந்தான்.

சாவதானமாய், ”பங்கஜம் இதோ இருக்கும் இந்த வீணைதான் அவள்! இந்த ‘வீணா’தான் உன் சக்களத்தி; உனக்கு இன்னும் புரியவில்லையா?” என்று சொல்லி வீட்டுக் கரைகாணா வாஞ்சையுடன் பங்கஜத்தின் வதனத்தை நிமிர்த்தித் தன் முகத்தை அதனுடன் சேர்த்தான். அவள் இதழ்களும் அவன் இதழ்களும் கூடிக் கலந்தன.

பங்கஜத்திற்கு இன்னும் விஷயம் சரியாக விளங்கவில்லை. சில வினாடிகள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்பட்டாள். பிறகு, ”அப்படியானால் நீங்கள் நேற்று இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளவில்லையா? பெண் பார்க்க தஞ்சாவூர் போனது, பெண் பிடிக்கவில்லையென்று திரும்பி வந்தது, பிறகு மைசூர் பெண்ணைப் பார்க்கப் போனது, அங்கிருந்து எனக்குத் தந்தி அடித்தது, இவையெல்லாம் சுத்தப் புரட்டா” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

”ஒரு விதத்தில் எல்லாம் பொய், மற்றொரு விதத்தில் நிஜம்! நான் தஞ்சாவூர் போய் வந்ததும், பிறகு மைசூர் போய் இன்று திரும்பி வந்ததும் என்னவோ வாஸ்தவந்தான்! ஆனால் பெண் பார்க்கப் போகவில்லை. தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் நல்ல வீணையொன்றை நேரில் பார்த்து வாங்கி வரலாமென்று அங்கே சென்றேன். ஆனால் அந்த ஊர் வீணை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லையானதால் வாங்காமல் திரும்பி வந்து விட்டேன். பிறகு என் குருவுடன் மைசூருக்குச் சென்று அவர் பரீட்சித்துச் சம்மதித்த பின் இந்தப் பழகிய வீணையை வாங்கிக் கொண்டு வந்தே சேர்ந்தேன்” என்றான் ஸ்ரீவத்ஸன்.

”உங்கள் குருவா? அவர் யார்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! இதெல்லாம் என்ன கண்கட்டு வித்தை?”

கண்கட்டு வித்தையுமில்லை ஒன்றுமில்லை, கண்ணே! என் குருவைப்பற்றி நான் இவ்வளவு நாட்களாக உன்னிடம் சொல்லாமல் இருந்ததற்கு என்னை மன்னித்துவிடு. உனக்குப் பிரமாதமாய் உடம்புக்கு வந்து நீ அடிக்கடி படுத்த படுக்கையாய்க் கிடக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனத்திற்கும் அசாத்திய அலுப்பும் சோர்வும் ஏற்பட்டுவிட்டன. அதை மறந்திருப்பதற்காக நான் கடந்த மூன்று வருஷங்களாக ஒரு பிரபல வீணை வித்துவானிடம் ரகசியமாய் வீணை கற்று வருகிறேன். எனக்குத் திறமையுடன் வீணை வாசிக்க வந்த பிறகு, ஒரு நாள், இந்த உண்மையை உன்னிடம் வெளியிட்டு உன்னை அதி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். பிரதி தினமும் மாலை, ஆபீஸ் வேலை முடிந்ததும் நேரே அந்த வித்துவான் வீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரம் அவரிடம் சிக்ஷை பெற்றுப் பிறகு வீட்டிற்குத் திரும்பும் பழக்கத்தை வைத்துக்கொண்டிருந்தேன். விடுமுறை தினங்களில்கூட ஆபீசில் ‘ஸ்பெஷல் வொர்க்’ இருக்கிறதென்று உன்னிடம் புளுகிவிட்டுப் போய்க் கொண்டிருந்தேனே, அதெல்லாம் வீணை பயிலுவதற்காகத்தான். எனக்கு ஏற்கனவே சங்கீதத்தில் அபார ஆசையும் கொஞ்சம் ஞானமும் இருந்தபடியால் என் குரு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நான் இந்த மூன்று வருஷத்திற்குள் வீணை வாசிப்பதில் தேர்ச்சி அடைந்துவிட்டேன். இது நிற்க, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் நீ திடீரென்று இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தியபொழுது எனக்கு இந்த வேடிக்கையான எண்ணம் எப்படியோ உதித்தது. அதாவது, உன் இஷ்டப்படியே நான் வேறு கல்யாணம் செய்து கொள்வதாக உன்னிடம் கூறிவிட்டு, ஒரு நாள் திடீரென்று ஒரு நல்ல வீணையை வாங்கிக் கொண்டு வந்து உன் எதிரில் காட்சியளித்து, ”இவள்தான் உன் சக்களத்தி. என் இரண்டாம் மனைவி என்பதாக உன்னிடம் அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். அவ்விதமே இன்று செய்து விட்டேன். பங்கஜம், என் செல்வமே, என் இதய பீடத்தில் உன் ஒருத்திக்குத்தான் ஸ்தானம் உண்டு. அதில் இன்னொருத்தி வந்து ஆக்கிரமிக்க என் மனம் ஒரு நாளும் சம்மதிக்காது. இது சத்தியம்!” என்று ஆவேசத்துடன் புகன்று பங்கஜத்தை இறுகத் தழுவி முத்தமிட்டான் ஸ்ரீவத்ஸன்.

”கடைசியில் என்னை இவ்விதம் ஏமாற்றிவிட்டீர்களே! நான் கொண்டிருந்த உன்னத லட்சியம் அநியாயமாய்ச் சிதைந்து போயிற்றே!” என்று உதட்டைப் பிதுக்கினாள் பங்கஜம்.

”பங்கஜம், நான் உன்னை ஏமாற்றவில்லை! நீயாகத்தான் ஏமாந்து போனாய்! உன் அந்தராத்மாவைக் கேட்டுப் பார்! அது உனக்குச் சரியான விடையளிக்கும்!”

பங்கஜம் வெட்கித் தலை குனிந்தாள். கண்களில் நீர் ததும்ப, ”ஆம், நீங்கள் சொல்வது முற்றும் மெய்தான்! என் திடசித்தத்திலும் தியாக புத்தியிலும் அபார நம்பிக்கை வைத்துக் கடைசியில் ஏமாந்து போனேன். உங்களிடம் என் தோல்வியை ஒப்புக் கொள்வதில் எனக்குக் கொஞ்சமும் அவமானம் இல்லை! உங்கள் தந்தியை நேற்றுப் படித்தவுடன் என் மன உறுதியெல்லாம் சிதறிப்போய் இடி விழுந்தவள்போல் ஆகிவிட்டேன். பலே பேர்வழி நீங்கள்! நல்ல நாடகம் நடித்தீர்கள்! ஆனால் எனக்கு இன்னுங்கூடச் சந்தேகந்தான். உங்கள் ஜாதகரீதிப்படி உங்களுக்கு உபயகளத்திரப் பிராப்தம் இருக்கிறதே! ஜாதகம் பொய் சொல்லுமா?” என்றாள்.

”நம் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் ஜாதகரீதிப்படிதான் நடக்கின்றனவா? ஜாதகம் கணிப்பதில் எவ்வளவோ தவறுகள் ஏற்படுகின்றன. அப்படித் தப்பாய்க் கணிக்கப்பட்ட ஜாதகத்தைப் பார்த்துக் கூறப்படும் பலன்களும் தப்பாகத்தானே இருக்கும்? எனக்கு என்றைக்குமே ஜாதகத்திலும், ஜோசியத்திலும் நம்பிக்கை இல்லை. நீயும் இந்த ‘உபய களத்திர’ யோசனையை விட்டு ஒழி. எனக்கு மன உற்சாகமும் ஆனந்தமும் ஏற்பட வேண்டுமென்றுதானே நீ என்னை மறு விவாகம் செய்து கொள்ளும்படி தூண்டினாய். அவை இரண்டையும் நான் இப்பொழுது வீணை வாசிக்கும் சமயத்தில் பரிபூரணமாய் அனுபவித்து வருகிறேன். நீயும் ஒரு சங்கீதப் பித்துத்தானே. என் வீணா கானத்தைக் கேட்டு நீயும் ரசித்து இன்புறுவாய் என்று நம்புகிறேன். இதோ பார். இப்பொழுது உன் எதிரிலேயே உன் சக்களத்தி வீணாவோடு கொஞ்சிக் குலாவப் போகிறேன். நீ ஏற்கனவே எனக்கு வாக்களித்தபடி பொறாமைப்படாமல் இருக்க வேண்டும் தெரியுமா?” என்று கண் சிமிட்டிக் கொண்டே கூறிவிட்டு அந்த அழகான மைசூர் வீணையை உறையை விட்டு எடுத்துச் சுருதி கூட்டினான்.

ஸ்ரீவத்ஸகுடைய விரல்களால் பிரேமையுடன் வருடிக் கொஞ்சப்பட்ட ‘வீணா’வின் தேகத்தினின்று கணீரென்று வெளிக் கிளம்பிய ‘சுந்தரி நீ திவ்யரூப’ என்ற கல்யாணி ராக கீர்த்தனை, பங்கஜத்தை இனிமையான நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தது. அவளுடைய உள்ளத்தில் என்றுமில்லாத சாந்தி நிறைந்தது. அவளுடைய நீண்ட நேத்திரங்களில் ஆனந்த புஷ்பம் துளிர்த்தது.

Painting Credit: http://anuragwatercolor.blogspot.in

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 15

ஆண்டாள் பிரியதர்ஷினி 

Image

1962, அக்டோபர் 10ம் தேதி பாளையங்கோட்டையில் பிறந்தார். தந்தை ஆ.கணபதி புகழ்பெற்ற கவிஞர். சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணவர் கவிஞர் பால ரமணி. நான்கு நாவல்கள், நான்கு குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல கவிதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. இலக்கிய சிந்தனை, காசியூர் ரங்கம்மாள் விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். நெல்லை இலக்கிய வட்டம், ‘எழுத்துலக சிற்பி’ என்கிற பட்டத்தை இவருக்கு வழங்கியிருக்கிறது. தேனீ இலக்கியக் கழகம் ‘கவிச் செம்மல்’ பட்டம் வழங்கியிருக்கிறது. கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களிலும் இவர் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. கோவை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின், நிலைய தலைவராகத் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

****

தோஷம் 

Image

ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது.

கதாநாயகி    : கல்யாணலட்சுமி

களம்              : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு.

பிரச்னைகள்: இரண்டு

காட்சி ஒன்று

”இது – கலாசார அதிர்ச்சி தரக்கூடியது. நீங்கள் சந்திக்க வேண்டிய சமூகப் பிரச்னைகள் ஏராளம். காறி உமிழ்வார்கள். வார்த்தையால் விளாசுவார்கள். ஊர்ப்பிரஷ்டம் செய்வார்கள். அது தரும் மன அழுத்தம் உங்களையே சிதைக்கக் கூடும். எல்லாவற்றையும் நினைப்பில் வையுங்கள். வாழ்த்துகள்…”

காலையிலேயே வந்திருந்த கல்யாணலட்சுமியிடம் சொல்லப்பட்ட வாசகம் இது – நூறாவது முறையாக. ஆலோசனை சமயங்களிலெல்லாம் மந்திரமாக ஓதப்பட்ட விஷயம்தான். சகலத்தையும் நிறைவேற்றி இன்று மொத்தமாகச் சொன்னபோது, சிரிப்பைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டாள் கல்யாணலட்சுமி.

”இத்தனை வயதுவரை என்னைத் துரத்தாத சமூகப் பிரச்னையா டாக்டர்? சமூகம் துளைத்துப் பார்த்தே என் உடம்பு முழுசும் சல்லடையாகி விட்டது. அது தராத மன அழுத்தமா? சமூகத்தைக் குப்பைத்தொட்டியில் போடுங்கள். காறி உமிழும் அதன் எச்சில் காய்ந்து விடும். குதர்க்க வார்த்தைகள் ஓய்ந்துவிடும். ஆனால் இந்த வரம் – ஜென்ம சாபல்யமல்லவா? மரித்துப் போயிருந்த எனக்கு உயிரூட்டி இருக்கிறீர்கள்… நன்றி டாக்டர்…”

ஒற்றை வளையல் தவழ்ந்த மருத்துவரின் கையை எடுத்து முத்தமிட்டாள் கல்யாணலட்சுமி.

காட்சி இரண்டு

அந்தக் கல்யாண அழைப்பிதழிலிருந்த நாகஸ்வர கோஷ்டியினர் சகலரும் குட்டி குட்டியாகக் கீழிறங்கினர். சுண்டுவிரல் அளவுக்கு நாகஸ்வரம். மேளம். தவில். சகலத்தையும் மூச்சைப்பிடித்து வாசித்தனர். ஊர்வலத்தின் முன்னால் நடந்தனர். சுட்டுவிரல் நீளத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கேந்தினவர்களின் கம்பீர நடை. உள்ளங்கை நீள ஊர்வல காரில் – பெண்ணும் மாப்பிளையும் பிடிப்பிள்ளையார் மாதிரி – ஒரு இன்ச் உயரத்தில் வெட்கமாக இருந்தார்கள். கல்யாணத்துக்கு விலாசம் சொல்லும் கலாட்டா, சிரிப்பு, கதம்ப வாசனை எல்லாமே லில்லிபுட் அளவில்.

போன மாசம்தான் பணியில் சேர்ந்த டைப்பிஸ்ட்டின் கல்யாணப் பத்திரிகை அது. கல்யாணலட்சுமி அதைக் கண்கொட்டாமல் பார்த்தாள். பார்க்கப் பார்க்க, சுவாரஸ்யம் வலைபின்னியது. மேஜையில் கன்னத்தைச் சரித்து – அழைப்பிதழை ஐம்பதாவது முறையாக வாசித்து முடித்தாள். சகலவாசகங்களும் மனப்பாடம். இதுமாதிரியான நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை ரசித்து ஏங்கிய முன் அனுபவம். ஒவ்வொரு தரம் வாங்கும்போதும் ‘நானும் ஒரு நாள் இதுமாதிரி விநியோகிப்பேன். திருமணக்களை சொட்டச்சொட்ட, வெட்கம் இழையோடப் பத்திரிகை தருவேன். குடும்பத்தோட வந்துருங்க. இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்… இன்னபிற கல்யாண அழைப்பிதழ் வசனங்களைச் சொல்லுவேன்…’ இப்படியான கனவு சுவாசம்… பதினெட்டு வருஷமாகக் கனவிலேயே குடியிருக்கிறது. அவளின் காலத்தில் ஒரு வசனத்தைக்கூடப் பிரயோகிக்கும் சம்பவம் நிகழாத விசனம். நம்பிக்கை இழை உயிரிழந்து கொண்டிருக்கிறது நாளுக்கு நாள். இனி? முற்றுப்புள்ளிதான்.

தேவாங்கு மாதிரி குட்டிகளுக்குக் கூடக் கல்யாணம் சுலபமாக நடக்கிறது – எந்தத் தடங்கலும் இல்லாமல். கல்யாணத்துக்கு அப்புறம், விடுப்பு முடிந்து வரும்போது – அதுகள் மூஞ்சியில் நூறு வாட்ஸ் பல்ப் மாதிரி தேஜஸ் வந்து தொலைக்கிறதே… அது என்ன இழவு ரசவாத வித்தையோ? இது கூடப் பரவாயில்லை. தேவாங்கும் பிள்ளை உண்டாகிப் பெற்றுப் பிழைத்துக் கையிலொரு குட்டியோடு, அம்மாக்களையோடு வலம்வருமே… கொடுத்து வைத்த நாய்கள். கல்யாணலட்சுமிக்குள் பொறாமை பொறி பறந்தது.

‘கண்விழிப்பதும் சோற்றில் கை நனைப்பதும், பேருந்துக் கூட்டத்தில் கூழாவதும், வியர்வை நாற்றத்தில் பாழாவதும், அலுவலக நாற்காலியைத் தேய்த்து, மாற்றமேயில்லாத மணித்துளியை அடைகாப்பதும், பெண் பார்க்கும் படலத்தில் வெட்கத்தைத் தேடி எடுத்து முகத்தில் அப்பிக் கொள்வதும், மாப்பிள்ளையின் தலையசைப்புக்கு ஏங்குவதும், மறுப்பு சுமக்கும் கடுதாசிகளை வெறுப்புடன் ஜீரணிப்பதும், பெருமூச்சும் பின்னிரவு அழுகையும் பிறரின் கல்யாணத்தில் வயிற்றில் தகிக்கும் பொறாமை அக்கினியில் வெந்து போவதும்தான் என் ஜென்மக்கடனோ? புருஷனின் ஸ்பரிசத்துக்கும் ஆண்மைத்தனமான வருடலுக்கும் மோகம் தரும் முத்தத்துக்கும் பித்தம் தரும் கொஞ்சலுக்கும் ஏங்கியே செத்துப் போவேனோ?’ நித்தமும் புழுங்குவாள் கல்யாணலட்சுமி.

‘ஒற்றை ஜீவனாகவே மரித்து விடுவேனா? என் அன்பை, என் நேசத்தை, என் பிரேமையை, என் காதலை, என் ஸ்நேகத்தை ஸ்வீகரிக்க ஜீவனே கிடையாதா? கிடைக்காதா? எனக்கான வேர்ப்பிடி மண் இல்லாமல் தரிசாகத்தான் போவேனா? அம்மா, அப்பாவுக்கப்புறம் நானும் நாலு சுவருமாக ஜீவிக்கவா? வீட்டின் பல்லியும் பாசியும் ஒட்டடையும் ஸ்டெனோ குறிப்பேடும்தான் என் சுவாசத்துணையா? உயிரோடு, மனசோடு, உணர்வோடு நெருங்க யாருமேயில்லாத அநாதைப் பிறப்பா நான்?’ கண்ணீரில் உருகுவாள் கல்யாணலட்சுமி.

இத்தனை வயசுக்கும் ஒற்றைப் பொம்பளையாயிருப்பதில் இன்னொரு கஷ்டமும் கூட. முப்பது வயசிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குழைவையும் மென்மையையும் தாரைவார்க்க ஆரம்பித்தாயிற்று. முகத்திலும் தாடையிலும் ஆங்காங்கே கனமான ஒற்றை முடியின் ரோம சாம்ராஜ்யம். மெதுமெதுவாக உடம்பு முழுவதும் ஒரு பிளாஸ்டிக் தன்மை. விறைப்பின் ஆக்கிரமிப்பு. தவிர்க்கவே இயலாமல் ஆம்பளைத்தனமான தடதடவென்ற நடை. எந்தக் கொம்பனைப் பற்றியும் கவலையேயில்லை என்கிற தெனாவெட்டான தோரணை. நளினம் தொலைத்த மூங்கில் முதிர்ச்சி. இளமையில் மென்மையாயிருந்த எனக்குள்ளிருந்து இன்னொரு நான் ஜனனம்.

புதுசாகக் கல்யாணமானதுகள் ஸ்கூட்டர், பைக் என்று இளமை ஜொலிக்கப் பறப்பதைப் பார்க்கும்போது மனசு நமநமக்கும். வெறுப்பாயிருக்கும். அப்படி  இறுக்கிப் பிடித்துப் பறக்க எனக்கு வாய்க்கவில்லையே! ஆதங்கம். ‘வேகமாய்ப் போய் முட்டிமோதிக் கவிழுங்கடா நாய்களா…’ மனசு அனிச்சையாகச் சாபமிடும். கல்யாணத்துக்குப் போனால் ‘ஏதாவது பிரச்னை வெடிக்காதா? இந்தப் பெண் வேண்டாம். இதோ இவளைக் கட்டிக் கொள்கிறேன்…’ திடீர்த் திருப்பமாகத் தாலி என் கழுத்தில் ஏறாதா? ஆயிரம் எதிர்பார்ப்பு கல்யாணலட்சுமிக்குள் முளைவிடும்.

அவ்வளவு ஏன்? பாத்ரூமில் குளிக்கையில் கையோடு ரகசியமாகக் கொண்டு வந்திருக்கும் மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு, கோத்திருக்கும் மஞ்சள் கிழங்கைக் கண்ணில் ஒத்திக்கொள்வதும், அதை வெற்று மார்பில் படரவிட்டுக் கண்ணாடி பார்த்துப் பூரிப்பதும், வெளியே வரும்போது கழறறி அலமாரியில் ஒளித்து வைப்பதும்கூட ரகசியக் கடமைதானே? இந்த முப்பத்தெட்டு வயசுக்குத் தேவையா இது மாதிரி திருட்டு சுவாசம்?

Image

”லக்னத்துலேர்ந்து எட்டாமிடம் சுத்தமில்லே…”

”களத்திர ஸ்தானம் நீசமாயிருக்கு…”

”மாங்கல்ய ஸ்தானம் பலமாயில்லியே ஜாதகத்துல. உங்க திசைக்கே ஒரு கும்பிடு…”

சகலரின் வசனமும் இதுதான். முதுகெலும்பில்லாத முட்டாள்கள். பிடரியில் இடித்துப் புறமுதுகிட்டு ஓடினவர்களை இழுத்துப் பிடிக்கவா முடியும்? அவனவன் சோறும் நீரும் ஏற்கனவே எழுதப்பட்டதுதானே? தோஷம் இல்லாத பெண்ணின் புருஷன் எவனாவது நூறாண்டு இருந்திருக்கிறானா? ஜாதகச்சிறை இங்கு மட்டும்தானே? பேசாமல் அமெரிக்கனோ, ஆப்பிரிக்கனோ கிடைத்தால் இழுத்துக்கொண்டு ஓடி விடலாம். இப்படியான நினைப்பில் ஆழ்பவள்தான் கல்யாணலட்சுமி.

பன்னிரண்டு கட்டங்களுக்குள் கையும் காலும் விரித்து அவளை ஆணியடித்து மாட்டியது மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் பாம்பாக மாறி, உயிரோடு அவளை விழுங்குவது மாதிரியும் இருக்கிறது. தப்பித்தல் இல்லாமல் எல்லாக் கிரகங்களுமே வேலியாக நின்று தொடர்ச்சியாகத் துரத்துவது மாதிரியும் இருக்கிறது.

”தோஷம் தோஷம்னு சொல்லாதீங்க தரகரே! பொண்ணு, மாசம் நாலாயிரம் சம்பாதிக்கறா… சமையல் அபாரம்…”

”ம்… இருக்கலாம். திருக்கணிதம், வாக்கியப் பஞ்சாங்கம் எப்படிப் போனாலும் செவ்வாய் தோஷம். ஏகதோஷம் – ஜாதகத்தை முன்னப்பின்ன மாத்தி எழுதி முடிச்சுடலாம்தான். தெரிஞ்சுடுத்துன்னா பிரச்னை. ஒரு லட்சம் ரொக்கம் குடுத்தா – ஒப்புக்க வெச்சுடலாம்…” ஆசைகாட்டினார் தரகர்.

களத்திர ஸ்தானத்தைச் சுத்தப்படுத்த ஒரு லட்சமா? புதர் மண்டிக்கிடக்கும் தரிசுநிலமா அந்தக் கட்டம்? அப்படியேனும் ஒரு மீசைக்குப் பொண்டாட்டியாகித் தாசி வேலை பண்ணவா? எவன்டா கண்டுபிடிச்சான் ஜாதகத்தை? தூத்தேறி.

”பொண்ணுக்கு வயசாயிடுச்சே…”

”முகம் முத்திப்போச்சு மாமி உங்க மகளுக்கு…”

”ரெண்டாம் தாரத்துக்குக்கூட இளசைத்தான் கேக்கறாங்க…”

பருவத்துக்கேற்ற வசனச்சாட்டை செருகல்.

”கல்யாணலட்சுமி மேடம். போன் உங்களுக்குத்தான்…” உலுக்கப்பட்டாள்.

”ஹலோ..?”

”எப்படி ஃபீல் பண்றீங்க லட்சுமி? கஷ்டமாயில்லியே? சந்தோஷமா இருக்கீங்களா?” எதிர்முனையில் மருத்துவர்.

”ம். ரொம்ப… ரொம்ப் கர்வமாயிருக்கேன்…”

வயிற்றுக்குள் ஐஸ்க்ரீம் மழை ஜிலுஜிலுவென்று நெளிந்தோடியது. சுகமின்னல் ஜனனம். இத்தனை நாளும் உணராத வித்தியாச அனுபவம். கனவை நிஜமென்று ஆக்கிக்கொண்ட கர்வம் – அவளுக்குள் குறுக்கும் நெருக்குமாகப் பாவு கட்டியது. வேறு யாருக்கும் தெரியாத ரகசியத்தைக் கர்ப்பம் சுமப்பது கர்வமாக இருந்தது. நிஜமா? நிஜம்தானா? என் கனவின் நீட்சியா? விடியலின் சூரியக்கதிரா? எனக்கே எனக்கா?

இப்போதெல்லாம் கடைக்குப் போனால் குழந்தைகள் பகுதியிலேயே குடியிருந்துவிடலாமா என்று மனசு கிறங்குகிறது. அந்த இடத்துக்கே ஒரு பாப்பா வாசனை வீசுகிறது. காற்று கூடப் பூ மாதிரி மெல்லிசாகப் பேசுகிறது. உள்ளங்கை அகலத்தில் பாப்பா ஜட்டி, பாப்பா சட்டைக்குள் சொர்க்கத்தின் முகவரி நெய்திருப்பதாகத் தெரிகிறது.

புருஷன் ஆசையைக்கூடத் தகனம் செய்துவிடலாம். ஆலாகப் பறக்கக் கூடிய அளவுக்குத் தகுதியேயில்லாத ஆசை என்று மனசைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், குழந்தை ஆசை? எனக்கே எனக்கென்று ஒரு குழந்தை. நானே வயிற்றில் சுமந்து அணு அணுவாக ரசித்து, வளர்ச்சியைச் சுகித்து, மசக்கையில் துவண்டு, மூச்சு முட்ட வயிறு பெருத்து, நிறை மாசமாகிப் பெற்றுப் பிழைத்துப் பூச்செண்டு மாதிரி கைநிறையக் குழந்தையை வாரியெடுத்து – அதன் தேவலோக வாசனையை உயிரெல்லாம் ஸ்வீகரிக்கும் வரம். இந்த இப்பிறவியில் கிடைக்குமா? பட்டாம்பூச்சியை – கண்திறக்கும் பாப்பாவைத் தரிசனம் செய்தால் பண்ணிய பாவமெல்லாம் கரையாதோ?

அன்றைக்கொரு நாள் பேருந்தில் கைக்குழந்தையோடு உட்கார்ந்திருந்தவளிடம் தயக்கமாகக் கேட்டு அவளின் குழந்தையை, உடம்பு நெகிழ நெகிழ மடியில் தாங்கிக் கொண்ட அந்த அஞ்சு நிமிஷத்தில் தலையோடு காலாகப் புல்லரித்தது. தொடைகள் வழவழத்தன. கண்ணீர் பொங்கியது. பரவசத்தில் லேசாய் ஒன்றுக்குக் கூடப் போய்விட்டது எனக்கு. குழந்தை… குழந்தை! என் மடியில் ஒரு குழந்தை என்று சந்தோஷத்தில் ஜுரமே வந்துவிட்டது.

என்னுடைய நினைப்பு தெரிந்த சமீப நாட்களாக அம்மாவுக்கு இந்தக் கவலை வேறு வயிற்றில் புளிகரைக்கிறது.

”அப்படி ஏதும் பண்ணிடாதேடீ. மானமே போயிடும்…” அம்மா மனசுக்குள் அரற்றுவது – சுவாசம் வழியாக வெளியேறி கல்யாணலட்சுமியின் காதுக்குக் கேட்கிறதுதான். ஆனால், வேறு வழி?

‘மதுரை அத்தை பொண்ணுக்கு ரெட்டைக் குழந்தைங்க பொறந்திருக்கே… அவளை வேணும்னா கேட்டுப் பார்க்கலாமா?’

ஆயத்தக் குழந்தையா என் தேவை? தத்தெடுத்ததைவிடப் பெத்தெடுக்கும் சுகத்துக்குதானே ஒற்றைக்கால் தவமிருக்கிறேன்? நானே கருத்தரித்து, வித்து தாங்கி, மார்னிங் சிக்னெஸ்ஸில் கிறுகிறுத்து, குமட்டி, வாந்தியெடுத்து, வலியெடுத்துப் பெற்றுப் பால் கொடுக்க, முலைக்காம்பை அது கடிக்கும்போது கிடைக்கும் சுகவலியை ஸ்வீகரிக்க, நானே பெற்றெடுக்கும் சுகம்தானே என் தேடல்? பிரசவவலி என்னைப் பிழிந்தெடுக்க வேண்டும். உயிர் ஜனனத்துக்காக உடல் முறுக்க வேண்டும். வியர்க்க வேண்டும். விறுவிறுக்க வேண்டும். வெள்ளை முத்தாகப் பால் சொட்ட வேண்டும். ரோஜா இதழால் குழந்தை சப்பிக் குடிக்க வேண்டும். குளுகுளுவென்று உடம்பு முழுசும் குற்றாலம் குடியிருக்க வேண்டும்.

என்னை நானே தாய்மையில் குளிப்பாட்டிக் கொள்ள வேண்டும். எனக்கு நானே தரும் வரம் அது. எனக்கு நானே சூட்டிக் கொள்ளும் கிரீடம் அது. என் நேசத்தின் நீட்சி அது. என் பாசத்தின் பரப்பளவு அது. என் உயிரைச் சுமந்திருக்கும் ஜீவப் பெட்டகம் அது.

சமூகம் என்னைப் பிய்த்துச் சுவைத்து மென்று தின்று துப்பினாலும் பரவாயில்லை. எல்லா வாசலும் அடைக்கப்பட்ட சமூகக் கல்லறையில் எனக்கான சுவாசக் குழாயை நானே அமைத்துக் கொண்டது நியாயம்தான். மனைவி வரம்தான் மறுக்கப்பட்டது. அம்மா அவதாரம் எனக்கு நானே தரும் வரம். ஒற்றை மனுஷியாக்கி என்னைச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் தள்ளியவர்களுக்கு நான் தரும் அக்கினிக் குளியல். கட்டங்களுக்குள் சிக்கிய சகதிச் சமூகத்தை நசுக்க வந்த தேவன் என் வயிற்றுக்குள் கோயில் கொண்டிருக்கிறான்.

”என்ன மேடம்? பூரிப்பாயிருக்கீங்க? கல்யாணம் நிச்சயமாயிருச்சா?”

”ம்ஹும். கர்ப்பம் நிச்சயமாயிருச்சு…”

அதிர்ச்சியில் குளித்தாள் கேள்வியை எழுப்பியவள். நிறைவாகச் சிரித்தாள் கல்யாணலட்சுமி.

காட்சி மூன்று

”பொண்ணு கல்யாணம் பத்திக் கொஞ்சம்கூடக் கவலையில்லாமல இருக்கேளே…”

”என்னடி பண்ணட்டும்? அவ கொடுப்பினை அவ்வளவுதான். களத்திரம் சுத்தமில்ல. தோஷம் நல்லதுக்குதான்னு வெச்சுக்க. அவ சம்பாத்யம் வேணும்டி. ஒரு கால பூஜைகூட இல்லாத கோயில் சம்பாவனைல மூணு ஜீவனம் நடக்குமாடி…”

பூட்டிய கதவு தாண்டிக் காதுக்குள் நுழைந்த வார்த்தைகளின் குணம், மணம், தன்மை கல்யாணலட்சுமிக்கு அடையாளம் தெரிந்தது. கதவு திறந்தாள் அம்மா.

”வந்துட்டியாடி? பாலை வார்த்தே… பஸ் ஸ்டாண்டிலே வந்து பார்க்கறதுக்கு அப்பா கிளம்பிண்டிருக்கார்…”

”………….”

”முகம் ஜொலிக்கிறதே, பிரமோஷன் கிடைச்ச மாதிரி…”

”பிரமோஷன்தான்…”

”நிஜம்மாவாடீ?”

”ம்… மாமனார் – மாமியார் ஆகாமலே நீங்க தாத்தா – பாட்டி ஆகப்போறீங்க…”

”அடிப்பாவி… நினைச்சதைப் பண்ணிட்டியே. குடிமுழுகிடுச்சே. அருவருப்பா இல்லியா? ஏன்னா… இங்க சித்த வாங்கோ…” பதறினாள் அம்மா.

களத்திரஸ்தானாதிபதி சரியில்லையென்றால் புத்திரஸ்தானாதிபதி சரியாயிருக்க முடியாதா? சரிபண்ண முடியாதா?

புத்திரஸ்தானத்தை நானே ஸ்புடம் போட்டுக் கொண்டேன். விதை நெல் – கடன் வாங்கி.

நவாம்சம், ராசிக்கட்டம் எல்லாவற்றிலும் ஸ்டெதாஸ்கோப்பும் ஊசியும் உட்கார்ந்திருக்கும் புதுஜாதகம் இது. ஊசியே என் கணவன். டாக்டரே தரகர். வயிற்றில் நீந்தும் இரவல் வித்து… என் உடம்பு முழுசும் சொர்க்கத்தைக் காப்பியம் எழுதுகிறது.

அம்மா, அப்பா என்று இரண்டு முகம் கொண்ட புது அம்மன் நான். ஜாதகமாம் ஜாதகம். பொல்லாத ஜாதகம்.

***

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 11

வாஸந்தி 

Imageதமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து, தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை. டெல்லிக்கு இடம் பெயர்ந்த பிறகு அரசியல் நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்திலும் வரலாற்றிலும் பட்டம் பெற்றார். நார்வே நாட்டிலிருக்கும் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இவருடைய நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே’ தமிப் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ‘பஞ்சாப் சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருடைய ‘வாஸந்தி சிறுகதைகள்’ நூலுக்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது. இவருடைய சிறுகதைகளும் நாவல்களும் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

தேடல்  

கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. உட்கார்ந்த இடத்தை வெளிப்படுத்தாமல் பட்சிகள் குரல் எழுப்பின கூ…கூ… கீ…கீ… என்று சளசளத்தன. அவளுடன் அந்தரங்கம் பேச வந்தன. அவளுக்குத் தெரியும் மொட்டை மாடிப்படிகளில் ஏறிச் சென்று நின்றால் மரங்கள் தாழ்ந்து விடும். பட்சிகளை எத்தனை தேடினாலும் கண்ணில் படாமல் மாயமாய் இலைகளுக்குள் பதுங்கிக் கொண்டு கவி பேசும்.

குழந்தை சிணுங்கிற்று. ‘உஷ், நீ உன் குரலை எழுப்பாதே’ என்றாள் அவள் செல்லமாக. மார்போடு அணைத்து முழங்கால்களைச் சுற்றி கைகோர்த்து அமர்ந்தாள். பின்னால் அவனது காலடி சத்தம் கேட்கிறதோ என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள். கொல்லையிலிருந்து வாசல் வரை கப்சிப்பென்று இருந்தது. குழந்தை அழுதால் அவனுக்குப் பிடிக்காது. அது இருப்பதன் பிரக்ஞை கூட அவனுக்கு கிடையாது என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் குரல் எழும்போது திடுக்கிடுவான். அவளுக்கு மட்டுமே அது சொந்தம் போல் இருந்தது, அவனுடைய உணர்வுகளுடனோ உடலுடனோ சம்பந்தமில்லாமல். அவளது எண்ணங்களில் ஜனித்து உணர்வுகளோடு கலந்து. அதற்குப் பெயர் கூடக் கிடையாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல் அவளது கற்பனையில் பெயர்கள் தோன்றும். ஒரு நாள் நிலா, இன்னொரு நாள் ரோஜா, அல்லி, மல்லி, ஒரு நாள் காளி என்று கூடத் தோன்றிற்று. ஏன் கூடாது? அவளை அவன் எத்தனை முறை பத்ரகாளி என்று கூப்பிடுகிறான்! பத்ரகாளி என்பதற்கு ஆண்பால் என்ன என்று அவள் யோசித்தாள். குழந்தை மீண்டும் சிணுங்கிற்று. ‘உஷ் உஷ்’ என்று சமாதானப்படுத்தினாள். ‘பாட்டுப் பாடவா?’ என்றாள் குனிந்து மென்மையாக. கண்களை மூடி மனசுக்குள் முனகிக் கொண்டாள். மனசு முழுவதும் பொலபொலவென்று மல்லிகை மொட்டுகள் அரும்பி மலர்ந்தன. குப்பென்று எழுந்த வாசனை நெஞ்சை அழுத்திற்று. அதை உள்ளுக்கிழுத்து கண்களைத் திறந்த போது மரக்கிளைகளுக்கப்பால் புதிது புதிதாக வர்ணஜாலங்கள் தெரிந்தன. பதுங்கியிருந்த பட்சிகள் எட்டிப் பார்த்தன. பஞ்சபூதங்களும் இசைந்து சரிகமபதிநிஸ என்று சுருதி கூட்டினாற்போல் மௌனக் குகையில் புதையுண்டிருந்த வார்த்தைகள் வெடித்துச் சிதறி வரிவரியாக நெளிந்து மனத்திரையில் விழுந்தன. பனி மழையில் நனைந்த குளிர்ச்சியில் உடல் தண்ணென்றிருந்தது.

குழந்தையின் சிணுங்கல் அடங்கிப் போயிற்று. பேச்சு மூச்சில்லாமல் இருந்தது. அவளுக்குத்தான் களைத்து விட்டது. சற்று முன் வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன என்று சுத்தமாக நினைவில்லாமல் போயிற்று. வெற்றிடமாகிப் போன மனத்துடன் அவள் அமர்ந்திருந்தாள். இப்படித்தான் ஆகிறது எப்பவும். அவளுக்கு அம்மாவைப் பெற்ற பாட்டியின் நினைவு வந்தது. எண்பது வயதுப் பாட்டியைப் பார்த்துக் கொள்ளும் பொறுமை யாருக்கும் இல்லை. பாட்டியும் சும்மா இருக்கமாட்டாள். இரவு நேரத்தில் வீட்டுக்குள்ளும் கொல்லையிலும் அலையோ அலை என்று அலைவாள். என்ன தேடுவாள் என்று தெரியாது. கண் எப்படித் தெரிகிறது என்று அதிசயமாக இருக்கும். சில சமயம் வெல்லக்கட்டி, குழந்தைகள் பதுக்கியிருக்கும் சாக்லேட் அல்லது மோர், பால் எது இருந்தாலும் அவளுக்கு வாயில் போட வேண்டும். போடும்போது பாத்திரம் உருளும். சட்டி உடையும். அல்லது அவளே விழுந்து அடிபட்டுக் கொள்வாள். மாமியும் மாமாவும் கத்தோ கத்து என்று கத்துவார்கள். திருட்டுக் கிழம் என்று சபிப்பார்கள். ‘கிருஷ்ணா ராமான்னு கிடக்க வேண்டிய வயசிலே இது என்ன தீனிச் சபலம்’ என்று கத்தியபடி மாமா ரத்தத்தைத் துடைத்து மருந்து போடுவார். பாட்டி எதுவுமே காதில் விழாத மாதிரி உட்கார்ந்திருப்பாள். ‘ஏந்திருடரே… ஏந்திருடரே’ என்ற கத்தல் யாருக்கோ, தனக்கில்லை என்பது போல கண்ணை மூடிக் கொள்வாள். அவளுக்குத் தான் செய்தது ஞாபகம் கூட இல்லை என்று தோன்றும்.

எல்லாமே பழக்கத்தால் வருவது என்று தோன்றிற்று. மௌனமும் மறதியும் கூட. பாடப் பழகுவது போல பேசாமல் இருப்பதையும் பழகிக் கொள்ளலாம். ஆசைகளை அழித்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பழக்கம் ஏற்பட வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும். பல சமயங்கள் குழந்தை அழும்போது அவன் போடும் கூச்சலுக்காக, அதைத் தூக்கிக் கொண்டு அவள் ஆற்றங்கரையோரமோ அல்லது மாந்தோப்புக்கோ செல்வாள். மறந்து போய் அங்கே எங்கோ புதரில் அதை விட்டுவிட்டு வந்து விட்டதைப் போல கனவு வரும். எது நிஜம் எது கனவு என்று புரியாமல் நெஞ்சம் தடுமாறும். எத்தனை நாட்களுக்கு, அவனுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று குழந்தையைச் சுமந்து கொண்டு இப்படித் திரியப் போகிறோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. அவனது கட்டுப்பாடுகளையும் மீறி அது எப்படி ஜனித்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அது அவளுக்கு வேறு ஒரு பிரபஞ்சத்தைக் காட்டும் அற்புதம். அதனாலேயே அதை அவனிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகரித்தது. கிட்டத்தட்ட பாட்டியின் வெறியைப் போல, அவளது நேரத்தை, சிந்தனையை ஆட்கொண்டது. இதை எப்படி நிறைவேற்றுவது என்ற யோசனையில் நேரம் போவது தெரியாமல் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

”என்ன எப்ப பார்த்தாலும் ஏதோ பெரிய யோசனையிலே உட்கார்ந்திருக்கே?” என்று அவன் நையாண்டி செய்வான். அல்லது தான் சொல்வதை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிற எரிச்சலில் கேட்டிருக்கிறான்.

Image

”ஒண்ணுமில்லே” என்பாள் அவள். அப்படி அவன் கேட்பதும், அப்படி அவள் பதில் சொல்வதும் பழக்கமாகிப் போயிருந்தது. அந்த ‘ஒண்ணுமில்லே’யில் பலவித பயங்கள் புதைந்திருந்தது அவனுக்குத் தெரியாது. அவளை ஆட்கொண்டு வரும் வெறியை அடக்கவே முடியாமல் போனால் என்ன செய்வது என்ற அவளது பீதியை அவனால் உணர முடியாது என்று தோன்றிற்று. மீராவுக்கும் ஆண்டாளுக்கும் கூட இப்படிப்பட்ட வெறி இருந்திருக்கும் என்று தோன்றிற்று. அவர்களைப் போல தன்னைக் கற்பித்துக் கொள்வது சுகமாக இருந்தது. துளசி மாலையை அணிந்து கண்ணாடி முன் அழகு பார்த்து, ‘உன்தன்னோடுற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்கொள்வோம்’ என்று விலகிப் போவது எத்தனை சௌகர்யம்! அழுகைச் சத்தம் கேட்கக்கூடாது, பாட்டுச் சத்தம் கேட்கக் கூடாது என்று கட்டளையிடாத ‘உத்தமன் பேர்பாடி’ தப்பித்துக் கொள்வது எத்தனை சுலபமான வடிகால்!

புருஷனும் வேணும், புள்ளையும் வேணும் என்றால் இப்படித்தான் பிசாசைப்போல் அலைய வேண்டும். புதருக்குள் மறைக்க வேண்டும். எங்கே மறைத்தோம் என்பது மறந்து போனால் கதை முடிந்து போகும். பிறகு ஆசையில்லை. வர்ணஜாலங்கள் இல்லை. மந்திரச் சொற்கள் இல்லை. தரிசனங்கள் இல்லை.

”ஜனனீ!”

அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தது. அவனை எதிர்கொள்ளும்போது அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில்களைத் தயார் செய்ய ஆயத்தமானாள். துளசி மாடத்தில் அம்மா நீர் வார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. தயக்கமேற்பட்டது. அம்மா, நீதான் அவசரப்பட்டே, செத்துடுவேன்னு பயமுறுத்தினே. நா செத்தப்புறம் உன்னை யாரு பாத்துப்பான்னு தினமும் துளைச்சே.

“ஜனனீ!”

வரேன், வரேன். வராம எங்க போக முடியும். உங்களைத் தவிர எனக்கு வேற யார் இருக்கா? எனக்கு நீங்க தேவை. உங்க துணை தேவை. அம்மா உரமேத்தி வெச்ச பாடம் இது. பொட்டை நெட்டுரு போட்ட பாடம். எனக்கு மீறத் தெரியாது. வரேன்.

”ஜனனீ!”

அவள் மெள்ள, மிக மெள்ளத் திரும்பினாள். ”உன்னை எங்கெல்லாம் தேடறது? உள்ளே வா. சாப்பாட்டு நேரம்” என்று கடுகடுத்தாள் வார்டு ஆயா.

”இல்லே உள்ளே வரல்லே நா” என்றாள் அவள் பீதியுடன்.

”நல்ல வார்த்தையிலே சொன்னா நீ கேட்க மாட்டே” என்று ஆயா தோளைப் பிடித்து இழுத்தபோது அவள் ஆட்டுக் குட்டியைப் போல் பின் தொடர்ந்தாள். வராந்தாவிலும் கூடத்திலும் நின்றிருந்த பெண்களின் முகங்களைப் பார்க்க பயந்து தலைகுனிந்தபடி நடந்தாள்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும்.

”என்னது?” என்றாள ஆயா.

”ஒண்ணுமில்லே.”

யாரோ கடகடவென்று சிரித்தார்கள். பழைய கோவலன் கண்ணகி சினிமாவில் வரும் கண்ணாம்பா போல. டி.வி.யில் காட்டியபோது பார்த்திருக்கிறாள். ”எரியட்டும்! எரியட்டும்..!” பின்னால் அட்டை மாளிகைகள் எரிந்த மதுரை சாம்பலாகும் – தலைவிரி கோலமாக கண்ணாம்பா ஹஹ் ஹஹ்ஹா… சிரிப்பு தொத்திக் கொண்டது போலிருந்தது. சங்கிலித் தொடர் போல் வெளிப்பட்ட சிரிப்பு கூரையில் எதிரொலித்துக் கூடம் அதிர்ந்தது. அவளுக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ஓட்டமும் நடையுமாக ஆயாவைப் பின் தொடர்ந்தாள்.

”உம் உம், வாங்க வாங்க.”

மேஜை மேல் வைத்திருந்த அண்டாக்களிலிருந்து பீங்கான் தட்டுக்களில் களிபோல் சோறும் தோல்போல் சப்பாத்தியும் பருப்புக் குழம்பும், பொரியலும் விழுந்தன. அவள் தட்டை எடுத்துக் கொண்டு மாமரத்தைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டுக்குச் சென்று அமர்ந்தாள். சாப்பிட ஆரம்பிக்கும் சமயத்தில் சாப்பாட்டறையில் தட்டுக்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டதில் கையிலிருந்த தட்டிலிருந்து பொரியலும் சோறும் அவளது புடவையில் தெறித்தன. அவள் வார்டைச் சேர்ந்த அம்புஜமும் சாந்தாவும் ஒருவர் முடியை மற்றவர் பிடித்து இழுத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”ஏய் பேய்களா, நிறுத்துங்க உங்க சண்டையை” என்று ஆயா அலற, இரண்டு மூன்று நர்சுகள் வந்து பிடித்து விலக்கினார்கள். சாந்தா அம்புஜத்தைக் குரோதத்துடன் பார்த்தாள் – கொலைவெறி தெரிந்தது பார்வையில்.

”நம்ம தலையெழுத்து. இதுங்களோடு மாரடிக்க வேண்டியிருக்கு” என்று ஆயா தலையிலடித்துக் கொண்டாள். ”நானும் ஒருநாள் இங்கே பேஷண்டா வந்தாலும் வந்துருவேன்”.

ஜனனிக்கு உடம்பு லேசாக நடுங்கிற்று. தட்டைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. தட்டைப் படிக்கட்டில் வைத்து இரண்டு கைவிரல்களையும் கோத்துக் கொண்டாள். மார்பு படபடத்தது. ரத்தம் சூடேறி மண்டைக்குப் போய்விட்டது போல் இருந்தது. புழுங்கி மூச்சிறைத்தது. மாமரத்து இலைகள் அசைக் காணோம். எல்லாம் ஸ்தம்பித்து உறைந்திருந்தன. பிரபஞ்சமே உறைந்திருந்தது. யாரோ “ஃப்ரீஸ்!” என்றாற்போல. அவள் முகத்தை முழங்கால்களில் கவிழ்த்துக் கொண்டாள். கூடத்து சத்தங்கள் ஓய்ந்து விட்டன. அவரவர்கள் மூலைக்கு மூலை உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”என்ன ஜனனிம்மா, சாப்பிடலியா?” அவள் சுவாரஸ்யமில்லாமல் நிமிர்ந்தாள். கக்கூஸ் கூட்டும் அஞ்சலை நின்றிருந்தாள் வெற்றிலை மென்றபடி. இவளுக்கு வெற்றிலை வேண்டும் எப்பவும். தற்காப்புக் கவசம் மாதிரி. அவன் விடாமல் சிகரெட் புகைக்கும்போது அவளுக்கு அப்படித்தான் தோன்றும். அது ஒரு கவசம். உணர்ச்சிகளை மறைக்க. இயலாமையை மறைக்க. அதிகாரத்தின் அடையாளம் கூட. ‘நீ புகைச்சுடுவியா என் எதிர தைரியமா?’ என்பது போல, பதிலுக்கு வெற்றிலையையாவது அஞ்சலைபோல மென்றிருக்கலாம் என்று இப்போது தோன்றிற்று.

”என்ன சாப்பிடலே?”

அவள் பொம்மை போல தட்டை எடுத்துச் சோற்றை அளைந்தாள்.

”அவருக்கு சாதம் இப்படி இருந்தா பிடிக்காது.”

”பின்னே எப்படியிருக்கணுமாம்?”

”மல்லிகைப் பூவா ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டாம.”

”இல்லேன்னா என்ன செய்வாரு?”

”இப்படி சாந்தா தட்டை விட்டெறியலே, அப்படி விட்டெறிவார்.”

அஞ்சலை சிரித்தாள்.

”பின்னே அவரில்லே இங்கே வந்து இருக்கணும்!”

”ஐயையோ, வேண்டாம் பாவம்!”

அஞ்சலை படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள், ”ஏனாம், வந்து இருந்து பார்க்கட்டுமே இங்கே எப்படியிருக்குன்னு.”

”அவரும் வந்துட்டா, நா வீட்டுக்கு எப்படிப் போறது?”

”சில சமயம் நல்லாத்தான் பேசறே” என்று அஞ்சலை இழுத்துப் பேசினாள். ”சொல்லு, புருஷன் மேல ரொம்பப் பிரியமா?”

ஜனனி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘உனக்கு மட்டும் சொல்றேன்’ என்கிற முகபாவத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

”என்..?” என்றாள் அஞ்சலை லேசாக.

ஜனனியின் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.

”என் குழந்தையைக் கொன்னுட்டார்.”

”என்னது?” என்றாள் அஞ்சலை திடுக்கிட்டு. ”எப்படி, ஏன்?”

”எப்படித் தெரியுமா? இப்படி” என்று தட்டில் இருந்த சப்பாத்தியை இரண்டாகப் பிய்த்து எதிரும் புதிருமாகப் போட்டாள். ”மகாபாரதத்திலே ஜராசந்தனை பீமன் பிச்சுப் போடல்லே அது மாதிரி.”

அஞ்சலை ஒரு வெற்றிலைச் சுருளை வாயில் திணித்துக் கொண்டாள்.

”நா என்னைத்தைக் கண்டேன் அதெயெல்லாம் – எதுக்குக் கொல்லணும்?”

”பிடிக்கலே. அது அழுதா பிடிக்கலே. சிணுங்கினா பிடிக்கலே. நா வெச்ச பாசம் பிடிக்கவே. அதே கவனமா இருக்கேனாம். அவரைக் கவனிக்கக் கூட நேரமில்லாம.”

அஞ்சலை பேசாமல் அவளையே பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள்.

”சரி, நீ சாப்பிடு தாயீ, இன்னொரு நாளைக்குப் பேசுவம்.”

”நா சொன்னது நிஜம். பொய்யில்லே” என்றாள் அவள். ”அவர் அப்படிப் பண்ணுவார்னு எனக்குத் தெரியும். எத்தனையோ நாள் குழந்தையைப் புதர்லே கொண்டு போய் மறைச்சு வைப்பேன். அப்புறம் எங்கே வெச்சோம்னு மறந்து போய் புதர் புதராத் தேடுவேன்.”

”நீ சாப்பிடு தாயீ.”

”நா சொன்னது நிஜம்.”

”சரி சரி. நா நம்பறேன். நீ சாப்பிடு”.

அஞ்சலை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடாவிட்டால் ஆயா திட்டுவாள். பிறகு மத்தியானம் தூங்காவிட்டால் திட்டுவாள். இந்தத் திட்டுக்கு உடம்பும் மனசும் பழகிவிட்டது. மௌனத்துக்குப் பழகினது போல. திட்டு கேட்க்காவிட்டால்தான் என்னவோ போல் இருந்தது. ‘எழுந்திரிங்க எழுந்திரிங்க’ என்று சத்தம் கேட்டதும்தான் உடல் எழுந்தது. ‘பல் விளக்குங்க’ என்றதும் பல் விளக்கிற்று. ‘குளியுங்க’, குளித்தது. ‘சாப்பிடுங்க’, சாப்பிட்டது. ‘தூங்குங்க’, தூக்கம்தான் கட்டளைக்கு அடிபணிய மறுத்தது. மூடிய கண்களுக்குள் பிசாசுகளை எழுப்பி விட்டது. அவை போட்ட ஆட்டத்திலும் செய்த துவம்சங்களிலும் ஏற்பட்ட வேதனையில் அவள் அலறுவாள். அழுவாள். ஏன் அழறே?

என் குழந்தை. என் குழந்தை.

என்ன உன் குழந்தைக்கு?

அதைக் காணோம்.

இப்ப தூங்கு, நாளைக்குத் தேடுவோம். ஊசி குத்துவார்கள்.

நாளைக்கும் அதற்கடுத்த நாளும் குழந்தையைப் பற்றியே மறந்து போகும். அதை நினைத்து இப்போது துக்கமேற்பட்டது; ஆதார உணர்வுகளையே இழந்து வருவது போலத் தோன்றிற்று. சருமம் கூட முன்பு போல மிருதுவாக இல்லை. புறங்கையும் புறங்காலும் கட்டட வேலை செய்பவள் போல் சொரசொரத்து பாளம் பாளமாகத் தெரிந்தது. கட்டடத்துக்குள் நடக்கும் போது கண்ணாடிக் கதவில் தெரியும் அவளது உருவம் பீதியை அளிக்கிறது. அன்று டாக்டரின் அறைக்குச் சென்ற போது கழிவறையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிரதி பிம்பத்தைப் பார்த்து அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நானா? அது நிச்சயம் வேறு யாரோ. அல்லது அவளுள் ஏதோ ரசாயன மாற்றம் ஆகியிருக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ‘டாக்டர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைட்’ கதை படித்திருக்கிறாள். நல்லவனும் கெட்டவனும், அழகனும் குரூபியும் ஒரே ஆளிலிருந்து வெளிப்படும் பயங்கரம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவளது நிஜ வாழ்வில் அது உண்மையாகும் என்று அவளுக்குத் தெரியாது. கல்யாணமான பிறகு அவன் ஒரு சமயம் குழைவதும் ஒரு சமயம் அனலைக் கக்குவதும் அந்தக் கதையை ஞாபகப்படுத்தும். வெளி உலகத்திடம் அத்தனை இனிமையாக இருப்பவன் அவளிடம் மட்டும் ஏன் அப்படி இருக்கிறான் என்று குழப்பும். அவனுடைய குற்றச்சாட்டுகள் கூடக் குழப்பும். நீ அதிகப்பிரசங்கி. மேதாவிங்கிற நினைப்பு உனக்கு. உன் சமையல் நன்னால்லே. புருஷன்ங்கற மதிப்பு இல்லே. உன் கடமை என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம் – காரணம் புரியாமல் குற்ற உணர்வு ஏற்படும்.

சரி. சரி. சரி.

புத்தகம் இல்லை. ரேடியோ இல்லை. டி.வி. இல்லை. கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தியாச்சு. சினேகிதாள் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டுப் புழுங்கிச் செத்த அவதியில், மூடிய அறைக்குள் அது ஜனித்தது. ‘பரஸுரே’ என்று தான்ஸேன் பாடியபோது மழை பொழிந்தது போல, அதன் குரல் கேட்ட மாத்திரத்தில், அவளது குண்டலினி உசுப்பப்பட்டு உள்ளமெல்லாம் பிரகாசித்தது. ஒரு ஜ்வாலையில் வீற்றது போலாகியது.

ஒளிக்க முடியவில்லை. குரல் எழுப்பிற்று. நான்கு பேர் கவனத்தைக் கவரும்படி குரல் எழுப்பிற்று. அவனுக்குக் கோபம் வந்தது. அதையும் மீறி அது குரல் எழுப்பியதுதான் ஆச்சரியம். ஒருநாள் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போயிற்று! குரலைக் காண்பிப்பியா? உனக்கு இத்தனை திமிரா? அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தாள். ஜராசந்தனுடன் போர் செய்யும் பீமன் போல் தெரிந்தான். அவன் அடிக்க அடிக்க அது செத்துச் செத்து திரும்பத் துளிர்த்தது. வானத்தை முட்டும் பீமனாய் அவன் நின்றான். சரக், சரக் – கிழியட்டும். ஜராசந்தன் மாதிரி – இரண்டாகத் தூக்கி வீசி எறிந்தான்.

அவள் விழி பிதுங்கிற்று. நாபியிலிருந்து ஒரு கேவல் எழுந்து தொண்டையை அடைத்தது. தேகம் முழுவதும் பற்றி எரிந்து பத்ரகாளியாக வீறு கொண்டு எழுந்தது. எல்லை மீறி ஆத்திரமும் கோபமும் எழ ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து விடுவது போல முறுக்கிக் கொண்டன.

“என்ன பண்றேள்? எங் குழந்தை. எங் குழந்தை. சாகடிக்கிறேளா? எப்பேர்ப்பட்ட ராட்சசன் நீ. சண்டாளன். நீ மனுஷனா? மனுஷனா?

கையில் கிடைத்ததை வைத்து அவன் முதுகை முகத்தை மண்டையைப் பதம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

‘பத்ரகாளீ, பத்ரகாளி! ராட்சஸி.” திமுதிமுவென்று அக்கம்பக்கத்து ஜனங்கள் நுழைகிறார்கள். அந்தக் கொலைகாரனை எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள்.

”பாருங்கோ பாருங்கோ.” அவன் முதுகை, கன்னத்தை, மண்டையைக் காட்டுகிறான். அவளது கைகளை யாரோ கட்டுகிறார்கள். அவன் முதுகை அணைத்துச் சமாதானப்படுத்துகிறார்கள். குழந்தை என்ன ஆயிற்று என்று யாருக்கும் கவலையில்லை.

அவள் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து சரம் சரமாய் நீர் வழிந்தது. முடியலே முடியலே. என்னாலே இங்கே இருக்க முடியலே. அழைச்சுண்டு போயிருங்கோ. நா பண்ணது தப்பு. இனிமே ஒழுங்கா இருக்கேன். அதற்கு மேல் தாங்க முடியாது போல அவள் விசித்து விசித்து அழுதாள். அவன் முகமே மறந்துவிடும் போல் இருந்தது. அஞ்சுகத்தையும் சாந்தாவையும் கோகிலாவையும் மற்றவர்களையும் பார்க்க வீட்டிலிருந்து வருகிறார்கள். அவளுக்குத்தான் யாருமில்லை. அவன் வந்து எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

”நா வீட்டுக்குப் போறேன் டாக்டர். எனக்கு ஒண்ணுமில்லே. நன்னா இருக்கேன். இப்ப என் வீட்டுக்காரரை வந்து கூட்டிப்போகச் சொல்லுங்கோ.”

”இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா.”

இன்னும் எத்தனை நாள்? எத்தனை நாள்? மூச்சு முட்டிற்று. நாள் முழுவதும் ஓலங்களும் சிரிப்புகளும் அழுகைகளும் சண்டைகளும். ”உனக்கு இன்னும் மனநிலை தெளியணும். மறுபடி வயலென்ட் ஆயிட்டீன்னா?”

மாட்டேன். மாட்டேன், என்னை நம்புங்கோ. அப்படியெல்லாம் நடந்துண்டதுக்கு வெட்கப்படறேன்.

”அவங்க பயப்படறாங்க. கூட்டிட்டுப் போக மாட்டேங்கறாங்க.”

‘ஓ’ என்று அலற வேண்டும் போல் இருந்தது. முன்பெல்லாம் குழந்தையை அவனிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது என்று தீவிரமாக யோசித்தது போல இப்போது இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். எப்படித் தப்பிப்பது? பெரிய பெரிய பூட்டிய இரும்புக் கேட்டுகள். காவல்காரர்கள். இரவில் தூக்கம் வராமல் திட்டங்கள் தீட்டினாள். காலையில் தலையை வலித்தது. சாப்பிடப் பிடிக்காமல் வாந்தி வந்தது.

கண்டவர்களிடமெல்லாம் புலம்பத் தோன்றிற்று.

”அஞ்சலை, நா வீட்டுக்குப் போகணும். இங்க இருக்க முடியலே என்னாலே.”

”மறுபடியும் அந்தப் புருஷன்கிட்டேயா?”

”பின்னே யார்கிட்ட? எத்தனை புருஷன் இருக்கான் எனக்கு.”

”புடிக்காத புருஷன் கிட்ட போயி என்ன செய்யப் போற தாயீ. அவன் மறுபடி இங்க அனுப்புவான்.”

”மாட்டார். நா ஒழுங்கா இருப்பேன். சொன்னபடி கேட்பேன். வாயைத் திறக்க மாட்டேன். அவருக்குப் புடிச்ச சமையலைச் சமைச்சுப் போடுவேன். மல்லிகைப் பூ மாதிரி இட்லி பண்ணத் தெரியும் எனக்கு.”

அஞ்சலை இடுப்பில் கையை வைத்துக் கொண்டாள் ராணி மங்கம்மா மாதிரி. பிறகு அக்கம்பக்கம் பார்த்து மெள்ளச் சொன்னாள். ”நீ வெளியிலே போறதுக்கு நா உதவி செய்யறேன். ஆனா மறுபடி அந்த ஆள்கிட்ட போய் சாவாத.”

”வேற எங்க போவட்டும்? பிறந்த வீட்டிலே யாரும் இல்லே. என் படிப்புக்கு யார் வேலை குடுப்பா?”

”மல்லிப்பூ மாதிரி இட்லி பண்ணுவே இல்லே?”

அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. வேண்டாம் வேண்டாம். அவர்கிட்டயே போயிடறேன். அடிச்சாலும், உதைச்சாலும் அவர் யாரு? எம் புருஷன்தானே? அவர் எதிர்பார்க்கிறபடி நா நடந்துக்கலேன்னா அவருக்குக் கோபம் வரத்தானே வரும்? போக்கெடமில்லாத எனக்குப் பவிசென்ன வேண்டிக்கிடக்கு? அவர் வந்தால் இதைத் தெரிவிக்கணும். இரவு முழுவதும் அவள் புலம்பினாள்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன் தன்னோடு உற்றோமே யாவோம்;

உனக்கே நாம் ஆட்செய்வோம்.

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

சதா சர்வகாலமும் வாய் முணுமுணுத்தது – மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்…

—–

அவன் டாக்டரின் பார்வையைத் தவிர்த்தபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.

”என்ன நீங்க, மாசத்துக்கு ஒரு தடவையாவது ஜனனியைப் பார்க்க வரவேண்டாமா?”

”எனக்கு டூர் போகற வேலை டாக்டர். ஒழுங்கா பணம் அனுப்பறேனே?”

”எங்களுக்கு அனுப்பறீங்க. அவ சமாதானத்துக்கு நீங்க வரணும்.”

”எனக்குச் சங்கடமாயிருக்கு. பழசெல்லாம் ஞாபகம் வருது. நானும் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் டாக்டர். எனக்கும் ஏமாற்றங்கள் இருக்கு.”

டாக்டர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.

”குழந்தை செத்துடுச்சா?”

”குழந்தையா? இல்லையே?”

”ஜனனி அடிக்கடி சொல்லுவா. குழந்தை செத்திடுச்சின்னு.”

அவன் சிரித்தான்.

”குழந்தையே பிறக்கலே. குழந்தையில்லேன்னு எனக்கு ஏமாற்றம் கூட. அவ மூளைக் கலக்கத்திலே என்னவோ சொல்லுவா. குற்ற உணர்வோ என்னவோ.” டாக்கடர் ஏதோ சொல்ல நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

”இப்ப எப்படி இருக்கா?”

”நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. வீட்டுக்குப் போகணும்ங்கறா.”

”வேண்டாம், வேண்டாம். குழந்தை, கோட்டான்னு சொல்றாங்கறீங்க. நல்லா குணமான பிறகு வரட்டும். ஒரு வருஷம் ஆனாலும் ஆகட்டும்.”

டாக்டருக்குச் சோர்வாக இருந்தது. எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. ஒரு வருஷம் என்கிற கணக்கைக் கேட்டாயிற்று. விவாகரத்துக்குச் சுலபம் என்ற மனக்கணக்கு.

”ஜனனியைப் பார்த்துட்டுப் போங்க.”

”சரி.”

அவன் சங்கடத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனது சங்கடத்துக்குக் காரணம் நான் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. ”வாங்கோ” என்றாள் புன்னகையுடன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல.

”நா இப்போ நன்னா ஆயிட்டேன். பார்த்தா தெரியறதோல்லியோ.”

அவன், அவளுடைய காய்ந்த முகத்தை, குழி விழுந்த அருளற்ற கண்களை, பிசுக்குப் பிடித்த ஜடையை, கசங்கிய புடவையை லேசான அருவெறுப்புடன் பார்த்தான்.

”என்னை வீட்டுக்கு அழைச்சிண்டு போயிடுங்கோ. போறேளா?”

அவளுடைய கண்களில் தெரிந்த தீவிரம் அவனுக்குப் பீதி அளித்தது.

”இப்ப வேண்டாம். நன்னா தேவலையாகட்டும்.”

”எனக்கு நன்னா தேவலையாயிடுத்து.” அவள் சரேலென்று அவன் அருகில் சென்று அவனுடைய தோளைப் பற்றினாள்.

”நீங்க சொன்னபடியெல்லாம் கேக்கறேன்.” அவள் விசும்ப ஆரம்பித்தாள். ”சத்தியமா உங்க இஷ்டத்துக்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுதமாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ ப்ளீஸ். எனக்கு வேற போக்கிடமில்லை.”

தோளைப் பிடித்து உலுக்கிய அந்த இரும்புக் கரங்களை அவன் திகைப்புடன் பார்த்தான். இவளுடன் எப்படி இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தினோம் என்று வியப்பேற்பட்டது. வெடுக்கென்று அவள் கையை விலக்கினான். ”நா செத்துப் போயிட்டேன்னு நினைச்சுக்கோ. நா உன்னை டைவோர்ஸ் பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோ” என்றான் அடிக்குரலில்.

அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது.

”ஏன், ஏன்? நா ஏன் அப்படி நினைக்கணும்? நீங்க என்னை ஏமாத்தறேள். என்னை இங்கே உயிரோடு குழி வெட்டப் பார்க்கறேளா? அதுதான் ப்ளானா?”

”டாக்டர், டாக்டர்! ஷி இஸ் டர்னிங் வயலென்ட் – டாக்டர் ஹெல்ப்!”

அவனுடைய அலறலைக் கேட்டு நர்சுகள் ஓடிவந்து, அவளை விலக்கி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அழ அழ, ‘தூங்கு’ என்று ஊசி போட்டார்கள்.

அவள் கண் விழித்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. வீட்டில் படுக்கையறையில் அவனருகில் படுத்திருப்பது போல ஒரு வினாடி தோன்றிற்று. எங்கோ அழுகுரல் கேட்டது. தொடர்ந்து சிரிப்பு. அவள் விடுக்கென்று எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். மூலைக்கொருவராகப் போர்வை போர்த்திய உருவங்கள். விழிக்கும் நேரத்தில் பைசாசங்களாக உலவும் உடல்கள். ஆன்மாவைப் புதர்களில் தொலைத்துவிட்ட அப்பாவிகள். எல்லாரையும் கட்டித்தழுவிக் கண்ணீரால் கரைய வேண்டும் என்ற தாபம் அவளுள் எழுந்தது.

”நா விவாகரத்து செய்துட்டதா நினைச்சுக்கோ. நா செத்துட்டதா நினைச்சுக்கோ.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. புருஷன் விஷத்தை அனுப்பிய போது மீரா சிரித்த ஞாபகம் வந்தது. மீராவைக் கண்ணன் காப்பாற்ற வந்தது போல இப்பொழுது யாரும் வரப் போவதில்லை. அவள் எழுந்தாள். ஆச்சரியமாக இருட்டில் கண் தெரிந்தது. பாட்டியின் ஞாபகம் வந்தது. பாட்டி இருட்டில் அறை அறையாக நகர்ந்தது போல அவள் சுலபமாக நடந்து வெளியே வந்தாள். பால் பாத்திரங்களைக் கொண்டு வரும் டெம்மோ வெளியே நின்றிருந்தது. டிரைவர் வாட்ச்மேனை சத்தம் போட்டு எழுப்பினாள். டெம்போ உள்ளே நுழைவதற்காக இரும்பு கேட் திறக்கப்பட்டது. தூங்கி வழியும் வாட்ச்மேன் கண்ணில் படாமல் அவள் புதுங்கிப் பதுங்கி வெளியேறினாள். மார்பு படபடத்தது. தார் ரோட்டில் வெறும் காலுடன் வேக வேகமாக நடப்பது நூதன அனுபவமாக இருந்தது. காற்றில் இருந்த மண்ணின் மணம் நாடி நரம்பையெல்லாம் உசுப்பி மீட்டி விட்டது. கீழ்வானத்தில் நெருப்புப் பொறி போல செவ்வொளி லேசாகப் படரத் துவங்கும் போது வானம் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும், மரமும் காற்றும், நட்சத்திரமும் கவிதைக் குழந்தைகளும். அவளும் ஏதோ ஒரு விதியின் உந்துதலில் இசைவுடன் பயணிப்பது போலிருந்தது.

*

Painting Credit: http://www.shairy.com

 

 

காலத்தை வென்ற கதைகள் – 10

 Image

வத்ஸலா

ராஞ்சி பல்கலைக்கழத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணி பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். இருபத்தியைந்து வருடங்கள் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Chennai) கணினி மையத்தில் பணிபுரிந்த சிஸ்டம்ஸ் இஞ்சினியரான இவர் 1999ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

தனது நாற்பத்தி எட்டாவது வயதில் முதன் முதலாக எழுதத் தொடங்கிய இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் பெரும்பாலும் ‘சுபமங்களா’, ‘கணையாழி’, ‘புதியபார்வை’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவருடைய ‘அதுவும் கடந்து’ எனும் சிறுகதை இலக்கிய சிந்தனை மாதப் பரிசைப் பெற்றது. இவருடைய ‘கோபங்கள்’ எனும் சிறுகதை ‘அக்னி – சுபமங்களா’ நடத்திய போட்டியில் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றது.

இவருடைய ‘சுயம்’ என்கிற கவிதைத் தொகுப்பு கவிஞர் ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 2000ம் ஆண்டு வெளி வந்தது.

இவருடைய நாவல் ‘வட்டத்துள்’ உயிர்மை பதிப்பகத்தால் 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருதைப் பெற்றது. அந்த நாவலை இவரும் ஆங்கில எழுத்தாளரான இவருடைய மகள் முனைவர் ஸ்ரீலதாவும் மொழி பெயர்த்து, ‘Once there was a girl’ எனும் தலைப்பில் (கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் பதிப்பகம்) 2012ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Image

 

வெறுப்பைத் தந்த வினாடி

எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் புரியவில்லை. அவள் அவனை எப்பொழுதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள்? இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள் மனதில் எத்தருணத்தில் தோன்றியது? வெறுப்பைத் தந்த அந்த வினாடி எது?

அவன் தட்டை வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே பாயசத்தை ‘சுர்’ என்று உறிஞ்சிக் குடித்துக் கொண்டு இருந்தான். (எந்த மனநிலையிலும் அவள் பண்டிகைகளைக் கொண்டாடத் தவறுவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கை ‘அப் நார்மலானது’ இல்லை என்று அவள் தனக்குத்தானே நிரூபிக்க முயன்று கொண்டிருந்தாள்). அவன் சாப்பிட்ட விதமே அவளுக்கு ஒருவித அருவெறுப்பை உண்டாக்கியது. சிறு வயதில் அவனுக்கு அவனுடைய அம்மா வேண்டிய அளவு உணவு கொடுக்கவில்லையோ என்னவோ, இப்பொழுது பெருந்தீனிதான்! ருசியான உணவு, ருசியற்ற உணவு, வீட்டுச் சாப்பாடு, ஓட்டல் சாப்பாடு, ஓசிச் சாப்பாடு – எதுவாயிருந்தாலும் சரி, ஒரு கை பார்த்து விடுவான். எல்லாவற்றிற்கும் மேல் தனக்குப் பிடிக்காதவர் வீட்டிற்குப் போய் அவர்கள் கொடுக்கும் உணவையும் கூட விழுங்கி விடுவான்.

அவளுக்குப் பழைய ஞாபகம் வந்தது. கல்யாணம் ஆன பத்தாம் நாள் டெல்லியிலே அப்பாவின் நண்பரை எதேச்சையாகச் சந்தித்ததும், அவனுக்கு அவரைக் காரணமில்லாமல் பிடிக்காமல் போனதும், அப்படியும் அவருடைய அழைப்பை ஏற்று அவர் வீட்டுற்குப் போய் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே டிபனை அவசர அவசரமாக அடைத்துக் கொண்டு ‘சட்டென்று’ அவன் வெளியேறியதும் – எல்லாமே அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் அப்பொழுது எவ்வளவு அதிர்ச்சியுற்றாள்? எவ்வளவு வெட்கிப் போனாள்? இருப்பினும் அவன் அவ்வளவு மட்டமானவன் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்ததால் அவனுடைய நடத்தைக்கு அப்பொழுது அவள் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாள். அதாவது தனக்குப் பிடிக்காதவர் மனது கூட நோகாமல் இருப்பதற்காகத்தான் அவன் அவர் அழைப்பை ஏற்பதாகவும், டிபனைச் சாப்பிட்டதாகவும், தன்னை அவள் நம்ப வைத்துக் கொண்டாள். அந்த நம்பிக்கை தூள்தூளாகி அவனுடைய அப்பட்டமான கீழ்த்தரமான சுயநலம் நிதரிசனம் ஆகும் போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி பிறந்ததோ? அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பாயசப் பாத்திரத்தில் இருந்த எல்லா முந்திரிப் பருப்பையும், திராட்சையையும் தன் கிண்ணத்தில் போட்டுக் கொண்டு தின்று முடித்தான். அவளுக்கோ, குழந்தைக்கோ எதையும் மிச்சம் வைக்க வேண்டும் என்ற உணர்வு எப்பொழுதுமே அவனுக்கு இருந்ததில்லை. திருமணமான புதிதில் அவன் எதையாவது முழுவதும் சாப்பிட்டு விட்டால் அவள் கேட்பாள். “எனக்கு மிச்சமே வெக்கலயா” என்று. அதற்கு அவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஐய்யய்யோ! உள்ளே இருக்குதாக்கும்னு நெனைச்சேன்” என்பான். அவள் சிரித்த முகத்தோடு “பரவாயில்ல எனக்கு அது அவ்வளவா பிடிக்காது” என்று சொல்லும் வரை மன்னிப்புக் கேட்டுக் கொள்வான். இந்த நாடகம் பல தடவை நடந்தும் இது நாடகம் என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் எப்படி அவ்வளவு முட்டாளாக இருந்தோம் என்று இப்பொழுது அவளுக்கு வியப்பாக இருந்தது. பிறந்த வீட்டில் அவள் தாய் தந்தையருக்குச் செல்லப் பெண். சூதுவாது தெரியாமல் வளர்ந்தவள். உண்மையான உறவுகளை மட்டுமே அறிந்தவள். அதனால் பொய்யும் புனை சுருட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட அவனுடைய சுபாவத்தை அவளால் சீக்கிரமாக புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த இயலாமையிலும் ஒரு லாபம். ஆம், அதன் காரணமாகத்தான் அவள் சில மாதங்களையாவது ஒரு அசட்டு சுவர்க்கத்தில் கழித்தாள். அச்சுவர்க்கம்  நீர்க்குமிழியாய் வெடித்த போது வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்திருக்க வேண்டும். அவன் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அவள் எப்பொழுது உணர்ந்தாள்? அவளுக்கும் தெரியவில்லை.

நினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்குத் திடீரென்று நினைவு வந்தது. குழந்தைக்காகக் கொஞ்சம் பருப்பை எடுத்து உள்ளே வைக்கவில்லை என்று. உடனே பருப்புக் கிண்ணத்தைப் பார்த்தாள். அவள் பயந்தபடியே அவன் பருப்பைக் காலி செய்து விட்டிருந்தான். அவள் மேலோ அல்லது குழந்தையின் மேலோ உள்ள வெறுப்பினால் அப்படிச் செய்தான் என்பதில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் சகல ஆத்மாக்களும் ஒன்று (இதில் மட்டும் அவன் கீதையின் உபதேசத்தைப் பின்பற்றினான்). சாப்பாடு என்று வந்து விட்டால் அவனுடைய உலகம் மிகச் சிறியதாகி விடும். அதில் அவனை ஆட்டுவிக்கும் அவனுடைய அம்மாவுக்குக் கூட இடம் கிடையாது. ஒருநாள் குழந்தைக்கென வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை திருட்டுத்தனமாக வாயில் அடைத்துக் கொண்டு அவன் அவசரமாகச் சமையலறையிலிருந்து வெளியேறுவதைப் பார்த்துவிட்டாள். அதுவரை இம்மாதிரியான ‘சில்லறை’ உணவுத் திருட்டுகளுக்கெல்லாம் அவள் தன் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பதினான்கு வயதுச் சிறுமியைச் சந்தேகித்துக் கொண்டிருந்தாள். உண்மை வெளிச்சத்துக்கு வந்த அந்தக் கணம் வீட்டில் ஒரு திருடனை வைத்துக் கொண்டு, ஒரு அப்பாவி ஏழைக் குழந்தையைச் சந்தேகித்து வந்ததற்காகக் குற்ற உணர்வு அவளைத் தாக்கியது. ஒரு வேளை அந்தத் தாக்குதலின் எதிரொலியாகத்தான் அவள் மனதில் வெறுப்பு எழுந்ததோ? இருக்கலாம்.

அவன் தண்ணீரைக் குடித்துப் பெரியதாக ஒரு ஏப்பம் விட்டான். அவன் முகத்தில் திருப்தி மண்டிக்கிடந்தது. இது அவளால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அவன் அவளை இரவும் பகலும் எப்படி யெல்லாம் திட்டுகிறான்? “நான் ஒன்னைக் கல்யாணம் செஞ்சுண்டதே தப்பு. எங்கம்மா அப்பவே சொன்னா, இந்தப் பொண்ணு வேண்டாம். இவ ஜாஸ்தி படிச்சிருக்கா, திமிரா இருப்பான்னு. நீ இப்பவே வீட்டை விட்டு போய்டு” இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு அலுத்து விட்டது. இப்படி அவளைத் தினமும் கரித்துக் கொண்டே எப்படி அவனால் அவள் சமைத்த சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட முடிகிறது? அவள் நினைத்துக் கொண்டாள் “அவனுடைய வெறுப்புக் கூடப் போலிதானே” என்று. ஆம், அவனுடைய உணர்ச்சிகளெல்லாம் போலி. பொம்மலாட்டக்காரன் பொம்மைகளின் உடல் உறுப்புகளை மட்டும்தான் ஆட்டுவிப்பான். ஆனால், அவனுடைய அம்மாவோ அவனுடைய உணர்ச்சிகளையே ஆட்டுவிப்பாள். வாரம் ஒரு முறை அவனுடைய அம்மாவிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரும் – அவனுடைய ஆபீஸ் விலாசத்திற்கு. ஒவ்வொரு கடிதத்தின் பாதிப்பும் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரும். அந்நாட்களில் அவன் சீக்கிரம் வீடு திரும்புவான் (சண்டை போட நேரம் வேண்டுமல்லவா?). அப்பொழுது அவன் முகத்தில் ரௌத்திரம் குடி கொண்டிருக்கும். மற்ற நாட்களில் நேரம் கழித்து வருவான். முகத்தில் ஒரு புன்னகையுடன். அவனுடைய ரௌத்திரத்திற்கும் ஆழம் கிடையாது. புன்னகைக்கும் ஆழம் கிடையாது.

வெகுநாட்களாகவே அவனுடைய ரௌத்திரம் அவளை அதிகம் பாதிப்பதில்லை. வாசற்கதவைத் திறந்து அவன் முகத்தைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் ‘சில்’ லென்ற ஒரு உணர்ச்சி. நெற்றி நரம்புகளில் ஏதோ ஒன்று சூடாகப் பாய்வது போன்ற உணர்வு. அவ்வளவுதான். அதன் பிறகு அவள் மனம் மரக்கட்டையாகி விடும். அவனுக்கு டிபன் காபி கொடுத்து விட்டு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து விடுவாள். அவன் டிபன் சாப்பிட்டவுடன் ஆரம்பிப்பான். கல்யாணசத்திரத்தில் குளிக்க வெந்நீர் சூடாக இல்லாதது முதல் தொடங்கி, முன் தினம் அவள் ஏதோ சொன்னது வரை தேதி வாரியாக வரிசைப்படுத்தி அவளையும் அவளுடைய பெற்றோரையும் குற்றம் சாட்டுவான். முன் தினம் அவள் என்ன சொன்னாள் என்பது முக்கியமில்லை. எது சொல்லியிருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் திறமை அவனுக்கு இருந்தது. அவள் ஒருவேளை முன்தினம் ஒன்றுமே பேசாமலிருந்திருந்தால் அதுவே அவளுடைய குற்றமாகி விடும்.

மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த ஒத்தை நடிகன் நடத்தும் ஒத்திகையில்லா நாடகம் இரவு எட்டு மணி வரை நடக்கும். பிறகு அவன் சாப்பிடுவதற்காக இடைவேளை. குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு அவள் சாப்பிட உட்காரும் போது மறுபடியும் ஆரம்பிப்பான். மனம் மரக்கட்டையாகும் போது அவளுடைய வயிறும் சுருண்டு விடுமோ என்னவோ, அவள் தன் சாப்பாட்டை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டுவாள். அவன் பின்தொடர்ந்து வந்து கத்திக் கொண்டிருப்பான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதற்குப் பிறகு நாவல் படிப்பதற்காக இரண்டாவது இடைவேளை. வேலைகளை முடித்துக்கொண்டு குழந்தைக்குத் தூக்கத்திலேயே பாலூட்டி விட்டு வெகு நேரம் முயற்சித்து தூங்கத் தொடங்குவாள். அதற்குள் அவன் நாவலை முடித்து விட்டு அவளை எழுப்பி மறுபடியும் போர் தொடுப்பான். அவனுக்குத் தூக்கம் வரும் வரை இது தொடரும்.

ஒரு முறை போரின் உச்சக் கட்டத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைத் தாளிட்டு விட்டான். சப்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட குழந்தை அரைகுறையாக நிலைமையைப் புரிந்து கொண்டு ‘ஓ’ வென்று அழத் தொடங்கினாள். இதுவும் ஒரு நாடகம்தான் என்றும் அவளுக்குத் தெரியும். அதனால்தானோ என்னவோ நடுநிசியில் வீட்டிற்கு வெளியில் தள்ளப்பட்டதற்காக அவள் அவமானப்படவில்லை. டில்லியின் ஜனவரி மாதத்துக் குளிர் கூட அவளுடைய மனதில் எழுந்த ஒரே எண்ணம் தன் குழந்தையின் மனத்தில் பயம் உறையும் முன் அந்த நிலைமைக்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டும் என்பதுதான். அவளிடம் அவன் மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை மற்றவர் அறிவதை அவன் விரும்பமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆகவே அவனுடைய அந்த பலவீனத்தைத் தாக்கினாள். உணர்ச்சிகளைத் தாண்டிய சன்னக்குரலில் சொன்னாள், “கதவெ தெறங்கோ. அடுத்த வீட்டு மாதாஜி வௌக்கெ போட்டு கதவெ தெறக்கறா. அவ பாத்துட்டா உங்களை தப்பா நெனப்பா”. அவன் உடனே கதவைத் திறந்து வைத்தான். அவனைத் தள்ளிச் சென்று குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள். இரவு முழுவதும் குழந்தை, மடியிலேயே தூங்கினாள். தூக்கத்தில் கூட குழந்தைக்கு நடுநடுவே பயத்தினால் தூக்கிப்போட்டது. அன்று அவள் அவனைப் பார்த்த பார்வையில் அதற்குப் பிறகு அந்த நாடகத்தை அவன் நடத்தவில்லை.

அவள் நினைத்துக்கொண்டாள். “ஒரு வேளை இப்படி அவன் சண்டை போட ஆரம்பித்த பிறகுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ? இல்லையென்று தோன்றியது. இப்படி அவன் அதி உக்கிரமாகச் சண்டை போடத் தொடங்கியது கடந்த ஒரு வருடமாகத்தான். திருமணமான புதிதில் கூட அம்மாவின் கடிதங்கள் அவனைப் பாதித்தது உண்டு. ஆனால், அப்பொழுதெல்லாம் அவன் தன் கோபத்தை வேறு விதமாகத்தான் காண்பிப்பான். நாட்கணக்கில் அவளுடன் பேசாமலிருப்பான். அவனைத் தன் சிறிய சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக எண்ணியிருந்த அவளுக்கு இது சித்ரவதையாக இருக்கும். தூண்டித் தூண்டி காரணம் கேட்டபின் திருமணத்தின் போது அவளுடைய பிறந்த வீட்டினர் அவனுக்கோ அல்லது அவனுடைய அம்மாவுக்கோ செய்த அவமரியாதை அல்லது செய்யத்தவறிய மரியாதைக்காக அவர்களைக் குற்றம் சாட்டுவான். அவளை நேரடியாக ஒன்றும் சொல்ல மாட்டான். திருமணத்தன்று உள்ளங்கை வேர்க்க ஹோமப் புகையில் குருடாகி அமர்ந்திருந்த அவளுக்கு அவனுடைய குற்றச்சாட்டுகளில் முக்கால் பாகம் அவனுடைய அம்மாவின் கற்பனை என்று தெரியாது. அவன் சொல்வதை நம்பி நடந்த தவறுகளுக்கும் நடக்காத தவறுகளுக்கும் பலமுறை தன் பிறந்த வீட்டினர் சார்பில் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வாள். மாமியாருக்கும் மன்னிப்புக் கேட்டுக் கடிதங்கள் எழுதுவாள். அவனுடைய சுயரூபத்தை அவள் அறிந்து கொண்ட பிறகு நிலைமை மாறியது. தன் வேஷம் கலைந்து விட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதற்குப் பதில் அவள் மேல் கோபம் வந்தது. ஏற்கனவே அவனைப் புரிந்து கொண்டதால் அடைந்த ஏமாற்றம், துக்கம் இவைகளுடன் அவனுடைய இந்த அநியாய கோபத்தினால் வந்த ஆத்திரமும் சேர்ந்துதான் அவள் மனதில் வெறுப்புக்கு அடிகோலியிருக்க வேண்டும். அவள் மனதில் இவ்வாறு வெறுப்புத் தோன்றிய பிறகுதான் அவனுடைய சண்டைகளும் உக்ரமடைந்தன. அவள் எவ்வளவுதான் முயற்சித்து அதைத் தன் முகத்தில் காட்டாமல் மறைத்தாலும் அவளுள் மண்டியிருந்த வெறுப்பை அவனுடைய உள் மனது உணர்ந்திருக்க வேண்டும். ‘அவனுடைய அந்த உணர்தல் மட்டும் போலி அல்ல’ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

தட்டிலேயே கையைக் கழுவி விட்டு அவன் தலை நிமிர்ந்தான். எண்ணங்களில் மூழ்கி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று தன் கண்களை அவன் முகத்திலிருந்து அகற்றினாள். ஆனால், அதற்கு முன் அவன் பார்த்துவிட்டான், அக்கண்களில் தெரிந்த வெறுப்பை. அதை நேருக்கு நேர் அவன் சந்திப்பது இதுவே முதன் முறையாகும். அந்த வெறுப்பின் ஆழம் அவனை நிலைகுலையச் செய்தது. கண நேர மௌனத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு “ஏய்! என்ன மொறைக்கிறே” என்று இரைந்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அவளுடைய வெறுப்பின் ஆழம் அவனை அதிர்ச்சியுறச் செய்தாலும், அது நிரந்தரமானது அல்ல. அவனுடைய தேவைகள் மட்டுமே அவனுக்கு பிரதானம். அவளுடைய கை சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடவும், அவள் இணங்கினால் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும் அவன் என்றைக்கும் தயாராக இருப்பான். அவனுக்குத் தன் மேல் அன்பு இல்லை என்று தெரிந்தது முதல் அவள் அவனுடைய இச்சைக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டாள். அன்பில்லாத கணவனுடன் உடலுறவுகொள்வது சோரம் போவதற்குச் சமம் என்பது அவளுடைய உறுதியான அபிப்பிராயம். அப்படி ‘சோரம்’ போவதற்கு அவளை அவன் அழைத்த போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ? இல்லை. அந்நேரம் அவளுடைய உடம்பெல்லாம் தீப்பற்றினாற் போல் எரிந்ததே தவிர வெறுப்பு அதற்கு முன்னரே அவளுடைய மனதில் பூரணமாய் வியாபித்து விட்டிருந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்தாள். வாசற்கதவு திறந்திருந்தது. அவன் ஆபீசுக்குப் போய் விட்டிருந்தான். உடனே பீரோவைப் பார்த்தாள். அதன் கதவு திறந்திருந்தது. அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் பூட்ட மறந்து விட்டிருந்தாள். அவன் நினைவுகளில் மூழ்கியிருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவன் வீட்டுப் பணத்தில் ‘கை’ வைத்திருப்பான். எவ்வளவு குறைகிறது என்று இன்று எண்ணத் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டாள். இன்று மட்டுமல்ல, இனி என்றுமே எண்ணத் தேவையில்லை என்ற எண்ணம் அவளுக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.

குழந்தையைப் பார்த்தாள். தன் மூத்திரத்திலேயே வழுக்கி விழுந்து விட்டு அதற்கு வேறு யாரோ காரணம் போல உரத்த குரலில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளை சமாதானப்படுத்தி, குளிப்பாட்டி, அணிவிப்பதற்காக நல்ல கவுனை கையில் எடுத்தாள். நல்ல கவுனைக் கண்டவுடன் தான் வெளியே போகப் போவதைப் புரிந்து கொண்டாள் குழந்தை. சந்தோஷம் எல்லை மீறி சிரித்துக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவ்வப் பொழுது அம்மாவைத் திரும்பிப்பார்த்துக் கொண்டாள். இவளும் சிரித்துக் கொண்டு  அவளைச் சற்று துரத்திக் கொண்டு ஓடிவிட்டு பின் தன்னால் பிடிக்க முடியாதது போல் நின்றாள். உடனே குழந்தை ‘களுக்’ என்று சிரித்து விட்டு ஓடி வந்து அவள் முன்னே நின்று கவுன் அணிவப்பதற்காக தன் இரண்டு கைகளையும் தூக்கினாள். குழந்தையைத் தயார் செய்து பால் கொடுத்து விட்டு அவளும் தயாரானாள்.

தயாராகும் போது சொந்த வீட்டிலேயே திருடும் அந்தப் புது மாதிரியான திருடனைப் பற்றிச் சிந்தித்தாள். திருமணமான புதிதில், (அவள் கனவுலகில் மிதந்த நாட்களவை) அவன் தன் சம்பளம் முழுவதையும் (அப்படி அவன் சொல்ல, அவள் நம்பினாள்) அவளிடம் கொடுத்து கூறினான்: “இந்தா, இதெ பீரோல வை. நாம ரெண்டு பேரும் அவாவாளுக்கு வேணுங்கறச்சே எடுத்து செலவழிச்சுக்கலாம்.” அவளுடைய பிறந்த வீட்டிலோ அப்பாவின் அனுமதியில்லாமல் அம்மாவால் ஒரு பைசா செலவழிக்க முடியாது. ஆகையால் அவளுக்குத் தன் கணவன் தனக்கு ஏதோ நிறைய அதிகாரம் கொடுத்து விட்டாற் போல் இருந்தது. சந்தோஷத்துடன் சொன்னாள், “சரி யாரு எடுத்தாலும் கணக்கு எழுதணும்.” அவன் சம்மதித்தான். அவள் கணக்கு எழுதினாள். அவள் எதிரே எப்பொழுது பணம் எடுத்தாலும் அவனும் எழுதினான். ஆனாலும் மாதக் கடைசியில் கணக்கு உதைத்தது. அவன் சொன்னான், “ஒனக்கு மறதி ஜாஸ்தி. நீ ஏதாவது எழுத மறந்திருப்ப”. அவள் நம்பினாள். கணக்கு எழுவது நின்றது. ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பற்றாக்குறைதான். அவளுக்கு முதல் தேதி எப்பொழுது வரும் என்று இருக்கும். ஆனால், அவன் கவலையே படமாட்டான். அவளுக்கு அது வியப்பாக இருக்கும். “இவருக்கு மன திடம் ரொம்ப அதிகம்” என்று எண்ணி அவனைப் பற்றிப் பெருமை கொண்டாள். அப்பா அவளுடைய பிறந்தநாள், பண்டிகை என்று ஏதாவது சாக்கிட்டு அனுப்பும் பணத்தை வைத்து ஒப்பேற்றுவாள். அவன் சொல்லுவான். “சேச்சே, ஒன்னோட பணத்தை எடுக்காதே” என்று. “என்ன இது? என்னோட பணம் நம்மளோடது இல்லையா?” என்று அவள் கோபிக்க, “சரி உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு போய் விடுவான்.

அவள் மாதாமாதம் ‘பட்ஜெட்போட்டாள். தனக்கென்று ஒரு உள் பாவாடை கூட வாங்கிக் கொள்ளமாட்டாள். தலை தீபாவளிக்குப் பிறந்த வீட்டுக்குப் போன போது அம்மா அவள் பெட்டியைப் பார்த்துவிட்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புடவை முதல் கைக்குட்டை வரை வாங்கித் தந்தாள். அது அவளுக்கு அவமானமாக இருந்தது. ஆனால், அவற்றை வாங்க மறுத்து அம்மாவின் மனதை நோகடிக்கவும் பிடிக்கவில்லை. பொறுக்காமல் அம்மாவிடம் பற்றாக்குறையைப் பற்றி கூறினாள். அம்மா அதற்கு, “அவர் கொண்டு வரது ஒங்க ரெண்டு பேருக்கும் ஏதேஷ்டம். ஒனக்குக் குடித்தனம் பண்ணத் தெரியல” என்று கூறிவிட்டாள். இவளும் நம்பினாள். வீடு திரும்பியதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாள். காய்கறி, பழத்தைக் குறைத்தாள். தான் பால் சாப்பிடுவதை நிறுத்தினாள். குறைந்த சம்பளத்திற்கு ஆள் பேசிக் கொண்டு முக்கால்வாசி வீட்டு வேலைகளைத் தானே செய்தாள். நான்கு மாதக் கருவை வயிற்றில் சுமந்து கொண்டே தண்ணீர்க் குடத்தை இடுப்பில் சுமந்து மூன்றாவது மாடியிலிருக்கும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். இதையெல்லாம் அவள் சந்தோஷமாகச் செய்தாள். ஏனென்றால் அந்தப் பற்றாக்குறை அவனால் உண்டாக்கப்பட்டது என்று அப்பொழுது அவளுக்குத் தெரியாது. அவன் மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கை எப்பொழுது சிதைந்தது? அவன் தன் வீட்டிலேயே திருடுபவன் என்பதை அவள் எப்பொழுது புரிந்து கொண்டாள்? பொங்கலுக்காக அப்பா அனுப்பிய பணத்தில் குழந்தைக்காக வாங்கிய பால் பவுடரைத் தின்று விட்டு அவன் சமையலறையில் இருந்து வெளியில் வந்த பொழுது அவனுடைய கடைவாயில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளைத் துகள்கள் அவனைக் காட்டிக்கொடுத்தனவே, அப்பொழுது தானா? அதுதான் வெறுப்பின் ஆரம்பப் பொழுதோ? இல்லை. இல்லை. அதற்கு முன்பே இந்த வெறுப்பு அவளுடைய மனதை முழுவதுமாய் ஆக்ரமித்துவிட்டிருந்தது.

முதன்முதலாக அவன் தன் வீட்டிலேயே கன்னக்கோல் வைப்பவன் என்பதைப் புரிந்து கொண்ட போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி ஜனித்ததோ? அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அதைப் புரிந்து கொண்ட அந்நொடியை தனியாகப் பிரித்து அடையாளம் காட்ட முடியாது. வெகுநாட்கள் அவன் திருட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல்தான் இருந்தாள். ஆனால், இப்பொழுது வெகு நாட்களாகவே பீரோவைப் பூட்டி, சாவியைத் தாலிக்கயிற்றில் கோர்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவனுக்கு வேண்டிய பணத்தை அவ்வப்பொழுது கொடுக்கத் தொடங்கியிருந்தாள். அவள் எப்பொழுதிலிருந்து இப்படிச் செய்யத் தொடங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை. உண்மையை அவளுடைய உள் மனது எப்பொழுதுதோ உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், எத்தருணத்திலிருந்து அது அவளுக்குத் தெரிந்த விஷயமாகிற்று என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது. அந்தத் திருட்டுத்தனத்தை உணர்ந்த நாழியிலிருந்து அவள் அவனுடன் சண்டைபோடுவதை நிறுத்தி விட்டாள். அதற்குக் கூட அவனுக்குத் தகுதியில்லை என்று அவளுக்குத் தோன்றி விட்டது. அவனுடைய திருட்டுத்தனத்தை உணரும் முன்பே அவனுடைய போலித்தனத்தை அவள் தெரிந்து கொண்டு விட்டாள். அவளுக்குத் தெரிந்து விட்டது. அவனுடைய அன்பு போலி, கோபம் போலி, அதிகாரம் போலி, கத்தல் போலி, வார்த்தைகள் இரவல்.

இத்தனை யோசனைகளுக்கும் நடுவே அவள் கை மட்டும் வேலை செய்து கொண்டிருந்தது. தன் உடைகளையும் குழந்தையின் உடைகளையும் சூட்கேசில் எடுத்துவைத்தாள். திறந்திருந்த பீரோவடின் கீழ்த்தட்டிலிருந்து தன் போட்டோக்களைக் கீழெல்லாம் இரைத்துக் கொண்டே குழந்தை எடுத்து வந்தாள். அம்மாவும் தானும் சேர்ந்திருந்த போட்டோவுக்கு ‘இச்’ என்று முத்தம் கொடுத்து ‘அம்மா’ என்று அறிமுகம் செய்தாள். குழந்தைக்கு கிட்டத்தட்ட இரண்டு வயதாகியிருந்தது. மகா புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். ஆனால், ‘அம்மா’வைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பேச வரவில்லை. இவளுக்கு ஒரு சந்தேகம், தன்னுடைய நிகழ்கால வாழ்க்கைதான் இதற்குக் காரணமோ என்று.

அவன் அவளுடன் சண்டைபோடுவது குழந்தையை உண்மையில் வெகுவாகப் பாதித்தது. அவன் கத்தும் போதெல்லாம் குழந்தை அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அம்மாவின் முகத்தில் வேதனையின் சாயலைக் கண்டு விட்டால் கூட குழந்தையின் உதடுகள் துடிக்கத் தொடங்கும். ஓர் அழுகையின் ஜனனம். அதனால் அவள் பல்லைக்கடித்துக் கொண்டு தன் உணர்ச்சிகளை மனத்தின் அடித்தளத்தில் அழுத்தி, குழந்தையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருப்பாள். திடீரென்று தன் அம்மாவின் உபதேசம் ஞாபகத்திற்கு வர, அவன் அவளை அடிக்கக் கையை ஓங்குவான். குழந்தை அரண்டு விடுவாள். அவள் குழந்தையை அணைத்துக் கொண்டு அவனையே சலனமில்லாமல் பார்ப்பாள். அவனுடைய கை இறங்கிவிடும். அடிக்க அவனுக்கு தைரியம் கிடையாது. அவளுக்கு இருந்தது அந்த தைரியம். ஆனால், அடியில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

அவள் தினம் சண்டை போடுவதில்லை. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. மாதத் தொடக்கத்தில் அவன் கையில் பணம் புரளும். (அவனுடைய உண்மையான சம்பளம் அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்). அப்பொழுதெல்லாம் அவன் ‘நைட் டியூட்டி’ என்று கூறி எல்லாவிதத்திலும் ‘புல்’லாக நேரங்கழித்து, வந்த உடனேயே தூங்கிவிடுவான். ‘நைட் டியூட்டி’ ‘நைட் ஷோ’ வில்தான் என்பது அவளுக்குத் தெரியும். அம்மாவின் கடிதத்தால் அவன் பாதிக்கப்படும் நாட்களில் சண்டை, கத்தல், குற்றச்சாட்டுகள் என்று நாடகங்கள் நடக்கும். கையில் அதிக பணமும் இல்லாமல், அம்மாவின் ‘ரிமோட் கண்ட்ரோலும்’ இயங்காத நாட்களில் மறுபடியும் ‘நைட் டியூட்டி’ தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவனுடைய பாக்கெட்டில் டிக்கெட்டுகள் ஒன்றுக்குப் பதில் இரண்டு இருக்கும். முதலில் இது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவனுக்கு நண்பர்களே கிடையாது. ஆனாலும் அவள் அவனை ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அதற்குள் அவள் வெறுப்பின் எல்லையைத் தொட்டிருந்தாள்.

ஒரு முறை துணிமணிகளை சலவைக்குப் போடுமுன் அவனுடைய பாக்கட்டைத் துழாவுகையில் ஆண்களுக்கான கருத்தடைச் சாதனம் ஒன்று அகப்பட்டது. திருமணம் நிச்சயமான போதே அப்பாவின் நண்பர் ஒருவர் அவளை நல்லெண்ணத்தோடு எச்சரித்தார். “மாப்ளெயோட  உத்தியோகத்தில் பல பொண்களுக்கு ‘காண்ட்ராக்ட்’ குடுக்கற அதிகாரம் இருக்கும்மா.  சில பொண்கள் இதுக்காக எது வானாலும் செய்யத் தயாரா இருப்பாம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று. அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டாள். ஆனால், அதிர்ச்சியுறவில்லை. வருத்தம் கூட அடையவில்லை. அவளுக்கு அவனை விசாரிக்கப் பிடிக்கவில்லை. ஏனெனில் ஒரு மனைவியின் உரிமையை எடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. பெண்களுடன் ஊர் சுற்றுகிறான் என்பது புரிந்தது. அவள் எண்ணிக் கொண்டாள். “எது எப்படியிருந்தாலும் ஒன்று நிச்சயம். இவனால் யாரையும் காதலிக்க முடியாது. ஏனென்றால் அந்த உணர்ச்சியே இவனுக்குத் தெரியாத ஒன்று. இவனால் யாரையும் வைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவளுக்குப் பணம் செலவழிக்க இவனுடைய சுயநலம் இடம் கொடுக்காது’’. இப்படித் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்ட பிறகும் கூட அன்று விக்கி விக்கி ஏன் அழுதோம் என்று இப்பொழுது கூட அவளுக்குப் புரியவில்லை. ஆனால் வெறுப்பின் ஆரம்பம் அன்று இல்லை என்று மட்டும் புரிந்தது.

மனம் நினைவுகளில் மூழ்கியிருந்தாலும் அவள் முக்கியமான சாமான்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். அம்மி முதல் சோபா செட் வரை எல்லாமே அவள் அப்பா வாங்கித் தந்தது. அவனுடைய முக்கால்வாசி உடைகளையும் சேர்த்து. தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் அவள் எடுத்துக் கொண்டால் இந்த வீடே காலியாகிவிடும். அவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. ஆகவே பல சாமான்களை அவனுக்கு பிச்சை இட்டு விட்டாள். தன்னுடைய எம்.எஸ்.ஸி. புத்தகங்களையும் சான்றிதழ்களையும் எடுத்து வைக்கும் போது, “இனி இவைகள்தான் என் மூலதனம்” என்று எண்ணிக் கொண்டாள்.

வாசலில் வந்து தெருவில் போன டாக்சியைக் கூப்பிட்டாள். வயதான சார்தார்ஜி டிரைவர் அவளை ஒரு சாமானும் தூக்க விடவில்லை. அடுத்த வீட்டுக்காரி முகத்தில் ஒரு பெரிய கேள்விக் குறியோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை அதிகம் பழகாததால் கேள்வி நாக்குக்கு வரவில்லை. அதைச் சாதகமாக்கிக் கொண்டு வீட்டின் சாவியை அவளிடம் கொடுத்து, அவன் வீடு திரும்பும் போது கொடுத்து விடச் சொன்னாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்சியில் ஏறி “ஸவுத் எக்ஸ்டென்ஷன் ஜாயியே” (ஸவுத் எக்ஸ்டென்ஷனுக்கு போங்கள்) என்றாள்.

குழந்தை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடுநடுவே கைக்கொட்டிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள். டிரைவரின் முன் இருந்த சிறிய கண்ணாடி வழியே அவளுடைய வெள்ளைத் தாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாள். அவரும் அன்பு பொங்கச் சிரித்து “க்யோன் பேட்டி? குடியாகே பாபா நஹி ஆயே?” (ஏன் மகளே… இந்த பொம்மைக் குட்டியின் அப்பா வரவில்லையா?) என்றார். அவள் மௌனமாக இல்லையென்று தலையை ஆட்டினாள்.

கையில் இருந்த விலாசத்தைப் பார்த்து அவருக்கு வழி சொன்னாள். வீடு வந்து விட்டது. “நல்ல வேளை அண்ணாவுக்கு டில்லி மாற்றல் ஆகியது. இல்லாவிட்டால் இன்னும் சிரமமாக இருந்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டாள். டாக்சி நின்ற சப்தம் கேட்டு அப்பாவும் அம்மாவும் வாசலுக்கு, வந்தார்கள். அவள் குழந்தையோடு இறங்குவதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இந்த மட்டிலும் மாப்பிள்ளை தன் விதியைத் தளர்த்தி அவளையும் குழந்தையையும் அனுப்பி வைத்தாரே என்று. மூன்று மாதக் குழந்தையோடு சீர் செனத்தியோடு அவனை அனுப்பிய பிறகு அவர்களுக்கிடையே எல்லாப் போக்குவரத்தும் (கடிதம் உள்பட) நின்றுவிட்டிருந்தது.

வேற்று முகம் பாராமல் குழந்தை பாட்டியிடம் தாவினாள். சர்தார்ஜி ‘டிக்கியை’ திறந்து சாமான்களை எடுத்து ஹாலில் வைக்க ஆரம்பித்தார். சாமான்களைப் பார்த்தவுடன் அப்பா அம்மாவின் முகங்கள் பேயறைந்தாற் போல் ஆகிவிட்டன. சர்தார்ஜி பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையின் கன்னத்தை தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவள்  சூட்கேசிலிருந்து தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து அப்பாவிடம் கொடுத்து “இதற்கெல்லாம் ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் குடுங்கப்பா” என்றாள். அப்பா உடனே சட்டையை மாட்டிக் கொண்டு குழந்தையுடன் வெளியே கிளம்பி விட்டார். அவர் நடையில் திடீரென்று வயதின் தளர்ச்சி தெரிந்தது.

அம்மா டிபன், காபி கொண்டு வந்தாள். அப்பொழுதுதான் இவளுக்கு நினைவுக்கு வந்தது, தான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்பது. மௌனமாக சாப்பிட்டு விட்டுக் கை கழுவியதும் அம்மா நியூஸ் பேப்பரைக் கொண்டு வந்தாள். “இந்த அட்வர்டைஸ்மென்டைப் பாரு. டெல்லி யூனிவர்சிடியில் ஃபிசிக்ஸ் லெக்சரர் கேட்டிருக்கா” என்றாள். அவள் படித்தாள். உடனே உட்கார்ந்து, ஒரு விண்ணப்பத்தாள் அனுப்புமாறு கடிதம் எழுதி நிமிர்ந்தாள். அம்மா அருகே வந்து நின்றாள். தயங்கித் தயங்கி மெதுவாகக் கேட்டாள். “எப்போலேருந்தும்மா நெலமை இத்தனை மோசமாகப் போச்சு?” அவள் சொன்னாள். “எனக்கேத் தெரியலம்மா.”

*

 Painting Credit: http://picturetopeople.blogspot.in