பரிசுக் கவலை தேவையா?
ஜும்பா லாஹிரி… இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்படும் பெண்மணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். 2000ம் ஆண்டு புலிட்சர் பரிசு பெற்றதிலிருந்தே பிரபலமாகிவிட்டார். இந்த ஆண்டு ‘மேன் புக்கர் பரிசு’ அறிவிக்கப்பட இருந்த தருணம்… பட்டியலில் இருந்த புத்தகங்களில் ஜும்பா லாஹிரியின் ‘தி லோலேண்ட்’ நாவலும் இடம் பெற்றிருந்தது. அவருக்குத்தான் பரிசு என்று பல பத்திரிகைகள் செய்தியே வெளியிட ஆரம்பித்துவிட்டன. இலேனா கேட்டன் என்ற நியூசிலாந்து பெண் எழுத்தாளர் அந்தப் பரிசை தட்டிச் சென்றார். அந்த அலை ஓய்வதற்கு முன்பாகவே இன்னொரு பரிசு… புனைவுகளுக்காக அமெரிக்கா வழங்கும் ‘தேசிய புத்தக விருது’ ஜும்பா லாஹிரிக்குத்தான் என்கிற பேச்சு எழுந்தது. கடைசியில், ஜேம்ஸ் மெக்பிரைடு என்கிற அமெரிக்க எழுத்தாளருக்குப் பரிசு யோகம். இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை ஜும்பா லாஹிரிக்கு… தன் அடுத்த புத்தகத்துக்கான வேலையில் மேடம் பிஸி!
***
வீடா… சிறையா?
‘அடிமைகள் இல்லை’ – சொல்வதற்கு நன்றாக இருக்கலாம். நிஜம் சுட்டெரிப்பதாக இருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல… 30 வருடங்கள். மூவரில் ஒருவர், ‘ஃப்ரீடம் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே அவர்களை மீட்பதற்கான வேலையில் இறங்கிய ஃப்ரீடம் நிறுவனம், காவல்துறை உதவியுடன் சமீபத்தில் காப்பாற்றியிருக்கிறது. மூவரில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், இரண்டாமவர் அயர்லாந்துக்காரர், மூன்றாவது பெண் இங்கிலாந்துக்காரர். இவர்களில் அயர்லாந்துப் பெண்மணிக்கு 57 வயது. மலேசியப் பெண்ணுக்கு 69 வயது!
***
பொறுப்புகளுக்குப் பொருத்தமானவர்!
‘சுந்தரம் க்ளேட்டன்’ (Sundaram Clayton), தமிழகத்தின் டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனம். சமீபத்தில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, லட்சுமி வேணுவுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. லட்சுமி வேணு, இந்நிறுவனத்தின் ‘தொழில்நுணுக்க இயக்குனர்’ (Director – Starategy) பதவியில் இருக்கிறார். இந்தப் பதவி நிர்வாக இயக்குனர் பதவிக்கு ஈடானது. ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், தொழிலை விரிவுபடுத்தவும் லட்சுமிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கம்பெனியின் செலவைக் குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் நிதி மற்றும் பட்ஜெட் நடவடிக்கைகளை உடனிருந்து கண்காணிப்பார் அவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது இயக்குனர்கள் குழு. கூடுதல் பொறுப்புகளைச் செய்ய வேண்டி இருப்பதால், லட்சுமி வேணுவின் ஊதியமும் உயர்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு புதிய ஊதியம் லட்சுமிக்கு வழங்கப்பட இருக்கிறது. மாதத்துக்கு 7.50 லட்ச ரூபாய்!
***
மனதைக் கவரும் மாய(ம்) பாடல்கள்!
மாயம் மஹ்மூத் (Mayam Mahmoud). இதுதான் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணின் பெயர். ராப் இசைப் பாடகி. ‘அராப்ஸ் காட் டேலன்ட்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடந்த ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதிச் சுற்று வரை முன்னேறிவிட்டார். இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து பாடல்களைப் பாடி வருகிறார் மஹ்மூத். எல்லாமே எகிப்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட பாடல்கள்! மஹ்மூதின் தந்தை, ‘வழக்கமாக எல்லாரும் பாடுவதைப் போல் பாடாமல், புதிதாக எதையாவது முயற்சி செய்’ என்று ஒருமுறை சொன்னாராம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இந்த இசைப் புயல். எகிப்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையிலெடுத்தார். பாடலில் அதைக் கொண்டு வந்தார். இன்றைக்கு, ‘எகிப்தில் முக்காடு (Hijab) அணிந்து ராப் இசை பாடும் முதல் பெண்’ என்ற பட்டத்தையும் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்.
***
உடலினை உறுதி செய்!
‘பெரியோர்களே… தாய்மார்களே! தயவு செய்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடல் உறுதியில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!…’ கெஞ்சாத குறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘எஜுஸ்போர்ட்ஸ்’ (EduSports) நிறுவனம். இது ஒரு உடற்கல்வி நிறுவனம். இந்நிறுவனம் நடத்திய, பள்ளிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலுறுதி ஆய்வில் பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகள் உடல் உறுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 17 மாநிலங்கள்… 68 நகரங்கள்… 176 பள்ளிகள்… 7லிருந்து 17 வயதுக்குட்பட்ட 77,669 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிலைக் குறையீட்டு எண்ணில் மட்டும்தான் பெண் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பையன்கள் 59 சதவிகிதம், பெண் பிள்ளைகள் 66 சதவிகிதம். மற்ற எல்லா உடல் உறுதியிலும் பெண் பிள்ளைகள் பின் தங்கியே இருக்கிறார்களாம். ஒரே இடத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மிகக் குறைவாக விளையாடுவது அல்லது விளையாட்டுப் பக்கம் திரும்பாமலே இருப்பது இவையெல்லாம்தான் காரணம் என்று ஒரு பட்டியலை வாசித்திருக்கிறது எஜுஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை. பெரிய நகரங்களில் (Metro Cities) வசிக்கும் மாணவர்களைவிட, நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் உடல் உறுதியில் கொஞ்சம் பரவாயில்லை ரகமாம். அதாவது, அவர்களுக்கு விளையாட அவகாசம் கிடைத்திருக்கிறது, கொஞ்சமாவது ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். மொத்தத்தில், பள்ளி செல்லும் பிள்ளைகளின் உடல் உறுதியில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.
***
Image Courtesy: http://www.topnews.in
தொகுப்பு: பாலு சத்யா