இணையம் இணைத்த இதயங்களும் கரங்களும்

வெள்ளக் களத்தில் தோழிகள்

sumitha1

சுமிதா ரமேஷ் – துபாய்

முகம் பார்க்க மறந்தோம்… நலம் கேட்க மறந்தோம்… தனித்தீவுகளானோம்… தனியாய் சிரித்தோம்…உறவுகள் தொலைத்தோம்..ஸ்மார்ட் போனுக்குள் கூடு கட்டி வசித்தோம். பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீந்தினோம்…வாட்ஸ் அப்பில் வானம் அளந்தோம்…எல்லையற்றுப் பறந்தோம். ஏனோ அருகில் இருக்கும் மனிதர்களை சருகெனத் துறந்தோம்… கடல் கடந்த நண்பர்களிடம் கதைகள் கதைத்தோம்.

ஒரு வெள்ளம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டியது. சக மனிதர்களிடம் இருந்து நம்மைப் பிரித்த இணையம் உலகெங்கிலும் உள்ள தகவல்களை அள்ளி வந்து வெள்ளத்தில் சிக்கிய மனிதர்களை மீட்கும் வலையாக விரிந்தது. ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு… உதவும் கரங்களை அள்ளி வந்து ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என இணையமும் ஸ்மார்ட் போனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரணம் வழங்கும் பணியைத் துவங்கி இன்னும் விழிகளை மூடவில்லை. இணையத்தின் இமைகளாக மாறி, இதங்களாக உருவெடுத்து, கரங்களாக அணிவகுத்து… கண்ணீர் துடைக்கும் பணியில் துபாயில் இருந்து சுமிதா ரமேஷ் செய்திருக்கும் பணிகள் வியக்க வைக்கின்றன.

திருச்சியை சேர்ந்த சுமிதா திருமணத்துக்குப் பின்னர் கணவர் ரமேஷுடன் துபாயில் செட்டில் ஆனவர். ரமேஷ் சீமென்ஸ் நிறுவனத்தில் கமர்ஸியல் இயக்குனர். இரண்டு குழந்தைகள். கணிணி, கணித ஆசிரியையாக இருந்த சுமிதா, துபாயில் வெளியில் பணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாத நிலையில் தனி வகுப்புகள் எடுத்துள்ளார். பேச்சாற்றலில் வல்லவரான சுமிதா விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்று தன்னை பேச்சாளராகவும் அடையாளம் கண்டவர்.

‘தமிழ் குஷி’ இணைய வானொலியின் ஆர்ஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தற்பொழுது குழந்தைகளின் படிப்புக்காக வீட்டை கவனித்த படியே சுமிதா சென்னை, கடலூர் பகுதி வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க செய்திருக்கும் பணி அளவிட முடியாதது.

இனி சுமிதா…

‘‘சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடன் வெளி நாடுகளில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களின் விவரங்களைக் கொடுத்து அவர்களின் நிலை என்ன என்று ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெட்டிசன் என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தோம். ஃபேஸ்புக் பதிவுகளைத் தொடர்ந்து உதவ முடிவு செய்தோம். எங்களது குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தனர். உதவி கேட்டு வந்த தொலைபேசி எண்கள் உண்மைதானா என்பதை ஒரு குழு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தது. இன்னொரு புறம் தன்னார்வலர்களின் எண்களை தொடர்பு கொண்டு உதவி தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பும் பணியை செய்யத் துவங்கினோம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்டர் நெட்டை விட வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்தது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை ஜே.பி.ஜி. ஃபைலாக ஆக்கி, எந்த வழியிலும் படிக்கும் வகையில் மாற்றி பதிவு செய்தோம். 2ஜி சேவை மட்டுமே இருந்த இடங்களிலும் தகவல் பரிமாற்றம் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போல் தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றினோம். உதவி கேட்டு வந்த தகவல்களை உறுதி செய்து அதிகம் பேருக்கு ஸ்பிரெட் செய்தோம். உதவும் குழுக்களைப் பற்றிய டேட்டாக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். இதனால் உதவி கேட்ட சில நிமிடங்களில் தன்னார்வலர்களையும் படகுகளையும் அனுப்பி மீட்க முடிந்தது.

குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தோம் ! 250 குழந்தைகள் மீட்க, மீட்பு குழுவிற்கு தகவல் மற்றும் ஆர்மிக்கும் தகவல் தந்தோம்

குழந்தைகள் மீட்கப்பட்டதாக கிடைத்த முதல் உறுதிப்படுத்த ப் பட்ட தகவல் ஒரு தனி உத்வேகம் தந்து இன்னமும் வேகமாக இயங்க வைத்து , நிறைய மீட்புப்பணிக்கு உதவி செய்ய வைத்தது

மீட்புப் பணிகள் குறித்த அப்டேட்ஸ் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்து முடிந்த விஷயங்களை அதிகம் ஷேர் ஆகாதபடி டெலிட்ம் செய்தோம்.

ராமாபுரம் பகுதியில் தாய் இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இன்னொருவர் தன் தந்தைஇறந்துவிட்டதாகவும் அதற்கு ஃப்ரிசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இவை கிடைத்த நேரம் நள்ளிரவு… கொட்டும் மழையில் செய்வதறியாது தவித்த நொடிகள்… கண்களில் நீர் வரவழைத்தது… மனம் இறைவா என அரற்றியது.

வயதானவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டவர்கள், மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் பதிவுகள் வந்தன. இவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவும் வழி செய்தோம்.

போரூர் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் வட இந்தியப் பெண்கள் மாட்டிக் ெகாண்டு உதவி கேட்டனர். இது குறித்து கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தோம். ராணுவம் அவர்களை மீட்டது. வேளச்சேரியை சேர்ந்த சாருலதா, தானே படகில்சென்றுபலரையும்மீட்டதோடு, தன் மொபைல் நம்பரையும் தந்து, பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தப் பெண்களுக்கும், தன்னால் ஆன உதவியை செய்தபடி  இருந்தார் இந்தச் சின்னப் பெண்! அவரது பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஓ.எம்.ஆர். பகுதியில் ஐ.டி.ஐ. முதல்வர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து ெகாள்ள வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் தகவல் மீட்புப் பணிகளை விரைவு படுத்தினோம்.

துபாயில் இருந்து நானும், அமெரிக்காவில் கார்த்திக் ரங்கராஜன், வெங்கட்ராகவன் மூவரும் மிக வேகமாக நெட்டிசன் குரூப்பில் பணிகளை பிரித்துக் கொண்டு வேகமாக செயல்பட்டோம்.

தகவல்களை உறுதி செய்யும் பணியில் நண்பர்கள் குழு வேகமாக இயங்கியது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றி அதிகமாக ஷேர் செய்யும் பணி என்னுடையது. எந்த வாலண்டியர் அருகில் உள்ளார் , யாரால் இதனை செய்ய முடியும் என்று பார்த்து அவர்களிடம் உதவி கோருவதும் அதில் சேர்ந்திருந்தது.

பள்ளிக்கரணை, கோசாலை பசு, govt  doctors தான் அட்டெண்ட் செய்ய முடியும் என்ற நிலையால் , பெங்களூரு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பி விட்டோம்.

இன்னும் பலப்பல பணிகள், அடுத்தடுத்து எங்களை ஆக்டிவாக வைத்திருந்தன என்றால் மிகையாகாது.

இன்னமும் தொடந்தபடியே இருக்கிறது… மேற்சொன்னவை நினைவில்வந்துஎட்டிப்பார்த்த சில துளிகளே…

தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் உதவிப் பொருட்கள் உள்ள இடங்களையும் தேவைக்கான இடங்களையும் மிகச்சரியாக இணைக்க இணையமும் சில இதயங்களும் உதவின. மனிதம் இன்னும் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இது.

தமிழ்நாட்டை விட்டு வந்த பின்னர் நான் நண்பர்களுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முகம் தெரியாத தம்பிகள் நட்பிலும் இல்லாதவர்கள் என்னை அக்கா என அழைத்து பேசும்போது வெள்ளம் சேர்த்த உறவுகளாக எண்ணுகிறேன். சின்னச் சின்ன உதவிகளைக் கூட இணையத்தின் வழியாக செய்ய முடிகிறது. இணையம் இவ்வளவோ இதங்களையும் கரங்களையும் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளது. ஒருவேளை நான் சென்னையில் இருந்திருந்தால் கூட இவ்வளவு பேரை இணைத்திருக்க முடியாது. இணைய வசதி உள்ள இடத்தில் இருந்ததால் வேகமாக செயல்பட்டு பல உயிர்களை மீட்க முடிந்தது. பலவித உதவிகளையும் தேவையானவர்களுக்கு கிடைக்கச் செய்ய முடிந்தது. நாங்கள் செய்திருக்கும் வேலை சிறுதுளியே’’ என்கிறார் சுமிதா.

சுமிதாவின் பதிவுகளைப் படிக்க:

சுமியின் கிறுக்கல்கள்